சுற்றுகள், காக்காய்ப்பொன்- கடிதங்கள்

சுற்றுகள் [சிறுகதை]

அன்புள்ள ஜெ

கதைகளை கொஞ்சம் கொஞ்சமாக இப்போதுதான் வாசித்து வந்துகொண்டிருக்கிறேன். கதைகளை வாசித்தபின் கடிதங்களையும் வாசிப்பது என் வழக்கம். அவை வாசிப்பின் பலவகையான வழிகளைச் சுட்டிக்காட்டுகின்றன.

இன்றுதான் சுற்றுகள் கதையை வாசித்தேன். அதை வாசிக்கும்போது நினைத்துக்கொண்டேன். ஒரு நீரோடையை வைத்து இந்தக்கதையை எழுதியிருக்கலாம். ஆனால் அதை நிறையபேர் எழுதியிருப்பார்கள். இப்படி ஒரு தொழிற்சூழலுக்குள் கதையை கொண்டுசென்று எழுத எது நமக்கு தடையாக இருக்கிறது?

எலக்டிரானிக் பொருட்கள் கருவிகள் போன்றவை போதிய அளவுக்கு கவித்துவமானவை அல்ல என்ற எண்ணம் நமக்கு இருக்கிறதா என்ன?

ராம் மனோகர்

***

அன்புள்ள ஜெ

இந்த நாட்கள் மிகவும் இன்பமான நாட்கள். ‘கிருஷ்ணன் நாயக்’ போன்றே ‘சுவீட் ஷாக்’கில் போகும் நாட்கள். உங்கள் வெவ்வேறு கதைகள். ஒவ்வொன்றும் ஒவ்வொரு தளம்.

எனக்கு தேவையான ‘ஆடகம்’ உங்கள் கதைகள் வழியாக கண்டுகொண்டிருக்கின்றேன். இன்னமும் முடியவில்லை. முடியவே முடியாத சர்க்யூட் இது.

‘சுற்றுகள்’ பலவிதத்தில் என்னை ஈர்த்த மிகச் சிறந்த படைப்பு. ஏனென்றால் யார் வேண்டுமானாலும் – கரண்ட் சர்க்யூட் ஆண் பெண் உவமை உருவகங்கள் எழுத முடியும் . அவை அந்த ‘ரிலே’ போல தான்.

ஆனால் அந்த தரிசனம் என்பது அதன் எளிமையில் தான் உண்டு. நீங்கள் முன் எங்கோ சொன்ன அந்த ‘மீ’ மொழி (மெட்டா லாங்குவேஜ்) அதை கிருஷ்ண நாயக் கண்டுகொள்ளும் தருணம் உன்னதமான அற்புத தருணம்

பெரும்பாலான மாணவர்கள் இயற்பியலில் (பிஸிக்ஸ்) பாடங்கள் ஆரம்ப நிலைகளில் ‘டப்பா’ அடித்து எழுதிவிடுவார்கள்.

நான் பிலானிக்கு படிக்க சென்ற போது – மற்றவை புரிந்தது. ஆனால் பிஸிக்ஸ் புரியவே இல்லை (இத்தனைக்கும்  199/200 ‘ப்ளஸ் டூ’ தேர்வில் – இதை பெருமையாக சொல்லவில்லை முரணாக சொல்கிறேன்)
குறிப்பாக கரண்ட் மற்றும் மேக்னெட்டிசம்.

இவை இரண்டும் பெர்ஸப்ட் (நேரடியுணர்வு) மூலம் சொல்லும் விஷயமல்ல “சில கூறுகள் உள்ளது. அதை தனியாக படி. கணக்காய் மட்டும் பார். செஸ் போல ஒரு பார்மலிசம் (formalism) ஒரு கோட்பாடு” – என்று முடித்து விட்டனர் கடைசி வரை பிடிபடவே இல்லை. அந்த காலங்களில் காதல் வயது வேறு :) காதல் இயற்பியல் இரண்டும் – ஒரு-பக்கமாகவே இருந்தது… சர்க்யூட் முடியவில்லை !

கிருஷ்ணன் நாயக் அப்படி கோட்பாடாக படித்தால் அது வெறும் ‘டப்பா அடிக்கும்’ வேலை. வெற்று தர்க்கம் . ஒரு கணத்தில் தரிசனமாக வரும்போது. அது நீங்கள் சொல்லும் மீ மொழி அந்த நிலையை அடைகிறது. டெக்னாலஜிக்கு அம்மை சயன்ஸ் அதன் அம்மை தத்துவம் என்பது போல :)

இங்கு சர்க்யூட் ஒரு விளையாட்டாக நாகமணி-நாயக் இருவரின் காதலையும் சொல்லிவிட்டு போகிறது. ஆனால் அதை தாண்டி ஒரு சாகச உணர்வு ஒரு தரிசனம். நாம் எப்படி அதை அடைந்த பின் வேறொரு மனிதராகவே மாறுகிறோம்? என்பதையும் சொல்கிறது

ஏன், இந்த தரிசனமே கூட ‘ரிலே’ போல காலம் காலமாக மனிதர்கள் வாயிலாக  நமக்கு வந்து சேர்கிறதா ?

பெரும்பாலும் அறிவியல் என்றால் – நடப்பதை உணர்ச்சியின்றி பார்ப்பது – நோட்ஸ் எடுப்பது …ரீடிங் எடுப்பது…பின் அதை கணக்காக்கி சொல்வது என்று தவறாக ஒரு சித்திரம் எல்லோரிடத்திலும் உண்டு.

ஒரு குழந்தையின் ஆ (awe)ச்சரிய மற்றும் சாகச மனம் கொண்டவரால் தான் (sense of awe and adventure) அறிவியலில் ஒரு புதிய தரிசனம் ‘ஒரிஜினல் தாட்’ கொடுக்க முடியும். கலீலியோ ஐன்ஸ்ட்டின் என்று அந்த மனநிலையை தக்கவைத்தவர்கள் தான் மிகப்பெரிய பாய்ச்சல் கொண்டுவந்தார்கள்

// செஸ் மேதைகளுக்குரிய தர்க்கஅறிவு, இலக்கியவாதிகளுக்குரிய கற்பனைத்திறன், ரிஷிகளுக்குரிய உள்ளுணர்வு ஆகியவை கொண்டவர் அவர். சொன்னேனே, அவர் ஒரு ஜீனியஸ் // என்று இந்த விஷயம் ‘வேரில் திகழ்வது’ என்னும் சிறுகதையில் ரோசாரியோ குறித்து  ஔசேப்பச்சன் கூறுகிறார்

நன்றி ஆசான்

ஸ்ரீதர்

***

காக்காய்ப்பொன் [சிறுகதை]

அன்புள்ள ஜெ,

காக்காய்ப்பொன் இந்த வரிசை கதைகளில் வேறு ஒருவகை. கதை, கதைபற்றிய விவாதம் இரண்டுமே கதைக்குள் உள்ளது. கதை பற்றிய விவாதம் அந்த கதையை பலகோணங்களில் திறந்துவிடுகிறது.

காக்காய்ப்பொன் என்பது என்ன? காக்காயின் கண்ணின் பொன் என்று நான் எடுத்துக்கொண்டேன். காக்காய் நீ மனிதன் உனக்கு பொன் தானே வேண்டும் என்று சொல்கிறது.

ஆனால் அது அல்ல கதை. காக்காயின் எளிய அன்பின் முன் எளிமையான மனிதனாக நிற்க சதானந்த சாமிக்கு முடியும்போதுதான் அவர் ஞானம் அடைகிறார்

ஆர்.கண்ணன்

***

அன்புள்ள திரு. ஜெயமோகன் அவர்களுக்கு

நலம் தொடர்க!

காக்காய்ப்பொன்னை இப்படிப் புரிந்துகொள்கிறேன். பிரபஞ்சம் மானுடனின் கீழ்மைகளை எப்போதும் சுட்டிக்காட்டியபடியே இருக்கிறது. சிறிதாயினும் பெரிதாயினும். ஏதோ ஒரு வடிவில், நிகழ்வில், சொல்லில், நினைவில், நிகழ்ந்துகொண்டேயிருக்கிறது. அதை முற்றுமாக உதாசீனப்படுத்தி கீழ்மையிலேயே திளைத்து அதிலேயே மாள்பவர் கீழ்மையைத்தவிர வேறொன்றும் அறிவதில்லை. தன் கீழ்மைகளை உணர்ந்து உதறிக்கொண்டு மேலெழும்போது இரு நிலைகள் இருக்கக்கூடும். ஒன்று, மேலெழும்போது தான் மேலெழுந்துகொண்டிருக்கிறோம் என்ற உணர்வு ஓங்கி ஒரு ஆணவமாக மாறலாம். சதானந்தரின் ஒரு வரி ” “மின்னுவதன் மீதான பற்று என்பது பொன்மீதான பற்றுதான். பொன்மீதான பற்று என்பது காமம்தான். பொருள் மோகம்தான். ஆணவமும்தான்….” .

அனைத்தையும் விட்டெழுவதை உணர்வதும் வெளிப்படுத்துவதும் கூட ஒரு ஆணவம் தானே. அந்த ஆணவத்தையும் சுட்டும் பிரபஞ்ச நிகழ்வை எதிர்கொள்வது என்பது அதற்கு ஒப்புக்கொடுத்தலே. வேறு நிலையில்லை. அந்த இடைப்பட்ட மனநிலையில் அது தெரிந்தும் முதலில் ஆணவத்தின் மூலமும் பிறகு மௌனத்தின் மூலமும் விலக்க முயற்சிக்கிறார் சதானந்தர். மௌனத்தின் வழியே நிகர் செய்ய முற்பட்டு

இறுதியில் ஒப்புக்கொடுக்கும்போதுதான் இரண்டாவது நிலை வாய்க்கிறது. ஆணவம் சென்றடையமுடியாத குழந்தையின் சிரிப்போடு நிறைகிறார். மலர்ந்து கனிவது அப்பொழுது மட்டுமே எட்டும் ஒரு நிலையாகக் கொள்கிறேன்.

இதை யோசித்துக்கொண்டிருக்கும்போதே ‘எரிசொல்-ஒன்றாம் பகுதி படித்தேன். அப்படியே இதன் நீட்சியாகத் தோன்றியது. “எதன் பொருட்டென்றாலும் ஆணவத்தை தெய்வங்கள் பொறுத்துக் கொள்வதில்லை”. காக்கைப் பொன்னின் கேள்விகளுக்குப் பல வடிவில் எரிசொல்லில் பதில் கிடைத்தது.

மிகுந்த எண்ண ஓட்டத்தை நிகழ்த்திய சிறுகதை. வாழ்வில் என் சிறுமைகளை என்னைத்தவிர முற்றாக யாரரிவார்? இந்தக் கேள்வி எழும்போதே, ‘ பிரபஞ்சம் அறியும். அது எவ்வகையிலேனும் உன்னைச் சுற்றி உணர்த்திக் கொண்டேயிருக்கும்’ என்ற பதிலும் கூடவே வருகிறது.

மின்னும் பொருளின் மீதான மனித குலத்தின் பற்று ஒரு ஆச்சரியமான திறப்பாக இருந்தது. பொன் அணிவதில்லை எனினும் என்னைச் சுற்றிப் பார்த்துக்கொண்டேன். ஆம். பல பொருட்கள் மின்னிக்கொண்டுதான் இருந்தன.

யான் எனது எனும் செருக்கழிப்பான் வானோர்க்கு உயர்ந்த உலகம் புகல் என்ற குறளை விரித்துணர காக்காய்ப் பொன்னை சேமித்து வைத்திருக்கிறேன்.

பேசி முடிக்க முடியாத ஒன்றை இரு நாட்களாக நினைவில் கொண்டிருக்கிறேன். நன்றி.

நா. சந்திரசேகரன்

சென்னை.

***

முந்தைய கட்டுரைபோழ்வு, பலிக்கல்- கடிதங்கள்
அடுத்த கட்டுரைகதைகள் கடிதங்கள்