இந்த வரிகளை வாசித்தபோது எனக்கு தோன்றிய எண்ணமும் இதுதான். இந்த வகையான சந்திப்புகள் ஐரோப்பாவில் எல்லா கல்வி நிலையங்களிலும் உள்ளன. தமிழ்நாட்டில் ஏன் நிகழ்வதில்லை?
சிவராஜ்
அன்புள்ள சிவராஜ்,
இலக்கியச்சந்திப்புகள் ஒரு வளரும் காலகட்டத்தில் இளம் எழுத்தாளருக்கு மிகப்பெரிய பங்களிப்பாற்றுபவை. குறிப்பாக பலவகையான மூத்த எழுத்தாளர்களுடனான உரையாடல்கள். நான் என் ஆரம்பகட்டத்தில் சந்தித்தவர்க்ள் ஆற்றூர் ரவிவர்மா, சுந்தர ராமசாமி, பி கெ பாலகிருஷ்ணன், ஞானி பின் நித்ய சைதன்ய யதி ஆகியோர் என்னை உருவாக்கினார்கள். சுந்தர ராமசாமி ஒரு முக்கியமான மையம். உரையாடல் நிபுணர். காகங்கள் என்ற சந்திப்பு நிகழ்ச்சியை நெடுங்காலம் முறையாக நடத்தினார். அந்தச் சந்திப்புகள் வழியாக நான் உட்பட பலர் உருவாகி வந்தார்கள்.
இன்று நான் சந்திப்புகளை ஏற்பாடு செய்கிறேன். பவா செல்லத்துரை பல வருடங்களாக அவற்றை நடத்தி வருகிறார். சிறிய அளவில் பெருமாள்முருகன் கூடு என்ற அமைப்பை நடத்தி வருகிறார். நாகர்கோயிலில் காலச்சுவடு அறக்கட்டளை பாம்பன்விளை என்ற இடத்தில் சந்திப்புகளை நிகழ்த்துகிறது. நெய்தல் என்ற அமைப்பும் சந்திப்புகளை நிகழ்த்துகிறது.
சென்ற தலைமுறையில் தேவதச்சன், ஞானக்கூத்தன், பிரமிள், தஞ்சைபிரகாஷ் போன்றவர்கள் அந்த வகையான உரையாடல் மையங்களாக செயல்பட்டிருக்கிறார்கள். அவர்களின் உரையாடல்கள் வழியாக ஒரு இலக்கியத்தொடர்ச்சி நிலைநாட்டப்பட்டது. பல எழுத்தாளர்கள் அந்த சபைகளில் இருந்து வந்தவர்களே. உதாரணமாக தேவதச்சனின் நகைக்கடைச் சபையில் இருந்தே கோணங்கியும் எஸ்.ராமகிருஷ்ணனும், யுவன் சந்திரசேகரும், வித்யாஷங்கரும், கௌரிஷங்கரும் , சமயவேலும் எல்லாம் வந்தார்கள்.
அதற்கு முந்தைய காலகட்டத்தில் க.நா.சுவின் நட்புவட்டம் முக்கியமானதாக இருந்தது. ஊர்கள் தோறும் பயணம்செய்து நண்பர்களைச் சந்தித்து உரையாடினார் அவர். டி.கெ.சியின் நட்புவட்டம் இன்னொரு வகை. அவர் வட்டத்தொட்டி என்ற பேரில் சந்திப்பு நிகழ்ச்சிகளை தன் இல்லத்திலேயே நிகழ்த்தினார். பேராசிரியர் ஜேசுதாசனின் பல்கலைகழகச் சந்திப்பு வட்டம் முக்கியமானதாக இருந்தது. திருவனந்தபுரம் எழுத்தாளர்கள் அதிலிருந்து வந்தார்கள். தஞ்சையில் கரிச்சான்குஞ்சு ஒரு முக்கியமான சந்திப்பு மையமாக இருந்திருக்கிறார்.
இந்த தனிப்பட்ட சந்திப்புகளை தவிர பொதுவான நிகழ்ச்சிகளும் எப்போதும் இருந்திருக்கின்றன. கும்பகோணத்தில் நடந்த திருவிழாக்களில் காங்கிரஸ் ஏற்பாடுசெய்த கதர்விற்பனை விழாக்கள் முக்கியமான இலக்கிய கூட்டங்களாக பங்களிப்பாற்றியிருக்கின்றன. என்.எஸ்.கிருஷ்ணன் நாகர்கோயிலில் ஏற்பாடுசெய்த எழுத்தாளர் சந்திப்புகள், காரைக்குடி அழகப்பச்செட்டியார் போன்றவர்களின் இல்லதிருமண நிகழ்ச்சிகளை ஒட்டி நிகழ்ந்த இலக்கிய சந்திப்புகள் என பலமுக்கியமான சந்திப்புகள் எழுத்தாளர்களின் வாழ்க்கையில் திருப்புமுனைகளாக ஆகியுள்ளன
ஆனால் பொதுவாக நவீன இலக்கியம் அன்றெல்லாம் சின்னஞ்சிறிய வட்டங்களுக்குள் மட்டுமே இருந்தது. இரண்டாயிரம் பேருக்குள் வாசிக்கப்பட்டது. தொண்ணூறுகளில் நவீன இலக்கியம் சார்ந்த பரவலான கவனம் உருவாகியபோது விரிவான அனைத்துத்தரப்புச் சந்திப்புகளை ஏற்பாடு செய்யவேண்டுமென்ற ஆர்வம் உருவாகியது. பிரம்மராஜனும் கலாப்ரியாவும் சேர்ந்து குற்றாலத்தில் பதிவுகள் என்ற சந்திப்பு நிகழ்ச்சியை ஆரம்பித்தார்கள். அது மிகவிரிவான பாதிப்புகளை உருவாக்கிய ஒன்று. விஜயா வேலாயுதம் சில சந்திப்புகளை ஏற்பாடுசெய்தார்.
இக்காலகட்டத்தில்தான் சோவியத் ருஷ்யா உடைந்தது. அது உருவாக்கிய மானசீகமான பாதிப்புகள் பல உண்டு. முக்கியமாக தமிழகத்தில் செயல்பட்டு வந்த மார்க்ஸிய குழுக்கள் மேலும் பல துண்டுகளாக பிளந்தன. சில துண்டுகள் தமிழ்த்தேசியம் பேச ஆரம்பித்தன. சில துண்டுகள் சட்டென்று எந்த முன்னெச்சரிக்கையும் இல்லாமல் இலக்கியம் பக்கம் வந்தன. அவர்களில் முக்கியமானவர் அ.மார்க்ஸ்.
இவர்களால் இலக்கியத்தை புரிந்துகொள்ள, ரசிக்க முடியாது. அதற்கான மனப்பயிற்சியோ அடிப்படை ரசனையோ இல்லை. அவர்களால் முடிந்தது நூல்களை வாசித்து மேற்கோள்களாக மாற்றிக்கொண்டு கட்டுரைகள் எழுதுவது மட்டுமே. ஆகவே மார்க்ஸியத்தை ஒரே இரவில் கைவிட்டு பின்நவீனத்துவத்தை பற்றிக்கொண்டார்கள். அதை மேற்கோள்களாக பெய்து கட்டுரைகளை எழுதினார்கள்.
அது பரவாயில்லை. ஆனால் அவர்கள் இங்கே ஒரு மன அமைப்பைக் கொண்டுவந்தார்கள். தமிழக இடதுசாரிக் குழுக்கள் என்றுமே வசையரசியல் செய்துவந்தவர்கள். சிறுசிறு குழுக்களாக பிரிந்து எல்லா அற அடிப்படைகளையும் மீறிச்சென்று தனிப்பட்டமுறையில் வசைபாடித்தள்ளுவதே அரைநூற்றாண்டாக இவர்களின் அரசியல் செயல்பாடு. எதிர்தரப்பை எதிரியாக உருவகித்துக்கொள்வது, எதிரிகளை ஒழிக்க எல்லா சதிவேலைகளையும் செய்வது இவர்களால் நியாயமான செயல்பாடாக கருதப்படுகிறது. இவர்கள் தரப்பில் பெரும் தியாகங்களைச் செய்த தலைவர்கள் கூட இவர்களாலேயே பின்னர் வசைபாடி சிறுமைப்படுத்தப்பட்டது வரலாறு.
அந்த மனநிலையை இவர்கள் சிற்றிதழ்சார்ந்த இலக்கியச் சூழலுக்குள் கொண்டு வந்தார்கள். இங்கே எப்போதுமே இலக்கியச் சண்டை உண்டு. பொறாமைக்காய்ச்சல் என்பது ஒரு இன்றியமையாத இலக்கிய வியாதி. அது தனிப்பட்ட தாக்குதல்களாக எப்போதுமே வெளிப்படும். ஆனால் அது ஒருபோதும் ஓர் எல்லை மீறுவதில்லை. இது ஒரு வகை பாவனை என அவர்கள் உள்ளூர அறிந்திருப்பார்கள். அ.மார்க்ஸ் கோஷ்டி முதல்முறையாக இலக்கிய அரங்கில் அதிரடி அரசியல் பாணியை கொண்டுவந்தது.
அன்றெல்லாம் மார்க்ஸ் இளைஞர் படை சூழ ஒரு பெரும் கும்பலாக அரங்குக்குள் நுழைவார். பிறதரப்புகளை பேசவே விடாமல் இளைஞர்கள் பிரச்சினை செய்வார்கள். அதை அதிகார எதிர்ப்பு என்றும் கலகம் என்றும் மார்க்ஸ் விளக்கம் அளிப்பார். மூத்த எழுத்தாளர்களை குறி வைத்து தனிப்பட்ட முறைத் தாக்குதல்கள் நிகழும். அவர்கள் பேசவிடப்படாமல் அவமதிக்கப்படுவார்கள். ஆகவே மூத்த எழுத்தாளர்கள் இத்தகைய சந்திப்புகளுக்கு முற்றிலும் வராமலானார்கள்.
ஆரம்பத்தில் நகுலன் சுந்தர ராமசாமி போன்றவர்கள் கூட குற்றாலத்துக்கு வந்திருக்கிறார்கள். பின்னர் அச்சந்திப்பு முற்றிலும் இளைய தலைமுறையினர் மட்டுமே வருவதாக ஆனது. பல தரப்புகளாக பிரிந்து கருத்தியல்களை முன் வைத்து வெட்டிச்சண்டை போடுவதாக மாறி பொருளிழந்தது. அழகியல் விவாதங்களுக்கு இடமே இல்லாமலாகியது
ஒவ்வொன்றையும் மேற்கோள்களாக புரிந்துகொள்ளும் போக்கால் அபத்தமாக புரிந்துகொள்ளப்பட்ட பின்நவீனத்துவம் கலகம் என்ற ஒற்றைச் சொல்லால் அறிமுகம் செய்யப்பட்டது. அதாவது நிகழ்ச்சிகளில் குடித்துவிட்டு வந்து தாறுமாறாக எதையாவது பேசுவது, பிறரை பேசவிடாமல் மறிப்பது. அப்படி செய்தவர்கள் பிரபலமானார்கள். அதை செய்பவர்கள் அதிகரித்தார்கள். அதுதான் பின் நவீனத்துவம் என அவர்களே நம்பினார்கள்.
ஒருகட்டத்தில் இலக்கியச் சந்திப்புகள் என்றாலே குடித்துவிட்டு வந்து கலாட்டா செய்யும் இடங்களாக ஆயின. முதல்நாள் முதல் அரங்கிலேயே குடி. குடிக்காதவர்கள் ஒதுங்கிக்கொள்ள அவை குடிக்கான சந்திப்புகளாக உருவம்பெற்றன. அதற்கேற்ப வணிக இதழ்களும் அவற்றை குடிக்கலாட்டாக்கள் என்று விளம்பரம் செய்ய ஆரம்பித்தன. குற்றாலம் பதிவுகள் கடைசிக் காலத்தில் தேய்ந்து சிறுத்தது. கலாப்ரியா நூறுபேருக்கு சாப்பாடும் தங்குமிடமும் ஏற்பாடு செய்வார். இருபதுபேர் அரங்கில் இருந்தால் மிச்சபேர் வெளியே குடித்து ஆடிக்கொண்டிருப்பார்கள். வாந்தி எடுப்பார்கள். அடிதடி செய்து போலீஸில் சிக்கிக்கொள்வார்கள். பதிவுகள் நின்றது
மெல்ல இலக்கியச்சந்திப்புகள் நின்றன. குடிகாரர்களுக்கு ஒன்று தெரிந்தது, அவர்களுக்கென எந்த முக்கியத்துவமும் இல்லை. ஒரு தரமான இலக்கியச் சந்திப்பு நிகழும்போது அவர்கள் சென்று கொட்டை தெரிய நடனமாடி வாந்தி எடுத்தால் தான் இலக்கிய கவனம் வருகிறது. வெறும் குடிகாரர்களை எவரும் பொருட்படுத்துவதில்லை. மரம் இல்லாமல் ஒட்டுண்ணிச்செடிகள் வாழமுடியாது. சந்திப்புகள் நின்றதுமே இவர்களும் மறைந்தார்கள்.
இப்பொதும் சிலர் இலக்கியச்சந்திப்புகளை ஒருங்கிணைக்க சொந்த செலவில் முயல்கிறார்கள். ஆனால் சந்திப்பு என்று கேட்டதுமே குடியை மட்டும் நினைத்துக்கொண்டு வரும் கும்பலை என்ன செய்வதென இவர்களுக்கு தெரியவில்லை. அவை ஒவ்வொருமுறையும் ஆழமான மனச்சோர்வுடன் பூசல்களுடன் முடிகின்றன.
தெளிவான நிபந்தனைகளுடன் குடிகாரர்களை தவிர்த்து நான் அரங்குகளை ஆரம்பித்தபோது அது ஃபாசிசம் என்றெல்லாம் கூச்சலிட்டு வசைபாடியவர்கள் நிறைய. அவர்களால் ஒரு கூட்டத்தைக்கூட ஒருங்கிணைக்க முடியவில்லை. எங்கள் சந்திப்புகள் வளர்ந்தபடியே செல்கின்றன. இன்று பிறரும் நிபந்தனைகளை விதிக்க ஆரம்பித்துவிட்டனர்.
இலக்கியச்சந்திப்புகள் ஒரு சூழலின் இலக்கியவளர்ச்சிக்கு மிகமிக இன்றியமையாதவை. நான் குற்றாலம் சந்திப்பில் தான் தேவதேவனை, தேவதச்சனை, யுவன் சந்திரசேகரை, எஸ்.ராமகிருஷ்ணனை அறிமுகம் செய்து கொண்டேன். இன்று அதற்கான தேவை உள்ளது. ஆனால் ஒட்டுண்ணிகளை எப்படி களைவதென்றுதான் தெரியவில்லை. அ.மார்க்ஸுக்கே கூட அதுதான் சிக்கல்
ஜெ
மறுபிரசுரம்/ முதற்பிரசுரம் மார்ச் 4 2011