“அவன் விட்டாத்தானே?” என்று அழகப்பன் சொன்னான். “அவன் பேசிட்டிருக்கிறதை கேட்டேன். ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்கிற மாதிரி தெரிஞ்சுது.”
“ஏன்?” என்று உமையாள் கேட்டாள். அவள் மூக்கைச் சுளித்தபடி அதைக் கேட்டபோது கண்களில் வந்த மங்கல் அவனுக்கு ஒவ்வாமையை உருவாக்கியது. அப்படி அவளை பார்க்கையில் அவன் பார்வையை விலக்கிக்கொள்வது வழக்கம்.
“வீட்டுவேலை நடக்குதுல்ல? லிண்டில் வரை வந்தாச்சு… கட்டிமுடிச்சு ஏ. ஓ போயி பார்த்து செர்டிஃபை பண்ணினாத்தான் அடுத்த இன்ஸ்டால்மென்ட் லோன் கிடைக்கும். அதுக்கு ஒருமாசம் ஆயிடும். அதுவரை வேலையை நிப்பாட்ட முடியுமா? கடனை வாங்கி வேலையை கொண்டுட்டு போகவேண்டியதுதான்… ” என்றான் அழகப்பன் “அவன் ஏற்கனவே கோவாப்பரேட்டிவ் சொசைட்டி லோன், பேங்க் ஓ. டி எல்லாம் வாங்கியாச்சு. ராகவன் சார்கிட்ட வட்டிக்கு பணம் கேட்டுட்டு இருந்தான்.”
“அப்ப விட மாட்டாரா?” என்றாள்.
“ரொம்ப கீழே போனா விடுவார். அது நமக்கு பயங்கர நஷ்டம்… ” என்றான்.
அவள் “அம்மா எடுத்துட்டு வாடீன்னு சொன்னாங்க… அண்ணாவும் அண்ணியும் வந்து கேட்டுட்டு போயிருக்காங்க. அண்ணியோட அப்பா ஆஸ்பத்திரியிலே இருக்கார். திங்கள்கிழமை டிஸ்சார்ஜ்… அதுக்குள்ள வேணும்… லோன் அது இதுன்னு போனா லேட் ஆகும். எம்பத்தஞ்சு வரைக்கும் போயி கேளுன்னு சொன்னாங்க” என்றாள்.
“நாராயணன் கண்டிப்பா எம்பத்தஞ்சுலே நிப்பாட்ட மாட்டான். எழுபத்தஞ்சுக்கும் கீழே கூட போவான். ராகவன் சார்கிட்ட வட்டிக்கு வாங்கினா அதுக்கு இருபதுமாசம் கணக்குபோட்டா அறுபது அறுபத்தஞ்சுதான் மதிப்பு. அப்ப எழுபதுன்னான்னா கூட அவனுக்கு லாபம்தான்.”
அவள் உதட்டை சுருக்கியபடி ஏதோ யோசித்துக் கொண்டு அமந்திருந்தாள். பிறகு மெல்ல “சூப்பர்வைசர்” என்றபடி ஃபைல்களை எடுத்தாள்.
செக்ஷன் சூபர்வைசர் முருகேசன் வந்து “என்ன டூயட்டா?” என்று சொன்னபடி நாற்காலியில் அமர்ந்து வெற்றிலைப் பொட்டலத்தை வெளியே எடுத்தார்.
அவன் ரெஜிஸ்டரை விரித்து என்ட்ரிகள் போட்டுக்கொண்டே அவளை பார்த்தான். அவள் இரண்டு ஆண்டுகளுக்கு முன் அவன் பக்கத்து இருக்கைக்கு வந்தாள். கிராமத்திலிருந்து நேராக வந்ததுபோல தோற்றம். காலையில் குளித்துவிட்டு ஈரமான கூந்தலை சீவி பின்னால் சிறு முடிச்சு போட்டிருப்பாள். கூந்தல் திரிதிரியாக தெரியும். புடவை முந்தானையை அள்ளி போட்டிருப்பாள். கணுக்கால் தெரிய கட்டிய புடவைக்கு கீழே ரப்பர் செருப்பு. அதில் கட்டைவிரல் வெளியே நீட்டியிருக்கும். கையில் நகங்கள் நீண்டு சற்றே தேய்ந்திருக்கும். இத்தனைக்கும் அவள் எம்சிஏ படித்தவள். அவன் பிளஸ்டூதான். அப்பா மஞ்சள்காமாலையில் தவறியதனால் கருணை அடிப்படையில் கிடைத்த வேலை.
அவளுக்கு வேலையும் ஒன்றுமே தெரியவில்லை. அவனிடம்தான் எல்லாவற்றையும் கேட்டாள். ரிஜிஸ்டர்களையும் ஃபைல்களையும் தூக்கிக்கொண்டு அவனருகே வந்து நின்று “இது என்ன சார், இப்டி போட்டிருக்கு?” என்றாள். விரல்சுட்டி “இது ஒண்ணுமே புரியலை சார்” என்றாள்.
அவன் அவளுக்கு படிப்படியாக விளக்கினான். அவளுக்கு கவனிக்கும் வழக்கம் மிகக்குறைவு. நினைவில் நிற்பதும் குறைவு. ஆகவே திரும்பத் திரும்பச் சொல்லிக் கொடுக்க வேண்டியிருந்தது. அவனருகே அவள் நிற்கையில் அவள் தலையில் தேய்த்திருந்த காய்ச்சிய தேங்காயெண்ணையும், முகப்பௌடரும் வியர்வையுடன் கலந்து மணம் வீசின. காற்றில் அவள் புடவை அவன்மேல் பட்டது.
அவன் பெரும்பாலும் அவளை நிமிர்ந்து பார்க்காமலேயே அவளிடம் பேசினான். ஆனால் அவன் மனம் அவளை பார்த்துக் கொண்டிருந்தது. அவள் சென்று தன் இருக்கையில் அமர்ந்த பின் அவளை ஓரக்கண்ணால் பார்த்தான்.
அவள் அவன் மனதில் ஓரக்காட்சியாகவே பதிந்திருந்தாள். கன்னத்தின் பூமயிர், புறங்கழுத்தின் மயிர்ப்பிசிறுகள், சிறிய காதில் அசையும் தங்க தொங்கட்டான், சற்றே மழுங்கிய மூக்கு, மென்மையாக படிந்த கருஞ்சிவப்பு நிறமான உதடுகள், கழுத்தின் மடிப்புகளில் ஈரக்கோடு. அவள் கல் வைத்த மூக்குத்தி அணிந்திருந்தாள். முதலில் அவனுக்கு அது கிராமியத்தனமாகத் தெரிந்தது. பிறகு அவளுடைய அடையாளமாக ஆகியது. அதன்பின் பிடிக்க ஆரம்பித்தது.
அவள் சருமம் அத்தனை மெருகுடன் இருப்பதைப் பற்றித்தான் அவன் எண்ணினான். அந்த வயதில் அப்படித்தான் இருக்குமா என்ன? அவன் அத்தனை கூர்ந்து எந்தப் பெண்ணையும் பார்த்ததில்லை.
அவன் பார்ப்பது அவளுக்கும் தெரியத் தொடங்கியது. அவள் சட்டென்று திரும்பி அவன் கண்களை சந்தித்தாள். அவன் பதறி கண்களை விலக்கிக் கொண்டான். அவள் அவனிடம் பேசும்போது மிகச்சிறிய புன்னகை ஒன்றை அளித்தாள். அது அவனுக்கு மட்டுமேயானது. வெளியே அவனை பார்க்கையில் மெல்லப் புன்னகைத்து தலைகுனிந்து நடந்து சென்றாள்.
ஒருநாள் அவன் வழக்கம்போல டிபன் பாக்சை எடுத்து மேஜைமேல் வைத்து சாப்பிட தொடங்கும்போது அவள் அவன் அருகே ஒரு வாழையிலைக் கீற்றில் எதையோ வைத்தாள். வாழைக்காய் பொரியல். அவன் திடுக்கிட்டு அவனை பார்த்தான். அவள் புன்னகைத்தாள். அவன் அதை சாப்பிட்டபோது படபடப்பாக உணர்ந்தான்.
சாப்பிட்டு முடித்து கைகழுவி வந்தபின் அவன் அவளை பார்க்காமல் அமர்ந்து குமுதத்தை எடுத்து வாசித்தான்.
அவள் “நான் வைச்சதாக்கும்” என்றாள்.
அவன் திடுக்கிட்டு “என்ன?” என்றான்.
“வாழைக்காய் பொரியல்” .
அவன் “ம்” என்றான். மூச்சுத்திணறுவதுபோல் உணர்ந்தான்.
“நல்லா இருக்கா?” என்றாள்.
அவன் மீண்டும் திடுக்கிட்டு “ஆமா” என்றான்.
அவன் எப்போதுமே உணவை பாராட்டி எதையும் சொன்னதில்லை.
“பிடிச்சிருக்கா?” என்றாள்.
அவன் “ஆமா” என்றான்.
அதன்பின் அவள் அவனுக்கு தினமும் ஏதாவது கொண்டுவந்தாள். தன் வீட்டைப்பற்றியும் சினேகிதிகளைப் பற்றியும் சொன்னாள். அவர்கள் காதலிப்பதாகவோ திருமணம் செய்துகொள்வதாகவோ பேசிக்கொள்ளவில்லை. ஆனால் அது இயல்பாகவே உறுதியாகியது. அலுவலகத்தில் எல்லாருக்குமே தெரிந்திருந்தது.
வந்தநாள் முதல் அவள் ஸ்ரீனிவாசனிடம் சீட்டு போட்டுக் கொண்டிருந்தாள். அவனிடம் ஒருமுறை “நீங்க சீட்டு போடலையா?” என்று கேட்டாள்
“இலலை, பிடித்தம் போக வர்ரது குடும்பச் செலவுக்கே சரியாப் போகுது. சந்திரா இந்த வருசத்தோட காலேஜ் முடிச்சிருவா. அதுக்குப்பிறகு கொஞ்சம் செலவு கம்மியாகும். பாப்பம்” என்றான்.
“அவ்ளவு செலவாகுதா என்ன?” என்று அவள் கேட்டாள்.
அவன் செலவுக் கணக்கைச் சொன்னான். அவள் அவன் சொல்லச் சொல்ல குறித்துக் கொண்டாள்.
“செல்ஃபோனுக்கெல்லாம் இவ்ளவு செலவா?” என்றாள் உமையாள் “நீங்க சந்திராகிட்ட பேசி கொஞ்சம் செலவை குறைச்சுக்க சொல்லுங்க… சுடிதார் ஒண்ணு தைச்சா நாலைஞ்சு டாப்ஸ் மட்டும் எடுத்தா போரும்… சிக்கனமா இருக்கணும்ல?”
அவன் குடும்பச் செலவை முழுக்க அவளிடம் அளிப்பான். அவள் கணக்கு பார்த்து சொல்வாள். அவனுக்கு பிஎஃப் லோன் எப்போதுமிருந்தது. கோஆபரேட்டிவ் லோன் அதற்கு மேலாக. அப்பாவின் சேமிப்பைக் கொண்டுதான் சரஸ்வதியை திருமணம் செய்து கொடுத்தான். அவளுக்கு இன்னமும் சீர் செய்துகொண்டிருந்தான்.
“முத ஒருவருஷம் செய்றதுதான் சீர். மத்தபடி அது ஒரு சாதாரண சடங்குதான். எல்லா வருஷமும் தீபாவளிக்கு புடவை எடுத்து குடுக்கணும்னு இல்லை” என்று உமையாள் சொன்னாள்.
அவன் வீட்டுக்கும் அவள் நாலைந்து தடவை வந்திருக்கிறாள். அப்போது சந்திராவிடம் சிரித்துச் சிரித்துத்தான் பேசினாள். ஆனால் அவள் போனபின் அம்மா “கொஞ்சம் கெட்டியான பொண்ணுடா… சாமர்த்தியம் ஜாஸ்தி பாத்துக்க. நீ இளிச்சவாய் மோணையன். அதான் சொல்றேன்” என்றாள்.
“அப்பதான் ஜோடி சரியா இருக்கும்” என்றாள் சந்திரா.
“போடி” என்று அம்மா சந்திராவை திட்டினாள்.
சிஏஓ அழைப்பதாக குமார் வந்து சொன்னான். ஒரு ஆனுவல் ரிப்போர்ட் கேட்டிருந்தார். அவன் ஃபைல்களுடன் மாடிக்குச் சென்று அவரைப் பார்த்தான். அவர் அவனிடம் பேசுவதற்குள் பல முறை ஃபோன் பேசினார். ஆகவே ஆரம்பத்தில் இருந்தே திரும்பத் திரும்பச் சொல்ல வேண்டியிருந்தது. ஒருவழியாக வேலைமுடிந்து அவன் திரும்ப ஒன்றரை மணிநேரம் ஆகிவிட்டது.
அவன் அவளைப் பற்றித்தான் நினைத்துக் கொண்டு வந்தான். ஒரு லட்சத்தை எழுபதுக்கும் குறைவாக எடுப்பது வீண். நாராயணன் விட்டுக்கொடுக்காமல் அவளால் எழுபத்தைந்தாயிரத்திற்கு தள்ளி எடுக்கமுடியாது.
அக்கவுண்ட் செக்ஷனில் அவள் நாராயணனிடம் பேசிக்கொண்டிருப்பதை அவன் கண்டான். ஜன்னல் வழியாக கடந்துபோனபோது ஒரு கீற்றுபோல தெரிந்தது அந்தக் காட்சி. அறைக்குள் அவர்கள் இருவரும்தான். நாராயணன் காஷியர் ஆகையால் தனி அறை.
அழகப்பன் உடலெங்கும் பரவிய படபடப்புடன் நின்று அவள் பேசுவதை கவனித்தான். அவள் கையால் வாயைப் பொத்திக்கொண்டு சிரித்தாள். உடலெங்கும் சிரிப்பின் அசைவு. நாராயணனின் முகம் மலர்ந்திருந்தது. அவன் மிகவும் வெட்கியது போலவும் கள்ளத்தனம் கொண்டது போலவும் தோன்றினான். உமையாள் கையை தாழ்த்தியபோது முந்தானை சரிந்தது அவள் எடுத்து மேலே போட்டாள்.
அவன் நெஞ்சு படபடக்க அப்படியே படியிறங்கி நேராக காண்டீன் சென்றுவிட்டான். நெடுநேரம் என்ன ஏது என்றே தெரியவில்லை. ரங்கராட்டினத்தில் சுற்றி இறங்கியதுபோல இருந்தது. பின்னர் மிகப்பெரிய களைப்பு வந்து அவன்மேல் படிந்தது. அழுகை அழுகையாக வந்தது.
மேலே போய் அவளைப் பார்ப்பதை பற்றி நினைத்தே பார்க்கமுடியவில்லை. “ஏன் சார், உங்க செக்ஷன் சூபர்வைசர் இல்லையா?” என்று கேண்டீன் சாமுவேலே கேட்டான்.
“இருக்காரு” என்று அவன் கிளம்பி மேலே சென்றான். ஒவ்வொரு படியாக ஏறினான். உடல் எடை கூடியிருந்தது. அவ்வப்போது கைப்பிடியை பிடித்துக்கொண்டு நின்றான். மூச்சு வாங்க தன் இருக்கையைச் சென்றடைந்தான்.
அவள் அப்பால் வேலையாக இருந்தாள். அந்த அசைவுகளை அவன் ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டிருந்தான். நெஞ்சுக்குள் பெரிய எடை இருப்பது போலத் தோன்றியது. எழுத்துக்கள் எதுவும் கண்ணுக்குப் படவில்லை.
சூபர்வைசர் எழுந்து போனதும் அவள் அவனிடம் “நாராயணன் சாரிட்ட பேசிட்டேன். விட்டுக்குடுக்கறேன்னு சொல்றார்… இன்னிக்கே ஏலம். பணம் நாளன்னிக்கு கிடைச்சிரும்” என்றாள்.
அவன் திகைப்புடன் அவள் கண்களைப் பார்த்தான். தெளிவான கண்கள், இயல்பான சிரிப்பு.
“எழுவத்தஞ்சுக்கு மேலே கூட நிப்பாட்டிக்கலாம். எண்பதுன்னா நல்ல லாபம்தான்”
“ஆமா” என்று அவன் சொன்னான்.
“அம்மாக்கிட்ட ஃபோன் பண்ணி சொல்லிட்டேன்”
அவன் தலையசைத்தான்.
“என்ன?” என்று அவள் கேட்டாள்.
“ஒண்ணுமில்லை.”
“உடம்பு சரியில்லையா?”
“தலைவலி… ”
“கண்ணாடிய மாத்தணும்னு நினைக்கிறேன்… மாத்தி ரெண்டு வருசம் இருக்கும்ல?”
“ஆமா.”
அவன் சட்டென்று “நான் வாறேன்… ” என்று எழுந்துகொண்டான்.
முதலில் அங்கிருந்து கிளம்பிவிடவேண்டும் என்றுதான் தோன்றியது. கிளம்பியதுமே ஆறுதலும் ஏற்பட்டது. வெளியே வந்து பஸ் ஏற நின்றபோதெல்லாம் வீடுபோய் சேர்ந்துவிடவேண்டும் என்ற எண்ணம்தான் மனசில் இருந்தது.
வீட்டில் அம்மா இருந்தாள். “என்னடா?” என்றாள்.
“ஒண்ணுமில்லை, கொஞ்சம் தலைவலி” என்று போய் சட்டையை கழற்றிவிட்டு படுத்துக்கொண்டான்.
ஆனால் படுத்ததும் உடலுக்குள் நூற்றுக்கணக்கான ஸ்பிரிங்சுருள்கள் விரிந்ததுபோல் இருந்தது. எழுந்து அமர்ந்தான். அவன் உடலே பதறிக்கொண்டிருந்தது. தாகம் எழுந்ததுபோல தோன்றியது. எழுந்து கூஜாநீரை குடித்தபோது உண்மையாகவே கொஞ்சம் குளிர்ந்தது.
மனம் எங்கோ சற்றே விலகி மீண்டும் அந்தக் காட்சியைச் சென்றடைந்தபோது குப்பென்று வியர்த்து கைகால்கள் நடுங்கத் தொடங்கின. டிவியை போட்டான். சற்றுநேரம்கூட அதைப் பார்க்கமுடியவில்லை. அணைத்து விட்டான். எழுந்து வெளியே சென்றான் மீண்டும் திரும்பி வந்தான். பதற்றமாக இருந்தது. மிகப்பெரிய எதையோ தொலைத்துவிட்டதுபோல, அது அவ்வப்போது நினைவுக்கு வருவதுபோல. அழவேண்டும் என்று தோன்றியது. மீண்டும் அறைக்குச் சென்றான்.
அம்மா டீயுடன் வந்தாள். “என்னடா? காய்ச்சலடிக்குதா?” தொட்டுப்பார்த்து “கொஞ்சம் கணகணண்ணுதான் இருக்கு.”
டீயை குடித்தான். வெளியே எங்காவது சுற்றிவிட்டு வரலாம் என்று தோன்றியது. வடசேரி அந்நேரத்தில் நல்ல நெரிசலாக இருக்கும். நெரிசலான சாலையில் நடப்பது அவனுக்கு பிடிக்கும். எல்லா கடைகளும் திறந்திருக்கும். விளக்குகளும் சத்தங்களுமாக. அந்த இடத்தில் சுற்றிச்சுற்றி வருவதுதான் அவனுடைய இனிய மாலைநேரம்.
அவன் பிறந்து வளர்ந்ததே அந்த இடத்தில்தான். அப்பாவுக்கு குடும்பசொத்து பாகம் வைத்தபோது வந்த வீடு அது. ஒன்றன்பின் ஒன்றாக நான்கு நீளமான அறைகள். கடைசியில் சமையலறை. அதற்கு அப்பால் கொல்லைப்பக்கம். அப்பா முகப்பு அறையை ஒட்டி ஒரு கட்டில் போடுமளவுக்கு ஓர் அறையை அஸ்பெஸ்டாஸ் கூரைபோட்டு நீட்டிக்கொண்டார். அதுதான் அவனுடைய அறை. ஒரு சன்னல் அதற்கு. ஆனால் மறுபக்கம் சாக்கடை இருப்பதனால் அதைத் திறப்பதே இல்லை.
வீடு பழையது. ஆகவே சாலையை விட பள்ளத்தில் இருந்தது. குடிநீர் வரும் குழாய் வீட்டைவிட பள்ளத்தில் ஒரு சதுரவடிவ குழிக்குள் இருந்தது. வீட்டின் மற்றபகுதிகளை சித்தப்பாக்கள் விற்றுவிட்டார்கள். ஒரு மெடிக்கல் கம்பெனியும் இரண்டு குடும்பங்களும் அங்கே இருந்தன.
அவன் சட்டையை போட்டுவிட்டு வெளியே சென்றான். கிருஷ்ணன்கோயில் வரை நடந்தான். ஆனால் ஏதோ பெரிய ஒரு பயம் நெஞ்சுக்குள்ளே இருப்பதுபோல படபடப்பாக இருந்தது. ஆயிஷா மெடிக்கல் ஷாப் அருகே நின்றுவிட்டான். திரும்பிவிடலாம் என்று தோன்றியது.
மெடிக்கல் ஷாப்பில் ஷாகுல் இருந்தார். “நல்ல தலைவலி இருக்கு… ஏதாவது மாத்திரை இருந்தா குடுங்க” என்று கேட்டான்.
“சளி இருக்கா?”
“இல்லை.”
“காய்ச்சல்?”
“இல்ல பாய். ஆபீஸிலே ஒரு பிராப்ளம் அதான் ஒரு படபடப்பு.”
“அப்ப இந்த மாத்திரையை போடுங்க… தூக்கம் கொண்டு அடிக்கும்… காலையில் எந்திரிச்சா செரியாப் போயிரும்.”
“இது என்னது?”
“அவாமின், சாதாரண வாந்தி மாத்திரைதான்.”
அவன் வீட்டுக்கு திரும்பிவந்தான். அம்மா “என்னடா?” என்றாள்.
“தலைவலி” என்றான்.
அவாமினை விழுங்கிவிட்டு என்ன நடக்கிறது என்று பார்த்தபடி அமர்ந்திருந்தான். வாய் முறுமுறுவென்றது. களைப்பாகவும் கைகால் ஓய்ச்சலாகவும் தோன்றியது. படுத்தபோது உடல் கீழே அமிழ்வதுபோல இருந்தது. தூங்கிவிட்டான்.
அம்மா அவனை எழுப்பினாள். “ஏலே தோசை தின்னுலே”
சந்திரா வந்திருந்தாள். அவன் கட்டிலிலேயே எழுந்து அமர்ந்து தோசையை சாப்பிட்டான். மீண்டும் அப்படியே படுத்துக்கொண்டான்.
காலையில் ஏழுமணிக்குத்தான் விழிப்பு வந்தது. எழுந்து டாய்லெட்டுக்கு நடந்தபோது தலைசுழன்றது. கைகால்கள் ஓய்ச்சலாக இருந்தது. அவன் மீண்டும் வந்து படுத்துக்கொண்டான்.
அம்மா வந்து “ஏண்டா ஆபீஸ் போகலையா?” என்றாள்.
“இல்லை” என்று அவன் சொன்னான் “ஆத்தலா இருக்கு… ”
“காய்ச்சல் இருக்கா?” என்று அம்மா தொட்டுப் பார்த்தாள்.
“இல்லை” என்று அவன் சொன்னான்.
“கணகணண்ணுதான் இருக்கு” என்று அம்மா சொன்னாள். “நீ பேசாம இன்னிக்கு ரெஸ்ட் எடுத்துக்க.”
“சரி.”
அவன் காலை பத்துமணிக்குத்தான் எழுந்தான். அப்போதும் தூக்கம் மிச்சமிருப்பதுபோல தோன்றியது. இட்லி சாப்பிட்டுவிட்டு கொஞ்சநேரம் பேப்பர் வாசித்தான். டிவியில் ஏதோ பார்த்தான். அவ்வப்போது ஏதோ கெட்டசெய்தி மங்கலாக நினைவுக்கு வருவதுபோல ஒரு பகீரிடல். இன்னொரு அவாமின் இருந்தது. அதை போட்டுக்கொண்டு படுத்துக்கொண்டான்.
மீண்டும் எழுந்தபோது மாலை மூன்றுமணி. அதன்பின்புதான் மதிய உணவு சாப்பிட்டான். ஒருமணிநேரம்கூட டிவி பார்க்கவில்லை. மீண்டும் படுத்து ஏழுமணிக்கு எழுந்தான். அன்றிரவும் ஒரு நல்ல தூக்கம் போட்டால் நல்லது. ஆனால் பகலெல்லாம் தூங்கிவிட்டான். இரவு தூக்கம்போனால் என்னென்னவோ நினைப்புக்கள் வரும். அவனுக்கு இரவு தூக்கம்பிடிக்கவில்லை என்றால் சிலசமயம் தற்கொலை எண்ணம்கூட வரும்.
கிருஷ்ணன்கோயில் சந்திப்புவரை நடந்தான். மாணிக்கம் மெடிக்கல் ஷாப்பில் சொல்லி நான்கு அவாமின் மாத்திரைகளை வாங்கிக்கொண்டான். திரும்ப வந்து டிவி பார்த்துக்கொண்டிருந்தபோது அம்மா கஞ்சி கொண்டுவந்தாள். அதை குடித்துவிட்டு மீண்டும் ஒரு அவாமின் போட்டுக்கொண்டு படுத்தான்.
மறுநாள் அவன் விழித்துக்கொண்டது காலை பத்துமணிக்கு. “காய்ச்சலாத்தான் இருக்கு… இன்னிக்கும் ரெஸ்ட் எடுக்கறேன்” என்று அம்மாவிடம் சொன்னான்.
அவனுடைய செல்போனில் ஐம்பதுக்கும் மேற்பட்ட மிஸ்ட்கால் இருந்தது. பெரும்பாலும் உமையாள்தான். இருபது முப்பது எஸ். எம். எஸ்கள். அவன் செல்போனை தூக்கி மேஜை டிராயருக்குள் போட்டான்.
அன்றும் பெரும்பாலும் தூங்கிக்கொண்டேதான் இருந்தான். மாலையில் மீண்டும் அவாமின் போட்டுக்கொண்டான்.
மறுநாள் காலையில் எழுந்தபோது அம்மா “ஏண்டா, என்ன ஆச்சு உனக்கு? ஆஸ்பத்திரி போறியா?” என்றாள்.
“இல்லை, இன்னிக்கு சரியாயிடும்” என்றான்.
“நீ லீவு சொல்லலையா?”
“சொல்லிட்டேன்” என்றான்.
“நான் சரஸ்வதி வீடுவரை போய்ட்டு வந்திடறேன்… குமரேசனோட அம்மா வந்திருக்காளாம். போய் பாக்காம இருந்தா நல்லா இருக்காது”
“சரி” என்றான்.
“ஒரு எரநூறு ரூபா குடுடா… பிள்ளைகளுக்கு ஏதாவது வாங்கிட்டுப் போகணும்ல?”
அவன் மேஜை டிராயரை திறந்தபோது உள்ளே செல்போன் இறந்துவிட்டிருப்பதைக் கண்டான். அதை எடுத்து சார்ஜில் போடலாமா என்று நினைத்தான். சரி பிறகு பார்ப்போம் என்று சலிப்பாக இருந்தது. பணத்தை எடுத்து அம்மாவுக்கு கொடுத்துவிட்டு படுத்துக்கொண்டான்.
“சாப்பிடுடா… சோறு எடுத்து வச்சிருக்கேன்” என்று அம்மா சொன்னாள்.
அவன் மீண்டும் படுத்துக்கொண்டான். எல்லாமே மிகமிகப் பழைய விஷயங்களாக மாறிவிட்டிருந்தன. எதுவுமே முழுமையாக நினைவுக்கு வரவில்லை. முதலில் என்னதான் நடந்தது? அவள் நாராயணனிடம் சிரித்துப் பேசினாள். ஆனால் அலுவலகத்தில் சிரித்துப் பேசாமலிருக்கமுடியுமா என்ன? எல்லாரும்தான் எல்லாரிடமும் பேசுகிறார்கள். அவன் எதையாவது எண்ணிக்கொண்டால் அவளா பொறுப்பு?
அவன் தூங்கிவிட்டான். கனவில் என்னென்னவோ வந்தன. அப்பா வந்தார். ஒரு பழைய சூட்கேஸ். அதற்குள் கட்டுகட்டாக நோட்டுகள். கூடவே சில நண்டுகள். ஆமாம் நண்டுகள்தான். அவற்றை தொட்டபோது ஷாக் அடித்தது. ரீரீ என்ற ஓசை கேட்டது.
அவன் விழித்துக்கொண்டான். காலிங்பெல் அடித்துக்கொண்டிருந்தது. எழுந்து லுங்கியை சரியாக கட்டிக்கொண்டு சென்று கதவைத் திறந்தான். உமையாள் நின்றிருந்தாள்.
அவன் எதிர்பார்க்கவில்லை. “நீயா?” என்றான்.
“ஏன் ஃபோன் எடுக்கலை?”
“உடம்பு முடியலை.”
“அதைச் சொல்லலாம்ல… எங்கிட்ட உங்க அம்மா நம்பரும் இல்லை.”
“உள்ள வா” என்றான்.
அவள் உள்ளே வந்து அம்மா இல்லையா?” என்றாள்.
“இல்லை, சரஸ்வதி வீட்டுக்கு போய்ட்டாங்க.”
“நீங்க மட்டுமா… தனியா விட்டுட்டு போயிருக்காங்க?”
“ எனக்கு பெரிசா ஒண்ணுமில்லை. கொஞ்சம் தளர்ச்சிதான்… ”
“காய்ச்சல் இருக்கா?” என்று அவள் அவன் நெற்றியில் கையை வைத்தாள். “தெரியலை” என்றாள்.
அவள் அவளை தொடுவது முதல்முறை. அவன் நெஞ்சு படபடத்தது.
“சாப்பிட்டீங்களா?”
“இல்லை.”
“ஏன் மணி மூணாவுதே.”
“தூங்கிட்டேன்.”
“இருங்க பாக்கிறேன். எடுத்து வச்சிருப்பாங்க.”
அவள் சமையலறைக்குள் சென்றாள். அவனுக்கு தாளமுடியாத அளவுக்கு மனம் படபடத்தது. சட்டென்று வெளிக்கதவை தாழிட்டான்.
மெல்ல சமையலறைக்குச் சென்றான். அவள் அம்மியின் மேல் மூடிவைத்திருந்த தட்டை எடுத்துக்கொண்டு திரும்பியபோது அவன் அவள்முன் சென்று நின்றான்.
“என்ன?” என்றாள்
அவன் அந்த தட்டை பிடித்து அம்மிமேல் வைத்துவிட்டு அவள் கையை பிடித்தான்.
அவள் மெல்ல “வேண்டாம்” என்றாள்.
அவன் அவளை சுற்றிக் கட்டிப்பிடித்துக்கொண்டான்.
“அய்யோ… என்னது இது… வேண்டாம்.”
அவன் அவளை கழுத்திலும் கன்னத்திலும் முத்தமிடத் தொடங்கினான். அவள் உடலின் இறுக்கம் தளர்ந்தது. அவன்மேல் சாய்ந்தாள். அவள் கைகள் அவனை சுற்றிப் பிடித்துக்கொண்டன. அவள் உதடுகளை தேடி கவ்விக்கொண்டான்.
முயங்கல் அத்தனை பழக்கமானதாகவும் அசௌகரியமானதாகவும் இருந்தது. கைகால்கள் நடுநடுவே வந்தன. உடல்கள் ஒன்றை ஒன்று முட்டிக்கொண்டன. ஏதோ கருவி ரிப்பேர் செய்கிற மெக்கானிக்கல் செயல்பாடு போல சிலசமயம் இருந்தது. அப்போது அவனுடைய மனம் அதிலிருந்து விலகியது. மீண்டும் ஈடுபட்டது. வாசனைதான் அதில் ஈடுபடுத்தியது.
அவர்கள் படுக்கையில் தங்களை உணர்ந்தபோது அவனுக்கு ஒரு நகக்கீறலுக்கு பிந்தைய எரிச்சல்போல ஓர் உணர்வுதான் இருந்தது. ஒருவகை ஏமாற்றம் இன்னொருவகை நிறைவு. விசித்திரமான ஓர் இழப்புணர்வு.
அவள் எழுந்து சேலையை எடுத்துக்கொண்டு வெளியே சென்றாள். அங்கே கழிப்பறை வீட்டின் பின்பக்கம் சமையலறைக்கு அப்பால். இயல்பாக அவள் சேலையை கட்டாமல் உடலில் வைத்து பொத்தியபடிச் செல்வதை அவன் பார்த்துக் கொண்டிருந்தான்
செல்போனை எடுத்து சார்ஜில் போட்டான். அம்மா வந்துவிடுவாள் என்ற பதற்றம் வந்தது. கதவு உட்பக்கம் தாழிடப்பட்டிருக்கிறது. சந்திராகூட காலேஜிலிருந்து வரலாம்.
அவளுக்கு எந்த பதற்றமும் இல்லை. அவன் கூடத்தில் நிலைகொள்ளாமல் நின்றுகொண்டிருந்தான். அவள் சேலைகட்டி முகம் கழுவி வந்தாள். அவனைப் பார்த்துச் சிரித்து “என்ன திமிர், ம்ம்?” என்றாள்.
அவன் கதவை திறந்துவைத்தான்.
“ஆமா, இப்ப பயப்படுங்க” என்று அவள் சொன்னாள்.
அவள் வயர்கூடை நாற்காலியில் அமர்ந்துகொண்டாள். தன் கைப்பையை திறந்து செல்ஃபோனை எடுத்துப் பார்த்தாள்.
அவன் “நீ கெளம்பு” என்றாள்.
“அம்மா வரட்டுமே.”
“வேண்டாம். . அம்மாவுக்கு தெரிஞ்சா.”
“எப்டி தெரியும்?”
“எப்டியோ தெரியும்… நீ கெளம்பு… நான் நாளைக்கு ஆபீஸ் வாரேன்.”
அவள் “தொரத்திவிடுங்க” என்றபின் எழுந்து புன்னகைத்து “வரேன்” என்றாள்.
“அந்தப் பணம் என்ன ஆச்சு? குடுத்திட்டானா?”
“எம்பத்திரெண்டுக்கு பிடிச்சாச்சு… நாளைக்கு குடுத்திருவான். ஆனா அம்மா சொல்றா இப்ப வேண்டாம்டீன்னு.”
“ஏன்?” என்றான்.
“அண்ணா நேத்துவந்திருக்கான். அண்ணி கூட வந்ததனாலே அப்ப அப்டி சொல்லியிருக்கான். அண்ணியோட அப்பாவுக்கு உடம்புசரியில்லேன்னா அவரோட பையனுங்க ரெண்டுபேரு இருக்காங்க, அவங்க செலவுபண்ணட்டும், நான் ஏன் பண்ணணும்னு கேட்கிறான்.”
“இது கடன் தானே?”
“கடன்னு சொல்லுவாங்க… வட்டியா குடுக்கப்போறாங்க? அண்ணி அதெல்லாம் செம கெட்டி” என்றாள். “அம்மா சொன்னா, அப்டியே வைச்சுக்கோ… நகை ஏதாவது வாங்கிக்கலாம்னு. அண்ணிகிட்ட பணம் கிடைக்கலைன்னு அம்மாவே சொல்லிடுவா. ”
“எம்பத்திரெண்டுன்னா லாபம்தான்” என்றான் அழகப்பன்.
“எம்பத்தஞ்சுக்குமேலே கூட பிடிச்சிருக்கலாம். ராமச்சந்திரன் பிடிவாதமா நின்னாரு. நாராயணன்சார் முதல்லயே நின்னுட்டார்.”
“ஆமா சொன்னே.”
“அப்றம் யோசிச்சு பாத்தேன். நகைய வாங்கி வச்சா நஷ்டம்… அதனாலே அப்றமா பிடிச்சுக்கலாம்னு நினைச்சு ராமச்சந்திரன் சார் கிட்டே சொல்லிட்டேன், அவரே பிடிச்சுக்கட்டும்னு… ”
“அப்டியா?”
“அது அந்த பணத்தை நாம வட்டிக்கு விடுறதுமாதிரித்தானே? நகைய வாங்கினா வட்டிபோட்டு பாத்தா பெரிய நஷ்டம்… ”
“சரி போ… அம்மா வந்தா வம்பு.”
“என்ன வம்பு? என்னமோ பெரிசா.”
“அம்மாவுக்கு தெரிஞ்சிரும்.”
“எப்டி தெரியும்?”
“நீ இங்க இருந்தா தெரியும்… ”
“சரி” என்று அவள் எழுந்தாள். “வாரேன்… நாளைக்கு வருவீங்கள்ல?”
“ஆமா.”
அவள் போனபிறகு அவன் மெல்லிய எரிச்சலுடன் நாற்காலியில் அமர்ந்தான். டிவியை ஆன் செய்து பார்த்துக் கொண்டிருந்தான். சட்டென்று ஒரு ஏதோ பழைய நினைவு போல ஒர் இனிமை மனதில் வந்தது. டிவியில் ஓடிக்கொண்டிருந்த பாட்டில் அவன் அப்போது கேட்ட இசைப்பகுதி தித்திப்பாக இருந்தது.
அது என்னவகையான இனிப்பு என்று அவனுக்குப் புரியவில்லை. இரும்புக்கம்பியை நாக்கால் தொட்டதுபோல ஒருவகையான இனிமை. அவன் சினிமாப் பாட்டுக்களையே பார்த்துக் கொண்டிருந்தான். ஆணும் பெண்ணும் கொஞ்சுவதுதான் பெரும்பாலான பாடல்கள். அதை அவன் அதற்குமுன் கவனித்ததே இல்லை. பாடலைத்தான் கவனிப்பான். சிவாஜி எம்ஜிஆர் ஜெமினி ரஜினி கமல் எல்லாருமே பெண்களைக் கொஞ்சிக் கொண்டுதான் இருந்தார்கள். பெண்கள் ஜாலம் காட்டினார்கள். சிரித்தார்கள் கோபித்தார்கள். ஓடினார்கள். பிடிகொடுத்தார்கள்.
அம்மா வந்த ஓசை கேட்டபோது அவன் சென்று கதவை திறந்தான். அம்மா அவனை கூர்ந்து பார்த்து “என்னடா?” என்றாள்.
“என்ன?” என்றான்
“யாரு வந்தா?”
“ஏன்?”
“ஒண்ணுமில்லை” அம்மா உள்ளே வந்து கூடத்தை கண்களால் சுற்றிப்பார்த்தாள். கையில் இருந்த பையை கீழே வைத்துவிட்டு அவனை பார்த்தாள். “உமையாள் வந்தாளா?”
அவன் கண்களை திருப்பி கொண்டு “ஆமா” என்றான்.
அம்மா மேலும் ஒன்றும் சொல்லவில்லை. அவன் மீண்டும் அமர்ந்து டிவி பார்த்தான்.
அம்மா “டீ குடிக்கிறியா?” என்றாள்.
“ம்” என்றான்.
அம்மா டீ கொண்டுவந்தாள். ஆனால் ஏதாவது சொல்லாமல் அவள் வழக்கமாக கோப்பையை நீட்டுவதில்லை. அன்று அவள் ஒன்றும் சொல்லவில்லை. அவன் கண்களைப் பார்க்கவுமில்லை.
அவள் அவன் முன் அமரப்போகிறாள் என்று அவன் நினைத்தான். ஆனால் உள்ளே போய்விட்டாள். அவளிடம் இருந்த அந்த மாற்றம் அவனுக்கு வித்தியாசமாக இருந்தது. ஆனால் அவள் வந்து அவன் முன் அமர்ந்துகொண்டால்கூட அவனால் அவளிடம் கண்களைப் பார்த்து இயல்பாகப் பேசமுடியாது.
அம்மா உமையாள் பற்றி ஏதாவது கேட்பாள் என அவன் எதிர்பார்த்தான். அம்மா அதைப்பற்றி ஒன்றும் சொல்லவில்லை. உள்ளே அவள் ஆடைமாற்றிக் கொண்டாள். டீ கோப்பையுடன் இரண்டாம் அறையில் பெஞ்சில் அமர்ந்து காலை நீட்டிக்கொண்டாள்.
“வேலை போயிருச்சுன்னு சொன்னான்” என்று திடுதிப் என்று அம்மா சொன்னாள்
“யாரு?” என்று அழகப்பன் கேட்டான்
“குமரேசன்… ”
“ஏன்?”
“அங்க ஆட்குறைப்பு.. இப்ப எல்லா மில்லிலயும் ஆட்குறைப்புதான்” என்று அம்மா சொன்னாள் “ஒரு எண்ணைக்கடையை வைக்கலாம்னு சொன்னான். என்ன இருந்தாலும் நம்ம தொழிலு.”
“அதுக்கு?”
“நாலு லெச்சம் வச்சிருக்கான்… நம்மகிட்ட ஒரு லெச்சம் கேக்கிறான்”
“ஒரு லெச்சமா? நாம எங்க போவ? இங்க பிடித்தம்போக என்ன வருதுன்னு தெரியும்ல?”
அம்மா சிலகணங்களுக்கு பிறகு “உமையாள்கிட்ட கேளுடா” என்றாள்.
“அவகிட்ட ஏது பணம்?”
“கல்யாண வயசுன்னா கண்டிப்பா பணம் வச்சிருப்பாங்க.”
“அதுக்காக?”
“குடுக்கணும்ல?”
அவன் ஒன்றும் சொல்லவில்லை.
“கேளு” என்று அம்மா சொன்னாள். “நாம இப்ப சரஸ்வதிக்கு குடுக்கலைன்னா பெரிய மனஸ்தாபமா நின்னுரும்.”
“நான் கேட்டுப்பாக்கிறேன்.”
“கேளு, குடுப்பா” என்று அம்மா சொன்னாள் “இனிமேலாவது ஆம்புளை மாதிரி இரு.”
அவன் “சரி” என்றான்.
அம்மா எழுந்து உள்ளே சென்றாள். அவன் எழுந்து சட்டையை போட்டுக்கொண்டு செல்போனுடன் வெளியே சென்றான்.
வடசேரி சாலை பரபரப்பாக இருந்தது. அந்த நெரிசலில் நடந்தபோது நிறைவாக உணர்ந்தான். உடலில் ஒரு விதமான மதர்ப்பும் திமிரும் தோன்றியது. உமையாளை அழைத்தான்.
“உமை, நாந்தாண்டி”
“சொல்லுங்க… என்ன இப்ப?” என்று அவள் கொஞ்சினாள்.
“சரஸ்வதி புருஷனுக்கு வேலை போயிடுச்சு.”
அவள் ஒன்றும் சொல்லவில்லை.
“எண்ணைக்கடை வைக்கிறானாம். நான் ஏதாவது குடுக்கணும். . நீ அந்த பணத்தை பிடிச்சிரு.”
அவள் “ஆனா நான் ராமச்சந்திரன் சார்கிட்டே சொல்லிட்டேனே. அவரும் இதை நம்பி இருக்கார்” என்றாள்.
அவன் சிறு எரிச்சலுடன் “அவசியம்னு சொல்லுடி” என்றான்.
“ஸ்ரீனிவாசன் சார்கிட்டயும் சொல்லிட்டேன். அவர் பணத்தை ராமச்சந்திரன் சார்கிட்டே நாளைக்கே குடுப்பார்.. ”
“அவருக்கு இதிலே என்ன?நாமள்லா சீட்டு பிடிக்கோம்?”
“ராமச்சந்திரன் சார் ஒப்புக்கவே மாட்டார்”
அவன் சிலகணங்களுக்கு பின் “நீ கொஞ்சம் நைசா சொல்லிப்பாரு” என்றான்.
அவள் “பாக்கிறேன்” என்றாள்.
***