துளி [சிறுகதை]
அன்புள்ள ஜெ,
திருவரம்புக் கதைகளை வாசித்துக்கொண்டிருக்கிறேன். துளி அதில் ஓர் உச்சம். மிகமிக எளிமையான சொற்களில் ஒரு கொண்டாடமான சூழலைச் சொல்லிக்கொண்டே செல்கிறீர்கள். மனிதர்கள், விலங்குகள். அனைத்தையும் பிணைத்திருக்கும் எளிமையான அன்பு.
இந்த எளிமையான அன்பை பார்க்கையில் ஒன்று தெரிந்தது. இது ஒருவகை விலங்குத்தனமான அன்பு. ஆகவே விலங்குகளில் இன்னும் கூர்மையாக அது வெளிப்படுகிறது. கருப்பன் அந்த அன்பின் ஓர் உச்சம். மனிதர்கள் எளிமையாக விலங்குபோல இருக்கையில் கொஞ்சம் முழுமையாக வெளிப்படுகிறது. செரிபெரல் ஆக மாற மார அந்த அன்பு குறைந்தப்டியே செல்கிறது. இல்லாமலாகிவிடுகிறது
ஆர்.ராஜ்குமார்
***
அன்புள்ள ஆசான்
துளி – தொடக்கம் முதல் முடிவு வரை இளித்து கொண்டே படித்த மற்றொரு கதை. கொரோனாவிற்கு முன்னர் உங்களிடம் ‘ஆசான் இப்பொழுதெல்லாம் நீங்கள் ஏன் நகைச்சுவை அதிகம் எழுதுவதில்லை’ என்று கேட்க நினைத்திருந்தேன். இந்த காலங்களில் என்னைமீறி சிரித்துக்கொண்டே படித்துக்கொண்டிருக்கிறேன். ‘துளி’ மிகவும் பிடித்த கதை.
அனந்தன் என்னுடைய மனம்கவர் கதாபாத்திரம். கரடி நாயர், தவளைக்கண்ணன், கள்ளன், நாடார், டீக்கனார் அந்த ஊர் யானை (ஆனையில்லா!) கோபாலக்ரிஷ்ணன், முக்கியமாக கருப்பன். ( உங்களிடம் “டீக்கனார் என்றால் என்ன அர்த்தம் ?” என்று குழந்தைத்தனமாக ஒருமுறை கேட்டு அதற்கு நீங்கள் நொந்துகொள்ளாமல் ‘Deacon’ என்று பதில் அளித்தீர்கள். நன்றிகள்) மிகப்பெரிய empathy இல்லாமல் இப்படி எழுத வாய்ப்பே இல்லை.
‘சுவாமி அண்ட் ஹிஸ் பிரெண்ட்ஸ்’ தொலைக்காட்சியில் பார்க்கையில் இன்னும் நன்றாக எடுக்கலாமே எழுதலாமே என்று தோன்றியுள்ளது. ‘காத்திரம் இல்லையோ’ என்று தோன்றியுள்ளது பெரும்பாலும் சிறுவர் கதாபாத்திரம் எழுதும்போது தன்மை நிலையில் இருந்து கதை சென்றாலும் ‘ஆசிரியர்’ சிறுவரை அவதானிப்பதாக பலர் எழுதுகின்றனர். சிறுவனாக மாறி எழுதுவது அவனுடைய பார்வையில் அவனுக்கு மட்டும் தெரியும் விடயங்களை எழுதுவது (கோட்டை – இதற்கு நல்ல எடுத்துக்காட்டு. ‘மொழி’யும் கூட ) ஒரு குதூகலத்தை தருகிறது.
இந்த குதூகலம் யானைகள் கருப்பன் அந்த மொத்த ஊரையே நிலைநிறுத்துகிறது. ‘இனியெல்லாம் சுகமே’ என்று என்னை அமைதிப்படுத்துகிறது. ‘ஆனையில்லா’ விட்ட இடத்தில் இன்னுமொரு நாளில் இந்த கதை தொடங்குவதாக இருப்பது இன்னொரு சந்தோசம். கருப்பன் பேசும் ‘வசனங்கள்’ இனிமையாக அற்புதமாக பொருந்திவருகிறது. மதங்கள் ஜாதி இவற்றையெல்லாம் இலகுவாக பகடி செய்து கேலி செய்து பேசிக்கொள்வது இதமாக உள்ளது. ‘இப்படி எல்லா ஊரும் இருந்தா நல்லாயிருக்கும்’.
ஒரு கதை இவ்வளவு எளிமையாக இலகுவாக சொல்லமுடியுமா என்று ‘deceptively simple ‘ என்பதாக சொடுக்கிவிட்டு தொடங்கும் கதை அசால்டாக அனாயசமாக செல்கிறது. ஆனால் இப்படி எழுதுவது மிகவும் கடினம் என்று தெரிகிறது. ஒரு ஆனை இல்ல – இரண்டு யானை என்பதும் கொச்சுகேசவன் கோபாலகிருஷ்ணனை பார்த்து பதறுவதும் -நேரடியாக பார்த்து வந்தது போல இருந்தது. ஒவ்வொருவரையும் இன்னுமின்னும் தெரிந்துகொள்ளவேண்டும் என்று ஆசையாக உள்ளது வாழ்க்கை இந்த உலகம் இவ்வளவு இன்பமயமானதா – அதை எப்படியெல்லாம் (பெரும்பாலும் அறியாமை கலந்த அகங்காரத்தினால்) சிக்கலாக்கி கொள்கிறேன் என்று தோன்றுகிறது தேவை ஒரு துளி தான் !
என்ன,இந்த உலகம் பிடிக்காமல் அனந்தனின் ஊருக்கு சென்றுவிடமாட்டோமா என்று ஏக்கம் கொள்ளச்செய்கிறது ‘துள’ எவ்வளவு முறை படித்தாலும் அலுக்கவே அலுக்காத கதை. கருப்பனின் அனந்தனின் கோபாலகிருஷ்ணனின் குதூகலம் நம்மை தொற்றி கொள்ளும் ‘அபாயம்’ தான்
நன்றி ஆசான் !
ஸ்ரீதர்
***
இறைவன் [சிறுகதை]
இனிய ஜெயம்
செல்ல மகள் சாத்விகா பிரிவின் நினைவை மீட்டிய வாசகர் கடிதம் கண்டேன். ஏதேதோ எண்ணங்கள் எழுந்து கவிந்தது. தாமரைப்பூக்களை தண்டுடன் கொத்தாக தூக்கினால் எப்படி இருக்குமோ அப்படி இருந்திருக்கும் இல்லையா ஒரு குழந்தையை ஏந்துவது. அதே எடை, அதே வண்ணம், அதே வாசம்.
சென்ற தலைமுறை கதையே வேறு. ஒன்பது பெற்று அதில் மூன்று இறந்து ஆறு எஞ்ச, அதில் கிளைத்தது நமது அன்னை தந்தை குடும்பமாக இருக்கும். (அமியின் குழந்தைகள் இறக்கும்போது கதையும் பைரைப்பா அவர்களின் பால்யமும் நினைவில் எழுகிறது.)பொண்ணு பிறந்தா பாட்டி பேர், பையன் பிறந்ததா தாத்தா பேர் முடிந்தது கதை. என் பெயர் என் அப்பாவின் தாத்தா பெயர். அவர் பெயர் அவர் அப்பாவின் தாத்தா பெயர் . எல்லாம் இப்படித்தான் சென்றுகொண்டு இருந்திருக்கிறது. 95 குப் பிறகு நிலவரம் வேறு வடிவம் கொண்டுவிட்டது. எனது தோழிகளில் இருவர் பன்னெடுங்காலம் தனக்குப் பிறக்கப்போகும் பெண் குழந்தைக்கான பெயரை மனதுக்குள் அடைகாத்திருந்தனர். ( என்னைப் போன்ற ஒருவருக்கு சொல்லாவிட்டால் பிறகு அந்த ரகசியத்துக்கு என்னதான் மதிப்பு ). முதலில் பெயரை பெற்றுக் கொண்டு அதற்கொரு குழந்தையை பிறகு பெற்றுக்கொள்வது.
எந்தக் காலம் என்றால்தான் என்ன? ஒரு குழந்தையின் மரணம் என்பது தாய்க்கு அத்தனை எளிதாக கடக்கக் கூடிய ஒன்றா என்ன? இசக்கி கிழவி வரம் பெற்றவள். இறைவனை கன்டுவிட்டாள்.
குருவி இறைவன் இரண்டு கதைகளிலும் கலைஞன் கொள்ளும் உணர்வு இரு வேறு துருவங்கள். முன்னது கடல் முன் தன்னை துளி என உணர்வது. பின்னது துளி அல்ல கடலே நான் என விரிவது.
இனிய ஜெயம் படைப்பாற்றல் குறித்து இதற்க்கு முன் இப்படி ஒரு சொல் எழுதப்பட்டதில்லை. இனி எழுதப்படப்போவதும் இல்லை. அப்படி ஒன்றை மாணிக்கம் சொல்லிவிட்டான் .
நான் கொடுக்கிறேன் அந்த பிரம்மனாலும் கொடுக்க முடியாததை.
நான் கொடுக்கிறேன் அந்த எமனாலும் எடுக்கமுடியாததை.
பிரம்மம் . படைப்பாற்றல் என்றால் பிரம்மம். பிரம்மத்தின் பிரகடனத்தை கேட்டேன் அக் கதையில்
கடலூர் சீனு
***
அன்புள்ள ஜெ
இறைவன் கதை ஒரு நெகிழ்வான தருணத்தை அடையாளம் காட்டுகிறது. ஆனால் அந்த நெகிழ்வு செண்டிமெண்ட் அல்ல. செண்டிமெண்ட் என்றால் நம் மனம் இரங்குகிறது. இங்கே மனம் மேலே எழுகிறது. மனிதனைப்பற்றிய ஒரு பெருமிதமும் நிறைவும் உருவாகிறது. அதுதான் அந்தக் கதையின் உச்சம். தெய்வம் அவளை கைவிடுகிறது. என்னால் என்ன செய்யமுடியும் என்று கேட்கிறது. ஆனால் கலைஞன் கைவிடவில்லை. அவனுடைய கலை நான் எல்லாவற்றையும் தருகிறேன் என்று சொல்கிறது. அவளும் தெய்வத்திடம் எதையும் வேண்டிக்கொள்ளவில்லை. கலைஞனிடம்தான் தன் குழந்தையை கொடு என்று கேட்கிறாள்
ரேவதி கிருஷ்ணா
***