கூடு [சிறுகதை]

குருகுலத்தின் சமையலறையில் காரட் நறுக்கிக்கொண்டிருக்கையில் சுவாமி முக்தானந்தா சொன்னார், “இருபத்தெட்டு ஆண்டுகளுக்கு முன்பு இங்கிருந்து சென்றேன். அன்று நடராஜகுரு இருந்தார். இன்று திரும்பி வந்திருக்கிறேன். ஏன் சென்றேன் என்று தெரியாது. அதைப்போலவே ஏன் திரும்பி வந்தேன் என்றும் தெரியாது”

அவருடைய கைகள் விசைகொண்டு செயலாற்ற அவர் வேறெங்கோ இருந்தார். காரட் சீரான துண்டுகளாக மாறிக்கொண்டிருந்தது. மாக்ரோபயாட்டிக்ஸ் என்னும் ஜப்பானிய மருத்துவ – வாழ்க்கைமுறை மீது நம்பிக்கை கொண்டவர். அது காய்கறிகளை எப்படி வெட்டவேண்டும் எப்படி சமைக்கவேண்டும் எப்படி உண்ணவேண்டும் என்றெல்லாம் வகுத்து வைத்திருக்கிறது. முக்தா ஜப்பானிலும் அமெரிக்காவிலும் நெடுங்காலம் வாழ்ந்தவர்.

முக்தா சொன்னார். நான் காற்றில் இறகுகள் போல ஏதோ ஓர் அறியா விசையால் இந்தியப்பெருநிலம் எங்கும் அள்ளிச்சுழற்றப்படும் துறவிகளைப் பார்த்திருக்கிறேன். எல்லாவகையான மெய்மரபுகளிலும் அப்படிப்பட்டவர்கள் இருக்கிறார்கள். மிகத்தெளிவான நடைமுறை நெறிகள் கொண்ட சீக்கியமதத்தில் அப்படிப்பட்டவர்கள் இருக்க மாட்டார்கள் என்று நம்பியதுண்டு. ஆனால் அவர்களிலும் அலைபவர்களைக் கண்டிருக்கிறேன். அது ஓர் ஆதி அக எழுச்சி, அது மானுடனைக் கடந்த ஒரு விசை.

அலைபவர்களில் சிலர் சட்டென்று எங்கேனும் படிந்துவிடுகிறார்கள். பறக்கும் இறகுப்பிசிர்கள் முள்ளிலோ சேற்றிலோ ஒட்டிக்கொள்வதுபோல என்று தோன்றியிருந்தது. ஆனால் அங்கே அவர்கள் செழித்து பெருகி எழுவதைக் காண்கையில் அது விதையின் பயணம், தெளிவான இலக்கு கொண்டது என்று தெரிந்தது. வேரூன்றி எழுந்தவர்கள் அனைவரிடமும் அவ்வாறு காற்றில் மிதந்த காலகட்டம் ஒன்று இருந்திருக்கிறது.

விந்தைதான், சிலசமயம் வேரும் விழுதும் நீட்டி பரவிய ஆலமரங்கள் அப்படியே தங்களை பெயர்த்துக்கொண்டு எழுந்துவிடுகின்றன. அவை இறகுப்பிசிர்கள் போல பறந்தலைகின்றன. எங்குமே அமையாமல் ஒரு மேகத்துணுக்கு போல வானில் கரைந்தழிகின்றன. அவை நின்றுசெய்த தவம் முழுக்க அவ்வண்ணம் எழுவதற்கே என்பதுபோல. வாழ்க்கையைக்கூட வகுத்துவிடலாம், வாழ்க்கையை துறந்தவர்களின் பயணங்களை வகுத்துவிடமுடியாது.

அன்று மீண்டும் அவர் தன் பயணங்களைப் பற்றிச் சொன்னார். அதே குருகுல அறை. அதே குளிர்காற்றின் பீரிடல். அதே யூகலிப்டஸ் மரங்களின் சீறல். அறைந்து அறைந்து அமைதியிழந்து ஓசையிட்டுக் கொண்டிருப்பவை நான் நன்கறிந்த சன்னல்கள். அப்போது அந்த அந்தியில் வெளியே சென்றால் மிகமிக ரகசியமான ஏதோ ஒன்று திரண்டு உருக்கொள்வதாகத் தோன்றும். வரவிருக்கும் இரவில் இருள் செறிந்து செறிந்து எடைகொண்டு ஏதோ ஒரு புள்ளியில் வெடித்து சிதறிவிடுமென பிரமை ஏற்படும்.

எல்லாம் மறுநாள் காலை வரைதான். ஊட்டியில் காலை இளங்குழந்தையின் சிரிப்பு போல, அத்தனை ஒளிமிக்கது, முற்றிலும் திறந்தது. இலைத்தளிர்கள் சுடர்விடுகின்றன. வானமெங்கும் முகில்தளிர்கள் கண்கூச ஒளிர்கின்றன. பறவையொலிகளில் தைலம் மணக்கும் காற்றில் எங்கும் ஒரு களியாட்டே நிறைந்திருக்கிறது. அன்று பிறந்த கன்று போல காலை துள்ளிக் குதிக்கிறது.

முக்தா சொன்னார். நெடுங்காலம் முன்பு நான் பௌத்தனாக மாறிவிடலாமென்று எண்ணுமளவுக்கு திபெத்திய பௌத்தம் மீது ஈடுபாடு கொண்டிருந்தேன். அதற்கு முன்பு சாக்தவழிபாட்டு முறைகளில் ஈடுபாடு கொண்டு ஒரு சாதகனாக இருந்திருக்கிறேன். பௌத்த மரபிற்குப் பிறகுதான் ராதாமாதவ மரபில் பித்தானேன். இவற்றை ஒவ்வொன்றாக நிராகரித்து வேதாந்தியானேன் என்று எண்ண வேண்டியதில்லை. இவற்றில் ஒவ்வொன்றினூடாகவும் வந்து வேதாந்தியானேன் என்றுதான் நான் சொல்வேன்.

அது 1949, இந்தியா சுதந்திரம் பெற்று இரண்டு ஆண்டுகளே ஆகியிருந்தது. திபெத் சீனாவால் கைப்பற்றப் படவில்லை. பௌத்தம் அன்று ஒரு மர்மமான மதம்தான். ஐம்பதாண்டுகளுக்கு முன்பு இந்தியாவிலும் இலங்கையிலும் பர்மாவிலும் அலைந்து திரிந்து ஹென்றி ஸ்டீல் ஆல்காட் பௌத்த வழிபாட்டு முறைகளை ஒருங்கிணைத்து ஒரு சமகாலப் பௌத்தத்தை உருவாக்க முயன்று சற்றே வெற்றி கண்டிருந்தார். அமெரிக்காவில் ரைஸ் டேவிட்ஸ் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு பௌத்த தத்துவம் பற்றி எழுதிக் குவித்துவிட்டிருந்தார். பால் காரஸின் ‘காஸ்பல் ஆஃப் புத்தா’ என்ற எளிமையான நூல் ஐரோப்பாவெங்கும் பெரும்புகழ் பெற்றுக்கொண்டிருந்தது.

பௌத்தம் கொஞ்சம் கொஞ்சமாக தன்னை உலகளாவ திரட்டிக்கொண்டிருந்த காலம் அது. ஜப்பானில் மெய்ஜி மறுசீரமைப்புக்குப் பிறகு ஜென் பௌத்தம் ஐரோப்பியர் கவனத்தை கவர்ந்திருந்தது. ஆல்காட்டால் ஊக்கம் பெற்ற அநகாரிக தம்மபாலாவின் முயற்சியால் இலங்கையில் தொடங்கிய பௌத்த மறுசீரமைப்பு அலை அடுத்தகட்ட வளர்ச்சியில் இருந்தது. அவர்கள் பௌத்தத்தை ஐரோப்பியர்களுக்கு உகந்ததாக, தர்க்கபூர்வமானதாக ஆக்கினார்கள். அதற்கு மறுபக்கமாக நூறாண்டுக்கு முன்னரே மேடம் பிளவாட்ஸ்கி இந்தியாவைப்பற்றியும் பௌத்தத்தை பற்றியும் ஐரோப்பியர் நம்பவிரும்பும் அத்தனை மாயங்களையும் கட்டிக்கட்டி எழுப்பியிருந்தார். நூறடுக்கு மாளிகைபோல, தேன்கூடு போல, நுரைபோல. அவருடைய நூல்களையே ஒரு புதையுண்ட ரகசியத்தை போல மக்கள் கண்டுபிடித்துக் கொண்டிருந்தனர்.

மொத்தத்தில் பௌத்தம் பற்றிய பேரார்வம் சூழலில் திகழ்ந்தது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு திசையை திறந்து முன்வைக்க ஒவ்வொன்றும் பிறிதுடன் முரண்பட்டமையால் அதில் மர்மமும் பெருகியது. அந்த மர்மமே பெரும்பாலானவர்களை அதை நோக்கி இழுத்தது. அத்துடன் சமநிலத்தில் சிதறித் திறந்து கிடந்த ஜைனமதம், இந்துமதம் போலன்றி பௌத்தம் தொலைதூர இமையமலைக்குள் ஒளிந்திருந்தது மலையடுக்குகளால் வெண்பனியால் பொதித்து பொதிந்து வைக்கப்பட்டிருந்தது. அதை அகற்றி அகற்றி கண்டுபிடிப்பதே ஒரு ஆன்மிகத் தேடல் என்று கருதப்பட்டது.

எப்போதுமே அகப்பயணத்தை புறத்தே நடத்திக்கொள்ள மனிதர்கள் விரும்புகிறார்கள். அகப்பயணம் வெறும் கற்பனையோ என்ற சந்தேகம் அடிக்கடி வரும். அதன் பாதைகள் வகுக்க முடியாதவை. அதன் அடையாளங்கள் நிலையற்றவை. அதன் வெற்றி தோல்வி சென்றவனால் மட்டுமே அறியப்படுவது. ஆகவே அதை ஒரு புறப்பயணமாக நிகழ்த்திக் கொள்கிறார்கள். கிளம்பிச் செல்கிறார்கள், அலைகிறார்கள், தேடிக்கொண்டே இருக்கிறார்கள். அந்தக் காலகட்டத்தை எல்லாரும்தான் கடந்துவர வேண்டியிருக்கிறது.

நான் அப்போது Institute of Parapsychology And Marginal Psychologyயில் வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். ஹெலெனா ப்ளவாட்ஸ்கியின் நூல்கள், ஆர்தர் ஆவலானின் நூல்கள் ஆகியவற்றில் திளைத்துக் கொண்டிருந்தேன். அந்தபயணத்தில் சரத் சந்திரதாஸின் திபெத்திய நூல்களை வாசித்துக் கொண்டிருந்தேன். அவருடைய ‘Narrative of a journey to Lhasa’ என்னை பித்துப்பிடிக்க வைத்த நூல்களில் ஒன்று. பிரிட்டிஷ் உளவாளியாக லாஸாவுக்குச் சென்று அங்கே சீனர்களுக்கு எதிராக உளவறிந்த சரத் சந்திரதாஸ் மெல்ல மெல்ல திபெத்திய அறிஞரும் ஆய்வாளருமாக மாறினார். ஹென்றி ஸ்டீல் ஆல்காட்டின் நண்பர். என்னை அவராகவே கற்பனை செய்துகொண்டு வாசித்தேன். அந்த வயது அப்படி.

ஒருநாள் ஓர் உந்துதலில் டெல்லியில் இருந்து கிளம்பினேன். ஒரு நீண்ட பயணம் அது. நான் மீண்டும் டெல்லிக்கு வந்தது ஏழாண்டுகளுக்குப் பின்னர். முதலில் சிம்லா வழியாக ஸ்பிடி சமவெளி சென்றேன். அங்கிருந்து லடாக். அங்கிருந்து திபெத். அந்தப் பயணம் அன்று மிகக் கடினமானது, ஏனென்றால் இந்தியாவெங்கும் அலைந்து திரிந்துகொண்டிருந்த சில லட்சம் இந்து துறவிகளின் வழி அல்ல அது. அவர்களுக்கு கேதார்நாத், முக்திநாத், அமர்நாத் போன்று சில எல்லைகள் இருந்தன. கங்கோத்ரி, யமுனோத்ரி, கைலாசம் என சில மலையேற்றங்கள். அதன் உச்சம் என்பது மானசரோவர். பௌத்தர்களுக்கு அப்படியொரு பழகிய வழி இல்லை. பயணியர் குழுவும் இல்லை.

ஆனால் அன்று நல்ல ஊக்கம் கொண்ட மலையேற்றப் பயணிகள் இருந்தனர். பெரும்பாலானவர்கள் வெள்ளையர்கள். இமைய மலைமுடிகளில் ஏறிவிடவேண்டும் என்னும் வெறி ஐரோப்பியரை ஆட்டிப்படைத்த காலகட்டம். சென்றவர்கள், வீழ்ந்தவர்கள் பற்றிய கதைகள் வந்துகொண்டே இருந்தன. அவை பிறரை மேலும் வெறிகொள்ளச் செய்தன. பலர் முன்னாள் ராணுவத்தினர். ராணுவ அதிகாரிகள் விடுப்பு எடுத்துக்கொண்டு மலையேறினர். புதியவழிகளினூடாக இமைய மலையடுக்குகளை கடந்தனர். அதற்கெல்லாம் பிரிட்டிஷ் ராணுவம் நிதியுதவியும் பிற உதவிகளும் செய்தது. அந்த மரபு இந்திய ராணுவத்திலும் தொடர்ந்தது.

1949ல் இன்று பயன்படுத்தப்படும் பல வழிகள் புழக்கத்திற்கு வந்துவிட்டன. ராணுவ வண்டிகள், மலையேற்றக்காரர்களின் வண்டிகள் வழியாகவே முக்கால்பங்கு தொலைவை கடக்கமுடிந்தது. ஆங்கிலம் அறிந்தவன் என்பதனால் அவர்களுடன் என்னால் தேவைப்படும் போதெல்லாம் இணைந்துகொள்ள முடிந்தது. அவர்களுடன் மலைமேல் செல்வது மிகக் கடுமையானதாக இருக்கவில்லை. ஒரு சுயசரிதையில் வேண்டுமென்றால் மேலும் கடுமையாக்கிக் கொள்ளலாம், அவ்வளவுதான்.

என்னை அன்று கவர்ந்திருந்தவை இந்த இமையமலை அடுக்குகளில் கைவிடப்பட்டவை போலக் கிடந்த மாபெரும் பௌத்த மடாலயங்கள். இன்று அவையெல்லாமே சுற்றுலா மையங்களாக ஆகிவிட்டன. திபெத்தை சீனா தாக்கி கைப்பற்றியதற்கு பிறகே திபெத்திய பௌத்தம் ஐரோப்பிய சாமானியர்களால் அறியப்பட்டது. தலாய்லாமா இந்தியா வந்து, தர்மசாலாவில் தலைமையிடம் அமைத்துக் கொண்டு, உலகமெங்கும் பயணம் செய்யத் தொடங்கி ஐரோப்பாவெங்கும் பக்தர்களையும் ஆதரவாளர்களையும் பெறத்தொடங்கிய பின்னரே திபெத்திய பௌத்தமும் குறிப்பாக அவருடைய கெலுக்பா பிரிவும் போதிய நிதி பெறலாயின. அது ஒரு பெரிய மறுமலர்ச்சிக்கு வழியமைத்தது.

அதன் பின்னரே தொன்மையான மடாலயங்கள் பழுதுபார்க்கப்பட்டன. பல மடாலயங்களுக்கு வண்டிப் பாதைகள் அமைக்கப்பட்டன. ஒரு துறவிகூட இல்லாமல், ஒர் ஊழியர்கூட இல்லாமல் முற்றாகவே கைவிடப்பட்டு கிடந்த மடாலயங்களில் துறவிகளும் காவலர்களும் அமைந்தனர். ஐரோப்பியச் சுற்றுலாப்பயணிகள் வரத் தொடங்கினர். மடாலயங்களைச் சுற்றி அவர்களுக்கான உலகம் உருவானது. உணவுவிடுதி, கைவினைப்பொருட்கள் விற்பனை, தங்குமிடம் என அதையொட்டிய தொழில்கள் வளர்ந்தன.

நான் அன்று பயணம் செய்யும்போது ஸ்பிடி சமவெளியின் ஷாஷுர் மடாலயம், லடாக்கின் ஹெமிஸ் மடாலயம் போன்றவை அவ்வப்போது யாராவது வந்து செல்பவையாக இருந்தன. அங்கே துறவிகள் சிலர் இருந்தனர். இளையோர் சிலர் துறவிகளுக்கான பயிற்சியில் இருந்தனர் லே நகரில் இருந்த திக்ஸே போன்ற மடாலயங்கள் நன்றாகவே பேணப்பட்டு நிறைய துறவிகளுடன் இருந்தன. ஆனால் தொலைவில் மலையடிவாரத்தில் தனித்திருந்த லிகிர், ஸ்பிடுக் போன்ற மடாலயங்களில் எவருமே இருக்கவில்லை.

இந்த மலைச்சிற்றூர்களில் கோடைகாலத்தில் நான்குமாதங்கள் மட்டும்தான் விவசாயம் தொழில் எல்லாமே. எஞ்சிய நீண்ட குளிர்காலம் முழுக்க அரைமயக்கம்தான். மொத்த மலைகளும் வெண்பனி போர்த்தி தூங்கும். மரங்கள் விலங்குகள் பூச்சிகள் மனிதர்கள் எல்லாருமே தூங்கிக் கொண்டிருப்பார்கள். மடாலயங்கள் ஆழ்ந்த தவத்தில் இருக்கும். பனிமூட்டத்திற்குள் இருந்து மடாலயங்களின் மணியோசை தினம் இருமுறை எழும். அதுதான் நாட்களை உருவாக்குவது. காலையை மாலையை வகுப்பது. இவை ஒவ்வொன்றும் ஒரு பெருநெறியின் சிறுநிகழ்வுகளே என உணர்த்துவது.

வண்ணங்களே அற்றவை இமையமலைச்சரிவின் இக்கிராமங்கள். மலைகளும் வண்ணங்களற்றவை. சேற்றுச்சாம்பல் நிறமானவை மலைகள். வானம் கலங்கிய சாம்பல் நிறம் கொண்டது. அந்த மண்ணைக் குழைத்து கட்டப்பட்ட தாழ்வான வீடுகளும் சேற்றுச்சாம்பல் நிறமாக அந்த மண்ணிலேயே கலந்து தெரிபவை. மடாலயங்கள் மட்டும் குருதிச்சிவப்பாக, ஆழ்சிவப்பாக, எவரோ மேலிருந்து கொண்டுவந்து வைத்துச்சென்ற விந்தையான பொருளாக மலையடுக்குகள் நடுவே தெரியும்.

இமையமலையின் பல சிற்றூர்களில் தங்கியிருக்கிறேன். காலை எழுந்ததும் முதலில் நம் கண்கள் அந்த மடாலயங்களைத்தான் நாடிச்செல்லும். அந்த ஆழ்நிறம் உருவாக்கும் ஆறுதல் சாதாரணமானது அல்ல. நாம் ஒரு வெட்டவெளியில் வீசப்பட்டிருக்கிறோம். காற்றிலும் ஒளியிலும் வானில் கரைந்து கொண்டிருக்கிறோம். நாம் அள்ளிப்பற்ற ஒரு சிறு கைப்பிடி, நம்மை மேலெடுக்கும் ஒரு சரடின் நுனி அந்த மடாலயங்கள். அவற்றைப் பார்த்த பின்னர்தான் நாம் வெண்பனியின் அலைகளாக சூழ்ந்திருக்கும் மலையடுக்குகளைப் பார்ப்போம். கசியும் ஒளிமட்டுமே கொண்ட வானத்தை பார்ப்போம். பார்த்து விரிந்து எழுந்து அலைந்து மீண்டு நம்மை நாமே உணர்ந்தபின் மீண்டும் அந்த மடாலயத்திற்கு கண்கள் திரும்பிவரும்.

அங்கே பகலெல்லாம் அமர்ந்திருப்பதே குளிர்காலத்தைச் செலவிடும் வழி. பெரும்பாலான இல்லங்கள் மலைச்சரிவு நோக்கி திறந்தவை. ஏனென்றால் பெரும்பாலான இல்லங்கள் பின்பக்கம் மலைச்சரிவின் பாறைகளுடன் சேர்த்து கட்டப்பட்டவை. இப்பகுதியின் நிலநடுக்கத்தையும் மலைச்சரிவையும் எதிர்கொள்ள இவர்கள் கண்டடைந்த வழி அது. திறந்த முற்றத்திலோ திண்ணையிலோ அமர்ந்து கையில் ஹூக்காவுடனோ சுருட்டுடனோ மலைகளை கண்சுருக்கி பார்த்துக்கொண்டு அமர்ந்திருப்பதே இங்கே வாழ்க்கை என்பது. அந்த பார்வை மலைகளையும் மடாலயத்தையும் தொட்டுத்தொட்டு ஓடும் ஒரு தறியோட்டம். ஒரு நெசவு.

நான் லடாக்கில் திக்ஸே மடாலயத்தில் இருந்தேன். அங்கே லடாக்கிய மொழியில் ஐம்பது சொற்களைக் கற்றுக்கொண்டேன். அவற்றை நான் பலமுறை சொன்னால் அவர்கள் புரிந்துகொள்வார்கள். அவர்கள் பலமுறை சொன்னால் நான் புரிந்துகொள்வேன். லடாக்கிய மொழிச் சொற்களில் பலவற்றுக்கும் சம்ஸ்கிருத வேர் இருந்தது. அது அவற்றை நினைவுகூர எனக்கு உதவியாக இருந்தது. மொழிபற்றிய ஒரு தன்னம்பிக்கை வந்தபின் லடாக்கின் மடாலயங்கள் தோறும் சென்றேன்.

சிந்துவின் கரையில் இருக்கும் சிற்றூர்களில் ஒன்று ஸ்பிடுக். அங்கே அன்று நாற்பது வீடுகள் மட்டும்தான். ஸ்பிடுக் கோம்பா என்று அழைக்கப்படும் தொன்மையான மடாலயம் ஊரின் நடுவே இருந்தது. லடாக்கின் மிகப்பெரிய மடாலயங்களில் ஒன்று. திபெத்திய மடாலயங்களின் பாணியில் மலைச்சரிவின் மேலேயே அடுக்கடுக்காக எழுந்த பெரிய கட்டிடம் அது. அங்கே நான் சென்றபோது நான்கு துறவிகள் மட்டுமே இருந்தார்கள். ஒருவர் முதியவர், மற்றவர்கள் நடுவயதினர். இளைஞர் எவருமில்லை. அந்த மாளிகைத் தொகுதியில் அவர்கள் நால்வருமே முழுமையான தனிமையில் இருந்தனர். அவர்கள் ஒருவரையொருவர் சந்திப்பதே அரிது என்று தோன்றியது.

அங்கே நான் எட்டுநாட்கள் தங்கியிருந்தேன். யாக் என்னும் மலைமாட்டின் கெட்டியான பாலில் மக்காச்சோள மாவை விட்டு காய்ச்சி செய்யும் களியை மட்டும்தான் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். அதை நானே செய்து கொள்வேன். அவர்கள் உலர்ந்த பன்றியிறைச்சியை நூடில்ஸ் கஞ்சியில் போட்டு குடிப்பார்கள். குளிரும் அமைதியும் கலக்கும்போது ஒரு விசித்திரமான விளைவு ஏற்படுகிறது. காலம் நின்றுவிடுகிறது. சிந்தை நின்றுவிடுகிறது. காற்றுமட்டும்தான் அசைந்துகொண்டிருக்கும்.

அங்கே முதிய துறவியான டென்ஸின் வாங்சுக் லோர்ட்சவா என்னிடம் பேசிக் கொண்டிருக்கையில் அங்குள்ள மேலும் தொன்மையான மடாலயங்களைப் பற்றிச் சொன்னார். சிந்துவிலிருந்து வடக்கே பியாங் கோம்பா என்னும் மடாலயம் இருந்தது. பியாங் இருபத்தேழு வீடுகள் கொண்ட சிற்றூர். நான் அங்கிருந்து பியாங் கோம்பாவுக்குச் செல்ல விரும்பினேன். “அங்கே எவருமில்லை. முற்றாக கைவிடப்பட்டு கிடக்கிறது. அந்த ஊரில் எவரிடமாவது மடாலயத்தின் சாவி இருக்கலாம்” என்று டென்ஸின் சொன்னார். “அங்கு செல்வதும் கடினம். இது கோடைகாலமானாலும்கூட உருளைக்கற்களால் ஆன சிறிய பாதைதான் உண்டு. குளிர்காலத்தில் அதுவும் இல்லை.”

நான் ஒரு வழிகாட்டியை அமர்த்திக் கொண்டு பியாங் கோம்பாவுக்கு கிளம்பினேன். நாங்கள் இரண்டு கழுதைகள் மேல் ஏறிக்கொண்டோம். ஒரு கழுதைமேல் எங்களுக்கான பொருட்கள். கழுதைகள் பார்வைக்கு சிறியவை. நாம் ஏறி அமர்ந்தால் கால் கீழே தொடுமோ என்று தோன்றும். ஆனால் ஆற்றல்மிக்கவை. அவற்றின் முன்னோடிகள் அந்த மலைகளில் இன்றும் காட்டு விலங்குகளாக வாழ்ந்து கொண்டிருக்கின்றன.

மலைமேல் சாம்பல்நிற மண்சரிவில் மண்புழுத்தடம் போல தெரியும் ஒற்றையடிப்பாதைதான் வழி. சில இடங்களில் அது ஆங்கில Z எழுத்துபோல செங்குத்தான மலைச்சரிவின் மேல் ஏறிச்செல்லும். இப்பகுதியில் புழுதிதான் மலைச்சரிவாக அமைந்துள்ளது. மிகமிக நுண்மையான மணல்புழுதி முதல் நம் தலையளவு பெரிய பாறை நொறுங்கல்கள் வரை பல கிலோமீட்டர் நீளம் கொண்ட பொழிவாக சரிந்திறங்கியிருக்கும். நுண்புழுதியின் அதே இயல்பைத்தான் நொறுங்கல் குவியலும் கொண்டிருக்கும்.

அவற்றின்மேல் செல்லும் பாதை கழுதைக் கால்களால் நன்கு புரிந்து கொள்ளப்பட்டது. கழுதைமேல் அமர்ந்திருக்கையில் பக்கவாட்டுப் பள்ளத்தை பார்த்தால் வயிறு இறுகி உள்திரவங்கள் கலங்கிவிடும். இன்னொரு கழுதையின் குளம்புகள் பதியும் விதத்தைப் பார்த்தால் சட்டென்று உயிர்விட்டு மீளும் கணம் ஒன்று அமையும். ஒழுக்கில் உருண்டு நிற்கும் கற்களின்மேல் குளம்புகளை வைத்து எறும்பு போல சென்றுகொண்டே இருக்கும் கழுதை. அது காலை எடுத்ததும் அந்தக் கல் உருண்டு அடியாழத்திற்குச் சென்று விழும். கழுதைக் காலின் குளம்புகளுக்கு மேலே உள்ள பகுதியை நீ பார்க்கவேண்டும் இரண்டு விரல்களால் வளைத்துவிடலாம். அந்தச் சிறிய நான்கு எலும்பு மூட்டுகள் எங்களை மலைமேல் கொண்டு செல்கின்றன என்று எண்ணிப் பார்க்கையில் ஒரு மெய்மறந்த நிலை உருவாகும்.

ஒவ்வொரு குளிர்காலத்திற்கு பிறகும் பாதை புதிதாக உருவாக்கப்படும். அந்தப்பாதையின் மிகப்பெரிய இடர் என்பதே மேலிருந்து பொழியும் கல்மழைதான். கற்களால் ஆன அருவி. பொழிந்து பொழிந்து கோபுரமாக ஆகி வழியை மூடிவிடும். அதை சுற்றிவளைத்துக் கொண்டு கழுதை செல்லும். நேரடியாக அதில் சிக்கிக் கொண்டால் ஓரிரு கற்களிலேயே மண்டை பிளந்துவிடும். சிலசமயம் எருமைகளைப்போன்ற யானைகளைப்போன்ற கற்களே உருண்டு வந்து விழுவதுண்டு. அரிதாக பெரிய வீடுகளைப்போன்ற பாறைகளே இடியோசையுடன் கீழிறங்கி வரும்.

பியாங்க் கோம்பா செல்ல இரண்டு பகல்கள் ஆயிற்று. நடுவே மலையின் இடுக்கு ஒன்றுக்குள் இரவு தங்கினோம். வெட்டவெளியில் இப்பகுதியில் இரவு தங்குவது இயலாது. ஆகவே பயணிகள் தங்குவதற்கான மலைப்பிளவுகள் மற்றும் இடுக்குகளை கண்டுபிடித்து வைத்திருக்கிறார்கள். விலங்குகளுடன் நாலைந்து பேர் உள்ளே சென்றுவிட முடியும்.

பெரும்பாலும் மென்பாறையாலானவை இந்த பொந்துகள். அந்த பாறையில் இருந்த உப்புப்பொருள் காற்றால் அடித்துச் செல்லப்பட்டு குழிந்து குகைகளாக ஆகிவிடும். அவற்றை மேலும் குடைந்து தங்குவதற்குரிய வகையில் ஆக்கியிருப்பார்கள். உள்ளே சென்று கனத்த போர்வைகளை சிறிய கூடாரக் குவியலாக அமைத்து உள்ளே ஒடுங்கிக் கொண்டோம். அடியில் யாக்கின் தோலும் வெளியே யாக்கின் மயிரும் கொண்ட இரண்டு அடுக்கான அந்தப் போர்வைகள் அற்புதமாக குளிர்தாங்குபவை. கூட்டுப்புழுக்களைப் போல சுருண்டு கொண்டால் உடலுக்கு தூங்கு என்ற ஆணையை நாமே விடுக்கிறோம். நான் இமையமலைகளில் போல எங்குமே ஆழ்ந்து தூங்கியதில்லை

பியாங் கோம்பா சாதாரணமான மடாலயம். அப்பகுதியின் சாம்பல்நிற மண்ணை சுண்ணாம்புடான் குழைத்து கட்டப்பட்டது. சாணிமெழுகிய சுவர் என்று தோன்றும் அடர்சிவப்புநிறமான விளிம்புகள் கொண்ட சிறிய சன்னல்கள் வரிசையாக இருந்தன. சிவப்புநிறம் பூசப்பட்ட உத்தரங்களுக்குமேல் அமைந்திருந்த மரத்தாலான கூம்புக்கூரை பெரும்பாலான இடங்களில் உடைந்து உள்ளே சரிந்திருந்தது. கதவு பூட்டப்படாமல் வெறுமே கொண்டி போடப்பட்டிருந்தது. புழுதியின், மட்கும் துணிகளின் மணம் வந்தது.

என் வழிகாட்டி நான் டென்ஸின் அவர்களால் அனுப்பப் பட்டவன் என்று சொன்னான். ஊர்த்தலைவரான கிழவர் வந்து என்னை இடையளவு குனிந்து வணங்கி அவருடைய சிறிய வீட்டுக்கு அழைத்துச் சென்றார். தரையில் தடிமனான யாக் மென்மயிர் விரிப்புகள் போடப்பட்டு சுவர்களும் கூரையும் தோலால் உறையிடப்பட்ட சிறிய அறைக்குள் அமர்ந்து அவர் அளித்த மக்காச்சோள கூழை குடித்தேன். என் உடலுக்குள் அது வெம்மையை நிறைத்தது. உயிர் என்பது வெம்மையே என்று நாம் உணரும் தருணம் அது.

பியாங் கோம்பாவில் அப்போது துறவி எவரும் இல்லை. அங்கிருந்த முதிய துறவி சமாதியாகி பதினேழு ஆண்டுகளாகின்றன புதியவர் எவரும் அனுப்பப் படவில்லை. மடாலயம் பழுது பார்க்கப்படவில்லை. எட்டாண்டுகளுக்கு முன்பு அதன் கூரை பனிப்பொழிவின் சுமை தாளாமல் விரிசலிட்டது. நீர் ஒழுகி சுவரும் சற்றே பிளந்தது. அடுத்தடுத்த பனிப்பொழிவுகளில் அதற்குள் பனி நிறைந்து அது உருகி செடிகளும் பாசிகளும் முளைத்தன. அவற்றை ஓரளவே தூய்மை செய்ய முடிகிறது. ஆனால் மடாலயம் அழிந்து கொண்டிருக்கிறது என்றார் ஊர்த்தலைவர்.

நான் பியாங் கோம்பாவின் உள்ளே சென்றேன். பதினாறாம் நூற்றாண்டில் செய்யப்பட்ட அமிதாப புத்தர் கையில் அமுதலகத்துடன் மையப்படிமமாக அமர்ந்திருந்தார். வலப்பக்கம் மைத்ரேய புத்தர். இடப்பக்கம் நான்கு தலைகள் கொண்ட காலாபுத்தர். நேர் எதிரே காலதேவரின் சிலை. மென்மரத்தாலான சிலைகள். அவற்றின்மேல் தங்க ரேக்கு படிய வைக்கப்பட்டிருந்தது. அது பல இடங்களில் மறைந்து போய் ஆங்காங்கே மென்மையான மஞ்சள்நிற ஒளிபோல தெரிந்தது. சுவரில் சிற்றறைகளில் ஆயிரம்புத்தர் சிலைகள். ஒரு பெரிய நூலடுக்கு முழுக்க பழங்கால தோல்சுருள், பட்டுச்சுருள் சுவடிகள். யாக் நெய்யாலான மெழுகுவத்திகளில் சுடர்கள் அசையாமல் நிற்க புத்தர் மாபெரும் சுடர் என தோன்றினார்.

இடுங்கலான அறையொன்றில் மென்மையாக மரக்கீல்களில் சுற்றிக்கொண்டிருந்த ஏழு  மணிபத்ம அறச்சக்கரங்கள். அவற்றில் ‘ஓம் மணிபத்மே ஹும்’ என்னும் மந்திரம் திபெத்திய மொழியில் எழுதப்பட்டிருந்தது.அவற்றை வெளியே இருந்து சுழற்றுவதற்குரிய பற்சக்கரங்கள் இருந்தன. அவ்வப்போது ஊரிலிருந்து வந்து எவரோ அவற்றைச் சுழற்றிக்கொண்டிருக்கிறார்கள்.

அங்கே சுற்றிக் கொண்டிருக்கையில் எனக்குள் இயல்பாக எழுந்த ஐயத்தை நான் ஊர்த்தலைவரிடம் கேட்டேன். அதை என் வழிகாட்டி மொழியாக்கம் செய்து சொன்னான். “இந்தச் சிறிய ஊருக்கு ஏன் இத்தனைபெரிய மடாலயம்?”

முதியவர் சிரித்துவிட்டார் “பௌத்தர்களுக்கு மடாலயமே தேவையில்லை. மடாலயங்கள் அமைவது துறவிகளுக்காகத்தான்.”

“அவர்களுக்கு எதற்காக மடாலயங்கள்?” என்று நான் கேட்டேன்.

“கூட்டுப்புழுக்களுக்கு கூடுபோல” என்றார்.

மிகச்சுருக்கமான பதில். ஆனால் என்னை அது திகைக்கச் செய்தது. கூட்டுப்புழுவுக்கு எவரும் அதை செய்து கொடுப்பதில்லை. அதுவே தனக்காக கட்டிக்கொள்கிறது, தன் உயிரால், உடற்திரவத்தால். அதன்பின் உள்ளே தவம் செய்கிறது. சிறகு முளைத்தபின் உடைத்து வெளியே செல்கிறது.

நான் மேலும் ஒரு கேள்வியைக் கேட்டேன் “ஒரு மடாலயத்தின் அளவு எவ்வாறு தீர்மானிக்கப்படுகிறது?”

“அந்த பிட்சு தீர்மானிக்கிறார். அவருடைய அளவு அவருக்குத்தான் தெரியும்” என்றார் ஊர்த்தலைவர். “இங்கே முன்பு இருந்த பிட்சு இந்த பெரிய மடாலயத்தில் இதோ இந்தச் சிறிய அறையில் மட்டும்தான் வாழ்ந்தார். வேறெங்கும் அவர் போனதே இல்லை.”

நான் அந்தச் சிறிய அறையை நோக்கிக் கொண்டு நின்றேன். அது ஒரு சிறிய பெட்டிதான். ஒருவர் கால்நீட்டி படுக்கலாம். இன்னொருவர் உள்ளே நுழைந்தால் இருவரும் அமர்ந்து கொள்ளவேண்டும். மரத்தாலான மிகச்சிறிய, திறந்த அலமாரா. பத்து புத்தகங்கள் வைக்கலாம். ஒரு மிகச்சிறிய மெழுகுவத்தி மேஜை. அவ்வளவுதான் இடம். ஆனால் அது போதும் ஒருவருக்கு. வசதியாகவே இருக்கமுடியும்.

என் எண்ணத்தை அறிந்ததுபோல ஊர்த்தலைவர் “இங்கே மேலும் வடமேற்கில் உம்லா என்று ஒர் ஊர் உள்ளது. அங்கே மொத்தமே ஏழு வீடுகள்தான். பதிமூன்றுபேர்தான் வாழ்கிறார்கள். அனைவருமே மலையில் யாக்குகளை மேய்ப்பவர்கள். ஆனால் அங்கிருக்கும் மடாலயம்தான் லடாக்கிலேயே பெரியது” என்றார்.

நான் “அப்படியா?”என்றேன். “திக்ஸே மடாலயம்தான் மிகப்பெரியது என்றார்கள்.”

“ஆமாம், இப்போது அதுதான். உம்லாவின் மடாலயத்தின் பெரும்பகுதி சரிந்துவிட்டது… ஆனால் எஞ்சியிருப்பதேகூட டிக்ஸிட் மடாலயத்தைவிட பெரியதுதான்”

“நான் கேள்விப்பட்டதே இல்லை” என்றேன்.

“எவருமே கேள்விப்பட்டிருக்க மாட்டார்கள்… இதுவரை அங்கே வெள்ளைக்காரர்கள் எவருமே போனதில்லை. அப்படி ஒரு சிறிய ஊர். போய்ச் சேரவே மூன்றுநாட்களாகும்.”

“நான் அங்கே போகவேண்டும்” என்றேன்.

“அங்கேயா? இதேபோன்ற மடாலயம்தான், இதைவிட பத்துமடங்கு பெரியது என்று வைத்துக்கொள்ளுங்கள்”. நான் கிளம்புவேன் என அவர் நினைக்கவில்லை. ஆகவே ஊக்கம் குறைந்தவரானார்.

“அங்கே போகவேண்டும், என்னவழி?” என்றேன்.

என் வழிகாட்டி அங்கே வரமாட்டேன் என்று சொல்லிவிட்டான். அவனுக்கு வழி தெரியாது. அவன் திரும்பிப் போகவும் விரும்பினான். அவனை ஒருவாரம் அங்கே தங்கச் சொன்னேன். என்னை பியாங் ஊரைச்சேர்ந்த ஒருவனே மேலே கூட்டிச் சென்றான். வழக்கம்போல மூன்று கழுதைகள். ஒன்றில் எங்களுக்கான குளிராடைகளும் உணவும் நீரும். இரண்டில் நாங்கள்.

மூன்று பகல்களாயிற்று நாங்கள் உம்லாவுக்குச் சென்றுசேர. நன்கு வழிதெரிந்த ஒருவர் இல்லாமல் அங்கே செல்லவே முடியாது. பாதை மாறிக்கொண்டே இருப்பது. நிலமே ஆண்டுதோறும் முற்றிலும் மாறிவிடுவது. புதிய பாறைகள் உருண்டு வந்து அமைந்திருக்கும். புதிய மண்குன்றுகள் உருவாகியிருக்கும். அதைவிட மிகமிக அருகே செல்வதுவரை நம்மால் உம்லாவை கண்டுபிடிக்கவே முடியாது.

மிகச்சிறிய ஊர். ஊர் கூட அல்ல, ஏழு சிறுவீடுகளின் தொகுப்பு. ஊருக்கு வெளியே அங்கே ஊர் இருப்பதை அறிவிக்கும் சுடுமண் ஸ்தூபி. அதைச் சுற்றி சிவப்பு மஞ்சள் நிறத்தாலான கொடித்தோரணம் கட்டப்பட்டிருந்தது. சரிவிலிருந்து எழுந்துவீசிய காற்றில் பலநூறு தேன்சிட்டுகள் போல தோரணக்கொடிகள் அதிர்ந்துகொண்டிருந்தன. நல்ல பளிச்சிடும் வெயில். ஆனால் மேல்மூக்கின் தோலை எரியவைக்கும் குளிரும் இருந்தது.

புழுதியில் கால்கள் புதையப் புதைய உம்லாவுக்குச் சென்றுசேர்ந்தோம். அங்கே மடாலயம் ஏதும் தென்படவில்லை. “அது உம்லா தானா?” என்று நான் கேட்டேன்.

“அதுதான்” என்று வழிகாட்டி சொன்னான்.

உம்லாவின் ஊர்த்தலைவர் தொலைவில் வந்தபோது சிறுவன் போல தோன்றினார். அருகே வந்தபோது முதுமை அடைந்து என் முன் வந்து நின்றபோது நூற்றுக்கிழவராக ஆனார். தன் பெயர் சோடக் யார்க்யே என்று அறிமுகம் செய்துகொண்டார். இவர்களின் பெயர்களெல்லாம் பல அடுக்குகள் கொண்டவை. முதல் சொல்லை நினைவில் வைத்துக்கொள்வதுதான் நல்லது.

சோடக் எங்கள் வருகையால் மகிழ்ந்தவராக தெரியவில்லை. இந்த மலைச்சிற்றூர்களில் புதிதாக வருபவர்கள் ஒரு நிலைகுலைவை உருவாக்குகிறார்கள். ஆகவே எப்போதுமே விருந்தினர்களை இவர்கள் ஐயத்துடனும் எரிச்சலுடனும்தான் பார்க்கிறார்கள். தூங்குபவனை எழுப்பினால் வரும் எரிச்சல்.

மேலும் புன்னகை, முகமன் உரைத்தல், நலம் உசாவுதல் போன்ற சம்பிரதாயங்களும் இவர்களுக்குத் தெரியாது. ஆகவே நம் வருகையை இவர்கள் விரும்பவில்லை என்று தோன்றும். அவர்கள் இயல்பாக நமக்கு வேண்டியதைச் செய்வதையும் முடிந்தவரை உதவுவதையும் கண்டபின்னரே அவர்கள் நம்மை விரும்புவது புரியும்.

கிளம்பும்போதும் அவர்கள் மெல்லுணர்வுகள் எதையும் வெளிப்படுத்துவதில்லை. கண்களைச் சுருக்கி சிரித்து விடைகொடுப்பார்கள். இங்கிருந்து கிளம்பும் ஒவ்வொருவரும் மீண்டும் வராதவர்களே. ஆகவே அது ஒருவகை சாவுதான். ஆனால் அவர்களின் வாழ்வே ஒரு பெரிய தியானம். அங்கே வாழ்வும் சாவும் நாமளிக்கும் மிகையான எடையேதும் இல்லாத நிகழ்வுகள்.

உம்லாவின் ஊர்த்தலைவரின் சிறிய அறையில் மக்காச்சோள நூடில்ஸை சாப்பிட்டுக்கொண்டு ஓய்வெடுத்தபோது நான் கேட்டேன். அங்கே மடாலயம் எங்கே இருக்கிறது என்று. அவர் மலைகளைச் சுட்டிக்காட்டினார். அது ஒரு சோர்வையே அளித்தது. இடம் மாறிவந்துவிட்டோமா? உம்லா மடாலயம் உம்லாவில் இல்லையா?

நான் லடாக் மொழியில் எனக்குத் தெரிந்த சொற்களை கொண்டு பேசிப்பேசி மெல்ல புரிந்துகொண்டேன். உம்லா இடம் மாறிக்கொண்டே இருந்திருக்கிறது. நூறாண்டுகளில் அது கிட்டத்தட்ட ஒரு முழு மலைச்சரிவையே தாண்டிவந்துவிட்டது. அவர்களின் பழைய இடத்தில் மலையடிவாரத்தில் உம்லா மடாலயம் இருக்கிறது. அது மிகப்பெரியது, அதன் இடியாத பகுதிகள் சில எஞ்சியிருக்கின்றன

அங்கே ஓய்வெடுத்தபின் மறுநாள் நான் சோடக்குடன் மடாலயத்தைப் பார்க்க கிளம்பிச் சென்றேன். நடந்துதான் சென்றோம். இரு நீளமான மூங்கில்களை ஊன்றியபடி நடந்தோம். அதன் முனை கூர்மையானது, நான்கு விரற்கடை உயரத்தில் ஒரு மரவட்டம் உண்டு. புழுதியில் அதை ஊன்றினால் கூர்முனை குத்தி இறங்கும். வட்டப்பரப்பு புழுதியில் அழுந்தி நிற்கும். பனியில் நடப்பதற்குரியது, புழுதிக்கும் உதவியானது. கழுதை ஒன்று உடன்வந்தது, எங்களுக்கான பொருட்களுடன்.

மலைச்சரிவை சுற்றிக்கொண்டு சென்றபோதே நான் உம்லா மடாலயத்தை கண்டுவிட்டேன். எதிரே மலைச்சரிவில் அது மேலிருந்து விழுந்து வழுக்கியபடி வந்து அப்படியே வழிந்து நின்றிருப்பதுபோல தெரிந்தது. ஒன்றன்மேல் ஒன்றாக எட்டு அடுக்குகள் கொண்ட கட்டிடம். சிவப்பான ஓட்டுக்கூரையும் சாம்பல்நிறமான சுவர்களும் கொண்டது. சன்னல்கள் குருதிச் சிவப்பானவை. அதன் வடக்குப்பகுதி சரிந்து சிதைந்து சரிவில் இறங்கியிருப்பதைக் கண்டேன்.

இமையமலைப் பகுதியின் விந்தைகளில் ஒன்று, ஓர் இடத்தை நாம் கண்ணால் பார்த்தபிறகு அங்கே சென்றடைய பலமணிநேரம் ஆகும் என்பது. பார்த்ததுமே அங்கே மனதால் சென்றுவிடுவோம். ஆனால் செல்லச்செல்ல பாதை சுருளவிழ்ந்து நீண்டுகொண்டே இருக்கும். ஒருமுறை பார்த்தபின் கண்களை தாழ்த்திக்கொள்ள வேண்டும். மீண்டும் இலக்கை பார்க்கவே கூடாது. கணக்கிடாதபடி சென்றபடியே இருக்கவேண்டும்.அப்போதுதான் உளம்சோராமல் சென்றுசேரமுடியும்

நாங்கள் அந்த மடாலயத்தை சென்றடைந்தபோது மாலையாகியிருந்தது. மிகப்பெரிய மடாலயம். அணுக அணுக அது பெரிதாகியபடியே வந்தது. அதன்கீழே ஒரு முற்றம். ஒருகாலத்தில் அங்கே பல்லக்குகளும் மஞ்சல்களும் வந்து நின்றிருக்கலாம். அது கூழாங்கல்பரப்பாக கிடந்தது. வெயிலில் கூழாங்கற்கள் அனைத்தும் நிழல்கொண்டிருந்தன. அங்கிருந்து மேலேறிச் சென்றன படிகள். அவற்றில் ஏறியபோது அந்த மடாலயத்தின் அளவு திகைப்பை உருவாக்கியது. அத்தனை பெரிய கட்டிடத்தில் ஒருவருமே இல்லை என்பது அளித்த பதற்றம் உடனே திரும்பிவிடவேண்டும் என்ற தவிப்பாக மாறியது.

கீழே இருந்தே கட்டிடங்கள் தொடங்கி ஒன்றன்மேல் ஒன்றாகச் சென்றுகொண்டே இருந்தன. படிகள் இமையமலையில் கிடைக்கும் உருளைக் கற்களை சுண்ணத்துடன் குழைத்து செய்யப்பட்டவை. கட்டிடங்களுக்கு மண்ணால் கட்டப்பட்டு சுண்ணம் பூசப்பட்ட சுவர்கள். அவற்றுக்குமேல் லடாக்முறைப்படி தடிகளை செறிவாக பரப்பி, அதற்குமேல் சுள்ளிகளை மூன்றடி உயரத்திற்கு அடுக்கி, அதற்கு மேல் மண்போடப்பட்டு உருவாக்கப்பட்ட கூரை. சிறிய கதவுகள். பெரும்பாலானவை சும்மா சாற்றப்பட்டிருந்தன. உள்ளே இருளும் அமைதியும் நிறைந்திருந்தன.

மேலே செல்லச்செல்ல கட்டிடங்கள் பெரிதாயின. கூரை மிக உயரத்தில் மரப்பட்டைகளால் ஆனதாக மாறியது. உத்தரங்களின் முனைகளுக்குச் செம்பு உறை போடப்பட்டிருந்தது. உத்தரங்களும் பட்டியல்களும் செந்நிறச் சாயம் பூசப்பட்டவை. சன்னல் கதவுகள் நிலைகள் எல்லாமே கருஞ்சிவப்புச் சாயம் கொண்டவை. அவற்றின் எல்லைகளில் எல்லாம் நாகங்களும் யாளிகளும் வாய்திறந்திருந்தன. கதவுகளின் நாதாங்கிகளும் பிடிகளும் குமிழிகளும் பித்தளையாலானவை.

உள்ளே மிகப்பெரிய நீள்சதுரக் சைத்ய கூடத்தில் அமிதாப புத்தர் கையில் அமுதகலத்துடன் அமர்ந்திருந்தார். இருபதடி உயரமான பெரிய சிலை. மரத்தால் செய்யப்பட்டு பொன்வண்ணமும் செந்நிறமும் கருநிறமும் பூசப்பட்டது. புத்தரின் உடல்பொன். ஆடை சிவப்பு. சுருள்முடி கருமை. விழிகள் நீண்டு கனவில் மயங்கியிருந்தன. உதடுகளில் புன்னகையோ என்னும் சிறிய மலர்வு. அமுதகலம் பொற்கனி என மின்னியது.

புத்தரின் வலப்பக்கம் புலிமேல் நின்றிருக்கும் பத்மசம்பவர். இடப்பக்கம் கரிய பன்னிரு தலைகள் கொண்ட காலவடிவான புத்தர். ஒரு தனித்த பீடத்தில் வஜ்ரயோகினியுடன் சம்போகநிலையில் வஜ்ரயோகபுத்தர். சுவரெங்கும் சகஸ்ரபுத்தர். சிறிய அறைகள் நிறைய சுவடிகள். சிலசுவடிகள் பொன்பூச்சுள்ள அடிக்கட்டை போட்ட தோல்சுருட்கள்.

அந்தக் கூடத்தைப் பார்த்தபோது அது நெடுங்காலம் முன்பு கைவிடப்பட்டது என்று தெரிந்தது. மலையெருதின் தோலால் ஆன இருக்கைகள் மட்கியிருந்தன. மிகப்பெரிய உருட்டுமுரசு தோல்கிழிந்து நின்றது. வெவ்வேறு உலோக இசைக்கருவிகள் ஆங்காங்கே புழுதி படிந்து அமைந்திருந்தன

சூழ்ந்திருந்த உயரமான சுவர்களில் டாங்காக்கள் மங்கலடைந்த வண்ணங்களுடன் மேலிருந்து தொங்கி தலைக்குமேல் வரை வந்த பட்டுக் குச்சலங்களுடன் நின்றன. அவற்றில், காலாபுத்தர், ஓங்கிய வஜ்ராயுதத்துடன் வஜ்ரதர புத்தர், தாமரை ஏந்தி நின்ற போதிசத்வ பத்மபாணி, இந்திரன், யமன். பௌத்தர்களின் பிரபஞ்ச அடுக்குச் சித்தரிப்புகள். பிரக்ஞை மண்டலச் சித்தரிப்புகள்.

நான் அந்த மடாலயத்தை மார்பில் கட்டிய கைகளுடன் பார்த்துக் கொண்டு சுற்றி வந்தபோது சட்டென்று அவரைப் பார்த்தேன். ஓவியங்களுக்கும் சிற்பங்களுக்கும் நடுவே அவரைக் கண்டதும் என் அகம் அதிர்ந்தது. அவர் அவற்றிலிருந்து உயிர்கொண்டவர் போல என்னை நோக்கி தலைவணங்கினார். ஒர் உறுதியான உடல்கொண்ட பிட்சு.

கருஞ்சிவப்பு நிறத்தில் கம்பிளியாலான ஆடையை சுற்றிச்சுற்றி தோளில் அணிந்திருந்தார். தலை முண்டனம் செய்யப்பட்டிருந்தது. செம்புத்தவலை போன்ற முகம். சிறிய கண்கள் திபெத்தியர்களிடம் இல்லாத ஒரு பச்சைநிறம் கொண்டிருந்தன. இந்த முகங்களை அறியத்தொடங்கியவர்கள் அவருக்கு அறுபது வயதுக்குமேல் இருக்கும் என்று ஊகிப்பார்கள். நுணுக்கமான சுருக்கங்களால் ஆன வட்டமுகத்தில் கன்னத்தசைகளின் தளர்வே வயதைக் காட்டுவது.

அங்கே அப்படி ஒருவர் இருப்பதை சோடக் எதிர்பார்த்திருக்கவில்லை. அவர் திகைப்புடன் தலைவணங்கினார். அவர்கள் லடாக்கிய மொழியில் பேசிக்கொண்டனர். என்னை டென்ஸினால் அனுப்பப் பட்டவர் என்று சோடக் சொன்னார்.

அந்த பிட்சு என்னிடம் ஆங்கிலத்தில் “உங்கள் ஊர் தெற்கா?” என்றார்.

“ஆமாம்” என்றேன். “நீங்கள் ஆங்கிலம் பேசுவீர்கள் என எண்ணவேயில்லை.”

“நான் தெற்கே புத்த கயாவில் இருந்திருக்கிறேன்” என்றார்.

“நான் மேலும் தெற்கே, கேரளத்தில் இருந்து வருகிறேன்.”

“கன்யாகுமரியில் இருந்தா?”

“ஆமாம்” என்றேன்.

“அதற்கு அப்பால் இலங்கை” என்று அவர் சொன்னார்.

“நீங்கள் இங்கே லாமாவாக பொறுப்பில் இருக்கிறீர்களா?”

“இல்லை, என் பயணத்தில் இங்கே வந்தேன். இதற்குமுன் திக்ஸே மடாலயத்தில் இருந்தேன்.”

“நானும் அங்கே இருந்தேன்” என்றேன்.

அவர் புன்னகைக்கவில்லை.

“இங்கே எவ்வளவு நாட்களாக தங்கியிருக்கிறீர்கள்?” என்று நான் கேட்டேன்.

“எட்டுமாதங்களாக” என்றார் துறவி.

“எட்டுமாதங்களகவா!” என்றபின் “இவர்களுக்கு தெரியாமலா?” என்றேன்.

“ஆமாம், இவர்கள் எவரும் இங்கே வருவதில்லை.”

“உணவுக்கு என்ன செய்கிறீர்கள்?”

“இங்கே எல்லாமே இருக்கிறது…” என்று அவர் சொன்னார். “இங்கே வேண்டியதை கொண்டுவர வேறு வழிகள் இருக்கின்றன. இந்த மலையிடுக்கு வழியாக கீழே செல்லும் சீன வணிகர்கள் உண்டு”

சோடக் கைகூப்பியபடி நின்றார்.

நான் “தங்கள் பெயர் என்ன என்று அறியலாமா?”.என்றேன்.

“ராப்டன் ஓர்க்யின் லிங்பா. என்றார் முழுப்பெயரும் உனக்கு நினைவில் நிற்காது. ராப்டன் என்றால் உறுதியான காலடிகள் என்று பொருள்.”

நான் “துறவிக்கு உகந்த பொருள்” என்றேன்.

“வா” என்று அவர் எங்களை அழைத்துச் சென்றார்.

உள்ளே ஓர் அறையை அவர் தூய்மைசெய்து வைத்திருந்தார். செந்நிறமான மென்மயிர்த்தோல் பரப்பப் பட்ட அறை. தரை சுவர் கூரை எல்லாமே தோல் போர்த்தப்பட்டவை. இருப்பிடங்கள் தோல்மெத்தையாலானவை

“இது இங்கே மிக வசதியான அறை, ஏனென்றால் சிறியது” என்று ராப்டன் சொன்னார். “இத்தகைய எழுபது அறைகள் இங்கு உள்ளன. இங்கே வசதியாக நாநூறு பேர் தங்கலாம்.”

நாங்கள் அமர்ந்து கொண்டோம். நான் கால்மேல் கம்பிளியை எடுத்துப் போட்டு கைகளை மார்பின்மேல் கட்டிக்கொண்டேன். சோடக் அவர்களுக்குரிய முறையில் குந்தி அமர்ந்தார்.

அந்த அறைக்குள் பழைமையான முறைப்படி வெப்பம் வருவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வெளியே ஓர் அடுப்பில் எரியும் விறகின் கனல் மண்குழாய் வழியாக அறைக்குள் வந்து அங்கே பதிக்கப்பட்டிருந்த பெரிய இரும்புத்தகடின் அடியில் பட்டு அதை பழுக்கக் காய்ச்சி சிவக்கச் செய்துவிட்டு மண்குழாய் வழியாக மேலே சென்று புகையாகி வானில் மறையும். அறைக்குள் தீயோ புகையோ வருவதில்லை. அறையின் ஆக்ஸிஜனும் எடுக்கப்படுவதில்லை.

அந்த இரும்புத்தகட்டின்மேல் அவர் தட்டையான அடித்தளம் கொண்ட செம்புக்கெட்டிலில் நீரை ஊற்றி வைத்தார். கீழே அடுப்பு அமைந்திருக்கும் விதம் மலைச்சரிவில் ஏறிவரும் காற்று நேராக உள்ளே புகுந்துகொள்வதுபோல இருக்கும் என நான் ஊகித்தேன். சிறிய துளைகள் வழியாக அந்தக் காற்று அனலை ஊதிக்கொண்டே இருக்கும். ஆகவே துருத்தி ஏதும் தேவையில்லை. விறகு சீராகவே எரியும். அந்தவகை அடுப்பை நான் மடாலயங்களில் கண்டிருக்கிறேன்

இரும்புத்தகடு சூடாகி செந்நிறமாகி ஓசையிட்டது. அறைக்குள் வெம்மை நிறைந்தது. இதமான சிறிய அறை. ஒரு புழுவின் கூடுபோல. பெரும்பாலான புழுக்கள் தங்கள் உடலின் அதே வடிவில் கூடுகளை அமைத்துக்கொள்கின்றன. சில பதங்கங்கள் தங்கள் உடலையே கூடாக ஆக்கி உள்ளே பிரிந்து தனியாக வளர்கின்றன.

மிகச்சிறிய இடத்தில் அனைத்தையும் அமைத்துக் கொள்ள முடியும். அதை முதலில் லடாக்கில்தான் பார்த்தேன். அது குளிருக்கு உகந்தது. காற்று அங்கே அலைகொள்வதில்லை. வெப்பம் நிலைநிற்கும். அதோடு எழுந்து எழுந்து செல்ல வேண்டியதில்லை, அனைத்தும் கையருகிலேயே இருக்கும்.

அவருடைய படுக்கையிலேயே அவர் அமர்ந்திருந்தார். எதிரில் இருந்த மெத்தைத் திண்டின்மேல் நாங்கள். அவருடைய படுக்கையின் தலைமாட்டில் ஓரடி உயரமான பீடம். அதன்மேல் எண்ணை விளக்கு. சிலநூல்கள். ஆங்கிலநூல்களும் இருந்தன சீராக வெட்டப்பட்ட காகிதங்கள், நாலைந்து பென்சில்கள். காலடியில் ஒரு பீடம், அதில் குடிநீர் இருக்கும் தோலுறையிடப்பட்ட கொப்பரை.

மிகவிரைவிலேயே கெட்டிலில் நீர் தளதளத்தது. அதை பீங்கான் கோப்பைகளில் ஊற்றி டீயிலைகளை போட்டு எங்களுக்கு தந்தார். அந்த குளிரில்தான் டீ என்றால் உண்மையில் என்ன என்று புரியும். ஒவ்வொரு துளியும் உயிருக்கு அமுது.

“நான் ஓரிரு நாட்கள் இங்கே தங்கமுடியுமா?” என்று கேட்டேன்.

“உடல்நலச் சிக்கல் ஏதும் இல்லாவிட்டால் தங்கலாம்” என்றார்.

நான் சோடக்குக்கு விடைகொடுத்து அனுப்பினேன். அதன்பின் அந்த மடாலயத்தைச் சுற்றிப் பார்த்தேன். பார்க்கப் பார்க்க விரிவாகிக்கொண்டே சென்றது அது. ஒன்றிலிருந்து ஒன்றென தொடுத்துக் கொண்டும், ஒன்றுடன் ஒன்று இணையாமலும் இருக்கும் அறைகள். அது ஒரு மாபெரும் தேன்கூடு என்று தோன்றியது. இரண்டு கூடங்கள் செந்நிறமானவை. ஒன்று பொன்னிறம்.

அகன்ற பிரார்த்தனைக் கூடத்தின் நடுவே வெண்கலக் குன்றுபோல பெரிய மணி. லடாக்கின் மணிகள் மிகக்கனமான தலைகீழ் குவளைகள். வாய்வட்டம் விரிவடையாமல் செங்குத்தாகவே சென்றிருக்கும். அவை மணியோசை எழுப்புவதில்லை. ஓங்கார ஓசையையே எழுப்பும். இரு சரடுகளில் தொங்கும் நீண்ட கழியை உந்தி அவற்றை அடிப்பார்கள்.

அந்த மணியை தாங்கி நிறுத்திய மர அமைப்பு சரிந்து அது தரையில் பதிந்துவிட்டிருந்தது. அதை தொட்டபோது பாறை என்றே தோன்றியது. அதிலிருந்து ஓசையெழும் என்று சொன்னால் நம்பமுடியாது. தனக்கென நாவில்லாத மணி. வெளியே இருந்து தொடப்பட்டால் மௌனத்தின் ஓசையை எழுப்பி அமைவது. தன் ஓசையின்மைக்கே திரும்பிவிட்டிருந்தது.

அன்றிரவு அந்த சிறுஅறையில் நானும் அவருடன் தங்கிக்கொண்டேன். அமர்வதற்கான மெத்தையை படுக்கையாக்கிக் கொண்டேன்.

இரவில் அவருடன் பேசிக்கொண்டிருந்தேன். இயல்பாக பேச்சு ஆரம்பித்தது. இருவரும் ஒருவரைப் பற்றி ஒருவர் விசாரித்துக்கொள்ளவில்லை. ஆகவே அந்த மடாலயம் பற்றிப் பேசினோம்.

“இந்த சிறிய ஊரில் இத்தனை பெரிய மடாலயம் எதற்கு என்று நான் சோடக்கிடம் கேட்டேன்” என்றேன் .“அவர் இது கூட்டுப்புழுவின் கூடு போல என்றார்.”

ராப்டன் சிரித்து “அது இங்கே வழக்கமான வர்ணனை” என்றார். “ஆனால் மிகவும் பொருத்தமானது. இந்த மடாலயம் நோர்பு திரக்பா என்ற லாமாவால் பதினாறாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது”

நான் அவரைப் பற்றி கேள்விப்பட்டதில்லை. மலைகளில் பெரும்பாலான லாமாக்கள் வரலாற்றில் பதிவுசெய்யப்படுகிறார்கள். மொழியிலும் ஓவியத்திலும் நம்பிக்கைகளிலும். எவரும் மறைந்துபோவதில்லை.

“நோர்பு திரக்பா என்றால் ஒளிவிடும் வைரம் என்று பெயர். அவர் இந்த சிற்றூரில்தான் பிறந்தார். அன்றும் இங்கே ஏழே ஏழு வீடுகள்தான். நூறு யாக்குகளுக்குமேல் வளர்க்கப்பட்டன. ஆகவே வறுமை இல்லை. வளர்ச்சியோ வீழ்ச்சியோ இல்லை.” என்று ராப்டன் சொல்லத் தொடங்கினார்.

திபெத்திலும் லடாக்கிலும் இருக்கும் இந்த ஊர்களை முள்முனையில் ஆயிரம் வருடமாக ததும்பி நின்றிருக்கும் பனித்துளிகள் என்பார்கள். அவை முத்துக்களேதான். இங்குள்ளவர்கள் எங்கும் செல்வதில்லை. வெளியே எங்கிருந்தும் எவரும் இங்கே வருவதுமில்லை. சில ஊர்களுக்கு ஆயிரம் ஆண்டுகளில் ஒருவர்கூட வந்ததில்லை என்பார்கள்.

ஆனால் அவர்களில் இருந்து ஒருசிலர் கிளம்பிச் செல்வார்கள். அவர்கள் ஏன் செல்கிறார்கள் என்று எவராலும் சொல்லிவிடமுடியாது. இந்த நிலைபெற்று நிறைந்துவிட்ட வாழ்க்கைக்குள் இருந்து வெளியே செல்லவேண்டும் என்ற எண்ணம் எப்படி உருவாகிறது? இங்கே இல்லாத எதை அவர்கள் உணர்கிறார்கள்? அப்படி ஒன்று உண்டு என்று அவர்களுக்கு மட்டும் எப்படி தெரிகிறது? அதை நம்மால் உணரவே முடியாது. அது கனவில் இருந்து அதற்கு அப்பாலுள்ள ஆழத்தில் இருந்து எழுந்து வரும் ஓர் அழைப்பு. அல்லது இதோ இந்த மலைகளின் பெருவிரிவில் இருந்து எழுவது.

நோர்பு திரக்பா இங்கிருந்து கிளம்பி திபெத்துக்கும் அங்கிருந்து சீனாவுக்கும் சென்றதாகச் சொல்லப்படுகிறது. சீனாவிலிருந்து அவர் பூட்டான் வழியாக இந்தியாவுக்குள் நுழைந்தார். சாரநாத், புத்தகயா, சாஞ்சி வழியாக தெற்கே அமராவதி வரை அவர் சென்றார். இருபதாண்டுகளுக்குப் பின் இங்கே திரும்பிவந்தார். இங்கு தன் கூட்டுப்புழு வாழ்க்கையை தொடங்கினார். அவர் தனக்கென கட்டிக்கொண்டதுதான் இந்த கூடு

அவர் இதை இத்தனை பிரம்மாண்டமாக ஏன் கட்டினார்? அதை அவர் மட்டுமே சொல்லமுடியும். அவர் தன்னுள் அத்தனை பேருருவம் கொண்டிருந்தாரா? அவர் வைரச்சுரங்கம் ஒன்றை இந்த மலையில் எங்கோ கண்டடைந்ததாகச் சொல்லப்படுகிறது. ஆனால் அதில் ஆச்சரியம் ஏதுமில்லை, தேவையானபோது அவர்கள் அனைவருமே தங்களுக்குரிய வைரச்சுரங்கங்களைக் கண்டடைகிறார்கள்.

இந்த மடாலத்தை பெரும்பாலும் சீனத் தொழிலாளர்கள்தான் கட்டியிருக்கிறார்கள். சீனவணிகர்கள் இவ்வழியாகச் செல்லும் பாதை அப்போது உருவானதுதான். இன்றைக்கும் அது நீடிக்கிறது. இருபது ஆண்டுகள் நோர்பு திரக்பா இதைக் கட்டிக்கொண்டே இருந்தார். கட்டக்கட்ட பெரிதாகியது. ஒரு கட்டத்தில் ஐந்தாயிரம் பேர் இதில் வேலைபார்த்திருக்கிறார்கள். அத்தனைபேருக்கும் அவர் கூலி கொடுத்திருக்கிறார்.

கட்டிமுடித்தபின் இங்கே நாநூறு பிட்சுக்கள் தங்கியிருந்தனர். நூறுபேர் ஆசிரியர்கள். அவர்களின் தலைமை ஆசிரியராக அவர் திகழ்ந்தார். அவரை தேடி நெடுந்தொலைவுகளில் இருந்தெல்லாம் வந்துகொண்டிருந்தார்கள். சீனாவிலிருந்து கோடைகாலத்தில் ஆயிரக்கணககனவர்கள் இங்கே வந்தனர். இருபது ஆண்டுக்காலம் இந்த மடாலயம் அவருடைய போதனைகளின் மையமாகச் செழித்தது. அவருக்குப்பின் இருநூறு ஆண்டுக்காலம் புகழுடன் விளங்கியது.

அன்று கோடைகாலத்தில் இங்கே இடம் போதாமல் ஆகும் என்கிறார்கள். இந்த மடாலயத்தில் அன்று எட்டு பெரிய கூடங்கள் இருந்தன. அவற்றில் மக்கள் நெருக்கி அமர்ந்திருப்பார்கள். எட்டிலும் நோர்பு திரக்பா மாறி மாறி சென்று அமர்ந்து ஆசியுரை வழங்குவார். அவர் ஒரு கூடத்தில் இருக்கும்போது இன்னொரு கூடத்தில் மக்கள் நிறைந்துகொண்டிருப்பார்கள். இந்த மாபெரும் மடாலயத்தில் அவர் நிறைந்திருந்தார். நுரைக்கும் மது கோப்பையை நிறைத்து மேலே எழுவதுபோல இதை மீறி எழுந்தார்.

இங்கே ஒவ்வொன்றும் பெரியது. நோர்பு திரக்பா அமரும் ஞானபீடம் எட்டு அடி உயரமானது. ஐந்தடி அகலம் ஆறடி நீளம் கொண்டது. இங்குள்ள முரசுகள்தான் இந்நிலத்திலேயே பெரியவை. எங்கள் மரபிலேயே மிகப்பெரிய மணி இங்கேதான் உருவாக்கப்பட்டது. நோர்பு திரக்பா அவைநுழையும்போது அந்த மணி முழக்கமிடும். அப்போது அருகிலிருக்கும் முரசுகள் எல்லாம் தாங்களே விம்மி ஓசையிடும் என்கிறார்கள்.

அவருடைய தனியறையை நான் நாளை உனக்குக் காட்டுகிறேன். அதுவே ஒரு கூடம் போல் இருக்கும். பதினெட்டு சாளரங்கள் கொண்ட அறை. பதினெட்டு சாளரங்கள் வழியாகவும் கீழே விரிந்துகிடக்கும் மலைச்சரிவை பார்க்கலாம். அவருடைய படுக்கையே பன்னிரண்டு அடி நீளமும் பத்தடி அகலமும் கொண்டது. அவருடைய நாற்காலிகள் எல்லாமே மிகப்பெரியவை.

நான் அன்று முழுக்க அவரைப்பற்றி ராப்டன் பேச கேட்டுக்கொண்டிருந்தேன். கெலுக்பா மரபுக்குள் பிந்தித்தான் அந்த மடாலயம் வந்து சேர்ந்தது. நோர்பு திரக்பாவின் காலத்தில் வஜ்ரயோகாசாரம் என்னும் ஒரு மரபை அது பின்பற்றியது. நோர்பு திரக்பா தன் மாணவர்களுக்கு கற்பித்த அந்த மரபின் சூத்திர வாக்கியங்களில் ஒன்று ‘மூன்றுமுறை உங்கள் உடலை திறந்து வெளியேறுங்கள்’ என்பது. பூச்சிகள் அவ்வாறு வாழ்க்கையில் இருமுறையேனும் தங்கள் உடலை தாங்களே உடைத்து திறந்து வெளியேறுகின்றன. அதன் வழியாகவே அவை முழுமை அடைகின்றன.

மறுநாள் காலை ராப்டன் என்னை நோர்பு திரக்பாவின் படுக்கையறைக்குள் அழைத்துச் சென்றார். மிகப்பெரிய மரக்கதவின் முன் என்னை நிறுத்திவிட்டு அதன் வெண்கலத் தாழை திறந்தார். உள்ளிருந்து தூசியும் பூசணப்பொடியும் கலந்த மணம் வந்தது.

அவர் உள்ளே சென்று அந்த அறையின் சன்னல்களை ஒவ்வொன்றாகத் திறந்தார். முதற்சன்னல் திறக்கப்பட்டபோது விசித்திரமான ஓர் ஓவியம் போல அறை தெளிந்து வந்தது. இன்னொரு சன்னலை திறந்தபோது இன்னொரு ஓவியம். ஓவியங்கள் இணைந்து இணைந்து அறை முழுமையாக உருவாகியது. மிகப்பிரம்மாண்டமான அறை. மேலே வளைவான மரக்கூரையில் வானமே ஓவியமாக வரையப்பட்டிருந்தது.

போதிசத்வர்களுடன் புத்தர் திகழும் வானம். உறுத்துநோக்கும் கண்களும், புன்னகைக்கும் உதடுகளும் கொண்ட தேவர்கள், கந்தர்வர்கள், யக்ஷிகள், யானைகள், குதிரைகள், அன்னங்கள், தாமரைகள். திபெத்திய ஓவியங்களுக்கு உரிய பளிச்சிடும் வண்ணங்கள். விரைவான கோட்டுச்சுழல்களாக முகில்களின் அலைகளும் பறக்கும் ஆடைகளும்.

சுவர்கள் முழுக்க டாங்காக்கள் தொங்கின. அவற்றின் வண்ணங்கள் மங்கத் தொடங்கிவிட்டிருந்தன. அவற்றில் மையமாக போதிசத்வர்கள். சுற்றிலும் மறைந்த லாமாக்களும் தேவர்களும். ஓவியங்கள் கொடிகளைப்போல மலர்களைப்போல பின்னிப்படர்ந்து உருவான வண்ணப்பட்டுப் பரப்புகள்.

சன்னல்களின் கதவுகள் ஆழ்ந்த சிவப்பு வண்ணம் கொண்டவை. எட்டு பெரிய மேஜைகள். தோலுறையிடப்பட்ட நாற்காலிகளுக்கு பின்னால் வெண்கலத்தாலான வளைவுகளில் சீனத்து டிராகன்கள் உடல் வளைத்து சுருண்டு செறிந்து வாய்திறந்து வெறித்தன. அவற்றின் கால்கள் நாகங்களின் வால்களால் ஆனவை. வெண்பனிபோன்ற மென்மயிர்த் தோலால் ஆன மெத்தை விரிக்கப்பட்ட கட்டில் தாழ்வானது, ஆனால் ஐந்தாறுபேர் வசதியாகப் படுக்கலாம். அதற்குச் சிங்கக்கால்கள். அதன் நான்கு முனைகளிலும் சிஙகங்கள் வாய்திறந்திருந்தன.

திகைக்க வைக்கும் அறை. நான் அப்போது பல அரண்மனைகளை பார்த்துவிட்டிருந்தேன். குவாலியரிலும் ஜெய்சால்மரிலும் அரண்மனைகளைப் பார்க்க அப்போது ஆண்டுக்கு ஒருசிலநாட்கள் அனுமதி உண்டு. அவைதான் இந்தியாவின் மாபெரும் அரண்மனைகள். அவற்றின் படுக்கையறைகள் இங்கே மனிதர்கள் எப்படி தூங்கமுடியும் என்ற வியப்பை எழுப்பும்படி ஆடம்பரமானவை. ஆனால் அந்த மடாலயத்தின் தலைமை லாமாவின் படுக்கையறை அவற்றைவிட இருமடங்கு பெரியது. மும்மடங்கு ஆடம்பரமானது. அங்கிருந்த டாங்காக்களின் மதிப்பு எனக்கு தெரியும். அவை பட்டுத்துணியில் தங்கக்கம்பிகளைக் கொண்டு பின்னி செய்யப்பட்டவை. அவற்றில் ஒன்றை விற்றாலே என் நகரில் ஒர் அரண்மனையை கட்டிக்கொள்ள முடியும்.

“அருகில்தான் நோர்பு திரக்பா அவர்களின் படிப்பறை” என்றார் ராப்டன். நான் அப்போதே கண்மலைத்து உள்ளம்தெவிட்டி விட்டிருந்தேன். அக்கறையே இல்லாமல் அவருடன் சென்றேன். அதுவும் படுக்கையறை அளவுக்கே பெரியது. இருபது பேர் அமரும் அளவுக்கு தாழ்வான திபெத்திய பீடங்கள் போடப்பட்டிருந்தன. அவையெல்லாமே செந்நிறமான மென்மயிர்த் தோல் உறையிடப்பட்டவை. அதை நோக்கி மாபெரும் சிம்மாசனம் போல நோர்பு திரக்பா அவர்களின் இருக்கை.

அந்த சிம்மாசனத்தில் அவர் ஏறி அமர்வதற்கே எட்டு படிகள் கொண்ட அமைப்பு இருந்தது. அவருடைய தலைக்குமேல் பொன்முலாமிட்ட வெள்ளி டிராகன் வாய்திறந்திருந்தது. அதன் உடல் அலையலையாக சாய்மானத்தை சூழ்ந்து கீழிறங்கி வளைந்து சிம்மாசனத்தின் கால்களாகியிருந்தது. அதன் கைப்பிடிகளில் சிம்மங்கள் வாய்திறந்திருந்தன. அவற்றின் கண்களில் செந்நிறமான கற்கள் மின்னின. வைரங்களாகக்கூட இருக்கலாம்.

மிகப்பெரிய நூலக அடுக்கு. அதை ஒட்டி ஜன்னல்களின் திறப்பு. ஜன்னல்களை நோக்கியதுபோல போடப்பட்ட பெரிய படிப்பு மேஜைகள். அவையும் தோலுறை போடப்பட்டவை. சீனத்து வெண்பீங்கான் மைப்புட்டிகள். நீலம் சிவப்பு பொன்மஞ்சள் நிறங்களில் வண்ணக் கண்ணாடிக் குடுவைகள். முத்துசிப்பி ஓட்டின் விளிம்பில் பொன் கட்டி அமைக்கப்பட்ட கிண்ணங்கள். தரை மென்மையான பாசிப்புல்லால் ஆனதுபோல மென்மயிர் தோல் வேயப்பட்டது. அங்கே எங்கும் அமரமுடியாது. அங்கிருக்கும் பீடங்களில் அமர இன்று எவருக்குமே துணிவு வராது.

“இங்கே பிற லாமாக்களுக்கான படுக்கையறைகளும் வாசிப்பறைகளும் இதேபோலவே மிகப்பெரியவை” என்று ராப்டன் சொன்னார். “இந்த மடாலயத்தைப் பார்த்து முடிக்க நாலைந்து நாட்களாவது ஆகும்.”

“இங்கே தன்னந்தனியாக இருக்கிறீர்கள்” என்றேன்.

“ஆமாம்” என்றார் உடனே சிரித்து “வீடுகளில் குளவி கூடுகட்டுகிறது அல்லவா? தனக்கான சிறிய வீட்டை அது கட்டிக்கொள்கிறது, அப்படி ஒன்றை நானும் கட்டிக்கொண்டேன்” என்றார்.

நீளமான அறை ஒன்றில் நூற்றெட்டு அறச்சக்கரங்கள் இருந்தன. அவை பித்தளைக் கீல்களில் அமைந்திருந்தமையால் மெல்லிய உரசல் ஓசையுடன், மணிமுழங்கச் சுழன்றுகொண்டிருந்தன. அவை வரிசையாகச் சுழல்வதை நான் நின்று பார்த்தேன்.

ராப்டன் என்னிடம் “வெளியே பெரிய மரக்காற்றடியுடன் அவை பற்சக்கரங்களால் இணைக்கப்பட்டுள்ளன. தானாகவே சுழலும்…”என்றார்.

“ஆனால் அவை மனிதர்களால் சுழற்றப்படவேண்டியவை” என்றேன்

“ஆம், ஆனால் அறம் மனிதர்களால் கைவிடப்பட்டாலும் நிகழும்” என்றார் ராப்டன்

நோர்பு திரக்பா புழங்கிய இடங்கள் வழியாகச் சென்றுகொண்டிருந்தோம். அவர் பயணிகளைச் சந்திக்கும் மாபெரும் கூடங்கள். அவை மரத்தாலான மாபெரும் கூரைக்குக்கீழே அமைந்த மைதானங்கள் போலிருந்தன. ஒரு கூடத்தில் ஐநூறுபேர் அமரலாம். குருதிச் சிவப்பான மென்மயிர் மெத்தைகளால் மூடப்பட்டவை.

“இந்த தோலுறைகள் சீனாவில் வண்ணம் பூசப்பட்டவை” என்று ராப்டன் சொன்னார். “பட்டில் வண்ணமிடும் அதே முறைப்படி அவர்கள் மென்மயிர் தோல்களில் வண்ணமிட்டார்கள். திபெத்திலும் இங்கும் குருதிச்சிவப்பும் ஆழ்சிவப்பும் மட்டுமே விரும்பப்பட்டன.”

“மிகப்பெரிய இடம்…” என்றேன்.

“ஆமாம். ஆனால் அவருக்கு இது போதவில்லை. அவர் இந்தச் சிறிய இடத்தில் அவர் சிக்கிக் கொண்டிருப்பதாகவே உணர்ந்தார். இங்கே அவர் மேலும் மேலும் அறைகளைக் கட்டிக்கொண்டே இருந்தார். இந்த மடாலயத்தில் அவர் குடியேறியபின் மேலும் இருபதாண்டுகள் இதை விரிவாக்கிக்கொண்டே இருந்தார்” என்றார் ராப்டன்.

ஆனால் அவருக்கு எண்பது வயது ஆனபோது அவர் ஒடுங்கத் தொடங்கினார். முதலில் பேச்சு குறைந்தது. நாள் ஒன்றுக்கு பன்னிரண்டு மணிநேரம்கூட வருகையாளர்களிடமும் மாணவர்களிடமும் பேசிக்கொண்டிருந்தவர் பேச்சை குறைத்துக் கொண்டே வந்தார். கூடவே அவருடைய உடல் வளைந்து சுருங்கியது. தசைகள் வற்றின. ஒவ்வொருநாளும் அவர் சுருங்கினார் என்கிறார்கள். அவர் தன் அறைக்குள்ளேயே ஒடுங்க தொடங்கினார். காலையில் ஒருமுறை மட்டும் மக்களைச் சந்தித்து அருட்சொற்களை அளித்தார். அதன்பின் புத்தருக்கான தம்மவணக்கத்திற்கு வந்துவிட்டு தன் அறைக்குத் திரும்பினார்.

பின்னர் அவர் அதற்கும் வராமலானார். தன் படுக்கை அறையிலேயே இருந்தார். பெரும்பாலான நேரம் படிகமணிமாலையை உருட்டியபடி கண்மூடி ஜெபம் செய்துகொண்டிருந்தார். கைகளை மடியில் வைத்து அமர்ந்து தியானம் செய்தார். மடாலயத்திற்கு வரும் பயணிகள் வரிசையாக நின்று அவரை ஒரு சாளரத்தின் வழியாக பார்த்துச் சென்றார்கள்.

அங்கிருந்து அவர் மேலும் சிறிய அறை ஒன்றுக்குச் சென்றார். முற்றிலும் சொல்லற்றவராக ஆனார். அங்கிருந்து இன்னொரு சிற்றறைக்கு தன்னை கொண்டு செல்லும்படிச் சொன்னார். அங்கே இருக்கையில் அவர் பிறரை விழிதூக்கிப் பார்க்கவே இல்லை. எவருக்கும் அவருடன் எந்த தொடர்பும் இருக்கவில்லை. அவர் மூன்றுநாளுக்கு ஒருமுறை மட்டும் முதற்காலையில் ஒருகிண்ணம் சூப் அருந்தினார். எஞ்சிய பொழுதெல்லாம் தன் சிறு பீடத்தில் தியானத்தில் அமர்ந்திருந்தார்.

மடாலயத்தில் அவரைத் தொடர்ந்து வேறு லாமாக்கள் பொறுப்பேற்றனர். முதன்மை லாமாக்கள் மட்டுமே அவரை பார்க்கமுடியும் என்ற நிலை உருவானது. அவர் ஒரு தொன்மையான சிற்பம் போல மாறினார். அவர்கள் அவரை பராமரித்தனர். தொடும்போது அவர் உயிருடன் இருப்பது தெரிந்தமையாலேயே அவர் இருக்கிறார் என்று நம்பினர்.

ராப்டன் ஒரு சிறு அறையை திறந்து “இது அவருடைய இரண்டாவது அறை” என்றார். முந்தைய அறையின் மூன்றில் ஒன்றே இருந்தது, ஆனால் வசதியானது. அவர் இன்னொரு அறையை திறந்து “இது அவருடைய மூன்றாம் அறை” என்றார். அது ராப்டன் தங்கியிருந்த அறையளவுக்கே இருந்தது.

நோர்பு திரக்பாவின் நான்காவது அறை ஒரு கட்டில் அளவுக்கே இருந்தது. “அங்கிருந்து அவர் இங்கே வந்தார்” என்று ராப்டன் என்னை அழைத்துச் சென்றார்.

உருளைக்கற்களால் ஆன குறுகிய படியினூடாக இறங்கிச் சென்றோம். மிகக்குறுகலான படிகள் மூன்றுமுறை மடிந்து மடாலயத்தின் அடித்தளத்திற்குள் இறங்கின. அங்கே காதைக் குத்தும் அமைதி இருந்தது. லடாக்கில் ஓசையென எழுவது காற்று. அது முற்றாக தடுக்கப்பட்டிருந்தது. அங்கே தடித்த கற்சுவர்களின்மேல் மரத்தாலான இரண்டாம்சுவர் அமைக்கப்பட்டு அதன்மேல் மென்மயிர்த்தோல் மெத்தையாலான உட்சுவர் அமைக்கப்பட்டிருந்தது.

ராப்டன் உள்ளே நிமிர்ந்து நின்றால் தலைதட்டும் ஒரு சிறு அறைக்குள் சென்றார். அங்கிருந்த மரத்தாலான கூடை ஒன்றை சுட்டி “இறுதியில் அவர் இந்த பெட்டிக்குள் இருந்ததாகச் சொல்வார்கள்” என்றார்

நாம் மண்ணள்ளப் பயன்படுத்தும் அளவைவிட சற்றே பெரிய கூடை. அதில் ஒரு ஐந்துவயது சிறுவன் உடலை ஒடுக்கி அமரமுடியும்.

“இதற்குள்ளா?” என்றேன்.

“ஆமாம், இங்கேதான் அவர் எட்டாண்டுகள் இருந்தார்” என்றபின் அவர் “வாருங்கள்” என அழைத்துச் சென்றார்.

“அந்த அறைக்குள் வெளிக்காற்றும் வெளியே இருந்து வெளிச்சமும் வராது. கொழுப்பு மெழுகுவத்தியின் வெளிச்சம் மட்டும்தான். ஓசையே இருக்காது. தரை மென்மயிர் மெத்தையால் ஆனது. காலிலும் மென்மயிர் மெத்தையாலான காலணிகள் அணிந்துதான் உள்ளே செல்வார்கள். நாம் வந்த படிகள்கூட அன்றெல்லாம் தடிமனான நாரால் மெத்தையிடப்பட்டிருந்தன. உள்ளே எவரும் பேசக்கூடாது. தும்மவோ இருமவோ கூடாது.  உலோகப்பொருட்களும் மரப்பொருட்களும் ஓசையெழுப்பும் என்பதனால் அவற்றுக்கு இடமில்லை. எடையற்ற கொப்பரைகள் மட்டுமே பயன்படுத்தப்பட்டன. ஒரு விரல் நொடிக்கும் ஓசை கேட்டாலே அவர் திடுக்கிட்டார். அழுத்தமான அதிர்ச்சியால் அவர் உயிர்துறக்கக்கூடும் என்று மருத்துவர் கூறினார்கள். எனவே அவரை முற்றமைதியில் மூழ்கடித்து பேணினர்.” என்றார் ராப்டன்.

அவர் மிகமிக மெல்ல பேசிக்கொண்டிருந்தார். ஆனால் எனக்கு அவருடைய உதடுகள் தொட்டுக்கொள்ளும் ஓசைகூட கேட்டது. அத்தனை அமைதி அங்கிருந்தது. அவர் ஒரு சாளரத்தை திறந்து “பாருங்கள்” என்றார்.

சுவரில் இருந்த ஓவியத்தில் ஒரு கூடையில் மிகச்சிறிய உடல்கொண்ட வற்றிய மனிதர் கையில் படிகமணி மாலையுடன் வளைந்து அமர்ந்திருந்தார்.

“கருக்குழந்தைபோல தோன்றுகிறது” என்றேன்.

“ஆமாம், உண்மையில் அவருக்கு அப்போது அதுதான் பெயர். கருவிலிருக்கும் மஞ்சுஸ்ரீ” என்றார் ராப்டன்.

நான் அந்த அறைக்குள் நின்று சுவர்களில் இருந்த ஓவியங்களை பார்த்தேன். பெரும்பாலும் அழிந்துவிட்டிருந்தன.

“அவர் இறுதிக்காலத்தில் பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை ஒரு குவளை பால்மட்டுமே அருந்தினார்” என்று ராப்டன் சொன்னார்.

“அவர் எங்கே சமாதியானார்?” என்றேன் “அவருடைய சமாதியிடம் இருக்கிறதா?”

“காட்டுகிறேன். நாம் அங்கே செல்வோம்” என்றார் ராப்டன்.

அவர் என்னை மடாலயத்திற்கு பின்புறம் அழைத்துச் சென்றார். லடாக்கின் பெரும்பாலான மடாலயங்களைப் போல அதுவும் மிகப்பெரிய மலையடுக்கு ஒன்றின் சரிவின்மேல் அமைந்திருந்தது. அமிதாப புத்தரின் கையில் அமுதகலம் போல இமையமலையின் மடிப்பில் மடாலயங்கள் இருக்கும் என்பார்கள்.

அரைவட்ட வளைவாகச் சூழ்ந்திருந்த மலையடுக்கில் மிக அருகே இருந்தமலை செங்குத்தாக நெடுந்தொலைவு எழுந்து நின்றது. அதன் மேல் காலையொளி மங்கலாக ஊறியிருந்த வானம் நின்றது.

நாங்கள் புழுதியாலான பாதை வழியாக ஏறிச்சென்றோம். சுழன்று சென்றபாதை பின்னர் Z வடிவில் செல்லத் தொடங்கியது. மேலேறிச்சென்று மூச்சிரைக்க நிமிர்ந்து நோக்கியபோதுதான் சேற்றுநிறத்தில் அமைந்த அந்த மலையின் விலாப்பாறைப் பரப்பில் தேன்கூடுபோல ஏராளமான குகைகளைக் கண்டேன்.

“அந்தக் குகைகள் இங்கே நெடுங்காலமாக இருக்கின்றன. சொல்லப்போனால் புத்தர் பிறப்பதற்கும் நெடுங்காலம் முன்னரே இருக்கும் குகைகள் அவை” என்றார் ராப்டன் “அவை இங்கு வாழ்ந்த மக்கள் தங்கள் மூதாதையரின் உடல்களை கொண்டு சென்று வைக்கும் இடுகுழிகள்.”

நாங்கள் மேலே சென்று அவற்றை அடைந்தோம். ஒவ்வொரு குகையும் ஒருவர் அமர்ந்துகொள்ளும் அளவுக்கு விட்டம் கொண்டவை. ஆனால் ஆழமானவை.

“காற்று அரித்து இயற்கையாக உருவானவை, பின்னர் குடைந்து விரிவாக்கப்பட்டவை” என்று ராப்டன் சொன்னார். “இவை தொன்மையான பான் [Bon] மதத்தின் தெய்வங்களுக்கு உரியவை. பான் மதம் மூதாதை வழிபாட்டில் இருந்து தோன்றியது. பலவகையான ஆவிகளையும் நுண்வடிவில் உள்ள இயற்கைச் சக்திகளையும் அவர்கள் வழிபட்டனர். திபெத்திய பௌத்தம் என்பது இந்திய பௌத்தமும் இந்திய தாந்த்ரீக மரபுகளும் பான் மதமும் இணைந்து உருவானது என்பதை அறிந்திருப்பீர்கள்.”

அந்த குகைகள் வழியாக நடந்தேன். குகைகள் என்று சொல்லமுடியாது, சிறிய துளைகள் அவை. மொட்டையானவை. உள்ளே ஒன்றுமே இல்லை. சிமிண்டாலானவை போல சொரசொரப்பான சுவர்கள். தரையில் சிறுசிறு குழிகள். பனித்துளி விழுந்து உருவானவை.

ராப்டன் ஒரு சிறிய குகை அருகே சென்றார். “நோர்பு திரக்பா தன் ஏழுவயதில் இங்கே வந்திருக்கிறார். ஊரிலிருந்து அவர் காணாமலானபோது தேடினார்கள். ஊரிலிருந்த ஒரு நாய் மோப்பம் பிடித்து அவருடைய பெற்றோரை இங்கே கூட்டிவந்தது. இந்த குகைக்குள் அவர் இருந்திருக்கிறார்.”

“இதற்குள்ளா?” என்றேன்.

அது மிகச்சிறிய துளை. ஒரு ஏழுவயதுப் பையன்கூட அங்கே நுழைந்தால் கார்க் வைத்து இறுக்கப்பட்டது போலத்தான் இருக்கமுடியும்.

“இங்கேதான். உள்ளே சென்று பாம்புபோல சுருண்டு இருந்தார். அவரை கண்டுபிடித்தபோது பன்னிரண்டு நாட்கள் கடந்துவிட்டிருந்தன. உணவு தண்ணீர் ஒன்றுமில்லை. ஆகவே மயங்கியிருந்தார். நாய் மட்டும் இல்லாமலிருந்தால் கண்டுபிடித்திருக்கவே முடியாது.”

ராப்டன் சொன்னார். உள்ளே ஒரு மூங்கில் கழியில் சுருக்கு கயிற்றை வீசி அவருடைய காலில் மாட்டி இறுக்கி மெல்ல இழுத்து வெளியே எடுத்திருக்கிறார்கள். அவர் பிழைத்துக் கொண்டார். ஆனால் பேச்சு நின்றுவிட்டது. பிறரை கண் பார்ப்பதும் இல்லை. பெரும்பாலான நேரம் தனிமையில் இருந்தார். தன் இல்லத்தின் இருண்ட மூலைகளில் ஒடுங்கி அமர்ந்திருப்பார். அவருக்கு மனம் பேதலித்துவிட்டது என்றார்கள். அவரை பழைய மூதாதையரின் ஆவிகள் பற்றிக்கொண்டுவிட்டன என்றார்கள்.

ஏழாண்டுகளுக்கு பின் அவர் இங்கிருந்து கிளம்பிச் சென்றார். அவர் சென்றதை எவரும் அறியவில்லை. சீனப்பகுதியில் இருந்து இங்கே வரும் வணிகன் ஒருவன் அவரை பார்த்ததாகச் சொன்னான். பின்னர் அவர் உலகம் சுற்றி, பதிமூன்று மொழிகள் கற்று, பௌத்த மெய்யியலை தேர்ந்து, லாமாவாக மாறி இங்கே மீண்டு வந்தார். உம்லா மடாலயத்தைக் கட்டினார்.

“நோர்பு திரக்பா தன் நூற்றியெட்டாம் வயதில் சமாதியானார். அதன்பின் இங்கே கொண்டுவரப்பட்டார்” என்றார் ராப்டன் “இங்கே திபெத்திய பௌத்த மரபில் இறந்தவர்களை புதைப்பதும், பறவைகளுக்கு இரையாக கொடுப்பதும் வழக்கம்…”

“பார்ஸிகள் கழுகுகளுக்கு இரையாக்குவதுபோல?” என்றேன்.

“அந்தவழக்கமே இங்கிருந்து சென்றதுதான்” என்றார் ராப்டன். “அத்துடன் இன்னொரு வழக்கமும் உண்டு. அது அரிதுதான், புனிதர்களுக்கு மட்டும் அப்படிச் செய்யபடுகிறது. நாங்கள் மம்மிகளை உருவாக்குகிறோம்.”

“எகிப்திய மம்மிகளைப்போலவா?” என்றேன்.

“இல்லை, அவர்கள் உடல்களை பதப்படுத்தி துணியில்சுற்றி கல்லால் ஆன பெட்டிகளுக்குள் பாதுகாக்கிறார்கள். எங்கள் நிலத்தின் குளிர் உடல்களை கெடச்செய்வதில்லை. இங்கே நுண்ணுயிரிகளும் சிற்றுயிர்களும் வாழ்வதில்லை” என்றார். ராப்டன் “எங்கள் முறை உடல்களை பதப்படுத்தி சிலதைலங்களை பூசி அப்படியே வைத்துவிடுவது. ஆயிரம் ஆண்டுகள் தொன்மையான மம்மிகள் கூட உள்ளன.”

“நோர்பு திரக்பா மம்மியாக ஆக்கப்பட்டாரா?”

“ஆமாம்.”

“இங்கே இருக்கிறதா அந்த மம்மி?”

“ஆமாம்” என்றார் “உள்ளே பாருங்கள்.”

நான் மண்டியிட்டு அந்த சிறிய குகையை பார்த்தேன். உள்ளே இருட்டாக இருந்தது. “மண்டியிட்டு நன்றாகப் பாருங்கள்…” என்ற ராப்டன் பின்னால் நகர்ந்து வெளியே சென்று தன் கையில் இருந்த கண்ணாடித்துண்டை வெயிலில் காட்டி அந்த வெளிச்சத்தை திருப்பி குகைக்குள் வீழ்த்தினார்.

உள்ளே ஒரு சுருண்ட வடிவம் தெரிந்தது. முதலில் அது என்ன என்று எனக்கு தெரியவில்லை. பின்னர் மெல்லமெல்ல அந்த வடிவம் தெளிவடைந்தது. ஒரு பூனை அளவுக்கான மனித உடல். அதன் தலைமட்டும் பெரியது. உடல் நன்றாக வற்றி ஒடுங்கியது. அது தலையை மையமாகக் கொண்டு நன்றாக அழுத்திச் சுருட்டப்பட்ட வடிவில் இருந்தது. கைகளும் கால்களும் ஒன்றுடன் ஒன்று ஒட்டியிருந்தன. ஒரு விதையுறைக்குள் விதை அமைந்திருப்பதுபோல.

“அவர்தானா?” என்றேன்.

“அவர்தான்” என்றார் ராப்டன்.

அருகே வந்து அவர் வணங்கினார். நானும் பௌத்த முறைப்படி வணங்கினேன். அங்கே சற்றுநேரம் அமர்ந்து தியானம் செய்தோம்.

பின்னர் மலையிறங்கி கீழே செல்லத் தொடங்கினோம். ஒரு சொல்லும் பேசிக்கொள்ளவில்லை. மடாலயத்தை அணுகியதும் நான் கேட்டேன் “ராப்டன், நான் ஒன்று கேட்கலாமா?”

“கேளுங்கள்”

“நீங்கள் ஏன் இங்கே வந்தீர்கள்? இந்த மம்மி இங்கே இருப்பதை அறிந்து இதைப் பார்க்க வந்தீர்களா?”

“லடாக்கிலும் திபெத்திலும் பல மம்மிகள் உள்ளன. சில மம்மிகள் தரைக்கு அடியில் உள்ளன. சில மம்மிகள் மடாலயங்களில் பேணப்படுகின்றன” என்று அவர் சொன்னார். “மம்மிகளை சென்று வழிபடுவது லாமாக்களின் ஞானப்பயணத்தில் முக்கியமானது. நான் அதன்பொருட்டும்தான் வந்தேன்.”

“ஆனால் இங்கேயே இவ்வளவுநாள் தங்கியிருந்ததற்கு காரணம் வேறு ஒன்று. நான் பதினேழாம் நூற்றாண்டில் இங்கே தங்கியிருந்த பிட்சு ஒருவர் எழுதியிருந்த குறிப்பு ஒன்றை டிக்ஸே மடாலயத்தின் நூல்தொகுப்பில் வாசித்தேன். அவர் இங்கே நோர்பு திரக்பாவை பார்த்தார் என்று எழுதியிருந்தார்” என்றர் ராப்டன்.

அவர் மறுபக்கம் எழுந்து விண்ணைத் தொடுவது போல நின்றிருந்த மலையின் உச்சியைச் சுட்டிக்காட்டி “அந்த மலைக்கு டோல்மா என்று பெயர். தாராதேவியின் பெயர்களில் ஒன்று. ஞானம் என்றும் வீடுபேறு என்றும் பொருள் கொள்ளலாம். அந்த பிட்சு நிலவு நிறைந்த கோடைகால இரவில் அந்த மலைக்குமேல் நோர்பு திரக்பா ஒளிவடிவாக நின்று வானத்தை நோக்கி கைவிரித்ததை கண்டார். அவர் மலைமுடி அளவுக்கே பேருருவம் கொண்டிருந்தார்” என்றார் “அதை நானும் பார்க்கவேண்டும் என்றுதான் வந்தேன்.”

நான் என்ன சொல்வதென்று தெரியாமல் அந்த மலைமுடியை பார்த்தபடி வந்தேன். வானின் மங்கலான வெளிச்சத்தில் அந்த மலைமட்டும் ஒளிகொண்டு எழுந்து நின்றது.

நீண்ட மௌனத்திற்குப் பின்பு நான் கேட்டேன். “ராப்டன், நீங்கள் பார்த்தீர்களா?”

அவர் ஒன்றும் சொல்லவில்லை.

***

முந்தைய கட்டுரைகதைகள் கடிதங்கள்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–58