சித்திரைநிலவு- கடிதங்கள்

இனிய ஜெயம்

இன்று சித்திரை முழு நிலவு நாள். பெரும்பாலும் இன்று அருணை மலையில் வ்ருபாக்ஷ குகையில் இருப்பேன். நிலவு பொழியும் அருணைக் கோவிலை, வரை குகை வாயிலில் இருந்து பார்த்துக் கொண்டிருப்பது ஒரு அதீத அனுபவம். ரமணரின் இருப்பை அப்போது நான் உணர்வதாக நினைத்துக் கொள்வேன்.  ரமணர் எந்த குகையில் அமர்ந்து எந்த நிலவை எந்தக் கோவிலை பார்த்துக்கொண்டிருந்தாரோ அதே நிலா அதே குகை அதே கோவில். ஆனால் நான் மட்டும் ரமணன் இல்லை. பார்ப்போம் இருக்கவே இருக்கிறது வேறு பல பிறவிகள். புல்லாய் பூண்டாய் புழுவாய் இங்கே மீண்டும் மீண்டும் பிறப்பதே என் எண்ணம்.

இன்று மொட்டை மாடியில் நிலவின் கீழ் நின்றிருப்பேன். நீங்களும் நிலவு காணுங்கள் . :)

கீழ்கண்ட அருணைமலை வம்சி எடுத்தது.

கடலூர் சீனு

***

அன்புநிறை ஜெ,

மீண்டுமொரு சித்திரை முழுநிலவு. உலகமே வீடுகளுக்குள் தாளிட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்தபடி இன்றைய சித்திரை நிலவு பயணிக்கும். மதுரையில் தனிமையில் மீனாட்சி அன்னையும் சுந்தரேஸ்வரும் மணமுடித்து இருக்கிறார்கள். ஆற்றில் அழகர் இறங்குவதற்கும் தடை. ஆனால் மண்டூகருக்கு சாப விமோசனம் உண்டாம், அதுவும் அழகர் கோவிலிலேயே இம்முறை. இன்று சாபங்களுக்கு விமோசனம் தரும் தினமும் போல என்று இன்றைய பலிக்கல் படித்ததும் நினைத்தேன்.

சென்ற ஆண்டின் ஒவ்வொரு முழுநிலவு நாளும் வேறு வேறு இடங்களில் இருந்தேன். நிலவுகளை சேகரித்துக் கொண்டிருந்தேன். முன் திட்டமல்ல; அப்படிச் சொல்ல முடியாது, என் திட்டமல்ல என்று மட்டும் சொல்லலாம். இப்போது அனைத்துப் பயணங்களையும் அங்கு கண்ட நிலவுகளையும் நினைவில் பார்த்துக் கொண்டிருக்கிறேன். அடுத்த சித்திரை நிலவு எங்கோ தெரியவில்லை.

என்றென்றும் சித்திரை நிலவு இவ்வரிகளையும் ஆசிரியரின் பாதங்களையும் நினைவுறுத்தும்.

அது சித்திரை மாதம் முழுநிலவு நாள். இனி என்றென்றும் ஞானம் விளையும் தருணமாகவே அது எண்ணப்படும் என்றார் பைலர். இந்த நாளில் பேராசிரியரின் பாதங்களைப் பணிந்து அவரளித்த ஞானத்திற்கு கைமாறாக தங்களை முழுதளிக்க வேண்டும் என்று அவர்கள் முடிவெடுத்தனர். “இச்சொல் இங்கு வாழவேண்டும். இது இந்நிலத்தின் விதைக்களஞ்சியம்” என்றார் ஜைமினி

மிக்க அன்புடன்,
சுபா

***

முந்தைய கட்டுரைநற்றுணை,லீலை -கடிதங்கள்
அடுத்த கட்டுரைபோழ்வு [சிறுகதை]