பலிக்கல்[சிறுகதை]
அன்புள்ள ஜெ
மனசாட்சியை துளைக்கும் இன்னொரு கதை பலிக்கல். அது ஒரு தெளிவை அளிக்கவில்லை. தெளிவில்லாத ஒரு பெரிய சக்தியை அடையாளம் காட்டுகிறது. திட்டவட்டமான விதிகளின்படி இந்த பூமி செயல்படுகிறது என்று எவரும் சொல்லமாட்டார்கள். பாவபுண்ணிய விதிகள் எல்லாம் தராசுத்தட்டு மாதிரி துல்லியமானவை அல்ல. ஆனால் ஏதோ ஒன்று இல்லாமலும் இல்லை. இந்த மர்மம்தான் வாழ்க்கையை அலைக்கழிக்கிறது
பாவபுண்னியத்தால் அல்ல நாம் அறியாத வேறொரு அலையால் இந்த வாழ்க்கை அலைக்கழிகிறது. இதில் நம்முடைய அன்றாடச் சின்ன லாஜிக்கை போட்டுப்பார்த்து கொக்கரிக்கிறோம். கெக்கலிக்கிறோம். ‘அப்படியானால் ஏன் இப்படி?’ என்றெல்லாம் நியாயம் பேசுகிறோம். ‘டேய் வெண்ணை, உன் சின்ன மூளைக்கு பத்தாம்கிளாஸ் சயன்சே புரியாது. விதியின் நெறிகள் புரியுமா” என்பதுதான் அதுக்கான பதில். புரியாது ஆனால் இருப்பது தெரியும். கலை அதை உணர்த்தத்தான் முடியும்
லாஜிக்கால் அதை அறியமுடியாது. லாஜிக்கை கொஞ்சம் கற்பனையால் ஒத்திவைத்தால்தான் அறிய முடியும். அதற்குத்தான் இலக்கியம். அல்லது வாழ்க்கையில் பொறிபறக்க ஒருசில மரண அடிகள் விழும். லாஜிக்கெல்லாம் சிதறிப்போகும். அப்போது புரியும். இலக்கியம் சொல்லிப் புரியாதவனுக்கு விதிதான் சொல்லிக்கொடுக்கவேண்டும்
மகாதேவன்
***
அன்புள்ளஜெ,
“அல்லற்பட்டு ஆற்றாது அழுத கண்ணீரன்றே செல்வத்தைத் தேய்க்கும் படை” என்ற குறளை நெடுநாட்களாக உங்கள் மூலம் பின்தொடர்ந்து வருகிறேன். பின் தொடரும் நிழலின் குறல் நாவலே இக்குறளில் இருந்து தான் ஆரம்பிக்கிறது. அதன்பின் பல்வேறு கட்டுரைகள், சிறுகதைகளில் அந்த குறளின் பல்வேறு பரிணாமங்கள் உங்கள் எழுத்துக்களில் வந்தபடியே இருக்கின்றன. அக்குறளின் சாரத்தை பல்வேறு தளத்தில் விரித்து கொண்டே செல்கிறீர்கள்.அதன் மேல் உங்களுக்கு உள்ள தீர மோகத்தையும் காட்டுகிறது.
இந்த புனைவு களியாட்டு சிறுகதைகளிலும் அதன் தாக்கம் உள்ளது. ஓநாயின் மூக்கு முதல் பலிக்கல் வரை. ஔசேப்பச்சனின் கூறுமுறையும், கதையின் பல்வேறு அடுக்குகள் கலந்த வடிவ ஒருங்கும் , ஒநாயின் மூக்கு கதையை ஒரு உச்சத்திற்கு கொண்டு சென்றுவிட்டது. “இங்குள்ள நாம் அறியக்கூடிய விதிகளால் ஆட்டுவிக்கப்படுவது அல்ல என்றால் நாம் எப்படி வாழமுடியும்? எதை நம்பி முடிவுகள் எடுக்கமுடியும்? சரித்திரம் பிரம்மாண்டமானது. எண்ணி எண்ணி தொடமுடியாதது. அதிலிருந்து பேய்களும் சாபஙகளும் எழுந்துவந்து என்னை கவ்வும் என்றால் எனக்கு என்னதான் பாதுகாப்பு? ” , இந்த கேள்வியில் இருந்து இன்னும் விடுபட முடியவில்லை. அல்லற்பட்டு ஆற்றா கண்ணீர் காலவெளி கடந்து சுழற்றி தாக்கும்போது, யாரால் தாங்கமுடியும்.
அதன் மறுபகுதியான, இந்திய பெருநிலத்தின் மைய அற விழுமியமாக , ‘தர்மமே வெல்லும்’ என்ற சொற்கள் அர்த்தமற்ற ஒலியாகவே என்னனுள் பலகாலம் இருந்துவந்துள்ளது. ஆனால் , அவ்விழுமியம் எப்படி இந்திய நிலங்களின் அனைத்து பகுதிகளிலும் பல்லாண்டாக வேரூன்றி வந்துள்ளது என்பதை உங்கள் எழுத்தின் வழி உணர்ந்து வருகிறேன். கதைகளை இப்படியெல்லாம் சுருக்க கூடாது என்றாலும், புறத்தில் சுறுக்குவதெல்லாம் அகத்தில் விரிப்பதற்கே. குருவிடமிருந்து வரும் ஆப்த வாக்கியமாக , இப்பொழுது அச்சொல்லை அசைபோடுகிறேன்.
கார்த்திக் குமார்
***
பத்துலட்சம் காலடிகள் [சிறுகதை]
அன்புள்ள ஜெ
பத்துலட்சம் காலடிகளை இப்போதுகூட வாசித்துக்கொண்டே இருக்கிறேன். ஒரு கதை ஏன் வாசகர்களுக்கு முக்கியமாக ஆகிறது என்றால் அது அவனுடைய சொந்த வாழ்க்கையை எப்படியோ பிரதிபலிக்க ஆரம்பிக்கிறது என்பதனால்தான். தப்புசரிகளாலோ அரசியல்கருத்துக்களாலோ அல்ல அவன் ஒரு கதையை முடிவுசெய்வது. அவனுக்கு ஆழத்தில் அது எந்த வகையிலே அர்த்தமாகிறது என்பதை வைத்துத்தான். அந்தவகையில் பத்துலட்சம் காலடிகள் எனக்கு மிகமிக முக்கியமான கதை
என் வாழ்க்கையில் நிகழ்ந்த தவறுகள் அவற்றை நான் சரிசெய்துகொண்ட விதம் இன்றைக்கு நான் கொண்டிருக்கும் உறுதி இது எல்லாமே இந்த ஒரு கதையில் இருக்கிறது. பத்துலட்சம் காலடிகள் என்ற தலைப்பே அற்புதமானது. ஒரு நீண்ட பயணம் என்பது என்ன? சிலலட்சம் காலடிகள். ஒரு வாழ்க்கை என்பது சில ஆயிரம் நாட்கள். ஒரு தொழில் என்பது என்ன? சில ஆயிரம் பரிவர்த்தனைகள். ஒரு பரிவர்த்தனை தப்பாகப் போனால் என்ன? சொல்லமுடியாது. பத்துலட்சம் பரிவர்த்தனையும் தப்பாகப் போய்விடும். நான் அனுபவித்து அறிந்த உண்மை இது. அதைச் சொல்லும் கதைதான் பத்துலட்சம் காலடிகள்
எஸ்.மாதவன்
***
அன்புள்ள ஆசிரியருக்கு,
புனைவுக் களியாட்டு சிறுகதைகளில் பத்துலட்சம் காலடிகள் மகத்தான கதை. உண்மையில் அறம் வரிசையில் வைக்கப்பட வேண்டிய ஆனால் அறம் வரிசை மனிதர்களில் மிக வித்தியாசமான மனிதரும்கூட எம்.ஏ. அப்துல்லா சாகிப். அறம் மனிதர்கள் யாவரும் பின்தொடர்ச்சி இல்லாத எளிய மனிதர்கள், மகத்தானவர்கள் எனினும் அவர்கள் பின்னால் இருப்பது மானுடம் வழிவந்த அறம் தான். அவர்கள் ஒரு பாதையை உருவாக்கியவர்கள், தங்கள் பாதைகளுக்காக போராடியவர்கள். ஆனால் அப்துல்லா சாகிப் தான் கொண்டிருக்கும் ஒரு பெரும் குல மரபின் நீட்சி. ஒன்றை உருவாகிச்செல்பவர்களை விட வழி வழியாக வரும் ஒன்றை காக்க முயல்பவரின் துயரும் கடமையும் அதிகம். ஆனால் அதற்கான வலிமையை அவர் இயல்பிலேயே குருதி வழி பெற்றிருக்கிறார். “நான் அவர் முகத்தை பார்த்திருந்தேன். அதே புன்னகை, அதே தெளிந்த விழிகள். எத்தனை உறுதியான நரம்புகள் என்ற வியப்பே எனக்கு ஏற்பட்டது. தலைமுறை தலைமுறையாக தீயும் ரத்தமும் கண்ணீரும் கண்டவர்களுக்கு உரியவை” இருப்பினும் அது ஒன்றும் எளியது அல்லவே. அவர் சென்றநூற்றாண்டின் சொற்களில் வாழ்பவராக இருக்கலாம். ஆனால் இந்த நூற்றாண்டில் நாம் இழந்தது இதைத்தானே. எதற்கும் கட்டுப்படாதவர்களாக நம்மை காட்டிக்கொள்ள முற்படுகிறோம். அதனால் நாம் இழந்த ஒழுக்கங்களும் ஆழங்களும் உண்டல்லவா.
இந்த நூற்றாண்டின் ஒரு பெண்ணின் மனதை அறியும் ஒளசேப்பச்சன் கூட சென்ற நூற்றாண்டின் கடமைகளில் வாழ்பவரை அறிய முடிவதில்லை. ஆம், அவள் மனதை திறக்கிறாள். ஆனால் இங்கே சாகிப் மனம் திறந்தாலும் புரிந்துகொள்ள இயலாத பத்தேமாரி கப்பல்களின் சூத்திரங்களால் ஆனவர் அல்லவா. உண்மையில் இந்த கதையில் இருந்து மீட்பே இல்லை எனக்கு. வாள் கொண்டு நிறுவாத சொல்லுக்கு மதிப்பில்லை என்பது போல, தன் தலைமுறையின் சொற்களை காக்கும் வாள், சுல்தானின் வாளாக இருப்பதே சாகிப் தானே.
சாகிப்பின் characterization எழுந்து வரும் விதம் தான் கதைக்கு இத்தனை அழுத்தமும் வலிமையும் கொடுப்பது. ஒட்டுமொத்த கதையும் பத்தேமாரி எழுந்து வருவது போல ஆங்காங்கே கட்டப்பட்டு ஆனால் உறுதியாக ஒரு அடிப்படையை கொண்டு மேலெழுகிறது. கப்பல், சூத்திரம், கலாசிகள், பெண், காதால், அறம், என எல்லாவற்றையும் இணைத்து நீங்கள் கட்டிய கதையும் பத்தேமாரி போல அத்தனை வலிமையானது. அதனடியில் நிற்பது ஜே வின் சூத்திரம் தான். பத்துலட்சம் காலடிகளின் பத்தேமாரி என் மனதின் புயல்களை கிளப்பிவிட்டு ஒய்யாரமாக நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது. நான் இன்னும் நெடுங்காலம் கடல் கொந்தளிப்பில் இருந்தாக வேண்டும்.
அன்புள்ள ஜே, ஒரு குட்டி வாசகனின் எளிய வேண்டுகோளும் எதிர்பார்ப்பும். கண்டிப்பாக புனைவுக் களியாட்டு கதைகள் பதிப்பில் வரவேண்டும். அது பத்துலட்சம் காலடிகள் என்னும் தலைப்பிலேயே வரவேண்டும். வானும் கடலும் நீலம் கொண்டு அதில் பத்தேமாரி கப்பல் எழுந்து வருவது போல படம் கொண்ட அட்டையுடன் புத்தகத்தை கற்பனை கூட செய்துகொண்டேன்.
இப்படிக்கு தங்கள் அன்புள்ள வாசகன்,
பிரேம் குமார் ராஜா.
***