‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–55

பகுதி ஐந்து : எரிசொல் – 1

தண்டகாரண்யத்தின் நடுவே பதினெட்டு மலைமுடிகளால் சூழப்பட்ட பள்ளத்தாக்கில் நடுவே அமைந்திருந்த மந்தரம் எனும் ஆயர்சிற்றூரின் காட்டில் மலைப்பாறை ஒன்றின்மேல் நரை எழா குழல்கற்றையில் மயில்பீலி விழி நலுங்கி அசைய மடியில் வேய்குழலுடன் கைகளை மார்பில் கட்டி இளம் புன்னகையுடன் விழி மூடி அமர்ந்திருந்த இளைய யாதவரின் முன் அமர்ந்து முதிய சூதன் தன் இரு விரலால் குறுமுழவை மீட்டி பன்னிருசீர் கழிநெடிலடி ஆசிரியத்தில் அகவை ஒலியில் பாடிக்கொண்டிருந்தான்.

அவன் மலையிறங்கி நெடுந்தொலைவு கடந்து அங்கே வந்து சேர்ந்திருந்தான். வழி தவறி மலையடுக்குகளில் அலைந்து உயிர்பிரியுமோ என்று அஞ்சும் இறுதியில் சௌந்தர்யம், சௌம்யம் என அழைக்கப்பட்ட இரு மலைமுகடுகளுக்கு நடுவே மண்மடிந்து மலைச்சரிவு என்றாகி இறங்கி வந்து வளைந்தெழுந்து மேலே செல்லும் கணவாயின் விளிம்பில் வந்து நின்றான். கீழே பசுமை நிறைந்து பின்மாலை ஒளியில் அலைகொண்டிருந்த அப்பள்ளத்தாக்கை பார்த்தான். அக்கணம் அவன் உள்ளத்தில் எழுந்தது அந்தப் பீலிவிழி. “இசையிறையே, என்னை காத்தருள்க!” என்று கூவி கண்மூடி வேண்டிக்கொண்டபின் அவன் அந்த ஊரை நோக்கி சென்றான்.

அந்த ஊரை அடைந்த பின்னர்தான் அங்கே தங்கியிருந்தவர் எவர் என்று அவன் உணர்ந்தான். இரு கைகளையும் தலைமேல் தூக்கியபடி அலறிக்கொண்டு அவன் அவர் தங்கியிருந்த சிறுகுடில்முன் சென்று முற்றத்தில் முகம் அறைய விழுந்தான். “புவிக்கிறைவா, நீ அமர்ந்திருக்கும் ஆலயம் இதுவா?” என்றான். இளைய யாதவர் புன்னகைத்து “இதுவும்தான்” என்றார். “இது என்ன கோலம்? ஏன் இங்கிருக்கிறீர்கள்? அறிந்தீர்களா, உங்கள் மாநகரை கடல்கொண்டது. உங்கள் மைந்தர் திறமறிந்து நிலம்மாறினர். நீங்கள் விண்புகுந்துவிட்டீர்கள் என்றே பேசிக்கொள்கிறார்கள்” என்றான் முதிய சூதன்.

“இன்னும் விண்புகவில்லை. இன்னுமுள்ளன கடன்கள்” என்றார் இளைய யாதவர். “விண்ணுறைவோனே, உனக்குமா கடன்?” என்று முதிய சூதன் கேட்டான். “மானுடன் செயலாற்றாமல் இருக்கவியலாது. செயல் மறுசெயல்கொண்டது. ஒன்றுதொட்டு ஒன்றென விரிவது. எவரும் அதை கடக்கவியலாது” என்று இளைய யாதவர் சொன்னார். “செயல்கடந்தவர் சிலர். செயலுக்கு மறுசெயலாற்றி திகைந்து மீள்பவர் சிலர். நான் இரண்டாமவன்.” முதிய சூதன் “யாதவரே, ஏன் இங்ஙனம் ஆயிற்று?” என்று கண்ணீருடன் கேட்டான். “நான் உம்மிடம் கேட்கவேண்டிய வினா அல்லவா அது? கூறுக, ஏன் இங்ஙனம் ஆகிறது?” என்றார் இளைய யாதவர்.

“நானறிந்ததெல்லாம் கதைகளே. நாவும் செவியும் பரிமாறிக்கொள்ளும் சொற்கள் மட்டுமே” என்றான் முதிய சூதன். “எனில் அதை சொல்லுங்கள்” என்று இளைய யாதவர் சொன்னார். “அவற்றுக்கு என்ன பொருள்?” என்று முதிய சூதன் கேட்டான். “இங்கே பொருளென்று ஏதுமில்லை. பொருளென எதையேனும் கொள்ளமுடியும் என்றால் அது கதைகளின் உட்பொருளை மட்டுமே” என்றார் இளைய யாதவர். “சொல்லுங்கள், உமது கதைகள் சொல்வதுதான் என்ன?” முதிய சூதன் “அதை நான் பாடுகிறேன். அதற்காகவே இங்கே நான் கொண்டுவரப்பட்டேன் போலும்” என்றான்.

கேளுங்கள். விண்முன் பிறிதொரு விண் என விரிந்த நகர்கள் பல இப்புவியில் இருந்ததுண்டு. சூரபத்மனின் வீரமாகேந்திரம், மகி‌ஷாசுரனின் மாகிஷ்மதி, நரகாசுரனின் பிரக்ஜ்யோதிஷம், ஹிரண்யகசிபுவின் மகாகாசியபபுரி, ஹிரண்யாக்ஷனின் ஹிரண்யபுரி, ராவணனின் இலங்கை… அவ்வண்ணம் எத்தனை! கல்வி பொலிந்தவை, கலை சிறந்தவை, செல்வம் எழுந்தவை, புகழ் பெருகியவை. சொல்லில் மட்டுமே தடம்விட்டு அவை மறைந்தன. அவை எங்ஙனம் அழிந்தன? நான் நான் எனும் ஆணவம் அந்நகரென விரிந்தது. அதை தெய்வங்கள் பொறுப்பதில்லை. ஆணவத்தை வெல்ல எழுகிறது தெய்வம்.

எதன்பொருட்டென்றாலும் ஆணவத்தை தெய்வங்கள் பொறுத்துக்கொள்வதில்லை. சில தருணங்களில் ஆணவம் அறத்தின் படைக்கலமாகிறது. அழியாச் சொல்லொன்றை உருவாக்கும் பொருட்டோ பெருங்கலை ஒன்றை நிகழ்த்தும் பொருட்டோ கூர்கொண்டு வான்தொட எழும் ஆணவங்கள் உண்டு. அவை தெய்வங்களுக்குரியவை. எனினும் அவற்றையும் தெய்வங்கள் விரும்புவதில்லை. தெய்வங்கள் பேராணவங்களை பலிவிலங்குக்கு உணவளிப்பதுபோல் பேணுகின்றன. அவை விளைந்தபின் தங்கள் அவியென கொள்கின்றன.

தெய்வங்கள் என்பவை என்ன? இப்புடவி அவி விறகெனில் இதில் எழும் அனலே தெய்வங்கள். விறகிலுறைகின்றன மூன்று அனல்கள். நெய்யில் உறைகின்றன மூன்று அனல்கள். கனிகளில், மலர்களில் உறைகின்றன மூன்று அனல்கள். ஆணவம் எழும் அம்மானுடனின் அகத்திலேயே உறைகின்றன அவனைக் கொன்று பலிகொள்ளும் தெய்வங்கள்.

முன்பு மூவுலகையும் வென்று மும்முடி சூடிய நரகாசுரன் தன் பெருநகரை முழுதுற அமைத்த பின்னர் அதன் நடுவில் விண் சுட்டும் விரலென எழுந்த காவல்கோட்டத்தின் மேலே ஏறி நின்று சுழன்று அதை நோக்கினான். “என்னையன்றி இதை அழிக்க எவரால் முடியும்!” என்று கூறி அவன் நகைத்தபோது அருகிலிருந்த இளையவரும் படைத்தலைவர்களும் திகைத்தனர். “ஆம், மூன்று தெய்வங்களாலும் இயலாது. ஆனால் நான் ஒற்றை சுட்டுவிரல் நீட்டி இதை அழிப்பேன்” என்று அவன் கூறினான். அச்சொல்லை அவன் இளையோன் குறி தேரும் நிமித்திகனிடம் கூறி “கூறுக நிமித்திகரே, அதன் பொருளென்ன, அத்தருணத்தில் அது எழுந்ததற்கு அடிப்படை என்ன?” என்று கேட்டான்.

நிமித்திகன் “உள்ளிருந்து அதை சொன்னது ஒரு தெய்வம். தருக்கி, தன்னைப் பெருக்கி எழும் ஒருவன் தனக்கு மேலாக அப்படி ஒரு தெய்வத்தை உருவாக்கி நிலைநிறுத்தவில்லை எனில் இத்துலாக்கோல் நிலைகொள்ளாதென்று உணர்க! இன்று ஆணவமும் அத்தெய்வமும் முற்றிலும் நிகர்நிலையில் நின்றிருக்கின்றன. ஆனால் அது தெய்வம் என்பதனால் அது ஒருகணம் முந்தும். முந்தும் கணம் இந்நகர் அழியும். ஆக்கியவனே அழிப்பதுதான் அனைத்துப் பெருங்கட்டமைவுகள் கொண்டுள்ள அழியா ஊழ் என்கின்றன நூல்கள்” என்றான். “சிலபோது அவ்வழிவை ஆக்கியவன் தன் விழிகளால் காணாதொழியலாம். ஆயினும் அழிவை தொடங்கிவைத்துவிட்டே அவன் செல்ல முடியும்.”

துவாரகை இப்போது அழிந்துவிட்டது. அதன்மேல் விண்ணின் விசைகளால் கடலில் எழுந்த பேரலை வந்து அறைந்தது. கல்மேல் கல் இன்றி அது வீழ்த்தப்பட்டது. அதன்மேல் கடல்மணல் பரவியது. சூறைக்காற்றுகள் அதை சென்று சென்று அறைந்தன. சூழ்ந்திருந்த பெரும்பாலையில் இருந்து காற்று கடல்நோக்கி வீசியபோது அதன்மேல் மணல் பொழிந்தது. மேலும் மேலுமென அலைகள் வந்து அந்நகரை கடலுக்குள் இழுத்துக்கொண்டிருக்கின்றன. நீரில் இறங்கிச் சென்றுகொண்டே இருக்கிறது அப்பெருநகர்.

நிகழும் ஒவ்வொன்றும் முன்னரே சொல்லென்று நிலைகொள்கின்றன. சொற்கள் ஒவ்வொன்றும் முன்னரே எண்ணமென்று நிலைகொள்கின்றன. எண்ணங்கள் ஒவ்வொன்றும் இயல்கை என்று இப்புடவியில் நிலைகொள்கின்றன. இங்கே நிகழ்வன அனைத்தும் அவ்வண்ணம் நிகழ்ந்தேயாகவேண்டும் என்று வகுக்கப்பட்டவை என்பதே நூலறிவோர் கூற்று. நீர்படும் புணைபோல் இங்கே வாழ்வென்பதனால் எளியோரை இகழ்தலும் பெரியோரை வியத்தலும் இணையாகவே பிழையென்று அறிந்தனர் சான்றோர். அவர் வாழ்க!

கேளுங்கள் இந்தத் தொல்கதையை. முன்பொருநாள் முதுமுனிவர் விஸ்வாமித்ரர் துவாரகைக்கு வந்தார். அவர் அவந்தியில் இருந்து பெரும்பாலை நிலத்திற்குள் புகுந்து பல நாட்கள் நீரின்றி உணவின்றி நெடுந்தொலைவு நடந்து வெடித்துப் புண்ணான கால்களுடன், நீராடாமையால் அழுக்கேறிய உடலுடன், நைந்து உடலில் கிழிந்து தொங்கிய ஆடைகளுடன், தோளில் பகுத்திட்ட சடைக்கற்றைகளில் புழுதியும் சருகுப்பொடியும் நிறைந்திருக்க வந்து துவாரகையின் நுழைவுப்பெருவாயில் முன் நின்றார். மேலிருந்து அவரைக் கண்ட காவலன் படியிறங்கி ஓடிவந்து அவ்விசையிலேயே அவர் முன் முழந்தாளிட்டு நெற்றி நிலம்தொட வணங்கி “வருக முனிவரே, இப்பெருநகரம் தங்களால் வாழ்த்தப்பட்டது” என்றான்.

அவன் தலைதொட்டு வாழ்த்தி புன்னகைத்த விஸ்வாமித்ரர் “நான் இளைய யாதவரை பார்க்க வந்தேன்” என்றார். “வருக! அவர் தங்களால் வாழ்த்தப்படட்டும்” என்று அவன் சொன்னான். “என் தோற்றத்தை இவ்வண்ணம் கண்ட பின்னும் எவ்வாறு என்னை இந்த மங்கலப்பெருநகருக்கு வரவேற்கிறாய்?” என்று விஸ்வாமித்ரர் கேட்டார். “தங்கள் தோற்றத்தால்தான்” என்று அவன் மறுமொழி சொன்னான். “இந்நகரை இன்று பாரதவர்ஷத்தில் அனைவரும் அறிவார்கள். இங்கு தூய்மையும் மங்கலமும் கேளிக்கையும் நிலவுகிறதென்பதே உலகோர் சொல். திருமகள் கோயில் கொண்டுள்ள இந்த இடத்தை ஒவ்வொருவரும் நீராடி தூய்மை கொண்ட பிறகே அணுகுகிறார்கள். நெடுந்தொலைவு பயணம் செய்து வரும் வணிகர்கள்கூட சோலைகளில் தங்கள் ஆடைகளைத் திருத்தி குழல்திருத்தி முகம்மலர்ந்து நுழைகிறார்கள். இவ்வண்ணம் கடுந்தவக்கோலம் கொண்ட ஒருவர் இக்கோலத்தை தன் நோன்பெனக் கொண்ட ஒருவராகவே இருக்க இயலும்” என்றான் காவலன்.

விஸ்வாமித்ரர் உரக்க நகைத்து “மெய்” என்றார். “ஆயினும் என் வருகையால் இந்த நகரின் மங்கலம் குறைந்துவிடும் அல்லவா? என்னை இந்நகரில் பிறர் விழிகளில் இருந்து மறைத்து அழைத்துச் செல்ல அல்லவா நீ முயலவேண்டும்?” என்றார். “முனிவரே, அனைத்து அழகுகளும், அனைத்து மங்கலங்களும், அனைத்து வெற்றிகளும், அனைத்துப் புகழும் தவத்திற்கு ஒரு படி கீழானவையே என்கின்றன மூத்தோர் சொற்கள். தவத்தை விட பெரிய மங்கலமும், தவத்திற்கு நிகரான செல்வமும், தவத்திற்கு நிகரான புகழும், தவத்திற்கு நிகரான வெற்றியும் இப்புவியில் இல்லை. தவத்தை வணங்குகையிலேயே இவை ஒவ்வொன்றும் பொருள் கொள்கின்றன. தவத்தோடு முரண்கொள்கையில் மங்கலங்கள் குலைகின்றன, செல்வம் பயனிழக்கிறது, புகழ் வெறுங்கதையாகிறது, வெற்றி தலைகீழாகிறது” என்று அவன் கூறினான்.

“நன்று, இத்தெளிவு இந்நகரில் இருக்கும் வரை இது வாழும்” என்றபின் அவர் தங்கள் அவைக்கு வந்தார். நீங்கள் உங்கள் அரண்மனை முற்றத்தில் தொழுத கையுடன் இறங்கி வந்து முடித்தலையும் எட்டுறுப்பும் புழுதிபட வணங்கி அவரை தங்கள் அவைக்கு அழைத்துச் சென்றீர்கள். அவர் தங்கள் அவையில் அமர்ந்திருக்க நீங்கள் அரியணை அமராமல் சிறுபீடத்தில் அமர்ந்து அவர் உரைத்த விழுப்பொருளை கேட்டீர்கள். அன்று அப்பெருநகர் திரண்டு வந்து அவரை வணங்கியது. அதன் அனைத்து மங்கல அவைகளிலும் அவர் சென்று வீற்றிருந்தார். நகரின் படைத்தலைவர்களும் அமைச்சர்களும் அவரை தாள்பணிந்து வணங்கினார்கள். மங்கல அன்னையின் விழித்தோற்றமென எழுந்த எட்டு அரசியரும் அவர் அடிபணிந்தனர்.

விஸ்வாமித்ரர் அந்நகரிலிருந்து திரும்பிச்செல்கையில் அளித்ததன்றி பெற்றுக்கொண்டதென ஏதுமில்லை. அந்நுழைவாயிலைக் கடந்து செல்கையில் ஒருகணம் திரும்பி காலில் இருந்த புழுதியை தட்டிவிட்டு அக்கணமே அந்நகரை மறந்து அகன்றார். அவர் உரைத்த வாழ்த்துக்கள் மட்டும் அந்நகரில் எஞ்சியிருந்தன. அவர் வந்துநின்ற இடத்தில் இருந்து மண் எடுத்து கொண்டுசென்று துவாரகையின் தென்கிழக்கு அனல்மூலையில் சிற்றாலயம் ஒன்று அமைக்கப்பட்டது. அவர் வந்துநின்ற அந்நாள் ஆண்டுதோறும் விழாவென்று கொண்டாடப்பட்டது. அன்று அனலெழுப்பி வணங்கி அவருடைய மெய்ச்சொற்கள் ஓதப்பட்டன.

அரசே, மீண்டும் ஒருமுறை அவர் துவாரகைக்குள் நுழைந்தார். அப்போது நீங்கள் துவாரகையை நீங்கி நைமிஷாரண்யத்தில் தங்கியிருந்தீர்கள். துவாரகை உங்களை மறுக்க முனைந்துகொண்டிருந்தது. மறுக்கும்பொருட்டு வெறுக்க முனைந்தது. வெறுக்கும்பொருட்டு உங்களில் இருந்து விலக முயன்றது. விலகும்பொருட்டு நீங்கள் கூறியவையும் இயற்றியவையும் காட்டியவையும் ஆகிய அனைத்துக்கும் எதிர்த்திசைக்கு சென்றுகொண்டிருந்தனர்.

விஸ்வாமித்ரர் துவாரகையின் நுழைவாயிலை அடைந்த அன்று அங்கு காவல்படைவீரர்கள் பெருந்திரளென காத்திருந்தனர். அவர்கள் அவந்தியிலிருந்து வந்துகொண்டிருக்கும் வணிகர் குழு ஒன்றுக்காக பொறுமையிழந்து நின்றனர். தோரணவாயில் மேல் ஏறி நின்றிருந்த வழிநோக்கி நெடுந்தொலைவில் நோக்கை நிறுத்தியிருந்தான். அப்போது துவாரகையில் சாம்பனின் ஆட்சி நிலவியது. சாம்பன் தன் நெடுங்குடியைச் சேர்ந்த நிஷாதர்களையும் அசுரர்களையும் படைகளில் பெருமளவுக்கு கலந்திருந்தார். மைய அரசுநிலைகள் அனைத்திலும் தன்னவரே நிலைகொள்ளவேண்டும் என்று முடிவு செய்திருந்தார். ஆகவே அசுரர் குடித்தலைவனாகிய விருஷபன் தலைமையில் அங்கு காவல் நிகழ்ந்திருந்தது.

அப்போது வணிக வண்டிகள் நகருள் நுழைகையில் அனைத்துக் காவல்நிலைகளிலும் அவர்களிடமிருந்து சிறு பரிசுகளும் கையூட்டுகளும் பெறுவது வழக்கமாக இருந்தது. முதலில் அதைக் குறித்த குற்றச்சாட்டுகள் சாம்பனின் அவைக்கு சென்றபோது சாம்பனின் அமைச்சரும் தங்கள் இளமைத்துணைவருமாகிய ஸ்ரீகரர் “அரசே, ஒருபோதும் இதை ஒப்பலாகாது. அரசுக்குக் கட்டுப்பட்டவர்கள் அரசு அளிக்கும் நெறிகளை மீறி இவ்வண்ணம் தங்களுக்கென பொருள் சேர்க்கலாகுமெனில் அவர்கள் அரசெனும் நெறியை மீறுகிறார்கள். அரசென்பதே நெறிகளின் தொகுதியான ஒரு பெருநெறிதான். அதில் ஒரு நெறியை மீறுகையில் அரசை மீறுகிறார்கள் என்றே பொருள். அரசை மீறி ஒருவன் அரசின் முகமென அங்கிருக்கிறான் எனில் அந்த அரசு முற்றாக தோற்றுப்போகும். காவல்நிலைகளில் கையூட்டென்பது அரசன் கோலுடன் நின்று வழிப்பறி செய்வதற்கு நிகரானது” என்றார்.

ஆனால் அசுர குடியினராகிய அமைச்சர் வக்ரர் “நாம் நமது படைத்தலைவர்களுக்கு செல்வத்தை ஊதியமாக அளிக்கிறோம். அச்செல்வமும் இவ்வணிகரிடமிருந்து கொள்ளப்பட்டதே. வணிகர்கள் நேரடியாக அவ்வூதியத்தை கொடுக்கிறார்கள் என்று மட்டுமே இதை பொருள்கொள்ள வேண்டும்” என்றார். “நாம் எத்தனை ஊதியம் கொடுத்தாலும் கீழே உள்ளோர் நிறைவடைய மாட்டார்கள். தங்கள் தகுதிக்கு அதைவிட மிகுதியான செல்வம் கிடைத்தாக வேண்டும் என்ற எண்ணமே அவர்களை ஆட்டுவிக்கும். அவர்களே தாங்களும் சிறிது ஈட்டிக்கொண்டால் அது தங்கள் தகுதியினால் ஈட்டிக்கொண்டதாக எண்ணுவார்கள். அதனால் மகிழ்வார்கள். செயலூக்கம் கொண்டவர்கள் தங்கள் செயல்களால் ஈட்டப்படுவனவற்றிலேயே மகிழ்வார்கள்.”

வக்ரர் தொடந்து சொன்னார் “அரசே, ஆயிரம் பொன் ஊதியமாக பெறும் ஒரு படைவீரன் ஐந்து பொன்னை கையூட்டாக பெற்றால் அடையும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. சற்றேனும் சூறையாட ஒப்பாத படை வெற்றியை நாடுவதில்லை, சற்றேனும் கையூட்டு பெற வாய்ப்பற்ற அரசு நீடிப்பதில்லை என்பதே நடைமுறை. மாளிகைகளின் கற்களைத் தூக்கி அடுக்குகையில் சற்றே நெகிழ்வுடன் அவை அமைக்கப்படவேண்டும் என்று சொல்வார்கள். அவை தம்மைத் தாமே அசைத்து அமைத்துக்கொள்ள இடமளிக்கவேண்டும். அது போன்றதுதான் இது. இந்நெகிழ்வால் நாம் ஆற்றலுறுவோம் என்றே உணர்க!”

“அவர்களின் பற்றும் செயல்பாடும் அரசுக்கெதிராக இல்லாமல் பார்த்துக்கொள்வது நமது கடமை. சற்று அவர்கள் பொருளீட்டிக்கொள்ள நாம் ஒப்பினால் ஒவ்வொருவரும் மும்மடங்கு பணியாற்றுவாரகள். ஒவ்வொருவரும் தங்கள் நலனுக்குரியது என்று தாங்கள் கருதும் இவ்வரசை இறுதிவரை காத்து நிற்பார்கள். இதன் நிலைக்கோளும் வெற்றியும் அவர்களின் கூட்டுப்பொறுப்பு என்று ஆகுகையில் ஒவ்வொருவரும் தங்கள் முழு வீச்சையும் வெளிப்படுத்துவார்கள்” என்று வக்ரர் சொன்னார். “அறிக, அவர்கள் ஊதியத்துக்கு மட்டுமே பணியாற்றுவார்கள் எனில் அவர்களின் பணி எல்லைக்குட்பட்டது! அதை இடர்களில் நம்ப இயலாது. அதை நம் தேவைக்கேற்ப விரிக்கவும் இயலாது.”

ஸ்ரீகரர் “அரசே, பேரரசுகள் மெய்யான பெருநம்பிக்கையால் நிலைநிறுத்தப்படுபவை. தன்னலநோக்கால் அல்ல. குலப் பற்றால், இனப் பற்றால், அறப் பற்றால், இறைப் பற்றால் அவற்றின் அடித்தளம் அமையவேண்டும். தன்னலத்தால் அமைந்த பெருநகரங்கள் எதுவும் வாழ்ந்ததில்லை. ஏனெனில் ஒவ்வொருவரின் தன்னலமும் இன்னொருவரின் தன்னலத்துடன் முரண்படுவது. ஒரு நகரத்தின் ஊழியர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்குள் கொள்ளும் ஒத்திசைவினால் அதன் ஆற்றல் உருவாகிறதே ஒழிய ஒருவரோடொருவர் போட்டி போடுவதனால் அல்ல. நாம் ஒருவரை கையூட்டு வாங்கவிட்டால் இன்னொருவரை வென்றே அவர் அதை கொள்ளமுடியும். ஒருவர் இன்னொருவரை அழித்தே தான் வெல்லமுடியும். நம்முடன் நாம் போரிடுவோம். நம்மைநாமே தோற்கடித்துக் கொள்வோம்” என்றார்.

ஸ்ரீகரர் சொன்னார் “எந்நிலையிலும் ஓர் அரசுக்கு அடிபணிந்து ஊழியர்களாக இருப்பவர்கள் தங்களுக்கென ஒரு தனிச்செயல்பாடு கொண்டிருக்கலாகாது. கணவன் மனைவிக்கோ மனைவி கணவனுக்கோ தெரியாத மந்தணச் செயல்பாடுகள் எதுவும் கொண்டிருக்கலாகாது என்பதுபோல. ஏனெனில் ஒரு மந்தணம் பல மந்தணங்களை உருவாக்குகிறது. அது அங்கு நிற்பதில்லை. அரசு ஊழியன் ஒருவன் அரசு என நூல் வகுக்கும் ஒரு நெறியை மீறும் செயலை எவரும் அறியாது செய்தாலும்கூட அது குற்றமே. அரசு என்பது நெறிகளாலானது எனில் ஒவ்வொரு அரசு ஊழியனும் அப்பெருநெறியின் ஒரு கூறென அமையும் சிறுநெறிகளால் ஆனவன். அவனுக்கு அளிக்கப்பட்டுள்ள பணியிடம், பொறுப்பு, எல்லை என்னும் மூன்று வரையறைகளை அவ்வூழியன் தலைக்கொண்டாக வேண்டும். அவற்றில் ஒன்றை மீறுவான் எனினும் அவன் தன்னை அக்கணமே ஊழியனல்ல என்று ஆக்கிக்கொள்கிறான். அவன் பணிநீக்கம் செய்யப்பட வேண்டும் அல்லது உயிர்நீக்கம் செய்யப்பட வேண்டும்.”

ஆனால் வக்ரர் நகைத்து “இந்தச் சொற்கள் நூல்கள் கூறும் உயர்கொள்கைகள் மட்டுமே. அரசே, எங்கும் எந்நகரிலும் இவை நடைமுறையில் இல்லை. மானுடரின் இயல்பென்பது விழைவுகளால் ஆனது. நாம் இங்கு முனிவர்களைக் கொண்டு அரசு நடத்தவில்லை. போர்வீரர்களைக் கொண்டு நடத்துகிறோம். அமைச்சர்களைக் கொண்டு நடத்துகிறோம். வணிகர்களைக் கொண்டு நடத்துகிறோம். வேளாண்குடிகளைக் கொண்டு நடத்துகிறோம். அமைச்சர்கள் பொன் விழைவதனால்தான் வேதம் துறந்து இங்கு வருகிறார்கள். வெற்றியையும் புகழையும் செல்வத்தையும் விரும்புவதனால்தான் படைவீரர்கள் வாளெடுத்து வருகிறார்கள். வணிகர்களை எல்லைகடக்கச் செய்வதும் வேளாண்குடிகளை மண்ணில் வியர்வை வீழ்த்தச் செய்வதும் பொன்னே. அரசே, விழைவே அந்தணரையும் ஷத்ரியனையும் வணிகனையும் குடிகளையும் இயக்குகிறது” என்றார்.

“அவ்விழைவை எட்டு தளைகளில் பிணைத்துவிட்டு அவர்களை பணியாற்றச் செய்ய எவராலும் இயலாது. அவர்கள் தங்கள் விழைவு நிலைபெறவும் மேலும் விழைவுகள் கொள்ளவும் முன்னேறிச் சென்றுகொண்டே இருக்கவேண்டும். அரசன் அவ்வாய்ப்பை அறிந்தே அளித்தாகவேண்டும். மீள மீள ஒன்றையே செய்யும் சலிப்பிலிருந்து படைவீரர்களை மீட்பது அது. ஒன்றையே எதிர்பார்க்க முடியும் எனும் சோர்விலிருந்து அவர்களை விடுவிப்பது. சற்றேனும் வேட்டையாட ஒப்பாவிட்டால் ஓநாயை வீட்டில் வளர்க்க இயலாது” என்றார் வக்ரர்.

சாம்பன் இருபுறமும் கேட்டு குழம்பியவர் போலிருக்க வக்ரர் உரத்த குரலில் “அரசே, இது அவையேயாயினும் நான் இதை கூறுகிறேன். ஒன்று எண்ணுக! நீங்கள் ஒரு படைவீரர் என காவல்கோட்டத்தில் அமர்ந்திருந்தால் எதை விரும்புவீர்கள்? வகுக்கப்பட்ட நெறிகளினூடாக ஒழுகிச் செல்வதையா, அன்றி வென்று முன்செல்வதையா? வகுக்கப்பட்ட வழியில் மாறாது அமைவது நோன்பு. அது படிவர்களுக்கும் வேதம்புரக்கும் அந்தணர்களுக்கும் உரியது. அவர்களின் தன்னிறைவு அதிலிருக்கிறது. மீறிச்சென்று வெற்றியை அடைந்து தானென தருக்கும் கணங்களை அடைவதே ஷத்ரியர்களின் வாழ்க்கை. அசுரர்களின் வாழ்க்கை. எதை நீங்கள் உங்கள் வீரர்களுக்கு பரிந்துரைப்பீர்கள்?” என்றார்.

சாம்பன் முடிவேதும் கூறாமல் அவையிலிருந்து எழுந்து சென்றார். ஆனால் அவர் வக்ரரின் முடிவையே எடுத்தார். எதுவும் அறிவிக்கப்படவில்லை எனினும் சிறிய குற்றச்சாட்டுகள் எவையும் கருத்தில் கொள்ளப்படவில்லை. அவை கருத்தில் கொள்ளப்படவில்லை என்று தெரிந்ததும் அவை சற்று பெரிதாயின. நகரெங்கும் அனைத்து வீரர்களுமே கையூட்டு பெறலாயினர். கையூட்டு பெற்றவர்கள் பெறாதவர்களைவிட செல்வமும் கோன்மையும் கொண்டவர்களாயினர். அவர்களை பிறர் மதித்தனர், அஞ்சினர். அவர்கள் வெற்றி பெற்றவர்களாக கருதப்பட்டபோது கையூட்டு பெறாதவர்கள் தோல்வி அடைந்தவர்களாக மாறினர். அவர்கள் கையூட்டு பெற்றேயாக வேண்டுமென்ற அழுத்தத்தை அவர்கள் குடும்பமும் குடியும் சுற்றமும் அளித்தன.

நாளடைவில் நகரத்தில் கையூட்டு ஒரு நிலைபெற்ற வழக்கமாகியது. பின்னர் அது ஒரு முறைமையாகியது. முறைமையாகியதனால் சலிப்படைய வைத்தது. அம்முறைமையை மீறி மேலும் மேலும் பெரிய கையூட்டுகள் பெறும் வழக்கம் தொடங்கியது. அதன்பொருட்டு நெறிகளை மீறுவது வீரம் என்றும் அறிவு என்றும் ஆகியது. ஒருகட்டத்தில் படைவீரர்கள் ஒரு பொன் ஊதியமாக பெற்றால் பத்து பொன்னை கையூட்டென பெற்றனர். வணிகர்கள் அக்கையூட்டுக்கும் சேர்த்து பொருட்களை விலைகூறினர். பொருட்கள் விலையேறியபோது அதை வாங்குபவர் ஒவ்வொருவரும் மேலும் பொருள் சேர்க்க வேண்டியிருந்தது. ஆகவே ஒவ்வொருவரும் தங்கள் உழைப்புக்கும் தங்கள் பொறுப்பிற்கும் மேலும் பொருள் விழைந்தனர்.

அதன் விளைவாக எளியோர் மேலும் எளியோராயினர். செல்வர் மேலும் செல்வராயினர். துவாரகை ஓரிரு மாதங்களுக்குள்ளாகவே இருபெரும் பிரிவுகளாக பிரிந்தது. எதையேனும் செய்து பெரும்பொருள் ஈட்டும் வாய்ப்புடையவர்கள் அனைத்து நெறிகளையும் கடந்து அதை ஈட்டி அப்பொருளைக்கொண்டு மேலும் பொருள் பெருக்கி மேலும் நுகர்ந்து மேலும் இடம் தகைந்து எழுந்தனர். ஒருவரை நூறு பேர் பணிய வேண்டியிருந்தது. அந்நூறு பேர் உழைத்தாலும் எழமுடியவில்லை. அவர்கள் பணியுந்தோறும் இழந்தனர். இழக்குந்தோறும் மீண்டும் பணிந்தனர். ஏதிலிகளாயினர். அவர்கள் தங்களை மிதித்து ஏறி தலைமேல் அமர்ந்து ஆண்டவர்களை தகுதியால் வென்றவர்கள் என்று எண்ணினார்கள். ஆகவே அவர்களை வழிபட்டனர். என்றேனும் அவர்களைப்போல் தாங்களும் ஆகிவிட முடியுமென்று கனவு கண்டனர். தங்களைக் கொன்று புசிக்கும் புலியை தெய்வமென வழிபடும் வெள்ளாட்டுக்கூட்டங்களென மக்கள் ஆயினர்.

பிற நிலங்களில் பல ஆண்டுகளில் நிகழ்ந்த மாற்றம் ஒரு சில மாதங்களில் துவாரகையில் நிகழ்ந்தது. ஏனென்றால் பல பல ஆண்டுகளாக தலைமுறைகளாக வளர்ந்து வரும் நகரங்கள் அவை. துவாரகையோ ஒரு தலைமுறைக்குள் பொங்கிப் பெருகி பேருரு கொண்ட நகரம். அங்கே ஒவ்வொன்றும் ஏழுமடங்கு விரைவில் நிகழ்ந்தன. அதன் ஆக்கமும் அழிவும் அவ்வண்ணமே. அங்கே கலையும் சொல்லும் வளர்ந்ததும் அவ்வண்ணமே. நாளில் நிகழ்வது கனவில் மின்னுகிறது என்பார்கள். பாரதவர்ஷத்தில் ஒரு விதை மண்கீறி எழும் பொழுதில் துவாரகையில் அது கனியாகிவிட்டிருக்கும் என்றனர் கவிஞர்.

அந்நகரில் அன்று நுழையவிருந்த வணிகர் குழுவிடமிருந்து கையூட்டு பெற்று பகிர்ந்துகொள்வதற்காக விழைவெழுந்து புலரிமுதலே காத்திருந்து பொறுமையிழந்து நிலைகொள்ளாமல் நின்றிருந்த படைவீரர்களுக்கு முன்னால் நெடுந்தொலைவில் தன்னந்தனியாக விஸ்வாமித்ரர் தோன்றினார். கிழிந்த தோலாடையும் புழுதிச்சடைகளும் கொண்ட தவக்கோலத்தில் நடந்துவந்து அவர்கள் முன் நின்றார்.

அரசே, அறிக! சில தருணங்கள் ஊழால் வகுக்கப்பட்டவை. அவை சொல்லை பொருள் தொடுவதுபோல சொல்லிமுடியாத நுண்மைகள் கொண்டவை என்றான் முதிய சூதன்.

முந்தைய கட்டுரைநஞ்சு [சிறுகதை]
அடுத்த கட்டுரைபத்துலட்சம் காலடிகள், பலிக்கல்- கடிதங்கள்