முத்தங்கள் [சிறுகதை]

ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்துத்தான் செய்தான் மூக்கன். அவனுக்கு அது பதினெட்டு ஆண்டுகால பழக்கமும்கூட. ஆனால் ஒன்றே ஒன்று தவறிவிட்டது. அது மொத்தமாக எல்லாவற்றையும் குலைத்துவிட்டது.

அதை அவனுக்கு கூத்துச் சொல்லிக்கொடுத்த வாத்தியார் மருதப்பிள்ளை பலமுறை சொல்லியிருக்கிறார்.எல்லாம் சரியாக அமைந்துவிட்டது என்று ரொம்ப துள்ளக்கூடாது, சாயம்பூசியதும் பாட்டு மறந்துவிடும்.பெரிய பெரிய வாத்தியார்கள் எல்லாம் கூத்துமேடையில் கல்லடி வாங்கியதுண்டு.

திருட்டு இன்னும் பெரிய கூத்து.எல்லாம் மிகமிகச் சரியாக அமைந்துவிட்டால் சங்கிலிக்கருப்பு உள்ளே புகுந்து புறவாசலை திறந்து வைத்துவிடும். அதற்கு எல்லாம் ஒரு விளையாட்டு. ஒருத்தன் மாட்டிக்கொண்டு வேல்கம்பால் குத்துபட்டோ, கல்லால் அடிபட்டோ செத்துவிட்டான் என்றால் பரிவாரங்களில் ஒன்று கூடுகிறது, அவ்வளவுதானே?

மூக்கன் எப்போதுமே தனியாகத்தான் செல்வான். சைக்கிளைக் கொண்டு சென்று பொட்டலுக்குள் வாகான புதருக்குள் ஒளித்துப் வைப்பான். மேலே உடைமுள் கற்றைகளை தூக்கி போட்டுவிட்டால் இருட்டில் எவரும் பார்க்கமுடியாது. அதன்மேல் வந்து கால்முட்டிக் கொள்ளவும் வாய்ப்பில்லை.

அதைவிட கிணற்றுக்குள் முதல் படியில் வைத்து கயிற்றில் கட்டி முனையை இழுத்து வெளியே புதரில் பிணைத்து வைத்தால் கிணற்றுக்குள் எட்டிப்பார்த்தாலொழிய சைக்கிளைக் கண்டுபிடிக்க முடியாது. இரவில் கிணற்றுக்குள் எட்டிப்பார்ப்பவர்கள் யார்? சைக்கிளில் பாலிதீன் கவரும் சாக்கும் இருக்கும். வேட்டியும் மாற்றுச்சட்டையும் வைத்திருப்பான். குடிநீரும் இருக்கும்.

அப்படியே நழுவி நடந்து ஆட்டுப்பட்டியருகே வருவான். பொதுவாக இரவில் எழுந்து நடப்பதில்லை. பொட்டல்காடுகளில் உடைமுட்புதர்கள் ஆளுயரத்திற்கு எல்லாம் எழுவதில்லை. அவற்றுக்குமேல் தலை எழுந்து நடப்பவனை அரைகிலோமீட்டருக்கு அப்பால் பார்க்க முடியும். கையூன்றிச் சென்றால் எட்டடிக்கு அப்பால்கூட தெரியாது. விலங்குகள் கூட உயரமில்லாமல் வருபவனை கண்டு எச்சரிக்கை ஓசை அளிப்பதில்லை. சிலசமயம் மனிதர்களேகூட அவனை கண்டு என்னமோ என்று இயல்பாக விலகிச் சென்றதுண்டு.

மூக்கன் கால்களுக்கு டயர் செருப்பு அணிந்திருந்தான். கைகளுக்கும் எருமைத் தோலால் உறை தைத்து வைத்திருந்தான். குலுங்கும் பொருட்கள் ஏதுமில்லை. பைசாக்களைக் கூட வைத்துக் கொள்வதில்லை. இடையில் ஒரு தண்ணீர்ப்பை. அது ஃபுட்பாலின் இன்னர்பலூன். அதில் நீர் நிறைத்து கார்க்கால் மூடி வைத்திருப்பான். குடிக்கக் குடிக்கச் சுருங்கும். குடித்தபின் சுருக்கி பைக்குள் போட்டுக்கொள்ள முடியும்.

ஏற்கனவே எல்லாம் கணக்கிட்டிருந்தாலும்கூட ஒவ்வொருமுறையும் மீண்டும் காற்றோட்டத்தை கணக்கிடவேண்டும். மூக்கன் நாக்கை நீட்டி எந்தப் பக்கம் எச்சில் குளிர்கிறது என்று வைத்து காற்றை கண்டுபிடிப்பான். வருகாற்றில்தான் எந்த இடத்தை நோக்கியும் செல்லவேண்டும். அணுகும் வரை வாசனையை அறியமுடியாது.

அதன்பிறகு தன் பையில் இருந்து பொடித்த ஆட்டுப்புழுக்கைகளை எடுத்து நீரூற்றி கரைத்து கைகளிலும் சட்டைக்குமேலும் பூசிக்கொள்வான். ஆனால் அது கிடாவின் புழுக்கையாகவோ குட்டி ஆட்டின் புழுக்கையாகவோ இருக்கக்கூடாது. கிடா என்றால் பட்டிக்கிடா உறுமத் தொடங்கும். குட்டி என்றால் அத்தனை தாய்ஆடுகளும் கூச்சலிடும். சாதாரண ஆடு என்றால் மெல்ல கனைத்துவிட்டு அடங்கிவிடும்.

பட்டியை அடைந்ததும் தொலைவிலேயே எந்த ஆடு என மூக்கன் முடிவு செய்துவிடுவான். பெரும்பாலும் முதிய ஆடு. அதுதான் துள்ளாது. பெரும்பாலும் அதுதான் பட்டிச்சுவருக்கு அருகே நின்று வெளியே மூக்கை நீட்டிக்கொண்டிருக்கும்.

அதிக நேரம் இல்லை. கிடைப்பது ஐந்துநிமிடம், அதைவிடக் குறைவு. பையில் இருந்து கருவாட்டுப் பொடியுடன் கலந்து உருட்டி உலரவைத்த மைதாமாவு உருண்டையை தூக்கி பட்டி நாயின் அருகே வீசுவான். ஏற்கனவே அது அணுகும் மணத்தைப் பெற்று, ஆனால் ஆட்டுவாடை என்பதனால் குழம்பி, மூக்கை நீட்டிக்கொண்டிருக்கும். அதன் செவி மடங்கிக்கொண்டே இருக்கும். அது எழுந்து முகர்ந்து பார்த்து கவ்வி கடிக்கத் தொடங்கும். உடைத்து விழுங்கியதும் சற்று அப்பால் ஒன்றை வீசுவான். நாய் அதை நோக்கி ஓடியதும் சட்டென்று பட்டி நோக்கிப் பாய்வான்.

மூக்கன் அச்செயலை முந்நூறுமுறைக்கு மேல் செய்திருக்கிறான். ஆயிரம் முறையாவது சும்மா செய்து பார்த்து பயிற்சி எடுத்திருக்கிறான். ஆனாலும் அது ஒரு கணநேர பதற்றம்தான். கையில் நைலான் கயிற்றுடன் பாய்ந்துசென்று ஆட்டின் கழுத்தில் அதை போட்டு ஒரே இறுக்காக இறுக்கி காலால் அதன் கழுத்தை மிதித்து மறுபக்கமாக தள்ளி உடைத்து மடிப்பான். ஓசையே இருக்காது. உள்ளே எலும்பு முறியும் ஓசை கேட்கும்.

அது கால்கள் அதிர துள்ளிக் கொண்டிருக்கையிலேயே தூக்கி கழுத்தின்மேல் காவடியாகப் போட்டபடி குனிந்து புதர்களின் வழியாக ஓடுவான். பிரமித்து நின்ற ஆடுகள் அதன்பிறகே கலைந்து கூச்சலிடத் தொடங்கும். பட்டிநாய் திரும்பி வந்து முகர்ந்து பார்த்து குரைக்கத் தொடங்கும். தூங்குபவர்கள் எழுந்து டார்ச் அடித்து பார்ப்பார்கள். அதற்குள் முடிந்தவரை ஓடிவிடவேண்டும்.

எங்கும் நிற்கமுடியாது. ஆனால் சுழன்றுவரும் டார்ச்சின் ஒளி மேலே படுவதற்கு முன் உறைந்துவிடவேண்டும். தொலைவில் சுழலும் டார்ச் ஒளிவட்டத்தால் அசைவுகளைத்தான் கண்டுபிடிக்கமுடியும். அவன் நீலநிற நிஜார் மட்டும்தான் அணிந்திருப்பான். அவன்மேல் ஒளி கடந்துசெல்லும்

சைக்கிளை அணுகி அதன்மேல் ஆட்டை வைத்து கட்டி ஏறி அமர்ந்து மிதித்து முடிந்தவரை விலகிச்செல்வான். முடிந்தவரை என்றால் மிக அருகே ஒரு சாலை வரும் வரை. அருகிலேயே பள்ளமான ஓர் இடத்தில் இறங்கி சைக்கிளில் இருந்து ஆட்டை இறக்கி கால்களையும் தலையையும் குடலையும் வெட்டி வீசி இறைச்சி முண்டத்தை அப்படியே பாலிதீன் கவரில் நுழைத்து அதை சாக்குக்குள் போட்டு கட்டி கைகால்களில் ரத்தத்தை மண்ணாலும் நீராலும் துடைத்த பிறகு சாலையில் நுழைந்து சாதாரணமாக ஓட்டிப்போவான். ஆட்டை தேடி வந்தவர்கள்கூட அவனை கடந்துசென்றிருக்கிறார்கள்

அன்று சங்கிலிக் கருப்பு விளையாடிவிட்டது. அவன் ஆட்டைநோக்கி பாய்ந்த கணம் இன்னொரு நாய் தொலைவிலிருந்து குரைத்தபடி வந்து அவனைக் கவ்விக்கொண்டது. அது பட்டிநாய் அல்ல, தெருநாய். அந்தப்பக்கம் அது நின்றிருந்ததை அவன் கவனிக்கவே இல்லை. இன்னொரு நாய் இருந்தால் அதை பட்டிநாயின் பழக்க வழக்கத்தில் இருந்தே அவன் ஊகித்திருப்பான். அந்தப் பட்டிநாய் தெருநாயை பொருட்டாகவே நினைக்கவில்லை. தெருநாய் தன்னை பட்டிநாயாகவே நினைத்துக்கொண்டிருந்தது.

அவன் நாயை உதறிவிட்டு திரும்புவதற்குள் பட்டிநாயும் ஓடிவந்து பற்றிக்கொண்டது. இரண்டு நாய்களை உதறிவிட்டு அவன் ஓடத் தொடங்குவதற்குள் அங்கிருந்த அனைவரும் எழுந்துவிட்டனர். நாலைந்து டார்ச் ஒலிகள் அவன் மேல் விழுந்தன. அவன் நாய்களை தூக்கி வீசிவிட்டு வெறிகொண்டவன் போல ஓடினான்.

“ஏலே மாணிக்கம், லெஃப்டுலே போலே… லெஃப்டு! லெஃப்டு!”

“ஒத்த ஆளுதான்லே”

“கையிலே என்னலே வச்சிருக்கான்!?”

கூச்சல்கள், காலடியோசைகள். அவன் எதையும் எண்ணாமல் வாயால் மூச்சுவிட்டபடி உடலெங்கும் வியர்வை தீயாக பற்றி எரிய ஓடினான். நாய்கள் குரைத்தபடி ஓடிவரும் ஓசை கேட்டது. நாய்கள் வந்தால் ஓடி தப்பவே முடியாது.

சைக்கிள் இருந்த திசை ஏது என்றே தெரியவில்லை. சைக்கிள் இருந்த இடத்திற்கு நேர் எதிராக வந்துவிட்டது போலிருந்தது. அவன் ஓட்டத்தின் விசை குறைந்தது. ஆனால் நேர் எதிரில் நாய்களின் குரைப்போசை. அங்கே ஓர் ஊர் இருக்கக்கூடும்.

அவன் திரும்பி இன்னொரு திசையில் ஓடினான். தரை முழுக்க முள். அவனுடைய செருப்புகள் அதற்குள் உருவித் தெறித்துவிட்டிருந்தன. கால் முழுக்க கல்லும் முள்ளும் கிழித்து விட்டிருந்தன. உடலெங்கும் உடைமுள் அறைந்து கீறிய எரிச்சல்.

சட்டென்று என்ன ஆயிற்று என்று தெரியவில்லை. அவன் அடிவயிற்றில் ஓர் விதிர்ப்பு, ஒரு குளிர். அவன் கனவில் எங்கோ சென்றுகொண்டிருப்பதாக உணர்ந்தான். அல்லது விழுந்துகொண்டிருப்பதாக. தன் குடிலுக்குள் படுத்திருந்தான். பாண்டியம்மாளும் குழந்தைகளும் அப்பால் தூங்கிக்கொண்டிருந்தனர். வெளியே நாய்களின் குரைப்போசை.

அவன் “ஏளா நாய்லா குரைக்குது?” என்றான்.

“போயிப் பாருங்க… சும்மா” என்றாள் பாண்டியம்மாள்.

அவன் ஒரு சிறிய அறைக்குள் இருந்தான். “ஏளா கதவை ஏன் மூடிவச்சிருக்கே?”

ஆனால் அந்த அறைக்குள் எவருமில்லை. சன்னல்கள் கதவுகள் எல்லாமே மூடியிருந்தன. இருட்டான அறை.

“ஏளா கதவ தெறடி”

அவன் குரலை எவரும் கேட்கவில்லை. இருட்டு அவனைச் சூழ்ந்திருந்தது. அவன் தூக்கத்தில் ஆழ்ந்தான். மணல் சரிந்து சரிந்து விழுந்து மூடுவதுபோல. புதைந்து புதைந்து அமிழ்ந்து போனான்.

அவன் விழித்துக்கொண்டபோது அந்த இடம் சற்று வெளிச்சமாக இருந்தது. ஒருகணம் என்ன ஏது என்று புரியாமல் திகைத்தபின் அவன் எழுந்து நின்றான். தள்ளாடி திரும்ப விழுந்துவிட்டான். அமர்ந்தபடியே அந்த இடத்தை சுற்றிலும் பார்த்தான். மிகமேலே வெளிச்சம் தெரிந்தது. அது கசிந்து உள்ளே பரவியிருந்தது. அது ஒரு கிணறு.

கமலை இறைக்கும் அகன்ற கிணறு அல்ல. குடிநீர்க் கிணறு. மிக ஆழமானது. ஐம்பது அறுபது அடி ஆழம் இருக்கும். பத்தடி விட்டமுள்ள வட்டம். நல்ல உறுதியான சொறிக்கல் பாறையாலானது. சுத்தமாக நீரே இல்லை. ஆனால் பற்பல ஆண்டுகளாக உள்ளே விழுந்த சருகும் செத்தையும் மட்கி ஒரு மெத்தை உருவாகியிருந்தது. அவன் அதன்மேல்தான் விழுந்திருந்தான்.

தாவிச் செல்கையில் நடுக்கிணற்றில் உள்ளே விழுந்தமையால் எங்கும் உரசாமல் நேராக அடியாழத்திற்கு வந்து விட்டிருந்தான். கிணற்றின் மேலே விளிம்பில் ஓரிரு உடைமுட்களின் கிளைகள் தெரிந்தன. மற்றபடி மேலிருந்து கீழே வரை ஒரே செம்மண்நிறமான பாறைதான்

நீரில்லாமல் நெடுங்காலத்திற்கு முன்னரே அந்தக் கிணறு கைவிடப்பட்டிருக்கவேண்டும். உள்ளே ஏராளமான எலும்புகள் கிடந்தன. பெரும்பாலும் நாய்களின் எலும்புகள், மண்டையோடுகள். ஒரு பசுவின் கொம்பும் மண்டையோடும் பாதி புதைந்து கிடந்தது. முதலில் மீன்முட்கள் என்று தோன்றியவை பாம்பின் எலும்புக்கூடுகள்.  அவன் காலால் நீக்கிப் பார்த்தான். பாம்பு எப்படி உள்ளே விழ முடியும்? அது ஊர்ந்து செல்லும் உயிர். எப்படி அந்த ஆழத்தை அது அறியாமல் போயிருக்கும்?. எதையாவது பிடிக்க உட்சுவரில் இறங்கியிருக்கும். பிடிப்பில்லாமல் உள்ளே சரிந்து உதிர்ந்திருக்கும்

நாய்கள் உள்ளே விழுந்திருந்தால் கடுமையாக குரைத்திருக்கும். குரல் மேலே கேட்டிருக்காது. அப்படியானால் மிகமிக உயரத்தில் இருக்கிறது நிலம். ஓசை அங்கே செல்லாது. சுற்றிலும் மனிதர்கள் வராத பொட்டல்காடு இருக்கலாம். வரும் வழியிலேயே வெறும் உருளைப்பாறைகளும் கூழாங்கற்களுமாகவே இருந்ததை அவன் நினைவுகூர்ந்தான். அப்படியென்றால் ஆடு கடிக்கவும் அங்கே ஏதும் இருக்காது.

ஆனால் பசு உள்ளே விழுந்திருக்கிறது. பசுவை அப்படி விட்டுவிட மாட்டார்கள். அது இரவில் கட்டு அவிழ்த்துக்கொண்டு வந்திருக்கலாம். ஆனாலும் காலடித்தடங்களை தேடி வருவார்கள். மிக எளிதாக கிணறுவரை வந்துவிடலாம். எப்படி விட்டார்கள்? காலடிகளும் பதியாத கடும்பொற்றை நிலமா கிணற்றைச் சூழ்திருக்கிறது?

அவன் மேலே பார்த்து “அய்யா! கூ! அய்யா!” என்று அழைத்தான். ஓசை மேலே செல்லாது என்று தெரிந்தும் அவ்வாறு அழைக்காமலிருக்க முடியவில்லை. பலமுறை கூவியபிறகுதான். அது தொண்டையை வரளச்செய்துவிடும் என்று உணர்ந்தான். சீழ்க்கை அடிப்பது தொண்டையை உடைக்காது. ஓசை நெடுந்தொலைவுக்குச் செல்லும். மேலும் இடையர்களின் செவிகளை சீழ்க்கை நன்றாகச் சென்றடையும். அவனுக்கு இடையர்களின் சீழ்க்கைமொழியும் தெரியும்.

அவன் சீழ்க்கை அடித்துக் கொண்டே இருந்தான். இடைவெளிவிட்டு மீண்டும் தொடர்ந்தான். பின்னர் களைத்து அமர்ந்து கொண்டான். பசியும் தாகமும் கூடிக்கூடி வந்தன. அங்கே ஏதாவது உண்பதற்கு கிடைக்குமா என்று பார்த்தான். வெறும் செத்தை, மொட்டைப் பாறையாலான கிணற்றுச்சுவர் வளைவு. நீர் ஒரு துளிகூட இல்லை. ஒரு பச்சிலைகூட இல்லை.

அவன் அப்படியே சாய்ந்து அமர்ந்து சற்றே கண்ணயர்ந்தான். எப்படி அவ்வளவு ஆழ்ந்து உறங்கினான் என்று அவனுக்கே தெரியவில்லை. பின்னிரவில் விழித்துக்கொண்டான். தாகத்தால்தான் விழிப்பு வந்தது என்று அப்போதுதான் புரிந்தது. நாக்கால் உதடுகளை நக்கி கொண்டு எழுந்து நின்று பார்த்தான். ஆழ்ந்த இருட்டு. வெளியே சீவிடுகளின் ஓசை. காற்று ஓடும் ஓசை.

பொட்டலில் இரவுகளில் ஓசை நெடுந்தொலைவுக்கு கேட்கும். அவன் சீழ்க்கை அடிக்க முயன்றான். ஓசை எழவில்லை. நாக்கு மிகவும் வரண்டிருந்தது. ஏதாவது குழல் கிடைத்தால் அதைக்கொண்டு ஓசை எழுப்பமுடியும். இயல்பான மூச்சே அதற்குப் போதும், நெஞ்சுக்காற்று தேவையில்லை. கீழே உற்றுநோக்கி துழாவினான். ஒரு எலும்பு கிடைத்தது. சாண் அளவு பெரியது. ஆட்டின் முழங்காலாக இருக்கலாம்

அவன் அதை சுவரில் தட்டி உள்ளே இருந்த மண்ணை உதிர்த்தான். ஊதி உள்ளிருந்து புழுதியை வெளியேற்றினான். பின்னர் வாயில் வைத்து விசில் ஓசையை எழுப்பினான். கூரிய ஓசை, அவன் செவிகளையே கிழிக்கும் அளவுக்கு ஒலித்தது.

மீண்டும் மீண்டும் ஊதிக்கொண்டிருந்தான். எந்த எதிர்வினையும் எழவில்லை. ஆனால் அப்படிச் சொல்லமுடியாது. சிலர் அந்த ஓசையை கேட்டிருப்பார்கள். காலையில் எழுந்ததும் அது என்ன என்று தேடுவார்கள். சிலர் தேடிவரக்கூடும். காலையில் மீண்டும் அதை ஊதவேண்டும். விடியற்காலையில். பறவைச் சத்தங்கள் எழுவதற்கு முன்பு. பிறகு மக்கள் ஆடுமாடு மேய்க்க கிளம்பி பின்பு. நாளையே எவராவது கவனிக்கவேண்டும். இல்லாவிட்டால் மயங்கிவிடுவான்.

தாகம்தான் கொல்லப்போகிறது. அந்த குழியின் சுவர்களில் கந்தகம் இருக்கிறது. சுண்ணாம்பும் உண்டு. வெயிலில் உள்ளே வெக்கை நிறைந்திருக்கும். உடலில் தண்ணீர் முழுக்க வெளியேறிவிடும். தாகத்தால் நினைவழிந்துவிட்டால் அப்படியே உயிர்பிரியக்கூடும்.

அவன் கால்களை நீட்டிக்கொண்டு சாய்ந்து அமர்ந்து கண்களை மூடினான். ஆழ்ந்து தூங்கிவிட்டான். கனவில் அவன் அருகே ஒரு பெண் அமர்ந்திருந்தாள். கன்னங்கரேலென்ற நிறம். வெண்விழிகளும் பற்களும் மட்டும் பளிச்சிட்டு தெரிந்தன. ஆனால் காக்காய் அலகின் மினுமினுப்பு கொண்ட உடல். வட்டமான சிறிய முகம், சிறிய மூக்கு, மேலுதடு சற்றே எழுந்த குவிந்த வாய். மெலிந்த கழுத்து. சிறிய மார்பகங்கள். இளநீலநிறத்தில் சேலை அணிந்திருந்தாள். காதோரம் சுருள்மயிர்கள் காற்றிலாடின.

அவன் அவளையே பார்த்துக்கொண்டிருந்தான். குழிக்குள் அமர்ந்திருக்கிறேன். இவள் எப்படி உள்ளே வந்தாள்? இவளும் உள்ளே விழுந்துவிட்டாளா? இரவில் வழிதவறி அலைந்தபோது விழுந்திருப்பாள். அல்லது காதலனை தேடிவந்திருக்கலாம். அல்லது தற்கொலைக்காக குதித்திருக்கலாம்.ஆனால் சத்தமேதும் கேட்கவில்லை.

இல்லை, இது கனவு. கனவுக்குள் வந்திருக்கிறாள். இப்போது நான் கண்களை திறப்பேன். இந்த சிறிய கிணற்றுக்குள் அமர்ந்திருப்பேன். இருட்டுக்குள். தன்னந்தனியாக. மட்கிய சருகுகளும் எலும்புகளும் நிறைந்த மெத்தைக்குமேல். அவன் கண்களை திறந்தான். நெஞ்சு திடுக்கிட்டது, அவள் அவன்முன் அப்படியே அமர்ந்து அவனை பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவன் கண்களை மூடினான். அப்போதும் அப்படியேதான் இருந்தாள். கண்களை திறந்தான். அப்போதும் எந்த மாறுதலும் இல்லை. அவன் தன் உடலை அசைத்தான். கையை கிணற்றின் சுவரில் வைத்து அறைந்துகொண்டான். வலித்தது. எழுந்து நின்றான். அவள் உருவம் கலையவில்லை. அவள் கண்கள் அவன்மேலெயே பதிந்திருந்தன.

“யாரு?” என்றான்.

“வேலாள்” என்று அவள் சொன்னாள்.

உண்மையாகவே பேசுகிறாள். கனவு அல்ல, பேசுகிறாள்.

“நீ யாரு? இங்க என்ன பண்ணிட்டிருக்கே?”

“நான் இங்க இருக்கேன்”

“இங்கேயா? இதுக்குள்ளேயா?”

“ஆமா” என்று அவள் சொன்னாள். “நீ உள்ளே விழுறதைப் பாத்தேன். அப்றம் நீதான் எலும்பை எடுத்து ஊதி என்னை கூப்பிட்டே”

அவன் பெருமூச்சுவிட்டான். பிறகு மெல்ல அமர்ந்துகொண்டான். “சரியான தாகம். சாவுற மாதிரி இருக்கு. அதான் நீ தெரியறே….” என்றான்.

“அப்படியா தோணுது?”

“ஆமா, நான் திருடன். பேயை நம்பினா அப்றம் நான் இருட்டிலே வெளிய நடமாடவே முடியாது”.

“நான் பேய் இல்லை, வேலாள்”.

“அப்டி ஒரு பெயரை நான் கேள்விப்பட்டதே இல்லியே”.

“இல்லியா? ஏன்?” என்றாள்.

“இதுக்குள்ள நீ எப்ப வந்தே?” என்று அவன் கேட்டான்.

“நேத்து”.

“நேத்தா?”

“ஆமா…” அவள் அழகாக கண்களை உருட்டி யோசித்து “முகிலனுங்க வந்தாங்களே அப்ப”.

“முகிலனுங்களா? எப்டி இருப்பானுக?”.

“தாடி வச்சிருப்பாங்க. சிவப்பா பெரிய தாடி. பெரீய குதிரைமேலே வருவாங்க. நீளமா வாளும் தொரட்டி மாதிரி ரொம்ப நீளமான ஈட்டியும் வச்சிருப்பாங்க. காலிலே இரும்பு அடிச்ச சப்பாத்து. கையிலே தோலுறை. குதிரையிலேயே ரொம்பதூரம் வருவாங்க. குதிரையிலேயே தூங்குவாங்க. குதிரையோட ரெண்டுபக்கமும் சாப்பாடும் தண்ணீரும் வச்சிருப்பாங்க” என்றாள். “ஆனா அவங்களை நான் பார்த்ததே இல்லை. என் அச்சம்மாதான் சொன்னாள்”.

“அச்சம்மான்னா?”

“அப்பாவோட அம்மா.. கிழவி” அவள் சிரித்து “காதிலே பெரிய பாம்படம் போட்டிருப்பா. கூனிக்கூடி உக்காந்திருக்கிறப்ப அது அவ தோளிலே படிஞ்சிருக்கும்”

“அப்பன்னா ரொம்ப காலம் ஆச்சு…. நீ சொல்றதை வச்சுப் பாத்தா முந்நூறு வருசம் முன்னாடி” என்றான். “இந்தக் கிணறு அம்புட்டு பழசா என்ன?”

“இது வீரசோழியன் சத்திரத்து கிணறு” என்று அவள் சொன்னாள். “இது ஒரு கரட்டுப் பொத்தை. இங்கே இப்படி ஒரு கிணத்தை பழையகால சோழராஜாக்கள் தோண்டியிருக்காங்க. இது பக்கத்திலே ஒரு கல்மண்டபம் இருந்தது. அதுதான் சத்திரம். சோழராஜாக்களோட காலத்திலே வண்டியெல்லாம் இந்த வழியாத்தான் போகும். தூரத்திலேயே தெரியறதுக்காகத்தான் பொத்தைமேலே சத்திரத்தை கட்டியிருக்காங்க”,

“சத்திரம் இங்கே இருந்திச்சா என்ன?”

“இல்லை, மங்கம்மா ராணி பெரிய பாதை போட்டதும் இந்த வழி மறைஞ்சுபோச்சு. மண்டபம் மட்டும் இருந்திச்சு. நான் சின்னவயசிலே பாத்திருக்கேன். இங்கே தண்ணி நல்ல ருசியா இருக்கும். இந்த பொட்டக்கருக்கல் முழுக்க உப்புத்தண்ணிதான். இங்கே மட்டும் தண்ணி நல்ல நெல்லிச்சாறு மாதிரி இனிக்கும்… ரொம்பதூரத்தில் இருந்து பெண்கள்ளாம் இங்க தண்ணீர் பிடிக்க வருவாங்க. நான் சின்னக் குழந்தையா இருக்கிறப்ப வேலைக்காரி இடுப்பிலே உக்காந்துட்டு ஒரு வாட்டி வந்திருக்கேன். அப்ப இந்த கிணத்தைச் சுத்தி காக்கா மொய்ச்சுக்கிட்டது மாதிரி ஒரே சந்தடியா இருக்கும்”.

அவன் அவள் முகத்தை பார்த்தான். அழகான பெண். மிகமிக கனிவானவள். குழந்தை போல. பதினெட்டு வயது இருக்கலாம். அதைவிட குறைவாகவே முகம் காட்டியது. “நீ எதுக்கு உள்ள குதிச்சே?”

“நான் குதிக்கலியே”.

“தவறி விழுந்திட்டியா?”

“இல்ல, ரொம்பநாளா முகிலப்படை வருதுன்னு ஒரே பயமா இருந்திச்சு. ஊரிலே இருந்து ஜனங்கள்லாம் மூட்டைய கட்டிட்டு மலையாளக்கரைப் பக்கமா போய்ட்டிருந்தாங்க. நாங்களும் போயிடவேண்டியதுதான்னு சொல்லிட்டே இருந்தாங்க. ஆனா காடுகரை வீடு எல்லாமே இங்கதான். பெரிய குடும்பம். எட்டு ஊரு எங்களுக்கு கட்டுப்பட்டது. பத்தாயத்து நெல்லு அறையிலே பொன்னு எல்லாம் இருக்கு. எல்லாத்தையும் விட்டுட்டு எப்டி போறது? எல்லாரையும் கூட்டிட்டு போகமுடியுமா? எம்பிடு வண்டி இருக்கு. வழியிலே கள்ளன் வந்தா என்ன காவல்? என்னென்னமோ பேசிட்டே இருந்தாங்க. நான்லாம் அதை கவனிக்காம சின்னப்புள்ளைங்க கூட வெளையாடிட்டு இருந்தேன்”.

“அப்பதான் நடுராத்திரியிலே என்னை எழுப்பினாங்க. அம்மா எங்கிட்ட குளிச்சுட்டு வான்னு சொன்னா. ஊரைவிட்டுத்தான் கெளம்பப் போறோம்னு நினைச்சு நான் உற்சாகமா போயி குளிச்சேன். நல்ல புடவை கட்டி நகை போட்டுக்கச் சொன்னாங்க. எங்க சித்தப்பா வந்து பாப்பா, முகிலனுங்க திருணவேலி வரை வந்தாச்சு, இங்க வந்திருவாங்க, உன்னைய ஒரு எடத்திலே ஒளிச்சு வைக்குதோம், வான்னு சொன்னாரு. எங்க அம்மா அம்மாச்சி அச்சம்மா எல்லாம் அழுதாங்க… கும்பிட்டுக்கோ தாயீன்னு சித்தப்பா சொன்னாரு. நான் எல்லாரையும் கும்பிட்டுகிட்டேன். கையிலே ஒரு சின்ன அகல்வெளக்கை குடுத்தாங்க. அதிலே சுடர் அணையாம பொத்திக் கொண்டுவான்னு சொன்னாங்க. நான் கையாலே பொத்திகிட்டு மெதுவா காலெடுத்து நடந்து வந்தேன்”.

“எங்க அப்பா சித்தப்பா தாய்மாமா மூணுபேருமா என்னைய கூட்டிட்டு இங்க வந்தாங்க. இந்த எடத்துக்கு வந்ததும் அப்பா கெணத்துச் சுவருமேலே ஏறி தீபத்தை உள்ள விட்டுருடீன்னு சொன்னாரு. நான் உள்ள போடுறதுக்குள்ள அப்பா என்னை பின்னாலே பிடிச்சு உந்தி தள்ளிட்டாரு. நான் தலைகீழா உள்ள விழுந்தேன். எனக்கு முன்னாலே அந்த சுடர் அப்டியே கீழே போயிட்டிருந்தது”

அவள் வாய்பொத்தி சிரித்து “நான் அந்த தீபத்தை பிடிக்க கைநீட்டினேன். பிடிக்கவே முடியல்லை… அது அப்டியே ஆழமா போய்ட்டே இருந்தது. நான் இங்க நின்னுட்டேன்”.

“அதிலே இருந்து உள்ளதான் இருக்கிறியா?”

“ஆமா, ஏன்?”

“வெளியே போகமுடியாது, இல்ல?”

“போகலாமே”.

“அப்ப ஏன் போகலை?”

“ஏன் போகணும்?”

“வெளியே போய் பாக்கவேண்டாமா? அங்க என்னென்ன இருக்குன்னு”.

“ஆமா” என்றாள். “ஆனா அங்க என்ன இருந்தாலும் எனக்கு ஒண்ணுமே தெரியாதே…”.

“இப்ப நீ சொன்னியே, அதெல்லாம் எப்டி மாறியிருக்குன்னு பாக்கலாமே”.

“நான் எங்க வீட்டை மட்டும்தான் பாத்திருக்கேன்… அப்றம் வீட்டுத் தோட்டம்”.

“பிறவு?”

“வீடு மட்டும்தான்… மூணுவயசுக்குமேலே வீட்டைவிட்டு வெளியே வந்ததே இல்லை…”.

“ஓ” என்றான். பின்னர் சிரித்து “அப்ப  அதுவரை இருந்தது ஒரு கிணத்துக்குள்ள… அதிலே இருந்து இந்த கிணறு” என்றான்.

அவள் சிரித்து “ஆமா, எனக்கு ஒண்ணுமே வித்தியாசமா தெரியலை”

அவன் “நான் யாரு தெரியுமா?” என்றான்.

“இல்ல. யாரு?”

“பாத்தா மனுஷன் மாதிரி இருப்பேன்… ஆனால் நான் நாயாக்கும்”.

“அய்யோ!” என்றாள் “நாயா?”

“ஆமா, சாதாரண நாய் இல்லை. நாய்களிலே ஒரு கந்தர்வன். பைரவன்ன்னு பேரு”.

“பொய்யி” என்றாள்

“சத்தியமா… என்னோட மூர்த்திதான் காசி ஸ்தல்த்தோட அதிபதி. அகோர காலபைரவன்… இந்தாலே சீவைகுண்டம், சங்கரன்கோயில் எல்லா இடத்திலயும் நமக்கு சிலைகள் இருக்கு”

அவள் வியப்புடன் என்னை பார்த்து “தெரியவே இல்லை” என்றாள். கைநீட்டி என்னை தொட்டு “மனுஷ உடம்புதான்”.

“எனக்குன்னு உடம்பே கெடையாது. சூச்சும உடம்புதான். ஆனா அந்த சூச்சும உடம்போட சுபாவம் நாய்ங்கிறதனாலே நான் நாய் உடம்பிலே புகுந்துகிடுவேன். அதிலேதான் சந்தோசமா இருப்பேன். நல்லா வாலை ஆட்டிக்கிட்டு மோந்துகிட்டு டான்ஸ் ஆடிக்கிட்டு துரத்திப் பிடிச்சுக்கிட்டு…”

அவன் புன்னகைத்து “கார்த்திகை மாசம்னா கொண்டாட்டம்தான்… ராப்பகலா பொம்புளை நாய்களை துரத்தித் துரத்தி பிடிச்சு பொணையுததுதான். ஒருநாளுக்கு ஏளு தடவைகூட பொணைஞ்சிருக்கேன்”.

அவள் முகம் சிவந்து உதட்டை கடித்துக் கொண்டு வேறுபக்கம் பார்த்தாள். சிரிப்பை அடக்க முயன்று சட்டென்று வெடித்து சிரித்து அப்படியே மடிந்து முகத்தை கையால் மூடி மடிமேல் கவிழ்ந்து விட்டாள்.

“நாய்களிலே எது ராஜா நாயோ அதுக்குத்தான் எல்லா பெட்டைநாயும். நாம நாய்களிலே கந்தர்வன்ல? எந்த நாய் பக்கத்திலே வரமுடியும்?”

அவள் உடல் அதிர்ந்துகொண்டே இருந்தது. பின்னர் நிமிர்ந்தபோது கண்கள் நீர் கோத்திருந்தன. கருமைக்குள் அனல் ஓடியதுபோல சிவப்பு கலந்திருந்தது. பெருமூச்சு விட்டபோது சிறிய முலைக்குமிழ்கள் விம்மின. கைகளை கோத்துக்கொண்டாள். விரல்கள் பின்னிக்கொண்டே இருந்தன

“நான் உண்மையான நாய்க்குள்ளேதான் பூந்துகிட முடியும்… இருக்கிறதிலேயே நல்ல ஊக்கமான நாய்க்குள்ளே பூந்திருவேன். அந்த உடம்புக்குள்ள இருக்கிற நாயை உந்தி வெளியே தள்ளீருவேன். அது எஙகாவது செத்த நாய் கிடந்தா உள்ள நுழைஞ்சுகிடும். நான் இருக்கிற நாய் உடம்பிலே சீக்கு வந்தாலோ அடிபட்டாலோ அப்டியே இன்னொரு நாய்லே நுழைஞ்சிருவேன்” என்றான். “நாய்தான் பூமியிலேயே சந்தோசமான உசிரு தெரியுமா?”

“அப்டியா?” என்றாள்.

“பின்ன? என் கதையைச் சொல்லுதேனே. என்பேரு நாசிக ரிசி. சதுரகிரி மலைமேலே தபஸு செஞ்சிட்டிருந்தேன். ஒத்தைக்காலிலே வானத்தை நோக்கி கும்பிட்டுட்டு நிப்பேன். காலையிலே சூரியன் உதிக்கிறப்ப என் முகம் சூரியனை பாத்து வளைஞ்சு மண்ணிலே தொட்டுட்டு இருக்கும். சூரியன் மேலே போகப்போக கூடவே என் உடம்பு வளைஞ்சு தலையும் சூரியனை நேரா பாத்துட்டு இருக்கும். சாயங்காலம் நேரா மறுபக்கம் திரும்பி வளைஞ்சிருக்கும்”.

“ராத்திரியிலே?” என்று அவள் சிறு துள்ளலுடன் கேட்டாள்.

“ராத்திரியிலே அப்டியே மூஞ்சியை கால்மேலே வைச்சு சுருண்டு இறுகி ஒரு உருண்டையா ஆயிடுவேன். அப்டியே ஆயிரம் வருஷம் தவம் பண்ணினேன்”.

“ஆயிரம் வருசமா?”

“பின்ன? ரிசிகளுக்கு சாவும் மூப்பும் இல்லை பாத்துக்க”

“செரி”.

“அப்ப ஒரு இடி. ஒரு மின்னல். வானத்திலே ஒரு வெள்ளைமேகம் அப்டியே யானையா மாறி வந்தது”.

“வெள்ளையானையா?”

“ஆமா, ஐராவதம்! அதுமேலே இருக்கப்பட்டது யாரு?”

“யாரு?”

“இந்திரன்!” என்றான் “வஜ்ரகிரீடம். கையிலே வஜ்ராயுதம்… மின்னலா அடிச்சது அதோட வெளிச்சம்தான்.. கண்ணு இருக்கே கண்ணு, அது அப்டியே ரெண்டு வெளக்குச்சுடர் மாதிரி”.

“பிறகு?”

“இடிச்சத்தம். அது குரலா மாறிச்சு”

“என்ன சொல்லிச்சு?”

“இந்திரனோட சத்தம் மேகங்களிலே எதிரொலிச்சது  ‘முனிவரே, என்னை நாடி தவம்செய்பவர் குறைவு. என்னால் வீடுபேறை அளிக்கமுடியாது. ஏழுலகத்தையும் வெல்லும் வரம் அளிக்கமுடியாது. சாகாவரம் அளிக்கவும் முடியாது’ன்னு இந்திரன் சொன்னான்”.

“அய்யோ, அப்றம் என்ன கேக்கிறது?”

“நான் சொன்னேன், ‘இந்திரனே நான் தவம் செய்தது வீடுபேறுக்காகவோ உலகவெற்றிக்காகவோ சாகாமைக்காகவோ இல்லை. நான் தவம்செய்தது காதல், அன்பு, காமம் மூணையும் தெரிஞ்சுகிட்டு முழுசா அனுபவிக்கிறதுக்காக’ அப்டீன்னுட்டு…”

“யம்மா!”என்று அவள் கன்னத்தில் கைவைத்தாள்  “அதையா கேட்டே?”

“ஆமா, இந்திரனுக்கே ஆச்சரியம்.  ‘அது மட்டும்போருமா?’ அப்டீன்னு மூணுதடவை கேட்டான். எனக்கானா கடுப்பு.  ‘ஓய் எத்தனை வாட்டி சொல்றது? எனக்கு வீடுபேறும் ஏளுலகும் சாகாநிலையும் எல்லாம் மயிரு மாதிரி… நான் கேட்டதை குடுப்பேருண்ணா குடும், இல்லேன்னா நடையை கட்டும். சும்மா கெடந்து சலம்பாம’ன்னு சொல்லிட்டேன். சிரிச்சிட்டான். ‘செரி உனக்கு அருளுதேன்… சந்தோசமா இரு’ன்னு சொன்னான்”.

“வரம் கிடைச்சுதா?”

“ஆமா.” என்றான் “இந்திரன் என்னைய நாயுருவான பைரவனா ஆக்கிட்டாரு… அதுக்குப்பிறகு நான் ஆயிரம் வருசமா இப்டி நாயா இருந்திட்டிருக்கேன்.

“நாயாவா?” என்று மூக்கைச் சுளித்தாள்.

“ஏன்? யோசிச்சுப்பாரு. இந்த பூமியிலே காதல், அன்பு, காமம் மூணையும் முளுசாட்டு அனுபவிக்குதது யாரு?”

“யாரு?” என்று ரகசியமாகக் கேட்டாள்.

“நாய்!”

“அப்டியா?”

“பின்ன?” என்றான் “நாய்க்க மூக்க தொட்டுப் பாத்திருக்கியா? குளுந்து கனிஞ்ச நாகப்பளம் மாதிரி இருக்கும். அதாக்கும் காதல். நாய் மாதிரி இந்த உலகத்தை முத்தம் குடுத்திட்டே இருக்கிற வேற எந்த உசிரு இருக்கு?”

“ஆமா”.

“ஒரு நாய் ஒருநாளைக்கு எப்டியும் பத்தாயிரம் இருபதாயிரம் முத்தம் குடுத்திரும். அது பாக்கிற எல்லாத்தையும் முத்தம் குடுத்திட்டே இருக்கு. ஒரு விஷயம் என்னன்னு பாக்கணும்னா முத்தம். அது பிடிக்கலைன்னா இன்னொரு முத்தம். பிடிச்சிருந்தா முத்தத்தோட முத்தம்… நாயோட வாழ்க்கையே முத்தம் குடுக்கிறதுதான்… காதலை நாய் மாதிரி தெரிஞ்ச எந்த தெய்வம் இருக்கு? நாய் காதலிலே அப்டியே திளைச்சிட்டிருக்குல்ல?”

“உண்மைதான்… நாயை பாக்கணும்போல இருக்கு”.

“அன்பை பத்திச் சொல்றேன். இப்ப அன்புன்னா என்ன?”

“என்ன?”

“ஏட்டி கோட்டிக்காரி, அன்புன்னா அன்பை காட்டுறதுதான். காட்டுற அன்பு பத்து மடங்கா திரும்பி வருது. அதை மறுபடியும் காட்டினா மறுபடியும் பத்துமடங்கு… அன்புன்னா ஒரு நொரை மாதிரி. கலக்கக் கலக்க பெருகும். கலக்கிட்டே இருக்குதது யாரு?”

“நாயா?”

“பின்ன? நீ நாய்க்க வாலை பாத்திருக்கியா? ஆடிக்கிட்டே இருக்கும். மனசிலே அன்பை வச்சுகிட்டு அதை காட்டத்தெரியாம இருக்கானுக மனுஷனுங்க. நாய் அப்டி இல்லை. மனசிலே அன்பிருந்தா வால் டான்ஸ் ஆட ஆரம்பிச்சிரும்… அன்பு அப்டியே துள்ளிகிட்டே இருக்கும்… அத்தனை அன்பை வேற எங்க அப்டி கண்ணாலே பாத்துக்கிட முடியும்?”

அவள் பெருமூச்சுவிட்டாள். முகம் அழுவதுபோல ஆகிவிட்டது

“அப்றம் காமம்… நாய்க்குள்ள காமம் வேற எந்த உசிருக்கு இருக்கு? மனுசனெல்லாம் எங்க காமத்தை அறிஞ்சிருக்கான்? பாதிபேருக்கு பயம், மிச்சபேருக்கு வெக்கம். ரெண்டும் இல்லாதவனுக்கு சுயநலம். தோசைக்கு மாவூத்துதது மாதிரி ஊத்திட்டு போறான்… எங்கிட்டு நெறைய? அவளுக்கு நெறைஞ்சாத்தானே அவனுக்கு நெறையும்? நாயை பாரு,நாய் கொளுவிக்கிட்டுதுன்னா முச்சந்தியானாலும் மெய்மறந்து அப்டியே நின்னுட்டிருக்கும். அப்டியே ஓடும் சாடும். நிறைஞ்ச பிறவுதான் விடும்…”

அவள் மீண்டும் நாணி முகம் சிவந்து தலைகுனிந்து அமர்ந்திருந்தாள்.

அவன் “அதனாலத்தான் இந்திரன் என்னை நாயா ஆக்கினான். எனக்கே சலிக்கிறப்ப நான் திரும்பவும் முனிவரா ஆகி சொர்க்கத்துக்குப் போலாம்னு சொன்னான். இப்ப ஆயிரம் வருசமாச்சு, சலிக்கலை. காதலிலே திளைச்சு அப்டியே அன்பிலே துள்ளி காமத்திலே மூழ்கிருவேன். மறுபடியும் காதல்… எப்ப நெறைஞ்சு எப்ப நான் திரும்பி நாசிகனா மாறுறது?”

“அப்ப ஏன் இந்த உருவம்?”

“இது ஒரு சின்ன விசயத்துக்காக எடுத்தது… நான் காட்டுவழியா போய்ட்டிருந்தப்ப ஒரு நாயை ஒருத்தன் கட்டிப்போட்டிருந்ததைப் பாத்தேன்… அது என்னைப்பாத்து பைரவன் சாமீ காப்பாத்தூன்னு கூச்சல் போட்டுது. சரி அவுத்து விட்டுடலாம்னு பக்கத்திலே போனேன். பாத்தா களவாணிப்பய பூட்டு போட்டிருக்கான். அதை நாயா இருந்து திறக்கமுடியாது. அந்தாலே ஒருத்தன் நின்னுட்டிருந்தான். அவன் உடலுக்குள்ளே பூந்து பூட்டை திறந்தேன்…”

“ஓ” என்றாள்.

“ஆனா அவன் திருடன்… நாயை அவன் அவுத்துவிட்டதும் அது அவனைப்பாத்து குரைச்சுது”.

“ஏன்?”

“அது நாய்லா? அதுக்க குணத்தை காட்டுமே”.

“பிறகு?”

“அத்தனைபேரும் எந்திரிச்சிட்டாங்க. திருடன் திருடன்னு ஒரே கூச்சல். கத்தி கம்பு கல்லுன்னு எடுத்துட்டு துரத்த ஆரம்பிச்சிட்டாங்க. நான் பைரவசாமி. திரும்ப அந்த நாயிலே ஏறிட்டாப்போரும். ஆனா அந்த திருடன் உடலை சிதைச்சிருவாங்க… பாவம் நம்மாலே அவன் அழியக்கூடாது. அதனாலே ஓடினேன். கண்ணுமண்ணு தெரியாம ஓடுறப்ப கால்தவறி இந்த கிணத்திலே விழுந்துட்டேன்”.

“நாய் உடல் அங்கே கெடக்கா?”

“ஆமா, அங்க எங்கியாம் நிக்கும்”

அவள் அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள். அவன் பார்த்தபோது அவளுடைய பெரிய இமைகள் தழைந்தன.

“என்ன?” என்றான்.

“ஒண்ணுமில்லை”.

“சொல்லு”.

“ஒண்ணுமில்லை”.

“ஏய், சொல்லு”.

“ஒண்ணுமில்லைன்னு சொன்னேனே?” என்று அவள் சிடுசிடுத்தாள்.

“நான் சொல்றேனே, நீ நாயைப் பத்தி நினைச்சிட்டிருந்தே”.

“இல்லை”.

“நாய்க்காமம் பத்தி”.

“சீ!” அவள் அவனை ஓர் எலும்பை எடுத்து அடித்தாள். அவன் சிரித்தான்.

அவள் “நான் நினைச்சது வேற”.

“என்ன?”

“என்னைய யாருமே முத்தமிட்டது இல்லை”.

“யாருமேன்னா?”

“சின்னப்பிள்ளையிலே முத்தம் குடுத்திருப்பாங்க… அதுக்குப்பிறகு”.

“நாய்கிட்ட போ… ஆயிரம் முத்தம் குடுக்கும் உனக்கு”.

அவள் அவனை மின்னும் கண்களால் கூர்ந்து பார்த்தாள். அவள் மூச்சிரைப்பது கழுத்தின் அசைவில் தெரிந்தது. மூச்சொலியால் “நீ குடு” என்றாள்..

“இல்ல, இந்த உடம்பு என்னுது இல்ல… இதனாலே நான் என்னோட முத்தத்தை குடுக்கமுடியாது”.

“ஏன்?”

“அதான் பைரவ முறை… நான் நாயா மாறித்தான் முத்தம் குடுக்க முடியும்…”.

“அதுக்கு என்ன செய்யணும்?”

“நான் மேலே போகணும்… என்னோட நாய் உடம்பிலே பொருந்திக்கிடணும்” என்றான் “காதல் அன்பு காமம் எல்லாமே நாயா இருந்துதான் நான் அடையமுடியும்”

“நான் என்ன பண்ணணும்?”

“என்னை மேலே கொண்டுபோ”.

“நானா?”

“ஆமா”.

“ஆனா எனக்கு மேலே ஒண்ணுமே தெரியாதே”.

“நீ என்னைய கொண்டுபோ, நான் காட்டுறேன்”.

அவள் எழுந்து சுவரில் தொற்றி ஏறிக்கொண்டு கைநீட்டினாள். “வா” என்றாள்.

அவன் அவள் கையை பிடித்துக்கொண்டான். அவள் கை மிகமென்மையாக இருந்தது. ஆனால் அவன் உடல் எடையற்று புகைபோல் மாறிவிட்டிருந்தது.

மேலே வந்து அவன் சுற்றிலும் பார்த்தான். பாதி நிலவின் ஒளி. தொலைதூரம் வரை அலையலையாக பொட்டல் நிலம் சூழ்ந்திருந்தது. மிகத்தொலைவில் தேசிய நெடுஞ்சாலையில் லாரிகள் செல்லும் வெளிச்சம் செம்புள்ளிகளாக தொடர்ச்சியாக தெரிந்தது.

“எங்கே அந்த நாய்?” என்று அவள் கேட்டாள்.

“அங்கே, வா” என்று அவன் நடந்தான்.

அப்படியே ஓடிவிடவேண்டும். ஆனால் இவள் பேயுருக்கொண்டவள். இவளால் என்னை தொடர்ந்து வரமுடியும். பேய்கள் கோயில்களுக்குள் நுழையாது. ஏதாவது சங்கிலிக்கருப்பன், சுடலைமாடன், முத்தாலம்மன் ஆலயம் கண்ணுக்குப் பட்டால் ஓடிச்சென்று உள்ளே புகுந்துகொள்ளலாம். விடியும் வரை அங்கே ஒளிந்திருந்தால் போதும். வெயில் வேறு ஒரு உலகை கொண்டு வந்துவிடும். அங்கே அவன் திருடன் அல்ல. பசிவெறித்திருக்கும் கண்கள் கொண்ட இரண்டு குழந்தைகளின் தந்தை. காய்ந்து கரி போலான  உடல்கொண்ட பாண்டியம்மாள் என்ற கூலிக்காரப் பெண்ணின் கணவன்.

அவன் பார்த்துக்கொண்டே சென்றான். அவள் “எங்க போறோம்?” என்றாள்.

“நாய் ஆகணும்ல?”

அவர்கள் மேலும் நடந்தனர். “எவ்ளவு தூரம்?” என்றாள்.

“பக்கம்தான், வா”.

தொலைவில் முத்தாலம்மன் கோயில் தெரிந்தது. ஒரே ஓட்டமாக ஓடிவிடலாமா.

அவள் “ம்ம்”என்றாள்.

பனையில் காற்று உறுமுவது போன்ற அந்த ஓசையை கேட்டு அவன் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தான். அவள் கண்கள் மாறிவிட்டிருந்தன. முகம் அகன்று வாயில் கொடும்பற்கள் தோன்றின. கூந்தல் காய்ந்த பனையின் ஒலைப்படப்பு போல விரிந்து எழுந்தது. அவள் விரிந்து உயர்ந்து எழுந்தபடியே சென்றாள்.

அவன் சட்டென்று நிலத்தில் விழுந்து நாய் போல கைகளை ஊன்றி அவள் கால்களை முத்தமிடச் சென்றான். அவன் உடல் உடனே நாயாக ஆகிவிட்டது. வால் சுழல்வதை அவனால் உணரமுடிந்தது.

அவள் கூசி காலை விலக்கி விலக்கி சிரித்துச் துள்ளினாள். அவன் நிமிர்ந்து அவள் முகத்தைப் பார்த்தான். சிறுமியின் முகம். சிரிப்பு நிறைந்த கண்கள்.

அவன் முனகியபடி உடல்குழைத்தபடி அவள் கால்களை முத்தமுட முயன்று மூக்கை நீட்டி நீட்டி முன்னால் சென்றான். அவள் சிரித்து துள்ளி கூச்சலிட்டு பின்னால் சென்றபின் ஓடத்தொடங்கினாள்

அவன் வாலாட்டி குரைத்து துள்ளியபடி அவளைத் தொடர்ந்து சென்றான். அவள் அந்தக் கிணற்றுக்குள் சென்று மறைந்தாள். அவன் கிணற்றின் விளிம்பில் நின்று வெறிகொண்டு குரைத்து, தரையைப் பிராண்டி, வாய் தூக்கி ஊளையிட்டான்.

***

முந்தைய கட்டுரைநஞ்சு, காக்காய்ப்பொன் – கடிதங்கள்
அடுத்த கட்டுரைபித்திசைவு