நேற்று சட்டென்று ஒரு வார்த்தை ஞாபகத்திற்கு வந்தது, மொட்டை மாடியில் நடந்துகொண்டிருக்கையில். harmonious madness. படைப்பூக்கம் என்பதற்கு இதைவிடச் சிறந்த வரையறை இல்லை. கட்டற்றநிலைதான், பைத்தியம்தான். ஆனால் வடிவம் என்ற ஓர் ஒத்திசைவு, அல்லது ஒழுங்குக்கு கனவையும் மனதையும் மொழியையும் பழக்கிவைத்திருப்பதனால் அது சீராக வெளிப்படுகிறது.
வரலாறு நெடுகிலும் அதன் சிறுவட்டத்திற்கு வெளியே உள்ளவர்களால் அது புரிந்துகொள்ளப்பட்டதில்லை. அவர்களுக்கு படைப்பு என்பது அவர்கள் செய்வதைப்போல ஒரு செய்திறன் அல்லது சூழ்ச்சி மட்டும்தான். அதை அவர்கள் வியக்கிறார்கள். அல்லது அஞ்சுகிறார்கள். வசைபாடுகிறார்கள், ஒடுக்கமுயல்கிறார்கள், பழிப்பு காட்டுகிறார்கள். அவர்களின் உலகியல் அளவுகோல்கள் எதுவும் அதற்கு பொருந்துவதில்லை.
உலகியல் சார்ந்த நியாயங்கள், கருத்துக்கள், சித்திரங்களுக்கு அப்பால் படைப்பியக்கம் என்னும் ‘இசைவுள்ளபித்தின்’ ஓயா அலைபாய்தலும் பாய்ச்சல்களும் நிகழ்கின்றன. அது மனிதகுலத்திற்கு உண்மையில் தேவையா என்பது எனக்கே தெளிவில்லை. ஆனால் அது நிகழ்ந்துகொண்டிருக்கிறது, பல ஆயிரம் ஆண்டுகளாக.,
நினைத்துக்கொள்கிறேன், என் நினைவறிந்த நாளில் இருந்தே ஒழுங்கமைவுக்குள் நின்றதில்லை. பள்ளிக்கு மிகமிகக் குறைவாகவே சென்றிருக்கிறேன். பெரும்பாலும் மாடுமேய்ப்பவர்களுடன் காட்டில் அலைதல்தான். கல்லூரியில் பெரும்பாலும் நூலகம், சினிமா, அலைதல். கல்லூரி இரண்டாம் ஆண்டிலிருந்து வெறிகொண்ட அரசியல் செயல்பாடு. இந்துப்பேரரசை அமைத்தபிறகுதான் அடுத்த வேலை என்னும் ஆவேசம்.
கல்லூரியின் எல்லா ஆண்டிலும் மருத்துவச் சான்றிதழ் அளித்து, மேலும் பலநூறு ரூபாய் அபராதம் செலுத்தித்தான் தேர்வு எழுதியிருக்கிறேன். மூன்று ஆண்டுகளும் எனக்கான நுழைவுச்சீட்டு பல்கலையில் இருந்து தனியாகவே வந்துசேரும். இத்தனைக்கும் அன்றெல்லாம் மாதம் இரண்டுமூன்றுநாள் போராட்டங்கள் இருக்கும். ஆசிரியர்களே வந்து நுழைந்ததும் “என்னடே ஸ்டிரைக்கு இல்லியா இண்ணைக்கு?” என்றுதான் ஆர்வமாக கேட்பார்கள். இருந்தும் நான் வகுப்புக்குச் சென்ற நாட்கள் குறைவு.
கடைசி ஆண்டில் என்ன செய்தாலும் தேர்வு எழுத முடியாத நிலை- மொத்தமே நாற்பது நாள்கூட வருகைப்பதிவு இல்லை.நண்பனின் தற்கொலை, அலைக்கழிப்புகள். ஆகவே படிப்பை முடிக்கமுடியவில்லை. புறப்பாடுகள். அலைச்சல்கள். மீண்டும் கொஞ்சம் அரசியல்.காசர்கோட்டில் வேலை. அங்கும் அதே கிறுக்குநிலை. பெற்றோரின் மரணம். அங்கேதான் வெறிகொண்டு எழுத ஆரம்பித்தது. தன்னந்தனியாக கும்பளா சாலையில் ஒருகடலோர வீட்டில் தங்கியிருந்தபோது. அங்கே வந்த கோணங்கி சொன்னார். “தேவையான கிறுக்கு இருக்கு உங்கிட்ட”
இத்தனை ஆண்டுகளில் தொடர்ச்சியாக ஒரு நாளொழுங்குக்குள் இருந்த நீண்டகாலம் என்றால் என் டைரிகளின் படி பதினாறு நாட்கள்தான். எங்காவது கிளம்பிச் சென்றுகொண்டே இருந்தேன். நாளொழுங்கு நாட்களுக்குள்ளேயே வாசிப்பு எழுத்து இரண்டும் எனக்கு போதவில்லை.தொழிற்சங்க அரசியலின் வெறியும் தேவைப்பட்டது- தொண்ணூறுகளில் அது இன்றைய கட்சி அரசியலைவிட உச்சகட்ட விசைகொண்டது.கிட்டத்தட்ட போர்தான்.
இன்றுவரை அப்படித்தான் இருந்திருக்கிறேன். என் விசை என்பது madness ஆல் உருவாக்கப்படுவது. அதை harmonious ஆக மாற்றத்தான் இலக்கியம் பழகியிருக்கிறேன். இதன் வடிவம்- மொழி ஆகிய இரண்டுமே தேர்ந்த சிற்பியின் கையில் சிற்பக்கலை திகழ்வதுபோலத்தான். தொழில்நுட்பம் இல்லாத கலை என்பது இல்லை. தொழில்நுட்பத்தின் உச்சியில் இருந்து கலை தொடங்குகிறது. கலை செல்லும் தொலைவுக்கு தொழில்நுட்பம் கூடவே வரவேண்டும்– எந்த முயற்சியும் இல்லாமல்
ஆனால் அது மீளமீள ஒன்றையே செய்வது அல்ல. தாண்டுவது, தன்னை மறுப்பது. வடிவமும் வடிவப்பிழையும் மொழியும் மொழிப்பிழையும் என தன்னை தானே மேலும் செலுத்திக்கொள்வது.. கட்டி, உடனே சிதைத்து, மீண்டும் கட்டி தொடரும் ஓர் ஆடல். அங்கே அனைத்தும் உருவாக்கியதுமே கடந்துசெல்லப்படும். தூக்கிச் சுமக்க கடந்தகாலமே இல்லை.
ஒரு மாதமாகிறது சட்டென்று ஏதோ மூடி திறந்துகொண்டதுபோல இந்தக் கதைகள் எழுதத் தொடங்கி. அப்படியே எழுந்து எங்கேனும் கண்காணா நிலத்திற்குள் சென்றுவிட உந்தும் கிறுக்கை இப்படி மொழிக்குள் திருப்பிவிட்டுக்கொண்டேன். நினைவுகள், கனவுகள், கட்டற்ற அகப்பாய்ச்சல்கள் என்று என் தனித்த பித்துவெளியில்உலவினேன்.
என்னுள் இருந்து மனிதர்கள் எழுந்து எழுந்து வந்துகொண்டிருந்தார்கள். கைத்துடைக்கும் காகிதக்குட்டை போல, ஒன்றை எடுத்தால் அடுத்தது வந்து நின்றிருக்கும். எதையும் எண்ண வேண்டியதில்லை, எழுதாமல் இருக்கமுடியாது அவ்வளவுதான். என்னுள் இருந்து எழுந்தவர்களுடன் வாழ்ந்தேன்.
ஒருநாளுக்கு ஒன்பது மணிநேரம். சிலநாட்கள் பன்னிரண்டு மணிநேரம். சிலகதைகளை எழுத வாசிப்பே பலமணிநேரம் தேவைப்படும். முழுவெறியுடன், முழுக்குவிதலுடன் இருந்தேன். இத்தகைய கிறுக்கு இன்றி இவ்வாறு இயற்றமுடியாது. எழுத எண்ணும் எவருக்கும் நான் சொல்லவிழைவது ஒன்றே,Create your own madness,harness it.
குறையாத விசையுடன் சென்றது என் பாய்ச்சல். அதை ஒன்றுமே செய்யவேண்டியதில்லை, அகம் அதன் கட்டின்மையை அடைந்தது. மொழியும் வடிவமும் உடன் சென்றன. கனவென ஒன்றரை மாதம். அதை நான் அறிவேன், ஆனால் அதன்மேல் எந்தக் கட்டுப்பாடும் இல்லை. ஒன்று இன்னொன்றை நிரப்பி நிறையும் ஒரு வெளி அது. எனக்கு முன்னரே இலக்கிய மேதைகள் அதைப்பற்றி நிறைய எழுதிவிட்டார்கள்.
இரண்டுநாட்களுக்கு முன்பு சட்டென்று நின்றுவிட்டது. இரண்டு நாள் முழுக்க எதுவுமே எழுதவில்லை. அப்போதுதான் தெரிந்தது sanity என்பது எனக்கு எத்தனை சலிப்பூட்டுவது, எத்தனை தாளமுடியாதது என்று. ஒருநாளில் இருநூற்றுநாற்பது மணிநேரம் என்று ஆகிவிட்டது போல. ஒவ்வொன்றும் அசைவில்லாமல் ஆகிவிட்டது போல. மண்டையை எங்காவது கொண்டுசென்று முட்டவேண்டும் என்ற வெறி எழுந்தது
மெய்யாகவே எனக்கு இங்குள்ள உலகியல் எதிலும் பெரிய ஈடுபாடு இருந்ததில்லை. அரசியல்,சமூகவியல் எதிலும். இப்போது அல்ல, அவற்றில் வெறிகொண்டு செயல்பட்டுக்கொண்டிருந்தபோதும் கூட. அதெல்லாம் என் விசையை தணிக்க நானே இழுத்துப் போட்டுக்கொள்வதுதான். சொல்லப்போனால் ஒருநாளுக்கு நாலைந்துபேர் என்னை அடிவயிற்றை எரித்து ஆவேசமாக வசைபாடினால்தான் எனக்கு ஒருமாதிரி பொழுது நிறைந்து சமநிலையே கைகூடுகிறது. ஆகவே அவற்றையெல்லாம் அப்படியே உதறி வெளியேறும்போது எந்த இழப்பையும் உணரவில்லை.
சலிப்பூட்டுவது உலகியல்தான். பதற்றம் ஊட்டுவது அது. ஒரு சாதாரண படிவத்தை நிரப்புவது கைநடுங்க செய்வது. பேங்க் சலான்கூட பேங்க் ஊழியரே நிரப்பித்தரவேண்டும் என விரும்புபவன் நான். இந்த ஊரடங்கு நாட்களில் இணையத்தில் உரையாடுவதற்கான சின்னச்சின்ன தொழில்நுட்ப வேலைகள், அதில் உருவான சிறு இடர்கள் என் மூளையை அமிலம் பட்டதுபோல எரிய வைத்தன
மூளையை நிரப்பியாகவேண்டியிருந்தது அந்த இரண்டு நாளும். ஆகவே இணையத்துக்குச் சென்று சமகாலப் பூசல்கள் சிலவற்றை வாசித்தேன். இப்போது ஒவ்வொன்றும் சலிப்பு மட்டுமே அளிக்கின்றது. அரசியல்கள், வியூகங்கள், சூழ்ச்சிகள் ,விவாதங்கள். என்னதான் கிறுக்குக்கு தீனி என்றாலும் இனி அவற்றில்போய் மோதமுடியும் என்று தோன்றவில்லை. எனில் இத்தனைபெரிய insane space ஐவைத்துக்கொண்டு நான் என்னதான் செய்வது? இரண்டுநாளில் ஒர் ஆயுள்தண்டனையை அனுபவித்தேன்
மீண்டும் வந்து மண்டையால் முட்டினேன். மீண்டும் திறந்தது, முன்பு போல் அல்ல. புரவி செல்கிறது, ஆனால் வெறிகொண்டு அல்ல. அது நின்றுவிடும் என்று தெரிகிறது. அதற்குள் வேறேதன் மீதாவது ஏறிக்கொள்ளவேண்டும். என்ன செய்யலாம்? எங்காவது கிளம்பிச் செல்லலாம்.ஆட்கொள்ளும் பேய் ஒன்றை உபாசனை செய்யலாம்.ஏதாவது அலைமேல் ஏறிக்கொள்ளலாம்.
ஷெல்லியின் வரிகளை மேலே நோக்கிச் சொல்லிக்கொள்கிறேன். இதே கிறுக்குடன் முன்னால் சென்றவர்களை நோக்கி. இந்த சலிப்பூட்டும் sane உலகில் நின்றபடி
Teach me half the gladness
That thy brain must know
Such harmonious madness
From my lips would flow
The world should listen then as I am listening now.
***