நற்றுணை- கடிதங்கள்

SV-AS10 ImageData

நற்றுணை [சிறுகதை]

இனிய ஜெ.

நேற்று இரவுதான் நற்றுணையை வாசித்தேன். ஒருபடியான படபடப்பு, நிலைகொள்ளாத தவிப்பு ஏதையெதையோ செய்து பார்க்கிறேன் தணியவில்லை. தூங்குவதற்கான சாத்தியமே இல்லை. சாஸ்திர விரோதமென்றாலும் பாவமில்லையென குளித்தேன் அப்பொழுது மணி இரவு ஒன்று இருபது. கொஞ்சமாக தெளிந்தபின் மீண்டும் ஒருமுறை கதையை படித்தேன். எத்தனை தெளிவான வார்த்தைகள் இதுதான்,  இது இப்படிதான் என்கிற ஆணித்தரமான நகர்வு. வரிவரியாக சிந்தித்து களைத்தேபோணேன். பெண்ணுக்கான நிமிர்வு மற்றொரு பெண்ணால் மட்டுமே, அவளோடு நிற்கும் அவளால் மட்டுமே கூடுவது. அவளே அது.

அம்மிணி தங்கச்சியின் நிமிர்வு கேசினி. ஒருவேளை கேசினியின் வரவுக்குப்பின் வலியகுளத்தில் பிணங்கள் மிதப்பது நின்றுவிட்டிருக்கலாம். ஆண்களில் அனைத்துமே கோரமுகங்கள் அதளாலேயே கேசினியின் கோரமுகத்தை பார்க்கையில் தங்கள் சுயமுக கோரத்தை எதிரேப் பார்த்தே அனைவரும் அடங்கிவிடுகின்றனர்.

சாதனைக்காகவோ அல்லது சாதிக்கவேண்டும் என்றோ பெண்கள் தங்களை முன்னெடுப்பதில்லை. அவர்களின் அடிப்படை உளஆசைதான் பெருக்கெடுத்து கேசினியாக உடன்வருகிறது. கேசினிகளை துணைக்கூட்டாமல் இன்றும் பெண்கள் ஜெயிக்க முடிவதில்லை. பெண்ணின் கோபத்தை தாங்க இங்கு எவருக்கும் திராணியில்லை ஆனாலும் அவள் கருணைகொண்டே அடிமையாக கிடக்கிறாள்

அழகிய மனநிறைவு. ஒருவேளை பதினைந்து வயதில் எனக்கு கேசினி கிடைத்திருந்தால் நல்லா இருந்திருக்கும் நானும் ஜட்ஜாக வந்திருப்பேன். ஆனால் ஒன்று மட்டும் இன்று வரை சத்தியமான உண்மை ஜெ அதுதான் உங்களோடேயே நிற்கும் உங்கள் கேசினி. அவளை வணங்குகிறேன்.

அன்புடன்

ஜெயந்தி

***

அன்புள்ள ஜெயந்தி,

நலம்தானே?

எங்கோ இளமையில், மனம் தர்க்கத்தைவிட கற்பனையில் திளைத்த ஒரு வயதில், இந்தக்கதையின் கதைநாயகியை நேரில் பார்த்திருக்கிறேன். பலபுனைவுகளால் உருமாற்றப்பட்ட அதன் மூலவடிவை. அப்போது அவர்களுடன் ஓர் யக்ஷி இருந்ததாகவே எண்ணிக்கொண்டேன்

உள்ளிருந்து எழுவது, அல்லது வரலாற்றின் ஆழத்திலிருந்து எழுவது

ஜெ

***

அன்புள்ள ஆசானுக்கு,

தினமும் சிறுகதைகள் கிடைப்பது தனிதிருப்பின் நாட்களை குதூகல ப்படுத்துகிறது.மிக்க நன்றி.

இதில் நற்றுணை சிறுகதை ஒரு டிரான்ஸ் மனநிலைக்கு கொண்டுசென்றது.இரவில் அறையில் கேசினி வந்துவிட்டாளா என்று தேடிக் கொண்டேன்.இனிமையானவள். உறுதியானவள். ஒவ்வொரு பெண்ணும் ஏங்கும் சிநேகம்.சக பெண்ணிடம் ஏன் தாயிடம் கூட கிடைக்காத அரவணைப்பு.அம்மிணி அம்மச்சி எவ்வளவு கொடுத்து வைத்தவள்.   இன்று நாங்கள் பறப்பதற்கு,மூத்தம்மைகள் எவ்வவு ஆசிர்வதித்து இருப்பார்கள்.

கேசினி,அம்மச்சியின் பிளவாளுமையாக இருப்பாளோ?(வாசிப்பு சரிதானா?)

பி.கு : அம்மிணி அம்மச்சியை பற்றி கூகிள்-லில் தேடி சலித்துவிட்டேன்.Cute devil இன் முகத்தை பார்க்கவேண்டும்.Mary Poonen ஒரு பதின்பருவ பையனை போல் உள்ளார்.Anna Chandy இன் சுருள் முடி ஜட்ஜ்களின் விக்கை போலவே உள்ளது .

அன்புடன்,

அர்ச்சனா

***

அன்புள்ள அர்ச்சனா

நன்றி

இரண்டு விஷயங்கள். ஒன்று, கதையை வாசிக்கும்போது நம்முடைய சமகால பொது அறிவின் விளைவாக அதைச் சுருக்கிக் கொள்ளும் பழக்கத்தை நாம் அடைகிறோம். ஒரு குறிப்பிட்ட மனநிலையை பிளவாளுமை என்றோ ஈடிப்பஸ் காம்ப்ளெக்ஸ் என்றோ அடையாளப்படுத்துவது. ஒரு குறிப்பிட்ட சமூகச் சூழலை பின்காலனிய மனநிலை என்றோ நிலப்பிரபுத்துவ வழக்கம் என்றோ மதிப்பிடுவது. அறிவுச்செயல்பாட்டில் இதற்கு ஓர் இடம் உண்டு. அங்கே ‘பொதுமைப்படுத்துதல்—சுருக்குதல்- தீர்வுகாணுதல்’ ஆகியவையே வழிமுறைகள்.

இலக்கியத்தில் அப்படி அல்ல. இங்கே செயல்படவேண்டியது பொதுஅறிவு சார்ந்த பொதுமைப்படுத்துதலும் சுருக்குதலும் அல்ல. அவை கதையை சுருங்கவைத்துவிடும். இங்கே கதையில் சொல்லப்பட்டிருக்கும் அனைத்தையும் மேலும் பலமடங்காக விரித்துக்கொள்ளும் கற்பனைதான் வாசகனுக்குத் தேவை.

அதை பிளவாளுமை என்று சுருக்கினால் நமக்கு என்ன கிடைக்கும்? ஒரு எளிய உளவியல் தீர்வு. அதைத்தான் உளவியல் செய்கிறதே, இலக்கியம் எதற்கு? ஆனால் இலக்கியம் தேவையாகிறது. விரிப்பதற்கு. அதற்காகவே அதில் அத்தனை உண்மையான செய்திகள் அளிக்கப்பட்டுள்ளன. அவர்கள் அனைவரையும் பொதுவாக இயக்கிய ஒரு  ‘யக்ஷி’ ஒரு குறியீடு. அது என்ன? அதன் வேர் என்ன? அதன் வரலாற்று உறைவிடம் என்ன? அப்படியே கற்பனையை விரித்துச்செல்லவே இலக்கியவாசகி முயலவேண்டும்

அக்கதையில் மையக்கதாபாத்திரம் கற்பனையானது – அப்படித்தான் இருக்கமுடியும் அல்லவா?

ஜெ

***

நற்றுணை -கடிதங்கள்

முந்தைய கட்டுரை“ஆனையில்லா!” , முதல் ஆறு- கடிதங்கள்
அடுத்த கட்டுரைஐந்து நெருப்பு,கரவு -கடிதங்கள்