பகுதி நான்கு : அலைமீள்கை – 36
பிரதிபானு நடுங்கும் கைகளை தலைக்குமேல் கூப்பி உடைந்த குரலில் கூவினான். தந்தையே, தெய்வங்களுக்கு முன்னர் மட்டுமே மனிதர்கள் இத்தனை ஆழத்தில் தங்களை திறந்து வைக்க முடியும். தங்களுக்குத் தாங்களே பார்த்துக்கொள்ளாத இடங்கள், ஆழ்கனவுகளில் கூட தொட்டறியாத தருணங்கள் அனைத்தும் இங்கே என் நாவால் உரைக்கப்பட்டன. என்னை நீங்கள் காத்தருள வேண்டும் என்பதற்காகவே இவற்றை சொன்னேன்.
தந்தையே, இது எனக்காக அல்ல. என் மைந்தருக்காக, என் துணைவிக்காக. எளியவன் என்று என்னை முன்வைக்கிறேன். தனித்தவன், பொருளற்றவன். அதை அங்கே துவாரகையின் புறநகர் பகுதியில் இடிந்துசரிந்து மணல்மூடிக் கிடந்த பகுதியில் நின்று சூழ நோக்கியபோது நன்குணர்ந்தேன். என்னைச் சுற்றி பலர் கதறிக்கொண்டிருந்தனர். பலர் பித்துப்பிடித்து சுற்றிக்கொண்டிருந்தனர். ஆனால் நான் முற்றிலும் தனித்து அங்கே நின்றேன். அப்போதுதான் நீண்ட நாட்களுக்குப் பின் நான் உங்களை அவ்வண்ணம் நினைத்துக்கொண்டேன். நெஞ்சில் அறைந்து கண்ணீருடன் “தந்தையே!” என்று வீறிட்டேன். “தந்தையே! தந்தையே!” என்று அலறி அழுதேன்.
அங்கிருந்து திரும்பி ஓடினேன். எங்காவது தப்ப விழைபவனாக. மறுபக்கம் கரை இருக்கிறது என்பதை உள்ளுணர்வால் அறிந்து அத்திசை நோக்கி சென்றேன். மக்கள் பெருந்திரளாகக் கிளம்பி எங்கு செல்வதென்றறியாமல் நகரின் வெளிஎல்லைகளில் நின்று தடுமாறுவதை கண்டேன். நகருக்குள்ளிருந்து கிளம்பியவர்களுக்கு அந்நகரிலிருந்து வெளியே சென்றுவிடவேண்டும் என்ற எண்ணமே இருந்தது. ஆகவே அவர்கள் தங்கள் உள்ளத்திற்குள் அமைந்த வரைபடம் ஒன்றில் முன்னரே முடிவு செய்து வைத்திருந்த வழியொன்றை நோக்கி சென்றார்கள்.
நகரிலிருந்த ஒவ்வொருவருக்கும் அந்நகர் பற்றி ஒரு வரைபடம் இருந்தது. அது அவர்களே நம்ப முடியாத அளவுக்கு தெளிவு கொண்டிருந்தது. கூடவே மெய்யிலிருந்து சற்றே வேறுபட்டதாகவும் இருந்தது. அந்நகரிலிருந்து வெளிவருவதற்கான வழி ஒவ்வொருவருக்கும் தெரிந்திருந்தது. ஏனென்றால் ஏதோ ஆழ்கனவுகளில் அந்த வழிகளில் ஒருமுறையேனும் அந்நகரிலிருந்து தப்பிச் சென்றிருந்தார்கள். ஆனால் அந்த வழியை சென்றடைவதற்கான முயற்சிகளில் பிற வழிகளைத் தேடி ஒருவருடன் ஒருவர் அவர்கள் முட்டிக்கொண்டனர். ஒருவரோடொருவர் பூசலிட்டனர். தங்கள் வழியை பிறர் தடுப்பதாக எண்ணினர். தங்கள் உறவினரையும் உற்றாரையும் இணைத்துக்கொண்டு செல்ல முயன்றனர். அவர்கள் தங்கள் உள்ளத்தில் பிற வழிகளை தேர்ந்ததனால் பிற வழிக்கு இழுத்தனர்.
ஆகவே ஒருவருக்கொருவர் பூசலிட்டனர். நெஞ்சில் அறைந்து கதறி அழுதனர். பெருகி வந்து நகரின் எல்லையை அடைந்தவர்கள் அப்போதுதான் அந்நகரம் கோட்டை என்று ஒன்று இல்லாதது என்பதை உளமுணர்ந்து கண்டுகொண்டனர். அதை சூழ்ந்திருந்த பெரும்பாலை நிலமே அதன் கோட்டை. கோட்டையைக் கடந்து செல்வது போலல்ல பாலையைக் கடந்து செல்வது. அதற்கு உணவும் நீரும் கருதியிருக்கவேண்டும். உடைமைகளை கொண்டுசெல்ல விலங்குகள் வேண்டும். பெரும்பாலையில் செல்வதற்கு வழிகளைப் பற்றிய அறிதல் வேண்டும்.
அவர்களில் பெரும்பகுதியினர் அந்நகரிலிருந்து ஒருமுறைகூட வெளியே செல்லாதவர்கள். சிறு தெய்வங்களை வணங்குவதற்கோ களியாடுவதற்கோ நகரைச் சூழ்ந்துள்ள திறந்தவெளிக்கு அவர்கள் வந்திருப்பார்கள். மிக அரிதாக சிலர் வேட்டையின் பொருட்டு பாலை நிலத்திற்குள் சென்றிருப்பார்கள். ஆனால் கடந்து செல்ல வேண்டிய ஒன்றென தங்கள் முன்னால் கண்ட பாலைவெளி திகைக்கவைத்தது. கொலை நகைப்புடன் எழுந்த தெய்வம்போல் அவர்கள் முன்னால் பேருருக்கொண்டு நின்றிருந்தது. அதுநாள் வரை அவர்கள் அந்நகர் என வகுத்துக்கொண்டிருந்தது அப்பாலையின் எல்லையைக் கொண்டே என்று அவர்கள் உணர்ந்தனர். மூன்று திசைகளிலும் அந்நகரை கவ்விப் பற்றி அதற்கு வடிவம் அமைத்தது அந்த வறுநிலமே.
அவர்கள் தயங்கி நிற்க அவர்களுக்குப் பின்னால் தொடர்ந்து வந்துகொண்டிருந்தவர்கள் வந்து மோத முகப்புச் செறிவு உலைந்தது. நீர்விளிம்பு என அலைகொண்டது. பொருக்கோடிய சேற்றுப்பரப்பு பிளந்து மென்சேறு வெளிவருவதுபோல தயங்கியவர்களை உடைத்துக்கொண்டு பின்னிருந்தவர்கள் எழுந்தனர். அவர்கள் தயங்க அவர்கள் மேலும் பின்னிருந்து மேலும் மக்கள் வந்து அவர்களை தள்ளினர். முன்னால் வந்தவர்கள் அவர்களை அறியாமலேயே தள்ளப்பட்டு பாலைக்குள் சென்றுவிட்டனர். பாலையை உணர்ந்ததும் அவர்கள் கூச்சலிட்டனர்.
நான் செய்ததென்ன என்பதன் முழுப் பேருருவை அப்போதுதான் பார்த்தேன். செய்த ஒவ்வொன்றையும் மீள்வு செய்யவேண்டும் என்றும், ஒவ்வொரு அடிவைப்பும் பின்னகர்ந்து ஒன்றுமறியாத எளியோனாக வெறும் பகல் கனவுகளுடன் ஃபானுவின் அரசில் அமைந்திருந்த அந்த பிரதிபானுவாக மாறிவிடவேண்டுமென்றும் அத்தருணத்தில் தோன்றியது. அன்று அறிந்தேன், ஒவ்வொன்றையும் தன்னலம் கருதியே நான் செய்திருக்கிறேன். எவ்வகையிலும் பொதுநலனோ தெய்வங்களுக்கு உகந்ததோ என் எண்ணத்தில் எழுந்ததில்லை. ஆணவம் நான் நான் என எண்ணச் செய்தது. ஆணவ நிறைவை மகிழ்ச்சி என்றும் வெற்றி என்றும் எண்ணிக்கொண்டிருந்தேன்.
அப்போது அந்நகர் நொறுங்கி சிதைந்து கிடப்பது போலவே என் ஆணவம் கிடந்தது. நான் உங்கள் மைந்தன் அல்ல, அரசகுடியினன் அல்ல, மானுடன்கூட அல்ல. கீழ்மகன், எளியோன் பிறிதொன்றும் அல்ல. புழு, கிருமி, அல்லது அணுவுயிரி. அப்போது எஞ்சியிருந்தது ஒன்றே. அது எளிய விலங்குணர்வு. என் மைந்தர், அவர்கள் எங்கேனும் எவ்வகையிலேனும் உயிருடன் எஞ்சவேண்டும், அவர்களில் ஒரு துளியேனும் அதற்கு அடுத்த தலைமுறைக்கு செல்லவேண்டும். ஓர் உயிரின் முதல் விழைவு. மிக எளியது. ஆனால் இப்புடவியின் அடிப்படை நெறிகளில் ஒன்று. பேராற்றல் கொண்டது.
அத்தருணத்தில் பல்லாயிரம் பேரை கொன்று வீழ்த்தவும், எண்ணிச் சென்றடையாத பெரும்பழியொன்றை இயற்றவும்கூட நான் சித்தமாக இருந்தேன். “என் மைந்தர்! என் மைந்தர்!” என்று ஓசையில்லாமல் வீறிட்டபடி புரவி ஒன்றை கண்டடைந்தேன். அதில் ஊர்ந்து கொந்தளித்துச் சென்று கொண்டிருந்த மக்கள்திரளை நோக்கி “நில்லுங்கள்! நில்லுங்கள்! அணிவகுத்துச் செல்லுங்கள்! ஆணைகளை செவிகூருங்கள்!” என்று கூவி கட்டுப்படுத்த முயன்றுகொண்டிருந்த காவல்வீரனொருவனை எதிர்பாராத தருணத்தில் பாய்ந்து தாக்கி வீழ்த்தி அப்புரவியிலேறி அதை கூட்டத்தினூடாக ஓட்டி மானுடரை பாய்ந்து கடக்கச்செய்து, திரள்களைப் பிளந்து, இடிபாடுகளை ஒழிந்து செல்லவைத்து அகன்றேன்.
புரவி தையல் ஊசி துணியில் செல்வதுபோல அப்பெருங்கொந்தளிப்பினூடாக ஊடுருவிச் சென்றது. கூட்டத்தினூடாக தாவிச் செல்வதற்கு பயின்ற குதிரை அது. நான் துவாரகையின் வெளி எல்லையை அடைந்து பாலைநிலத்தினூடாக சென்றேன். பாலைநிலத்தினூடாக ஓர் உளவிசையில் முன்னால் சென்றவர்கள் தயங்கித் தயங்கி வெவ்வேறு இடங்களில் நின்றிருந்தனர். சிலர் சென்ற திசையிலிருந்து திரும்பி வந்துகொண்டிருந்தனர். “விலகுங்கள்! விலகுங்கள்!” என்று கூவியபடியே அவர்களை கடந்தேன்.
துவாரகைக்குள் நுழையும் தோரணவாயிலை அடைந்தபோது ஒரு திடுக்கிடலை அடைந்தேன். அதைச் சூழ்ந்து மனிதர்கள் நிறைந்திருந்தார்கள். அவர்களுக்கு நடுவே அவர்களுக்கு எவ்வகையிலும் தொடர்பற்றதுபோல அது ஓங்கி எழுந்து நின்றிருந்தது. அதன் பெரும் சிற்பமுகங்கள் கீழ்நோக்கி நகைத்து வாய் திறந்திருந்தன. துவாரகையில் அனைத்துக் கட்டடங்களும் இடிந்து சரிந்து கிடக்க தோரணவாயில் மட்டும் தொடர்பே அற்றதுபோல, பிறிதொரு நகரத்தின் நுழைவாயில்போல் நின்றது.
நான் அதை கடந்துசென்று திரும்பிப் பார்த்தேன். சிறிதாகி பின்னகர்ந்துகொண்டே இருந்தது. மீண்டும் சென்று திரும்பிப் பார்த்தபோது அத்தோரணவாயில் தனித்து எழுந்து நின்றது. அதற்கப்பால் துவாரகை அவ்வண்ணமே எந்த மாற்றமும் இல்லாமலிருக்கும் என்றும், சென்றால் அனைத்தையும் பார்க்கமுடியும் என்றும் உளமயக்கொன்றை உருவாக்கியது அது. ஆனால் ஒரு கணத்தில் அது உடைந்தபோது உருவான ஏக்கம் நெஞ்சை பேரெடையென உணரச்செய்தது. நான் என் உடலைக் குறுக்கி குனிந்து அமர்ந்து விம்மி அழுதேன்.
நான் பாலைநிலத்தினூடாக புரவியில் விரைந்து என் மைந்தர் வாழ்ந்த அரண்மனையை நோக்கி சென்றேன். அங்கு ஏற்கெனவே வீரர்கள் கூடி கூச்சலிட்டுக்கொண்டிருந்தனர். புரவியை நிறுத்திவிட்டு அவர்களை நோக்கி ஓடிச்சென்று “காவலர்தலைவன் எங்கே?” என்றேன். முதிய காவலர்தலைவன் சூர்ணன் அரண்மனைக்குள் பிறருடன் பூசலிட்டுக்கொண்டிருந்தான். அவன் இறங்கி ஓடிவந்து “இளவரசே, துவாரகையில் நிலநடுக்கம் வந்துவிட்டது என்றார்கள். கடல் நகருக்குள் புகுந்துவிட்டதாம். இங்கும் அதிர்வுகளை உணரமுடிகிறது. இங்கிருந்து கிளம்புவதா வேண்டாமா, எவருடைய ஆணையை ஏற்பது என்று தெரியாமல் நாங்கள் இருக்கிறோம்” என்றான்.
“வா என்னுடன்” என அவனை அப்பால் தனியாக அழைத்துச்சென்றேன். “என் மைந்தர் எங்கே? அரசி எங்கே?” என்றேன். “தங்கள் ஆணைப்படி படைவீரன் ஒருவன் அவர்களை அழைத்துச்சென்றான்” என்றான். “ஆம், அவனை அனுப்பியது நானே. அதை உறுதிப்படுத்திக்கொள்ளவே வந்தேன்” என்றேன். “எப்போது அவர்கள் சென்றனர்?” என்றேன். “இரண்டு நாழிகை, அல்ல மூன்று நாழிகைக்கு முன்பு அவன் இங்கு வந்தான். இங்கிருந்து தேரில் அவர்களை படித்துறை நோக்கி கொண்டுசென்றான். கடலினூடாக தேவபாலபுரத்திற்கோ அன்றி சிந்துவுக்குள் நுழைந்து பருஷ்ணிக்கோ செல்வதாக சொன்னான்” என்றான் சூர்ணன்.
“ஆம், நன்று” என்று திரும்பி ஒரு கணத்துக்குப் பின் இடையிலிருந்த வாளை உருவி அவன் கழுத்தை வெட்டி துண்டாக்கினேன். அவனிடமிருந்து ஒரு சொல்லும் கசியக்கூடாது என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டேன். எவருக்காகவோ விளக்கம் அளிப்பதுபோல. குருதிபடிந்த வாளை அருகிலிருந்த திரைச்சீலையில் துடைத்தபின் நேராக வெளிவந்து என் புரவியில் ஏறி மீண்டும் துவாரகை நோக்கி விரைந்தேன். துவாரகையின் இறுதிப் படித்துறை அங்கிருந்து மிக அருகே இருந்தது. அதிலிருந்து சிந்துவுக்குச் செல்லும் சிறிய நீரோட்டம் ஒன்றும் உண்டு. அது அப்பேரலைக்குப் பின் அங்கிருக்கிறதா என்று தெரியவில்லை.
படித்துறை நோக்கி செல்லும் கல்வேய்ந்த பாதை ஆளோய்ந்து கிடந்தது. ஒவ்வொருவரும் நகரிலிருந்து வெளியே வடகிழக்காகச் செல்லவே முயன்றனர். அவர்கள் கிளம்பிவந்த தொல்நிலம் அங்கிருப்பதாக அவர்களின் அகம் பதிவு செய்திருந்தது. அவர்களின் மூதாதையரின் நாடு. புல்வெளிகள், இளமழை, ஒளிரும் சூரியன். ஆநிரைகள் பெருகி நிறையும் திசைகளும் தெய்வங்கள் வாழும் வானும் கொண்டது. அவர்களில் சிலரேனும் படித்துறைகளுக்குச் சென்றிருந்தால் அங்கே இருக்கும் படகினூடாக மிக எளிதாக தப்பிச் சென்றிருக்க முடியும். ஆனால் இயல்பிலேயே அவர்கள் கடலை அஞ்சினார்கள். கோள்கொண்டு எழுந்து நிலத்தை அறைந்த அப்பெருந்திரையைக் கண்ட பிறகு எவரும் கடல் நோக்கி சென்றிருக்க வாய்ப்பில்லை. எரியும் திசையிலிருந்து விலகிச்செல்லும் எறும்புகள்போல் துவாரகையின் மக்கள் அனைவருமே மறு எல்லை நோக்கி சென்றுகொண்டிருந்தனர்.
கடலை நெருங்க நெருங்க எவருமே கண்ணுக்குப்படவில்லை. கைவிடப்பட்ட முதியவர்களும், மிதிபட்டு உயிரிழந்த உடல்களும், சிதைந்து கிடந்த கட்டடங்களும், திசையழிந்து ஊளையிட்டு சுற்றிக்கொண்டிருந்த நாய்களும் என அப்பகுதியே போர் முடிந்த களம்போல் தெரிந்தது. என் புரவிக் குளம்படி கேட்டு விழுந்து கிடந்தவர்களில் சிலர் கைநீட்டி “தண்ணீர்! தண்ணீர்!” என்றோ “உதவுங்கள்! உதவுங்கள்!” என்றோ கூவினர். அவர்களின் உடல்களின் மீதாக புரவியைச் செலுத்தி மேலே சென்றேன்.
படித்துறையை அணுகி அங்கே புரவியை நிறுத்திவிட்டு துறைமேடையின் மேல் ஏறி படகுகளை நோக்கி சென்றேன். சிற்றலைகள் மட்டுமே கடலில் எஞ்சியிருந்தன. ஒரு சிறு குளம்போல் தெரிந்தது கடல். அத்தனை அலையழிந்து அமைதி கொண்ட கடலை நான் பார்த்ததே கிடையாது. கரையிலிருந்து மிக விலகி சேற்றுப்பரப்பின் மேல் படகு அமர்ந்திருந்தது. படகை காலால் உந்தி உந்தி கடலின் விளிம்பு நோக்கி கொண்டு செல்லவேண்டியிருந்தது. சேற்றில் அது வழுக்கி பாறைகளில் முட்டி ஏறி மடிந்து விழுந்து எழுந்து கடலுக்குள் சென்ற பின்னர் அதில் ஏறி அமர்ந்து துடுப்பை அவிழ்த்து உந்தி கடலில் அலைகளுக்கு மேல் ஏறினேன்.
படகின் மேல் சுற்றிவைக்கப்பட்டிருந்த கயிற்றை அறுத்து பாயை எழச்செய்தேன். கடற்காற்று இல்லாதபோதுகூட பாயை புடைக்கவைக்கும் அளவுக்கு உள்காற்று இருந்தது. மிக மெல்ல செல்வதுபோல் தோன்றினாலும்கூட கரையோர மரங்கள் விரைவதிலிருந்து படகு விசைகொண்டிருப்பதை உணர்ந்தேன். கண்ணிகளை இழுத்து பாயை முழுதாகத் திருப்பி முடிந்தவரை அதை காற்றின் திசையில் செல்லவைத்தேன். பின்னர் ஓய்ந்து படகில் அமர்ந்து கரையோரமாக பார்த்துக்கொண்டிருந்தேன்.
துவாரகையின் மக்கள் கரையோரமாகவே பெருகிச் சென்றுகொண்டிருந்தனர். அவர்கள் அவ்வண்ணம் சிந்துவின் கரைவரை சென்று அடையக்கூடும் என்று தோன்றியது. கடலில் சென்ற எனது மைந்தரும் துணைவியும் அப்போது எங்கிருப்பார்கள் என்று என்னால் உய்த்துணரக் கூடவில்லை. தேவபாலபுரம் சென்று அங்கிருந்து பருஷ்ணி வரைக்கும் செல்வது அவர்களுக்கு நான் இட்ட ஆணை. அவ்வழியில் சென்றால் எங்கேனும் அவர்களை கண்டடைய முடியும் என்று நினைத்தேன். எனக்கு வேறுவழி ஏதும் இருக்கவில்லை.
நீரின்றி உண்ண ஒரு பொருளுமின்றி அப்படகிலேயே அமர்ந்திருந்தேன். முழுப் பகலும் கடந்து அந்தியில் தேவபாலபுரத்தை சென்றடைந்தேன். அந்நகர் முற்றாக அழிந்திருந்தது. பேரலை அறைந்து நகரின் அனைத்து பண்ட நிலைகளையும் உடைத்துச் சரித்திருந்தது. மாளிகைகள் இடிந்தும் சரிந்தும் நின்றன. நகரில் எவரும் தென்படவில்லை. கடலோரம் ஓய்ந்தே கிடந்தது. நான் அதன் படித்துறையில் படகை நிறுத்திவிட்டு இறங்கி அப்பால் சென்றேன்.
திகைப்பூட்டும் காட்சிகளாக என் முன் விரிந்தது நகர். கடலில் நின்றிருந்த மரக்கலங்கள் அனைத்தும் பேரலையால் தூக்கி நகர் மேல் வீசப்பட்டிருந்தன. கட்டடங்களுக்கு மேலே மரக்கலங்கள் ஏறி கற்சுவர்களை நொறுக்கி அமர்ந்திருப்பதை கண்டேன். நகரெங்கும் உடைந்த மரச்சிம்புகள் குவிந்து கிடந்தன. கடலில் மனிதர்கள் பல ஆண்டுகளாக வீசிய அனைத்துக் குப்பைகளும் பெருகி வந்து நகர் மேல் படிந்திருந்தன. கடல்பாசிகள், மீன்கள், சிப்பிகள், முட்புதர்போன்ற நீருயிரிகள்.
நொறுக்கப்பட்ட ஒரு நகர். வானிலிருந்து ஒரு பெரும் கதாயுதம் வந்து ஒரேயடியாக தட்டி தள்ளப்பட்டது. விழாத ஒரு மாளிகை கூட அங்கில்லை. தேவபாலபுரத்தில் பெரிய மாளிகைகள் இல்லை. மூன்று அல்லது நான்கு அடுக்குகள்தான். பெரும்பாலானவை மரத்தாலானவை. ஆகவே அனைத்துமே விறகுக்குவியல்போல ஆங்காங்கே தென்பட்டன. செல்லும் வழியெங்கும் மனித உடல்கள் உப்பி புடைத்திருப்பதை கண்டேன். பெரும்பாலானோரின் வாய்களிலும் கண்களிலும் மணல் அழுத்திச் செறித்து நிரப்பப்பட்டிருந்தது. அவர்களின் வயிறுகள் உப்பி புடைத்திருந்தன. உள்ளே மணல் நிறைந்திருக்கும் என்று தோன்றியது.
பேரலை அறைந்த உடல்கள் பெரும்பாலும் அனைத்துமே ஆடையற்றவை. அலை எப்படி ஆடைகளை கழற்ற முடியும் என்று எனக்கு தெரியவில்லை. நெஞ்சுடைந்த உடற்கூடுகள். கைகளும் கால்களும் விந்தையான முறையில் ஒடிந்து மடிந்தவை. செத்துக்கிடந்த பிணங்கள் அனைத்துமே சிறுகுழந்தைகளின் உடல்கள் போன்றே தோன்றின. சாவின் கணத்தில் அனைவருமே குழந்தைகளாக மாறியிருப்பார்கள் போலும்.
தேவபாலபுரத்தில் நான் பதைத்தவனாக சுற்றி அலைந்தேன். மைந்தர் அங்கு வந்திருந்தால் இந்தப் பேரலையில் சிக்கிக்கொண்டிருப்பார்கள். இவ்வலைக்கு முன்பே அவர்கள் சிந்துவில் நுழைந்திருந்தால் உயிர் தப்பியிருப்பார்கள். அங்கு எங்கேனும் அவர்கள் இருக்கிறார்களா? எங்கு அவர்களை தேடுவது என்று தெரியவில்லை. அந்நகர் முழுக்க நான் அலைந்து திரிந்தேன். அந்நகர் விட்டு சென்றவர்களை எங்கேனும் பார்க்க முடியுமா என்று எண்ணி மறுதிசை நோக்கி சென்றேன். மீண்டும் திரும்பி வந்தேன். அந்நகரில் ஒரு கிழிந்த கொடிபோல நான் படபடப்பதாகத் தோன்றியது.
நகர் முழுக்க கூலமூட்டைகள் அடித்துச் சிதறப்பட்டு மாளிகைகளின் சுவர்களை ஒட்டி அரிசியும் கோதுமையும் பிறவும் குவிந்துகிடந்தன. ஆனால் விலங்குகளோ பறவைகளோ ஏதுமில்லை. சில மீன்கள் மட்டும் உயிருடன் இருந்தன. சில முள்ளுயிரிகள் சிலிர்த்தபடி மெல்ல நடந்தன. அவை ஆழ்கடலில் வாழ்பவையாக இருக்கலாம். ஒருகணத்தில் கடல் எவ்வண்ணம் மறைந்தது என அவை திகைக்கக்கூடும். அங்கே குவிந்திருக்கும் சடலங்களில் என் மைந்தர்களை தேடிக்கொண்டிருக்கிறேன் என நானே உணர்ந்ததும் தீச்சுட்ட அதிர்வை அடைந்தேன். ஏன் அவ்வாறு செய்கிறேன்? என் அகத்தில் தீங்கு நிகழுமென நம்பிக்கொண்டிருக்கிறேனா? அவர்கள் உண்மையில் அங்கே கிடந்தால்கூட நான் செய்வதற்கொன்றும் இல்லை. அவர்கள் எங்கேனும் இருந்து என் உதவியை நாடினால்தான் நான் சென்றடையவேண்டும்.
நான் தேவபாலபுரத்தை கடந்து சென்றேன். பாலையின் தொடக்கத்தில் மக்கள் இருக்கக்கூடும் என்று தோன்றியது. அவர்களை நோக்கி செல்லவேண்டும். தொலைவில் மக்களின் ஓசையை செவிகூர்ந்தேன். அதை எதிர்நோக்கி சென்றுகொண்டிருந்தேன். நெடுந்தொலைவில் அவர்கள் ஓசை கேட்கத் தொடங்கியது. நடந்து அங்கு சென்றபோது நன்றாக இருட்டிவிட்டிருந்தது. நான் கண்ணீர்விட்டபடி, தள்ளாடியபடி, நடைப்பிணம்போல மாறி பின்னிரவில் மக்கள் கூட்டமாக அமர்ந்திருந்த வெட்டவெளிக்கு சென்றேன்.
அங்கு கையில் அகப்பட்ட உடைமைகளுடனும் உற்றாருடனும் மக்கள் கிளம்பிவந்து அமர்ந்திருந்தனர். அங்கு சென்று தொலைவிலேயே இரு கைகளையும் விரித்தபடி நடந்து அவர்களை அணுகி முழந்தாளிட்டு விழுந்தேன். அவர்களில் ஒருவன் வந்து ஒரு தோல் குடுவையிலிருந்த நீரை எனக்கு அளித்தான். அதை வாங்கி இரு கைகளாலும் அண்ணாந்து குடித்து உடலை நிறைத்தேன். நீர் அருந்தியதுமே உடல் சற்று ஓய்வுகொள்ள அவ்வண்ணமே மணலில் குப்புற விழுந்து சற்று நேரம் துயின்றேன். அதில் என் மைந்தரை கண்டேன். அவர்களுடன் இளவெயில் நிறைந்திருந்த பசும்புல்வெளியில் விளையாடினேன்.
பின்னர் எழுந்து அமர்ந்தேன். அங்கிருந்த ஒவ்வொருவரும் அழுதுகொண்டிருந்தனர். பலர் தங்களின் உற்றாரைத் தேடி ஒவ்வொரு முகமாக பார்த்தபடி அவர்களின் பெயர்களை கூச்சலிட்டபடி சென்றுகொண்டிருந்தனர். பெற்றோரைப் பிரிந்த குழந்தைகள் கதறி அழுதபடி அலைந்தனர். ஒவ்வொரு குழந்தையையும் ஒவ்வொருவரும் முகம் தூக்கிப் பார்த்து அது தங்கள் குழந்தையல்ல என்று விட்டுச்சென்றனர். விட்டுச்செல்லப்பட்ட ஒவ்வொரு குழந்தையும் விட்டுச்செல்பவர்களின் ஆடையை பற்றிக்கொண்டு “தந்தையே!” என்றும் “அன்னையே!” என்றும் கதறி அழுதன. அவர்கள் பிரிந்த பின் நிலத்தில் விழுந்து கைகால்களை உதறி கூச்சலிட்டன.
உளக்கொந்தளிப்பு ஓய்ந்ததனால் சிலர் அவ்வண்ணமே படுத்து ஆழ்ந்து துயின்றுகொண்டிருந்தனர். சிலர் உயிர் துறந்திருக்கவும் கூடும். துஞ்சுவதற்கும் துயில்வதற்கும் அங்கு வேறுபாடு தெரியவில்லை. எவரிடமும் பந்தமோ விளக்கொளியோ இல்லை என்பதனால் முற்றிருள் சூழ்ந்திருந்தது. வானின் ஒளியில் அவர்களின் முகங்கள் பற்களின் வெண்மையும் கண்களின் மினுப்புமாக தெரிந்தன.
நான் அங்கே எதற்கு அமர்ந்திருக்கிறேன் என்று எனக்கு தெரியவில்லை. என் துணைவியை அங்கு தேட முடியுமா? விடிந்த பின்னரே அவர்களை தேடமுடியும். ஆயினும் என்னால் அமர்ந்திருக்க முடியவில்லை. உடல் ஓய்வுகொண்டதும் உள்ளம் விழித்தெழுந்தது. நானும் எழுந்து என் மைந்தரின் பெயர்களை கூவி அழைத்தபடி அத்திரள் முழுக்க அலைந்து திரிந்தேன். என் மனைவியின் பெயரும் மைந்தரின் பெயரும் உள்ள பலர் அங்கிருப்பதை உணர்ந்தேன். நான் அருகணைத்து முகம் தூக்கி நோக்கிய மைந்தர் என் மைந்தரல்ல என்று தெரியும்போது எழும் உளச்சோர்வு நெஞ்சில் ஒரு கத்தி என ஆழப் புகுந்தது.
ஆயினும் அவர்கள் அங்கிருக்கிறார்கள் என்று என் உளம் கற்பனை செய்துகொள்ளும்போது வரும் உவகையின் தொடுகை என்னை சிலிர்க்கச் செய்தது. அவ்வுவகையில் திளைக்கும்பொருட்டே அவர்களை நான் பெயர் சொல்லி தேடிக்கொண்டிருந்தேன். இரவெல்லாம். தந்தையே, முழு இரவும். அத்திரளில் விழுந்து எழுந்து, விழுந்து எழுந்து, தேடிய இடங்களிலேயே மீண்டும் தேடி, தேடியவர்களையே மீண்டும் கண்டு, புலரியில் உணர்ந்தேன் அங்கு அவர்கள் இல்லை.
அத்திரளைப் பார்த்தபடி இளவெயிலில் கண்ணீருடன் நின்றேன். மீண்டும் நகருக்குள் புகுந்து இறந்து கிடக்கும் உடல்களில் அவர்களை தேடுவதா? கிழக்கே சுடர் எழுந்துகொண்டிருந்தது. அங்கிருந்த ஒவ்வொருவரும் கதிரெழும் ஒளியை நோக்கி கண்ணீர்விடுவதை கண்டேன். கதிரொளி அத்தனை துயர் மிக்கதாக, அத்தனை கொடியதாக தோன்றும் தருணத்தை அதற்கு முன் நான் உணர்ந்ததில்லை. அவர்களின் கிழிந்த உடைகளை, கைவிடப்பட்ட நிலையை, சாவை, நோவை ஒவ்வொன்றையும் துலக்கிக்காட்டியது அது. ஒவ்வொருவரும் கதிரிலிருந்து முகத்தை விலக்கிக்கொண்டனர். பெரும்பாலானவர்கள் அதற்கு முதுகு காட்டி அமர்ந்திருந்தனர். சிறுகுழந்தைகள் அன்னையரின் உடல்களுக்குள் புகுந்துகொள்பவைபோல் ஒடுங்கிக்கொண்டிருந்தன.
அங்கிருந்து சிந்துவுக்குள் சென்று என் மைந்தரைப்பற்றி தேடவேண்டும் என்று எண்ணினேன். ஒருவரிடம் நீர் மட்டும் வாங்கி குடித்துவிட்டு மீண்டும் தேவபாலபுரத்தை நோக்கி சென்றேன். நான் நகர் நோக்கி செல்கையில் தொலைவில் ஒருவன் என் பெயர் சொல்லி அழைப்பதை கண்டேன். நின்று திரும்பிப்பார்த்தபோது ஒற்றன் ஒருவன் கைவீசியபடி வந்தான். “இளவரசே! இளவரசே!” என்றான். அவன் துவாரகையின் ஒற்றனாகிய சந்திரன் என அறிந்தேன். என் உடல் ஓய்ந்தது. உள்ளம் பாறையென்றாயிற்று. தேடல் முடிந்தது. இனி எதுவானாலும் ஒன்றே. “கூறுக!” என்றேன்.
“இளவரசே, தங்கள் மைந்தரையும் துணைவியையும் சிறைப்பிடித்து துவாரகைக்கு கொண்டுசென்றார்கள்” என்றான் சந்திரன். “யார்?” என்றேன். “இங்கு அவர்கள் படகில் வந்துகொண்டிருக்கையிலேயே துவாரகையிலிருந்து அவர்களை துரத்தி வந்தார்கள். விசைமிக்க படகுகளில் வந்து அவர்களை வழியிலேயே மறித்துக்கொண்டார்கள். அவர்களை பிடித்து இழுத்து அந்தப் படகில் ஏற்றிக்கொண்டு சென்றார்கள். அவர்களை கொண்டுவந்த காவலர்களையும் அப்படகில் ஏற்றிக்கொண்டார்கள்” என்றான்.
“நான் தேவபாலபுரத்தில் துவாரகையின் ஒற்றன். இச்செய்தியை தங்களுக்கு அறிவிக்க வேண்டும் என்று பறவைத்தூது அனுப்பினேன். தாங்கள் எங்கிருக்கிறீர்கள் என்று தெரியவில்லை. தங்களிடம் இதை தெரிவிக்கும்பொருட்டு நான் இங்கிருந்து கிளம்பும் நிலையில்தான் அலையெழுந்தது” என்றான் சந்திரன். “நன்று” என்று நான் சொன்னேன். “இத்தருணத்தில் தங்களைப் பார்க்க என்னால் முடிந்தது நன்று” என்றான். “துவாரகையில் அவர்கள் இருக்கிறார்கள் அல்லவா?” என்றேன். “துவாரகைக்கு அவர்கள் கொண்டுசெல்லப்பட்டார்கள்” என்று அவன் சொன்னான். “கொண்டுசென்றவர்கள் யார்? பிரத்யும்னனின் படைவீரர்களா?” அவன் “இல்லை, மூத்தவர் ஃபானுவின் படையினர்” என்றான்.
தந்தையே, அங்கிருந்து கிளம்பி துவாரகைக்கு நான் சென்றிருக்கவேண்டும். என் உயிரை அளித்து என் மைந்தர் உயிரை காப்பாற்றி இருக்கவேண்டும். ஆனால் நன்கு அறிந்திருந்தேன் நான் துவாரகைக்கு செல்ல முடியாது. துவாரகையில் அவர்கள் சிறைவைக்கப்பட்டிருப்பார்கள். அந்நகரை இடித்தழித்தவன் நானே என்று அவர்கள் அதற்குள் அறிந்திருப்பார்கள். என்னை அவர்கள் சிறைப்படுத்தினால் தலைகொய்வார்கள். அதன் பின் என் மைந்தர்களை விட்டுவைக்கமாட்டார்கள். ஏனெனில் அது குடிப்பகையை எஞ்சவிடுவது. அவர்களும் இழிவுபடுத்தி கொல்லப்படுவார்கள்.
அவர்கள் உயிரோடிருக்க வேண்டுமெனில் அவர்கள் கையில் நான் சிக்கக்கூடாது. அவர்களின் பொருட்டு எப்போதேனும் நான் வந்துசேர்வேன் என்று நம்பினால் மட்டுமே அவர்கள் அவர்களை உயிருடன் விட்டுவைப்பார்கள். தங்களிடம் அவர்கள் இருப்பதை அறிவிப்பார்கள். அவர்கள் வெளிப்படையாக அவர்களை சிறை செய்து இழுத்துச் சென்றபின், அச்செய்தி எனக்கு வந்து சேரும்படி அனைத்து ஒற்றர்களிடமும் ஆணையிட்டிருப்பதனாலேயே அதுவே அவர்களின் திட்டம். ஆகவே நான் தலைமறைவாக வேண்டும். அவர்களிடம் சிக்கக்கூடாது.
நான் அங்கிருந்து தப்பி சிந்துவை அடைந்தேன். அதன் ஒழுக்கினூடாக மேலே சென்று, வழியிலேயே கரையணைந்து குறுக்குவழியினூடாக மீண்டும் பாலைநிலத்தில் ஏறி, அங்கிருந்து அவந்திக்கு வந்தேன். என் உள்ளுணர்வால் தேடி அலைந்து இங்கு வந்து சேர்ந்திருக்கிறேன். இந்த இடத்தை கண்டடைவதற்கு எனக்கு என் தவிப்பு மட்டுமே வழிகாட்டியிருக்கிறது. பிறிதொரு வழியில்லை. துவாரகை அங்கு இப்போது எவ்வண்ணம் இருக்கிறது என்று எனக்குத் தெரியாது. ஆனால் என் மைந்தரை கொன்றிருக்கமாட்டார்கள், எனக்கான பணயப்பொருளாக அவர்களை வைத்திருப்பார்கள் என்று எனக்கு தெரியும்.
“தந்தையே, நீங்கள் மட்டுமே என் மைந்தர் உயிர்காக்க இயலும். எழுக, தந்தையே! என் மைந்தரைக் காக்க எழுக! உங்கள் பெயர்மைந்தர் அவர். உங்கள் குருதியினர்” என்று பிரதிபானு சொன்னான்.