ஐந்துநெருப்பு, கரவு- கடிதங்கள்

ஐந்து நெருப்பு[ சிறுகதை]

அன்புள்ள ஜெ

உங்கள் வழக்கமான நிலத்தில் இருந்து விலகி எங்கள் செங்காட்டுக்கு வந்திருக்கிறீர்கள். என் அப்பா சொல்வார். அங்கே தீயும் கரியும் மட்டும்தான் நிறம் என்று. பனைமரம் கரி. மண் தீ. எரியும் மண். இப்போது கோடையில் கருக்குவேல் அய்யனார் கோயிலுக்கு போவோம். அப்படியே எரியும். அரைமணிநேரம் நிற்கமுடியாது. ஆனால் அங்கே மனிதர்கள் வாழ்கிறார்கள். முள்ளுக்கு வேலிபோட்டிருப்பதை கண்டு நானும் இதேபோல ஆச்சரியப்பட்டிருக்கிறேன்

ஐந்துபக்கமும் தீ. பஞ்சாக்கினி. அதில்தான் தாட்சாயணி தபஸ் செய்தாள். சுடலை, மாயாண்டி எல்லாருமே அந்த தபஸ் செய்பவர்கள்தான். அவர்கள் அப்படித்தான் வரம் வாங்குகிறார்கள். ஆனால் இங்கே மனிதர்கள் தபஸ் செய்து வாங்குவது உயிர்வாழும் வாய்ப்பை மட்டும்தான். பம்பாய்க்குச் சென்று அங்கே தபஸ் செய்தால் சாவு மட்டும்தான்.

மிக யதார்த்தமான கதை. இயல்பாக ஒழுகிச்சென்று ஒரு முடிவை அடைகிறது. அந்த முடிவிலிருந்து ஒரு பெரிய கதை தொடங்குகிறது. யாராவது இந்தக்கதையை நாவலாகக்கூட விரிவாக்கி எழுத முடியும்

அழகுவேல்

***

அன்புள்ள ஜெயமோகன் சர்,

” ஐந்து நெருப்பு ” கதை ஒரு திரில்லர் படத்தின் ஓபனிங் போல இருந்தது.  தேரிக்காடும் மும்பையும் எனக்கு ரொம்ப பரிச்சயமான இடங்கள். எனதின் வாழ்வின் முதல் சாய்ஸாக இருந்தது கேங்க்ஸ்டர்  ஆவதுதான். எனது நண்பர்கள் அப்படிதான் இருந்தார்கள். ஆனால் மும்பை சென்றபின்தான் நான் எவ்ளோ பெரிய பயந்தாங்கொள்ளி என்று எனக்கு தெரிந்தது. கேங்ஸ்டர் ஆக ரத்தத்தில்,அடிப்படையில் எதோ ஓன்று வேண்டும்…….இப்போது  முத்துக்கு இருப்பது போன்ற ஒரு தருணம்.

பாலை நிலங்கள் கண்டிப்பாக பலாபழங்களை கொடுக்க போவதில்லை. சிவந்த கள்ளிபழங்களின் உடை முட்களின்  நிலம் அது. இந்த ஊரை விட்டு கிளம்ப முத்துக்கு ஐடியாவே இல்லை. மாகாளியிடம்  “ஊரிலே எப்டியெப்டியோ வாளுதாக. கொல்லுதாக, சாவுதாக, கயவாளித்தனம் பண்ணுதாகஅவுசாரித்தனம் செய்து வாளுதானுக” என்கிறான் முத்து….ஆனால் ஜெயமோகன் சார் ….இப்படி மட்டும்தான் அதில் இருந்து முதல் முதல் வருகிறவன் இருக்கமுடியும், வாழமுடியும்,வேறு வழியே இல்லை.

இதில் பிழைத்து கிடந்தால் மூன்றாவது தலைமுறை வேறுமாறி தலையெடுக்கும். எவ்வளவு திருநெல்வேலி, மதுரை பெண்களை பம்பாயின் சிவப்பு விளக்கு பகுதிகளில் பார்த்து இருக்கிறேன். ” நற்றுணை” யில் ஒரு பெண் செல்வது ஒரு வழி . இசக்கி சென்றது முத்து செல்லபோவது ஒரு வழி. மூன்று பக்கமும் தீ சூழ முட்களின் மீது இருக்கிறவனுக்கு மட்டும்தாம் ஐந்து பக்கமும் தீ சூழ வாழ முடிவு எடுக்க முடியும்.

ஸ்டீபன்ராஜ் குலசேகரன்

***

கரவு [சிறுகதை]

அன்புள்ள ஜெ

கதைகளின் பேட்டர்ன் ஒன்றை எடுக்க முயன்றுகொண்டே இருக்கிறேன். பெரும்பாலும் தோல்விதான். கதைகளை கண்டுபிடிக்கவே முடியவில்லை. எல்லா கதைகளுக்கும் பொதுவாக இருந்தது கதையை உருவகத்திலே வைத்திருப்பது என்று தோன்றியது. அதாவது கதை நடக்கும் சம்பவங்களில் பெரிய திருப்பங்கள் இருக்காது. மொத்தக்கதையும் ஒரு கவித்துவமான உருவகமாக இருக்கும். சூழ்திரு, மொழி, துளி போல. அந்த உருவகத்தை கவித்துவமாக விரித்தால் கதை வந்துசேரும்.

ஆனால் சட்டென்று சிலகதைகள் அதை கலைத்து போட்டன. பரபரவென்று நகரும் கதைச்சந்தர்ப்பங்கள் கொண்ட கதைகள். எந்த எல்லைக்குள்ளும் அடங்காமல் நீண்டு செல்கின்றன இந்தக்கதைகள். அப்படிப்பட்ட கதைஎன்று கரவு கதையைச் சொல்லலாம். அந்தக்கதையின் சம்பவங்களும் திருப்பமும்தான் முக்கியம். ஊரே உறங்கும்போது வரும் திருடன். அவன் கனவிலிருந்து வருகிறான். அங்கேதன் தெய்வங்களும் வாழ்கின்றன. தெய்வம் கள்ளத்தனமாகத்தான் உள்ளே நுழைய முடியும். தேன்சிட்டு போல

அருண்

***

அன்புள்ள ஜெயமோகன்,

தினமும் கதைகள் வெளியாவதால் அவற்றிக்கு இடையே உள்ள தொடர்புகளை, பொதுத்தன்மைகளை தான் மனம் தானாக தேடுகிறது. அதுபோல, நேற்று இரவு ஒரு எண்ணம் தோன்றியது.

வெளியான கதைகளில் வரும் ஒயரால் கூடு கட்டும் குருவி(குருவி), மின் கம்பியில் விடபிடியாய் கிறங்கி கிடக்கும் மலைப்பாம்பு(லூப்), ஊருக்குள் நுழைந்து மனிதர்களோடு சேர்ந்து குடிக்கும் குரங்கு(இடம்), மலைச்சாலையில் டீசல் முகர்ந்து நிற்க்கும் யானைகள்(அங்கி) என்று வரும் விலங்குகள் மனித நவீன நாகரீகத்திற்குள் நுழைகின்றன. இப்பட்டியலில் வீட்டிற்குள் நுழையும் ‘ஆனையில்லா!’ யானையையும் சேர்க்கலாம்.

இவை ஏன் இங்கு வருகின்றன?கூடுகட்ட நார்கள் கிடைக்கவில்லையா குருவிக்கு? அவ்வளவு அழுத்தமாக, மின் கம்பியை விட்டு ஏன் செல்ல மறுக்கிறது அந்த மலைப்பாம்பு? ஊருக்குள் நுழைந்தத்திற்கு அந்த குரங்கு கூறும் காரணம் என்ன?

இவற்றில் பெரும்பாலானவற்றை (பாம்பு, குரங்கு) மனிதன் முதல் விலக்கவே பார்க்கிறான். பின்னர் அவற்றை ஏற்றுக்கொள்கிறான்.

அந்த விலங்குகள் தன் இனத்தின் இயல்பை மீறி வேறொன்றிக்குள் வருகின்றன. தங்களை Adapt செய்து கொள்கின்றன.ஒயரால் தன் கூட்டை கட்டிய குருவி நாளை அலைபேசி டவரில் தன் வீட்டை கட்டினாலும் கட்டும் போலும்!

“வாழ்வை சித்தரிப்பது அல்ல என் கதைகள், அவற்றின் அடிப்படையை ஆராய்வது” என்று நீங்கள் கூறியுள்ளீர்கள். அவை மனித வாழ்வையும் கடந்ததாக எனக்கு படுகிறது. உங்கள் கதைகள் எண்ண எண்ண விரியும் விதைகளாக உள்ளது.

தங்கள்,

கிஷோர் குமார்.

திருச்சி.

***

முந்தைய கட்டுரைஇறைவன், பிடி- கடிதங்கள்
அடுத்த கட்டுரைவனவாசம், லூப்- கடிதங்கள்