தேவி [சிறுகதை]

“ஒத்தை ஒரு பொம்புள கேரக்டரா? செரியாவாதே” என்றார் ‘பெட்டி’ காதர். “ஒருநாடகம்னா மினிமம் மூணு பொம்புளை கேரக்டர் வேணும். அதாக்கும் வளமொறை. சும்மா ஆளாளுக்கு தோணின மாதிரி நாடகம்போட்டா நாடகமாயிடுமா?”

“இல்ல நாடகம்தானே?” என்று அனந்தன் சொன்னான்.

“நாடகம்னா? வே, நாடகம்தானேன்னு அம்மைய மகன் பெண்டாள முடியுமா? இல்ல கேக்கேன்”

லாரன்ஸ் சூடாகிவிட்டான். “நாடகத்தைப் பத்திப் பேசும்வே. சும்மா வாயில வந்தத பேசப்பிடாது. பகவதி இருக்கப்பட்ட ஊராக்கும்”

‘பெட்டி’ காதர் சற்று தணிந்தார். “இஞ்சபாருங்க. நான் பதிமூணு வயசிலே நாடகத்திலே வந்தவனாக்கும். இப்பம் நாப்பது வருசமாட்டு இதிலே இருக்கேன். இந்த ஆர்மோனியத்துக்க கட்டைய பாத்தேளா, நம்ம வெரலு பட்டுப்பட்டு தேய்ஞ்சிருக்கு. ஒரிஜினல் பிரிட்டிஷ் ஐட்டம். பாருங்க ரோட்னி ரெய்னால்ட்ஸ் கம்பெனி. இத நான் வாசிக்கவேண்டாம். கைய வச்சாப்போரும். மனசிலே உள்ளது சங்கீதமாட்டு வரும். பட்டுநூலு மாதிரி சுத்தும். தேன் விளுது மாதிரி ஒளுகும். கேட்டுப்பாருங்க, சங்கீதம்னா சும்மா இல்லை”

அவர் லாரன்ஸின் தோளில் கைவைத்து நைச்சியமாக “மக்கா, நீ எனக்க மூத்த மகன் அல்லாப்பிச்சைக்க பிராயமாக்கும் கேட்டுக்க. நாடகத்தைப்பத்தி எனக்கு தெரியும். முன்னே போனவங்க சும்மா சொல்லி வைக்கல்ல. ஒரு ரூலுன்னா ரூலாக்கும். நாடகம்னா மூணு பொம்புளை வேணும்”

“அது ஏன்? அதாக்கும் நான் கேக்குதது” என்றான் அனந்தன்.

“அதாக்கும் இம்பிடுநேரம் சொன்னது, முன்னே போனவனுக சொல்லிவச்சதாக்கும்”.

அனந்தன் எரிச்சலுடன் “முன்னே போனவங்க சொல்லிவச்து போரும்னா பிறகு என்னத்துக்கு புதிசாட்டு எழுதணும்?” என்றான்.

“ஆ… அதாக்கும் நானும் சொல்லுகது. எதுக்கு எளுதணும்? நம்ம போதேஸ்வரனும் திருநயினார்க்குறிச்சி மாதவன்நாயரும் திக்குறிச்சி சுகுமாரன் நாயரும் எளுதாத நாடகமா? இனியிப்ப பச்சை மலயாளம் வேணுமானா சி.வி.ராமன்பிள்ளையும் கைனிக்கரை குமாரபிள்ளையும் எளுதின நாடகங்கள் அந்தால கிடக்கு. தமிளு வேணுமானா புலவர் லச்சுமணபிள்ளைக்க நாடகம் இருக்கு. சதாவதானி செய்குத்தம்பி பாவலர், கோட்டாறு காதர் மைதீன்ன்னு எம்புட்டு நாடகம் கெடக்கு. தாழைக்குடி அழகப்பா பிள்ளைக்க நாடகம்லாம் முத்துமுத்தாட்டு இருக்குமே!”

“அப்ப அதாக்கும் ஏற்பாடு? உமக்கு தெரிஞ்ச நாடகத்தைப் போடலாம்னு பாக்குதீரு. வே, இது நாங்க எளுதின நாடகம். இதை அரங்கேற்றுகதுக்குத்தான் நாங்க நாயா அலைஞ்சு பைசா பிரிச்சு ஸ்டேஜு போடுதோம்….”

“இல்ல, சங்கரதாஸு சாமி நாடகம்லாம்…”

“அப்ப அந்த சங்கரதாஸுகிட்ட பைசா வாங்கிட்டு வாரும்வே”

‘பெட்டி’ காதர் என்ன சொல்ல என்பதுபோல பெருமூச்சுவிட்டு தலையை அசைத்தார்.

பீடியை கடைசியாக உறிஞ்சி வீசிவிட்டு உள்ளே வந்த தபலா வாசிக்கும் ‘சட்டி’ செல்லப்பன் “என்னவாக்கும் சண்டை?” என்றார். “அவருக்க ஆர்மோனியத்திலே ரெண்டு கட்டையிலே சத்தம் வராது. அதனாலே ராகமெல்லாம் கொஞ்சம் சரிஞ்சு ரோடுவிட்டு ஓடை வளியாட்டுத்தான் ஓடும்… மக்காவுக்கு கெளம்பினா மதினாவுக்கு போயிருவாரு… ஆனா நம்ம நாடகத்துக்கு இது போரும்… இருபத்தஞ்சு ரூபாய்க்கு வேற ஆர்மோனியக்காரனை கிட்டாது” என்றார்.

காதர் “நல்லது சொன்னா காது கிட்டாது” என முணுமுணுத்தார்.

“நாடாரே, நீரு சொல்லும். நம்ம பட்ஜெட்டுக்கு மூணு நடிகையை எங்க போயி விளிக்க? அதனாலே ஒத்த ஒரு பொம்புளை இருக்குத மாதிரி நாடகம் எளுதினேன். கதையை சொன்னா சம்மதிக்க மாட்டேங்குதாரு”

“அடுப்புன்னா மூணு கல்லு வைக்கனும். ஒத்தக்கல்லு வச்சா பாத்திரம் நிக்காது” என்றார் ‘பெட்டி’ காதர்.

“நாங்க பேசிட்டிருக்குதது கதாபாத்திரத்தப் பத்தி, வெங்கலப் பாத்திரத்தைப் பத்தி இல்ல”.

காதர் “வே அனந்தன் நாயரே, இந்த பய பேசினான்னா நான் வீட்டுக்குப் போறேன் என்றார் “நீரு ஒரு நஜீபுள்ள நாடகப்புலவராக்கும். அதாக்கும் இம்பிடுநேரம் மரியாதையா பேசிட்டிருக்கேன்”.

அனந்தன் “லாரன்ஸ் நீ சும்மா இரு, நான் பேசுதேன்” என்றான்.

செல்லப்பன் “அவரு சொல்லுகதிலே காரியமுண்டு” என்றார். “அவருக்கு சொல்லத் தெரியல்ல. ஆனா ஒரு நாடகத்துக்கு மினிமம் மூணு பொம்புளை கேரக்டர் வேணும்”.

“முப்பெருந்தேவியர்னு சொல்லுதாகள்லா?” என்றார் ‘பெட்டி’ காதர்.

“லலிதா பத்மினி ராகினிதானே?” என்று லாரன்ஸ் கேட்டான்.

“இந்த ஹராம்பொறந்தான் இருந்தா நான் நாடகத்திலே இல்லை. நான் போறேன்”.

“போவும்வே அட்வான்ஸ் வாங்கின அஞ்சுரூவாயை வச்சுட்டு போவும்”.

அனந்தன் “டேய் நீ சும்மா இரு” என்று அதட்டி  “சொல்லுங்க நாடாரே” என்றான்.

“அதாவது நம்ம நாடகத்திலே பொம்புளைக் கதாபாத்திரத்துக்கு என்ன வயசு?” என்றார்

“மோகனான்னு பேரு. வயசு இருபது. ஹீரோயினாக்கும்… ஹீரோ ஆனந்துக்க காதலி… நாலு பாட்டு உண்டு”

“நாடகம் பாக்கவாற சின்னப்பொண்ணுக அவளை ரெசிப்பாளுக. ஆனா வாறதிலே முக்காலும் வயசுபோன பொம்புளைகளாக்கும். அவளுகளுக்கு இந்த சின்னக்குட்டி சொந்த மகளை மாதிரி. இவ என்ன சொன்னாலும் சம்மதிச்சு தரமாட்டாளுக. என்ன செய்தாலும் தப்புன்னு சொல்லுவாளுக.”

“ஓ!” என்றான் அனந்தன்.

“நாடகம்னா அப்டியாக்கும். அப்ப அந்த பிஞ்சுகிளவிகளுக்கு அவளுகளை மாதிரி ஒரு கதாபாத்திரம் வேணும்லா..”

“கிளவியா?”

“இல்லை. கிளவி இல்லை. எல்லா கிளவிகளும் தங்களைப்பத்தி நடுவயசாட்டுத்தான் நினைச்சுக்கிடுவாளுக. நட்டநடூ வயசிலே ஒரு கதாபாத்திரம் வேணும்…”

“ஆனா ஹீரோயின் இல்லாம…”

“ஹீரோயின் வேணும்… கூடுதலா இவளும் வேணும். அண்ணி இல்லேன்னா அம்மை..”

“ஓ” என்று அனந்தன் சொன்னான்.

லாரன்ஸ் “இவன் ஒரு அம்மை கேரக்டர் எளுதினான்.ஈஸ்வரி அம்மை…. ஈஸ்வரி… பிறவு பொம்புளை நடிகைக்கு எங்க போறதுன்னு அதை மாத்தி சித்தப்பாவாட்டு ஆக்கிப்போட்டான்” என்றான்

“அதை திரும்ப ஈஸ்வரியாட்டு ஆக்கிடுங்க” என்றார் செல்லப்பன். “ஆனா ரெண்டும் இருந்தாலும் பத்தாது. ஒரு சின்னக்குட்டி, ஒரு பொம்புளை ரெண்டும் இருக்கு, செரி.நாடகம் பாக்குத லேடீஸ் ரெண்டுலே ஒண்ணு மேலே ஒட்டிக்கிடுவாளுக. ஆனா அவளுக அம்பிடு பேருக்கும் எதிரியாட்டு ஒரு பொம்புளை இருப்பா. கெட்டவ. வில்லி. அப்டி ஒருத்தி இல்லேன்னா அவளுக இருந்து நாடகம் பாக்க மாட்டாளுக”.

“ஏன்?”

“மக்கா, எல்லாம் நம்ம பொம்புளைகள்லா?, அவளுகளுக்கு ஆம்புளையிலே வில்லனே கெடையாது. குடிகாரனையும் சோம்பேறியையும் எல்லாம் செரி கெடக்கான் நாயின்னு சகிச்சுட்டுப் போறவுகதானே?. நீங்க பாருங்க, புருவத்தை ஒட்டி பெரிய மீசைய வச்சு மரு வச்சு எப்டி வில்லனை காட்டினாலும் செரி, அவன் எம்பிடு எருமையா குரலுவிட்டு கனைச்சாலும் செரி, இந்த நாறச்செறுக்கிக வாயப்பொத்திச் சிரிச்சுகிட்டுதான் இருப்பாளுக… அதுவே பொம்புளை வில்லின்னா மண்ணை வாரி தூத்தி சாபம்போட்டு கண்ணீரு விடுவாளுக. பொம்புளைவில்லி வேணும்… இல்லேன்னா நாடகம் கொளுக்காது. அம்பிடுதான்”.

லாரன்ஸ் “ஏம்லே நம்ம வட்டி ராஜப்பாவை வில்லியா ஆக்கிட்டா என்ன?”

“ஆக்கிருங்க… வேறவளி இல்லை என்றார் செல்லப்பன் “வட்டி ராஜம்மை, அம்புடுதானே. எல்லாம் கணக்குதான்.”

அனந்தன் பெருமூச்சுவிட்டான்.

“அப்ப மூணு நடிகை வேணும்” என்றார் செல்லப்பன் “நாம வேணுமானா அதிலே ஒரு நடிகைக்கு ஆம்புளையை போட்டுக்கிடலாம். வில்லியா ஆம்புளை வந்தா நல்லாருக்கும்”.

“ஆம்புளையா?”

“பொம்புளைகளுக்கு பொம்புளை வில்லி வேணும். ஆனா அவ செரியான பொம்புளையா இருந்தா கொஞ்சம் கனிஞ்சும் போடுவாளுக. குரலும் நெளிவும் வந்திரும் இல்லியா?. என்ன இருந்தாலும் பொம்புளைல்லா? பொம்புளையே வில்லியா வந்தாலும்கூட அவ ஆம்புளைமாதிரித்தான் நடிக்கணும். அப்ப ஆம்புளயே பொம்புளை வில்லியா நடிச்சா எகிறீரும்”

“அதுக்கு நாங்க பொம்புளை வேசம்போடுத ஆம்புளைக்கு எங்க போக?” என்றான் அனந்தன்.

“நமக்கு தெரிஞ்ச ஒருத்தன் இருக்கான். குமரேசன்னு பேரு… நல்லா பஹபஹன்னு சிரிப்பான். பிஎஸ்வி குமரேசன்னு பேரு வச்சிருக்கான்.”

“பொம்புளை வந்து பிஎஸ்வி மாதிரி சிரிச்சா…”

“ரொம்ப நல்லா இருக்கும்… வில்லிதானே? முப்பது ரூபாயும் போக்குவரத்துச் செலவும் போரும், வருவான். நான் கேரண்டி”.

“செரி அப்ப ரெண்டு நடிகை…” என்றான் லாரன்ஸ் “என்ன செலவாகும்?”

“எப்டி போனாலும் ஒரு நாள் நடிப்புக்கு நூத்தம்பதுக்கு குறையமாட்டாளுக”

“அய்யோ முந்நூறா? நாடாரே, எங்க மொத்த கலெக்சனே இருநூத்தம்பதுதான்” என்று அனந்தன் அலறினான்.

“பேசிப்பாப்பம்… கொறைப்பாளுக”

“ரெண்டு வேணுமா?”

“இல்லேன்னா நாடகம் கொளுக்காது. பாதியிலே ஆடியன்ஸ் எந்திரிச்சு போக ஆரம்பிச்சா பிறவு அப்டியே எறங்கீரும்… இந்த நாடக ஆடியன்ஸ் வௌவாலுக் கூட்டம் மாதிரியாக்கும் ஒரு அஞ்சாளு எந்திரிச்சு அந்த சந்தடி வந்தா அம்புட்டுப்பேரும் எந்திரிச்சு சூத்தை தட்டிக்கிட்டு போயிடுவானுக”.

அனந்தன் மறுபடியும் பெருமூச்சுவிட்டான்.

“நான் ஒரு அம்பது ரூபாய்க்கு வளிபாக்குதேன்…. நாடாரே நீரு, நூறுண்ணு குறைச்சு குடுத்தா வச்சு சமாளிச்சுகிடலாம்”

“பாப்பம்”.

“ஒரு விசயம்” என்றார் ‘பெட்டி’ காதர் “இந்த ஈரோவுக்க பேரை மாத்தணும். ஆனந்த் செரியில்ல. குமரேசன்னு வைப்பம்”

“குமரேசனா நடிக்கதுக்காவே நான் எனக்க அம்மைக்க கம்மலை திருடி அடகுவச்சேன்? வெட்டி பொலிபோட்டிருவேன்” என்றான் லாரன்ஸ் “ஸ்டைலாட்டு பேரு இருந்தா நடிக்கேன்… இல்லேன்னா எனக்க பைசாவ திருப்பிக்குடுங்க”.

“இருலே…” என்றன் அனந்தன் “காதர் சாயவு, இது மாடேர்ன் நாடகமாக்கும். குமரேசன்லாம் பளைய பேரு”.

“செரி, ஆனா கதாநாயகி சாகப்போறப்ப நெஞ்சடைச்சு விளிக்குதா. ஆனந்த்த்த்த்னு விளிச்சா நாக்க கடிச்சுகிடுவாள்லா? செரி, வில்லன் எப்டி சத்தம்போடுவான்? ஆனந்த்த்த்த்த்னு சொன்னா வாலு கதவிலே மாட்டின பூனை மாதிரில்லாவே இருக்கும்? இஞ்ச பாருங்க, டேய் குமரேசாஆஆஆஆ!” ஆர்மோனியத்தின் அனைத்துக்கட்டைகளையும் அழுத்தி பின்னணி சேர்த்து “எப்டி இருக்கு பாருங்க”.

“செரி, அதாக்கும் காரியம்னா, ராஜான்னு வைப்போம். டேய் ராஜா!!!!!”

ஆனால் ‘பெட்டி’ காதர் ஆர்மோனியத்தை அழுத்தவில்லை. “அதுக்கு அவன் ராஜா இல்லேல்லா?” என்றார்.

லாரன்ஸ் “செரி அப்ப காஜான்னு வைப்பம்” என்றான்

“இந்த பர்க்கத்துகெட்ட பயகூட நான் நாடகம்போடமாட்டேன்… நான் போறேன். எனக்கு நாடகம் வேற ஆயிரம் கெடக்கு”.

“எடலாக்குடியிலே நீரு எம்ஜியாருல்லா?”

“டேய் சும்மா இருலே.. சொல்லுங்க சாயவே, ராஜான்னா… இப்ப உங்க ரெண்டாம் பையன் பேரு சுல்தான்னுதானே? அவனை பாத்தா ஆளு சுல்தான் மாதிரி இருக்கான், அந்தப்பேரு போட்டீக”.

“ஆமா” என்றார் காதர். மகிழ்ந்து சிரித்து “அவன் இப்ப மோட்டார் மெக்கானிக்குல்லா!” என்றார்.

“அதை மாதிரித்தான், ராஜா!”

காதர் ஆர்மோனியத்தின் மேல் கைவைத்து அரைக்கண் மூடி “ராஜா!”என்றார் மெல்ல அழுத்தினார். “ட்ட்ட்ட்ட்டேய் ர்ர்ர்ர்ர்ராஜாஆஆஆ!!!” ஆர்மோனியம் இரைச்சலிட்டது. “ஒருமாதிரி செரியா வருது!” என்றார்.

“அப்ப நாம கெளம்பி போயி நடிகைகளைப் பாப்பம்”.

“எப்ப?”என்றான் லாரன்ஸ்.

“இப்பமே போவம்… இது திருளா சீசன்லா!” என்றார் சட்டி செல்லப்பன். “நீங்க நேராட்டு அமரவிளை சங்சனுக்கு வந்திருங்க”.

“அமரவிளைக்கு எதுக்கு?”

“வே, ஈரோயின் வேணுமானா அங்கதான் போகணும். அமரவிளை, வட்டவிளை ,அந்தால நெய்யாற்றங்கரை ,பாறசாலை வரை”.

“ஏன்?”

“நமக்கு தமிளு பேசுத நடிகை வேணும். திர்ணவேலி குட்டிகளை கூட்டிட்டு வந்தா இங்க உள்ளவனுக உடங்காட்டுக் கருவாச்சின்னு சொல்லி துப்பீருவானுக, நல்ல மலையாளக் குட்டிக வேணும். ஆனா அவளுக தமிளு பேசிக்கிட மாட்டாளுக. தமிளு பேசுத மலையாளக் குட்டிக இந்த பார்டர் ஏரியாவிலேதான் உண்டு… நான் வளிகாட்டுதேன்…”

 

[2 ]

 

 

அனந்தன் களைத்திருந்தான். “ஒரு சாய குடிப்பம் நாடாரே” என்றான்.

செல்லப்பன் “சாயை நல்லதாக்கும்” என்றார்.

லாரன்ஸ் “பல சாயை குடிச்சாச்சு” என்றான். “போற போக்கைப் பாத்தா சாயைகுடி மட்டும்தான் நடக்கும்போல”.

அவர்கள் டீக்கடைக்குள் ஏறி பெஞ்சில் அமர்ந்தனர். செல்லப்பன் “வடையும் சாயையும் வரட்டு” என்று ஆணையிட்டார்.

“அவன் சொல்லுகது காரியமாக்கும். அமரவிளையிலே காலம்பற எறங்கி இந்நா இப்ப பதினெட்டு எடம் ஏறி எறங்கியாச்சு… செரியாவல்ல. இருநூறுக்கு குறைஞ்சு ஒருத்தியும் வரமாட்டா. நாநூறு ரூபாய் ஹீரோயினுக்கே செலவாயிரும். அதுக்குமேலே அவளுக வார பஸ் செலவு, கூடவாறவனுக்க செலவு, சாப்பாடு மத்தசெலவுகள். ஸ்டேஜுக்க செலவு தனியா கெடக்கு. சவுண்டு சிஸ்டம் லைட்டுக்க செலவு. உமக்கும் சாயவுக்கும் குடுக்கணும். மொத்தம் ஆயிரம் ரூபா இல்லாம நடக்காதுன்னு தோணுது…” என்றான் அனந்தன்.

“கையிலே இருக்கது நாநூற்றைம்பது ரூபாயாக்கும்” என்றான் லாரன்ஸ்.

“இந்த அமரவிளை நீலவேணிக்கு என்ன சீக்கு? நூத்தி இருபது ரூபா வரை பேசியாச்சு. எலி மூஞ்சியையும் வச்சுகிட்டு என்ன பேச்சு பேசுதா?” என்று அனந்தன் சொன்னான்.

லாரன்ஸ் “ஏலே நீதானே பூவங்காலை கோமதிக்கு நூத்தி அம்பது சொன்னே? அவள பாத்தேல்ல? எளவு,  நெஞ்சிலே ரெண்டு பக்கறை தூங்கி கிடக்கு. மூத்தமக வீட்டிலே பிள்ள பெற்று கிடக்கா. ஹீரோயின் மோகனாவா நடிக்கதுக்கு அவளை விளிச்சே நீ… அவ எரநூறுக்கு ஒத்தப்பைசா குறையாதுண்ணு சொல்லிப் போட்டா”.

“செரி விடு”.

“என்னத்த விட? சின்னப்பிள்ளைக நாடகமாக்கும். ஆடியன்ஸ் கூவி விளிச்சு கேலி செய்வானுக. சிலசமயம் கல்லும் மண்ணும் வந்துவிளும்… அதுக்கும் சேத்து பணம் கேக்குதேன்னு சொன்னா பாரு. நீ ஆம்பிளையானா அங்க நாக்க பிடுங்கி செத்திருக்கணும்”.

“இப்ப சாவுதேன்லே, போருமா?”என்றான் அனந்தன். அவனுக்கு தொண்டை அடைத்தது

செல்லப்பன் “எனக்கு ஒரு ஐடியா” என்றார்.

லாரன்ஸ் “சொல்லும்” என்றான்.

செல்லப்பன் “நாம நெய்யாற்றின்கரை ஸ்ரீதேவியை விளிச்சா என்ன?” என்றார்

அனந்தன் “அவ நூற்றைம்பதுக்கு வருவாளா?” என்றான். “அவ பெரிய ஸ்டார்னு சொன்னாங்க”

செல்லப்பன் “இருநூத்தைம்பதுக்கு ஒரு பைசா குறைக்க மாட்டா. ஆனா அவ வாறான்னு சொன்னா நாம கொஞ்சம் பைசா பிரிச்செடுக்கலாம். ஊரிலேயே ஒரு இருநூறு ரூபாய் கண்டிப்பா குடுப்பாங்க. அவ ஹீரோயின். ஒரு அம்பது ரூபாய்க்கு உள்ளூரிலே ஒருத்திய பிடிச்சு கிளவியா போட்டிரலாம். முந்நூறிலே சோலி முடியும்…” என்றார் “கிளவி சளிப்பாக்கினாலும் ஆளுக இவள பாத்து வாயைப்பெளந்து இருந்துகிடுவானுக”.

“நல்ல ஐடியாவாக்கும்” என்றன் லாரன்ஸ்.

“ஆனா…” என்று அனந்தன் தயங்கினான்

“ஆனா ஒண்ணும் ஆனா இல்லை. இப்ப போனா வேலை முடியும். நம்ம டேட்டு திருவிளா டேட்டாக்கும்… போயிட்டுதுன்னா பிறவு பேசி பிரயோசனமில்லை”. என்றார் செல்லப்பா.

லாரன்ஸ் “ஆமா, போய் பார்த்திருவோம்” என்றான்.

“லே, பைசா வேண்டாமாலே?” என்றான் அனந்தன்.

“பைசா வந்திரும்.. நான் செல்லன்பெருவட்டர் கிட்ட பேசுதேன். அவருக்கு முன் சீட்டிலே ஒரு நாக்காலி போட்டா அம்பது ரூபா குடுப்பாரு…”.

“இருநூத்தம்பதுண்ணா”

“லே, இவ எனக்க ஹீரோயினாக்கும்… நான் ஒரு அம்பது ரூவா தாறேன்”

“நீ எங்கலே போவே அம்பதுக்கு?”

“என்னமாம் செய்யுதேன்…”

“உனக்க அம்மை பெட்டியிலே கம்மலு இல்லேன்னு கண்டுபிடிக்குத அண்ணைக்கு உனக்கு பொலியாக்கும்”

“நான் அப்ப மாமன் வீட்டுக்கு போயிருவேன்லா?”

“உனக்க அப்பன் எங்க வீட்டுக்கு வருவாரு. என்னைய பொலிபோட”.

“செரி நீங்க பேசி முடியுங்க” என்றார் செல்லப்பன்.

“பேசுகதுக்கு ஒண்ணுமில்லை… போறோம். அட்வான்ஸு குடுக்கோம்”.என்றான் லாரன்ஸ்.

டீக்கு பணம் கொடுத்துவிட்டு வெளியே வந்தபோது செல்லப்பன் “குருதை வண்டியிலே போவம்” என்றார்.

“தூரமா?”

“இல்ல, இங்கதான். ஆனா நடந்துபோனா ஒரு இது இல்ல”.

“செரி போவம்” என்றான் லாரன்ஸ்.

“குதிரைவண்டிக்கு என்ன கேப்பான்?” என்றான் அனந்தன்.

“அஞ்சுரூபா கேப்பான்”.

“அஞ்சு ரூபாயா?”

“அஞ்சு ரூபா நான் குடுக்கேன். எனக்க ஹீரோயினுக்க முன்னாலே நான் நடந்துபோயி நிக்கமாட்டேன்” என்றான் லாரன்ஸ்.

“செரி , அப்ப அது உனக்க செலவு” என்றான் அனந்தன்.

குதிரைவண்டிக்காரன் “நாடகம் புக்கிங்கா சார்?”என்றான்.

“ஆமா”.

“நம்ம கிட்ட ஒரு நல்ல குட்டி உண்டு. நல்ல பதினெட்டு வயசு” என்றான் குதிரைவண்டிக்காரன் “நல்லா மததமன்னு கருப்பட்டி நிறத்திலே இருப்பா”.

“தமிளு தெரியுமா?”

“தமிளு…. பேசுவா” என்றான். “இந்த தமிளுண்ணா என்ன? மலையாளத்தை தொண்டையக் காறிப் காறி பேசினா அது தமிளு”.

“தமிளை மூக்கை அடைச்சுகிட்டு பேசினா மலையாளம்… போவும்வே”

ஸ்ரீதேவியின் வீட்டின் முன் குதிரைவண்டி நின்றது. “இதாக்கும் சரஸ்வதிக்க வீடு”.

“சரஸ்வதியா? ஆரு?”

“நாடக நடிகை?”

“நாங்க ஸ்ரீதேவின்னுல்லாவே சொன்னோம்?”

“ஆ, அது நாடகத்துக்கு. வீட்டிலே சரஸ்வதியாக்கும்… பைசா எடுங்க”.

லாரன்ஸ் வண்டிக்குள்ளேயே அமர்ந்திருந்தான். அனந்தன் இறங்கி சட்டையை இழுத்துவிட்டு தலையை நீவிக்கொண்டான்.

செல்லப்பன் “நம்ம பளைய தோஸ்தாக்கும்…” என்றபின் “சிறிதேவீ! சிறிதேவீ!” என்றார். செருப்பை கழற்றிவிட்டு உள்ளே சென்றார்.

அனந்தன் “எறங்குலே” என்றான்.

லாரன்ஸ் இறங்கி “ஏலே எங்கிட்ட பௌடர் இல்ல”

“அதுக்கென்ன?”

“எண்ண வளிஞ்சு கெடக்குலே… அய்யோ என்ன செய்யுகதுன்னே தெரியல்லியே”

“வீட்டு சுவரிலே புதிசாட்டு சுண்ணாம்பு அடிச்சிருக்கு பாரு… கையை நல்லா வச்சு தடவி முகத்திலே வச்சு தேச்சுக்க”

“லே, உள்ளதா சொல்லுதே?” என்றான் லாரன்ஸ் “நீ ஒருமாதிரி ஆளை ஊசியாக்கப்பிடாது”

“உள்ளதுலே…செய்யலாம்”.

அவன் சுவரில் கையை தேய்த்தான். வெள்ளையாக வந்தது. அதை முகத்தில் பூசிக்கொண்டான். “ஏலே எப்டிலே இருக்கு?”.

“நல்லா இருக்குலே”.

“உள்ளதா?”

“ஆமலே நல்லா இருக்கு. பௌடர்போட்ட மாதிரி இருக்கு”.

“அவகிட்ட நான் பீஏ படிச்சிருக்கேன்னு சொல்லுலே”. லாரன்ஸ் சொன்னான்.

“நீயா? நீ எட்டாம்கிளாஸுல்லா?”

“சொல்லுலே சொல்லுலே மக்கா”.

“செரி”.

உள்ளிருந்து ஸ்ரீதேவி ,செல்லப்பன் இருவரும் வந்தனர். ஸ்ரீதேவி சிரித்துக்கொண்டே “வாங்க… உள்ள வாங்க” என்றாள் “நான் ஸ்ரீதேவி… நாடார் சாரு நம்ம பளைய ஃப்ரண்டாக்கும்… உக்காருங்க” என்று ஒயர்கூடை நாற்காலியை காட்டினாள்.

“நான் …இவன்… நாங்க ரெண்டுபேரும்…”என்றான் அனந்தன்.

“நாடகம் எளுதுகது யாரு?”

“நான்… நாடகம்… எளுதி” என்று அனந்தன் சொன்னான். அவனுடைய இடதுகால் தன்னிச்சையாக துடித்துக்கொண்டிருந்தது. குரல் தழுதழுத்தது.

“நான் ஹீரோவாக்கும்” என்றான் லாரன்ஸ்.

“நல்லா தெரியுதே… ஹீரோவுக்கான பர்சனாலிட்டி” என்றாள். “படிச்சிட்டிருக்குதியளா?”

“இல்ல, நான் எட்டாம் கிளாஸ் பாஸ். ரப்பர் கடை வச்சிருக்கேன்”.

“இரியுங்க”.

அவர்கள் அமர்ந்துகொண்டார்கள். “சாயை எடுக்கட்டா?” என்றாள் ஸ்ரீதேவி.

“இப்பம்தான் குடிச்சோம்” என்றார் செல்லப்பன் “ஆனா உனக்கு வேணுமானா ஒரு சாயை எடு”.

“முத்தம்மா” என்றாள் ஸ்ரீதேவி.

உள்ளிருந்து ஒரு கிழவி வந்து எட்டிப்பார்த்தாள். “சாயை” என்றாள் ஸ்ரீதேவி.

கிழவி அவர்களை வெற்றுவிழிகளுடன் பார்த்துவிட்டு போனாள். ஸ்ரீதேவியும் உள்ளே போனாள்.

அனந்தனுக்கு ஏமாற்றமாக இருந்தது ஸ்ரீதேவிக்கு முப்பத்தைந்து வயதுக்குமேல் இருக்கும். முற்றல் முகம். சற்றுக் குள்ளம். கருப்பு நிறம். பல்லும் கொஞ்சம் நீளமானது. ஈறுகள் கருப்பாக இருந்தன. இவளா ஹீரோயின் மோகனா? அவனுக்கு அழுகை வந்து தொண்டை அடைத்தது.

லாரன்ஸ் “நான் வாய் தவறி படிப்பைச் சொல்லிட்டேம்லே” என்றான். அவன் குரல் தழுதழுத்தது.

“வயசு கூடுதலாக்கும்” என்றான் அனந்தன்.

“இவதான் எனக்கு ஹீரோயின்”.

“லே, மோகனான்னா …”

“இவதான் மோகனா… இவ போரும்”. என்றான் லாரன்ஸ்

“லே, சொல்லுறதை கேளு”.

அதற்குள் ஸ்ரீதேவி வந்து அமர்ந்தாள். “வீட்டிலே ஆருமில்லை. எனக்கு ரெண்டு பிள்ளைகளாக்கும். ரெண்டுபேரும் திருவனந்தபுரத்திலே படிக்கானுக…”.

பக்கத்து அறையில் இருமல் ஓசை “ஆருடீ அது? லச்சுமியே ஆருடி அது?”

“டிராமா புக் பண்ண வந்தவங்களாக்கும்… இந்நா வாறேன்” என்றாள் “எனக்க அப்பா. நெய்யாற்றின்கரை ஜயதேவன்னு சொன்னா ஃபேமஸ். நல்லா பாடுவார். இப்ப ஆறு வருஷமாட்டு படுக்கையிலேதான் எல்லாமே”.

“அதாரு லச்சுமி?” என்று அனந்தன் கேட்டான்.

“என் அக்கா… அவ இப்ப இல்ல. நாங்க மூணுபேரு. பார்வதி, லட்சுமி , சரஸ்வதி. மூணுபேரும் டான்ஸ் படிச்சோம். பாடுவோம். குறத்திடான்ஸெல்லாம் ஆடுவோம்… பார்வதி இப்ப திருவனந்தபுரத்திலே இருக்கா… அப்பாவுக்கு மூணுபேரும் எப்பவும் குழம்பிடும்” என்றாள் ஸ்ரீதேவி “என்ன டிராமா?”

“நான் எழுதின நாடகம்… ஆனா ஹீரோயின்—”

லாரன்ஸ் அவன் பேச்சுக்கு ஊடே புகுந்து “நல்ல நாடகம்… அதிலே மோகனான்னு ஹீரோயின்… நீங்கதான் வந்து நடிக்கணும்…நீங்க கண்டிப்பா வரணும்… மாட்டேன்னு சொல்லீரப்பிடாது” என்றான்.

“வாறதுக்கென்ன? நம்ம தொழிலாக்குமே” என்றாள் ஸ்ரீதேவி “எத்தனை நடிகைகங்க?”

“மூணு… ஒருத்தி வில்லி. அதை அங்க ஒருத்தரு நடிக்காரு… நீங்க ஹீரோயினா வந்தா இன்னொரு ஆளை தேடிப்பிடிப்போம்” என்று லாரன்ஸ் சொன்னான்.

அனந்தன் நடுவே பேசமுயன்றான் தொண்டை அடைத்திருந்தது. ஆனால் லாரன்ஸ் உற்சாகமாக பேச ஆரம்பித்தான். “இந்த கதையிலே ஹீரோயினுக்கு அப்டி ஒரு ரோல். சும்மா நடிச்சுகிட்டே இருக்கலாம். டான்ஸ் உண்டு பாட்டு உண்டு. ஜெர்க் சீன்ஸ் உண்டு”.

“அது என்னது?” என்று அவள் புருவம் சுளித்து கேட்டாள்.

அனந்தனிடம் “என்னலே அது?” என்றான் லாரன்ஸ்.

“டியர் ஜெர்க்கிங்… அளுகை சீன்ஸ்” என்றான் அனந்தன்.

“ஓ”என்றாள் “நீங்க என்ன படிக்குதீக?”

அனந்தன் “பிகாம்…”என்றான். குரல் வேறு எவருடையது போலவோ இருந்தது.

“இது பிள்ளைக சேர்ந்து போடுத நாடகம். பெரிய பணமொண்ணும் இல்லை… பாத்து எடுத்து செய்யணும்” என்றார் செல்லப்பன்.

“பணத்தைப்பத்தி பிரச்சினையே இல்லை. நீங்க வந்து நடிக்கணும், அவ்வளவுதான்” என்றான் லாரன்ஸ்.

“நம்ம ரேட்டு தெரியுமே” என்றாள் ஸ்ரீதேவி.

“முந்நூறு, சொல்லிட்டேன்” என்றார் செல்லப்பன் “பின்ன நம்ம பையனுங்களுக்காக அம்பது குறைச்சு…”

“மறுக்கப்பிடாது” என்று லாரன்ஸ் இரு கைகளையும் கூப்பியபடிச் சொன்னான்.

“செரி… ரொம்ப கேக்குதீக” என்றாள். “இன்னொரு நடிகை ஆராக்கும்?”

“அதுக்கு ஒரு ஆளை தேடணும்… உங்களுக்கு இம்பிடு குடுத்தா பிறகு மிச்ச பணம் இருக்காதுல்லா? அம்பதுரூபாய்க்கு வார உள்ளூர் நடிகைய தேடணும்…” என்றான் லாரன்ஸ்.

“அது சரிவருமா?” என்றாள் “அவ எல்லா டைலாக்கும் சொல்லுவாளா?”

“ஆமா அது பிரச்சினைதான்” என்று அனந்தன் சொன்னான். “நடிக்கத் தெரிஞ்சவங்க அம்பது ரூபாய்க்கு வரமாட்டாங்க”

“ஒண்ணு செய்ங்க… அந்த ரோலையும் நானே செய்யுதேன். மொத்தமா சேத்து முந்நூற்றி இருபத்தஞ்சு குடுத்திருங்க”

“அதெப்பிடி?” என்றான் அனந்தன்

“இன்னொரு நடிகை அம்பது ரூபாய்க்கு வந்தாக்கூட பஸ்சு செலவு, கூட வாரவனுக்கான செலவு, சாப்பாட்டுச் செலவு, மிச்ச செலவுன்னு உண்டுல்ல? எளுவத்தஞ்சு ஆயிரும்ல? நான் எப்டியும் வாறேன். அந்த ரோலையும் நடிச்சிருதேன்”.

“ஆனா…” என்றான் அனந்தன்.

“நல்ல நாடகக்காரரு நெனைச்சா செய்யலாம். ரெண்டு கேரக்டரும் சேந்தாப்போல ஸ்டேஜ்லே வராம சீன் எளுதணும். அப்டி வந்தாகணும்னா அந்த எடத்திலே ஒருத்தரை வீட்டுக்கு உள்ள நிக்கிறாப்ல வச்சுடணும்….அதெல்லாம் ஒரு விஷயமே இல்லை”

“ஆனால் சத்தம்? ரெண்டுபேரு…”

“ரெண்டுபேருதானே…” ஸ்ரீதேவி நடுவயது பெண்ணின் சத்தத்தில் “எடீ ஸ்ரீதேவி என்னடி செய்யுதே?” என்றாள். “இந்த சத்தம் போருமா, ஒரு அம்மை மாதிரி இருக்குல்ல?”.உடனே அவளே இளம்பெண் குரலில் “இங்கே படிச்சிட்டிருக்கேன்மா…” என்றாள்.இரண்டுமே அவள் குரல் அல்ல.

ஒரே வாயிலிருந்து இரண்டு குரலும் வந்தது என்பதை அனந்தனால் நம்பவே முடியவில்லை.

“போருமா?” என்றாள் ஸ்ரீதேவி.

“போரும் போரும்” என்றான் லாரன்ஸ்.

செல்லப்பன் “அப்ப முந்நூற்றி எழுவத்தஞ்சு… உறைப்பிச்சாச்சு” என்றார்.

“செரி… ” என்றான் லாரன்ஸ்.

“நாங்க… யோசிச்சு” என்று அனந்தன் தயங்கினான்.

அதற்குள் லாரன்ஸ் ஐந்துரூபாய் தாள்களாக ஐம்பது ரூபாய் எண்ணி எடுத்து எழுந்து நின்று நீட்டினான். “வாங்கி அனுக்ரகிக்கணும்”.

ஸ்ரீதேவி எழுந்து நின்று இரு கைகளையும் நீட்டி அதை வாங்கி கண்களில் ஒற்றிக்கொண்டாள்.

லாரன்ஸ் தழுதழுத்த குரலில் “எனக்க முதல் ஹீரோயினாக்கும்” என்றான்.

ஸ்ரீதேவி புன்னகைத்து “நல்லா வருவீங்க” என்றாள்.

“அப்ப நாங்க எறங்குதோம்” என்று செல்லப்பன் சொன்னார். “டேட்டு குறிச்சுகிடுங்க…”

அவர்கள் வெளியே வந்ததும் அனந்தன் “ஏலே, அவ மூஞ்சி செரியில்லலே” என்றான்.

சட்டையை இழுத்து பின்னால் விட்டு ‘பூ!’ என்று ஊதி இளைப்பாறிய லாரன்ஸ் ”நல்லாத்தான் இருக்கு, ஏன் என்ன குறை அவளுக்கு?” என்றான்

“லே, அது மூஞ்சியாலே… முத்தலு… அரைக்கிளவிலே”.

“அவ போரும்”.

“ஏலே அவளாலே மோகனா? மோகனா காலேஜ் பொண்ணாக்கும்லே”.

“ஏன், இவளும் அப்டித்தான் இருக்கா”.

“இவ வேண்டாம்… நான் சம்மதிக்க மாட்டேன். போயி அட்வான்ஸை வாங்கிட்டு வாங்க”.

“இவதான்… இவ இருந்தா நாடகம் போட்டாப்போரும்”.

அனந்தன் அழுகைவர “லே, வேண்டாம்லே… மூஞ்சியாலே அது?” என்றான்.

“ஏன் உனக்க ஜெயபாரதிக்கு மட்டும் மூஞ்சி தங்கமோ?”

“ஜெயபாரதியச் சொல்லாதே…”

“அவ யாரு உனக்க மச்சினியா? போலே” என்றான் லாரன்ஸ் “அப்டித்தான் சொல்லுவேன்… ஜெயபாரதிக்க மூஞ்சிதான் பண்ணி மாதிரி இருக்கு”.

”டேய்” என்று அனந்தன் லாரன்ஸை அடிக்க பாய்ந்தான். செல்லப்பன் நடுவே புகுந்து இருவரையும் பிடித்து விலக்கினார்.

“லே, அடிச்சு பாருலே… ஆம்புளைன்னா அடிச்சுப்பாருலே”.

“நீ ஜெயபாரதியைப்பத்தி சொல்லிப்பாருலே”.

“லே மக்கா, ஜெயபாரதி இருக்கது மெட்ராஸிலே. நீங்க இங்க கிடந்து அடிச்சுகிட்டா ஆருக்கு லாபம்… சொன்னா கேளுங்க!”

“இவன் ஜெயபாரதியைச் சொல்லுதான்!”

“இங்கபாருங்க , ரெண்டாளுக்கும் வேண்டாம். அவன் ஜெயபாரதியைச் சொல்லமாட்டான். நீரு நெய்யாற்றின்கரை ஸ்ரீதேவியை சொல்லப்பிடாது”.

“செரி” என்றான் அனந்தன்.

“அப்ப வாங்க சமாதானமாட்டுப் போவோம். பிரச்சினை சால்வ் ஆச்சுல்லா?” என்றார் செல்லப்பன் “ஓரோ சாயைகள் குடிப்போம். இங்கிண நல்ல பழம்பொரிகள் உண்டு”

 

[ 3 ]

 

கோளாம்பி ரேடியோவில் சீர்காழி ‘வினாயகனே!’ என்று பாடத் தொடங்கியதுமே மக்கள் வர ஆரம்பித்துவிட்டனர். வயல்வரப்புகளின் வழியாக வந்து இடைவழியில் ஏறி கோயில் முற்றத்தை அடைந்தனர். கோயில் மலர்களாலும் குருத்தோலைகளாலும் சளைப்பனையோலைகளாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

ஸ்டேஜ் மொட்டையாகவே கிடந்தது. அனந்தன் பாய்ந்து ஸ்டேஜின் பின்பக்கம் சென்றான். சாய்த்துக் கட்டப்பட்டிருந்த மேக்கப் அறையில் ‘அணப்பன்’ ராஜமணி ஒரு இரும்பு நாற்காலியில் அமர்ந்திருந்தான்.

“மேக்கப்பு போடுத எல்லாருக்கும் ஸ்டூலு போடணும்… இங்க ஒரு நாலஞ்சு மேசையும் வேணும்” என்றான் அனந்தன்

“ஸ்டூலு எதுக்கு?”என்று ராஜாமணி கேட்டான். “சேரு இருக்குல்லா?”

“மேக்கப்பு போடுகதுக்கு ஸ்டூலு வேணும். கண்ணாடியும் மேக்கப்பு சாமான்களும் வைக்க மேசை வேணும்” என்றான் அனந்தன். “ஸ்டூலிலே இருந்தாத்தான் மேக்கப்புகாரங்க சுத்திச்சுத்தி வந்து மேக்கப்பு போடமுடியும்”

“ஸ்டூலுக்கு இப்ப எங்கபோக?”

“நம்ம பயக்கள விளிச்சுக்கிட்டு சுத்தி வீடுகளிலே கேட்டுப்பாருங்க… நான் நாடகத்துக்கு உண்டான வேலைகளை பாக்கணும்” என்று அனந்தன் வெளியே பாய்ந்தான்.

அனந்தனின் உடல் பரபரத்ததில் மனதில் சொற்கள் நிற்கவில்லை. அவன் என்ன செய்கிறான் என்றே தெரியாமல் அங்குமிங்கும் அலைமோதினான். சட்டென்று கால்கள் களைத்து அமர்ந்தான். உடனே உள்ளிருந்து ஸ்பிரிங் அவனை மேலே தூக்கியது.

அருணாச்சலம் அண்ணனின் வீடுநோக்கி ஓடினான். எதிரே லாரன்ஸ் வந்தான். “லே, வந்தாச்சு… வந்தாச்சு” என்றான்.

“ஆரு?”

“ஸ்ரீதேவி வந்தாச்சு”.

“எங்க?”

“வாற வளியிலயே நம்ம நேசப்பன் பெருவட்டரு மடக்கி அவருக்க வீட்டுக்கு கூட்டிட்டு போயிட்டாரு. அங்க அவரு சாயையும் பலகாரமும் ஏற்பாடாக்கியிருக்காரு. குடிச்சுட்டு வருவாங்க”.

“அப்ப நீயும் கூட போகவேண்டியதுதானே? ஏன் இங்க வந்து நொட்டுதே?”

“லே, எனக்கு வயத்த கலக்குதுலே”.

“போகவேண்டியதுதானே?”

“நாலஞ்சு மட்டம் போயாச்சு… போயி குத்தி இருந்தா ஒண்ணுமே வரல்ல”.

அனந்தன் “போலே நாயே, அதை எங்கிட்ட வந்து ஏன் சொல்லுதே?” என்று சொல்லிவிட்டு ஓடி முன்னால் சென்று எங்கே சென்றுகொண்டிருந்தோம் என்பது நினைவுக்கு வராமல் திகைத்து நின்றான்.

மாதேவன் பாட்டா அவனை கைகாட்டி அழைத்தார். அவன் அருகே சென்றதும் வெற்றிலையை துப்பிவிட்டு மிக மிக நிதானமாக, “லே, காருக்குறிச்சி நாதசரம் வேணும் கேட்டியா? தீவாரதனை நேரத்திலே அந்த பிளேட்ட போடணும். நீ சவுண்டுகாரன்கிட்ட சொல்லீரு” என்றார்.

“சொல்லுதேன்” என்றான். அவர் மேற்கொண்டு பேசுவதற்குள் கோயிலுக்குள் நுழைந்து அப்பால் வந்தான். கருவறைக்குள் கிருஷ்ணனுக்கு சந்தன முழுக்காப்பு சாத்தப்பட்டிருந்தது. கண்கள் மட்டும் கருமையாக தெரிந்தன. போற்றி உள்ளே ஏதோ செய்துகொண்டிருந்தார்.

முகமண்டபத்தில் புஷ்பாஞ்சலிக்கு தாமரை மலர்கள் குவிக்கப்பட்டிருந்தன. மடைப்பள்ளியில் சர்க்கரைப் பாயசத்தின் மணம் எழுந்தது. அச்சுதன் மாராரும் சந்திரன் மாராரும் தொப்பைகளுடனும் செண்டைகளுடனும் அமர்ந்திருந்தனர். மேளக்காரர் இருவர் அரைத்தூக்கத்தில் சுவரோடு சாய்ந்திருந்தனர்.

அவன் நினைத்துக்கொண்டு அருணாச்சலம் அண்ணனின் வீட்டுக்கு ஓடினான். அருணாச்சலம் அண்ணன் வைக்கோர் போர் அருகே நின்றிருந்தார். அவர் வைக்கோலை பிடுங்க எருமையும் கூடவே வைக்கோலை இழுத்து தின்றது.

“என்னலே?” என்றார் அருணாச்சலம் அண்ணன்

“நாடகத்துக்குண்டான பாத்திரம் பண்டம் எல்லாம் இங்க வடக்கே ரூமிலே வைச்சிருந்தேன். ஸ்டேஜுக்கு வேணும்ங்கிற நேரத்திலே கருணாகரனை அனுப்புதேன்… அவன் கிட்ட குடுத்தனுப்புங்க”

“எல்லாம் செரி, அதிலே ஒரு சாமான் குறைஞ்சா நீ பைசா தருவே”.

“செரிண்ணா”.

லாரன்ஸ் அவனை நோக்கி ஓடிவந்தான். “லே, சங்கதி சக்ஸஸ். படிப்புரை நாராயணன் தம்பி அம்பதுரூபா தந்தாச்சு… இனி ஒரு பிரச்சினையும் இல்லை… மிச்சம்கூட வரும்…”.

“அவரு என்ன சொன்னாரு?”

“நாளைக்கு அவருக்க வீட்டிலே ஸ்ரீதேவிக்கு ஒரு சாயை குடுப்பாரு”.

“சாயை குடிச்சே செத்திருவா போல இருக்கே”.

“இங்கபாரு நான் ஜெயபாரதியை பத்தி என்னமாம் சொன்னேனா? பின்ன எதுக்கு நீ ஸ்ரீதேவியப்பத்தி சொல்லுதே?” என்றான் லாரன்ஸ்

“ஜெயபாரதியாலே இங்க வந்து நாடகம் ஆடுதா?” அனந்தன் கேட்டான்.

“ஆமா பெரிய நாடகம்… லே எனக்கு இந்த நாடகம் அவ்ளவு பிடிக்கல்ல கேட்டியா? ஃபைட்டு வேணும்”.

”ஒரு பைட்டு இருக்குல்லா?”

“அது வெறும் பிடியில்லா? இன்னொரு நல்ல அடி வேணும் ஏந்திச் சவிட்டி அடிக்கணும்”

“நீ நடிக்குத லெச்சண மயிருக்கு ஊருகாரனுக தருவானுக அடி”.

’கொட்டோடி’ அப்பு தொலைவிலிருந்து சைக்கிளில் வந்து சைக்கிளை அப்படியே போட்டுவிட்டு ஓடிவந்து “லே அனந்தா சதிச்சுப்போட்டான்லே… தாயோளி கொட்டையை களவாண்டுட்டு போயிட்டான்லே” என்றான்.

“ஆரு?”

“சுவருமுட்டி குமரேசன்… லே, பிஎஸ்வி குமரேசன்… அவன் எஸ்கேப்பு”

“என்னலே சொல்லுதே? ரிகர்சலுக்கு வந்தானே? இருபது ரூவா பணமும் வாங்கிட்டுல்லா போனான்”.

“சிரட்டைமுலை வச்சுகெட்டு பொம்புளைவேசம் போட அவனால முடியாதாம். கடைக்காரன் உண்டை நாராயணன்கிட்ட சொல்லிட்டு நாகருகோயிலுக்கு போயிட்டான்” என்றான் கொட்டோடி அப்பு.

“எரப்பாளி நாயி. பின்ன எதுக்குலே பைசா வாங்கினான்?”

“அது செலவுக்கு வாங்கினது, பிறவு திருப்பி தந்திருவானாம்”.

அனந்தன் அப்படியே குத்துகல்லில் அமர்ந்துவிட்டான். கால்கள் நடுங்கின. வயிற்றில் தசைகள் இறுகியிருந்தன. சட்டென்று வியர்த்து தளர்ந்தான்.

“இப்ப என்னலே செய்ய?”

“அந்த ரோலை மறுக்கா ரவுடி ராஜப்பனா ஆக்கினா என்னலே?” என்றான் லாரன்ஸ்.

“ஆருலே நடிக்க? அது பெரிய கேரக்டர்லா?”

“என்ன செய்ய?”

அனந்தன் சட்டென்று உடைந்து “போயி சாவுதேன், எங்கிணயாம் போயி சாவுதேன்” என்று கூவி அழுதான்.

“லே, லே, நாலுபேரு பாக்குத எடம்லே” என்றான் லாரன்ஸ்.

“அதுக்கு நீ என்னத்துக்குலே அளுவுதே? இந்தமாதிரி ஒருத்தன் வரேல்ல, மிச்சபேரு நடிக்குதத பாருங்கன்னு சொல்லிட்டு நாடகத்தபோட்டா என்ன?” என்றான் கொட்டோடி அப்பு.

வலத்தோளில் ஆர்மோனியத்துடன், கணுக்காலுக்குமேல் வலச்சுற்று வேட்டியுடன், ‘பெட்டி’ காதர் ஒருக்களித்து நடந்து வந்தார். “ஏலே தம்பி ,நான் எத்தனை கட்டையிலே எடுக்கணும்?”

“கட்டை…” என்ற லாரன்ஸ் தன்னை கட்டுப்படுத்திக்கொண்டான்.

“ஒத்தை கட்டைபோரும்” என்றான் கொட்டோடி.

“ஒத்தக்கட்டையா? என்ன சொல்லுதீக?”

“சாயிப்பே, நாங்க இங்க தீய தின்னுட்டு நிக்குதோம்…”.

“தீயா, எதுக்கு?”

“டீ கிட்டல்ல… போவும் வே” என்றான் லாரன்ஸ்.

“இந்த ஹராம்பொறப்பு கூடவே இருந்தா ஒரு மயிரும் நடக்காது” என்றார் ‘பெட்டி’ காதர்.

“நீரு போயி எல்லாம் செரியாக்கும்… நாங்க வாறோம்“ என்றான் அனந்தன்

“நான் ஒரு நல்ல சாயா குடிச்சுட்டு ரெடியா இருக்கேன்… நாடகம் ஒம்பது மணிக்குல்லா?“ என்றார் காதர்

அனந்தன் அவருக்கு இரண்டு ரூபாய் கொடுத்தான். அவர் வாங்கிக்கொண்டு நடந்து சென்றார்.

அந்தி மயங்கிக்கொண்டிருந்தது. கோயிலில் தீபாராதனை கும்பிடுவதற்கான கூட்டம் வந்து கொண்டிருந்தது. பெரும்பாலும் நடுவயதான பெண்கள்.

கைதமுக்கு நாராயணி அம்மச்சி “அனந்தா, டே, உனக்க நாடகம் எப்படே?” என்றாள்.

“ஒம்பது மணிக்கு” என்றான் அனந்தன்

“நான் வாறேன் என்னா?” என்றாள் அம்மச்சி “நீ நடிக்குதியாலே?”

“இல்ல”.

“உனக்க நாடகம்னு சொன்னாக?”

“நான் எளுதின நாடகமாக்கும்”

“அய்யே, நாடகத்தை நடிக்கமாட்டியா? எளுதியா காட்டுவே?”

“இல்ல அம்மச்சி, நடிக்குத நாடகம்தான்”.

“பின்ன எதுக்குடே எளுதுகே?”

“தெரியாம எளுதியாச்சு, இனிமே எளுத மாட்டேன்” என்று அனந்தன் கையெடுத்து கும்பிட்டான்.

அவள் “நல்லா எளுதினே போ… மரியாதைக்கு எளுதி பரிச்சை பாஸாகுடே” என்றாள். அவளுடன் சென்ற கிழவிகள் ஏதோ சொல்ல அனைவரும் சிரித்தனர்.

“ஒம்பது மணிக்கு நீ என்னலே நொட்டுவே?” என்றான் லாரன்ஸ்.

“எனக்கு ஒண்ணும் தெரியல்ல” என்றான் அனந்தன். ‘சாவுதேன், நான் சாவுதேன்”

மைக்செட் மோகனன் ஓடிவந்தான். “அண்ணா ,அங்க மாதேவன் பாட்டா காருக்குறிச்சி கேக்காரு.. நம்ம கிட்ட ஸ்டாக்கு இல்லை பாத்துக்க”.

“பின்ன என்னலே இருக்கு?” என்றான் லாரன்ஸ் “நாதசரம் ஏதாவது போடு. அவரு எங்க காருக்குறிச்சிய கண்டாரு?”.

“அண்ணா, நாதசரம் இல்லியே”.

“கோயிலுக்கு வந்தா நாதசரம் கொண்டுவரமாட்டியா?” என்றான் லாரன்ஸ்.

“அண்ணா எடுத்து வச்சேன்… சேக்கு சின்னமௌலானா சாயவு… அதை மறந்துட்டேன்”.

“என்னலே செய்ய?” என்றான் லாரன்ஸ் “நாம அண்டியை காணல்லன்னு நின்னா இவன் வந்து அடைப்ப காணல்லண்ணு சொல்லுதான்”.

அனந்தன் “உம்மகிட்ட குன்னக்குடி இருக்காவே?”

“இருக்கு… ஒரு சோலோ…”

“தவுலு வலையப்பட்டிதானே?”

“தவுலுன்னா டும்டும் கொட்டுதானே?”

“வெளங்கீரும்… போ, அதைப்போடு… பாட்டா கேட்டா அதாக்கும் காருக்குறிச்சீண்ணு சொல்லு… போ”.

தொலைவில் ஒரு வண்ணக்கூட்டம் வருவது தெரிந்தது. நடுவே ஒரு குடை.

“அதாருலே அந்திக்கு குடைபிடிக்கான்?”

அருகே வந்தபோது தெரிந்தது அது நேசப்பன் பெருவட்டர். அவர் ஸ்ரீதேவிக்கு குடையை பிடித்திருந்தார். தொலைவிலேயே அவருடைய பற்கள் ஒளியுடன் தெரிந்தன.

“எளவு, அந்த ஆளு பல்லாலே டார்ச் அடிக்கானே”.

சட்டி செல்லப்பன் ஸ்ரீதேவிக்குப் பின்னால் நடந்து வந்தார். அவருடைய தோளில் தொங்கிய துணிப்பையில் தபலாக்கள் இருந்தன.

அருகே வந்ததும் செல்லப்பன் முன்னால் வந்து “டீ குடிச்சாச்சு. அப்டியே ஒருக்கா டைலாக்க இருந்து வாசிச்சுட்டோம்னா நேரா ஸ்டேஜுலே ஏறிடலாம்”

“ரிகர்சல் வேண்டாமா?” என்றான் அனந்தன்.

“வாசிச்சாப்போரும்” என்றாள் ஸ்ரீதேவி

“போரும் போரும், வாசிச்சாப்போரும், வாசிச்சாப்போரும்” என்றார் நேசப்பன் பெருவட்டர்.

“என்ன வாசிக்க?”என்று லாரன்ஸ் அவரிடம் கேட்டான்.

அவர் திரும்பி அவனை முறைத்தார்.

”இங்க பின்னாடி எடமிருக்கு… கோயிலுக்க கெட்டிடமாக்கும்” என்று லாரன்ஸ் சொன்னான்.

“நம்ம வீட்டிலயே எடமிருக்கே… அங்கிண எல்லாத்தையும் வச்சிருக்கலாம்” என்றார் நேசப்பன் பெருவட்டர்

“அடுத்த வருசம் அங்க வச்சுகிடலாம்” என்றான் லாரன்ஸ். “அப்ப உம்ம கெட்டினவ பெத்திருவாள்லா?”

நேசப்பன் பெருவட்டர் அவனை முறைத்து பார்த்தார். ஒன்றும் பேசாமல் திரும்பிக்கொண்டார்.

கோயிலின் பின்னாலிருந்த தேவஸ்வம் கட்டிடத்தை அவர்கள் அடைந்தபோது குன்னக்குடி வயலினும் தவுலும் ஒலித்தது. கூடவே கோயிலின் மணியோசை. தீபாராதனை நடக்கிறது. ஸ்ரீதேவி செருப்பை கழற்றிவிட்டு நின்று கண்மூடி கைகூப்பி கும்பிட்டாள்.

நேசப்பன் பெருவட்டர் குடையை தாழ்த்தி தானும் கும்பிட்டர்.

தேவஸ்வம் கட்டிடத்தில் பில்கலெக்டர் மணி, பஞ்சாயத்து பியூன் கணேசன், ஞானப்பன், தேவசகாயம், வெற்றிலைக்கடை குமரேசன், பம்ப் குணமணி, ஈஸ்வரன் நாயர், சண்முகம், எண்ணைச்செட்டி முருகனடி, சுப்பையாச் செட்டியார் ஆகியோர் இருந்தனர். எல்லாரும் அவரவர் வசனத்தாள்களை கையில் வைத்திருந்தனர்.

ஸ்ரீதேவி செருப்பை கழற்றிவிட்டு உள்ளே சென்றாள். அனைவரும் அவளைக் கண்டு எழுந்து நின்றனர்.

நேசப்பன் பெருவட்டர் “சேச்சே என்ன எடம் இது… ஒரே தூசியாட்டுல்லா இருக்கு?” என்றார்.

“தூசி நாடகத்துக்கு நல்லதாக்கும்” என்றான் லாரன்ஸ் “அதனாலே நாங்க கொண்டுவந்து விரிச்சு போட்டிருக்கோம்”.

நேசப்பன் பெருவட்டர் மீண்டும் அவனை முறைத்துப் பார்த்தார். இருவரும் சீற்றத்துடன் பார்த்துக்கொண்டார்கள்.

“வசனம் ஒருக்கா பாப்பமா? நேரமில்லை… எட்டரைக்கெல்லாம் மேக்கப்பு போடணும்” என்றாள் ஸ்ரீதேவி

“அக்கா” என்று அனந்தன் உடைந்த குரலில் அழைத்தான். “நாடகத்த இண்ணைக்கு நடத்த முடியாது… அந்த பிஎஸ்வி குமரேசன் ஏமாத்திப்போட்டான். பைசாவோட ஓடிப்போயிட்டான்” என்றான்.

“அய்யோ”

“பெரிய ரோலாக்கும்… வேற ஆரும் அதை செய்யமுடியாது… ” அவன் அழுதுகொண்டே “நான் சாவுதேன்… சாவுதேன்” என்றான்.

“ஏ என்ன பேச்சு பேசுதே நீ? சாவுததா, இதுக்கா? அந்த நாடகப் பேப்பரை குடு” அவள் அதை வாங்கினாள். ஸ்டீல் நாற்காலியில் அமர்ந்தாள்.

அதை வேகமாக புரட்டிப் பார்த்தாள்.

“இந்த ரோலையும் நானே செய்யுதேன், அம்பிடுதானே?”

“அய்யோ… மூணுரோலா?”

“என்ன, மூணுபேரும் சேந்து ஸ்டேஜ்லே வரமுடியாது… அதுக்கு சீனிலே என்ன மாற்றம் செய்யுததுன்னு பாப்பம்… சின்னச்சின்ன மாற்றம் போரும்… பாதிய வசனத்தை வச்சு செரியாக்கிக்கிடலாம்”

“செரியாக்கிப் போடலாம், செரியாக்கிப் போடலாம்… பின்னே?” என்றார் நேசப்பன் பெருவட்டர்.

 “நீரு ஆசாரிச்சியை செரியாக்கினீருல்லா?”என்றான் லாரன்ஸ்

பெருவட்டர் அவனை முறைத்தார்

“அக்கா அது போருமா?” என்று அனந்தன் கண்ணீர் வழிந்த கன்னங்களுடன் கேட்டான்.

“டேய் நாடகம் எங்க நடக்குது? பாத்திட்டிருக்கிறவன் மனசிலே… நீ சும்மா நின்னு பயந்து அலறினா உனக்க முன்னாலே அவன் பேயைப் பாத்திருவான்… அவனை கற்பனைசெய்ய வச்சாப்போரும்… நான் பாத்துக்கிடுதேன்… நீ உக்காரு. என்ன செய்யணும்னு சொல்லுதேன்”.

அனந்தன் “செரியா வருமா அக்கா?” என்றான்.

“வரவளைச்சிடலாம்… மேக்கப்பு ஆளை வரச்சொல்லணும்… நான் ஒர் நிமிசத்திலே வேசம் மாத்திட்டு வாறமாதிரி வில்லி வேசத்தை போடணும்” என்றாள் ஸ்ரீதேவி “மேக்கப்பு ஆரு?”

“வடிவு ஏஜென்ஸீஸ்… செட்டு, மேக்கப்பு, லைட்டு எல்லாம் அவங்களாக்கும். அடங்கலாட்டு இருநூறுரூபா” என்றான் லாரன்ஸ் “நானாக்கும் பைசா குடுத்தேன்”

“அப்ப அச்சு அண்ணனாக்கும் மேக்கப்பு… கூட்டிட்டு வாருங்க”

“நான் விளிச்சுட்டு வாறேன்” என்று மணி வெளியே ஓடினான்.

ஆர்மோனியத்துடன்  ‘பெட்டி’ காதர் எட்டிப்பார்த்து “இப்பமே முடிவா சொல்லிப்போடுங்க, பிறவு பிரச்சினை ஆயிரப்பிடாது… எட்டு கட்டைன்னா, அதுக்கொரு லிமிட் உண்டும்” என்றார் ‘மேலே போறப்ப விரியாது பாத்துங்கிடுங்க”.

“முதல்ல உம்ம ஆர்மோனியத்திலே எல்லா கட்டையும் இருக்கான்னு பாரும்வே” என்றார் செல்லப்பன்.

“என்னையச் சொல்லு, எனக்க ஆர்மோனியத்தை சொன்னா…” என்று பெட்டி சாயபு கூவினார்  “இது என்ன சாதனம்னு தெரியுமா வே? ரோட்னி ரெய்னால்ட்ஸ்.. ஒரிஜீனல்!”

ஸ்ரீதேவி “ஆமா,பிரிட்டிஷ் ஆர்மோனியம்லா?”என்றாள். “பாய் அண்ணா, நல்லா இருக்கேளா?”

“தங்கச்சி… நீயா… எப்பம் வந்தே? நான் பாக்கல்ல..”.

“சாயை குடிச்சேளா?”

“ஆச்சு”.

“ஒரு பீடி பிடியுங்க… இப்ப வாறேன்” என்றாள் ஸ்ரீதேவி.

“எட்டிலே ஏறி மேலே போனா சட்ஜமம் சில சமயம் பிடி கிட்டாது தங்கச்சி, அதாக்கும் சொன்னேன்”.

“உள்ள சட்ஜமத்தை வச்சு அட்ஜஸ்ட் செய்வோம் அண்ணா… அண்ணனாலே முடியாததா” என்று ஸ்ரீதேவி சொன்னாள்.

“பின்ன? நான் பாத்துக்கிடுதேன். சட்ஜமம் நம்ம கையிலே உள்ள சாதனம்லா?” என்றார் காதர் “வே சட்டி, நம்ம ஆர்மோனியத்தைப் பத்தி தங்கச்சிகிட்ட கேட்டுப்பாரும்… பஞ்சமம் நின்னு பேசும்லா… வந்திருக்காரு…” என்றபின் அனந்தனிடம் “தம்பி நம்ம ஆர்மோனியத்துக்கு பெசல் மைக்கு வேணும். பஞ்சமம் பேசணும்னா மைக்கு வேணும்…”

“ஆமா, சொல்லியாச்சு”.என்றான் அனந்தன்

“செரி வாறேன்” என்று பெட்டி கிளம்பிச் சென்றார்.

“ஆராக்கும் இங்க பஞ்சம் பேசுதது?” என்றார் நேசப்பன் பெருவட்டர். எவரும் பதில் சொல்லவில்லை “என்னத்துக்கு பஞ்சம், நம்ம தோட்டம் இருக்குல்லா?” என்று அவர் சொன்னார்.

மேக்கப்காரர் அச்சுதன்நாயர் வந்து நின்றார். அவருடைய கன்னம் தோண்டி எடுத்ததுபோல குழிந்திருந்தது. கழுத்தில் குரல்வளை மிகப்பெரியது.

“சரஸதி… நல்லா இருக்கியா மோளே?”

“அண்ணா வாங்க… ஒரு சின்னகாரியம்… சொல்லியிருப்பாங்க. எனக்கு ஒரு செக்கண்டிலே வேசம் மாத்தணும்…”

“அதுக்கு வளியிருக்கு…” என்றார் அச்சுதன்நாயர் “வில்லிக்கு ஒரு பெரிய அங்கி மாதிரி ஒண்ணு இருக்கு. சவிட்டு நாடகத்திலே எஸ்தர் ராணி போடுத அங்கி…நல்ல செவப்பு. அதை தலை வளியா போட்டா முளு டிரெஸ் ஆயிடும். ஒரு செக்கண்டிலே போட்டிரலாம். தலையிலே உனக்க முடிக்குமேலே நரைச்ச முடிக்கும் சுருளுமுடிக்கும் ரெண்டு விக்க மாத்தி மாதி வைக்கலாம்… ஆளுமாறிரும்”

“அது போரும்… மிச்சத்தை நான் குரலிலே காட்டிருதேன்”

“ஒரு ரப்பர் மரு இருக்கு, வில்லிக்க கன்னத்திலே ஒட்டலாம்” என்றார் அச்சுதன்நாயர். “பின்ன ஒரு ஐடியா இருக்கு”

“சொல்லுங்கண்ணா”

“ஒரு கிளிப்பு இருக்கு… ஸ்டீல் கிளிப்பு. அதை வாய்க்குள்ள போட்டுகிட்டா உதடும் தாடையும் வேறமாதிரி ஆயிடும்…ஆளே மாறினமாதிரி தெரியும். ஒரு செக்கண்டிலே போட்டுக்கிடலாம்”

“செரி … போரும்… இதுக்குமேலே என்ன?” என்றாள் ஸ்ரீதேவி.

“நீ நடையையும் பார்வையையும் மாத்திருவேல்ல… உன்னை சாமி நினைச்சா துரத்திப் பிடிச்சிரமுடியுமா?” என்றார் அச்சுதன் நாயர்.

“வாறேன் அண்ணா, டைலாக்க படிச்சுட்டு வாறேன்” என்றாள் ஸ்ரீதேவி.

அச்சுதன் நாயர் போனதும் மணி “தொடங்கலாமா?” என்றான்.

அனந்தன் படபடப்பாக அமர்ந்திருந்தான். தன்னை மீறி சிறுநீர் வெளியேறிவிடுமோ என்றுமட்டும்தான் அவன் எண்ணம் இருந்தது

ஸ்ரீதேவி “படிச்சிட்டே போவம்… எங்கெங்கே மாத்தணும்னு சொல்லுதேனோ அங்கங்க மாத்தினா போரும்” என்றாள்

வசனங்களை மாறிமாறி படித்தனர். மூன்று கதாபாத்திரங்களின் வசனங்களையும் ஸ்ரீதேவியே தன் குரலில் வாசித்தாள். அவள் சில இடங்களில் மாற்றங்கள் சொன்னாள். அவன் அதை மாற்றிக்கொண்டான். மாற்றியபின் இன்னொரு தடவை படித்தார்கள்

ஆனாலும் எப்படி அது மேடையில் நிகழவிருக்கிறது என்று அனந்தனுக்குத் தெரியவில்லை. பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் இரண்டு கதாபாத்திரங்கள் ஒரே சமயம் மேடையில் வந்தன. இரண்டு இடங்களில் மூன்று கதாபாத்திரங்களுமே மேடையில் வந்தன.

படித்து முடித்ததும் ஸ்ரீதேவி “நான் இன்னொரு தடவை படிச்சிருதேன்… நல்லா வந்திருக்கு… ஒண்ணும் பிரச்சினையில்லை” என்றாள்.

அனந்தன் “ஈஸ்வரா!” என்றான்.

லாரன்ஸ் “ஏசுவே!” என்றான்.

ராஜமணி வந்து “ஸ்டேஜுகாரனுக வந்தாச்சு… படுதா எறக்கியாச்சு” என்றான்.

“நான் வாறேன் அக்கா”.

“நீ போடே… எல்லாம் ஈஸ்வர அனுக்ரகத்தாலே நல்லா முடியும்” என்றாள் ஸ்ரீதேவி.

அனந்தன் எழுந்து மேடைக்குச் சென்றான். மாதேவன் பாட்டா வழியில் அவனிடம் “காருக்குறிச்சி திவ்யமா இருந்துதுடே… என்னமா வாசிக்கான்? என்னா சத்தம், பட்டுல்லா!” என்றார்.

அவன் புன்னகைத்தான்.

மாதேவன் பாட்டா “மறுபடி காலம்பற போடச்சொல்லுடே” என்றார்.

“சரி” என்று சொல்லிவிட்டு மேடைக்கு சென்றான். உடலெங்கும் இனிய களைப்பு இருந்தது. பதற்றம் விலகிவிட்டிருந்தது.

பள்ளிக்கூடத்தில் இருந்து எடுத்துவரப்பட்ட பெஞ்சுகளை சீராக அடுக்கிப்போட்டு சேர்த்து கட்டி அதன்மேல் சணல் சாக்குகளை விரித்து மேடை எழுப்பப் பட்டிருந்தது. மேலே எழுப்பப்பட்ட முன்பக்கம் திறந்த அரங்கில் நான்கு மூலைகளிலும் வலுவான மூங்கில்களை நட்டு ,மேலே பன்னிரு படி ஏணிகளை வைத்துச் சேர்த்து கட்டியிருந்தனர்.

செட் படுதாக்களை கயிற்றில் கட்டிக்கொண்டிருந்தார் ‘வடிவு ஏஜென்ஸீஸ்’ ஓனர் வடிவுடையான் செட்டியார். அவருடைய உதவியாளர்கள் சாஸ்தாவும் தாணப்பனும் மூங்கிலில் ஏறி இரு மூலைகளில் அமர்ந்திருந்தனர். கீழிருந்து வீசப்பட்ட கயிறுகளை பிடித்து மூங்கில் வழியாக போட்டு அப்பால் தொங்கவிட்டனர்.

வடிவுடையான் கைகாட்டிவிட்டு கீழிருந்து கயிறுகளை இழுத்தார். படுதாக்கள் சுருள் அவிழ்ந்து மேலேறின. ஒரே சமயம் மொத்த அரங்கும் மேலேறிவிட்டது. அனந்தனுக்கு புல்லரித்து கண்ணீர் மல்கியது.

வடிவுடையான் அந்தக் கயிறுகளை இழுத்துக் கட்டி இரண்டாம் முடிச்சைப் போட்டார். முகப்பின் மேல்சுருக்கு திரைச்சீலை கட்டப்பட்டது. அதன் சரடை சகடை வழியாக இழுத்து மறுபக்கம் கொண்டுவந்தனர். வடிவுடையான் அதை இருமுறை மேலும் கீழும் இழுத்து பார்த்தார். ஒவ்வொரு முறை திரை மேலெழுந்து கீழிறங்கியபோதும் அனந்தனுக்கு நெஞ்சு பதறியது.

அவன் மேக்கப் அறைக்குச் சென்றான். ராஜமணி எங்கிருந்தோ சாப்பிடுவதற்குரிய டெஸ்குகளைக் கொண்டுவந்து போட்டிருந்தான். அவற்றில் அச்சுதன் நாயர் மேக்கப் பொருட்களை எடுத்து பரப்பியிருந்தார். நிலைக்கண்ணாடி இரண்டுதான் இருந்தது.

“மேக்கப்பு போடுத பயக்களை எல்லாம் வரச்சொல்லுங்க” என்றார் அச்சுதன்நாயர்.

“நான் மேக்கப்பு போடுதேன்!” என்றான் ராஜாமணி

“உனக்கு போஸ்ட்மேன் வேசம்லா? அதுக்கு என்னத்துக்கு மேக்கப்பு?” என்றான் அனந்தன்

“எனக்கு மீசை வேணும்… இல்லேன்னா நான் இப்ப இந்த டெஸ்கையும் ஸ்டூலையும் எடுத்துக்கிட்டு போவேன்”

“மீசைய ஒட்டிவிடுங்க மாமா” என்றான் அனந்தன்.

அவன் வெளியே வந்தபோது லாரன்ஸ் ஓடிவந்தான். பதறிப்போனவனாக ‘லே அனந்தா!” என்றான்

“எங்கலே போனே?” என்றான் அனந்தன்.

“வயத்த கலக்கிப்போட்டுதுலே… ஆனா மூச்சுவிடுத மாதிரி சவுண்டாக்கும் வருது”.

“அது பெருமூச்சாக்கும்… நீ அடக்கின பெருமூச்சு அந்தாலே போவுது”.

“எனக்கு பயமாட்டு இருக்குலே…. நாடகமே மறந்துபோச்சு… மூணுரோலையும் அவளே செய்யுதா…”.

“அதுக்கு உனக்கு என்ன?”

“லே, நான் அவளை ஹீரோயினா நினைச்சுப்போட்டேன். இப்பம் அவளே வில்லி மாதிரி பேசுதா. அதுகூட போட்டுன்னு வைக்கலாம், அம்மை மாதிரியும் பேசுதாள்லே… எனக்கு ஒண்ணும் புரியல்ல” லாரன்ஸ் சொன்னான்.

“ஸ்டேஜிலே அவ குரலை மாத்திக்கிடுவா”.

“ஆளு அவதானே… அய்யோ நான் எங்கிணயாம் ஓடிருவேன்”.

“ஓடு… நீ எங்க போனாலும் நான் தேடிவந்து வெட்டுவேன்”.

மணி வந்து “அண்ணா மேக்கப்பா? எனக்கு மேக்கப்பு உண்டுல்லா?” என்றான்.

“ஆமலே… உண்டு…மேக்கப்புக்கு கெடந்து பறக்கானுக….போ போ, போயி மேக்கப்ப போடு”.என்றான் அனந்தன் ”நாடகம் பாக்க வாறவனுகளுக்கும் மேக்கப்பு உண்டுன்னா வந்து அம்மீருவானுக போல”

“ஸ்ரீதேவி என்ன செய்யுதா?” என்றான் லாரன்ஸ்.

“உறங்குதாக”.

“சாப்பிட்டாச்சா?”

“எல்லாரும் சாப்பிட்டாச்சு. அவங்க அப்டியே படுத்திட்டாங்க”.

லாரன்ஸ் ரகசியமாக “ஏன் உறங்குதா?” என்றான்.

அனந்தன் “ஜாமபூசைய முடிச்சு ஒம்பதுக்கு நடையடைப்பான். பத்துக்கு நாம ஆரம்பிப்போம். இன்னும் ஒருமணிக்கூர் இருக்குல்லா?” என்றான்.

சட்டென்று ஸ்டேஜில் “அல்லாவை நாம் தொழுதால்… சுகம் எல்லாமே ஓடி வரும்ம்ம்ம்ம்ம்ம்!!! அந்த வல்லோனை நினைத்திருந்தால்… நல்ல வாழ்க்கையும் தேடி வரும்ம்ம்ம்ம்ம்ம்!!!!” என்ற உச்சகட்டகுரல் வெடித்து எழுந்தது. சரிவிறங்கும் பஸ்ஸின் ஆரன் போல கூடவே ஆர்மோனியம் பீரிட்டது.

“என்னலே அது?” என்று திடுக்கிட்டவனாக மணி கேட்டான்

“பெட்டி சாயவு ஏளேமுக்கால் கட்டையிலே எடுத்து பாக்காரு” என்றான் லாரன்ஸ்.

“ஒரு கட்டையிலே உடைவு உண்டுண்ணு சொன்னது உண்மையாக்கும்” என்றான் மணி.

 

[ 4 ]

 

 

அனந்தன் மேக்கப் அறைக்குள் சென்றபோது இறுக்கமான சுடிதாரும் துப்பட்டாவும் அணிந்து பின்னல் இரட்டைப் போட்டு ஸ்ரீதேவி ஸ்டூலில் அமர்ந்திருந்தாள். அச்சுதன் நாயர் அவளுக்கு மேக்கப் போட்டுக்கொண்டிருந்தார்.

“அண்ணா எப்டி இருக்கு?” என்று ஒருவன் கேட்டான்.

அது மணி என்பது அதன்பிறகுதான் தெரிந்தது. “விக்கு வச்சிருக்கியா?” என்றான் அனந்தன்.

“பின்ன? நாம சோசியருல்லா?”

“ஆமாமா!” அனந்தனுக்கு நாடகமே மறந்துவிட்டது போல் இருந்தது.

கணேசன், ஞானப்பன், தேவசகாயம், குமரேசன், குணமணி, ஈஸ்வரன் நாயர், சண்முகம், முருகனடி, சுப்பையா எல்லாரும் மேக்கப் போட்டுக்கொண்டிருந்தனர். ஞானப்பன் மீசையை கோணலாக ஒட்டியிருந்தான். அதைச் சொல்லலாமா என்று எண்ணிக் கொண்டிருந்தபோது லாரன்ஸ் அவனை நோக்கி வந்தான்.

“லே, வா ஒரு விசயம்”.

“சொல்லு”.

“நான் இன்னொரு பைட்டு ஏற்பாடு ஆக்கியாச்சு”.

“ஆருகிட்ட?”

“ஞானப்பனும் நானும்”.

“டேய் ஞானப்பன் பாதிரியாராக்கும். அவரு எப்டி ஃபைட்டு?”

“எங்க ஃபாதர் பைட்டு போடுவாரு”.

“லே, வேண்டாம்லே”.

லாரன்ஸ் “நாங்க ரிகர்சல் பாத்தாச்சு” என்றான் லாரன்ஸ். ஸ்ரீதேவியை பார்த்து பரவசமாக “ஜெயபாரதி மாதிரி இருக்காள்ள்ல?”

“ஜெயபாரதியச் சொல்லாதே”.

“சும்மா சொன்னேம்ல”.

“நீ போயி ஸ்டேஜ்ல எல்லாம் இருக்கான்னு பாரு”.

அவன் சென்றதும் அனந்தன் ஞானப்பனை அணுகி “அண்ணா, உங்களுக்கு ஃபைட்டு உண்டுண்ணு லாரன்ஸ் சொன்னானா?” என்றான்.

“ஆமாம்லே”.

“அவன் ஃபைட்டுலே அண்ணனுக்க விக்கை பிடுங்கி எறிவானாம்… கூவுகதுக்கு பயக்களை ரெடியாக்கி வச்சிருக்கான்”.

“அய்யோ!” என்றார் ஞானப்பன் “ஏம்லே?”.

“அண்ணனுக்க ரோலு ஸ்டிராங்காக்கும். கைத்தட்டல் விளும்… அவனுக்கு எரியும்லா? அதாக்கும்”.

“ஓ, அதாக்குமா”.

“அண்ணன் ஆளு ஸ்டைலாக்கும்னு அவனுக்கு தெரியும்”.

“அவனுக்கு நான் வச்சிருக்கேன்”.என்றார் ஞானப்பன் “அயோக்கியப்பய…அபராதிப்பய”

“நாடகம் முடியட்டும்…நாளைக்கு பாப்பம்”.

“செரிடே….”.

நிம்மதியுடன் அனந்தன் ஸ்டேஜுக்கு போய் நாடகப்பிரதியை புரட்டிப் பார்த்தான்..

கோயிலில் செண்டை மேளம் கேட்டுக்கொண்டிருந்தது. கலாசம் கொட்டி அது ஓய்ந்தது. மணியோசை. தீபாராதனை.

அணைஞ்ச பெருமாளின் மகன் ஓடிவந்து “சினுமாப்பாட்டு போடலாமான்னு கேக்காரு” என்றான்.

“போடச்சொல்லு” என்றான் அனந்தன் “ஜெமினி பாட்டு போடு. முதல் பாட்டு எம்ஜியாரானாலும் சிவாஜியானாலும் இங்கிண அடி நடக்கும்”.

சற்றுநேரத்தில் “இயற்கை என்னும் இளையகன்னி!” ஆரம்பித்தது. அனந்தன் நாடகப் பேப்பர்களை புரட்டி பார்த்தான். சட்டென்று பீதியுடன் உணர்ந்தான், அவன் மூன்று மனிதர்களாகப் பார்த்துக் கொண்டிருந்த கதாபாத்திரங்களை நடிக்கப்போகிறவர் ஒருவர். அவனுக்கு குப்பென்று வியர்த்தது. எங்கிருக்கிறோம் என்றே கொஞ்சநேரம் தெரியவில்லை.

நாராயணன் போற்றி கையில் பிரசாதத்துடன் பின்பக்கம் வழியாக வந்தார். “நீ அங்க வருவேன்னு நினைச்சேன். செரி, இங்க பதறீட்டு நிக்கே போல. அதனால கொண்டு வந்தேன். தொட்டு நெத்தியிலே போட்டுக்க. எல்லாம் நல்லபடியா முடியும்”.

“திருமேனி, இங்க பெரிய பிரச்சினை…” என்றான் அனந்தன்

“பைசா இல்லியோ… அது நாம பாத்துக்கிடலாம்”

“அதில்லை, இண்ணைக்கு ஒராளாக்கும் மூணு ரோலும் செய்யுதது”.

“ஏண்டே?”

அனந்தன் சொன்னான். போற்றி வெற்றிலைக்கறை படிந்த வாய் காட்டிச் சிரித்து “செரிவிடு… பொம்புளைன்னா ஆரு? அவளுக ஆயிரம் வேசம் போடுவாளுக… அவளுகளுக்கு சொல்லிக் குடுக்கணுமா?” என்றார்.

“இல்லை… மூணு ரோலும்…” என்று அனந்தன் சொன்னான்

“டேய் பராசக்திக்கு இல்லாத்த முகமா? பிரம்மா, விஷ்ணு, சிவன் மூணும் அவளுக்க முகமாக்கும். மூணுதேவியும் அவளாக்கும். முப்பத்திமுக்கோடி தேவர்களும் கெந்தர்வனுங்களும் அவளுக்க முகங்களாக்கும்… சும்மா கெட”

அவர் சென்றபோது அவனுக்கு மேலும் பதற்றமாக இருந்தது. மேக்கப் முடிந்து அச்சுதன் நாயர் வந்தார். “பிள்ளை ஒரு ரெண்டுரூவா தரணும்”

“சம்பளம் அடங்கலுல்லா? நீங்க வடிவுடையான் செட்டியார்ட்ட வாங்கணும்”.

“ஆமா, அது வேற. இது சும்மா… ஒரு வாய் எரியுத வெள்ளம் குடிக்க… மேக்கப்பு போட்டிருக்குல்லா?”

அவன் இரண்டு ரூபாயை கொடுத்தான்.

“இனி நமக்கு வேலையில்ல… ஒரு வாய் குடிச்சா ஒரு எதம் கிட்டும்”

“ஸ்ரீதேவி என்ன செய்யுதா?”

“உறங்குதா… அது எப்பமும் அப்டியாக்கும்” அவர் குரல் தாழ்த்தி “ஒரு மடக்கு பிராந்தி அவளே கொண்டு வந்திருவா. தண்ணியச்சேத்து விளுங்கினா ஒரு சின்ன கறக்கம்”.

“அய்யோ”.

“டேய், அது மருந்தாக்கும்… கேரளத்திலே பல காவுகளிலே பகவதிக்கு பண்டு கள்ளு வைச்சு நைவேத்தியப் படையலு போடுகதுண்டு. இப்ப ரம்மும் பிராந்தியுமாக்கும் படையலு” என்றார் அச்சுதன் நாயர் “பிராந்தி ஹைகிளாஸாக்கும்… மணமாட்டு இருக்கும்”.

“மாமா செரியா வருமா? மூணுரோலு”

“ஏல, நாம குடிக்குததும் ஆற்றுத்தண்ணி. குளிக்குததும் குண்டி களுவுததும் அதுதான்… கங்கைக்கு கோடி முகம்… நீ தைரியமா இருலே”

அனந்தன் மீண்டும் நாடகத்தை வாசித்தான். மணி வந்து “டைம் ஆச்சு… அஞ்சுநிமிசம்!” என்றான்.

“தொடங்கிடலாமா?” என்று அனந்தன் திரையை விலக்கி வெளியே பார்த்தான். அவன் தலையை கண்டதும் வெளியே “லேய், கரடிக்குட்டி! குட்டிக்கரடி” என்று கூச்சல்கள் எழுந்தன.

“கூட்டம் வந்திருக்குலே” என்றான் அனந்தன்.

“நான் பெட்டி கிட்ட ஒரு பாட்ட பாடச்சொல்லுதேன்” என்றான் மணி. அவன் ஸ்டேஜின் வலப்பக்கம் அமர்ந்திருந்த பெட்டி சாயபுவிடம் சொல்லிவிட்டு வந்தான். அவரும் அவனுடன் எழுந்து வந்து “செய்குத்தம்பிப் பாவலர் பாட்டு ஒண்ண எடுப்பம்…. எட்டுகட்டைக்கு எடுப்பா இருக்கும்” என்றார்.

“செரி” என்றான் அனந்தன்.

பெட்டி காதர் சென்று அமர்ந்து மைக்கை தட்டினார். அதை மைக் செட் மோகனன் ஆன் செய்ததும் அது ரீரீரீ என ஓசையிட்டது. அவன் அதை சரிசெய்ததும் அமைதியாகியது. பெட்டி ஆர்மோனியத்தை ஒரே அழுத்தாக அழுத்தினார். செல்லப்பன் தபலாவை இரு கைகளும் வாசித்தார். அது துள்ளித்துள்ளிச் சென்றது.

“மைக்குச் சத்தம்போடுதே” என்றான் அனந்தன்

“அண்ணா அது அவருக்கா அறுமோணியம் சத்தம்… ரெண்டும் ஒண்ணுதான்” மணி சொன்னான்..

பெட்டி சாயவு அவரால் இயன்ற உச்சக்குரலில் “சிரமாறுடையான் செழுமா வடியைத் திரமா நினைவார் சிரமே பணிவார் பரமா தரவா பருகாருருகா, வரமா தவமே மலிவார் பொலிவார்” என்று பாடினார்.

“ஏலே, சாயவு அவருக்க சாமியவா பாடுதாரு?” என்றான் மணி.

“நம்ம சாமியத்தான்”.

“என்ன பாசையாக்கும்?” என்று மணி ரகசியமாக கேட்டான்.

“தமிளுதான்”.

சாயவு பாடினார். “அருளைப் பெருக்கி அறிவைத் திருத்தி மருளை அகற்றி மதிக்கும் தெருளை அகற்றுவதும் ஆவிக்கருந்துணை யாயின்பம் பொருத்துவதும் கல்வியென்றே! ஆஆஆ!”.

அவர் பாடி முடித்ததும் செல்லப்பன் தன் தபலாவில் தனியாவர்த்தனம் எடுத்தார். அதிவிரைவான தாளம்.

“எருமைக்கூட்டம் அத்துக்கிட்டு ஓடுதமாதிரி இருக்குண்ணே” என்றான் மணி பரவசமாக.

ஓய்ந்தபோது ஆழ்ந்த அமைதி. “லே போலே, அனௌன்ஸ் சொல்லுலே” என்றான் லாரன்ஸ். அவன் விக் வைத்து சிவப்பு பௌடர் போட்டு புருவத்தில் மையெழுதி லிப்ஸ்டிக் பூசியிருந்தான். சிவப்பு சட்டையும் வெள்ளை பாண்டும் அணிந்திருந்தான்.

அனந்தன் முன்னால் சென்று மைக்கை தொட்டு தட்டினான். “மான மகாஜனங்களே!” என்றான்

திரைக்கு அப்பால் “டேய் கரடிக்குட்டி! டேய்!”என்று ஓசை எழுந்தது “கூ! கரடிக்குட்டீ! கூ!”

“மானமகாஜனங்களே, அனைவருக்கும் அன்புவணக்கம். திருவரம்பு அமுதம் கலைக்கூடம் வழங்கும் சங்கீத சமூகசீர்திருத்த நாடகம் ‘சிவந்த தீ!’ இதோ ஆரம்பிக்கப்போகிறது”.

வெளியே கூச்சல்கள். சாயபு ஆர்மோனியத்தில் ஓர் அழுத்து அழுத்தினார். அனந்தன் அந்த கூச்சலாலேயே ஊக்கம் பெற்றான். “நம் சமூகத்திலே புரையோடிப்போயிருக்கும் அநீதிகளைச் சுட்டிக்காட்டி திருத்தும் சமூகசீர்திருத்த நாடகம் இது. ஏழைகளுக்கு நீதி எங்கே? ஒடுக்கப்பட்டோருக்கு விடுதலை எப்போது? அன்பும் அறமும் நிலவும் சமூகம் அமைவது எப்படி? விடைகாண கண்டுதெளிய பாருங்கள் சிவந்த தீ!”

சொய்ங் என்று தவலை கீழே விழுந்ததுபோல சல்லரிவட்டம் ஓசையிட்டது. அனந்தன் மேலும் ஊக்கமடைந்தான். “இந்த நாடகம் ஒரு போர்வாள்! இந்த நாடகம் உலுத்தர்களுக்கு ஓர் எச்சரிக்கை! நல்லோருக்கு ஓர் ஆறுதல்! உங்கள் ஆதரவை நாடும் திருவரம்பு அமுதம் கலைக்குழு!” மீண்டும் சொய்ங்! “சிவந்த தீ! சிவந்த தீ! சிவந்த தீ!” ஒரு சமையலறையே சரிந்து விழுவதுபோல பயங்கரமான பாத்திர ஓசை.

லாரன்ஸ் அவனிடம் கம்மிய குரலில் “பயமா இருக்குலே” என்றான்.

“முத சீன் உனக்காக்கும்… போபோ” என்றான் அனந்தன்.

லாரன்ஸ் தடுமாறி அரங்குக்குச் சென்றான். அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்து ஒரு செய்தித்தாளை பிரித்து வைத்துக்கொண்டான். அதை தலைகீழாக பிடித்திருந்தான்.

மணி “டேய், டேய், தலைகீளா பிடிச்சிருக்கே” என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே அனந்தன் விசில் ஊதினான். திரும்பி மணியிடம் எரிச்சலுடன் “என்னலே?” என்றான்.

“நூஸ்பேப்பரை தலைகீளா பிடிச்சிருக்கான்லே” என்றான் மணி

அனந்தன் தலையில் கைவைத்தான். அதற்குள் மறுபக்கமிருந்து இடுப்பில் நீர்குடத்துடன் ஸ்ரீதேவி வந்தாள்.

மைதானம் முழுக்க கிசுகிசுவென்று லாரன்ஸ் தலைகீழாக பேப்பர் படிப்பதைப் பற்றிய பேச்சு பரவி அனைவரும் சிரித்துக் கொண்டிருந்தனர்.

“தலைகீள் பேப்பரு… கூ!”

ஸ்ரீதேவி குடத்தை வைத்துவிட்டு வந்து பேப்பரை பிடுங்கி நேராக அவன் கையில் வைத்தாள். “பேப்பரை தலைகீழா வச்சா படிப்பீங்க? என்ன ஆச்சு உங்களுக்கு?”

“நான்… ஒண்ணுமில்லை” என்று லாரன்ஸ் தடுமாறினான்.

“சரி, படிப்புக்கு வேலை கிடைக்கலை…அதுக்காக? விரக்தியிலே இப்டி உக்காந்திருந்தா ஆச்சா?”

“எவன் வேலை குடுக்கறான்” என்றான் லாரன்ஸ்.

“பேப்பரை தலைகீழா படிக்கிறது மாதிரி எல்லாத்துலயும் ஒரு தலைகீழான பார்வை உங்களுக்கு… ஆயிரக்கணக்கான ஜனங்களுக்கு வேலை கிடைச்சுட்டுத்தானே இருக்கு?”

“நான் ஏன் தலைகீழா பேப்பர் படிச்சேன் தெரியுமா?”

“ஏன்?”

“உன்னை நினைச்சுட்டிருந்தேன்” என்று லாரன்ஸ் சொன்னான். “இந்த உலகமே தலைகீழா ஆயிடுச்சு!”

அனந்தன் திகைத்தான். லாரன்ஸ் மிக மிக இயல்பாக அதைச் சொன்னான். உண்மையான காதலுடன். கண்களிலும் முகத்திலும் நெகிழ்ந்த சிரிப்புடன்.

“அதுக்கு இப்டி தலைகீழா பிடிச்சு படிச்சாபோராது” என்றாள் ஸ்ரீதேவி.

“பின்ன?”

“ம்ம்? தலைகீழா நிக்கணும்”.

“வேணுமானா நிக்கிறேன்… உன் வீட்டுமுன்னாலே வந்து நிக்கவா?”

“வாங்க…எங்க அப்பாவே பிடிச்சு தலைகீழா கட்டி வைப்பார்”.

“ஒருநாள் வரத்தான் போறேன்”.

“வாங்க, ஆனா இப்படி இல்லை. ராஜகுமாரனாட்டு வரணும்”.

அவர்கள் ஒருவரை ஒருவர்  பார்த்துக்கொண்டு சிரித்துப் பேசினர். அவள் உடலசைவுகளில் காதல்கொண்ட இளம்பெண்ணின் துள்ளலும் நாணமும் தயக்கமும் வெளிவந்தன. அவனைச் சீண்டினாள். அவன் ஏதாவது பேசினாள் வாய்பொத்தி சிரித்தாள். அவன் அவள் கையை தொடவந்தபோது மிரண்டு விலகினாள். லாரன்ஸ் அவளுடன் இணைந்து அத்தருணத்தில் மெய்யாகவே காதல் கொண்டுவிட்டான் என்று தெரிந்தது.

அவள் குடத்து நீரை அள்ளி அவன்மேல் தெளித்துவிட்டு சென்றாள். அவன் சிரித்தபடி விலகினான். பின்னர் முகத்தில் பட்ட நீரை துடைத்தபடி அவள் போன வழியை பார்த்தான். அந்த நாளிதழை சுருட்டியபடி தனக்குத்தானே மகிழ்ந்துகொண்டு மேடையில் சுற்றிவந்தான்.

பெட்டி சாயபு செந்தமிழ் தேன்மொழியாள் நிலாவென சிரிக்கும் மலர்க்கொடியாள் மெட்டை வாசித்தார்.

அனந்தன் கூட்டத்தை பார்த்தான். அனைவரும் நாடகத்திற்குள் சென்றுவிட்டிருந்தனர். நாடகம் தொடங்கிவிட்டிருந்தது. நிஜமாகவே. அவன் எழுதியதிலிருந்து சற்றே விலகி. ஆனால் அதுவே ஆக.

மறுபக்கமிருந்து ஸ்ரீதேவி ஒற்றை நரைமுடிச் சரடு கொண்ட முடியை கொண்டையாக கட்டி, வெள்ளைச் சேலை உடுத்து முதிய நடையில் வந்தாள். “டேய் உங்கிட்ட கடைக்கு போகச்சொன்னேன்ல? இங்க என்ன செய்றே?” என்றாள். முதிய குரல்.

“இங்க நான்…”

“பேப்பர் படிக்கிறேன்னு சொப்பனம் கண்டுட்டு இருந்தே… தெரியும்…” என்றாள்.

“தெரியும்ல? பின்ன என்ன?”

“டேய், அவ நமக்கு செரியாக மாட்டா. அவ யாரு, நாம யாரு? உன்னை உங்கப்பா எப்டி கஷ்டப்பட்டு படிக்க வைச்சார்… இப்ப அந்த மனுசன் இல்லை. உன்னை நம்பித்தான் குடும்பமே இருக்கு…” ஈஸ்வரியம்மா சொன்னாள்.

“அதுக்காக நான் சாக முடியாதுல்ல?”

“சாகச் சொல்லல, வாழச்சொல்லுறேன்… சும்மா சொப்பனம் கண்டுட்டு இருக்காம உருப்படியா ஏதாவது வேலையை தேடிட்டு மனுஷனா வாழச்சொல்றேன்”.

“நானும் அதைத்தான் சொல்றேன். நான் மனுஷனாத்தான் வாழ்வேன், மிருகமா வாழமாட்டேன். நாய்ப்பொழைப்பு ,சேத்துப்பண்ணிப் பொழைப்பு எனக்கு வேண்டாம்”.

அனந்தன் லாரன்ஸின் முகத்தை பார்த்து திகைத்தான். உண்மையான கோபம். உண்மையான உடல்நடுக்கம்.

“மனுசனுக்கு இருக்கிற முதல் சுதந்திரம் அவனுக்க வாழ்க்கையை அவனே முடிவெடுக்குறது. குடும்பம் கடமை, மண்ணு, மட்டை எல்லாத்தையும் அவன் தலையிலே கட்டி வைங்க… அவனை மண்ணோட மண்ணா மிதிச்சு தாழ்த்துங்க.. ஆயிரம் ஆண்டுகளா இங்க அதுதானே நடக்குது? எதிர்த்து கேக்காம இருக்கிறவன் யோக்கியன். அடிபணிஞ்சு நாயா வாலாட்டி வாழுறவன் நல்லவன்” என்றான் லாரன்ஸ்

‘நல்லவனா வாழுறவன்தான் வாழுறான்”என்றாள் ஈஸ்வரியம்மா

லாரன்ஸ் ஆவேசமாக கையை நீட்டி “நான் நல்லவன் இல்லை. நான் அயோக்கியன், நான் கிறுக்கன். ஆனா மனுஷன். ஆமா வெறும் மனுஷன் போருமா?”

“இப்ப எதுக்கு கத்துறே? அப்ப இந்த குடும்பத்துக்கு கடமைன்னு ஒண்ணு உனக்கு இல்லியா?”

“என்ன கடமை? அந்தா நீ வளக்குற எருமை நிக்குது. நீ தீனி போடுறே, அது பாலு குடுக்குது. நான் இன்னொரு எருமை. திங்கிறியே, ஏன் கறக்கலைன்னு கேக்குறே… கறக்குறேன், என் ரத்தத்தை கறந்து குடுக்கறேன். போருமா? போருமா உனக்கு”.

ஈஸ்வரியம்மா தணிந்து “இல்ல மக்கா, சொன்னதை கேளு. மனுஷங்க சுதந்திரமானவங்கதான். அது மனசுக்குள்ள உள்ள சுதந்திரம். ஆனா வெளியே நாம ஒண்ணோடொண்ணு சேந்துதான் வாழமுடியும். நான் உன் அம்மா. நீ படிக்கணும்னு கடைசி தங்கத்தையும் வித்தவ. உனக்காக ராத்திரி பகலா புல்லுபறிச்சு சாணிவழிச்சு வாழ்ந்தவ… எந்த அம்மாவாவது தன்னோட சுதந்திரம்னு நினைச்சு பெத்த பிள்ளைய பட்டினிபோடமுடியுமா? சொல்லு… அப்ப சுதந்திரம் எங்க இருக்கு?”

“எங்கயும் இல்ல… எந்த உயிருமே சுதந்திரமா இல்லை” என்று லாரன்ஸ் உடைந்த குரலில் சொன்னான்.

“கடமையைச் செஞ்சா உரிமை தானா வரும்… அதான் சுதந்திரம்”.

“இந்த பேச்செல்லாம் நான் நிறையவே கேட்டாச்சு” என்றான் லாரன்ஸ். “பகவத் கீதையை வச்சு அடிச்சே கொல்லுங்க”.

“ஒண்ணு நெனைச்சுக்கோ, அடிக்கடி காதிலே விழுறதுதான் எப்பவுமே உண்மை. அது அடிக்கடி காதிலே விழுறதினாலேயே அது நமக்கு சலிச்சிருக்கும். அதை நாம மறுக்க முடியாதுங்கிறதனாலேயே நமக்கு அதன்மேலே எரிச்சல் வரும். ஆனா அத்தனை பேருக்கும் தெரியறதுனாலேதானே அதை அடிக்கடி கேட்கிறோம்?. மலைமாதிரி அது கண்முன்னாடி நிக்குது, அதை நம்மால கண்ணமூடி மறைச்சிர முடியாது”

“நீ போ… உள்ள போ… எனக்கு உன் பிரசங்கத்தை கேக்க நேரமில்லை”

“கண்ணா, நான் சொல்றதை கேளு…நீ கனவு கண்டுட்டே இருக்கே. அது உன்னோட வயசு. நீ கூட்டுப்புழு மாதிரி. ஆனா உள்ளேயே எவ்ளவுநாள் இருப்பே? சிறகு முளைக்கவேண்டாமா? வெளியவந்து பறக்கவேண்டாமா?”

“கூட்டோட அப்டியே பிடிச்சு வெந்நியிலே போட்டு கொல்லுது இந்த சமூகம்.. எங்க ஆத்மாவை பட்டா நெய்து போட்டுக்கிடுறாங்க ஆண்டைங்க”

”நான் பேச வரலை… உன் மனசுக்கே தெரியும்” என்றாள் ஈஸ்வரியம்மா

“நான் போறேன்… இங்க உக்காந்து உன் பேச்சை கேக்க எனக்கு நேரமில்லை”.

“சரி சரி…. கோவிச்சுக்காதே… வா தோசை ஊத்தி தாறேன்”.

“தோசையும் வேண்டாம் ஒண்ணும் வேண்டாம்”.

“செரி, நீ இங்க இரு…. நானே கொண்டுவாறேன்”.

“வேண்டாம்னு சொன்னேன்ல?”

“செரி, நீ இங்க உக்காந்து அவளைச் சொப்பனம் கண்டுட்டே சாப்பிடு..” என்று ஈஸ்வரியம்மா சிரித்தபடியே சொன்னாள்.

“போ” என்றான் லாரன்ஸ், அவன் புன்னகைத்துவிட்டான்.

“என் தங்கக்கொடம் இல்ல… இங்க உக்காரு… அம்மா இந்தா வந்திருதேன்”.

அவள் உள்ளே சென்றாள். அப்போது மறுபக்கம் மோகனாவின் குரல் கேட்டது. “என்ன சொப்பனம் கண்டாச்சா?”

“போடி” என்றான் லாரன்ஸ்.

“என்ன சொப்பனம்?”

“ஒரு பேயை”.

மோகனா சிரித்தாள்.

“மோகினிப் பேயா?”

லாரன்ஸ் சிரித்தான். “ஆமா, ரத்தம் குடிக்குது”.

“ரத்தம் நல்ல தேனாட்டு இனிக்குது” என்று அவள் வாயை சப்புக்கொட்டும் ஒலி.

லாரன்ஸும் மோகனாவும் சிரித்தார்கள்.

உள்ளிருந்து தட்டில் தோசையுடன் ஸ்ரீதேவி வந்தாள். “ஆருடா அது?”

“அவதான்”

“அவ எதுக்கு இங்க வரா? தண்ணி எடுத்துட்டு போக வேற வழியா இல்ல?”

லாரன்ஸ் “அவ தெருவிலேதானே போறா?” என்றான்.

“ஊரெல்லாம் தெரு இருக்கே” என்றபின் ஸ்ரீதேவி உள்ளே சென்றாள்.

லாரன்ஸ் அமர்ந்து தோசையை சாப்பிட ஆரம்பித்தபோது வெளியே குரல் கேட்டது “யாரு வீட்டிலே?”

அது ‘வட்டி’ ராஜம்மையின் குரல் “வீட்டிலே ஆரு?”

லாரன்ஸ் “என்ன வேணும்?” என்றான்.

ஸ்ரீதேவி சிவப்பு அங்கி அணிந்து, சுருள்முடியும் மரு ஒட்டிய முகமும் கொண்டு, சற்றே விந்தியபடி நடந்துவந்தாள். வாய் இழுபட்டு ஒரு நிரந்தரமான இளிப்பு. “டேய் எங்கலே உங்க அம்மா?”

“உள்ள கைவேலையா இருக்காங்க”

“கைவேலையோ, கால்வேலையோ, வட்டி வரவேண்டிய நேரத்திலே வந்திடணும்… தெரியும்ல? இல்லேன்னா சிலசமயம் கையும் இருக்காது காலும் இருக்காது”

“வட்டிதானே? குடுத்திடறோம்”

“நான் என்ன அசலையா கேட்டேன்? அசலு வேரு மாதிரி… அதை எடுக்கமாட்டோம். வெட்ட வெட்ட முளைச்சிட்டே இருக்கும்…”

உள்ளே ஈஸ்வரியம்மா “யாருடா அது?” என்றாள்.

“நம்ம வட்டி ராஜம்மை… வந்து என்னான்னு கேளு” என்றான் லாரன்ஸ்.

“குளிச்சிட்டிருக்கேண்டா”.

வட்டி ராஜம்மை “அவங்க வரட்டும்… நான் உங்கிட்ட பேசுதேன்… எப்ப வேலைக்கு போவே? எப்ப பைசாவ திருப்பி தருவே?”என்றாள்.

“போறேன்”.

“என்னவேலை? நக்ஸலைட்டு வேலையா?”

“சில சமயம் அதுக்கும் போகவேண்டியிருக்கும்”.

“போ போ…. நீ கடைசியிலே அங்கதான் போவே” என்று வட்டி ராஜம்மை சிரித்தாள்.

“உங்க ஆட்டத்தை முடிக்க நக்சலைட்டுகளாலத்தான் முடியும்”.

வட்டி ராஜம்மா உரக்க சிரித்தாள். “தம்பி, நம்ம பேரு வட்டி ராஜம்மை. வட்டின்னா என்ன? பணத்துக்கு குடுக்கிற லாபம். எதுக்கு அதை குடுக்கிறே? சொல்லு. என் பணம் உங்கிட்ட இருந்தா நீ எனக்கு வட்டி குடுக்கிறே.சரி, ஏன் அதை என் பணம்னு சம்மதிக்கிறே? ஏன்னா சம்மதிக்கலைன்னா சர்க்கார் உன்னை திருடன்னு சொல்லி ஜெயிலிலே போடும். அப்ப இந்த வட்டிக்கு காவலன் யாரு? சர்க்காரு”.

“அந்த சர்க்காரை நாங்க மாத்திக்காட்டுறோம்”.

“அந்த சர்க்காரை யாரு பாதுகாக்கிறது? பட்டாளம். பட்டாளம் ஏன் சர்க்காரை பாதுகாக்குது? அதுக்கு சர்க்கார் மேலே நம்பிக்கை இருக்கு. அந்த நம்பிக்கை எப்டி வருது? அது இந்த சமூகத்துக்கு இருக்கிற நம்பிக்கை. நூறுவருசமா ஆயிரம் வருசமா வழிவழியா வாற நம்பிக்கை அது”.

வட்டி ராஜம்மை அவன் தோளில் கைவைத்து “நீ சின்ன பையன்… உனக்கு தெரியாது. நான் இப்ப வட்டி ராஜம்மை. எங்க அப்பா சிண்டன் நாயர் பழைய திருவிதாங்கூரிலே வரிவசூல் பண்ணின அதிகாரி. அவங்க அப்பா படை நடத்தினவரு… அப்ப வாளிலே அதிகாரம். இப்ப பணத்திலே அதிகாரம்… எங்க அதிகாரத்தை உடைக்க உன்னோட நக்ஸலிசத்தாலே முடியாது”.

“அப்ப உன்னை ஜெயிக்கவே முடியாதுன்னு நினைக்கிறியா? நீ என்ன தெய்வமா?”

“ஆமா, தெய்வம்தான். ஒரு தெய்வத்தை ஜெயிக்க இன்னொரு தெய்வத்தாலேதான் முடியும்…” என்று வட்டி ராஜம்மா சொன்னாள் ”இந்த தெய்வத்துக்கு கோழி பலி குடுத்தா அந்த தெய்வத்துக்கு ஆடு வெட்டி பலி குடுக்கணும்… அஹ்ஹஹ்ஹஹா!” அவள் அவன் தோளை உலுக்கி “வரட்டா? வட்டிப்பணம் இண்ணைக்கு சாயங்காலத்தோட வந்து சேந்திருக்கணும்… இல்லேன்னா நடக்கிறதே வேற”என்றாள்.

அவள் திரும்பி “ஈஸ்வரியம்மா!” என்றாள்.

“இதோ வாறேன்”.

“வரவேண்டாம், நான் கெளம்பறேன்… வட்டியோட வந்து பாத்தா போரும்”.

அவள் செல்வதை லாரன்ஸ் சீற்றத்துடன் பார்த்து நின்றான். கோபத்துடன் செய்தித்தாளை கீழே வீசினான். மறுபக்கம் ஸ்ரீதேவி ஈஸ்வரியம்மாவாக வந்தாள். குளித்து துண்டை தலையில் கட்டியிருந்தாள்.

“அதாருடா அது, வட்டி ராஜம்மாவா?”

“இல்லை, இந்த நாட்டை ஆட்சி செய்ற தெய்வம்” என்று லாரன்ஸ் சொன்னான்.

“ஆமா. தெய்வம்தான்… எல்லா தெய்வத்துக்கும் படையல் போடவேண்டியிருக்கு”.

“நான் போடுறேன் படையலு… ரத்தப்படையல்”.

“டேய் என்னடா சொல்றே?

“அதான் சொல்லிட்டேன்ல?”

லாரன்ஸ் ஆவேசமாக வெளியே செல்ல திகைத்தவளாக ஈஸ்வரியம்மா பார்த்து நின்றாள்.

பெட்டி காதர் “வென்றிடுமோ வேரின்றி நின்றிடுமோ தர்மம்தான்! இப்புவியில் என்றுதான் காய்ந்திடுமோ ஏழைகளின் கண்ணீரே!ஆஆ!ஆஆ!” என்று தொடங்கினார். தபாலா ஓசை உடன் இணைந்துகொண்டது.

அனந்தன் விசிலை ஊதிவிட்டு கண்மூடி அமர்ந்தான். திரை சரிந்தது. வெளியே கைதட்டல்கள், விசிலோசைகள். அனந்தனின் உடல் நடுங்கிக்கொண்டிருந்தது

 

[ 5 ]

 

அனந்தன் ஸ்டேஜின் கீழே நின்றான். அவனைச் சூழ்ந்து ஊரிலிருந்த முகங்கள் முட்டி மோதின.

ஆசாரி நாணுக்குட்டன் “மக்களே கொச்சு கரடி, நீ கலாகாரனாக்கும் கேட்டியா?” என்றார்.

செவத்தபெருமாள் “நான் அளுதுபோட்டேன்… பெத்த மகனை விட்டுட்டு அந்த பொம்புளை படுத பாடு…” என்றார்

“ஒரு வசனம் வருதுல்லா? நல்லதெல்லாம் சாமிக்கு படையலுன்னுட்டு… இப்ப நக்சலைட்டுன்னு சாவுத பயக்கள்லாம் ஆரு? நல்லா படிக்குத பயக்களாக்குமே” என்றார் குமார நாடார்.

கைதமுக்கு நாராயணி அம்மச்சி “அந்த சின்னக்குட்டியும் பயலுக்க அம்மையா வாறவளும் நல்லா நடிச்சாளுக… அருமையாட்டு இருந்தது. ஆனா அந்த அறுதலிமூதி வட்டி ராஜம்மை இருக்காளே, அவ வெளங்குவாளா? அவளை சுட்டெரிக்க சாமி இல்லியே…” என்றாள்.

‘குண்டணி’ காளிக்குட்டி பாட்டி “மக்களே, அடுத்த நாடகத்திலே இவளுக ரெண்டாளும் போரும் என்னா? அந்த மூதேவி வேண்டாம்… அவளும் அவளுக்க மூஞ்சிக்கட்டையும்” என்றாள்.

மாதேவன் பாட்டா “நல்லா இருந்துதுடே… மூணு பொண்ணாப் பொறந்தாள்களும் நல்லா நடிச்சாளுக”

“நம்ம லாரன்ஸு பய கலக்கி முத்தெடுத்துப்போட்டானே”.

“அவன் நல்ல நடிப்பான் பாத்துக்க”.

“நாடகம் உருக்கிப்போட்டுது”

“சின்னப் பயக்களுக்கு படிச்சு வேலையில்லேன்னா கஷ்டம்லா?”

“நக்சலைட்டுன்னு சொல்லுதான், அவனுக நியாயம் பேசுதவனுகளாக்குமே!”.

“நியாயம்பேசினா சர்க்காருக்கு பிடிக்காதுல்லா!”

ஒவ்வொருவரும் அவன் கையை பற்றி இழுத்தனர். தோளை பிடித்து உலுக்கினர். கன்னத்தை வழித்து நெட்டி முறித்தனர்.

“அந்த வட்டி ராஜம்மைய பாத்து ஒரு நாலு நாறவார்த்தை சொல்லணும்லே” என்றார் ஜோசப்பு “எளவு என்னா நெல நிக்கா!”

“இந்த மோகனாக்குட்டி இருந்ததனாலே நாடகம் வெளங்கிச்சு…”

“செரி செரி போங்க நாடகம் முடிஞ்சாச்சுல்லா?” என்றார் பாட்டா.

ஒவ்வொருவராக விலகிச் செல்ல மெதுவாக முற்றம் காலியாகியது. கடலைப் பொட்டலக் காகிதங்களும் இலைகளும் பரவிய கோயில்முற்றம் வெறுமைகொண்டு கிடந்தது. குழல்விளக்குகளின் வெளிச்சம் மெல்ல அதன்மேல் அதிர்ந்தது.

போற்றி வந்தார். “டேய் நல்லா நடிச்சாளுக மூணு பொம்புளைகளும். அப்டி ஒரு நடிப்பு…. நான் ஒருத்தியத்தான் பாத்தேன். மத்த ரெண்டாளும் எப்ப வந்தாக?”

“பிறவு” என்றான் அனந்தன்

“இந்தா கரி கொண்டுவந்திருக்கேன்… நெத்தியிலே போட்டுக்க… கண்ணுபடப்போவுது” என்றார் போற்றி “உனக்க அப்பன் வந்து நின்னு பாத்துட்டு போனான்”

“வந்தாரா?”

“வராம இருப்பனா? ஆனால் யாராவது பாத்தா மோசம்லா? அதான் தேவ்டியாகுடிக்கு போறமாதிரி துணிபோட்டு தலைய மூடிட்டு நின்னு பாத்தான். நான் சொன்னேன், பய ஜெயிச்சுப் போட்டானேன்னு. ஒண்ணும் சொல்லாம போனான். ஆனா முகம் மலந்துபோச்சு…”

அனந்தன் புன்னகைத்தான்.

“இனி ஒரு பத்துநாள் நாம இந்த நாடகத்தை புகழ்ந்து அவன்கிட்ட பேசணும்… அதைக் கேட்டாத்தான் அவன் மனசு ஆறும்… கிறுக்கனாக்கும்” என்றார் போற்றி “வரட்டா பனி விள தொடங்கியாச்சு”.

அவர் சென்றதை அனந்தன் வெறுமே பார்த்துக்கொண்டு நின்றான் “செட்டு அவுக்கலாம்லா?” என்றார் வடிவுடையான்.

“அவுக்கலாம்”.

அவரும் உதவியாளர்களும் கயிறுகள் அனைத்தையும் அவிழ்த்தனர். வடிவுடையான் “ஜெயமாருதீ” என்றார். அனைவரும் சேர்ந்து கயிறுகளை விட சட்டென்று மொத்த சீன் திரைகளும் சேர்ந்து சரிந்து மேடையில் துணிக்குவியலாக ஆயின

அனந்தன் தன்மேல் குளிர்ந்த ஏதோ வந்து அறைந்ததுபோல் உணர்ந்தான். கால்கள் நடுநடுங்கின. மேடை அப்படியே மறைந்துவிட்டது. அவன் பார்த்துக் கொண்டே நின்றான். பின் பெருமூச்சுவிட்டான்.

மிக விரைவாக வடிவுடையானும் உதவியாளர்களும் திரைச்சீலைகளை மடித்துச் சுருட்டிக் கொண்டிருந்தனர்.

தேவஸ்வம் கட்டிடத்திற்குச் செல்லும்போது அனந்தன் தன் களைப்பும் தளர்வும் மறைந்துவிட்டிருப்பதை உணர்ந்தான். கணம் கணமாக விடுபட்டபடியே வந்தான். அந்த நாடகத்தின் கரு எட்டு மாதங்களுக்கு முன் மனதில் தோன்றியது. ஈஸ்வர வாரியரின் மகன் ராஜன் கொல்லப்பட்ட செய்தியை வாசித்தபோது எழுந்த ஓர் அதிர்வு.

அது ஆழ்ந்த அமைதியன்மையாக நீடித்தது. வளர்ந்துகொண்டே இருந்தது. ராஜனாகவும் ஈஸ்வர வாரியராகவும் அவனே மாறினான். அவனே மாறிமாறி பேசிக்கொண்டான். முட்டி மோதிக்கொண்டான். பின்பு ஒரு கதையாக எழுதினான். அது செயற்கையாக இருந்தது. கிழித்து வீசிவிட்டு விம்மி அழுதான். தலையை அறைந்துகொண்டான். பித்துப்பிடித்து பதினைந்து நாள் அலைந்தான். பிறகு நாடகமாக எழுதினான்.

நாடகமாக அது மாறியதுமே அதை லாரன்ஸுக்குத்தான் வாசிக்கக் கொடுத்தான். அவன் அதை வாசித்துவிட்டு குமுறிக்குமுறி அழுதான். அதை நடிப்பதென்று முடிவெடுத்தனர். பணம் தேடினர். ஆள் தேடினர். பயிற்றுவித்தனர். பதற்றம், ஆற்றாமை, கொந்தளிப்பு. நாடகம் தொடங்கியதும் பரவசம். பின்னர் பாராட்டுக்களின் திளைப்பு. நான் நான் நான் என திமிர்த்து எழுந்த ஆணவம். ஒரு கணத்தில் அனைத்தும் விலக அறுந்து விழுந்து மண்ணில் நின்றான். அந்த நாடகம் எங்கோ என்றோ எவரோ நடித்ததாக ஆகிவிட்டிருந்தது.

தேவஸ்வம் கட்டிடத்தில் கொண்டாட்டம் தொடங்கியிருந்தது. ராஜமணி உள்ளூர் சாராயப்புட்டிகளை கொண்டுவந்து வைத்திருந்தான். பெரும்பாலானவர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் திளைத்தபடி தொட்டி மீன்கள் போல சுற்றிச்சுற்றி வந்தனர்.

’சட்டி’ செல்லப்பன் அவனை நோக்கி வந்து “மைனரே, நீ ஆர்ட்டிஸ்டாக்கும். நீ நம்ம கூட வா. நீ நாடகம் எளுது, நான் வாசிக்குதேன். தாயளி, இந்த ஊரிலே இனி ஒருத்தனும் நாடகம் போடப்பிடாது” என்றார்.

அனந்தன் புன்னகைத்தான்.

மணி “உன்னாணை அண்ணா, நான் உண்மையிலேயே மூணு நடிகை இருக்கான்னு நினைச்சுட்டேன்… அப்டியே நம்பிட்டேன்”

“அத்தனைபேரும் அப்டி நம்பிட்டானுக… அதாக்கும் நாடகம் சக்ஸஸ் ஆச்சு” என்றான் ராஜமணி.

“மக்கா ஒண்ணு சொல்லுதேன் கேளு. ஒரு நாடகம் தொடங்கின பத்துநிமிசத்திலே தெரிஞ்சிரும் , நாடகம் எடுக்குமா விளுமான்னு… நல்லா நாடகம் அப்டியே மேலே தூக்கும். முக்கியமா நடிக்குதவங்க கதைக்குள்ள போயி அந்த கதாபாத்திரமாட்டே ஆயிடுவாங்க. அவங்களுக்க உணர்ச்சிகளை பாத்து மத்தவனுகளும் உள்ள போயிடுவானுக. பின்ன அங்க நடக்குத நாடகம் நாம நடத்துகது இல்லை. அதுவே நடக்குததாக்கும்”

“இருந்தாலும் மூணுவேசத்தை ஒராளு போடுறதுண்ணா” என்றான் ஞானப்பன்.

“அது கலை… அதைப்பத்தி மனுசன் பேசிக்கிட முடியாது” என்றார் செல்லப்பன் “மக்களே அனந்தா, நீ ஆர்ட்டிஸ்டு. இந்தா அண்ணன் தாறேன், ஒரு ஏத்து ஏத்து. கலைமகளுக்கு பிடிச்சதாக்கும் வாற்றுசாராயம்”.

“இல்ல வேண்டாம்”.

“ஏன்?”

“அப்பா அடிப்பாரு”.

“தாயோளிய போவச்சொல்லு. டேய் இங்க பாரு, எப்ப பெத்த அப்பன் முகத்தை பாத்து கெட்டவார்த்தை சொல்லுதியோ அப்பதான் நீ முளுக்கலைஞன்”.

“வேண்டாம்ணா”.

“செரி, போ… எங்க போவே?”

மொத்த நடிகர்களுமே ஏற்கனவே போதையில் இருந்தனர். மூலையில் ஆர்மோனியத்தை தலைக்கு வைத்து பெட்டி காதர் படுத்திருந்தார்.

“வணக்கம் சாயவு, நம்ம லாரன்ஸை பாத்தியளா?”

“இல்ல, அந்தாலே குடிக்காரோ என்னமோ”

“அவன் குடிக்க மாட்டானே”.

“இது குடிக்க வச்சிரும். இதொரு போதையில்லா” என்றார் பெட்டி காதர். “நான் கண்ணைமூடிட்டு யா அல்லான்னு அப்டியே படுத்திருவேன்… நம்ம பாட்டு எப்டி? தூக்கிட்டோம்ல? எட்டுக்கட்டையிலே எடுக்கிறப்ப அப்டியே ஒரு விறையல் வரும் பாருங்க… எனக்கே சிலுத்துப்போச்சு”

“ரொம்ப நல்லா இருந்திச்சு சாய்வு… இப்ப வாறேன்”.

உள்ளறைக்கு வெளியே திண்ணையில் லாரன்ஸ் தனியாக அமர்ந்திருந்தான்.

“லே, இங்க என்ன செய்யுதே?”

“ஒண்ணுமில்ல”.

“என்னலே”.

“ஒண்ணுமில்லை” என்று அவன் எழுந்தான் “லே நான் நல்லா நடிச்சேனா?”

“நல்லாவா? நீ நடிக்கல்ல. ராஜாவா அங்க நின்னே… செத்துபோன ராஜனுக்க ஆத்மா அளுதிருக்கும்லே”.

“எப்டி நடிச்சேன்னே தெரியல்ல” என்று அவன் அனந்தனின் கையை பிடித்தான். “எனக்கு என்னமோ ஒரு மாதிரி ஆயிரிச்சு. இந்த அம்மா அப்டியே நம்மளைச் சுத்திகிட்டாங்கலே.. இந்தப்பக்கம் ஹீரோயின், அந்தப்பக்கம் அம்மா, அந்தப்பக்கம் வில்லி. எங்க நிக்காங்க எங்க வாறாங்கன்னு தெரியல்ல”

“ஆமா நான் உண்மையிலே மறந்துட்டேன்… மூணுபேருண்ணே நினைச்சேன். நாடகம் முடிஞ்சபிறவுதான் அய்யய்யோ ஒரு ஆளுல்லா மூணும்னு நினைச்சு அப்டியே வெறைச்சிட்டேன்” என்றான் அனந்தன்

“எனக்கு எப்டி இருந்திருக்கும் நினைச்சுப்பாரு. எல்லாம் ஒரு பெரிய சொப்பனம் மாதிரி ஆயிப்போட்டுது. காதலிக்குள்ள அம்மை இருக்கா. அம்மைக்குள்ள காதலி இருக்கா. வில்லியாவும் இருக்காங்க. எல்லாம் கலந்து….யம்மா. வெளியே வர முடியல்லடே”

“வெளிய வந்தாகணும்… நான் வெளியே வந்தாச்சு…” அனந்தனுக்கு ஓர் எண்ணம் வந்தது . “லே நீ வா சொல்லுதேன்”.

“எங்க?”

“ஸ்ரீதேவியை பாப்பம்”.

“இல்லலே, என்னாலே பாக்க முடியாது”

“பாப்பம்லே… அவங்கள மறுபடி ஸ்ரீதேவியா பாத்தா எல்லாம் செரியாயிடும்”.

“இல்லலே மக்கா”.

“வாலே”.

அவனை அனந்தன் கைபிடித்து இழுத்துச் சென்றான். தேவஸ்வம் கட்டிடம் ஒரு கூடமும் ஒரு சிறிய அறையும் கொண்டது. அந்தச் சிறிய அறையின் வாசல் பூட்டப்பட்டிருந்தது.

அனந்தன் அதை தட்டினான்.

“அக்கா, ஸ்ரீதேவி அக்கா!”

ஸ்ரீதேவி கதவைத் திறந்து “என்னடே? நான் தூங்கணும்ல?”

“இவன் கிட்ட பேசுங்க… இல்லேன்னா இவன் செத்திருவான்”.

“என்னலே மக்கா?” என்றார் ஸ்ரீதேவி.

சட்டென்று ஒரு விசும்பலோசையுடன் லாரன்ஸ் ஸ்ரீதேவியின் காலடியில் விழுந்தான்.

“அய்யய்ய என்ன இது!” என்று ஸ்ரீதேவி குனிந்து அவனை தூக்கி சேர்த்து அணைத்துக்கொண்டாள். அவன் தலையை வருடி “என்னடே மக்கா இது… வேண்டாம்.. கண்ணைத்தொடை” என்றாள்.

***

முந்தைய கட்டுரைநற்றுணை, கூடு- கடிதங்கள்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–61