நற்றுணை [சிறுகதை]
அன்புள்ள ஜெ
பல்வேறு நுட்பமான குறிப்புக்களால் ஆன நற்றுணையை முழுமையாகவே வாசித்துவிடவேண்டும் என்று முயன்றேன். எல்லாச் செய்திகளையும் ஆராய்ந்து தேர்வுசெய்தேன். செய்திகளை தொகுக்கத் தொகுக்க கதை விரிந்துகொண்டே சென்றது. பண்பாட்டுச்செய்திகளை அடுக்கி அடுக்கி பெரிய கட்டமைப்பாக நாவலை உருவாக்குவது என்பது இன்று இலத்தீன் அமெரிக்காவில் உள்ள நவீன எழுத்தின் வழி. ராபர்ட்டோ பொலானோ போன்றவர்களின் எழுத்துமுறை. இதிலுள்ள செய்திகளின் அடர்த்தியும் சகஜமாக அவை புனைவால் ஒருங்கிணைக்கப்பட்டிருப்பதும் ஆச்சரியத்தை அளித்தது
மேரி புன்னன் லூக்கோஸ் |
ஓமன குஞ்ஞம்மா |
அன்னா ராஜம் |
அன்னா சாண்டி |
அலக்ஸாண்டர் மிச்செல் |
திருநயினார்க்குறிச்சி பௌத்த – சமண தலமாகவே இருந்திருக்கிறது. திருவள்ளுவர் அங்கே பிறந்தார் என்ற செய்தி அந்த நம்பிக்கையில் இருந்து வந்ததுதான். அங்கிருக்கும் கரைகண்டேஸ்வரர் கோயிலில் கர மகரிஷியின் ஒரு பீடம் வழிபடப்படுகிறது. அங்கே நாகரஜா நாகயட்சிகள் நிறைய உள்ளனர். கரமகரிஷி ஒரு பௌத்த வழிபாட்டின் தொடர்ச்சி என்று சொல்லப்படுகிறது
பௌத்த மரபிலுள்ள தாராதேவி இந்து மரபில் உள்ள சரஸ்வதிக்கும் வாக்தேவிக்கும் சமானமானவள். அந்த தாராதேவிக்கு 108 யட்சிகள் பாதுகாப்பு. அந்த யட்சிகளில் ஒருத்திதான் கேசினி. கதையில் வருவது புத்தர் கோயில். அந்த 9 யட்சி பெயர்களுமே பௌத்த யட்சிகள்தான்
மேரி புன்னன் லூக்கோஸ் நாகர்கோயில் ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியை நிறுவியவர். பியாட்ரீஸ் டதிதான் நாகர்கோயிலில் பெண்கல்விக்கு அடித்தளம் இட்டவர். அவருடைய டதி ஸ்கூல் இப்போதும் இருக்கிறது. ஹெப்ஸிபா ஜேசுதாசன் அவருடைய மாணவர். அவரைப்பற்றி ஒரு சுயகுறிப்பில் எழுதியிருக்கிறார்.
மிச்செல்துரையும் வரலாற்று மனிதர்தான். மற்ற ஆளுமைகளும் வரலாற்று மனிதர்களே. இத்தனைபேர் வழியாக ஒரு வரலாறு நிகழ்ந்து முடிகிறது. அந்த வரலாறு நிஜம் அதன் வழியாக ஓடிச்செல்லும் புத்தரின் கொடூரமான கருணைதான் கேசினி
சாரங்கன்
***
பியாட்ரீஸ் டதி 1
பியாட்ரீஸ் டதி 2
மேரி புன்னன் லூக்கோஸ்
அன்னா சாண்டி
அன்னா ராஜம்
திருநயினார்க்குறிச்சி
The Problem We All Live With
அலக்ஸாண்டர் மிச்சல்
அன்புநிறை ஜெ,
நூற்றாண்டுகளுக்கு முன் நடந்த கதை நற்றுணை. எங்குமே முதல் வழியைத் திறப்பது எதிர்ப்புகள் நிறைந்தது. எனில் அதன் முழுவீச்சையும் புரிந்து கொள்ள விரிவான பின்புலத்தின் சித்திரம் அவசியமாகிறது. அன்றைய இறுக்கமான சமூக குடும்பக் கட்டமைப்பும் அதன் அழுத்தத்தையும் மிக விரிவாக எழுதியிருப்பதன் அவசியம் இருக்கிறது. அதில்லாமல் இன்றைய சூழலில் அதன் இடர்களையும் அதை மீறி வெடித்துக் கிளம்பும் வேகத்தையும் இன்றைய மனம் புரிந்து கொள்வது கடினம்.
அன்றைய சமூகச் சித்திரம் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. கீழ்சாதிக்காரன் கண்ணில் படாது கற்புக்குப் போடப்பட்ட பூட்டு மண்ணாப்பேடி, புலைப்பேடி என்ற அடிமை வணிகங்களுக்கு வழி வகுத்ததும், ‘படியடைத்து பிண்டம்வைத்தல்’ வழியாக அறுந்த வாலென அப்பெண்களை உதிர்த்து விட்டுக் குடும்பம் நழுவி விடுவதும் அறிந்திராத செய்திகள். குலக்கலப்பினின்று பாதுகாத்துக் கொள்ளத்தான் எத்தனை இறுக்கமான பூட்டுகள்.அந்த வீட்டின் அமைப்பும் திட்டவட்டமான விதிகளுமே அன்றைய நிலவுடைமை, சாதி மற்றும் ஆணாதிக்க சமூகத்தின் அழுத்தத்தைத் தெளிவாக உணர்த்துகின்றன.
இக்கதையை வாசித்ததும் வெறும் புனைவாக எண்ண இயலாது உணர்ச்சிகள் மேலிட்டன. இக்கதை நிகழும் காலத்துக்கு வெகுகாலத்துக்குப் பிறகு, 1950-1960களிலேயே ஒரு ‘நல்ல குடும்பத்து’ப் பெண் வீட்டை விட்டு வெளியேறிச் சென்று படிப்பது பெரிய சவாலாகத்தான் இருந்தது. எனது அம்மாவின் (வளர்த்தவர்) கதையை வைத்தே சொல்கிறேன். உறவுகளுக்குள்ளேயே மீண்டும் மீண்டும் தலைமுறைகளாக மணமுடித்து குடும்ப அமைப்பின் அழுத்தங்களில் திணறும் வேளாளர் குடும்பம். எனது அம்மாச்சி அப்பத்தாக்களுக்கு வீட்டில் வாத்தியார் வந்து எழுத்தறிவிப்பதோடு சரி. ஓரளவு எண்ணத் தெரிந்ததோடு பத்து வயதுக்குள்ளாகவே கல்வி முடிந்துவிட்டது. அந்தக் கல்வி பெற்று தானாகவே ஓரளவு வாசித்து ஆசுகவி புனையும் அளவு புலமை பெற்ற ஆச்சியும் இருந்தார்கள். அடுத்து வந்த அம்மாவின் தலைமுறை பள்ளிக்கூடம் அனுப்பப்பட்டாலும், வயதுக்கு வருவதோடு பெரும்பாலும் கல்வி நின்றுவிடும். மாமன் மகனோ அத்தை மகனோ மணம் முடித்து வாழ்க்கை அடுப்படிக்கு மாறிவிடும். என் அம்மா கிராமத்திலிருந்து பேருந்துப் பயணம் செய்து மானாமதுரை சென்று படிப்பதற்கே பெரும் போராட்டங்களை சந்தித்தவர். வயதுக்கு வந்த பிறகு வேற்றூருக்கு பஸ்ஸில் போகிறாளே, இவள் என்ன சாதி என்று உறவினரிலேயே அவள் வயதுப் பெண்களே பேசத்தான் படித்தார். அவரது தாய்மாமாவாகிய எனது தாத்தா அவள் எங்கள் வீட்டுக்கு வரப்போகும் பெண்தானே, அவள் படிக்கட்டும் என்று கூறவே, ஹாஸ்டலில் தங்கி ஆசிரியப் பயிற்சிப் பள்ளியில் படித்தார். விடுதியில் விட்டதற்கு உறவு பேசிய அவதூறுகள் கொஞ்ச நஞ்சமல்ல. அவர் படிப்பு முடிந்து அரசுப்பணியில் அமர்ந்தது மாமன்+அத்தை மகனாகிய முறைப்பையன் கல்லாரிப் பட்டம் பெற்றிருந்ததும் ஒரு காரணம். எனில் அதன் பிறகு ஒரு கட்டத்தில் வேலையிலிருந்து களைத்து வீடு திரும்பும் மகனுக்கு சமைத்துப் போடக் காத்திராமல், அவளும் வேலை செய்து திரும்புவது அவளது மாமியாருக்குப் (அத்தைக்கு) பெரும் குற்றமாகப் படவே, அரசுப் பள்ளியின் தலைமை ஆசிரியைப் பணியை விட வேண்டி நேர்ந்தது. உறவுகளில் முதல் முறையாகப் பணியில் அமர்ந்தவரின் கதை இது. அச்சம் காரணமாக அகத்தளத்து வாயிலில் பெண்களே மறித்தும் நிற்கிறார்கள்.
அவரை விடப் பத்து வயது இளையவரான என்னைப் பெற்ற அன்னையின் மருத்துவக் கல்வி ஆசையும் மதிப்பெண்கள் பெற்றிருந்தும் இதே போன்ற காரணங்களால் மிதித்து நசுக்கப்பட்டது. இதெல்லாம் பெண் கல்வி சமூகத்தில் ஓரளவு இயல்பாகி விட்டிருந்த 1950-1960களில் உள்ள குடும்ப அழுத்தங்கள் காரணமாக.
2000-ல் கல்லூரி முடித்து பட்ட மேற்படிப்புக்கு விண்ணப்பித்த எனக்கும் எதிர்ப்புகள் கிளம்பியது அதிர்ச்சியைத் தந்தது. வெளிப்பார்வைக்கு அனைத்தும் மாறிவிட்டிருந்தது. சமூகத்தில் பெண் படிப்பதும் வேலைக்கு செல்வதும் சாதாரண வாழ்க்கை முறையாகியிருந்தது. ஆனால் அது மேலோட்டமான காட்சி என்ற நிதர்சனம் பிறகே புரிந்தது. சிறகுகள் கத்தரித்துவிடப்பட்ட, சொன்னது சொல்லும் கிளியை கூண்டைத் திறந்து விட்டு சில அடிகள் தத்தி நடக்க விடுவது போல, வீடருகே பள்ளிகளில் வேலை பார்க்கவோ, மாலையில் நேரத்தோடு வீடு திரும்பிவிடும் பணிகளில் அமரவோ சுதந்திரம் தரப் பட்டிருந்தது. எனில் சிறகுகள் அருளப்படவில்லை. அதே காரணங்கள், நாற்பது வருடங்களாக மாற்றமில்லாமல் வந்து கதவைத் தட்டியது. திருமணம் செய்து கொண்டு படி என்ற சலுகையைக் குடும்பம் முன்வைத்தது. எனில் அது ஒரு மாயவலை மட்டுமே. கண் முன்னர் இவ்வாக்குறுதியோடு காணாமல் போன பலரது வாழ்க்கை இருந்தது. எனவே பட்டமேற்படிப்புக் கனவை உதறிவிட்டு வேலை தேடி சென்னை வர நேர்ந்தது.
வீடு தாண்டும் பெண்களுக்கு வேசி என்ற பெயர் ஒரு முறையேனும் சூட்டப்படுகிறது, தொடர்கிறது. பெண்களின் வழிகளில் பெண்களும் அதற்குத் தடையாக எதிர்க்குரல் கொடுக்கின்றனர். அகத்தளத்தின் இருட்டை ஒளி எனப் பழகிவிட்ட கண்கள்.
பேயுருவம் முதல் பிச்சியுருவம் வரை கொள்ளாமல் பெண் தனித்து பயணிப்பது இன்றும் இடர்கள் நிறைந்தே இருக்கிறது. வலியகுளத்தில் மிதக்க விடுவது இல்லையே தவிர வேறு குளங்கள் இருக்கின்றன. உள்ளிருக்கும் அந்த யட்சியை அவ்வப்போது வெளிவரச் செய்தே வாழ முடிகிறது.
நற்றுணையில் உள்ளறைகளின் அடக்கப்பட்ட குரலாக “போய்க்கொண்டே இருடீ அம்மா… போய்க்கொண்டே இருடீ!” என்று வெளிவரும் அப்பாட்டியின் சன்னதம், ‘விடாதே டெவில்..உன்னை யாரும் தடுக்க முடியாது’ என்ற டதி அம்மாளின் ஆசி, கண்ணீர் துளிர்க்க வைத்தது.
கல்வி குறித்த சில வரிகளும் அருமை. //மலையாளத்தில் செல்வம், சம்ஸ்கிருதத்தில் முழுமை, தமிழில் முதன்மை. முதற்சொல்லின் இனிமை என் நாக்கில் படிந்தது.// – அறிதலின்பத்தின் முதற் சொட்டு. //எந்தப் படிப்பாக இருந்தாலும் அது மேலே செல்லும் வழிதான்.//- அறிவைப் பற்றிக் கொண்டு மேலேறுவது ஒன்றே வழி.
மரபிலேயே உருவகித்திராத ஓன்றை அவள் இலக்காக்கி முன்னேறும்போது திகைக்கிறார்கள், வக்கீலாக என்ன ஆடை அணிவாள், நீதிபதியானால் எப்படி விக் வைக்க முடியும் என்றெல்லாம் எழும் கேள்விகள். இன்று அவை சத்தில்லாத கேள்விகளாகத் தோன்றினாலும் கற்பனை செய்து பார்த்திராத ஒன்றை எதிர்கொள்ளும் சமூகம் எழுப்பக்கூடியவையே.
வழி திகைக்க வைக்கும் அடர்கானகத்தில், உடற்திறன் உளத்திறன் மிக்க மனிதர்களை அனாயாசமாக வாயில் கவ்வி எடுத்துச்செல்லக்கூடிய புலியின் மீது அமர்ந்து செல்லும் யட்சி பெண்களின் மறந்துவிட்ட திறனின் ஆளுமையின் அடையாளமாக வருகிறாள். முன்பு வேட்டுவ குலங்களை வழிநடத்திய தலைவி. அன்னையர் தலைமை ஏற்ற குலங்கள் தொல்நினைவுகளில் மிச்சமிருக்க கொற்றவை என யட்சி என உறுதுணையாக வருகிறார்கள்.
இன்று நிலைமை மேலும் மாறியிருக்கிறது. ஆனாலும் வெளிவர முடியாத இருட்டறைகள் இன்னும் இருக்கின்றன. என்னிலும் இளைய தலைமுறை கூட அடைந்து கிடக்கும் இருட்டறைகள்.
இன்றும் உள்ளிருக்கும் யட்சியை அறிந்து நற்றுணையாக அமைத்துக் கொண்டவர்களே வெளிச்சத்தைக் காண்கிறார்கள்.
மிக்க அன்புடன்,
சுபா
***