நற்றுணை- கடிதங்கள்

நற்றுணை [சிறுகதை]

அன்புள்ள ஜெ,

நற்றுணை கதை பற்றிய பல விமர்சனங்கள் எழுந்தன. ஆண்களில் கேசினி உண்டா என்பது வரை. என் புரிதலில் இதை சொல்லிப்பார்க்கிறேன்.  ஒருவகையில் இது வரலாறும்கூட. ஆதியில் குலத்தொழில் முறை இருந்த போது  அதுவே ஒருவனுடைய வாழ்நாள் அறிதலும் அதிலிருந்தே மெய்மையும் அன்றாட வாழ்க்கையும் அடையப்படுவதாக நம் மரபில் இருந்திருக்க கூடும். தன்னுடைய குலத்தொழிலுக்கு அப்பாற்பட்ட ஒன்றை ஒருவன் அடையவேண்டுமெனில்  அவன் கடக்க வேண்டிய துயர்கள் எத்தனை இருந்திருக்கும்.  அவனுக்கு உறவிலிருந்தும் ஆசிரியனிலிருந்தும் சமூகத்திலிருந்தும் உண்மையில் பெருமளவு இடர்கள் எழுந்திருக்கும். அதே போல ஒத்த மனிதர்களின் சகாயமும் கிடைத்திருக்கலாம். ஏனெனில் ஆண்களின் உலகம் சற்று பெரியது. வணங்கான் போல. கேசினி எழச் சற்று கால தாமதமாகியிருக்கிறது!

ஆண்கள் எப்படி தன் இளமை முடியும்போது/முதுமை தொடங்கும்போது தன் தந்தையை சென்றடைகிறார்களோ அதைப்போலவே பெண்கள்  ஒரே விதமான அன்னைப் பதுமையாக முயல்கிறார்கள். அது மிக இளமையிலிருந்தே கையளிக்கப்பட்டுவிடுவது. எனவே என் அன்னையின் அவரது அன்னையின் தந்தையின் அன்னையின் தொடர்ச்சியே நான்.  பெண்களில் நாற்பதுக்கு மேல் ஏற்பட்டுவிடும் சலிப்புக்கு அது பொருத்தமான  பொறுப்பும் கூட. ‘நான் இவர்களின் தொடர்ச்சி அல்ல, நான் தனி, நான் வேறு எனில் இவர்கள் அனைவரின் இயல்புக்கும் சிந்தைக்கும் அப்பாற்பட்ட ஒன்றென எழவேண்டும். ஏழு தலைமுறையாக இருந்த அழுத்தம் விசைகொண்டு எழவேண்டும்.  அத்தனை விசைகொண்டு எழுந்தபின் வானை எட்டியே அமையமுடியும். வெண்முரசின் யாதவன் போல அவன் எழுந்த விசைக்கு அவன் சிகரத்திற்கும் மேல் சென்றாகவேண்டும். அவனுடைய அடுத்த தலைமுறைக்கு அத்தனை விசைகொண்டெழவேண்டிய உந்துதல் இல்லை.

தனக்குப்பின் அது என்னவானது என்பது பற்றிய அக்கறை அப்போது தேவையற்றது.   ஆண்கள் தன்  தலைமுறை செழிக்கவேண்டுமென பற்றுக்கொண்டிருப்பதை போல பெண்கள் தலைமுறை தொடர்ச்சியை பற்றிக்கொண்டிருப்பதில்லை. தன் மகள் தன் தொடர்ச்சி அல்ல. தன் மருமகள் தனது தொடர்ச்சி. இதுவும் ஆணுக்கு உள்ள பற்றுக்கும் பெண்ணின் பற்றின்மைக்கும் உள்ள வேறுபாடாக இருக்கலாம்.

அம்மிணித்தங்கச்சி அறிவின் கவர்ச்சியில் இழுக்கப்படுகிறார். ஏழு தலைமுறைப்பெண்கள் அடைய முடியாத ஞானத்தை தான் அடைய விரும்புகிறார். அதற்கு  தன் அன்னை போலவோ அதன் தொடச்சியாக அமைய  விரும்பாது முற்றாக தன்னை அவர் துண்டித்துக்கொள்கிறார். அறிவின் கவர்ச்சி காமத்தை விட வலுவானது என்றே நான் அறிந்திருக்கிறேன். அதற்கு அவர் இரண்டாக அல்ல, தேவையெனில் நான்காக கூட தன்னை பிளந்துகொள்ள முடியும். அது தனக்கு தோழியென்றும் தெய்வமென்றும் உடனிருக்கும் ஒன்றின் துணை என்பதாக ஆக்கிக்கொள்ளவும் முடியும். அவள் வரையில் நாகத்தான் நாயரின் இறப்பு துக்கத்திற்கு உரிய ஒன்றோ குற்ற உணர்ச்சி கொள்ளக்கூடிய ஒன்றோ அல்ல. அது ஒரு இடர் தவிர்த்தல் அச்சுறுத்தல், அவ்வளவே. அதன் மேல் குற்ற உணர்ச்சிகளை ஏற்ற முடியாது.

நீங்கள் ஒரு உரையில்  தன் சுதர்மத்தை உணர்ந்த இளையராஜா வேறு வேலை செய்யமாட்டேன். இறக்கவேண்டுமெனில் இறப்பேன் என்று சொன்னதாக சொல்வீர்கள். அதுவேதான் அம்ம்ணித்தங்கச்சியிலும் வெளிப்பட்டது எவரையும் கண்டு அஞ்சாத இயல்பு. எத்தனை போராடியும் கைக்கொள்ள வேண்டியது சுதர்மம்.

நான் பெண், பெண் மட்டும் அல்ல என்று சொல்வது தான் அது.

நன்றி

கங்கா

***

அன்புள்ள ஜெ

நற்றுணை என்னை ஒரு மாதிரி பதறச்செய்த கதை.ஏனென்றால் என்னுடைய கதையும் அதுதான். நான் படிப்பு, வேலை ஆகியவற்றைச் சொல்லவில்லை. வாழ்க்கையின் ஒரு கட்டத்தில் என்னுடைய திருமண உறவிலிருந்து வெளியேறவேண்டிய முடிவை எடுக்கவேண்டியிருந்தது. அப்போது ஒரு ‘யக்ஷி’ வந்து எனக்கு உதவவேண்டியிருந்தது. ஒரு கொந்தளிப்பான காலகட்டம் அது. அன்று அத்தனை வெறியோடு எல்லாவற்றையும் மிதித்துத் தாண்டி எப்படி அதை கடந்துவந்தேன் எப்படி எல்லாவற்றையும் சாதித்து நின்றுகொண்டிருக்கிறேன் என்று சிந்திக்கும்போதுதான் உண்மையில் எனக்கு துணையாக வந்தது என்ன என்று தெரியவில்லை. இந்தக்கதையின் ஒவ்வொரு வரியுடனும் என் வாழ்க்கையை அடையாளம் கண்டுகொள்கிறேன்

எம்.சத்யா

***

அன்புள்ள ஜெ,

’நற்றுணை’ கதை ஓரிடத்தில் எழுந்து பறக்கிறது.   ‘அதில் போவோமா’ என்று முதன்முதலில் அம்மிணி தங்கச்சி சைக்கிளில் ஏறி செல்லும் இடத்தில். அதுவரை ஆண்துணையுடன் வண்டியில் வந்தவள். இன்று?   சுதந்திரம்.! சுதந்திரம் ! சுதந்திரம் !. முதலடி வைக்கும் உள்ளம் உணரும் சுதந்திரம்.!

இன்னொரு கோணத்தில் அது ஒரு வரலாற்று கணம். ஒருகாலத்தில் தனியாக சைக்களில் விரைந்து விமானத்தில் ஏறி இன்று விண்வெளியில் மிதக்கும் பெண்ணின் தொடர்ச்சி அந்த கணம்.

ரூபி பிரிட்ஜ் படம் ஒரு மகத்தான (இந்தக் கதையில் ஒன்றைச் சொல்ல ’மகத்தான’ என்ற சொல் தவிர வேறு எதையும் எழுத எனக்கு விருப்பம் இல்லை) தருணம். நான்கு அதிகாரிகள் அவளுக்கு துணைக்கு வருகிறார்கள். சமகால மனிதர்களும் நல்ல துணைதான். ஆனால் தனியாகவேச் செல்லும் அம்மிணியின் துணை வேறுஒன்று.  மூத்தம்மைகள் பரதேவதை என ஒரு மரபே சுழன்று சுழன்று வந்து ஒரு funnel வழியே அவளில் இறங்கி கேசினி வடிவில் அமைதியாக துணை நிற்கிறது.  ஒரடி முன்னால்வைத்தால் மறுபுறம்  இயங்கி எதிர்ப்பவரை சுழற்றியடிக்கும் சூறாவளிதான்.

இன்னொன்றை குறிப்பிட வேண்டும். உங்கள் கதைகளில் இரு வடிவங்கள் தொடர்ந்து வருகின்றன என்று நினைக்கிறேன். ஒன்று வரலாற்று மனிதர்களின் முழுக்கதையும் சொல்லும்போது ஒர் இதழாளர் வந்துவிடுகிறார். உதாரணம் ஆட்டக்கதை. இப்போது நற்றுணை. வரலாற்று மனிதரைப் பேசவைத்து எப்படியோ அவரின் அகவாழ்க்கையின்  உண்மையை வெளியே கொண்டுவந்துவிடுகிறார்.

இன்னொன்று. மதுப்புட்டியை திறந்து பெரிய மனிதர்கள் அதைச் சுற்றி அமர்ந்தாலே இப்போதெல்லாம் ஒருமாதிரி படபடப்பு வருகிறது. இதை ’வெற்றி’ கதையில் இருந்தே நான் கவனித்து வருகிறேன். இப்போது ஔசேப்பச்சன் கதைகள். அப்போது அமானுஷ்யமானோ ஏதோ ஒன்றோ அல்லது நெஞ்சடைக்க வைக்கும் உண்மை ஒன்றோ வெளிவரப்போகிறது என்று அர்த்தம். (மதுப்புட்டி இருந்தாலும் ஏதேன் கொஞ்சம் வித்தியாசமான கதை.)

எனக்கு ரொம்ப வருடங்களாகவே உங்களைப் பற்றி ஒரு சந்தேகம் இருந்தது.  நாகர்கோவிலில் உங்களுடன் அமர்ந்து ஒரு யக்‌ஷிதான் உங்களுக்கு  கதைகளை காதில் சொல்கிறாள் என்று.  இப்போது உறுதியாகிவிட்டது.

அன்புடன்,
ராஜா.

***

முந்தைய கட்டுரைபிடி,மாயப்பொன் – கடிதங்கள்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–51