வனவாசம், லூப்- கடிதங்கள்

வனவாசம் [சிறுகதை]

அன்புள்ள ஜெ

வனவாசம் கதையை மீண்டும் சென்று படித்தேன். என் சின்னவயசில் கிராமத்தில் தெருக்கூத்து பார்த்த நினைவுகள் எழுந்து வந்தன. தெருக்கூத்து என்பது அந்த கிராமியச் சூழலுக்குத்தான் பொருந்துகிறது. சென்னையில் ஒரு அரங்கிலே அதைப்பார்த்தால் அது கூத்து மாதிரியே இல்லை. அந்த சின்னக்கிராமம், அங்குள்ள மக்களின் பழக்கவழக்கங்கள், அவர்களின் மனநிலைகள் எல்லாம் சேர்ந்துதான் அந்தக் கூத்து.

அது கூத்தே இல்லை. கூத்தின் ஒரு சின்ன பகுதி. ஒரு மீம் மாதிரித்தான் சொல்லவேண்டும். அதில் நிகழும் அந்த அல்லி அரசாணிமாலை நாடகம் உண்மையில் கதையை பார்க்கும் சுப்பையாவின் மனசிலேதான் நடைபெறுகிறது. சுப்பையாவுக்கு அந்த நாடகம் முழுமையாகவே தெரியும் என்றுதான் எடுத்துக்கொள்ளவேண்டும். சுப்பையா அந்தப்பாட்டை அவனேதான் நடிக்கிறார்

அந்த கூத்துக்கலைஞர்கள் வேஷம் கலைந்ததும் சாதாரண மனிதர்கள் ஆகிவிடுவதில்லை. அர்ஜுனன் ஆகவும் அல்லி ஆகவும்தான் நீடிக்கிறார்கள். இந்தக்கதையின் முக்கியமான புள்ளியே அதுதான். அர்ஜுனர் வேஷம்போடும் நடிகர் அர்ஜுனனாகவே வாழ்கிறார். மாடுமேய்க்கும்போது அவர் மாறுவேடம்போட்டு வனவாசம் போனவராகவே இருக்கிறார். அதாவது அவருடைய நிஜமுகம்தான் வேஷம். அர்ஜுனமுகம்தான் உண்மை,

பாஸ்கரன். எம்

***

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு

தங்களது நேற்றைய சிறுகதை “வனவாசம்” படித்தேன்.  ஏனோ என் மனதில் புதுமைப்பித்தனின் சிற்பியின் நரகம்” கதையோடு ஒப்பிட்டு கொண்டிருந்தேன்.  வனவாசம் கதையின் கீழேயுள்ள வரிகள் :-

“பெருமூச்சுடன் சுப்பையா தன்னை உணர்ந்தபோது அவனைத்தவிர எவருமே கூத்து பார்த்துக் கொண்டிருக்கவில்லை. மைக்கில் ஒலித்த அவர்களின் குரல் ஊரை மூடியிருந்த இருண்ட வானில் அலைந்து தொலைவில் கரைந்து கொண்டிருந்தது. மணற்பரப்பில் நாலைந்துபேர் முண்டாசால் செவிகளையும் கண்களையும் மூடி தூங்கிக் கொண்டிருந்தனர். “

புதுமைப்பித்தன்  சிற்பியின் நரகத்தில் கீழ்கண்டவாறு எழுதியுள்ளார்

“எனக்கு மோட்சம்! எனக்கு மோட்சம்!” என்ற எதிரொலிப்பு. அந்தக் கோடிக்கணக்கான சாயைகளின் கூட்டத்தில் ஒருவராவது சிலையை ஏறிட்டுப் பார்க்கவில்லை! இப்படியே தினமும்…

சுப்பையா போன்ற உண்மையான ரசிகனுக்காக சாமியப்பாக்கள் பட்டினியோடும், பழையசோறு தின்றும் கலையை அழியவிடாமல் காப்பார்கள்.

இந்த கதையை உங்கள் நண்பர் திரு. சாமியப்பா கமல்ஹாசனுக்கு சமர்ப்பித்துள்ளது சாலப் பொருந்தும்.

மிகுந்த வணக்கங்களுடன்

பா. சரவணகுமார்

நாகர்கோயில்

***

லூப் [சிறுகதை]

அன்புள்ள ஜெ

லூப் கதைக்கு நிறைய வாசிப்புகள் வந்துவிட்டன. லூப் என்றால் இணைப்பு .  ஒரு முழுவட்டம். மலைப்பாம்பு உண்மையில் ஒரு தடை அல்ல இணைப்பு. அதைத்தான் கதை சொல்ல வருகிறது. துரை அதை தடை என்கிறான். ஞானம்சார் அதை இணைப்பு என்கிறார். அந்த சின்ன வேறுபாடுதான் கதை

மலைப்பாம்பு, காடு எல்லாமே இணைந்துதான் ஒரு வாழ்க்கை வட்டம். அதில் மலைப்பாம்பை எடுத்துவிட்டால் காட்டை அழித்துவிட்டால் லூப் அறுபட்டுவிடுகிறது.வாழ்க்கை வட்டம் இல்லாமலாகிவிடுகிறது

செந்தில்முருகன்

***

வணக்கம் ஜெ

லூப் சிறுகதையை வாசித்தேன். இந்தத் தொடர் கதை வரிசையில் தொலைபேசி பற்றிய நிறைய கதைகள் வந்துவிட்டன. இந்தப் பாம்பும் சேர்ந்துதான் போனு என்ற வரி உச்சம். தொலைபேசி கம்பி வடமெல்லாம் பாம்பாக நெளிவதாகத் தோற்றத்தை ஏற்படுத்தியது. அந்தப் பாம்பு இல்லையென்றால் அந்தக் காடே அழிந்துவிடும்: அந்தத் தொலைபேசி இணைப்பும் சேர்ந்து. அதனைத் தடுக்க அந்தப் பாம்பின் இருப்பும் ஞானத்துக்குத் தேவையாக இருந்திருக்கிறது. அதையும் தாண்டி காடு ஞானத்துக்கு ஏசு வாழும் இடம்.

அரவின் குமார்

***

முந்தைய கட்டுரைஐந்துநெருப்பு, கரவு- கடிதங்கள்
அடுத்த கட்டுரைகாக்காய்ப்பொன் [சிறுகதை]