இறைவன் ,வனவாசம்- கடிதங்கள்

இறைவன் [சிறுகதை]

அன்புள்ள ஜெ,

 

இறைவன் கதை அதன் எளிமையாலேயே நினைவில் என்றென்றும் நின்றிருக்கும் என நினைக்கிறேன். தமிழில் அதற்கிணையான இன்னொரு கதையை உடனே சுட்டிக்காட்டமுடியவில்லை.

வரையப்போவதற்கு முன் அவனுடைய இறுக்கம். அந்த வீட்டில் அவன் டீ பற்றி ஒரே கேள்வியால் நெருக்கமாக இயல்பாக ஆவது. வரைய ஆரம்பித்தபின் சன்னதம் வந்து இன்னொருவராக ஆகிவிடுவது. வரைந்த பின் அவனிடம் வந்து மூடும் மூதேவி. ஒவ்வொன்றும் மகத்தான சித்திரமாக உள்ளது

அந்த பாமரக்கிழவியின் பார்வையில் அந்த மகா கலைஞன் வருகிறான். அவனுடைய அருளை அவள்தான் முழுமையாக அனுபவிக்கப்போகிறாள். அவளுக்கு கலை பற்றி ஒன்றுமே தெரியாது. ஆனால் தெய்வத்தின் அருளை அடைய தெய்வத்தை நன்றாக அறிந்திருக்கவேண்டுமா என்ன?

 

ஆர். பாலகிருஷ்ணன்

 

வணக்கம் ஜெ

 

இந்த கதைகள் தொடங்கிய முதல் வாசித்தவுடன் அவ்வனுபவத்தை கடிதமாக எழுதி கொண்டிருந்தேன். பின்பு மெதுவாக ஒரு மாற்றம் நிகழ்ந்தது. கதைகளுடனான தொடர்பு எனக்கும் அவற்றுக்குமான ஒரு அங்கதம் போல. அதை வெளியே சொல்ல கூடாது என்பதுபோல. ஆனால் இறைவன் கதை வாசித்தவுடன் இதை எழுத தோன்றியது.

கலையை படைப்பவனுக்கும் அதை ரசிப்பவனுக்கும் ஓர் இடத்தில் அந்த கலையுடன் ஏற்படும் ஒரு பிணைப்பு. இவ்வுலகிற்கு தான் சொல்ல வேண்டியது ஒன்று இருக்கிறது என அவன் எழுதவோ வரையவோ செய்கிறான். இருந்தும் ஒரு கணத்தில் அதனுடன் ஒரு தனிப்பட்ட பிணைப்பு உருவாகிறது. அந்த உச்ச நிலை அடைந்த உடன் அந்த கணத்திற்கு பின் அவன் அந்த கதையையோ ஓவியத்தையோ முடித்து விடுகிறான். அது இப்போது அவனிடமிருந்து உலகிற்கு இறங்கி சென்றுவிடுகிறது. அந்த கலை அவனிடமிருந்து மற்றவருக்கும் சென்றவுடன் அதன் உச்சம் மறைந்து அது வேறொன்றாகிவிடுகிறது. ஒரு கணத்தில் பகவதியை அறிந்து வரைந்த பின் அந்த பகவதியை ஆசாரி துச்சமாக எண்ணுகிறான். இசக்கியம்மை பகவதியை தன்னை மீறிய ஒன்றாக அறிந்து பயம் கொண்டிருக்கிறாள் பின் ஒரு கணத்தில் அந்த பகவதி அவளிடம் சாதாரண ஒரு பெண் போல உரையாடுகிறாள். இருவருக்கும் அந்த ஒரு கணம்.

சினிமா பார்ப்பது தியேட்டரில் முன்பின்தெரியாத கூட்டத்தின் மத்தியில் துவங்கி குடும்பத்திற்குள் என டீவிக்குள் வந்து பின்பு நம் கைகளில் மொபைலில் வந்திருக்கிறது. இது நமக்கு மட்டுமே திரையிடப்படுகிறது என்பதில் தொடங்கி நமக்கு மட்டுமேயான திரைப்படம் என ஆகிறது. காலம் காலமாக புத்தகத்திற்கும் வாசகனுக்கும் உள்ள தொடர்பை போல. முன் இருந்ததை விட சினிமா பார்ப்பது இந்த ott மூலம் அதிகரித்திருப்பதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்ககூடும். Exclusively for you என்ற மாயச்சொற்கள் அதற்கு காரணம். அந்த எக்ஸ்க்ளூசிவ்னஸ் நம் ரசனையையும் எக்ஸ்க்ளூசிவ் என தோன்ற செய்கிறது. இது சற்றே செல்ஃபிஷாக அகங்காரமாக தோன்றினாலும் அந்த படத்திற்குள் இறங்கி அந்த கணத்தை அறிவதை எளிதாக்குகிறது. கலை படங்கள் பார்க்கப்படுவதும் பேசப்படுவதும் அதிகரித்திருக்கிறது. அமித் தத்தா போன்ற இயக்குனர்கள் கலை படங்களின் வருங்காலம் இத்தகைய லேப்டாப் அல்லது மொபைலில் பார்க்க படுவதே எனக் கூறியுள்ளனர். தனிமையிலேயே ரசனை கூர்மையடைகிறது.

இக்கதைகளை தொடர்ந்து வரும் கடிதங்கள் அக்கதைகள் சென்றடையும் சாத்தியங்களுக்குச் சான்று. கூட்டு வாசிப்பும் கூட்டு ரசனையும் அக்கதைகளை பிரித்து பிரித்து பல கோணங்களில் காண செய்கிறதென்றாலும் அந்த கதை எனக்குள் ஏற்படுத்திய அந்த உச்ச கணம் என்னுள்ளே இருக்கும். அதை விரித்து விரித்து அந்த கணத்திலேயே வாழ்வது தான் என் தரிசனமாக கொள்கிறேன். அது என்னுள் மட்டுமே ஏற்படுவது. வெளிப்படுத்த இயலாதது. கலைஞனுக்கு ஏற்படும் அதே கணம் ரசிகனுக்கும் உண்டு. அந்த கணத்தை அடைந்து அறிவதற்காகவே அனைத்து கலைகளும் உருவாக்கபடுகின்றன ரசிக்கப்படுகின்றன. அந்த கணம் எது என்பது ஒவ்வொருவருக்கும் மாறுபடலாம். இருவர் ஒரே புத்தகத்தை படிப்பதில்லை அல்லது ஒரே படத்தை பார்பதில்லை என்று சொல்வது போல். கலைஞனுக்கும் ரசிகனுக்கும் அக்கணம் தனிப்பட்டதே.

 

ஸ்ரீராம்

 

இந்த கதைகள் தொடங்கிய முதல் வாசித்தவுடன் அவ்வனுபவத்தை கடிதமாக எழுதி கொண்டிருந்தேன். பின்பு மெதுவாக ஒரு மாற்றம் நிகழ்ந்தது. கதைகளுடனான தொடர்பு எனக்கும் அவற்றுக்குமான ஒரு ரகசியம் போல. அதை வெளியே சொல்ல கூடாது என்பதுபோல. ஆனால் இறைவன் கதை வாசித்தவுடன் இதை எழுத தோன்றியது.

வனவாசம் [சிறுகதை]

 

அன்புள்ள ஜெ

வனவாசம் நீண்ட பெருமூச்சுடன் நினைத்துக்கொள்ளவேண்டிய கதை. வனவாசம் என்பது கலைஞன் தன் அன்றாட வாழ்க்கைக்கு திரும்புவது. கலைஞன் அவனுடைய தெய்வங்களால் கைவிடப்படுவது. கலைஞனின் இருள் அது. அந்த தரத்தில் ஒரு கதை தனியாக வந்திருந்தால் கொண்டாடியிருப்போம். ஆனால் அதேபோன்ற கதைகள் வந்துகொண்டே இருக்கும்போது நாற்பதில் ஒன்றாக ஆகிவிட்டது

இந்த வரிசைக்கதைகள் முடிந்தபின் கலை பற்றி கொஞ்சமேனும் அறிவு உடையவர்கள் இவற்றைப் பற்றிப் பேச ஆரம்பித்தால் நல்லது என்று தோன்றுகிறது

 

கதிரேசன் முருகானந்தம்

 

அன்புள்ள ஜெ சார்,

 

வணக்கம். வனவாசம் சிறுகதை கலை கலைக்காகவா மக்களுக்காகவா என்ற இருண்மையில் தள்ளியது.

சுப்பையா பெருமூச்சுடன் தன்னை உணர்ந்தபோது எவருமே கூத்துப் பார்க்கவில்லை. இறுதியில் சுப்பையா பின்னால் ஓடியும் அர்ஜுனன் (சாமியப்பா) சைக்கிளில் விலகிச் செல்கிறார். குமரேசன் விடிகாலையிலேயே கிளம்பிச் சென்றுவிடுகிறார். இரவில் சாயம் பூசியபின் சாமி கும்பிடவும் வருவதில்லை. அல்லி அர்ஜுனன் கூத்து சுப்பையா என்ற மூன்றாமவரையும் உள்ளிழுத்துக் கொள்கிறது. எனில் அவர்கள் பூசித்தது கலையைத் தானே. சுப்பையாவும் தன்னளவில் கலையைக் கண்டு கொண்ட ஒரு கலைஞன் தான்.

பிரதி எழுதப்பட்ட பின் ஆசிரியன் இல்லை என்பது போல் கலை நிகழ்த்தப்பட்ட பின் சாயம் கலைந்த லௌகீக வாழ்க்கையில் அங்கே சாமியப்பாவும் குமரேசனும் தான் எஞ்சியவர்கள். கலையில் வாழ்ந்த அர்ஜுனனும் அல்லியும் ஆன்மாவில் நிறைந்தவர்கள்.

சாமியப்பா -குமரேசன் பார்வையில் யாரும் காணாவிட்டாலும் கூத்து சுப்பையாவுக்காகவே நிகழ்ந்தது. சுப்பையா அவர்களின் கலை ஞானத்தையே ரசித்தான். கொடுக்கல் வாங்கல் போல. எனில் கலை கலைக்காகவும் மக்களுக்காகவும் தானே. கமல்ஹாசன் எனும் கலைஞனுக்கு இக்கதையை சமர்ப்பித்தது சாலப் பொருத்தம்.

இந்த நொடியில் பார்த்த நதி அங்கில்லை. கலை நதியில் தெரிந்த அர்ஜுனனும் அல்லியும் அவ்வாறே ஆனவர்கள்.

இறுதியில் சாமியப்பா முகத்தில் ஒரு நொடி தெரியும் அர்ஜுனன், சுப்பையாவினுள் நிகழும் தரிசனமா அல்லது சாமியப்பா எனும் கலைஞன் அளிக்கும் தரிசனமா? விலகிச் செல்வது சாமியப்பாவா அல்லது அர்ஜுனனா? சுப்பையாவிடமிருந்து சாமியப்பா விலகினாலும் ரசிகனிடமிருந்து கலை விலகிச் செல்ல முடியாது என்பதே நிதர்சனம்.

கதையின் மற்றொரு சிறப்பு குமரி மாவட்ட உணவுக் கலை. தேங்காய் குழம்பு, புளிசேரி என தனிப் பட்டியல் போட்டு சாப்பிட வேண்டும் என்ற ஆவலைத் தூண்டுகிறது.

இக்கதை எங்கள் ஐயனை (தாத்தா) நினைவூட்டியது. அவர் அந்தக் காலக் கூத்துக் கலைஞர். ஆனால் வயதான கருத்த ஒடுங்கிய முகம் கொண்ட ஜிப்பா அணிந்த பாகவதர் முடி கொண்டவராக மங்கலான முகமே என் நினைவில் உள்ளது. அவர் கோமாளி வேடம் அணிபவராம். அதனால் கோமாளி பேரன் என்றே என்னை அழைக்கும் வயதான உறவினர்கள் உண்டு. அப்போது நான் மன உளைச்சல் அடைவேன். ஆனால் அவர் நடித்த கூத்துகளின் நாயக நாயகியர் பற்றி யாரும் அறியார். மக்கள் மனதில் நிலைத்தவர் என் தாத்தா மட்டுமே. என் அப்பா மற்றும் உறவினர்களுக்கு கலை இலக்கியம் எல்லாம் தெரியாது. ஆனால் எனக்குள் வந்த கலை இலக்கிய தாகத்தின் விதை எங்கள் அய்யா தான் என்பதை உணர்கிறேன். அவர் விட்டுச் சென்ற அவரது ஒரே ஒரு கருப்பு வெள்ளை புகைப்படம் காணும் போதெல்லாம்

ஒரு கலைஞனின் பேரன் எனும் பெருமிதம் ஏற்படுகிறது. மூதாதையை வணங்குகிறேன்.

பேரிலக்கியங்கள் வாழ்வின் தரிசனத்தை தருவது போல் வனவாசம் சிறுகதை அளிக்கும் தரிசனமும் மகத்தானது.

 

 

அன்புடன்

 

க.ரகுநாதன்

 

 

முந்தைய கட்டுரைநற்றுணை, காக்காய்ப்பொன் – கடிதங்கள்
அடுத்த கட்டுரைகடிதங்கள்,பதில்கள்