இறைவன், பிடி- கடிதங்கள்

பிடி [சிறுகதை]

அன்புள்ள ஜெ

பிடி கதையை ஒரு பெரிய மனநெகிழ்வுடன்தான் வாசித்தேன். என் வாழ்க்கையில் ஒரு அபூர்வமான ஞாபகம் நான் லா.ச.ரா அவர்களைச் சந்தித்தது. நான் அப்போது அவருடைய கதைகளை மிகவும் விரும்பிப் படித்துக்கொண்டிருந்தேன். அதில் ஒரு சந்தேகம் கேட்டு அவருக்கு எழுதியிருந்தேன். சாதாரணமான சந்தேகம்தான். அவர் எனக்குப் பதில் சொன்னார். ஆனால் நீண்டநாட்களுக்கு பிறகு அவரை ஒரு நிகழ்ச்சியில் பார்த்தேன். என் கையைப்பிடித்துக்கொண்டு மீண்டும் விளக்கமாகச் சொன்னார்.

அவர் அவருடைய அந்த உயரத்தில் இருந்து இறங்கிவந்து எனக்காக அருளியதாகவே எண்ணிக்கொண்டேன். பெரியவர்க்ள் அனைவருக்கும் அப்படி இறங்கிவரும் ஒரு பண்பு இருக்கிறது என்று தோன்றியது

கல்பனா

***

அன்புள்ள ஜெ..

கிருஷ்ணனையும் ராமனையும் பற்றிய பொதுவான மனப்பதிவுகள் இப்படி இருக்கும்.கிருஷ்ணன் எல்லாம் அறிந்தவன். அனைவரையும் ஆட்டி வைப்பவன்.ராமன் நம்மைப் போன்றவன் . கஷ்டங்களை சந்திப்பவன்.

அந்த வகையில் பார்க்கும்போது, கிருஷ்ணனின் புன்னகைவிட , தூக்கி எறியப்படும்போது , புதிதாய் பூத்த தாமரைபோல மலர்ந்திருக்கும் ராமனின் தன்மை உன்னதமானது.ராமனை ஒரு தெய்வமாக பார்ப்பதைவிட ராமனை ஒரு தன்மையாக பார்த்தால் எப்படி இருக்கும் என பிடி கதையை படிக்கும்போது தோன்றியது

பிளாஸ்டிக் டம்ளருடன் நின்றிருந்த பிச்சை எடுக்கும் குரிசிடமும் “வாறேன்யா” என்று விடைபெறும் பண்பு முதல் முடங்கி கிடக்கும் பெரியவரிடம் என்ன பாட்டு வேண்டும் என்று கேட்பது வரை ராமன் என்ற தன்மையை பார்க்க முடிந்தது.ஏழையைத் தேடி அரசன் ராமனே வந்தாயோ என நெகிழச் செய்யும் அன்பு , தன் எல்லைகளை தனக்கு நிகரான விசைகளுடன் மோதி விஸ்தரத்தல் போன்றவைதான் ராமன்

பத்துலட்சம் காலடிகள் அற்புதமான கதைதான். ஆனால் அதன் வெளிச்சத்தில் பிடி என்ற எனக்கு பிடித்தமான கதை மங்கிவிடக்கூடாது என நினைக்கிறேன்.

http://www.pichaikaaran.com/2020/04/blog-post_84.html?m=1

என்றென்றும் அன்புடன்

பிச்சைக்காரன்

***

இறைவன் [சிறுகதை]

அன்புள்ள ஜெ

இறைவன் கதை மீண்டும் கலைஞனின் எல்லையற்ற கருணையைப்பற்றிய கதை. இந்த உலகில் உண்மையில் சாமானியன் மேல் கருணையுடன் இருப்பது கலை மட்டும்தான். அரசியலோ மதமோ அல்ல. அப்படித்தான் நமக்குச் சொல்லப்படுகிறது. அனால் அந்த மதமோ அரசியலோ கூட கலைவழியாகவே சாமானியன்மேல் கருணையை காட்டமுடிகிறது

கருணையற்ற ஒரு தெய்வத்தை அழித்து கருணைபொங்கும் சாமானியர்களுக்கான ஒரு தெய்வத்தை அங்கே உருவாக்கி தருகிறான் மாணிக்கம். கிழவிக்கு அவளுக்கான ஒரு வாழ்க்கையையே உருவாக்கி தருகிறான். கிழவி அந்த மகளை திரும்பப்பெறுவாள். அவளை நினைத்தபடியே வாழ்ந்து நிறைவடைவாள்

செல்வராஜ் முருகேசன்

***

அன்புள்ள ஜெ

வணக்கம். இறைவன் சிறுகதையை வாசித்தேன். எத்தனை நூறாண்டுகளாகக் கோவிலில் வீற்றிருக்கும் தெய்வ உருக்கள் பற்றியப் பிரமிப்பு எழுந்தது. எத்தனைத் தலைமுறைகளாக அருள் பாலித்து அமர்ந்திருக்கிறது. அந்தத் தெய்வ உருக்களிடம் முன்வைத்த மன்றாடல்கள், வேண்டல்கள் எல்லாம் கூடச் சேர்ந்ததுதானே நம் மனத்தில் எழுந்திருக்கும் தெய்வச் சித்திரங்கள் அப்படியாக இசக்கியம்மையின் மனம் போலவே சுவரில் உதிர்ந்து போயிருந்த தெய்வ உருவை மீட்டுத் தருகிறான் மாணிக்கம். மீண்டு வந்த தெய்வத்தின் முழுமை இசக்கியம்மையின் உளத்தில் மகள் மீதான அன்பைப் பெருக்குகிறது.

அரவின்குமார்

***

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–52
அடுத்த கட்டுரைஐந்துநெருப்பு, கரவு- கடிதங்கள்