கோட்டி[சிறுகதை] -2

[தொடர்ச்சி] ’நாலஞ்சுநாள் கழிஞ்சுதான் சிவன்பிள்ள என்னைப் பாத்தாரு. எம்.வி.நாயுடு வந்து பேசினாரு. பொலிட்டிக்கல் செல்லுக்கு மாத்திடலாம்னு சொன்னாங்க. அவங்க மனு சொல்லி நம்மள ஒருத்தரு வந்து விசாரிச்சாரு. நல்ல பழுத்த பிள்ளைவாள். நெத்தியிலே விபூதி குங்குமம். ஆளு வேற ஆருமில்லை, நம்ம அணைஞ்சபெருமாள் டாக்டருக்க அப்பா மந்திரம்பிள்ளைதான். எல்லாம் கேட்டு எளுதிட்டு எதுக்கும் உறுதிபண்ணிக்கிடலாமேண்ணு மெள்ளமா ‘நீரு என்னவே ஆளு? புள்ளமாரா?’ என்றார். நம்ம நாக்கிலே சனி இருக்கே. அது சும்மா கெடக்குமா. ‘இல்ல, போனமாசம் பணம்கெட்டி மாத்தியாச்சு. இப்பம் தோட்டியாக்கும்’னு சொன்னேன். நீட்டி எளுதிட்டு போய்ட்டாரு. அப்டி ஒரு பிக்பாக்கெட் திருடனா எட்டுமாசம் ஜெயிலிலே கெடந்துட்டு வந்தேன்’

’முதல் தப்பு இதுதான்…கேனத்தனம்’ என்றேன். ‘ஒரு காரியம் பண்ணினா அதுக்கு முறையான ரெக்கார்டு வேணும். இப்ப நீரு பிக்பாக்கெட்டா தியாகியாண்ணு ஆருவே சொல்லுகது?’ என்றேன். ‘ஆரு சொல்லணும்? அண்ணைக்குள்ள தியாகியெல்லாம் இண்ணைக்கு பிக்பாக்கெட்டாக்கும். அப்ப அண்ணைக்குள்ள பிக்பாக்கெட் இண்ணைக்கு தியாகிதானே?’ என்றார். ‘உமக்கு கிறுக்கு…’ என்றேன். ‘ அதுதான் ஊருக்கே தெரியுமே..எனக்க அம்மையாக்கும் அத முதல்ல கண்டுபிடிச்சவ… ஒருநாள் ரகசியமா கேக்கா, ஏலே உனக்க காந்திக்கும் தலைக்கு வட்டாலேண்ணு ஹெஹெஹெ’ நான் அவரை பரிதாபமாகப் பார்த்து ‘உம்ம நிலமையிலே சிரிப்பு..என்ன?’ என்றேன். ‘நான் சிரிச்சது அதுக்காட்டுல்ல. ஜெயிலிலே நம்மள பாத்தாக்க வார்டர்மாரு சட்டைய ஒரு தடவ ஜாகிரதையா தொட்டுட்டுதான் போவானுக ஹ்ஹே ஹ்ஹெ’

நான் ‘செரி, சிவன் பிள்ளை சொன்னா பென்ஷன் குடுக்க மாட்டாங்களா?’ என்றேன். ‘நீரு ஒண்ணு. சுதந்திரம் கெடைச்சம்புறவு சிவன்பிள்ளைக்கே ஏண்ணு கேக்க ஆளில்லாம ஆச்சு. பிறவு அம்பத்திமூணிலே நேசமணி, தாணுலிங்கநாடார்கூட சேர்ந்துட்டு தாய்த்தமிழக போராட்டத்தில குதிச்சேன். அப்பமும் மறியல். சந்தோசமான விஷயம் என்னாண்ணா அதே நாராயணன் நாயராக்கும் என்னைய அடிச்சது. அவருக்கு புரமோஷன். அடிச்சு இளுத்து வேனிலே போட்டார். செரி, பளைய ஆளாக்குமே, ஒரு மரியாதை நல்லதாக்குமேண்ணு நான் அவரிட்ட ‘என்னவே நல்லா இருக்கேரா’ ண்ணு கேட்டேன். அதுக்கும் அடிச்சாரு’

‘நேரா கோர்ட்டிலே கொண்டாந்து நிப்பாட்டினாங்க. இது நம்ம சுதேசி கோர்ட்டு. மேலே சீலிங் ஃபேனெல்லாம் உண்டு. காந்திபடம் இருக்கு. மண்ணு தின்னுறப்ப பிடிபட்ட பிள்ளை மாதிரி சிரிக்காரு… மத்தபடி அதே டவாலி. அதே பளைய பேப்பரு. அதே சட்டம். ஒரு அய்யராக்கும் ஜட்ஜு. பழைய தண்டனைய பாக்காரு. பிரிட்டிஷ் சர்க்காரு நடைமுறைகளை அப்ப்டியே ஃபாலோ பண்ணணுமுன்னுல்லா சுதேசி சர்க்காருக்க சட்டம்? செரீண்ணு இவரும் வழிப்பறிமுயற்சின்னு போட்டு போடான்னுட்டாரு. சும்மா சொல்லப்பிடாது. அரசியல்ணு உள்ள போறதவிட வழிப்பறீண்ணு உள்ள போனா அங்க உள்ள பிரஜைகளிட்ட ஒரு தனி மதிப்புண்டு. சாம்பாரிலே உள்ள காயெல்லாம் பொறுக்கி நம்ம தட்டிலே போட்டு ‘தின்னும் வேய்’ண்ணு சொல்லுவானுக. எடலாக்குடி கசாப்புக்கடை காதருக்க அப்பன் மொய்தீன்கண்ணு நம்ம ஜெயில் தோஸ்தாக்கும். எரட்டக்கொலை. சாவது வரை வந்து நம்மகிட்ட நல்லது கெட்டது பேசி டீகுடிச்சிட்டுதான் போவாரு. நல்ல மனுஷன்…’

’நேசமணி சொன்னா மொழிப்போர் பென்ஷன் வருமே’. ‘அவரு சொன்னா வந்திருமா? நான் சொல்ல வேண்டாமா? ஒருநாளைக்கு சிதம்பரநாதன் கொட்டாரத்தில வந்து என்னை பாத்தாரு. ‘வே, ஆனது ஆச்சு. நீரு தெருவில கெடந்துசெத்தா எங்களுக்காக்கும் மானக்கேடு. ஒரு பென்ஷனுக்கு மட்டும் கையெளுத்த போடும். மிச்சத்த பெரியவரு பாத்துக்கிடுவாரு’ண்ணாரு. ‘பெரியவரு இப்பம் ஆனைமேலே கேறியாச்சே. ஆனைக்க அடியில கண்ணு தெரியுதா’ண்ணு கேட்டேன். ‘செரி, அரசியல விடும். இது உம்ம சர்க்காரு குடுக்கப்பட்ட காசுவேய்’ண்ணாரு . நான் ‘சர்க்காரு காசு வாங்குறவனெல்லாம் லஞ்சம் வாங்குறான். இந்த சர்க்கார் காச வாங்கினா நானும் லஞ்சம் வாங்கலாமா வேய்?’ண்ணு கேட்டேன். வாங்கலாம்ணு ஒரு லெட்டர் எளுதி குடுத்தா கையெளுத்து போடுறேன்னேன். பாரபட்சம் இருக்கப்பிடாதுல்லா? சர்க்கார் பியூனுக்கு நாம கொறைஞ்சு போனா பிறவு காந்தித்தொப்பிக்கு என்ன மரியாத? தலையில அடிச்சு, ‘நாசமாபோவும்வேய்’ணு சொல்லிட்டு எந்திரிச்சு போனாரு..’

‘கொளுப்பு வேய் உமக்கு’என்றேன். ‘உம்ம மேலே மரியாத இருக்கதனாலத்தானே வந்து கேக்கறாரு…அத நீரு மதிக்கணும்லா? அந்த தப்புக்காகத்தான் இண்ணைக்கு இப்டி தெருவும் திண்ணையுமா நிக்கிறீரு’ என்றேன். ’ தம்பீ இது பட்டினத்தாரு நிண்ண தெருவுல்லா?’ நான் ‘இல்ல தெரியாம கேக்கேன், நேசமணி உமக்கு பெரியவருல்லா, ஒருநடை அவரை போயி பாத்திருக்கணும் நீரு’ பூமேடை ‘நாம வேற ஆளு. காந்தியிலே ரெண்டுகாந்தி உண்டு. ஒண்ணு சர்க்கார் காந்தி இன்னொண்ணு தோட்டி காந்தி. நம்மாளு தோட்டிகாந்தியாக்கும். அடுத்தவாரம் கோர்ட்டுவாசலிலே ஒரு கூட்டத்தப் போட்டு நேசமணிய ஒருமணி நேரம் சாத்து சாத்துண்ணு சாத்தினேன்…விடமுடியாதுல்ல, என்ன?’

‘மொத்ததிலே பென்ஷன் விசயம் வாயிமண்ணு’ என்றேன். ‘அது செத்தவனுக்கு போடுற வாய்க்கரிசில்லா? நான் இப்பமும் சீவனோட இருக்கிறவனாக்கும். வே, காந்திக்கு பென்ஷன்குடுத்தா வாங்கிட்டிருப்பாரா?’என்றார். எனக்கு அது புரியவில்லை. ‘வேய், வேலைய நிப்பாட்டிட்டு ஓய்வு பெற்றாத்தானே பென்ஷன்? நாம இப்பமும் சர்வீஸிலே இருக்குதவனாக்குமே’. ‘இப்பம் காங்கிரஸ்காரங்க எப்டி? உம்ம டிரீட்மெண்டுக்கு சில்லறை வல்லதும் குடுப்பானுகளா’ என்றேன். ‘வே, கன்னியாகுமரி காங்கிரஸ அடக்கி ஆண்ட நேசமணிக்க வாரிசுகள் இண்ணைக்கும் நடந்தாக்கும் போறானுக. இப்ப உள்ள காங்கிரஸ் ஆப்பீசிலே தரையைத் துடைச்சவன் கண்டசா பிளசர் காரிலே போறான்…’ என்றபின் ‘டீ என்னா வெலை?’ என்றார் பூமேடை. ‘ஒண்ணார் ரூவா’ ‘கொறைக்க மாட்டியோ?’ என்றபடி ஒண்ணரை ரூபாயை எடுத்து கொடுத்தார். நான் என் பணத்தை கொடுத்தேன். வெளியே வந்ததும் ‘செரி அப்ப பாப்பம். அடுத்த வாரம் ஒரு கூட்டம் இருக்கு. இந்த கன்னியாஸ்திரீகள் அளுகிப்போன காயிகறிகள வாங்கிட்டுபோயி அனாதைப்பிள்ளைகளுக்கு குடுக்க்காளுக. கேக்க நாதியில்ல நாட்டிலே’ என்றார்

நான் ‘நான் உள்ள கொண்டுவந்து விடுறேன்..’ என்றேன். ‘என்னத்துக்கு, நீங்க ஜோலியா போறீக’ என்றார். ‘இல்லை…வந்து என்னண்ணு பாத்துட்டு போலாமே’ என்று சொல்லி ‘ஏறுங்க’ என்றேன். ஏறிக்கொண்டார். ‘கடைசியா எப்ப ஜெயிலுக்கு போனீங்க?’ என்றேன். ‘ஜெயிலுக்குண்ணா, சும்மா புடிச்சிட்டு போறது கணக்கில்லை. சில கான்ஸ்டபிள்களுக்கு என்னைய புடிக்காது. எங்கபாத்தாலும் கெட்டவார்த்தை சொல்லுவானுக. சிலசமயம் ஒரு அடி போடுவானுக. எஸ்ஸை ஸ்டீபன் ஞானராஜ் இருந்தப்ப இடைக்கிடை கொண்டு போயி ஸ்டேஷனிலே இருக்க வச்சுட்டு கேஸு போடாம நாலஞ்சு அடி அடிச்சு அனுப்பிருவான். மத்தபடி நல்ல பையனாக்கும். சரியா கேஸாகி ஜெயிலுக்கு போனதுண்ணா எம்பத்தொம்பதிலே காந்திஜெயந்தி அண்ணைக்குதான்’

‘சத்யாக்கிரகம் பண்ணினீரோ?’ என்றேன். ‘சேச்சே இல்ல. அண்ணைக்கு காலம்பற முதல் காந்தி செலைக்கு மாலையா போட்டிட்டிருந்தானுக. நான் ஒரு ஸ்டைலா இருக்கட்டுமேண்ணு ஒரு தொப்பிய கொண்டாந்து ஸ்டேடியத்திலே இருக்கப்பட்ட காந்தி செலை தலையிலே வச்சேன்…பத்திரிகைக்காரன் போட்டோ எடுத்து போட்டான். புடிச்சு கேஸு போட்டானுக’. ‘என்ன தொப்பி?’ என்றேன். ‘செவப்பு குல்லா. நல்ல வெல்வெட்டுல்லா? களுதச்சந்த மைதானத்திலே ஒரு சர்க்கஸுக்கான நோட்டீஸ பாத்தேன். அதில ஒரு கோமாளி வச்சிருந்தான். செரீண்ணு நானே சொந்தமா துணி வாங்கி அம்சமாட்டு ஒண்ணை தச்சு கொண்டாந்து காந்திக்கு போட்டுவிட்டேன். வெளையாட்டுல்லவே, பாக்க நல்ல லெச்சணமா ஐஸ்வரியமா இருந்தது. காந்திக்கும் அது பிடிச்சிருந்தது போல. ஒரு நமுட்டு சிரிப்பு நம்மள பாத்து. அதுக்கு என்னைய புடிச்சு ஆறுமாசம் உள்ள போட்டுட்டானுக. என்ன தப்புண்ணு போலீஸிலே கேட்டேன். கோர்ட்டிலே கேட்டேன். சொல்ல மாட்டேன்னுட்டானுக…’

’உமக்கு வாய்க்கொளுப்பும் குண்டிக்கொளுக்கும் ஜாஸ்தி வேய்’ என்றேன் ‘இல்லேண்ணா அடிவாங்கணும்ணே அலைவானா மனுஷன்?’ பூமேடை, ‘தம்பி அடிவாங்குறதில ஒரு சொகம் இருக்கு பாத்துக்கிடுங்க. பல பெஞ்சாதிகளுக்கு புருசன்கிட்ட நாலஞ்சு சாத்து வாங்கல்லேண்ணாக்க ராத்திரி ஒறக்கம் வராதுல்லா, அதுமாதிரி’ ‘செரி என்ன எளவோ செய்தீரு.போட்டும். இப்பம் நான் வந்து ஒளுங்கா டாக்டர பாத்து என்ன ஏதுண்ணு கேக்கேன். உம்ம வாய வச்சுகிட்டு பேசாம வரணும்…என்ன?’ என்றேன். ‘பாப்போம். நமக்கும் இப்ப முடியல்லை. சத்தியமாச்சொன்னா நாலஞ்சுநாளா மூத்திரம் சொட்டுச் சொட்டாத்தான் போவுது. போறது மூத்திரமா ஆசிட்டாண்ணு ஒரு நெனைப்பு வந்து கையால தொட்டுக்கூட பாத்தேன்… வலிண்ணா நல்ல வலி..’

நான் வண்டியை ஆஸ்பத்திரி முன்னால் நிறுத்தி அவரை மெல்ல பிடித்து படி ஏறச்செய்தேன். அரசு ஆஸ்பத்திரிக்கு நான் நாலைந்துமுறை வந்திருக்கிறேன், வழக்கு விஷயமாக. ஆனால் காலையில் அவ்வளவு கூட்டம் இருக்கும் என்று தெரியவில்லை. பெரிய வராந்தா முழுக்க நிரைநிரையாக கிழவர்களும் கிழவிகளும் குழந்தைகளும் பெண்களும் வெறும்தரையில் படுத்துக்கிடந்தார்கள். சுவரிலும் தூண்களிலும் சாய்ந்து அமர்ந்திருந்தார்கள். இருமி இருமி எட்டி துப்பி அப்பகுதி முழுக்க எச்சிலாகக் கிடந்தது. புண்நாற்றமும் மருந்து வாடையும் கலந்து வீசியது. வளாகம் முழுக்க நிறையத் தெருநாய்கள். அலையும் பசுக்கள்.

பூமேடை தூணில் சாய்ந்து அமர்ந்தார். ‘நீங்க போங்க தம்பி…பரவாயில்லை. நான் மொள்ளமா உள்ள போயிக்கறேன்’ என்றார். ‘செரி வந்தாச்சு, டாக்டரை பாத்துட்டு வாறேன்’ என்று எழுந்தேன். ‘ஒரு நிமிசம்’ என்றார் அவர் .அவரது கோபமான முகத்தை அப்போதுதான் பார்த்தேன். ‘எல்லாரும் நிக்குத விரிசையிலே நிண்ணு போனாப்போரும் எனக்கு. தெரியுதா?’ நான் அயர்ந்து ‘செரி’ என்றேன். சட்டென்று சிரித்து கண்ணடித்தார். ‘ஜனநாயகம்ணா வரிசையாக்குமே…நகராத வரிசைண்ணாக்க ஜனநாயகம் ஒளுங்கா நடக்குதுண்ணு அர்த்தம்’ என்றார். நான் ‘நீரு அங்க இருந்துக்கிடும். நான் வரியிலே நிக்கேன்…அது செய்லாமில்ல?’ என்றேன். ‘அது செரி. ஆனா எருமைக்காரன் வந்து விளிக்கிறப்ப அந்த வரிசயிலயும் நீரு முன்னால போயி நிண்ணுக்க்கிடப்பிடாது’ என்றார் சிரித்தபடி. ஒரு பெரிய பசு வாயில் வலைபோட்ட கன்றுடன் வந்து பூமேடையை முகர்ந்து பார்த்தது. அவர் அதன் நெற்றியை வருடினார்.

வரிசையில் இருநூறு முந்நூறு பேர் இருப்பார்கள். கம்பிச் சன்னலுக்குப் பின் வெள்ளைச் சீருடை அணிந்த ஒரு நடுவயதுப்பெண் குனிந்த தலை நிமிராமல் சீட்டு எழுதிக்கொண்டிருந்தாள். உள்ளே ரேக்குகளில் ஃபைல்கள். மேலே பழைய மின்விசிறி. நடுவே நிறுத்திவிட்டு எழுந்து எங்கோ போய் பத்து நிமிடம் கழித்து வந்தாள். வரிசை நகரும் வேகம் எனக்கு பொறுமையை சோதித்தது. வரிசையிலேயே இரு கிழவர்கள் தரையில் குந்தி அமர்ந்து தலையில் கையை வைத்துக்கொண்டிருந்தார்கள். அப்படி உட்கார்ந்தபடியே மெல்ல நகர்ந்தார்கள். முன்னால் ஒரு கிழவி சீட்டை வாங்கிக்கொண்டு அந்த நர்ஸிடம் ஏதோ சொன்னதும் ‘ஏ கெளவி, அதில எளுதியிருக்குல்லா? போ…போ அந்தால’ என்று அந்தப்பெண் சீறினாள். கிழவி சத்தமில்லாமல் ஏதோ புலம்பிவிட்டு கூனிய நடையுடன் சென்றாள்

தூரத்தில் ஏட்டு முத்துசாமி வருவதைக் கண்டேன். தெரிந்தவர்தான். பூமேடை இருந்த தூணருகே வந்ததும் ஏட்டு அவரை அடையாளம் கண்டு கொண்டார். பூமேடை தூங்கியபடி தூணில் சாய்ந்திருந்தார். ஏட்டு பூட்ஸால் பூமேடையின் தொடையை ஓங்கி எத்தி ‘வே, என்னவே? வேய்’ என்றார். பூமேடை மறுபக்கம் விழப்போய் தூணை பிடித்துக்கொண்டார். ஒருகணம் என் கைகால் எல்லாம் எரிவது போலிருந்தது. ஆனால் பல்லைக் கடித்து கண்களை பலமுறை மூடித்திறந்து அமைதியானேன். ஏட்டு அவரிடம் ‘இங்க என்னவே செய்றீரு?’ என்றார். பூமேடை சிவந்த கண்களால் பார்த்தார். அவர் மனம் இன்னும் தெளிவடையவில்லை என்று தெரிந்தது

நான் உரக்க ‘ஏட்டையா’ என்றேன். ‘ஆருவே நீரா? நீரு இங்க எங்க?’ என்றார். ‘நான்தான்… பூமேடைய கூட்டிட்டு வந்தேன். எங்க சீனியரு சொன்னாரு’ என்றேன். ‘உமக்க சீனியருக்கு என்ன வே கிறுக்கா? இவன் கோட்டிக்காரன்லா? தீனிபோடுற கைய கடிக்குற நாயாக்கும் இவன். ஆளு இப்டி இருக்கான்னு பாக்காதீரு… வெஷப்பார்ட்டியாக்கும். இவனால வேலை போன நம்ம பாஸ்கரன் எஸ்ஸை இப்பம் ரைஸ்மில்லுலே மாவரைக்குதாரு.. தெரியுமா?’ என்றார். ‘செரி…சீனியரு சொன்னாரு’ என்றேன். ஏட்டு முகம் மாறி ரகசியமாக ‘மத்த காஞ்சாம்பறம் கேஸு என்னாச்சு? படியறுமா?’ என்றார். நான் ‘எங்க? வாய்தால கெடக்கு. அவனிட்ட பைசா இல்ல…’ ஏட்டு ‘அதும் செரிதான். பைசா இருந்தா உங்ககிட்ட ஏன்வே வாறான்?’ என்றபின் ‘வாறன்..ஒரு கேசு கெடக்கு… கைவெட்டாக்கும்’ என்று போனார்.

ஜன்னல் பெண்மணியிடம் ‘ஒரு சீட்டு’ என்றேன். ‘ம்?’ என்றாள். ‘சீட்டு’ என்றேன். அவள் என்னை சிலகணங்கள் பார்த்துவிட்டு ‘ஆருக்கு?’ என்றாள். ‘அந்தா இருக்காரு..பூமேடை ராமையாண்ணு பேரு’ என்றேன். ‘அவரு வந்து கியூவிலே நிக்கட்டு..அந்தால மாறுங்க’ என்றாள் என்னை பார்க்காமல். என் தலையில் ரத்தம் பாய்ந்தது. ‘அவரால நிக்க முடியாதே’ என்றேன். ‘முடியல்லைண்ணா அங்க கெடக்கட்டு. செத்தாக்க நாங்க எடுத்து உள்ள போடுவம்…வெலகும்வே’ என்றாள். நான் ஒரு பெண் அத்தனை கடினமாகபேசமுடியும் என்பதையே நம்பாதவனாக அவளைப் பார்த்தேன். சில நொடிகள் மனதை அமைதிப்படுத்திவிட்டு ‘செரி அவரை கூப்பிடுதேன்’ என்றேன். ‘அவருக்கு வேணுமானா அவரு கியூவிலே நின்னு வரட்டும்.. நீரு வெலகும்’.

நான் ஏதோ கேட்பதற்குள் என் பின்னால் நின்ற கிழவர் மெல்ல ‘அஞ்சுரூபா குடும்…அதாக்கும் இங்க உள்ள சட்டம்’ என்றார். நான் என் உடலால் ஜன்னலை பூமேடையிடம் இருந்து மறைத்து ஐந்து ரூபாய் எடுத்து அவள் முன் வைத்தேன். அவள் அதை ஒரு டிராயருக்குள் போட்டபின் மேலே எதுவுமே பேசாமல் ‘பேரு?’ ‘வயசு?’ என்றாள். சொல்லி சீட்டு எடுத்துவிட்டு பூமேடையிடம் வந்தேன். அவரை மெல்ல தூக்கி எழுப்பினேன். ‘பதிமூணாம் நம்பர் ரூமு’ என்றேன். ‘மங்கலமான நம்பர்லா’ என்றார், ‘நல்லா கேட்டேரா? மார்ச்சுவரியா இருக்கப்போவுது’. நான் ‘மார்ச்சுவரிக்குண்ணா நம்மள போவச்சொல்லமாட்டாங்க. அவங்களே கொண்டு போவாங்களாம்’ என்றேன் . அவர் ‘அவ்ளவு அந்தஸ்தான எடம் ,என்ன?’என்றார், ‘ஏஸியும் பண்ணிவச்சிருப்பான்’

பதிமூன்றாம் அறைமுன் பெஞ்சு ஏதும் இல்லை. ஐம்பது நோயாளிகள் வரிசையாக நின்றிருந்தார்கள். ஒரு இருபதுபேர் அமர்ந்திருந்தார்கள். நாலைந்துபேர் அங்கேயே படுத்திருந்தார்கள். நான் பூமேடையை அமரச்சொல்லிவிட்டு வரிசையில் நின்றேன். உள்ளே போனவர்கள் சரசரவென்று அதே வேகத்தில் வெளியே செல்வதை கவனித்தபோது ஆறுதலாக இருந்தது. வாட்சைப்பார்த்தேன். எனக்காக அங்கே காத்திருப்பார்கள் மாடும் பெண்ணும். பெண் எப்படி இருப்பாள்? பெருவட்டர் வீட்டுக்குட்டிக்கு கண்டிப்பாக திமிர் இருக்கும். ஆனால் பணமுள்ளவர்களுக்கு திமிர் ஓர் அழகு…. ஒருமணிநேரத்தில் என் இடம் வந்தது. நான் பூமேடையை பார்த்தேன். தூங்கிக்கொண்டிருந்தார். சட்டென்று உள்ளே சென்றேன்

டாக்டர் என்னிடம் சந்தேகமாக ‘எஸ்?’ என்றார். வரிவரியாக மயிர் சீவி ஒட்டிவைக்கப்பட்ட வழுக்கைத்தலையும் கனத்த கண்ணாடியும் கொண்ட ஐம்பதுவயதான ஆள். தொளதொள சட்டை பாண்ட். ‘என்பேரு கணேசன். லாயர்.’ என்றேன். அவரது கண்கள் மாறுவதை திருப்தியுடன் கவனித்து ‘நமக்கு தெரிஞ்ச ஒருத்தருக்கு உடம்புசரியில்லை. கூட்டிவந்திருக்கேன்’ என்றேன். ‘கேஸா?’ என்றார் பின்னால் சாய்ந்து. ‘இல்லை. தெரிஞ்சவரு. வயசானவரு. வேற ஆதரவுக்கு யாரும் கெடையாது. தனியார் ஆஸ்பத்திரிக்குன்னா வரமாட்டார். இங்க வேணுங்கிறத பாத்து பண்ணுங்க. நான் செலவ பாத்துக்கிடுதேன். அவருக்கு அது தெரிய வேண்டாம்’ டாக்டர் என்னை சாய்வாக பார்த்து ‘ உங்களுக்கு அவரு என்ன ஒறவு?’ என்றார். ‘சின்னவயசிலே இருந்து பழக்கம்’ அவர் தலையசைத்து ‘கொண்டுட்டு வாங்க’ என்றார்

பூமேடையை உள்ளே கொண்டு வந்தேன். டாக்டர் பக்கத்து அறைக்குள் கொண்டு சென்று படுக்கவைத்து பரிசோதனை செய்தார். நான் வெளியே காத்திருந்தேன். கைகழுவிவிட்டு வந்து என்னை தனியாக அழைத்து ‘கிட்னி அவிஞ்சு போயிருக்குண்ணு நினைக்கேன். ரொம்ப கிரிட்டிக்கல். எப்டி இவ்ளவுதூரம் எந்திரிச்சு நிக்கிறார்னே தெரியேல்ல…’ என்றார். ‘நல்ல உடம்பு’ என்றேன். ‘வயசும் ஆயாச்சு…மெதுவா என்னோட கிளினிக்குக்கு கொண்டுவர முடியுமா?’ என்றார். ‘வரமாட்டாரு. கிளினிக்குல செய்றத இங்க செய்யுங்க. அதுக்கு உண்டானதை குடுத்திடறேன்’

‘நீங்க அவருக்கு உறவு கெடையாதுன்னு சொன்னீங்க…நெறைய செலவாகும். நெறையன்னா உடனே எப்டியும் ஒரு அஞ்சாயிரம் வேணும். மேக்கொண்டு அது இதுன்னு ஆயிடும்..’ நான் மூச்சை கொஞ்சம் சிரமபப்ட்டு விட்டு ‘சரி…அவருக்குன்னு கேட்டா குடுக்க ஆளிருப்பாங்க… நீங்க அட்மிட் பண்ணுங்க’ என்றேன். ‘செரி’ என்று அவர் எழுதினார். பிறகு யோசித்து ‘கொஞ்சநேரம் வெயிட் பண்ணுங்க. நான் வார்டில கூப்பிட்டுச் சொல்லிடறேன்.’ என்றார். நன்றாகக் குரலை தாழ்த்தி ‘அதுக்குள்ள பணம் கிடைச்சா நல்லா இருக்கும்’ என்றார்.

என் கண்களும் அவர் கண்களும் சந்தித்தன. அவர் என்ன சொல்கிறார் என்று புரிந்தது. நான் மீண்டும் சிரமப்பட்டு என் கனலை அணைத்தேன். ‘டாக்டர் அவரு இப்ப ரொம்ப முடியாம கண்டிஷன்ல இருக்கார்னு நீங்கதான் சொன்னீங்க. அட்மிட் பண்ணுங்க…நான் ஒருமணி நேரத்திலே பணத்தோட வந்திருதேன்’ என்றேன். என் குரலில் என்னை அறியாமலேயே கோபம் வந்திருந்தது. டாக்டர் மெல்ல சிரித்து ‘நீங்க அவருக்கு சொந்தமெல்லாம் இல்லல்ல? போனா நீங்க வரலேன்னு வைங்க…இல்ல ஒரு பேச்சுக்குச் சொன்னேன். ஸ்பெஷல்வார்டுக்குன்னு ஒரு முறை இருக்கு இங்க… அந்த வழியா சும்மா நடந்துபோற ஸ்டாஃப் கூட கைய நீட்டுவாங்க. நான் வாங்கலேண்ணா யாரும் நம்பமாட்டாங்க. என் கையிலே இருந்து குடுக்க முடியாதுல்ல?’

அவர் எதையும் கேட்கமாட்டார் என அவரது மெல்லிய சிரிப்பே சொல்லியது. நான் பெருமூச்சு விட்டேன். ‘செரி.. நான் போய் பணத்தோட வாறேன்’. அதற்குள் இன்னொரு நோயாளி உள்ளே வந்தாள். கிழவி. கை கால்கள் எல்லாம் தனித்தனியாக ஆட வெடவெடவென நடுங்கிக்கொண்டிருந்தாள். ‘பொன்னுஸாறே’ என்று அவள் சொல்ல ஆரம்பிக்க அவளை ஏறிட்டும் பார்க்காமல் ஏதோ எழுதி அவளிடம் கொடுத்துவிட்டு என்னிடம் ‘செரி’ என்றார். கிழவி ‘நாலு மாசமாச்சு இந்த காச்சலு வந்து…இப்பம்– ’ என்று முனகிக்கொண்டிருக்க நான் ‘அப்ப எங்க படுக்க வைக்க?’ என்றேன். ‘வெளியே திண்ணையிலே இருக்கட்டும்’ நான் ‘அவரு ரொம்ப..’ என ஆரம்பிக்க ‘சார், இங்க வாற கேஸிலே முக்காவாசிப்பேர் இந்த கண்டிஷன்லதான் இருக்காங்க…இங்க இதெல்லாம் பாத்தா ஒண்ணும் நடக்காது…’ என்றபின் முக்கி முக்கி தொடர்ந்து பேசிக்கொண்டிருந்த கிழவியிடம் ‘த, சீட்டு எளுதியாச்சுல்ல, போம்மா’ என்று அதட்டி விட்டு அடுத்த நோயாளிக்காக மணி அடித்தார்.

நான் பூமேடையை எழுப்பினேன். ‘என்ன சொல்லுகாரு டாக்டர்? அவருக்க அபிப்பிராயம் என்ன? பொதைக்கலாமா எரிக்கலாமா?’ என்றார். ‘முதல்ல போஸ்ட்மார்ட்டத்த பண்ணுறேன்னாரு…வாரும் வேய்’ என்று கூட்டிச்சென்றேன். ‘அட்மிட் பண்ணணும்னு சொல்லுதாரு..அதுக்கு முன்னால இன்னொருவாட்டி டெஸ்டெல்லாம் எடுக்கணும். நீரு இங்கிண திண்னையிலே கொஞ்ச நேரம் இரும்…’ என்றேன். ‘நீங்க எங்க போறீங்க? மலர்வளையமெல்லாம் எனக்கு பிடிக்காது’ என்றார் பூமேடை. ‘செரி நாலுமொழம் மல்லியப்பூ வாங்கி போடுறேன் போருமா? சும்மா இரும்வே…ஒரு சின்ன சோலி. முடிச்சிட்டு பத்து நிமிசத்துக்குள்ள வந்திருவேன்’

அவர் தூணருகே படுத்துக்கொண்டார். நான் என் டிவிஎஸ் ஃபிஃப்டியை முடிந்தவரை வேகமாக ஓட்டினேன். ஐயாயிரம் ரூபாய்க்கு என்ன செய்வது? எனக்குத்தெரிந்து ஐயாயிரம் ரூபாய் கொடுக்கும் அளவுக்கு கையில் பண ஓட்டம் உள்ள எவரும் இல்லை. பூமேடை பெயரைச் சொல்லி யாரிடம் கேட்பது? அரசியல் கட்சிகளிடமா? உடனடியாக ஐயாயிரம் ரூபாய்!

எங்கே செல்வது என்று என் உள் மனம் அறிந்திருந்தது. நான் அந்த பெண்வீட்டுக்குத்தான் சென்றேன். என்னை எதிர்பார்த்திருந்தார்கள் போல. திண்ணையில் மூன்று பெரியவர்கள் இருந்தார்கள். ஒருவர் மபொசி போல மீசை வைத்து காமராஜ் சாயலில் இருந்தார். வெடியோசைபோல பேசிக்கொண்டிருந்தவர் என்னை பார்த்ததும் மற்றவர்களுக்குச் சுட்டிக்காட்டினார். பேச்சு நின்றது. என்னை கவனித்தார்கள். நான் என் வண்டியை நிறுத்திவிட்டு அவசரமாக படி ஏறினேன். சட்டை போடாமல் சாயவேட்டியுடன் வெற்றிலை போட்டுக்கொண்டிருந்தவர்தான் வீட்டுக்காரப் பெருவட்டர் என்று தெரிந்தது.

‘நானாக்கும் கணேசன்.லாயர்’ என்றேன். ‘வாங்க…’ என்றார் அவர். என் உடைகள் முழுக்க கறைகளும் அழுக்குமாக இருப்பதை அப்போதுதான் கவனித்தேன். ‘ஒரு அவசர வேலையா வந்தேன். அப்பனுக்கு நல்ல தேகசுகமில்லை. ஆஸ்பத்திரியிலே இருக்காரு… ஒரு சகாயம் செய்யணும்’ என்றேன். அவரை சிந்திக்க விடாமல் மேலே தொடர்ந்தேன் ‘ஒரு ஐயாயிரம் ரூபா இப்பம் வேணும். அப்பன் இங்கவந்து கேக்கச்சொன்னாரு. இங்க மட்டும்தாம்லே நாம கேக்கமுடியும்ணு சொன்னாரு’ அவர் மற்ற இருவரையும் பார்த்து ஏதோ சொல்ல வந்து தத்தளித்தார். அப்படி அப்பட்டமாக பிறர் முன் பணம்கேட்டால் அவரால் மறுக்க முடியாது, அந்தமாதிரி தருணத்தையே சந்தித்திருக்கமாட்டார்.

‘நேரமில்லை…நான் ஒரு அஞ்சுமணிக்கு திரும்பி கொண்டுவந்து குடுக்கேன்..உடனே… ’ அவர் வெற்றிலையை துப்பிவிட்டு ‘இருங்க’ என்று சொல்ல ஆரம்பித்ததுமே நான் ‘வலிய உபகாரம்’ என்று கும்பிட்டேன். அவர் மேலும் ஒருகணம் தவித்தபின் உள்ளே சென்று ரூபாயை எண்ணிக்கொண்டே வந்தார். நான் ‘ரொம்ப உபகாரம்…நான் வாறேன்’ என்று பணத்தை எண்ணாமல் வாங்கிக்கொண்டு வண்டியை எடுத்து வேகமாகக் கிளம்பிச்சென்றேன்.

ஆஸ்பத்திரியில் டாக்டரின் அறைக்குச் செல்லும்போதே ஏதோ நடந்திருக்கிறதென தெரிந்துவிட்டது. அங்கே கூட்டமாக இருந்தது. யாரோ கத்திக்கொண்டிருந்தார்கள். நான் கூட்டத்தை விலக்கினேன். டாக்டர்தான் சாமியாடிக்கொண்டிருந்தார். என்னைக்கண்டதும் திரும்பி ‘ஓய் உம்மாலதான் எல்லாம்..கூட்டிட்டுப்போவும்வே இவனை… இப்பம் கூட்டிட்டு போகலைண்ணா தூக்கி வெளிய போட்டிருவேன்…என்ன ஓய், என்னை என்ன கேனைக்கூமுட்டைண்ணு நெனைச்சேரா? நானும் பல ஊரு தண்ணி பாத்துத்தான் இங்க வந்திருக்கேன்..’என்று மூச்சிரைக்க கத்தினார்.

‘என்ன, என்ன ஆச்சு?’ என்றேன். ‘ஒரு அடி அடிச்சேன்னாக்க பொணம் விளுந்திருக்கும். அது நடக்காதது உம்ம யோகம்… எடுத்திட்டு போவும் ஓய் இந்த பார எளவ…இப்பம் இந்த நிமிசம் எடுத்திட்டு போயாகணும்..’ என்றார் டாக்டர். அவருடைய உடம்பெல்லாம் வியர்வை நாறியது . ‘டாக்டர், இருங்க நான் சொல்லுதேன்…நீங்க சொன்ன மாதிரி…’ பணத்தை சைகை காட்டினேன். ‘இனி இந்தியாவுக்க ஜனாதிபதி வந்து சொன்னாலும் இந்தாள இங்க அட்மிட் போடமுடியாது…இந்த காம்பவுண்டிலே இவரு இருக்கப்பிடாது…இப்ப கெளம்பி போயாகணும்..’

‘வே, இவரு என்ன சொல்லுகாரு? சர்க்காராஸுபத்திரிண்ணாக்க அனாதைகளுக்கு நிம்மதியா வந்து சாவுகதுக்குண்டான எடமாக்கும்’ என்றார் பூமேடை. ‘டேய், கோட்டிக்கார தாயளி..’ என்று டாக்டர் நிலைமறந்து பாயப்போனார். நான் அவரை பிடித்து சுழற்றி இழுத்து நிறுத்தினேன். என் கட்டுப்பாடு பறந்தது. ‘என்னவே? நீரு என்ன நினைச்சிருக்கேரு? அடிச்சிருவேரா? அடியும்வே பாப்போம்’ என்று கத்தினேன். டாக்டர் சட்டென்று தணிந்து ‘என் சீவன் இருக்கிற வரை இந்த ஆஸ்பத்திரியிலே இவன் நுழையமாட்டான்…பாத்திருதேன்’ என சொல்லிக்கொண்டு உள்ளே சென்றார்.

‘என்னவே அப்பிடிச் சொன்னீரு?’ என்றேன் பூமேடையிடம். ஆனால் அவரால் தலை தூக்க முடியவில்லை. அப்படியே சுருண்டு படுத்துவிட்டார். சீருடை அணிந்த ஒரு ஆஸ்பத்திரி சிப்பந்தி என்னிடம் ‘சாரு இவருக்க ஆளா? இது நம்ம பூமேடையில்லா?’ என்றார். ‘ஆமா…அவரு நம்ம கட்சிக்காரராக்கும். நான் வக்கீலு’ என்றேன் ‘என்ன வே சங்கதி? என்ன இங்க இவ்ளவு பிரச்சினை?’

அவர் குரலைத்தாழ்த்தி ‘ ஒண்ணுமில்லை, நம்ம தேவசகாயமும் கருணாகரனும் வந்தாவ. காங்கிரஸுக்க ஆளுகளாக்கும். எங்கயோ நாலு கீறு கீறியிருப்பானுவ. நேரா இங்க வந்திட்டானுவ. பிரி டேட்டு போட்டு அட்மிட் ஆகணுமுண்ணு சொல்லுகானுக. அது இங்க எப்பமும் உள்ள ரீதியில்லா? அவனுக கியூவிலே நிக்கல்லை. சல்யூட அடிச்சுட்டு நேரா உள்ள போயிட்டானுக. டாக்டரு அவனுகள சிரிச்சு உபசரிச்சு அட்மிஷன் போட்டுட்டாரு. அத இவரு பாத்திருக்காரு. எந்திரிச்சு போயி டாக்டர்கிட்ட இங்க கியூ ஒண்ணும் இல்லியா? நாப்பதுபேரு வரிசையிலே காலம்பற முதல் நிக்கானுகளேன்னு கேட்டிருக்காரு. அதுக்கு டாக்டர் இவங்க ரெண்டுபேரும் காங்கிரஸ்காரங்க. ஆளும்கட்சி. அதனால கியூ இல்லேன்னு சொல்லியிருக்காரு’

நான் பெருமூச்சு விட்டேன். சிப்பந்தி சிரித்துக்கொண்டு ‘அதுக்கும்பிறவுதான் கோட்டிக்கார மனுஷன் அவன் புத்திய காட்டியிருக்காரு. நேரா கீள எறங்கி மேஞ்சுகிட்டு நின்ன பசுவையும் கண்ணுக்குட்டியையும் கூட்டிக்கிட்டு நேராட்டு டாக்டர் ரூமுக்குள்ள போயிட்டாரு. டாக்டர் பதறியடிச்சு மேச மேலே கேறிட்டாரு. ‘காங்கிரஸ் கட்சிக்க சின்னமுல்லா பசுவும் கண்ணும். அதுக்கும் கியூ வேண்டாமே’ன்னு இவர் சொல்லுகாரு. பசு உள்ள போயி எல்லாத்தையும் தட்டிப்போட்டுட்டு அந்தால ஓட டாக்டர் அய்யோ ஆத்தான்னு சத்தம்போட கொஞ்சநேரம் இங்க ஒரே சினிமாக்கூத்தா போச்சு’

எல்லாரும் சிரித்தார்கள். ‘இவரு அவராக்கும் இல்லியா? மூஞ்சி வீங்கினதனால கண்டுபிடிக்க முடியல்லை’ என்றார் ஒருவர். ‘ ஒரு காலத்திலே பெரிய சொத்துள்ள கையாக்கும் . பிரசங்கம் பண்ணிப்பண்ணி அம்பிடுத்தையும் அளிச்சான்லா…கோட்டிபுடிச்சா இப்பிடி உண்டுமா?’ ‘தெருவும் திண்ணையுமா கெடக்கணும்ணு தலையிலே எளுதியிருக்கு’ ‘பெஞ்சாதி பிள்ளைய இல்லியோ?’ ‘பிள்ளிய இல்ல. பெஞ்சாதி முன்னால போயிட்டா’ ‘அப்பம் எங்க கெடந்து செத்தா என்ன? ஐசரியமா இப்பிடியே செத்தா அந்தமட்டுக்கும் நல்லது’

நான் பேச்சுக்குரல்கள் நடுவே குனிந்து அவரைப் பார்த்தேன். முகம் வெளிறி மஞ்சளோடிப்போயிருந்தது. நான் அமர்ந்த சத்தம் கேட்டு கண் திறந்தார். சிரித்து, ‘ஒரு தப்பு பண்ணிப்போட்டேன்… கடைசித்தப்புண்ணு நெனைக்கேன்’ என்றார். ‘ஆமா இப்ப சொல்லும்’ என்று சொல்லவந்த நாக்கை மடித்துக்கொண்டேன். ‘….எளுவத்தெட்டிலே காங்கிரஸுக்க சின்னம் மாறியாச்சுல்லா? இப்பம் கையாக்குமே…நான் அதை மறந்துட்டேன்’ மீண்டும் கண்களை மூடிக்கொண்டார். எனக்கு அந்நேரத்திலும் சிரிப்பு வந்தது.

அதுதான் கடைசிப் பேச்சு. ஆட்டோ பிடித்து அவரை வேறு ஆஸ்பத்திரிக்கு கொண்டுபோன வழியிலேயே இறந்துவிட்டார். என் வாழ்க்கையை ஒட்டுமொத்தமாக மாற்றிய அந்த ஐயாயிரம் ரூபாயில் இருந்துதான் அவருக்கு சவ அடக்கம். தடபுடலாகத்தான். மூவண்ண கொடியும் மூவண்ண மலர்வளையமும் எல்லாம் உண்டு. சாவுக்கு வந்த அனைவருக்கும் ஆளுக்கொரு காந்தித்தொப்பியும் அளிக்கப்பட்டது – அதில் வாய்க்கரிசியுடன்.

*

கதைகள்

பெருவலி

மெல்லிய நூல்

ஓலைச்சிலுவை

நூறுநாற்காலிகள்

மயில்கழுத்து

யானைடாக்டர்

தாயார் பாதம்

வணங்கான்


மத்துறு தயிர்

சோற்றுக்கணக்கு

அறம்

முந்தைய கட்டுரைகோட்டி [சிறுகதை] 1
அடுத்த கட்டுரைநாஞ்சில் தேர்தலில் நிற்கிறாரா?