“ஆனையில்லா!” , முதல் ஆறு- கடிதங்கள்

முதல் ஆறு [சிறுகதை]

இனிய ஜெயம்

முதல் ஆறு எனும் சொல் உள்ளே எங்கோ எவ்வாறோ விழுந்து கிடந்ததே என மனம் துழாவிக்கொண்டு இருந்தது. இன்று அதிகாலை எழுந்ததும் முதல் நினைவே முதல் ஆறு எனும் சொல்தான். சட்டென நினைவில் எழுந்து வந்தது. பின்தொடரும் நிழலின் குரல் நாவலில் ஒரு சொல்லாக வரும் ஊர் முதல் ஆறு. முதல் ஆறு சங்க கிளையின் இரு உறுப்பினர்கள் kkm மீது அவர் கட்சிக்கு காட்டிய கணக்குகளை சரிபார்க்க கேட்டு புகார் அளிக்க வருவார்கள்.

அந்த நாவலில் ஒரு ஊரின் பெயராக அறிந்தது, அந்த நிலத்தை ஒரு பேருந்தில் கடக்க இதனை ஆண்டு தேவையாகஇருந்திருக்கிறது. அழகிய கதை. புறத்தில்பழகிய மாறாத தடம். அகத்தை அதுவே வகுத்து வைக்கிறது. இரண்டு வருடமாக எதுவுமே மாறவில்லை. இருபது நிமிட மாற்றம். புதிய நிலம். டிரைவரும் அறியாத புதிய பாதை. அவளது அகத்தை கலைத்தடுக்கி இனிமையை துவக்கிவிடுகிறது. அகமும் புறமும் இணைந்த முரண் இயக்கம். சங்க இலக்கிய அழகியல். ஊட்டி செல்கையில், நான் தவறவிடாமல் அனுபவிக்கும் மர்ம கணம் ஒன்று உண்டு. மேட்டுப் பாளையம் கடக்கையில், ஒரு குறிப்பிட்ட வளைவில், மந்திரக்கோல் தீண்டியது போல, சீதோஷணம் மாறும். தைல வாசனையுடன் குளிர் வந்து தழுவும். சமநிலம் உதிர்த்து மலைஏறும் ஒரு குறிப்பிட்ட வளைவில் ஒரு சடுதி மாற்றமாக எப்பேதும் நான் உணர்வது அது. அந்த உணர்வை அளித்த அழகிய கதை.

கடலூர் சீனு

***

அன்புள்ள ஜெ

முதல் ஆறு எளிமையான அழகான கதை. காதல் என்பது ஒரு சாதாரணமான வார்த்தை. ஒருவன் மிகமிக அருமையான ஒன்றை தன் மனசுக்குள் கண்டுபிடிக்கிறான்.

அந்த கதையில் ஒரு நுட்பமான விஷயம் எனக்குப் பட்டது. இளையராஜாவின் பாடல்கள் வருகின்றன. அவற்றை முந்தைய தலைமுறை கேட்டதே இல்லை. ஆகவே அவை தூய்மையானவை என அவன் நினைக்கிறான். அதேபோலத்தான் அந்தப்பாதையும். அது ஒரு தூய தனி வழி. இளையராஜா இசைதான் அந்த காலகட்டத்தின் முதல் ஆறு.

கே.ராஜாமணி

***

அன்புள்ள ஜெ,

நான் இப்போதுதான் ஆனையில்லா கதையை வாசித்தேன். நான் எழுதவேண்டிய ஏராளமான வரிகளை ஏராளமான வாசகர்கள் எழுதிவிட்டார்கள். கூட்டான மிகச்சிறப்பான வாசிப்பு ஏற்கனவே நடந்துவிட்டது. ஆனையில்லா அதன் தொடர்ச்சியான பாப்பாவின் சொந்த யானை இரண்டுமே அருமையான கதைகள். அந்த இரு கதைகளிலும் ஒரு கொண்டாட்டம் உள்ளது.

யானையில்லா கதை ஒரு சிறிய ஊரில் நிகழ்கிறது. அங்கே ஊரே கூடியிருக்கிறது. சாதி சனம் எல்லாமே. விலங்குகளும் உள்ளன. பாப்பாவின் சொந்த யானை கதை ஒரு அப்பார்ட்மெண்டுக்குள் நடக்கிறது. கூட எவருமே இல்லை. அப்படி ஒரு தனிமை. எந்த எல்லையில் இருந்து எந்த எல்லைக்கு வந்துவிட்டோம் இல்லையா? நினைக்க நினைக்க பதற்றமும் துக்கமும்தான் வருகின்றன

சண்முகசுந்தரம்

“ஆனையில்லா!” [சிறுகதை]

அன்புள்ள ஜெ

ஆனையில்லா கதையை நான் முன்னரே வாசித்திருந்தேன். அதை என் அப்பாவிடம் சொல்லிக்கொண்டிருந்தேன். அவர் அவருடைய அப்பாவின் ஓர் அனுபவத்தைச் சொன்னார். உண்மையில் ஒரு பெரிய கதைக்கான இடம் அது. என் தாத்தா நெல்லைப்பக்கம் கொஞ்சம் பழைமையான ஊரைச்சேர்ந்தவர். இப்போது விரோதங்கள் வேண்டாம். ஆகவே சொல்லவேண்டியதில்லை.

தாத்தாவின் அப்பா பெரிய செல்வாக்கான வாழ்க்கை வாழ்ந்தார். 1905ல் கார் வாங்கியவர். ஆனால் அவர் திடீரென்று இறந்தார். குடும்பம் சேர்ந்து என் தாத்தாவின் அம்மாவையும் கைக்குழந்தையையும் துரத்திவிட்டுவிட்டார்கள். பிள்ளையுடன் நடுத்தெருவில் நின்றார். மிகப்பெரிய இழப்பு. ஆனால் அதைவிடப்பெரிய இழப்பு தாத்தாவின் அப்பா தன் மகனுக்காக பேங்கில் போட்டுவைத்திருந்த பத்தாயிரம் ரூபாயை ஏமாற்றி கையெழுத்து வாங்கி சொந்தக்காரர்கள் பறித்துக்கொண்டது.

பத்தாயிரம் ரூபாயில் சென்னையில் அன்றைக்கு மூன்று வீடு வாங்கலாம். பிடுங்கிக்கொண்டவர்கள் தாத்தாவின் சித்தப்பாக்கள். மட்டுமல்ல தாத்தாவின் மாமாக்களும்தான். அதாவது சொந்த சகோதரியின் சொத்தை பறித்து தெருவில் இறக்கிவிட்டனர். தாத்தாவின் அம்மாவால் அந்த பத்தாயிரம் ரூபாயை இழந்ததை தாங்கவே முடியவில்லை. காய்ச்சல் வந்து மெலிந்துவிட்டார். பத்தாயிரம் ரூபாய் என்றே நினைப்பு.

அப்போது ஒரு சொந்தக்காரர், அர்ச்சகராக இருந்தவர், அதை பத்துரூபாய் என்று நினைச்சுக்கோ என்று சொன்னாராம். அதெப்படி நினைக்க முடியும் என்று தோன்றினாலும் பிள்ளை இருந்ததனால் வேறுவழியே இல்லாமல் பத்து ரூபாய் என்றே நினைத்திருக்கிறார் பாட்டி. பத்து என்றுதான் சொல்வார். பிசாத்து பத்துரூபா என்பாராம்.

கொஞ்சம் கொஞ்சமாக அது பத்து ரூபாய் என்றே மனசில் பதிந்துவிட்டது. அப்படியே தேறிவந்துவிட்டாராம். பிறகு சிரித்தபடியே பத்துரூபாய் என்பாராம். ஒரு ஆனையை குட்டியாக ஆக்குவதுபோலத்தான். அப்பா அந்தக்கதையை இந்த சம்பவத்துடன் சம்பந்தப்படுத்திச் சொன்னார். ஆச்சரியமாக இருந்தது.

எஸ்.சந்தானம்

***

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–53
அடுத்த கட்டுரைநற்றுணை- கடிதங்கள்