‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–49

பகுதி நான்கு : அலைமீள்கை – 32

நான் தயங்கிய காலடிகளுடன் சுஃபானுவின் அறை நோக்கி சென்றேன். செல்லச்செல்ல நடைவிரைவு கொண்டேன். அறைக்கு வெளியே காவலர்கள் எவருமில்லை. உள்ளே யாதவ மைந்தர்கள் பலர் இருந்தனர். அவர்கள் ஒருவரோடொருவர் பதற்றத்துடன் கூச்சலிட்டு பேசிக்கொண்டிருந்தனர். உள்ளிருந்து படைத்தலைவன் ஒருவன் கூச்சலிட்டுப் பேசியபடி வெளியே ஓடினான். இன்னொருவன் கையில் ஓர் ஓலையுடன் உள்ளே சென்றான்.

நான் அறைக்குள் நுழைந்தேன். அங்கே நக்னஜித்தி அன்னையின் மைந்தர்களான வீரா, சந்திரா, அஸ்வசேனன் ஆகியோருடன் அன்னை மித்ரவிந்தையின் மைந்தர்களான விருகன், கர்ஹன், அனிலன், கிருதரன் ஆகியோர் இருந்தனர். ஃபானுமானும் சந்திரஃபானுவும் ஶ்ரீஃபானுவும் அவர்களிடம் பேசிக்கொண்டிருந்தனர். அப்பால் சிற்றறைக் கதவு திறந்தது. உள்ளிருந்து வெளியே வந்த சுஃபானு “ஒவ்வொருவருக்குமான ஆணைகள் ஓலைகளில் தனித்தனியாக எழுதப்பட்டுள்ளன. செல்க, உங்கள் அனைவருக்கும் பணி உள்ளது! இன்னும் இரண்டு நாழிகைப் பொழுதில் இந்நகர் முழுதமைமைய வேண்டும். ஒரு சிறு ஓசைகூட எழாமல் உறங்கவேண்டும். இன்று இந்நகரை அடங்கச்செய்வதில் வென்றோம் என்றால் நாம் இந்நகரை முழுமையாக அடைந்தோம் என்று பொருள்” என்றார்.

“இத்தருணத்தில் இந்நகர் மேல் நமது ஆணை நிலைநாட்டப்படுமெனில் இதை ஆள்வது யார் என்ற ஐயமே பிறகு எழாது. ஒருவகையில் இது நன்று. இந்நகரை நாம் மீண்டும் கட்டி எழுப்புகையில் இதை மீட்டெடுத்தவர் என்றும் இதை புதிதென உருவாக்கியவர் என்றும் மூத்தவர் புகழ் பெறுவார். ஒரு யுகம் முடிந்து பிறிதொன்று பிறப்பதற்கான அடையாளம் இது என்று குடிகளிடம் நாம் கூறுவோம்” என்று சுஃபானு சொன்னார். “இன்று நாம் அச்சத்தை கடக்கவேண்டும். குடிகளிடம் இருக்கும் நம்பிக்கையின்மையையும் பதற்றத்தையும் அகற்ற வேண்டும். உங்கள் ஒவ்வொருவருக்குமான இடங்களும் பணிகளும் ஓலைகளில் வகுக்கப்பட்டுள்ளன. கிளம்புக!”

பிரஃபானு அவரைத் தொடர்ந்து வெளியே வந்து யாதவ மைந்தர் ஒவ்வொருவர் பெயரையாக சொல்லி ஓலைகளை அளித்தார். “விருகனும் கர்ஹனும் தென்னெல்லைக்கு செல்லட்டும். அனிலனும் கிருதரனும் வர்தனனும் தென்எல்லை முதல் அரண்மனை வரையிலான சாலைகளை காக்கட்டும். இளையோர் உடன் உதவவேண்டும். வீராவும் சந்திராவும் அஸ்வசேனனும் வடஎல்லைக்கு செல்லவேண்டும். அங்கிருந்து வரும் சாலைகளை சித்ராகுவும் வேகவானும் விருஷனும் காக்கட்டும். உடன்பிறந்தார் கூடச்செல்லவேண்டும். பிரகோஷனுக்கும் இளையோருக்குமான ஓலைகள் இங்குள்ளன. அவர்கள் எங்கே?” ஃபானுமான் “அவர்கள் பக்கத்து அறையில் இருக்கிறார்கள். சாம்பனின் இளையோர் வந்திருக்கிறார்கள்” என்றான். “அவர்களுக்கான ஆணைகளும் உள்ளன” என்று பிரஃபானு வெளியே சென்றார்.

சுஃபானுவை இளையோர் சிலர் சூழ்ந்துகொண்டனர். நான் அவர்களைக் கடந்து சென்று சுஃபானுவிடம் “மூத்தவரே, நான் தங்களை பார்க்கும்பொருட்டு வந்தேன்” என்றேன். “வருக! உன்னைத்தான் எதிர்பார்த்துக்கொண்டிருந்தேன்” என்று அவர் கூறினார். எனது நெஞ்சு நடுங்கியது. அவ்வண்ணமே திரும்பிச்சென்றுவிடலாம் என்று தோன்றியது ஆயினும் அது இயலாதென்று அறிந்து அவர் அருகே சென்று நின்றேன். அவர் அருகே பிரகத்ஃபானுவும் ஸ்ரீபானுவும் நின்றனர்.  “அமர்க!” என்று சுஃபானு கூறினார்.

நான் அமர்ந்ததும் அவர் அமர்ந்துகொண்டு “இந்நிலநடுக்கம் எவ்வாறு நடந்ததென்று எனக்கு தெரியவில்லை. சிற்பிகளை வரவழைத்து இந்நகர் இதை வெல்லுமா என்று அறிந்துகொள்ளவேண்டும். ஆனால் சென்ற சில மாதங்களாக நாம் சிற்பிகளை பேணவில்லை. அவர்கள் ஒவ்வொருநாளும் வந்து அவையில் அமரவேண்டும் என இங்கே முன்பு நெறி இருந்தது. சென்ற ஆண்டு மூத்தவரால் இந்நகரில் புதிதாக எந்த கட்டடங்களும் கட்டப்படவில்லை, பழைய கட்டடங்களும் பழுதுபார்க்கப்படவில்லை. ஆகவே சிற்பிகளுக்கு அளிக்கப்படும் பொருள் தேவையற்றதென்று சொன்னார். அக்கொடைகள் நிறுத்தப்பட்டன” என்றார்.

அதை சொன்னவர், அந்தக் கொடைகளை நிறுத்தியவர் சுஃபானு என்பதை நான் நன்றாகவே நினைவுகூர்ந்தேன். ஆனால் அவர் அப்போது மெய்யாகவே அதை மறந்தவர்போலத் தோன்றினார். “சிற்பிகள் ஒவ்வொருவராக கிளம்பிச்சென்றுவிட்டனர். இன்று இந்நகரைக் கட்டிய சிற்பிகளில் சிலரே இங்கே உயிருடன் இருக்கிறார்கள். அவர்களை வரச்சொல்லும்படி ஆணையிட்டிருக்கிறேன்” என்றார். “ஆம், சிற்பிகளின் சொற்களையே மக்கள் நம்புவார்கள். சிற்பிகளை அழைத்து இங்கு ஒரு அவை கூட்டவேண்டும். அவையில் சிற்பிகள் சொன்னதென்ன என்பதை மக்கள் உடனடியாக உணரும்படி செய்யவேண்டும். அதுவே உகந்த வழி” என்றேன்.

“முதன்மைச் சிற்பிகள் இங்கில்லை என்றால் இருப்பவர்களை சிற்பிகள் என்று சொல்லிவிடவேண்டியதுதான்” என்றார் சுஃபானு. நான் புன்னகைத்தேன். “என்ன நிகழ்ந்தது அங்கே? ஏன் சுதேஷ்ணன் கொல்லப்பட்டார்?” என்றார். “சுதேஷ்ணன் மூத்தவருக்கு எதிராக சூழ்ச்சி செய்தது உண்மை. ருக்மியின் உதவியை நாடியது உண்மை. அச்செய்தியை அறிந்ததும் பிரத்யும்னன் தன் நிலைவிட்டு மிகைச்செயல் ஆற்றிவிட்டார்” என்றேன். “ஆனால் இங்கு ருக்மியின் ஓலை ஒன்று வந்துள்ளது. அதை இங்குதான் எங்கோ வைத்தேன்” என்று சுஃபானு கூறினார்.

என் குரலில் பதற்றத்தை காட்டாமல் “நான் தேடி எடுக்கிறேன்” என்றேன். “இல்லை, நீ அமர்க!” என்று சொல்லி “விதர்ப்பத்தின் முத்திரையிட்ட  குழல் ஒன்றை என் ஆடையில் வைத்திருந்தேன். ஆடை மாற்றும்போது எங்கோ வைத்தேன். தேடிப் பார்” என்று ஸ்ரீஃபானுவிடம் சொன்னார். “மூத்தவரே, நான் தேடி எடுக்கிறேன்” என்று நான் சொன்னேன். “இருக்கட்டும். அவன் தேடி எடுப்பான்” என்றபின் “நீ கூறுக, இத்தருணத்தில் சிற்பிகளின் ஆணைக்கப்பால் நாம் செய்யக்கூடியதென்ன?” என்றார்.

“எவ்வகையிலும் இது நமக்கு பொருட்டல்ல என்று காட்டுவோம். இங்கிருந்து நகரை மாற்றுவதென்றால்கூட அரசர் சித்தமாக இருக்கிறார் என்று குடிகளுக்கு அறிவிப்போம். நாம் கலங்கவில்லை என்று அவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும்” என்று நான் சொன்னேன். பின்னர் “சிற்பிகளில் ஒரு சிலரேனும் உயிரோடு இருக்கக்கூடும். அவர்களை அழைத்து இந்நகரை உருவாக்கிய சிற்பிகளில் எவரேனும் எஞ்சியிருக்கிறார்களா என்று உசாவக் கோருக!” என்றேன். “அதைத்தான் நானும் எண்ணுகிறேன்” என்றார் சுஃபானு.

அருகே ஏவலரும் இளையோரும் அந்த ஓலைக்காக தேடிக்கொண்டிருந்தனர். என் கைகள் பரபரத்தன. எழுந்து தலையில் அறைந்துகொண்டு கூச்சலிட்டுவிடுவேன் என்று தோன்றியது. “மூத்தவரை மக்கள் முன் கொண்டுசென்று நிறுத்தவேண்டும். ஆனால் அவர் பதறிக்கொண்டிருக்கிறார். பேசச் சொன்னால் அவர் அழுதுவிடுவார். மக்களோ கொந்தளித்துக்கொண்டிருக்கிறார்கள். இது ஒருவர் பேரரசர் என எழவேண்டிய தருணம். இத்தகைய தருணங்களை பெரும் தெய்வக்கொடை என்றே எண்ணுவர் அரசியல் அறிந்தோர். ஆனால் ஒருவரின் தகுதி மெய்யாகவே வெளிப்படும் இடம் என்பது இத்தகைய சூழலே” என்றார்.

ஸ்ரீஃபானு “மூத்தவரே, இதுவா?” என்றான். பறவைக்கால்களில் கட்டப்படும் மிக மெல்லிய ஆட்டுத்தோலால் ஆன சுருள். “ஆம், இந்த ஓலைதான்” என்றார். எழுந்து அதை கையில் வாங்கியபடி “இவ்வண்ணம் ஒன்று இங்கே வந்தது நன்று. அவரிடமிருந்தே நேரடியாக சொல்பெறுவது பல சிக்கல்களை தீர்க்கும். ருக்மி அரசுசூழ்தல் அறியாதவர், ஆகவே அவர் பொய்சொல்ல வாய்ப்பே இல்லை” என்றார். நான் நீரில் சிலையென குளிர்ந்து அமர்ந்திருந்தேன். என் செவிகளில் சொற்களே மழுங்கலாகத்தான் விழுந்தன.

அத்தருணத்தில் கதவு திறந்து ஃபானுமான் உள்ளே வந்தான். “மூத்தவரே, இங்கிருந்து தென்எல்லைக்குச் சென்ற விருகனும் கர்ஹனும் வழியில் வெறிகொண்ட கூட்டம் ஒன்றால் சூழப்பட்டுள்ளனர். அவர்கள் மூத்தவர்களை கொல்ல முயல்கின்றனர். சுதேஷ்ணனை கொன்றுவிட்டு தப்பி ஓடுபவர்கள் அவர்கள் என்று எவரோ கூறிவிட்டனர்.” சுஃபானு “என்ன சொல்கிறாய்?” என்று கூவியபடி முன்னால் சென்றார். ஓலையை தன் முன் இருந்த பீடத்திலேயே போட்டுவிட்டார். “அவர்கள் இப்போது எங்கே?”

“சரிந்திருக்கும் மாளிகை ஒன்றுக்குள் நுழைந்துவிட்டனர். அங்கே ஒளிந்திருக்கிறார்கள். பெரும்கூட்டம் சூழ்ந்து நின்று தடிகளாலும் தேர்களாலும் அக்கட்டடத்தைத் தாக்கி சரிக்க முயல்கிறது. துணிகளைக் கொளுத்தி உள்ளே வீசி புகையிட்டு அவர்களை வெளிக்கொணரவும் முயல்கிறார்கள்.” சுஃபானு “நம் படைகள் உடனே செல்லட்டும். எத்தனை பேர் இறந்தாலும் சரி அக்கூட்டத்தை கலைக்கவேண்டும். நம் குருதியினர் உயிரிழக்கலாகாது” என்றார். “ஆம்” என்று ஃபானுமான் சொன்னான்.

“அவர்களுக்கு ஏதேனும் நிகழ்ந்தால் துவாரகையில் அரசக்குருதி விழத் தொடங்கிவிட்டது என்னும் சொல் நிறுவப்படும். பிறகு நாம் என்ன சொன்னாலும் நிலைகொள்ளாது” என்று சுஃபானு சொன்னார். “நம் இளையோர் இருவர் உடனே படையுடன் கிளம்பட்டும். நீயும் சந்திரஃபானுவும் செல்லுங்கள். நாம் நேரில் சென்றாலொழிய இத்தருணத்தில் படைகளை ஆள முடியாது.” ஃபானுமான் தலைவணங்கி “ஆணை” என்றான். “நம் அரண்மனைக் காவலுக்கு நின்றிருக்கும் படைகளை கலைக்கவேண்டாம். முரசறைந்து நம் படைவீரர்களை அங்கே வரச் சொல்லுங்கள். இந்த தலைக்கொந்தளிப்பில் அவர்கள் ஆங்காங்கே சிதறியிருப்பார்கள். அவர்களை திரட்டுங்கள்.”

என் கண்முன் அந்த ஓலை கிடந்தது. நான் சட்டென்று அதை எடுத்துக்கொண்டேன். என் கையில் இருந்து அது ஒரு சிறு பூச்சி என சிறகதிர்வுகொண்டது. என் உடல் வியர்த்துவிட்டது. சூழ நோக்கினேன். மறுபக்க கதவு திறந்திருந்தது. எழுந்து அதனூடாக வெளியே சென்றேன். மறு வாயிலில் சுஃபானுவின் குரல் ஒலித்துக்கொண்டிருந்தது. படைநகர்வுக்கான ஆணைகள். நான் விரைந்து இடைநாழியினூடாக ஓடினேன். என் கால்கள் வியர்வையில் வழுக்க விழுந்துவிடுவேன் என்று தோன்றியது.

 

ஓலையுடன் வெளியே வந்தபோது புழுங்கி எரியும் அனற்சூளையிலிருந்து குளிர்காற்று மேவும் வெளிக்கு வந்ததுபோல் உணர்ந்தேன். என் உடலும் உள்ளமும் தளர்ந்திருந்தன. எங்காவது சென்று விழுந்துவிடவேண்டும் என்று தோன்றியது. எதையும் எண்ணக்கூடாது. எங்கும் எதையும் இலக்காக்கக் கூடாது. இப்புவியில் துயர்களில் பெரும்பகுதி நாம் வாழ்க்கையை எங்கோ செல்லும் பயணமாக ஆக்கிக்கொள்வதற்காக நாமே உருவாக்கிக்கொள்பவை. இருந்த இடத்தில் இருப்பவன், சூழ இருக்கும் திருவில் மகிழ்பவன் நிறைவடைகிறான்.

ஆனால் இருந்த இடத்தில் மகிழ்வடையாமல் எங்கோ இருக்கும் எதன்பொருட்டோ ஏங்கவும் தன்னை செலுத்திக்கொள்ளவும் மானுடனைத் தூண்டும் பெருவல்லமை ஒன்று அவனுக்குள் உள்ளது. அது ஆணவம். தந்தையே, கருவுக்குள் பார்த்திவப் பரமாணுவை வந்து தொடும் முதல் விசை அது. வளர்க, விழைக, செல்க என்று அதற்கு தெய்வம் ஆணையிடுகிறது. மண்ணில் பிறந்து போரிட்டு வளர்ந்து நிலைகொள்ள ஆற்றல் அளிப்பது அதுவே.

ஆனால் அவ்வியற்கைப் பெருவிசையை ஏதேனும் ஒரு கணத்தில் வென்றாகவேண்டும். முலைகுடி நிறுத்துவதுபோல் ஆணவத்தை சப்புவதை நிறுத்தியாகவேண்டும். உடல் வளர்ச்சி நிற்பதுபோல் அதுவும் நின்றுவிட வேண்டும். அவ்வாறன்றி வாழ்நாள் முழுக்க வளர்பவர்கள், சென்று கொண்டிருப்பவர்கள் பிறருடைய இடத்தை எடுக்காமல் பிறரை துன்புறுத்தாமல் இருக்க இயலாது. ஆகவே பிறரால் துன்புறுத்தப்படாமல், அழிக்கப்படாமல் இருப்பது இயல்வதல்ல.

நான் செய்வதற்கு ஒன்றுமில்லை. அந்த ஓலையுடன் என் அறைக்குச் சென்று அதை எரித்தழித்துவிட வேண்டும். ஆனால் நான் அதை கவர்ந்ததை சுஃபானு மிக விரைவிலேயே உணர்ந்துகொள்ளக்கூடும். என் கண்களை நினைவுகூர அவரால் முடிந்தால் ஒவ்வொரு எண்ணமாக தொட்டு எடுத்துவிடுவார். அவ்வாறு உணர்ந்துவிட்டாரென்றால் அவர் எனக்கெதிராக திரும்புவார். என்னைத் தேடி வருவார். அல்லது குறைந்தது அந்த ஓலை தொலைந்துவிட்டது என்றும் அதில் எழுந்தியிருந்தது என்ன என்பதை எழுதி அனுப்பும்படியும் பிறிதொரு பறவைத்தூதினூடாக ருக்மியிடம் கேட்கலாம். என் மேல் கூர்வாள் எழுந்துவிட்டது.

நான் மூத்தவர் ஃபானுவிடம் சென்று அடிபணிவதே உகந்தது என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது. எப்படியாயினும் ஓரிரு நாட்களுக்குள் அந்த ஓலையிலிருக்கும் உள்ளடக்கத்தை சுஃபானு மூத்தவர் ஃபானுவிடம் கூறத்தான் போகிறார். அதற்குள் நானே அதற்கொரு தடையை உருவாக்கியாக வேண்டும். அத்தடையே இப்போதைக்கு என்னுடைய காப்பாக அமையும். பெருவெள்ளம் வரும் வழியில் பாறைகளை போட்டுவைப்பதுபோல. வெள்ளத்தை நிறுத்தமுடியாது, சிதறடிக்கமுடியும். மடைமாற்றமுடியும்.

செல்லும் வழியில் எண்ணம் கோத்தேன். மூத்தவர் ஃபானுவின் தனியறை முன் சென்று அவரை உடனே சந்திக்கவேண்டும் என்று காவலனிடம் கூறினேன். அமைச்சர்களும் படைத்தலைவர்களும் வந்து பேசிக்கொண்டிருப்பதாக அவன் சொன்னான். “ஒருகணம் நான் அவரை தனியாக சந்திக்கவேண்டும், இது அரச மந்தணம்” என்றேன். என்னை தனியொரு அறையில் அமரச்செய்தான். நான் நிலைகொள்ளாமல் அமர்ந்திருந்தேன். கதவு திறந்து உள்ளே வந்த ஃபானு “என்ன சொல்கிறாய்? தனியாக பேசுவதற்கென்ன உள்ளது? நகர் இப்போது நிலைகுலைந்திருக்கிறது. நான் அமைச்சர்ளையும் தளபதிகளையும் அழைத்து பேசிக்கொண்டிருக்கிறேன். தெரியுமல்லவா?” என்றார்.

“ஆம், மூத்தவரே. அதற்கு முன் நான் கூறவேண்டிய ஒன்றுண்டு. அதை கூறவே வந்தேன்” என்றேன். “விரைந்து கூறுக!” என்றபடி அவர் என்னை கூர்ந்து பார்த்தார். “மூத்தவரே, சுஃபானு தங்களுக்கு எதிராக ருக்மிக்கு செய்தி அனுப்பியிருக்கிறார்” என்றேன். “எனக்கெதிராகவா, யார்?” என்றார். “மூத்தவர் சுஃபானு” என்றேன். ஃபானு அதன் பின்னரே நான் சொல்வது அனைத்தையும் புரிந்துகொண்டு என்னை கூர்ந்து பார்த்தார். “சுதேஷ்ணனின் சூழ்ச்சியில் மூத்தவர் சுஃபானுவும் ஒரு பகுதி” என்றேன். அவர் என் அருகே வந்து “அவனா? எனக்கெதிராகவா?” என்றார்.

அவருடைய அந்தக் கள்ளமின்மை என்னை உறுத்தியது. அவ்வண்ணம் ஒரு செய்தி சொன்ன உடனே தனக்கு அதில் ஆர்வமில்லை என்றோ, ஒருபோதும் தான் அதை செவிகொள்ளப்போவதில்லை என்றோ காட்டுவதே அரசர் செய்யவேண்டியது. அச்செய்தியை கேட்டுக்கொள்ளவேண்டும். ஆனால் ஒருபோதும் செய்தியை சொல்பவனை ஊக்குவிக்கக் கூடாது. ஆனால் எளிய யாதவர்களின் வழக்கமான பூசல் உளநிலையே அவரை ஆட்டுவித்தது. “கூறுக, என்ன நடந்தது?” என்றார். “எப்படி அதை அறிந்தாய்?”

“நான் மூத்தவர் சுஃபானுவின் தூதனாகவே ருக்மியை பார்க்கச் சென்றேன். ருக்மி என்னை அவ்வாறே அணுகினார். ஆனால் அவர் பேசத்தொடங்குகையில்தான் ஒன்று தெரிந்தது. ருக்மியிடம் சுஃபானுவுக்கு நீண்ட தனித்தொடர்பு இருந்திருக்கிறது. துவாரகையை தாங்கள் மணிமுடி சூடி ஆண்ட பிறகு சில நாட்களில் தங்களை அகற்றிவிட்டு தான் முடிசூடும் எண்ணம் அவருக்கு இருந்திருக்கிறது. அதன் பொருட்டு விதர்ப்பத்திற்கு அவந்தியையும் அப்பால் கலிங்கத்தையும் ஆளும் முற்றுரிமை அளிப்பதாக சொல் ஒன்றை சுஃபானு அளித்திருக்கிறார்” என்றேன்.

ஃபானு உறுமினார். “தாங்கள் அறிவீர்கள். ருக்மி நாவின் மேல் கட்டுப்பாடு கொண்டவரல்ல. அவையிலிருந்தபடி என்னையே சுஃபானு என்று நினைத்து சொற்களை பொழிந்துகொண்டே சென்றார். நான் எந்த உணர்வையும் காட்டவில்லை. முகத்தை இறுக்கிக்கொண்டு அவர் சொல்வன அனைத்தையும் கேட்டேன். அப்போதுதான் விசாரு அங்கு வந்தான். ருக்மியின் சொற்களைக் கேட்டு விசாரு அதிர்வதை நான் கண்டேன். சுதேஷ்ணனுடன் சுஃபானுவும் இணைந்து கூட்டொன்றை அமைத்திருக்கிறார்கள் என்பதை விசாருவும் அப்போதுதான் புரிந்துகொண்டான்.”

“அவன் என்னைவிட இளையவன். என்னளவுக்கு அரசுசூழ்தல் அறியாதவன். அவையிலேயே அவன் கூச்சலிடத் தொடங்கினான். யாதவ மைந்தர்கள் ஒருங்கிணந்துவிட்டார்கள், மாதுலரே. நீங்கள் ஏன் அவர்களிடையே ஒற்றுமையின்மையை உருவாக்குகிறீர்கள் என்றான். அவன் கூச்சலிடத் தொடங்கியதும்தான் நாப் பிழையாகப் பேசிவிட்டோம் என்பதை ருக்மி உணர்ந்தார். ஆனால் அவர் அத்தருணத்தை வெல்ல முயலாமல் அமைச்சர்களையும் படைவீரர்களையும் அழைத்து கூச்சலிட்டார்.

அவருடைய அமைச்சர்கள் உள்ளே வந்தனர். அவர்கள் எங்களை சொல்லால் திசை திருப்ப முயன்றனர். ஆனால் என்ன நிகழ்கிறது என்பது எங்கள் இருவருக்குமே தெரிந்துவிட்டது. விசாரு மேலும் கூவிக்கொண்டே இருந்தான். நான் குரலைத் தணித்து ‘இங்கே பேசப்பட்டவை எங்களுக்கு சற்று புதியவை. நாங்கள் சுதேஷ்ணனிடமும் சுஃபானுவிடமும் பேசிவிட்டு எங்கள் எண்ணத்தை சொல்கிறோம்’ என்றேன். ‘நான் எந்நிலையிலும் சுஃபானுவின் அணுக்கன். எனக்கு அவரிடமிருந்து ஒரு சொல் தேவை, அவ்வளவுதான்’ என்றேன். அவர்கள் சற்று அமைதி அடைந்தார்கள். ’ஆமாம். எண்ணம் சூழ்க, இளவரசர்களே! உறுதிச்சொல் வருவது வரை காத்திருங்கள்’ என்றார் அமைச்சர். ‘உங்கள் உடன்பிறந்தாரிடமிருந்து ஓலைச்செய்தி வரவழைத்து அளிக்கிறோம். ஒருநாள் பொறுத்திருங்கள்’ என்றனர்.

நங்கள் இருவரும் வெளியே வந்து எங்கள் குடிலை நோக்கி சென்றோம். விசாரு என்னிடம் கொந்தளித்துக்கொண்டே இருந்தான். ‘இவ்வண்ணம் ஒரு சூழ்ச்சியை ஒருபோதும் ஒத்துக்கொள்ளக்கூடாது. பிரத்யும்னனிடமும் அனிருத்தனிடமும் சென்று சொல்லவேண்டும்’ என்றான். ‘ஆம், ஆனால் இப்போது நாம் உடனடியாக அதை சொல்ல இயலாது. இங்கிருந்து கிளம்புவது உகந்ததல்ல’ என்றேன். ‘உடனடியாக ஒளிந்து கிளம்பிவிடலாம்’ என்று அவன் சொன்னான். அதுவே உகந்ததென்று உணர்ந்தேன். ‘இவர்கள் யாதவ நிலத்திற்குள் நுழையமாட்டார்கள். நாம் பாலையில் நுழைந்தாலே தப்பிவிட்டவர்கள் ஆவோம்’ என்று அவன் சொன்னான்.

“அவன் தன் மூட்டையை எடுக்க வெளியே சென்றான். நான் கிளம்புவதற்கான மூட்டைகளை கட்டிக்கொண்டிருக்கையில் வெளியே புரவிக்காலடிகளை கேட்டேன். என்ன நிகழ்கிறது என்று குடிலின் இடைவெளியினூடாக பார்த்தபோது ருக்மியின் படைகள் விசாருவை வளைத்துக்கொள்வதை, அவன் திகைத்து நிற்கையில் அப்படையின் தலைவன் விசாருவை வெட்டிக்கொல்வதை கண்டேன். அக்கணமே மற்றொரு வழியினூடாக வந்து புரவியிலேறி தப்பி ஓடி இங்கு வந்தேன். அங்கு என்ன நிகழ்ந்தது என்று தெரியவில்லை. அவர்களுக்கு இடையே இருக்கும் அவ்வுறவு துவாரகையை அழிப்பது” என்றேன்.

ஃபானு சொல்லிழந்துவிட்டார். தாடியை நீவியபடி நெடுநேரம் அமர்ந்திருந்தார். பின் “நன்று, இவ்வண்ணமேனும் தெரிந்ததே” என்றார். “அதை கணக்கிட்டே பிரத்யும்னன் தன் இளையோனை கொன்றிருக்கிறான்” என்றார். ”ஆம், பிரத்யும்னன் தன் இளையோன் சுதேஷ்ணனை கொன்றது இச்செய்தியை அறிந்த பின்னரே” என்றேன். “அது எவ்வாறு அவருக்கு தெரிந்தது என்று எனக்கு தெரியவில்லை. நான் எண்ணுவது என்னவென்றால் நான் கிளம்புவதற்கு சற்று நேரம் முன்னால் விசாரு அவருக்கு ஏதேனும் ஓலை அனுப்பியிருக்கலாம். பறவைத்தூதாக அது பிரத்யும்னனிடம் வந்து சேர்ந்திருக்கலாம்.”

“ஆம், அவ்வாறே நிகழ்ந்திருக்கும். இப்போது எல்லாமே தெளிவாக இருக்கிறது” என்றார் ஃபானு. “மூத்தவரே, எனக்கு அச்சமாக இருக்கிறது. இன்று சுஃபானுவால் கொல்லப்படுவதற்கான வாய்ப்புடன் இருப்பவன் நான். அவரைப் பற்றிய உறுதியான செய்தி எனக்கு தெரிந்துவிட்டது என்பதை அவர் இப்போது ருக்மியிடமிருந்து அறிந்துகொண்டிருப்பார். சுஃபானுவின் கொலைப்படை என்னைத் தேடி வருவதற்கான எல்லா வாய்ப்புகளும் உள்ளன. ஆகவே நான் உங்களிடம் அடைக்கலம் கோருகிறேன். எனக்கு நீங்களே பாதுகாப்பு அளிக்கவேண்டும்” என்றேன்.

“ஆம், என்னுடைய பாதுகாப்பு உனக்கு உண்டு. எப்போதும் என்னுடைய படைவீரர்கள் உன்னுடன் இருப்பார்கள்” என்றார் ஃபானு. “அவர் வந்து தங்கள் உள்ளத்தை திரிக்கக் கூடும். என்மேல் பழியை சுமத்தலாம். பொய்யான ஓலைகள் கொண்டுவந்து கொடுக்கலாம். நீங்கள் உளம் மாறக்கூடாது” என்றேன். “நீ கூறும்போதே அந்த எண்ணத்தை நான் அடைந்தேன். நான் பார்த்துக்கொள்கிறேன்” என்று ஃபானு சொன்னார். “அது போதும். நான் தங்களை நம்புகிறேன்” என்றபின் தலைவணங்கி நான் அறைவிட்டு வெளியே வந்தேன்.

அது பெரிய கோட்டை அல்ல என்று நன்கறிந்திருந்தேன். அது என்னை காக்காது, ஆனால் சற்று பொழுதை ஈட்டித்தரும். நான் என்னை காக்கும் அனைத்தையும் செய்தாகவேண்டும். எங்கிருந்தோ தீய தெய்வம் ஒன்றை திறந்துவிட்டுவிட்டேன். அது நிழல்நிழலென உருப்பெருக்கி என்னை சூழ்ந்துகொண்டிருக்கிறது.

முந்தைய கட்டுரைஅறைக்கல் ஜோய் – ஒரு மர்மகதை
அடுத்த கட்டுரைபாப்பாவின் சொந்த யானை, உலகெலாம் -கடிதங்கள்