கதைகள் கடிதங்கள்

அன்புள்ள ஜெ

இந்தக்கதைகளின் தொடர்ச்சி, இதிலுள்ள முடிவில்லாத வகைபேதங்கள் மிகப்பெரிய திகைப்பை ஏற்படுத்துகின்றன. எழுத்துக்களில் பலவகை. புதுமைப்பித்தன் எல்லாவகையிலும் எழுதியிருக்கிறார். அசோகமித்திரன், சுந்தர ராமசாமி போன்றவர்கள் அதேபோல பலவகையான கதைகளை எழுதியிருக்கிறார்கள். குபரா போன்றவர்கள் ஒரே பாணியில் எழுதியிருக்கிறார்கள். ஓர் எழுத்தாளன் அடிப்படையில் ஒருசில ஆழமான கேள்விகளால் ஆனவன். கதைகள் எந்த வகையில் எழுதினாலும் அவை ஒன்றிலேயே குவிகின்றன. ஒரே கேள்விக்கு பதில்களை வேறு வேறு கோணங்களில் தேடுகின்றன. சிலபதில்களை கண்டடைகின்றன

இந்தக்கதைகளை வாசிக்கையில் உங்கள் கேள்விகள் மனிதனின் ஒட்டுமொத்தமான விதி, வாழ்க்கையின் அர்த்தம், அறுதியான மீட்பு என்று தோன்றுகிறது. அதற்கு அரசியல் பதில்களோ, சமூகவியல் பதில்களோ, உறவுகள் சார்ந்த பதில்களோ உங்களுக்கு போதவில்லை. ஹ்யூமனிஸ்ட் பதில்களில் சென்று முடிவதுதான் நவீன இலக்கியத்திலேயே பெரும்பாலானவர்கள் செய்வது. அது உங்களுக்கு போதவில்லை. அந்த பதில்களில் நின்றுவிடுபவர்களால் உங்கள் கதைகளுக்குள் வரவும் முடியவில்லை. அவர்கள் ஏதோ சாண் முழம் என அளந்து கணக்குப்போட்டுவிட்டு போகிறார்கள்

நீங்கள் கேட்டுக்கொள்ளும் கேள்விகளை நீங்கள் ஆன்மிகம் என்கிறீர்கள். ஆனால் ஒட்டுமொத்தமான கேள்வி என்று சொல்லலாம். சரித்திரம், சமகாலவாழ்க்கையின் எல்லா பக்கங்கள் ஆகியவற்றை சேர்த்து எடுத்துக்கொள்ளும் கேள்விகள். அவற்றுக்கு சிலகதைகளில் பதில்கள் உள்ளன. அவை அன்பு மனிதாபிமானம் என்று முடியாமல் உயிர்க்குலங்கள் அனைத்துடனும் இணைந்த ஒட்டுமொத்தமாக தன்னை உணர்வது, சூழ்ந்திருக்கும் அனைத்தையும் புலன்களால் உணர்ந்து கரைவது, தன்னை இழப்பது என்றே இருக்கின்றன. சூழ்திரு, துளி மாதிரிகதைகள்

ஆனால் சில கேள்விகளுக்கு பதில்கள் அப்படியே விடப்பட்டுள்ளன. உதாரணம் ஆயிரம் ஊற்றுகள், பத்துலட்சம் காலடிகள், ஓநாயின் மூக்கு. கதைகள் எதையும் சொல்லாமல் ஒரு திகைப்பை மட்டுமே பதிவுசெய்கின்றன. சொல்லப்போனால் தமிழில் புதுமைப்பித்தனுக்கு பின்னர் இத்தனை தீவிரமாக அடிப்படைக் கேள்விகளை மட்டுமே தொடர்ந்த எழுத்தாளர் தமிழில் எவரும் இல்லை. கயிற்றரவு, சிற்பியின்நரகம்,கபாடபுரம் வரிசையில் வைக்கப்படவேண்டிய பல கதைகள் இந்த வரிசையில் உள்ளன

 

எஸ்.முரளி

 

அன்புள்ள ஜெ அவர்களுக்கு,

மனமார்ந்த வணக்கம்.

கொடியறுக்கப்படாத பிறந்து விழுந்த கன்றுக்குட்டியை மாட்டின் மடியின் அருகில் கொண்டு நுகரச் செய்யும் சித்திரத்தை சிறுவயதில் இருந்து தொடர்ந்து எங்கள் ஊரில் பார்த்து வருகிறேன். தண்ணீர் மீது  நடக்க முற்படுவதைப்போல ஒவ்வொரு அடியையும் கவனமாக எடுத்து வைத்து நடக்க முனைந்து  தடுக்கி விழுந்து, தடுக்கி விழுந்து எழும் கன்றுக்குட்டி பிறந்த அரை நாளில் நின்ற இடத்திலேயே துள்ளி குதிக்கும். அடுத்தடுத்த நாட்களில் தெருவையே அதிர வைத்துக் கொண்டு ஓட்டமும் பாய்ச்சலுமாக ஓடும். அவ்வளவு எளிதாக பின்னே ஓடி பிடித்து விட முடியாத இளம் வேகம் அதன் ஓட்டத்தில் இருக்கும். ஒரு பாய்ச்சலைவிட இன்னொரு பாய்ச்சல் அதைவிட பெரிய ஒன்றாக இருக்கும். அதை எட்டுகால் பாய்ச்சல் என்பார் என் தாத்தா. அதைப் பார்ப்பதே ஒரு மன எழுச்சியைத் தரும். செயல் பரபரப்பை நரம்புக்குள் தூண்டும். காலையில் எழுந்தவுடன் அதைப் பார்த்தால் அந்த நாள் முழுக்க உற்சாகமாக இருக்கும்.  இந்த தனித்திருக்கும் காலங்களில் உங்கள் கதைகள் வாசகனுக்குள் நிகழ்த்திக் கொண்டிருப்பது அத்தகைய பாய்ச்சலைத்தான்.

வேரில் திகழ்வது,குருவி,ஏதேன், பத்து லட்சம் காலடிகள், வான் கீழ்,ஓநாயின் மூக்கு, மதுரம் என ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு பாய்ச்சல்.. ஒட்டுமொத்தமாக இந்த கதைகளைப் பற்றி ஒரு வரியில் சொல்ல வேண்டுமென்றால் அவற்றை ‘நுட்பங்களின் விரிவு’ என்று சொல்லலாம். ஒன்றிலிருந்து மற்றொன்று மற்றொன்றிலிருந்து வேறொன்று!  பல அடுக்கு கதை சொல்லலில் சரித்திர சம்பவங்களை, இனக்குழு வரலாற்றை இணைத்து புனைவாக்கி வாசிக்கிறவனுக்கு கற்பனைத் தளம் அமைத்து அவனை பலவிதமான சாகசங்களுக்கு அழைத்து செல்கிறது. உதாரணமாக ‘வான் கீழ்’ கதையில் அவர்களது கதாபாத்திரங்களை வலுவாக கட்டமைத்துவிட்டு அவர்கள் அத்தனை உயரத்திற்கு செல்கிறார்கள் எனும்போது அவர்களுக்கு ஏதும் ஆகிவிடுமோ என்ற ஒரு பதபதைப்பு உருவாகி விட்டது. அவர்களில் யாரேனும் ஒருவருக்கு உள்ளங்கை வேர்த்திருந்தது என நீங்கள் எழுதியிருந்தால் வாசிக்கிறவன் அந்த இடத்திலேயே இடறி விழுந்திருக்கக் கூடும்.

இந்த கதைகளில் தன்னியல்பாக உருவாகி வரும் தருணங்களை வாசிக்கும்போது பேராசான் பத்மராஜனின் திரைப்படங்களில், எம் டியின் திரைக்கதைகளில் இருக்கும்  தன்னியல்பு கதை சொல்லலை நினைத்துக் கொண்டேன். கதைகளை படித்த இடைவெளியில் சில பழைய கிளாஸிக் மலையாள படங்களை பார்த்தது சிறந்த அனுபவமாக இருந்தது.

‘குருவி’ கதையை வாசிக்கும்போது பெரும் மன ஊக்கம் பிறந்தது. கலைஞர்களைப் பற்றி எழுதுவதென்றாலே உங்களுக்கு தனி உற்சாகம் வந்துவிடுகிறது. அந்த உற்சாகத்தை உங்கள் கட்டுரைகளில் கலைஞன் என்பவன் தனித்துவமானவன் அவன் சராசரிகளைவிட உயர்ந்தவன் எனும் கருத்தை நீங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருவதையும், அம்மையப்பம் என்ற உங்களின் பழைய கதையிலும், கோணங்கியின் மாயாண்டி கொத்தனின் ரசமட்டம், அசோகமித்திரனின் புலிக்கலைஞன் போன்ற கதைகளை பற்றிய உங்கள் கட்டுரைகளை வாசிக்கும்போதும் உணர்ந்திருக்கிறேன். அப்போது ஒரு சினிமா உதவி இயக்குனராக  மனம் ஒரு கணம் பொங்கும். அதீத உற்சாகம் பிறக்கும்

இந்தக் கதைகளின் மூலம் கற்றுக்கொள்ள, கதை சொல்லலில் பல்வேறு சாத்தியங்களை நிகழ்த்திக் காட்டுவதுடன்..  தனித்திருக்கும் இந்நாட்களை மனச்சோர்வு ஏற்படாமல் உத்வேகத்துடன் சிந்திக்கும் நாட்களாக மாற்றி தந்தமைக்கும்  உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.

அன்புடன்
செந்தில் ஜெகன்நாதன்

மயிலாடுதுறை

ஜெ

 

நூறு வயசு வரை இதே ஆர்வத்தோட எழுதும்,சிந்திக்கும் ஆற்றல் வாய்க்க  குடும்பத்தில் நிம்மதி பூத்திருக்க  மனதார பிரார்த்திக்கிறேன் சார்.

பிறந்தநாள் வாழ்த்து சொன்னால் கொண்டாடும் வழக்கமில்லை என்று சொன்ன நினைவு. (நேற்று மறந்து விட்டேன்)

ஆனாலும் குறைந்தபட்சம் இந்த நாளிலாவது உங்க கிட்ட ஒரு சில வார்த்தைகளைப் பேச கிடைக்கிறது என மகிழ்ச்சி.

வீட்டில் அடைந்துக் கிடக்கிற காலகட்டத்தில் உங்கள் எழுத்து விமோச்சனம். பத்துலட்சம் காலடிகள், ஓநாயின் மூக்கு, வனவாசம் என வரிசைகட்டி வாசித்தக் கதைகளுக்குள் உலவிக் கொண்டிருக்கிறேன்.சரட்டென இழுத்து உள் வாங்கிக்கொண்ட கதைக் களங்கள் அபாரம். சோகம் சகலத்தையும் இணைக்கும் இழையாக உள்ளது.

மீண்டும் வாழ்த்துகள் சார்!

 

பெரும் மரியாதையுடன்,

தீபா நாகராணி,

மதுரை.

 

 

Dear Jeyamohan

வாசகர்  சாந்தகுமாரின் இந்த மெயில் (கடிதம்)  முக்கியமானது,  உங்கள் பதிலும்.

இந்தச் சிறுகதைகளையும் கூடவே வரும் வாசிப்புக்களையும் பார்க்கிறேன். இந்த வாசிப்புக்கள் மிக உதவிகரமானவை. கதைகளைப் பற்றிய நம் வாசிப்புகள் தொடாத இடங்களை இவை தொடுகின்றன. நாம் அடையாத பலவிஷயங்களை காட்டுகின்றன.இக்கடிதங்களின் நோக்கம் கூட்டுவாசிப்பு. ஒருவரின் வாசிப்பு இன்னொருவரின் வாசிப்பை பெருக்கவேண்டும்.

இணையத்தில் ஒரு நண்பர் கூறிய செய்தி.

இக்கதைகள்  சிறப்பானவை,ஆனால்  கிபி 2000 க்குப்  பிறகான  இப்போது 90% மாணவர்கள் ஆங்கில வழிக்  கல்வி,  பள்ளியில் இரண்டாம் மொழி ஃ பிரென்ச் / ஜெர்மன்/ சீன மொழி .எனவே இவர்கள்  வாசிக்கவும்,  யாரேனும்  ஆங்கிலத்தில் இக்கதைகளை எழுத்து வடிவிலோ, யூ ட்யூப் வடிவிலோ  மொழி பெயர்த்தால் கூடுதல் நன்மை .

ஃ பேஸ்புக்  போல உங்கள் வலை தளத்திலேயே மென்பொருள் மூலம் ஆங்கில மொழியாக்க வசதி
கொண்டு வர  இயலுமா, என்றும் பார்ப்போம்

 

ராம்ஜி யாகூ

 

நலமாக இருப்பீர்கள் என நம்புகிறேன். நான் சுந்தர மகாலிங்கம், சென்னையிலிருந்து.

தான் வாழும் காலத்தை ஒரு எழுத்தாளனை விட வேறு யாரும் நுட்பமாக அவதானித்து விட முடியாது; அவனே இந்த சமூகத்தின் நீதிமானாகவும் ஆகி, நல்லன தீயனவற்றை சுட்டித்திருத்த வேண்டிய பொறுப்பையும் ஏற்க வேண்டியதாகிறது.

அப்படி ஒரு முக்கியமான பொறுப்பில் முன்னவராக இருப்பது அழுத்தம் நிறைந்ததும், கூடுதல் நெருக்கடிக்கும் உரியது தான். இருந்தாலும் வேறு வழியில்லை. 21ஆம் நூற்றாண்டின் முன் ஐம்பது ஆண்டுகளில், சில தசாப்தங்களை உங்களுக்கு என தங்களது கடின உழைப்பும், இடையறாத களச் செயல்பாடும் விதித்திருக்கிறது. அதிலிருந்து உங்களை விடுவித்துக் கொள்ளவும் இயலாது. இக்காலத்தின் அறத்தின் குரலாக ஒலிக்க, நிறைந்த வாழ்த்தும், அன்பும்.

 

நன்றியுடன்,

க.சுந்தர மகாலிங்கம்

நற்றுணை [சிறுகதை]

இறைவன் [சிறுகதை]

மலைகளின் உரையாடல் [சிறுகதை]

முதல் ஆறு [சிறுகதை]

பிடி [சிறுகதை]

கைமுக்கு [சிறுகதை]

உலகெலாம் [சிறுகதை]

மாயப்பொன் [சிறுகதை]

ஆழி [சிறுகதை]

வனவாசம் [சிறுகதை]

மதுரம் [சிறுகதை]

ஓநாயின் மூக்கு [சிறுகதை]

வான்நெசவு [சிறுகதை]

பாப்பாவின் சொந்த யானை [சிறுகதை]

பத்துலட்சம் காலடிகள் [சிறுகதை]

வான்கீழ் [சிறுகதை]

எழுகதிர் [சிறுகதை]

நகைமுகன் [சிறுகதை]

ஏகம் [சிறுகதை]

ஆட்டக்கதை [சிறுகதை]

குருவி [சிறுகதை]

சூழ்திரு [சிறுகதை]

லூப் [சிறுகதை]

அனலுக்குமேல் [சிறுகதை]

பெயர்நூறான் [சிறுகதை]

இடம் [சிறுகதை]

சுற்றுகள் [சிறுகதை]

பொலிவதும் கலைவதும் [சிறுகதை]

வேரில் திகழ்வது [சிறுகதை]

ஆயிரம் ஊற்றுக்கள் [சிறுகதை]

தங்கத்தின் மணம் [சிறுகதை]

வானில் அலைகின்றன குரல்கள் [சிறுகதை]

ஏதேன் [சிறுகதை]

மொழி [சிறுகதை]

ஆடகம் [சிறுகதை]

கோட்டை [சிறுகதை]

துளி [சிறுகதை]

விலங்கு [சிறுகதை]

வேட்டு [சிறுகதை]

அங்கி [சிறுகதை]

தவளையும் இளவரசனும் [சிறுகதை]

பூனை [சிறுகதை]

வருக்கை [சிறுகதை]

“ஆனையில்லா!” [சிறுகதை]

யா தேவி! [சிறுகதை]

சர்வ ஃபூதேஷு [சிறுகதை]

சக்தி ரூபேண! [சிறுகதை]

எண்ண எண்ணக் குறைவது [சிறுகதை

முந்தைய கட்டுரைபாப்பாவின் சொந்த யானை, உலகெலாம் -கடிதங்கள்
அடுத்த கட்டுரைபிடி, கைமுக்கு -கடிதங்கள்