மலைகளின் உரையாடல் , இறைவன் கடிதங்கள்

மலைகளின் உரையாடல் [சிறுகதை]

அன்புள்ள ஜெ

மலைகளின் உரையாடல் கதையில் வரும் சில குறிப்புக்களை தேடிச்சென்று பார்த்தேன். உபநிடதத்தில் வரும் த தத்த தய தம ஆகிய சொற்களைப்பற்றிய குறிப்புகளை டி.எஸ்.எலியட் அவருடைய வேஸ்ட்லேன்ட் என்னும் கவிதையிலே குறிப்பிட்டிருக்கிறார். வேதங்களில் உள்ள சொல் அது, அதற்கு உபநிடதத்தில் விளக்கம்தான் அளிக்கப்பட்டிருக்கிறது என்கிறார்கள்

இடியோசையின் குரல். வானிலிருந்து வேதம் இறங்குவது அப்படித்தான். அந்த குருவிக்கூட்டுக்குள் குருவிக்கான வேதம் குருவிக்கான மொழியில் இறங்கிக்கொண்டிருக்கிறது. அதை அந்தக் கருவி அடையாளம் கான்கிறது. ஆனால் எல்லா மொழியிலும் வேதம் ஒன்றுதான். மலைகளுக்கான வேதமும் சரி, குருவிக்கான வேதமும் சரி

செல்வக்குமார் எம்

***

அன்புள்ள ஜெயமோகன்,

‘மலைகளின் உரையாடல்’ வாசித்தேன். கதையின் களம் ‘குருவி’ சிறுகதையின் தொடர்ச்சியாக இருந்தாலும் இதன் கரு ‘விசும்பு’ கதையின் நீட்சியாக எனக்கு படுகிறது.

ஒரு சிறு பறவைக்கும் மற்ற உயிரினங்களுக்குமான தொடர்பை விசும்பு பேசுகிறது. (ஒரு பறவை இனத்தின் திசை மாற்றம், மற்ற பறவைகளின் திசையை பாதிக்கிறது, மீன்களும் திசை மாறி பயணிக்கிறன.)அறிவியலின் எல்லைகளையும் கூறுகிறது.

மலைகளின் உரையாடல் இயற்கையின் அஃறிணைகளுக்கு இடையேயான தொடர்பை கூறுகிறது. ஒரு குருவி கட்டிய கூட்டில் மனிதன் மின்சாரம் செலுத்தும் போது எவ்வித எதிர்வினைகளும் இல்லை. ஆனால் அக்கூடு வானின் மின்னைலுக்கு பதிலுரைகிறது. இடி முழக்கம், மலைகளுடன் உரையாடுகிறது. வான் மின்னல், குருவி கூட்டுடன் உரையாடுகிறது. இடியும் மின்னலும் மேகங்களின் உரையாடலில் பிறக்கிறது.

அக்குருவி கூட்டினை போலவே ஒரு மாபெரும் இயற்கையின் பின்னலை, ஒரு ஓயாத உரையாடலை இக்கதை உணர்ந்துகிறது.மிக அற்புதமான கதை.

ஒரு சிறுகதையை வாசித்து முடித்து பின்னர் அதன் தலைப்பை பார்ப்பது ஒரு அனுபவத்தை தரும். ஆனால் இக்கதையின் தலைப்பு ஒரு பெரும் விரிவை நோக்கி செல்லாமல் உள்ளதாக படுகிறது. விசும்பை போலவே கதை ஒரு பரந்த தரிசனத்தை கொடுத்தாலும், இதன் தலைப்பு ‘மலைகளுக்கு இடையேயான உரையாடலை’ மட்டும் குறிப்பிட்டு குறுகுகிறது.  மறுவாசிப்புகளில் அதன் பிடி கிடைக்கலாம்.

தங்கள்,

கிஷோர் குமார்.

திருச்சி.

***

இறைவன் [சிறுகதை]

அன்புள்ள ஜெ

இறைவன் கலைஞனைப்பற்றிய கதை. குருவி கதையின் மாடன்பிள்ளையின் இன்னொரு வடிவம். அங்கே கலைஞன் கடவுளை கண்டடைகிறான். இங்கே கலைஞன் அருள்புரியும் கடவுளாக ஆகிறான்

இருட்டையே வெள்ளையடிப்பேன், யானையை பஞ்சு மேகமாக வானில் எழுப்பிவிடுவேன் என்று சொல்பவன். தெய்வத்தை தூரிகையால் தொட்டு எழுப்புபவன். வாழ்க்கையில் ஒன்றுமே மிஞ்சாத அள்ளி அணைக்கிறான், பெண்ணை மகளே என்கிறான். என் முத்தே என்கிறான். அந்தக்கிழவிக்கு அவன் அப்பா ஆகிறான்

அவள் பகவதியிடம் கேட்கிறாள். ஏன் என்னை இப்படி வாழச்செய்தாய் என்று. நானும் பெண்தானே, நான் என்ன செய்யமுடியும் என்கிறாள். தெய்வம் கைவிட்டவளை கலைஞன் தன் கையில் எடுத்துக்கொள்கிறான். திக்கற்றவருக்கு கலையே துணை

செந்தில்குமார்

***

அன்பு நண்பர் ஜெயமோகனுக்கு

வணக்கம்.நலம்தானே?

இறைவன் சிறுகதை படித்தேன். இது ஒருவகை மாய யதார்த்தவாதக் கதை. உள்ளத்தில் ஊறிய பகவதி இசக்கிக்கு மாயத் தோற்றத்தில் காட்சியளிக்கிறார்.

ஆனால் மாணிக்கத்திற்கு “படியெறங்கும்போதே நம்ம கூட வாறது மூதேவியாக்கும்” என்று தெரிந்திருப்பது யதார்த்தம். கலையைத் தன் கைவசத்தில் வைத்திருப்பதால் மாணிக்கம் என்னும் கலைஞனுக்கு கருவம்.திமிர்.அலட்சியம் எல்லாம் இருப்பதில் வியப்பில்லை.

பாம்பு ஆய்வாளர்கள் நாம் பாம்பைப் பார்ப்பதை விட அது மூன்று மடஙகு அதிகமாக நம்மை ஒளிந்து கொண்டு பார்க்கிறது என்பார்கள். அதுபோல நாம் இறைவனைப் பார்ப்பதைவிட அவன் நம்மைப் பார்க்கும் நேரம் அதிகம்.அவன் முன்னால் நின்றுகொண்டு அருச்சனை செய்ய நம் பெயர், நட்சத்திரம், கோத்திரம் எல்லாம் சொல்வது எனக்குச் சிரிப்பைத்தான் வரவழைக்கும். எல்லாம் அவனுக்குத் தெரியாதா?

பகவதி அந்த வீட்டில் எப்பொழுதும் அனைவரையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறாள். நம்பிக்கையுடன் பார்க்கும் மாணிக்கத்திற்கும் இசக்கியம்மைக்கும் காட்சி அளிக்கிறார்.

எங்கள் வீடுகளில் வரலட்சுமி விரத நோன்பு எடுக்கும்போது சில வீடுகளில் அம்மன் படம் வைத்து எடுப்பர். இன்னும் சிலர் பித்தளை அல்லது வெங்கலச் சொம்பில் தனித்தனியாக இருக்கும் கண்கள் மூக்கு ஆகியவற்றை ஒட்டவைத்து அம்மன் உருச்செய்து செய்வார்கள்.வேறு சிலர் சுவரில் ஆண்டுக்காண்டு அம்மன் படம் வரைவார்கள். அப்படி வரையும் என் ஆசிரிய நண்பருடன் நான் சென்று பார்த்திருக்கிறேன் . அவர் சும்மாவே இருப்பார். திடீரெந்று மாணிக்கம்போல  ஓர் எண்ணம் வந்து அம்மனை வரைந்து விடுவார். அருளோ, திறமையோ நானறியேன்.

“வரைஞ்சு முடிஞ்சா இங்க இருப்பா. படியெறங்கும்போது நம்ம கூட வர்றது மூதேவியாக்கும்” என்னும் மாணிக்கத்தின் வார்த்தைகள் கலைஞர்களின் வறுமையைப் பிரதிபலிக்கும வைர வரிகள்.

பார்க்காத பகவதியை வரைந்த மாணிக்கம் பாத்தேயிராத நீலாம்பாளையும் தருவான் என்பது இசக்கியம்மையின் நம்பிக்கை. அவள் இவனா வரைவான் என்று முதலில் நம்பிக்கை இல்லாமல் இருந்தவள்.இப்பொழுது அவனை முழுமையாய் நம்புகிறாள் .தரமுடியும் என்பதும் மாணிக்கத்தின் நம்பிக்கை. கதை தக்க நேரத்தில் முடிகிறது.  நம்பிக்கைதானே வாழ்க்கை.

வளவ. துரையன்

***

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–50
அடுத்த கட்டுரைபிடி,மாயப்பொன் – கடிதங்கள்