கைமுக்கு -கடிதங்கள்

கைமுக்கு [சிறுகதை]

அன்புள்ள ஜெ..

கைமுக்கு சிறுகதையின் ஒரு வரி வெகு நேரம் என் மனதில்ஒலித்துக் கொண்டு இருந்தது

அது இந்த வரிதான் “ஒரு அழுக்கில்லாத சட்டை இருந்திருந்தால் அவரிடம் (சுந்தர மசாமி)பேசியிருப்பேன். பேசியிருந்தால் இன்னொரு திசைக்கு போயிருப்பேன்”

இது மிகவும் ஆழமான வரி என்பது உணரந்தவர்களுக்குத் தெரியும்.விரக்தி அடைந்த நிலையில் , அதேநேரத்தில் வாசிப்பின் சுவை அறிந்த ஒரு புத்திசாலி இளைஞனுக்கு , அதுவும் வறுமை சார்ந்த தாழ்வுணர்ச்சியில் இருப்பவனுக்கு, ஒரு பெரிய எழுத்தாளனிடம் பேச தயக்கமாகத்தான் இருக்கும்.

ஆனால் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு ,அப்படி,பேசி விட்டால் , தன்னை தேடி வரும் நதியை , கடல் சற்று முன் நகர்நது இழுத்துக் கொள்வதைப்போல , எழுத்தாளன் அவனை தன்னுள் இழுத்துக கொள்வதை அவன் அறிந்து இருப்பான். அவன் வாழ்க்கை திசை மாறியிருக்கும்

அதன் பிறகு வாழ்க்கை அளிக்கும் நெருப்பாற்றில் நுழைந்து , உண்மை தெய்வத்தை அடைகிறானா அல்லது மனச்சமாதனங்கள் செய்து கொண்டு போலி தெய்வத்தை அடைந்து திருப்தி அடைகிறானா என்பது வேறு விஷயம்

கைமுக்கு சோதனையை கைவிட ஒப்புக்கொண்ட மன்னனின் இரக்கம்கூட வாழ்க்கைக்கு இல்லை. கடுமையான சோதனைகளை நமக்கு அளிக்கத்தான் செய்கிறது. ஆனால் மிகவும் கடுமைகாட்டுவதில்லை. இலக்கியம் , கலைகள் என இளைப்பாறுதல்களையும் , உந்து சக்தியையும் தருகிறது என்பதை மின்னி மறையும் அந்த வரிகள் சொல்வது போல இருந்தது

http://www.pichaikaaran.com/2020/04/blog-post_33.html?m=1

என்றென்றும் அன்புடன்

பிச்சைக்காரன்

***

அன்புள்ள பிச்சைக்காரன்

இந்தவகையான வரிகள் இயல்பாக ஒரு கதைக்குள் வருபவை. ஏன் வருகின்றன என்று தெரியாது. நான் இத்தகைய தன்னிச்சையான வெளிப்பாடுகள் முக்கியமானவை என நம்புபவன்

இரண்டு அடிப்படைகள். ஒன்று, இந்தக்கதை ஏறத்தாழ நிகழ்ந்த ஒன்று. செய்திகளில் படித்திருக்கலாம். அந்தப்பையன் சுந்தர ராமசாமி நடைசெல்லும் அதே பள்ளியில் படித்து அதே இடத்தில் நடந்தவன்

இரண்டு உண்மையாகவே வாழ்க்கையின் முக்கியமான தருணத்தில் திசைமாறி குற்றவுலகுக்குள் சென்று சுந்தர ராமசாமியை சந்தித்ததனாலேயே விலகி பிறிதொருவர் ஆன இருவரை எனக்கு தனிப்பட்டமுறையில் தெரியும். அவர்களைக் காத்தது இலக்கியம் அளிக்கும் இன்பம். இலக்கியவாசகன் நான் என்னும் தற்பெருமிதம்

ஜெ

***

மதிப்பிற்குரிய ஜெயமோகன் ஐயா,

வணக்கம். நான், ஆனந்த், 43 வயது  (ஆனந்த ராஜ்குமார்) , நீண்ட  ஆழ்ந்த வாசிப்பில் இறங்கும் முயற்சியில், பரவலான வாசிப்பிலேயே நீள்கிறவன். இப்போது ஹைதராபாதில் வசித்து வருகிறேன். ஒரு மருந்து நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு துறையில் பணி புரிந்து வருகிறேன்.

உங்களுடைய இணைய தளத்தை 2010 முதல் பின் தொடர்ந்தும் வாசித்தும் வருகிறேன். சிறிய வயதில் என் வீட்டின்  வாரப்  பத்திரிக்கை வாசிக்கும் வழக்கம் படிக்கும் பழக்கத்திற்கு என்னை அறிமுகப் படுத்தியது. தொலைக்காட்சி இல்லாத நாட்களில் குமுதம், கல்கி , விகடன், ராணி காமிக்ஸ் , ராணி முத்து, மாலை மதி என ஜனரஞ்சகமான வாசிப்பில் ஆரம்பித்த என்னை,  என் பள்ளித் தமிழ் ஆசிரியர் திரு. ராமசாமி,  நூலகத்தை நோக்கித் திருப்பி விட்டார்.  சாண்டில்யன், கல்கி, சுஜாதா, பாலகுமாரன் என்று நீண்ட பள்ளி ஆண்டுகள் கல்லூரி நாட்களில் தமிழ்ப் பேராசிரியரால் சு. ரா., தி.ஜா.ரா., கி. ரா., இ.பா., என்று கொஞ்சம் பரந்து பட்டது. இடையிடையே சில நண்பர்களோடு கணையாழி போன்ற சிற்றிதழ்களும் அறிமுகம் ஆயின.

எந்தக் கதையையும் கதையின் சுவாரஸ்யதிற்காக மட்டும் படித்துக் கொண்டிருந்தேன். பல வேறு ஆசிரியர்களின் கதை அவர்களின் கதை சொல்லும் முறை மற்றும் மொழி நடைக்காக படித்த படி இருந்தேன். சலிப்பு ஏற்படும் பேச்சு இன்று வரை இல்லை.

தாங்கள் எழுதியதில் என் முதல் வாசிப்பு ஏழாம் உலகம். அதன் களப்பணி என்னை பிரமிக்க வைத்தது. உங்களுக்காக கொஞ்சம் கவலையும் பட வைத்தது. எப்படி இவர் இவ்வளவு ஆழ்ந்த ‘syndicate type criminal network business’ஐ ஹானி ஏதும் இல்லாமல் ஆய்வு செய்து முடித்தார் என.  அப்புத்தகம் ஊழில் நம்பிக்கை ஏற்படுத்தி சில நாட்கள் வெறுமையாக இருக்க வைத்தது. கர்ப்பமாய் இருந்த என் மனைவியிடம் அப்போது அந்த புத்தகத்தை கொடுக்க மனம் இன்றி என்னிடமே வைத்து இருந்தேன்.

உங்கள் ஒரு குறு நாவல்கள் தொகுப்பை என் நண்பன் பரிசு கொடுக்க உங்களின் வேறு சில கதைகள் அறிமுகம் ஆயின.  கிளிக்காலம் என்ற குறு நாவல் – ஒரு பதின்மப் பையனின் கன்னிமை தற்செயலாகப் போதல் – அந்த தொகுப்பில் இப்போது என்னால் நினைவு கூற முடிகிறது.

ஒருமுறை வாசித்த நகைச்சுவைக் கட்டுரை சிவாஜி, எம்.ஜி.ஆர் -சர்ச்சைக்குள்ளாக நான் உங்களுக்கு பல நாடுகளுக்குப் பின் எழுதி இருந்தேன், அந்தக் கட்டுரை மீண்டும் வாசிக்கக் கிடைக்குமா என்று.

2010 இல் இருந்து உங்கள் வலைப்பக்கம் எனக்குப் பல வாசிப்பு விவரங்களைக் கற்றுக் கொடுத்தபடி இருக்கிறது.

சொந்த “வள வள”வைக்  கொஞ்சம் நிறுத்திக் கொண்டு நான் சொல்ல வந்ததை எழுத ஆரம்பிக்கிறேன்.

தினம் ஒரு சிறுகதை என்று இந்தத் தனிமை காலத்தை நீங்கள் கொண்டாடுவது எனக்குக் கொண்டாட்டம்.

ஔசேப்பச்சன் சீரீஸ் – எனக்கு மிகவும் பிடித்தமானது. நீங்கள் சொல்வது போல – கௌ பாய் கதைகள்  போல் ஒரு விறுவிறுவென நகரும் துப்பறியும் சீரீஸ் இது. பல தளங்கள், பல தகவல்கள் எனப் போகிறதால் ஒவ்வொன்றின் விஸ்தாரமே  கதைக்கு பலமே அளிக்கிறது.  மலபார் கரை மாப்பிள்ளைகளின் வரலாறு எனக்கு மிகவும் புதியதாகவும் பல ஆச்சர்யங்களைக் கொண்டதாகவும் இருக்கிறது. (மாப்பிள்ளைகள் பற்றி மேலும் அறிய மேற்கொண்டு வேறு நூல்கள் ஏதும் நீங்கள் பரிந்துரை செய்வீர்களா?) அவர்களின் ஒழுங்கு முறையும் இத்தாலி மாபியா குழுவின் ஒழுங்கு போல இருக்கிறது.

கைமுக்கு கதையில் மட்டும் மகேஷ் ஔசேப்பச்சனிடம் தன முழுக்கதையும் சொல்லும் பத்திகளில், இந்தக் கால மதிப்பீடுகளைப் பற்றிச் சொல்லுவதும் பழைய கால (அவன் அப்பா காலகட்ட ) மதிப்பீடுகள் விழுவதைப் பற்றிக் கூறுவதும் சற்று அதிகமாகப்  “பேசி” விளக்குவதாகப் படுகிறது. மகேஷின் விவரணை கொஞ்சம் உபதேச பாணியில் பேசுவது கதை ‘நச்’ என முகத்தில் தாக்குவதை மட்டுப் படுத்தியதோ என எண்ணுகிறேன். சில சமயம் ”ஆசிரியர் பேசுகிறார்” எனவும் தோன்றாமல் இல்லை. ஏன் இந்தக் கூடுதல் விவரணை, உணர்த்தும் மற்றும் காட்டும் பாணியிலிருந்து சற்றே நகர்ந்து ‘பேசும் பாணி’ எதனால் நிகழ்ந்தது எனச்  சொல்வீர்களா ?

அன்புடன்,
ஆனந்த்.

***

அன்புள்ள ஆனந்த்

இந்தக்கதைகள் ஒவ்வொன்றுக்கும் ஒரு வடிவச்சிறப்பு உள்ளது. பலகதைகள் கூரிய ஒருங்கிணைவுள்ள வடிவம் கொண்டவை. உதாரணம் இறைவன், பொலிவதும் கலைவதும், நகைமுகன். சிலகதைகள் தொடர்போன்ற வடிவம் கொண்டவை, உதாரணம் துளி, சூழ்திரு. சிலகதைகள் ஒன்றுக்குமேற்பட்ட கதைகளின் அடுக்குகள். சம்பந்தமில்லாத தளங்களில் ஒரே சமயம் நடப்பவை. இந்த கதையும் அப்படித்தான். காட்சித்தொழில்நுட்பத்தில் ‘பிளேட்டுகள்’ ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கப்பட்டு ஒற்றை உருவமாக ஆவதே இந்தகதைகளின் வடிவம்

கைமுக்கு கதையின் ஒருபகுதி வரலாற்றில் கிடக்கிறது. ஒரு பகுதி சமகாலத்தில் வருகிறது. அவன் பிடிபடும்போது சமகாலம். அவன் பேசுவது சமகால அறம் பற்றி. கல்லூரிக்காலத்தில் எந்த அடிப்படை அறமும் இல்லாமல் நுகர்வுவெறியுடன் நடந்துகொள்ளும் கூட்டம் பின்னாளில் வேலை கிடைத்து அமர்ந்தபின் ஒரு கூட்டுப்பாவனையாக சமூக ஊடகங்களில் அறவெளிப்பாடு கொள்வதைப் பற்றி. நீங்கள் அந்த வரிகளைச் சரியாக படிக்கவில்லை. தன் கல்லூரிக்காலத்தில் சமூகவலைத்தளம் இருந்ததாக அவன் சொல்லவில்லை. அன்றைய மாணவர்கள் இன்று என்னவாக இருக்கிறார்கள் என்றே சொல்கிறான்

அவன் அந்த வரிகளில் வெளிப்படுத்துவது அவனுடைய ஆங்காரம். அவனுடைய குணச்சித்திரத்தின் இயல்பு அதுதான். போலீஸ் கோணத்தில் பார்த்தால் செய்த குற்றத்தை விரிவாக சமூகவியல்கோணத்தில் உளவியல்கோணத்தில் நியாயப்படுத்தும் முயற்சி. அவன் என்றல்ல எல்லா கிரிமினல்களும் தொடக்கத்தில் அதைச் செய்வார்கள். “இங்க யார் சார் யோக்கியன்? எங்க இருக்கு நீதி?”என்று சொல்லாத எவருமே அவர்களில் இல்லை.

அந்தக்கதையே ஒருபக்கம் கிரிமினல்களின் உளவியலை விரிவாகச் சொல்வது. இந்தப்பக்கம் சாமானியர்களின் உளவியலை. அவை சந்திக்கும் இடத்தை குறிப்பாலுணர்த்துவது.

ஜெ

***

முந்தைய கட்டுரைமுதல் ஆறு,நகைமுகன் -கடிதங்கள்
அடுத்த கட்டுரைநற்றுணை [சிறுகதை]