ஆழி,முதல் ஆறு- கடிதங்கள்

ஆழி [சிறுகதை]

அன்புள்ள ஜெ

ஆழி சிறுகதையை வாசிக்கையில் அந்தக் கடல்கொந்தளிப்புதான் ஞாபகத்திற்கு வந்தபடியே இருக்கிறது. வாசித்தபோது அந்தக்கதை ஒரு சின்ன அதிர்வையே உருவாக்கியது. ஆனால் நாள்செல்லச்செல்ல வளர்ந்துகொண்டே இருக்கிறது.

பெரும்பாலானவர்களின் வாழ்க்கையில் ஒரு அலைக்கொந்தளிப்பின் காலம் வரும். அந்த காலகட்டத்தின் உருவகமாகவே அந்தக் கதை இருக்கிறது. வாழ்க்கையில் ஒரு அலைக்கொந்தளிப்புக் காலகட்டத்தைச் சந்தித்தவர்களுக்கு அந்த இடம் ஹான்டிங் ஆக இருக்கும். எனக்கு அப்படி ஒரு காலகட்டம் வந்திருக்கிறது.

எல்லா அலைகளும் அறைந்து அறைந்து விலக்கும். நாம் நெருங்கிவிடுவோம். மிக அருகிலே போவோம். அடுத்த அலை விலக்கிவிடும். தொடக்கூட செய்வோம். அலைகள் பிடித்துப்பிடித்து விலக்கும். அந்த தத்தளிப்பும் தவிப்பும் ஒரு பெரிய நரகம்

ஜெ, என்னை அலை சேரவிடவில்லை. இன்றைக்கு வேறுவாழ்க்கை அமைந்துவிட்டது. ஆனாலும் அந்தக்கொந்தளிப்பை மறக்கமுடியவில்லை. ஆழி பயமுறுத்தக்கூடிய ஒன்று

எம்

.***

அன்புள்ள ஜெ

ஆழி சிறுகதையை வாசித்தேன்.முதல் வாசிப்பில் கடல் வாழ்க்கைக்கு உவமையாக வருகிறது என கண்டுகொண்டேன்.சில நாட்கள் எடுத்து கொண்டது கதை முழுவிரிவு கொள்ள. முதலே எழுதலாமென நினைத்து தயக்கம் கொண்டு நிறுத்தி விட்டேன். இன்று தயக்கத்தை தள்ளிவிட்டு எழுதுகிறேன்.

கதையை வாசித்ததில் எனக்கு தோன்றியவை இரண்டு. ஒன்று, அந்த கடலின் நிறம் ஆலிவ் கீரின்,பசுமை நிறம்.அவள் மீண்டும் மீண்டும் நைஸ் ப்ளேஸ் என்கிறாள்.பசுமை எப்போதும் நம்மை கொள்ளை கொள்கிறது.அது வளத்திற்கான, வாழ்வுக்கான, இனிமைக்கான உறைவிடமாக விளங்குகிறது.மறுபுறம் வலிமைக்கான, உறுதிக்கான, கடுமைக்கான சாட்சியாக விளங்குகிறது.காடும் கடலும் எப்போதும் நம்மை வசீகரிக்க செய்வது.அவற்றின் தோற்றத்தினுடாக பிரமிக்க செய்கின்றன.கடுமையினுடாக நமக்கு நம்மையே உணர்த்துகின்றன.வாழ்வும் அதுபோன்றே உள்ளது.தொலைவிலிருந்து பார்க்கும் தோறும் பச்சை வண்ண கடல், அவர்கள் அறியாத கடல் வா வா என்று கவர்ந்திழுக்கிறது. நாம் அறியாத ஒவ்வொரு வாழ்வும் கடலை போன்றே கவர்கின்றன.அவர்கள் அமர்ந்த புனித சேவியரின் குகை சிறியதாக உள்ளது.நாம் அறிந்த வாழ்வு குகையை போன்று மிக சிறியதாக நமக்கு நன்கு அறி‌ந்தாகவே நாம் அறிந்து வைத்திருக்கிறோம்.அந்த காதலர்கள் கடலில் இறங்கியதை போல, நாமும் அறியாததை அறியும் பொருட்டு அறிந்ததை விடுத்து அறியாததில் உள்நுழையவும் போதல்லவா அறிந்ததை முழுதறிவதும் அறியாததை அறிய தொடங்குவதும் நிகழ்கிறது.

இரண்டு,கதை வடிவம்.காதலர் இருவர் பிரிய நினைப்பதும் கடலில் சென்று மீண்ட பின்னர் சேர்வதாக முடிகிறது கதை. காதல் எப்போதும் அமைப்புக்கு அப்பாலேயே பூக்கிறது.அத்தனை அமைப்பையும் தோற்றுவிப்பதும் அதுவே.எனினும் அது எப்போதும் அப்பாலேயே உள்ளது. இந்த கதையின், அமைப்புக்குள் அமையாத அமைவே அமைப்பிற்குள் உள்ள அறியமுடியாத இணைப்பை தொடுகிறது.ஒரு சாதாரண கண்ணோட்டத்தில் நாம் உருவாக்கி வைத்துள்ள இவ்வமைப்புகளான குழந்தைகள், குடும்ப கௌரவம், சமுதாய அந்தஸ்து போன்ற இவையெல்லாம் தான் திருமண உறவை இறுக்கி பிடித்து வைத்துள்ளது எனலாம்.ஆனால் சிலருக்கு குழந்தைகள் இறக்கலாம், சிலருக்கு அந்தஸ்து குறையலாம், கௌரவம் போகலாம். இப்படி போன பின்பும் அவர்கள் சேர்ந்திருப்பதை காணும் போது எது அவர்களை சேர்த்து வைக்கிறது ? அவன் சொல்வது போல தெரியாததை விதி என்கிறார்கள் எனலாம். அவளை போல கடலே வாழ்வே, அதன் பெருங்கரங்களே எனலாம். திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன என்ற வழக்கு சொல்லாடலை போல நாம் அறியாத ஒன்றினால் அல்லவா இணைக்கப்படுகிறோம்.அதற்கு தர்க்கங்கள் பொருந்துவதில்லை.வெறுமே கவித்துவம் கொண்டு விடுகிறது.

நன்றி

சக்திவேல்

***

முதல் ஆறு [சிறுகதை]

அன்புள்ள ஜெ

இந்த வரிசையில் மிகமிக மென்மையான சில காதல்கதைகள் வந்துகொண்டிருக்கின்றன. அதில் ஒன்று முதல் ஆறு. மிகமென்மையான கதை. ஒரு மாறாத பயணம். கொஞ்சம் மாறிச்சென்றதும் ஒரு சொர்க்கம். அங்கே அவர்கள் கண்டுகொள்கிறார்கள். அவர்களின் காதல் நடப்பது அன்றாடத்தில் அல்ல. அந்த சொர்க்கத்தில். அந்த கனவில்.

நனவில் ஒருவரை ஒருவர் அடையாளம் கண்டுகொள்ளாத இருவரும் கனவிலே அடையாளம் கண்டுகொள்கிறார்கள். அவன் பஸ்ஸில் ஏறுவதும் அவனுடைய உடல்மொழி மாறுவதும் காத்திருப்பதும் எல்லாம் அழகாக உள்ளன. ஆனால் அதெல்லாமே இந்த உலகில். அவன் அந்தக் கனவுலகில் ஊடுருவியபிறகே உண்மையில் அவளைச் சந்திக்கிறான்

ஜான் ஹ்யூபர்ட்.

***

வணக்கம் ஜெ

முதலாறு சிறுகதை வாசித்தேன். எல்லையற்ற இயற்கை அளிக்கும் புதிய உணர்வு படபடப்பும் உற்சாகமும் சேர்ந்தது. அந்த உணர்வினால் உந்தப்பட்டு எடுக்கக்கூடிய முடிவுகளும் மிகை உணர்ச்சிகள் தொடக்கூடுவோம். அப்படியான ஒரு தருணம் அமைந்த கதை. இயற்கையின் தன்மையை நாமும் எடுத்து அள்ளி நிறைந்து கொள்வது போன்ற தருணம்.

அரவின்

***

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–51
அடுத்த கட்டுரைபிடி, மாயப்பொன் – கடிதங்கள்