இறைவன், மலைகளின் உரையாடல் – கடிதங்கள்

மலைகளின் உரையாடல்[சிறுகதை]

அன்புள்ள ஜெ

மலைகளின் உரையாடல் கதையை வாசித்தபின் நினைவுகள் வந்துகொண்டே இருந்தன. நான் 35 ஆண்டுகளுக்கு முன் தபால்துறையில் வேலைசெய்தேன். அன்றைக்கு தந்தி இருந்தது. கட்கடா மொழி. அதை படிக்கவே இரண்டு ஆண்டு ஆகிவிடும். எனக்கு என்னவோ அந்த சத்தம் பிடிக்காமல் ஆகிவிட்டது. என் தலையிலேயே அது கேட்பதுபோல ஆகிவிடும். உடம்பே தூக்கித்தூக்கி போடும். வாந்தியெல்லாம் வரும். ஆனால் ஒருநாள் அது ஒரு கிளியின் ஓசை போல தோன்றியது. தந்தியின் சத்தம் என நினைத்தது கிளியின் சத்தம். அதன்பிறகு தந்திசத்தமே கிளிச்சத்தமாக ஆகிவிட்டது. பிடிக்க ஆரம்பித்தது

இந்த பூமியெல்லாம் நிறைந்திருக்கும் ஒரு விஷயத்தை நாம் நமக்குள்ளே பார்ப்பதுதான் தியானம் என்று வேதாத்ரி மகரிஷியின் வகுப்பிலே படிக்கும்போது இதை நினைத்துக்கொண்டேன். மலைகளின் உரையாடல் சயன்ஸ் ஃபிக்‌ஷன் மாதிரி இருந்தாலும் ஒரு உருவகக்கதைதான். மலைகள் பேசும் மொழி, இடியோசையின் மொழி, குருவிக்கூட்டில் நுண்வடிவிலே ஓடிக்கொண்டிருக்கிறது. பார்ப்பவனின் மூளைக்குள்ளாலும் அதே மொழிதான் ஓடிக்கொண்டிருக்கிறது.

எஸ்.நாராயணன்

***

வணக்கம் ஜெ

மலைகளின் உரையாடல் கதையை வாசித்தேன்.

மனிதன் உருவாக்கும் பொருட்களுக்கும் அறிவியல் கொள்கைகளுக்கும் இயற்கை மூலமாக இருக்கிறது. ஆனால், அவ்வாறு உருவாகுதற்கு முன்னால் அது எங்கேயோ மண்ணுக்குள் உறங்கி கொண்டிருக்கிறது. அதை மனிதன் கண்டடையும் பரவசத் தருணத்தைத்தான் இந்தக்கதையில் காண முடிகிறது. தருக்கத்தால் முழுமையாக விளக்கிவிட முடியாத அந்தத் தருணத்தைத்தான் இந்தக் கதையும் வெளிப்படுத்த முனைந்திருக்கிறது. இதைக் கண்டறிவதற்கு முன்னாலே அது எங்கேயோ இருந்திருக்கிறது. அதைத் தொட்டெழுப்ப இயற்கையுடனான உரையாடலை ஏற்படுத்த முனையும் முயற்சிகள்தான் ஆன்மீகம், இலக்கியம் போன்ற செயற்பாடுகள்.

அரவின் குமார்

***

இறைவன் [சிறுகதை]

அன்புள்ள ஜெ

இறைவன் கதை “நான் படைப்பதனால் என் பெயர் இறைவன்” என்ற கண்ணதாசனின் வரியை ஞாபகப்படுத்தியது.

கலைஞனின் சாதாரணத்தன்மை, அவனுடைய அன்பு, மூர்க்கம், அவன் கலை அவன்மேல் வந்து சேரும்போது வரும் சன்னதம், அது விலகும்போது வந்துசேரும் மூதேவி என்று ஒரு முழுமையான கதை. முதல் வரியிலிருந்தே கதை இசக்கியம்மையின் கதை.

கதையின் மிக நுட்பமான பகுதி ஒன்று உண்டு. இசக்கியம்மைக்கு அந்தப் பகவதியை பயம். அவள் அந்த பகவதியை முதலில் பார்த்து பயந்து ஓடியபிறகு பார்க்கவேயில்லை. ஆனால் ஆசாரி வரைந்தபின்னர் போய் பார்க்கிறாள். நெடுநாள் நெருங்கி அறிந்ததுபோல உரையாடுகிறாள்

ஆசாரி அவளுக்கு நெருக்கமான பயமுறுத்தாத ஒரு பகவதியை வரைந்துகொடுத்துவிட்டான். ஆகவேதான் அவள் என் மகளை வரைந்துகொடு என்று கேட்கிறாள்

கலைஞனின் மனசு ஒரு சாதாரண மனித உயிருக்காக மீண்டும் சன்னதம் கொள்கிறது

மகாதேவன்

***

அன்புள்ள ஜெ

நலமா? இறைவன் சிறுகதை இன்னொரு உச்சம்.

கலை, கலைஞனின் அகம், வாசகன் ஆகியவற்றுக்கிடையே உள்ள உறவையும் நீங்கள் மீண்டும் மீண்டும் எழுதிப்பார்க்கிறீர்கள். இந்தச் சிறு கதையில் மட்டுமே எவ்வளவு பரிமாணங்கள் !

படைப்பை வியந்து பூஜிப்பது எதோ ஒருவிதத்தில் விலகல் தான். அதன் உயிர்ப்புக்கு ஒப்புக்குடுப்பதையே கலைஞன் கேட்கிறானா?

இசக்கியம்மை மாணிக்கத்தை படைப்புக்கிறைவன் என்கிறாள். அவனது சொற்களும் அணைப்பும் கிளாசிக். சட்டென்று ஓலைச்சிலுவையுடன் இந்தக்கதை இணைந்துகொண்டது என் மனதில்.

மூதேவி ஏறிய சொற்கள் எனும்போது தக்கென்றிருந்தது. அதுவரை அவர்கள் எல்லாருமே போ போ என்றுதான் அவளை சொல்லிக்கொண்டிருந்தார்கள். மாணிக்கம் கடைசியில் மூதேவியின் தாய்மையை கொண்டுவிடுகிறான்

அன்புடன்

மது

***

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–48
அடுத்த கட்டுரைமுதல் ஆறு,நகைமுகன் -கடிதங்கள்