நஞ்சு [சிறுகதை]

நேரில் சந்தித்தால் அக்கணமே கையில் கிடைத்த பொருளால் அடித்து அங்கேயே கொன்றுவிடவேண்டும் என்று நினைத்திருக்கும் ஒரு பெண். அவளை ஓடும் பஸ்ஸில் இருந்து எதிரே செல்லும் பஸ்ஸில் பார்த்தேன். ஊட்டி சென்றுகொண்டிருந்தேன். இறங்கிய பஸ் ஒன்று வளைந்து ஒதுங்கி என் பஸ்ஸுக்கு இடம் கொடுத்தது. அந்த பஸ் என்னை கடந்துசென்றபோது ஒரு கணம் மிக அருகே அவள் வந்து அப்பால் சென்றாள்.

என் மனம் படபடத்தது. செத்தவன்போல கைதளர்ந்து அப்படியே அமர்ந்துவிட்டேன். பஸ் மேலேறிச் சென்றது. என்ன செய்வது என்று தெரியாமல் ஏதேதோ எண்ணங்களுடன் இருந்தேன். பின்னர் எண்ணியபோது அந்த எண்ணங்களெல்லாமே விசித்திரமாக இருந்தன. நான் எழுந்து சன்னல்வழியாக வெளியேறி அந்த பஸ்ஸை துரத்திக்கொண்டு பறந்து, ஆம் பறந்து, அதை அடைந்து உள்ளே நுழைந்து அவளருகே சென்றேன். மூன்றுமுறை வேறுவேறு கோணங்களில் அது நிகழ்ந்த பிறகுதான் நான் எழுந்து நின்றேன்.

“என்ன சார்?” என்று கண்டக்டர் கேட்டார்.

அப்போதுதான் அங்கே இறங்கினாலும் நான் செய்வதற்கொன்றும் இல்லை என்று தெரிந்தது. அந்த இடம் நடுக்காடு. அங்கே இறங்கினால் எப்படி கீழிறங்கிச் செல்லும் பஸ்ஸை தொடர்ந்து செல்லமுடியும்?

“ஒண்ணுமில்லை” என்றபடி அமர்ந்தேன். கைவிரல்களை நெரித்தபடி உதடுகளை கடித்தபடி இருக்கை முனையில் அமர்ந்திருந்தேன். ஊட்டிமலைப் பாதையில் பஸ் எத்தனை மெதுவாகச் செல்லும் என்று அப்போதுதான் அறிந்தேன். மிகமிக மெல்ல அது சுழன்றுகொண்டிருந்தது. சில இடங்களில் முன்னால் சென்றபின் மீண்டும் பின்னால் வந்தது. உறுமியும் இருமியும் முனகியும் சீறியும் முன்சென்றது. அதிலிருந்து பொசுங்கிய டீசலின் கெட்டவாடை எழுந்தது.

அடுத்த ஸ்டாப்பிங் எது? அங்கே ஒரு டாக்ஸி கிடைக்குமா? அங்கே டாக்ஸி உண்டா என்று பார்த்தபின் இறங்கவேண்டும். பார்க்காமல் இறங்குவதில் அர்த்தமில்லை. ஆனால் ஆட்டோ இருந்தால்கூட இறங்கிவிடலாம். டாக்ஸி கிடைக்கும் இடம் வரை ஆட்டோவில் செல்லலாம்.

நான் எல்லா வியூகங்களையும் வகுத்துவிட்டேன். பஸ் சீறியபடி நின்றபோது எழுந்தேன். மேலே கம்பிப் பரணில் இருந்து என் பையை எடுத்துக்கொண்டு பாய்ந்து இறங்கினேன். அங்கே வேறு இருவர் இறங்கினார்கள். என் பஸ் நீலப்புகையை உமிழ்ந்தபடி சென்றது.

அங்கே டாக்ஸி ஏதுமில்லை. ஆனால் நாலைந்து ஆட்டோக்கள் நின்றன. எல்லாமே பருத்த டீசல் ஆட்டோக்கள். எந்த இடம் என்று தெரியவில்லை. நான் ஓர் ஆட்டோ நோக்கி சென்று அதில் ஏறிக்கொண்டேன்.

“எங்க சார்?”

“பக்கத்திலே எங்க டாக்ஸி கிடைக்கும்? நான் உடனே கீழ மேட்டுப்பாளையம் ரூட்ல போகணும்.”

“டாக்ஸியா? சார் இங்க நெறைய பஸ்வரும். இங்கேயே நின்னா…”

“இல்ல என்னோட வேண்டப்பட்ட ஒருத்தர் முன்னாலே கீழ போற பஸ்ஸிலே இருக்கார். அந்த பஸ்ஸை மறிச்சு அவரை பிடிக்கணும்…”

“செல்லிலே கூப்பிடுறது?”

“செல் நம்பர் தெரியாது… அவரை பாத்தே ரொம்ப நாள் ஆச்சு.”

“வட்டிக்கு குடுத்திருந்தியோ?” என்றார்.

“இல்லை… கைமாத்தாத்தான்” என்றேன்.

அவர் ஆட்டோவை எடுத்துக்கொண்டு “கைமாத்துன்னு ஒருத்தன் கேட்டாலே அதுக்கு ஒரே அர்த்தம்தான், அவன் சுருட்டி திங்கப்போறான். இப்ப நீ பின்னாடி போயி புடிச்சா மட்டும் தந்திரப்போறானா?” என்றார்.

“இல்ல .கேக்கலாம்ல?”

“கேட்டு? அவன்லாம் வெக்கப்படமாட்டான் சார். சரி நமக்கென்ன? நான் டாக்ஸி பக்கத்திலே விட்டுடறேன்.”

ஆட்டோ கீழேதான் சென்றது. மேலிருந்து வந்து கடந்துசென்ற பஸ்ஸின் டீசல் முகத்தில் வெம்மையாக அறைந்தது. முகத்தில் கரி படிந்தது போலவே உணரமுடிந்தது.

நான் அமைதியிழந்து இருக்கை முனையிலேயே அமர்ந்திருந்தேன். வெளியே எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

“சீக்கிரம் போக முடியாதா?”

“ஆட்டோ ஸ்பீடே இவ்ளவுதான் சார்.”

நாலைந்து வளைவுகள். கீழே சென்றுகொண்டிருந்த பஸ்கள் எல்லாவற்றையும் பார்த்தேன். அந்த பஸ் நின்றுகொண்டிருக்கிறதா? அது கேரள பஸ். இந்த வழியில் கேரள பஸ் அடிக்கடிச் செல்வதில்லை. நல்லவேளை, அவள் தமிழ்நாட்டு பஸ்ஸில் போகாமலிருந்தாள். எல்லா தமிழ்நாட்டு பஸ்களும் ஒன்றுபோலவே இருந்தன.

“அந்தாள் சொந்தக்காரனா சார்?” என்றார் ஆட்டோக்காரர்.

“ஆமா.”

“பொண்ணு குடுத்த வகையிலேன்னு நினைக்கிறேன்… அவனுக கேட்டாத்தான் நம்மால இல்லேன் சொல்லமுடியாது. நமக்கே நாலாயிரம் ரூபா அப்டி நின்னுட்டிருக்கு.”

“அந்த வகையிலேதான்…”என்றேன்.

அவளை எனக்கு முன்பு தெரியவே தெரியாது. ஊட்டியிலிருந்து மசினகுடி போகும் வழியில் கல்லட்டி என்னும் அருவி இருக்கிறது. அதையொட்டி காட்டுப்பாதை ஒன்று செல்லும். ஆறடி மண்சாலை. ஆனால் ஒற்றையடிப்பாதை என்றுதான் சொல்லவேண்டும். ஆனால் அது கல்லட்டி எஸ்டேட்டின் மானேஜரின் அலுவலகம் வரை செல்லும். அதில்தான் அவளைப் பார்த்தேன்.

மானேஜரிடம் செக்கை வாங்கிக்கொண்டு திரும்பிக் கொண்டிருந்தேன். மாலை சிவந்து அந்தி ஆகிக்கொண்டிருந்தது. மானேஜர் ரவுண்ட் போய்விட்டிருந்ததனால் இரண்டு மணிநேரம் காத்திருக்க வேண்டியிருந்தது. செக்கை வாங்காமல் போனால் மறுபடியும் நான் ஈரோட்டில் இருந்து இதற்காகவே வரவேண்டியிருக்கும். எங்கள் உரக்கம்பெனி எஸ்டேட்டுகளுக்கு சரக்குகளை நேரில் கொண்டுசென்று சப்ளை செய்து ஆறுமாதத்திற்குள் பணத்தை பெற்றுக்கொள்வது. ஆர்டர் பிடிப்பதும் பணம் சேகரிப்பதும்தான் நான்.

ஊட்டி ஜோனல் அலுவலகத்திலிருந்து எடுத்துக்கொண்ட பைக்கில் வந்திருந்தேன். செக்குடன் கிளம்பியபோதே எஸ்டேட் மானேஜர் கருப்பையா “பைக்கிலேயா போறீங்க?” என்றார்.

“ஆமா, மசினகுடியிலே இருந்து வரேன்” என்றேன்.

“இருட்டிட்டிருக்கு… வழியிலே யானை நிக்கும். பைக்ல போறது நல்லதுக்கில்லை” என்றார் கருப்பையா

“பாத்துபோறேன்” என்றேன்.

“திம்மனை அனுப்பலாம்னா அவனும் இல்லை.”

“பரவாயில்லை. திம்மன் வந்தா அவன் எப்டி திரும்ப வருவான்?”

நான் திரும்பும்போது இரண்டு பக்கமும் பார்த்துக்கொண்டே ஓட்டினேன். யானையின் இயல்பு சட்டென்று சாலையின்மேல் ஏறி நிற்பது. நாம் நிலையழிந்து போய் முட்டிக்கொள்வோம். அது இருட்டிவரும் காட்டில் புதர்களுக்குள் நின்றிருந்தால் கண்ணுக்கும் தெரியாது.

காட்டுக்குள் நினைத்ததைவிட இருட்டு. கல்லட்டி ஆற்றை மரப்பாலம் வழியாகக் கடந்தால் மொத்தம் பதினேழு வளைவுகள். மேலே மையச்சாலையில் எப்போதும் போக்குவரத்து இருக்கும்.

கோடையாதலால் ஆற்றில் நீர் குறைவாக இருந்தது. பயணிகள் போட்ட பிளாஸ்டிக் குப்பைகள் பாறைகளிலும் புதர்களிலும் சிக்கியிருந்தன. யானைகள் தண்ணீர் குடிக்க வரும் நேரம்.

முதல்வளைவை நோக்கி பைக்கை திருப்பியதும் அவளைக் கண்டேன். அந்த ஒற்றையடிப்பாதையில் தனியாக நடந்துகொண்டிருந்தாள். அந்த பகுதியைச் சேர்ந்தவள் அல்ல என்று தொலைவிலேயே தெரிந்தது. இளமையான நகரத்துப்பெண். வெண்ணிறச் சுடிதார் அணிந்திருந்தாள். சுடிதாரின் நிறம், துணியின் தரம், அதை அணிந்திருக்கும் விதம் எல்லாமே அவளுடைய வர்க்கம் என்ன என்பதை காட்டுவது. பைக் ஓசை கேட்டு திடுக்கிட்டு திரும்பிப் பார்த்தாள்.

நான் பைக்கை அவளருகே கொண்டு சென்று விரைவு குறைத்தேன். “யாரு? எங்க போறீங்க?”

அவளால் பேசமுடியவில்லை. மூச்சுவாங்கியது. மனமும் மிகவும் தளர்ந்திருந்தது. “வழி… வழி தவறிட்டுது….” என்றாள். மிகச்சன்னமான குரல்.

“தனியாவா வந்தீங்க?”

“ஆமா.”

“இங்கயா? இங்க எங்க?”

“இங்கதான்… ஒரு எடத்திலே.”

“ஏறிக்கிறீங்களா?”

“ம்.”

நான் என் பைக்கில் இருந்து தண்ணீர் புட்டியை எடுத்து அவளிடம் நீட்டினேன். அவள் அதை வாங்கிக் குடித்தாள். முக்கால்புட்டி நீரை குடித்துவிட்டாள். அதன்பின் சற்று ஆறுதலடைந்தாள்.

“ஏறிக்குங்க.”

அவள் ஏறிக்கொண்டாள். நான் பைக்கை எடுத்தேன். சாலையில் சுழன்று சுழன்று மேலே சென்றேன். இருட்டு இருபுறமும் இருந்து வந்து சாலையை மூடிவிட்டது.

ஹெட்லைட்டை போட்டுவிட்டு வெளிச்சத்தில் மிகக்கூர்ந்து பார்த்து ஓட்டவேண்டியிருந்தது. ஆகவே அவள் விசும்பிக் கொண்டிருப்பதை நான் முதலில் கவனிக்கவில்லை. கவனித்தபோது வண்டியை நிறுத்தினேன்.

மேலே வந்துவிட்டிருந்தோம், மேலும் ஒருவளைவில் மையச்சாலையை அடையமுடியும். அங்கே ஹெட்லைட்டுகளின் வரிசை சிவந்த ஆறுபோல ஓடிக்கொண்டிருந்தது.

“என்னாச்சு?”

“ஒண்ணுமில்லை.”

“சொல்லுங்க.”

“ம்ம்கூம்”.

“நான் எதாவது ஹெல்ப் பண்ணணுமா?”

“எனக்கு எங்க போறதுன்னு தெரியல்லை…என் கையிலே பணம் ஏதும் இல்லை.”

“அதுக்கென்ன? நீங்க எந்த ஊரு?”

“மதுரை.”

“மதுரை பஸ்ஸிலே ஏத்தி விட்டுடறேன், போதுமா.”

“சரி.”

“போலாமா?” என்று பைக்கை எடுத்தேன்.

“ஒரு நிமிஷம்.”

“ஓகே.”

அவள் இறங்கி தயங்கி நின்றாள்.

“என்ன?”

“டாய்லெட் போகணும்… ஆனா இங்க…” என தயங்கினாள்.

“அந்தப் பக்கமா போங்க… அந்த மரத்துக்குப் பின்னாலே. நான் இங்கே நிக்கிறேன்…”

“இல்ல வேண்டாம்.”

“இருங்க. நான் அந்த எடம் வரை போய் பார்த்துட்டு வரேன், அப்றம் நீங்க போங்க”

“சரி” என்று தலையசைத்தாள்.

நான் அங்கே சென்று சுற்றிலும் பார்த்துவிட்டு “நீங்க போங்க.. ஒண்ணுமில்லை” என்றேன்.

அவள் தலையசைத்துவிட்டு சென்றாள். அவள் அங்கே மறைந்தபின் நான் திரும்பிக் கொண்டேன்

அவள் திரும்பிவரும் ஓசை கேட்டது. அருகே வந்து “ம்ம்” என்றாள்

“போலாமா?” என்றேன்.

“தண்ணி.”

நான் மீண்டும் தண்ணீரை கொடுத்தேன். அவள் குடித்தபோது கழுத்திலும் மார்பிலும் சிந்திக்கொண்டாள்.

புட்டியை திரும்ப நீட்டினாள். என்னைப் பார்த்து புன்னகைத்தாள். வாயில் ஒன்று சற்று தெற்றுப்பல். அது ஓர் அழகைக் கொடுத்தது. அந்தச் செயல்கள் வழியாக ஒருவரை ஒருவர் சற்றே அணுகி விட்டிருந்தோம்.

“காலையிலே இருந்து தண்ணியே குடிக்கலை. டாய்லெட் போகவும் பயம்” என்றாள்.

“காலையிலேயே இங்கதான் இருக்கீங்களா?”

“ஆமா.”

“யார்கூட வந்தீங்க?” என்றேன்.

“என் ஹஸ்பெண்ட் கூட.”

“ஓ.”

“காரிலே வந்தோம். இங்க ஒரு ரிசார்ட்டுலே புக் பண்ணியிருந்தோம்.”

“சண்டையா?”

“ம்.”

நான் மேலே கேட்கவில்லை.

“ஒருமாதிரி கேவலமான டவுட்டு. அவர் ஃப்ரெண்டு ஒருத்தரைச் சொல்லி…” என்றாள் “நான் யாரையோ கூடவே வரச்சொல்லியிருக்கேன்னு நினைப்பு”

“ஓ.”

“நான் கொஞ்சம் கடுமையா பேசினேன். என்னை அடிச்சார். நான் காரை நிப்பாட்டுங்கன்னு கத்தினேன். நிப்பாட்டினார். நான் இறங்கிட்டேன். பின்னாடி வந்து கூப்பிடுவார்னு நினைச்சு நடந்தேன். கூப்பிடலை. போய்ட்டார்.”

“அந்த ரிசார்ட்டுக்கு போயிருக்கலாமே?”

“அது எந்த எடம்னே தெரியலை. என்னோட செல் பர்ஸ் எல்லாமே காரிலேதான் இருந்தது… எங்கிட்ட ஒண்ணுமே இல்லை.”

எனக்கு அவள் சூழல் புரிந்தது.

“அவர் வந்திருவார்னு அங்கேயே உக்காந்திட்டிருந்தேன். ரொம்பநேரம் ஆனதும் எந்திரிச்சு நடந்தேன். ரெண்டு ரோடு பிரியிற எடத்திலே மறுபக்கமா திரும்பிட்டேன் போல. என்னமோ வழி தவறிடுச்சு… காட்டுக்குள்ளே போய்ட்டேன். அங்க ரெண்டும் எருமை…”

“காட்டெருதா? திமில் ரொம்ப பெரிசா இருக்கும், முன்காலும் பெரிசா…”

“இல்ல, நம்ம எருமை மாதிரித்தான்”

“அது காட்டுமிருகம் இல்லை. இங்க தோடர்கள் எருமைகளை காட்டுக்குள்ள திறந்து விட்டிருவாங்க… நேர்ச்சைக்காக”

“அதை பாத்து பயந்து காட்டு வழிக்குள்ளே ரொம்ப போய்ட்டேன். நாலஞ்சு வாட்டி வழிதவறிட்டுது. திரும்பி வரவே முடியலை. எங்கபோனாலும் வழி தெரியலை. ஒருவழியா இந்த ரோட்டை பிடிச்சேன்”

“நீங்க போனது அந்தப்பக்க ரோடு… சிங்காரா எஸ்டேட் ரோடு. அங்கதான் கடைசியிலே நாலஞ்சு ரிசார்ட் இருக்கு ”என்றேன். “ரிசார்ட்டுக்கு போறீங்களா இல்லை மதுரைக்கா?”

“மதுரைக்கே போறேன்.”

அவள் சட்டென்று தலைகுனிந்து விசும்பி அழத்தொடங்கினாள். அவளை அப்போதுதான் நன்றாக பார்த்தேன். அவளுடைய துப்பட்டா அள்ளிப்போடப்பட்டது போலிருந்தது. தலைமயிர் கலைந்திருந்தது. அதில் சருகுகள் ஒட்டியிருந்தன. முகம் சற்று அதைத்ததுபோல் இருந்தது. இளமையானவள், அழகி.

அந்த சந்தர்ப்பத்தின் நிர்க்கதியான தன்மை அப்போதுதான் முழுக்க பிடிபட்டிருக்க வேண்டும். அதுவரை எப்படி தப்பிப்பது என்றே நினைத்திருப்பாள். நினைக்க நினைக்க பெருகி அழுதுகொண்டிருந்தாள்.

அழுதுகொண்டிருக்கும் பெண் ஒருவகையான அமைதியின்மையையும் அணுக்கத்தையும் அளிக்கிறாள். நான் “சரி போலாம், ஏறிக்குங்க” என்றேன்.

அவள் நின்றபடியே அசைந்தாள். மீண்டும் ஒரு சீறலோசை. புதிய அழுகை எழுந்து விசும்பல்களாக ஓங்கியது.

நான் சுற்றிலும் பார்த்தேன். நல்ல இருட்டு. பாதையில் மட்டும் மெல்லிய வான் ஒளி.

“வாங்க, போலாம்.”

இயல்பாக அவள் தோளை தொட்டுவிட்டேன். அது அழும்பெண்ணை காணும் ஆணின் இயல்புதான். உடனே கையை எடுக்கமுயல அவள் என் கை மேல் தன் கையை வைத்தாள். அவள் விழிகளை நான் சந்தித்தேன். ஈரமான கண்களை மிக அருகே பார்க்கும் தருணங்களை நாம் மறக்கவே முடியாது. ஆனால் அத்தருணத்திலிருந்து என்னை விலக்கிக்கொண்டேன். அந்த விழிகள் மேலும் அணுக்கமாக ஆயின.

“ஏறிக்குங்க” என்றேன்.

அவள் ஏறிக்கொண்டாள். அவளுடைய உடல் என் மேல் பட்டது. அல்லது அப்போதுதான் அந்த தொடுகையை நான் அப்படி உணர்ந்தேன். மிகமிக அந்தரங்கமான ஒன்றாக.

அவள் மூச்சையும் உணரமுடிந்தது. அது ஒரு கற்பனையாகக்கூட இருக்கலாம். அந்த எதிர்க்காற்றில் அப்படி மூச்சை உணர்வது சாத்தியமே இல்லை.

ஒரு சொல்கூட நாங்கள் பேசிக்கொள்ளவில்லை. பைக்கில் சுழன்று சுழன்று ஏறி கல்லட்டி மேட்டை அடைந்தோம். அருவியை நோக்கிச் செல்லும் திருப்பத்தில் சிங்கரா எஸ்டேட் சாலையில் இருந்து ஒரு கார் மேலேறி வந்தது.

“அவருதான்” என்றாள்.

“அந்த ரெட் வெர்னாவா?”

“ஆமா.”

நான் வண்டியை அந்தக் காரின் அருகே கொண்டு சென்று நிறுத்தினேன். அவள் இறங்கிக்கொண்டாள். “நீங்க போங்க” என்றாள்.

“இல்ல, பேசிட்டு போறேன்.”

“இல்ல போயிடுங்க.”

“அப்டி போனா நல்லாருக்காது. சொல்லிட்டுத்தான் போகணும்” என்றேன்.

அவன் அவளை பார்த்துவிட்டான். காரை நிறுத்திவிட்டு இறங்கினான். அவள் அவனை நோக்கிப் போனாள். நான் பைக்கை ஸ்டாண்ட் போட்டுவிட்டு அவனை நோக்கி கைநீட்டியபடி சென்றேன்.

“ஹல்லோ, இவங்களை கல்லட்டி பாதையிலே பாத்தேன்.”

அவன் கைநீட்டவில்லை. அவளிடம் “இவன்கூடத்தான் இவ்ளவுநேரம் இருந்தியா?” என்றான்.

“சார், நான் இப்ப வர்ரப்ப இவங்களை காட்டிலே பாத்தேன்” என்றேன்.

அவன் அவளிடம் “சொல்டீ பகல் முழுக்க இவன்கூடத்தான் சுத்தினியா?” என்றான்.

சட்டென்று அவள் கதறி அழுதபடி கார்க்கதவை திறந்து உள்ளே நுழைந்து சீட்டில் அமர்ந்து முகத்தை மூடிக்கொண்டாள்.

“ஹல்லோ, நீங்க என்ன பேசுறீங்க?” என்றேன்.

“சீ நாயே….” என்று சொல்லி அவன் என்னை எட்டி உதைத்தான். அதை எதிர்பார்க்காமல் நின்றமையால் நிலைதடுமாறி நான் மல்லாந்து விழுந்தேன். என் பைக்கின் மேல் கையை ஊன்ற அதுவும் சரிந்தது.

“தூ!” என்று துப்பிவிட்டு அவன் காரில் ஏறி திருப்பிக்கொண்டு சென்றான். என்னால் எழமுடியவில்லை. கையூன்றி எழுந்தபோது கார் போய்விட்டிருந்தது. அதன் சிவப்பு பின்விளக்குகள் எரிந்து அணைவதைத்தான் கண்டேன்.

அருகே கடைவைத்திருந்த இருவர் ஓடிவந்து “என்னா சார்?”என்று என்னைத் தூக்கினர்.

“ஒண்ணுமில்லை… ” என்றேன். ஊட்டியில் நிலம் நாமறியாத சரிவுகள் கொண்டிருக்கும். விழுந்து எழும்போதுதான் அது தெரியும்.

“பொண்ணு ஆரு சார்?”

“அவரோட சம்சாரமா சார்?”

என் உடலே எரிவதுபோல் இருந்தது. பைக்கை எடுத்து உதறி ஸ்டார்ட் செய்தேன்.

“டீ குடிச்சிட்டு போ சார்.”

பைக்கில் ஏறிக்கொண்டபோது முதலில் தோன்றிய எண்ணம் காரை துரத்திச் சென்று மறித்து அவனை இழுத்து கீழே போட்டு மிதிக்கவேண்டும் என்றுதான். ஆனால் அப்போது என் உடலே நடுங்கிக்கொண்டிருந்தது. எதையெல்லாமோ நினைத்து அஞ்சினேன்.

அதை அப்படியே விட்டுவிடவேண்டும் என்றுதான் நினைத்தேன். மறந்துவிடவேண்டும் என்று. ஆனால் நிதானமடைந்தபோது என் ஆங்காரம் வளர்ந்தது. சீற்றம் ஏறி ஏறி வந்தது.

அவள் மேல்தான் என் கோபம் எழுந்தது. அவள் மிகமிக தந்திரமாக அதைச் செய்தாள். அவள் காரில் ஏறி அமர்ந்தது அங்கே தன் முகம் பலர் கண்முன் தெரியக்கூடாது என்பதற்காக என்றுதான் நான் முதலில் நினைத்தேன். ஆனால் அந்த சந்தர்ப்பத்தை துளித்துளியாக விரித்துக்கொண்டபோது அப்படி அல்ல என்று தெரிந்தது.

அவன் அவளிடம் என்னைப் பற்றிக் கேட்டபோது நான் அவளை காப்பாற்றியவன் என்று ஒரு வார்த்தை அவள் சொல்லவில்லை. என்னையும் அவளையும் இணைத்து பேசியபோது துளிகூட சீற்றம் காட்டவில்லை.

மாறாக கதறி அழுதாள். எதையோ நினைத்து மனம் உடைந்தவள் போல. எதையோ இழந்துவிட்டவள் போல. குற்றவுணர்ச்சி கொண்டவள் போல. எப்படிவேண்டுமென்றால் அந்த அழுகையை விளக்கலாம். அழுதபடி அப்படியே காரில் ஏறிக்கொண்டாள்.அவள் அந்த தருணத்தை அபத்தமாக ஆக்கினாள்.

வேண்டுமென்றே அதைச் செய்தாளா? அசட்டுத்தனமாக நடந்துகொண்டாளா? அல்லது அவனுக்கு எந்த வார்த்தையும் ஏறாது என்ற சலிப்பா?

அந்த தருணத்தை அத்தனை துல்லியமாக என் நினைவு எப்படி மீட்டிக்கொள்கிறது என்று வியந்தேன். அதுவரை நிகழ்ந்ததெல்லாம்கூட மங்கலடைந்துவிட்டன. அவள் கணவனை சந்தித்த அந்த சில நிமிடங்கள் ஒரு முழு வாழ்க்கை போல ஆகிவிட்டன.

சினிமாவை ஃப்ரேம் ஃப்ரேமாக பார்ப்பதுபோலப் பார்த்தேன். நிறுத்தி ஜூம் போட்டு கண்களை பார்த்தேன். ஓவ்வொரு உணர்ச்சியையும் பார்த்தேன். உணர்ச்சிகளுக்கு அப்பாலுள்ள சிந்தனைகளைக்கூட பார்க்கமுடிந்தது.

அவன் மெல்லிய ஐயத்துடன்தான் இறங்கினான். இறங்கியபோது அவளைத்தான் வெறுப்புடன் பார்த்தான். அவன் என்னைப் பற்றி கேட்டதுகூட அவளை அவமானப்படுத்தவேண்டும் என்றுதான். அது வெறும் ஒரு வசைபாடல்தான். உண்மை அவனுக்குத் தெரியும்.

அவளுடைய அந்த அழுகையும் மௌனமும்தான் அவனிடம் சந்தேகத்தை உருவாக்கி வளரச் செய்தன. ஒரு கணத்தில் அப்படியே பற்றி தீயாக எரிந்து எழுந்துவிட்டான். அவள் வேண்டுமென்றே செய்தது அது. அவளுக்குத்தெரியும், அவன் எப்படிப்பட்டவன் என்று. அவனிடம் அந்த அழுகையும் மௌனமும் என்ன விளைவை உருவாக்குமென்று நன்றாகவே உணர்ந்திருந்தாள்.

அது அவளுடைய நாடகம். ஆகவேதான் அவள் என்னிடமிருந்து முகத்தை திருப்பிக்கொண்டாள். அவள் முகத்தை நான் பார்க்கவேயில்லை.

நாட்கணக்கில் என் தூக்கம் இல்லாமலாகியது. தனியாக என்னை உணரும்போதெல்லாம் அவள் நினைப்பு எழுந்து உடல் தகிக்கும். கொதிப்பை அடக்க முடியாமல் கைகளை முட்டிசுருட்டிக்கொள்வேன். உதட்டைக் கடிப்பேன்.

“என்னடா ஆச்சு உனக்கு? உனக்கேதோ டிப்ரஷன் இருக்கு.. டாக்டரைப்பாரு” என்றான் ராகவன். “ஆபீஸ்ல எல்லாருமே சொல்றாங்க”

“என்ன?”

“தனியா நிக்கிறப்ப என்ன பண்றே தெரியுமா? ஒருநாள் வீடியோ எடுத்து காட்டுறேன்…அய்யோ கொலவெறி தெரியுது மூஞ்சியிலே. கிறுக்கன் மாதிரி என்னென்னமோ பண்றே”

அதன்பின் நானே என்னை ஆற்றிக்கொள்ள தொடங்கினேன். அவளை நினைப்பதில்லை. அந்நினைப்பு வந்தாலே ஏதாவது படிப்பேன். எங்காவது கிளம்பிச் செல்வேன்.

ஆனால் நெஞ்சுக்குள் ஆழமாக அவள் பதிந்துவிட்டாள். சிலநாட்கள் விடியற்காலையில் அவள் முகம் எழுந்துவரும். அப்படியே ஒரு பெரிய ஓவியத்தைப் பார்ப்பதுபோல பார்த்துக்கொண்டு படுத்திருப்பேன். தூய வெறுப்பு என்றால் என்ன என்று அப்போது தெரிந்துகொள்வேன்.

அத்தகைய தூய வெறுப்பில்தான் திட்டமிட்ட கொலைகள் நிகழ்கின்றன. இரக்கமற்ற குற்றஉணர்ச்சியே அற்ற கொலைகள்.

அவள் எனக்குச் செய்தது ஓர் அவமதிப்பு அல்ல. அவள் என் அகத்தில் எதையோ நிரந்தரமாக உடைத்துவிட்டாள். ஒவ்வொருவரும் இளமை முதலே வளர்த்துப் பேணிவரும் ஒன்றை. நான் என்று எண்ணும்போதே திரண்டு வரும் ஒன்றை.

ஆனால் இந்த நஞ்சை நான் கடந்துவிடவேண்டும். இதை நான் வைத்துக் கொண்டிருந்தால் இது என்னுள் பெருகி என்னை அழிக்கும். என் பகற்கனவுகளில் நான் அவளை வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு தருணங்களில் சந்தித்தேன். அவளை அறைந்தேன். அவளைச் சிறுமை செய்தேன். ஆனால் ஒவ்வொரு முறையும் அதன்பின் கசப்பையே உணர்ந்தேன்.

கசப்பிலிருந்து மீளவேண்டும் என்றால் அதை துறப்பது மட்டுமே வழி. ஆகவே நான் என் வேலையை இடம் மாற்றிக்கொண்டேன். ஊட்டிக்கே அதன்பின் வரவில்லை. என்னுள் அதை சுருக்கிச் சுருக்கி ஒரு புள்ளியாக மாற்றிக் கொண்டிருந்தேன்.

மிகத் தற்செயலாகத்தான் இன்று ஊட்டிக்கு வரவேண்டியிருந்தது. பஸ்ஸில் ஏறும்போது ஒரு சிறு தொடுகைபோல அந்த நினைவு வந்தது. உடனே அதை உந்தி விலக்கிக்கொண்டேன்.

நான் அந்த கேரளா பஸ்ஸை கண்டுவிட்டேன். அந்தக்கணம் என் தலைக்குள் குருதி ஏறிய வேகத்தை நானே வியந்துகொண்டேன்.

“அந்தபஸ்தான்… அதோ” என்று கூச்சலிட்டேன்.

“டாக்ஸி வேணாமா சார்?”

“அந்த பஸ்தான்… இந்தாங்க…எவ்ளவு?”

“நூறு.”

“இந்தாங்க.”

“நான் வேணா வரவா சார்? நாலு வார்த்தை கேக்கறேன்.”

“வேண்டாம்… நான் பாத்துக்கறேன்.”

நான் இறங்கி ஓடிச்சென்று அந்த பஸ்ஸில் ஏறினேன். அவள் முன்பக்கம் வெளியே பார்த்தபடி அமர்ந்திருந்தாள். அருகே சென்று அவள் அருகே அமர்ந்தேன். வியர்வை வழிய மூச்சுவாங்கிக் கொண்டிருந்தேன்

திடுக்கிட்டு திரும்பிப் பார்த்தாள் என்னைக் கண்டதும் அதிர்ச்சியடைந்தாள்.

“கூச்சல் எல்லாம் போடாதே… நான் இப்ப எதுக்கும் துணிஞ்சவன்…” என்றேன். என் முகம் எப்படி இருந்திருக்கும்? விசித்திரமான ஒரு இளிப்பு, வலிப்பு போல ஒர் இழுபடல் இருந்திருக்கும். “எறங்கு…”என்றேன்.

“இல்ல.. ப்ளீஸ்” என்றாள்.

“பேசாம இறங்கி வா.”

“ப்ளீஸ் வேண்டாம்.”

“எறங்கு. நான் உங்கிட்ட பேசணும்.”

“ப்ளீஸ்! ப்ளீஸ்! ப்ளீஸ்!”

“எறங்கிறியா இல்லியா?”

அவள் மேலுதட்டை இழுத்து கடித்தபடி அமர்ந்திருந்தாள்.

“நீ மட்டும்தானே வந்திருக்கே?” அதுவரை அதைப்பற்றிக்கூட நான் நினைத்திருக்கவில்லை.

“ஆமா.”

“எறங்கு.”

“எதுக்கு?”

“ரேப் பண்ணப்போறேன், போதுமா, எறங்குடி.”

“ப்ளீஸ்! ப்ளீஸ்!”

“எறங்கு உங்கிட்ட பேசணும்.”

“இங்க பேசலாம்.”

“என்னால குரலை தாழ்த்தி பேசமுடியாது. எனக்கு சில விஷயங்கள் தெரிஞ்சுகிடணும் அவ்வளவுதான்.”

“ப்ளீஸ்! ப்ளீஸ்!”

“எறங்கிறியா இல்லியா?” என்று பல்லைக் கடித்தபடி கேட்டேன்

அவள் கையில் ஏர்பாகுடன் எழுந்தாள். நான் அவளை அழைத்தபடி இறங்கினேன்.

டிரைவர் “வண்டி கெளம்புது சார்” என்றார்.

“இல்ல, நாங்க வேற வண்டியிலே வர்ரோம்” என்றேன்.

“இத பாருங்க..”என்று அவள் ஏதோ சொல்ல வந்தாள்.

“பேசாம வா.”

“டீக்கடையிலே வச்சு பேசுவோம்.”

“வா பேசாம.”

“ப்ளீஸ்! ப்ளீஸ்!”

நான் அவளை சாலைவழியாக கூட்டிச்சென்றேன். சாலையிலிருந்து ஒரு மண் பாதை மேலேறிச் சென்றது.

“வா.”

“இங்க எதுக்கு?”

“வரப்போறியா இல்லியா?”

“ப்ளீஸ்! ப்ளீஸ்!”

நான் மேலேறி சென்றேன். அவளும் தயங்கியபடி வந்தாள். அந்த மண்பாதை காட்டுக்குள் சென்றது. இருபக்கமும் புதர்கள் செறிந்திருந்தன. உடலெங்கும் கனி செறிந்த அத்திமரத்தில் அமர்ந்திருந்த குரங்குகள் எங்களை வியப்புடன் பார்த்தன.

“போதும்” என்றாள்.

“வா” என்றேன்.

“எனக்கு பயமா இருக்கு.”

“பயப்படாதே… உன்னை கொல்லப்போறதில்லை” என்றேன். “கொல்லணும்தான் நினைச்சேன். சொல்லப்போனா துரத்திட்டு வர்ரப்பக்கூட பிடிச்சதுமே அடிக்க ஆரம்பிச்சிருவேன்னு நினைச்சேன். ஆனா உன்னைப் பாத்ததும் மனசு மாறிடிச்சு.”

அவள் விழிகளில் நம்பிக்கை தெரிவதை கண்டேன்.

“ப்ளீஸ்!” என்றாள்

“இப்ப எனக்கு உங்கிட்ட ஒருவிஷயம் தெரிஞ்சுகிடணும் அவ்வளவுதான்”.

“ம்.”

நான் பக்கவாட்டில் பிரிந்த ஒற்றையடிப் பாதையில் நடந்து அங்கிருந்த பாறை அருகே சென்று நின்றேன். எங்களைச் சுற்றி காடு நிறைந்திருந்தது. எவரும் பார்க்கமுடியாத அந்தரங்கம்.

“யாரும் பாக்காத இடத்திலே வச்சுத்தான் இதைக் கேக்கமுடியும்னு தோணிச்சு. ஏன்னா… ” என்றேன் “தெரியலை. இது என்னோட அந்தரங்கம். அதை நாலுபேர் கேக்கிறாப்ல பாக்கிறாப்ல பேச எனக்கே கூசுது.”

“ப்ளீஸ்!” என்றபோது அவள் விழிகளில் கண்ணீர்.

“நேரடியாகவே கேக்கிறேன், அன்னிக்கு நீ போட்டது டிராமா தானே?”

“ப்ளீஸ்!”

“அந்த வார்த்தையையே சொல்லிட்டிருக்காதே… சொல்லு, ஏன் அப்ப அப்டி அழுதே? அந்த அழுகையோட அர்த்தம் என்னன்னு தெரியும்ல உனக்கு? தெரியும்தானே?”

“ப்ளீஸ்!”

“இதப்பார், அறைஞ்சிருவேன்!” என்றபோது என் குரல் உயர்ந்தது.

“ப்ளீஸ் !ப்ளீஸ்!” என்று அவள் கைகூப்பியபோது கண்ணீர் வழிந்தது.

“அது தெரிஞ்சு பண்ணின டிராமாதானே?”

அவள் பேசாமல் நின்றாள்.

“அவன் எடத்திலே என்னை வச்சு கற்பனை பண்ணிப் பாத்தேன். ரெண்டு வருஷமா இந்த நாடகம் மட்டும்தான் என் மனசிலே” என்றேன் “நீ அவனுக்குக் குடுத்த தண்டனை அது, இல்லியா?”

அவள் மேலுதட்டை இழுத்துக் உதட்டைக் கடித்துக்கொண்டு தலைகுனிந்தாள்.

“அவன் சந்தேகபட்டிட்டே இருந்தான். உன்னை சித்திரவதை பண்ணினான். கடைசியா காட்டிலே இறக்கிவிட்டான். அவனை சாவடிக்கணும்னு அந்த நிமிஷத்திலே தோணிச்சு. அதுக்கு என்ன செய்யணும்கிறதும் தோணிச்சு. இல்லையா?”

“நாம போய்டுவோம், ப்ளீஸ்”

“அந்த எடத்திலே எது பேசியிருந்தாலும் நீ நினைச்சது மாதிரி நடந்திருக்காது. அதனாலத்தான் அழுகை. அழுகைய எப்டி வேணுமானாலும் அர்த்தம் பண்ணிக்கலாம்” என்றேன் “போறவழியிலே அவன் திரும்பத் திரும்ப கேட்டிருப்பான், என்ன நடந்ததுன்னு. ஒண்ணுமே நடக்கலைன்னு சொல்லி கதறி அழுதிருப்பே. இல்லியா?”

அவள் தலைகுனிந்து நின்றாள். நான் சொல்வதை கேட்காதவள் போலிருந்தாள்.

“இந்த ரெண்டு வருஷத்திலே நூறுதடவையாவது கேட்டிருப்பான், என்ன நடந்தது சொல்லிடுன்னு. கெஞ்சியிருப்பான், மிரட்டியிருப்பான், மன்றாடியிருப்பான். ஒண்ணுமே நடக்கலைன்னு சொல்லி நீ கதறி அழுதிருப்பே. ஆயிரம் சத்தியம் பண்ணியிருப்பே. அப்ப ஏன் அப்ப அப்டி அழுதேன்னு அவன் கேட்கிறப்ப தெரியாதுன்னு சொல்லி மறுபடியும் அழுதிருப்பே..”

அவள் என்னை நிமிர்ந்து பார்த்து “ஆமா”என்றாள்.

“அவனை போட்டு வதைக்கிறே. அவனால அந்த ஒரு சந்தேகத்திலே இருந்து வெளியே வரவே முடியாது. நஞ்சு மாதிரி அவனை அது கொன்னிட்டிருக்கு.”

அவள் உதட்டில் மிகமெல்ல ஒரு புன்னகை வந்தது. தலையை சற்றே சொடுக்கியபடி தூக்கி “ஆமா” என்றாள்.காதோர மயிரை கைகளால் நீவி பின்னாலிட்டாள்.

நான் பெருமூச்சுவிட்டேன். அதற்குமேல் ஒன்றும் சொல்வதற்கில்லை.

“அவர் எனக்கு பண்ணினது உங்களுக்கு தெரியாது. சந்தேகம் சந்தேகம் சந்தேகம்… என் வாழ்க்கையை நரகம் ஆக்கினார். அடிச்சிருக்கார், கரண்டியாலே சூடு வைச்சிருக்கார்.”

“ஏன்? அவனுக்கு செக்ஸிலே ஏதாவது பிரச்சினையா?”

அவள் ஒன்றும் சொல்லவில்லை.

“ஸோ?”என்றேன்.

“ஆமாண்டா அப்டித்தான்னு சொல்ல ஒரு சந்தர்ப்பம் கிடைக்கணும்னு நினைச்சிட்டே இருப்பேன். மனசிலே அந்த சந்தர்ப்பத்தை ஆயிரம் வாட்டி கற்பனை செஞ்சிருப்பேன்…”

“அப்ப அதைச் சொல்லியிருக்கணும் நீ.”

“அப்ப அவன் நிம்மதி ஆகியிருப்பான். இப்பதான் எரியும். எதையுமே முடிவு பண்ண முடியாம எரிஞ்சு எரிஞ்சு சாவான்.”

நான் மீண்டும் பெருமூச்சுவிட்டேன்.

“ஆனா நீ என்னை எரிய வைச்சிட்டே.”

“ஆமாம், நான் நினைச்சு நினைச்சு மறுகிட்டிருக்கிறது அதைத்தான். ஸாரி !ஸாரி! ஸாரி” என்றாள் “காலிலே விழுந்து ஸாரி கேட்கிறேன்னு நினைச்சுக்கிடுங்க.. இல்ல விழணும்னா விழுந்துடறேன்.”

“சரி விடு” என்றேன். “உன்னோட ஆட்டத்திலே நான் நடுவிலே மாட்டிக்கிட்டேன்.”

“ஸாரி.”

“ஓக்கே வா போலாம்.”

அவள் அங்கேயே நின்றாள்.

“வா” என்றேன்.

“அவன் மாசம் மூணுமுறை ஊட்டிக்கு வர்ரான் தெரியுமா?”

“எதுக்கு?”

“உங்களைக் கண்டுபிடிக்க… நேரிலே கேட்டுக்க.”

“ஓ” என்றேன் “நான் ஊட்டிக்கே வர்ரதில்லை. என் ஏரியாவையே மாத்திட்டேன்.”

“தோணிச்சு… ஆனா அவன் அந்த கல்லட்டி அருவி ஜங்ஷனிலே காரை நிப்பாட்டிட்டு எத்தனையோ நாள் காலையிலே இருந்து ராத்திரி வரை நின்னுட்டிருந்திருக்கான்.”

“அய்யோ” என்றேன். “நல்லவேளை.”

“அப்டி நின்னுட்டு மனம் உடைஞ்சு திரும்பி வருவான். எங்கிட்ட சொல்லி அழுவான். உண்மையைச் சொல்லு அன்னிக்கு என்ன நடந்ததுன்னு கேட்டு கண்ணீர் விடுவான். ஒண்ணுமே நடக்கலை, என்னை நம்புங்கன்னு சொல்லி நான் கதறுவேன். உண்மையிலேயே அழுகை ரொம்ப வந்திரும். ஒண்ணுமே இல்லைன்னு சொல்லிச் சொல்லி அழுவேன். ஏன்னா அது அப்டித்தானே?”

நான் அந்த இடத்திலிருந்து விலகிச் சென்றுவிடவேண்டும் என்று விரும்பினேன்.

“இப்ப நான் ஏன் வந்தேன் தெரியுமா?” என்றாள்.

“சொல்லு.”

“நேத்து அவன் கூட சண்டை. அம்மாவிட்டுக்கு கிளம்பினேன். சட்டுன்னு ஊட்டிக்கு வந்து கல்லட்டி ஜங்ஷனிலே நிக்கணும்னு தோணிச்சு. உங்களை அங்க பாக்கமுடியும்னு”.

“எதுக்கு?”

“சும்மாதான். அபத்தமாத்தான் இருந்தது. ஆனா அப்டி கற்பனை செஞ்சுக்க பிடிச்சிருந்தது. அங்க போய் நின்னுட்டிருந்தேன். மனசு அப்டி இனிச்சு கிடந்தது…”

“ஏன்?” என்றேன்.

“ஏன்னா நான் அந்த பைக்ல வந்ததை மனசுக்குள்ளே அப்டி கற்பனை செஞ்சுட்டே இருந்தேன். உள்ளுக்குள்ள வளந்துட்டே இருந்தது. இப்ப எனக்கு பிரைவேட்டா இருக்கிற டே-டிரீம்னா அதுதான். ஐ அம் லிவிங் இன் இட்” என்றாள் ‘கல்லட்டி ஜங்ஷனிலே நானே கற்பனையிலே நூறுவாட்டி நின்னிருப்பேன். நேர்ல நிக்கிறப்பவும் அப்டி ஒரு ஸ்வீட்டா இருந்தது”

நான் மூச்சுத்திணறினேன். அவள் விழிகளில் அத்தகைய தருணங்களில் பெண்களுக்கு வரும் துணிச்சலும் விந்தையானதொரு கூர்மையும் தோன்றின.

“இப்ப வேணும்னா ஆமாடா அப்டித்தான்னு சொல்லீருவேன்.”

“என்ன?” என்றேன்.

அவள் சற்று முன்னடைந்து அப்படியே நின்றாள். இலைநுனி நீர்த்துளியில் உதிர்வதற்கு முந்தைய கணத்தில் தோன்றும் ததும்பல் அவள் உடலெங்கும் நிறைந்திருந்தது.

நான் அறியாமல் கைநீட்டி அவள் இடையை சுற்றி பற்றிக்கொண்டேன். அவள் “ம்ம்” என்ற முனகலுடன் என்னை சுற்றி அணைத்து தன் மார்புகளை என் மார்பின்மேல் பதித்து முகத்தை மேலே தூக்கிப் பார்த்தாள்.

அவளுடைய மாநிறம் அனல்பட்டதுபோல செம்மைகொண்டிருந்தது. உதடுகள் நீர்ப்பரவலுடன் உயிரசைவுடன் அண்மையில் தெரிந்தன.

நான் மிகமிக குரூரமான ஓர் உணர்வை அடைந்தேன். அவளை உந்தி விலக்கினேன்.

அவள் தன்னையறியாமலேயே கை பதற என்னை பற்றவந்தாள். அவளை விட்டு விலகி என் பையை எடுத்துக்கொண்டு நடந்தேன்.

எனக்குப் பின்னால் அவள் மூச்சிரைத்தாள். பையை எடுத்துக்கொண்டு அவள் என் பின்னால் வரும் ஓசை கேட்டது.

நான் ஓரிரு அடிகள்தான் புன்னகையுடன், உடலெங்கும் பரவிய திளைப்புடன் நடந்தேன். அதன்பின் என் கைகால்கள் தளர்ந்தன. நெஞ்சு முழுக்க வெறுமை பரவியது. கசந்து கசந்து கசந்து சாலை நோக்கி சென்றேன்.

***

முந்தைய கட்டுரைகடிதங்கள்,பதில்கள்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–55