முதல் ஆறு [சிறுகதை]
அன்புள்ள ஜெ
இந்தச் சிறுகதைகளையும் கூடவே வரும் வாசிப்புக்களையும் பார்க்கிறேன். இந்த வாசிப்புக்கள் மிக உதவிகரமானவை. கதைகளைப் பற்றிய நம் வாசிப்புகள் தொடாத இடங்களை இவை தொடுகின்றன. நாம் அடையாத பலவிஷயங்களை காட்டுகின்றன. கதை நம் கண்முன்னால் விரிந்துகொண்டே செல்கிறது. அது ஒரு அற்புதமான அனுபவம்.
இவற்றில் கதைகளைப் பற்றிய பாராட்டுக்களே உள்ளன என்று ஒரு நண்பர் சொன்னார். எதிர்மறையாகவோ குறையாகவோ சொல்லப்படுபவற்றை பிரசுரிக்கவேண்டாம் என்று நினைத்திருக்கலாம் என்று நான் சொன்னேன்.
முதல் ஆறு எனக்கு பிடித்தமான கதை. ஒரு சின்ன detour. அவ்வளவுதான் கதை. அன்றாட வாழ்க்கையில் இருந்து ஒரு சின்ன விலகல். அன்றாடவாழ்க்கை என்பது ஒரு பெண்டுலம்தான். காதல் அதிலிருந்து ஒரு detour. அழகான ஒரு சுற்றுவழி. காதலிக்காதவர்கள் அதை தேவையில்லாத சுற்றுவழி என்றுதான் சொல்வார்கள். அவர்கள் செல்லும் அந்த நேர்வழி சுருக்கமானது,பயனுள்ளது, ஆனால் அதில் அழகும் பரவசமும் கிடையாது அது காதலித்தவர்களுக்கே தெரியும்
கதையின் மிகமிக அழகான ஓர் இடம், அந்தப்பெண் பைசாவால் தட்டி அழைப்பது. அந்தக்காலப் பெண்களின் வழக்கம் அது. அவர்க்ள் சத்தம் வெளியே கேட்க் பேசமாட்டார்கள். தொட்டும் அழைக்கமாட்டார்கள். அவள் எழுப்பிய அந்த ஓசை பல்லி ஓசை போல கேட்டது என்ற இடமும் அருமையானது
ஒரு காலகட்டமே கண்முன் விரிகிறது. பெண்களைச் சந்திப்பதற்காக அலைந்து திரிந்து ஏங்கி காதலித்த ஒரு காலம் அது
சாந்தகுமார்
***
அன்புள்ள சாந்தகுமார்
இக்கடிதங்களின் நோக்கம் கூட்டுவாசிப்பு. ஒருவரின் வாசிப்பு இன்னொருவரின் வாசிப்பை பெருக்கவேண்டும். எதிர்மறைவிமர்சனங்கள் பெரும்பாலும் இன்னொருவரின் வாசிப்பை குறைப்பவை. தமிழில் கலைரீதியான எதிர்மறை விமர்சனங்கள் செய்யும் தகுதிகொண்டவர்கள் அரிது. நாம் காண்பவை அச்சுப்பிழை, சொற்பிழை கண்டுபிடிப்பவர்கள். தகவல்பிழை தேடுபவர்கள். எளிய தர்க்கப்பிழைகளைச் சுட்டிக்காட்டுபவர்கள். அல்லது தங்கள் குறைவான அனுபவ, அறிதல்தளம் நோக்கி கதைகளை இழுப்பவர்கள். இவர்களுடனான உரையாடல் கலைப்படைப்பை அணுகுவதற்குண்டான திறந்தமனதை, இயல்பான உளநிலையை இல்லாமலாக்கிவிடும். குறைகள் கண்டால் அவற்றை நாமே உணர்ந்தால்போதும்.
இங்கே வெளியாகும் கடிதங்கள் அனைத்திலும் ஒரு வாசிப்புக் கோணம் இருக்கும். அது இல்லாமல் எளிய ஒற்றைவரி பாராட்டுக்களே வருபவற்றில் மிகுதி. அவற்றையும் பிரசுரிப்பதில்லை
ஜெ
***
வணக்கம் ஜெ. நலம்தானே?
முதல் ஆறு படித்தேன்.மென்மையான காதல் கதை. அவனும் அவளும் தினமும் ஒரே பேருந்தில் போய்வருகிறார்கள்கடைசியில் அவள் காதலை மறைமுகமாக உணர்த்துகிறாள். இந்த இரண்டு நூல்களை வைத்துக் கொண்டே நேர்த்தியான பட்டுப்புடவை நெய்திருக்கிறீர்கள்.
முதல் முதல் பார்த்த ஆறு. முதல் முதல் வைத்த மீசை.முதல்முதல் விமானப் பயணம், முதல் இரவு இவை ஒவ்வொருவரின் இறுதிவரை மறக்க முடியாதவை.அந்த ஆற்றின் பெயரும் யதெச்சையாக முதல் ஆறு என அமைந்தது குறிப்பிடத்தக்கது.
அவன் மனஓட்டத்தை நன்கு அனுபவித்து எழுதி இருக்கிறீர்கள்.அவன் மறைந்து நின்று பார்ப்பது கடைசியில் ஓடி வந்து பேருந்தில் ஏறிப் படிக்கட்டில் நிற்பது இவை காதல் வயப்படுபவனின் அவத்தைதான்.
இடையில் கைக்குட்டையில் பௌடர் தொடர்பான உரையாடல் தவிர வேறு நிகழ்ச்சிகளே இல்ல. தெளிவான ஆற்றோட்டம் போல் கதை சீராகச் செல்கிறது.
அன்றைக்குப் பேருந்து சுற்றிக்கொண்டு போனது நல்ல உத்தி.அவர்கள் பேசிக் கொள்ள தற்செயலாக,ஆனால் தேவையான ஒரு சூழல். இறுதியல் ஒரு மெல்லிய புன்னகை,தலையசைப்பு அவளின்மனத்தை அவனுக்குத் தெரிவிக்கிறது. நல்ல வேளை. இவளுக்குக் கூட்டுக்காரி இல்லை.
மாணவர்களைப் பேருந்து ஏற்றிக்கொள்வதற்கு இரண்டு கைகளாலும் நெல்லை அள்ளுவது பொருத்தமான உவமை.மற்ற கதைகளை விட அழகியல். மென்மை. தளவருணனை. சுருக்கமான உரையாடல் இவற்றால் இக்கதை சிறந்து விளஙகுகிறது
வளவ.துரையன்
***
நகைமுகன் [சிறுகதை]
அன்புள்ள ஜெ
பொதுவாக எனக்கு ஒரு கருத்து உண்டு, நவீன இலக்கியம் என்பதே அறிவார்ந்தது. ஆகவே அறிவார்ந்தவர்களுக்கு எழும் சில எண்ணங்களும் உணர்ச்சிகளும் மட்டுமே இங்கே பேசப்படுகின்றன. நவீனக்கதைகளின் உலகுக்குள் innocence என்பதை கொண்டுவர சிலரால்தான் முடிந்திருக்கிறது. பலசமயம் innocence ஒரு மேட்டிமைப் பார்வையுடன் எழுதப்பட்டிருக்கிறது. அதை கொண்டாடும்போதுகூட அதை இயல்பாகக் காட்டமுடியவில்லை.அல்லது ஆராயப்பட்டிருக்கிறது. அதுவும் ஒரு வகையான மேட்டிமைப்பார்வைதான்
Innocence கு.அழகிரிசாமி, கிருஷ்ணன்நம்பி ஆகியவர்களின் கதைகளில்தான் சிறப்பாக வெளிப்பட்டிருக்கிறது. அவர்களின் நடையும் அதற்கு ஒரு காரணம். நகைமுகன் கதையில் அந்த மையக்கதாபாத்திரத்தின் innocence ஐ சொல்ல முயலவில்லை. சூழ நடப்பத்தைப் பற்றிச் சொல்கிறீர்கள். அது அவனுடைய குணாதிசயம் அழகாக வெளிப்படுவதாக ஆகிறது
ஐசக் சிங்கரின் Gimpel the Fool கதையை அந்தக்கதை வாசிக்கும்போது நினைத்துக்கொண்டேன்.
டி.எஸ்.கிருபாகரன்
***
வணக்கம்.ஜெ
நகைமுகன் சிறுகதையை வாசித்தேன். சிக்கல்களிலிருந்து விலகி நிற்க மொத்தமாக அதிலிருந்து விலகி நிற்பதுதான் அறுதியான வழி என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், அதிலிருந்து விலகி நிற்கும் துணிவு இருப்பதில்லை. அதனைத் தெய்வங்கள் அளிக்கும் என எண்ணுகிறோம். அப்படியான தருணத்தை நல்கியவனைப் பற்றிய கதை.
அரவின் குமார்
***