பிடி, மாயப்பொன் – கடிதங்கள்

மாயப்பொன் [சிறுகதை]

அன்புள்ள ஜெ,

நலம்தானே?

மாயப்பொன் கதையின் தலைப்பே ஒரு மலைப்பை உருவாக்கியது. மாயமான் என்று கேட்டிருக்கிறோம். கானல்நீர் என்று கேட்டிருக்கிறோம். இரண்டையும் கலந்ததுபோல. ஒரு கவிதைபோல அமைந்திருக்கிறது அந்தக் கதை. கதைக்குரிய சித்தரிப்பும் நுட்பமான செய்திகளும் கதாபாத்திரங்களும் இருந்தாலும் அது ஒரு நீளமான கவிதைதான்.

மாயப்பொன் என்ன? பொன்னிறமாக சொட்டுவதுதான். அது தியானம். தியான அனுபவம் உள்ளவர்களுக்கு தெரியும். நாம் தேடினால் சிக்காது. கவனித்தால் மறைந்துவிடும்.நினைக்காதபோது வந்து நம் அருகே அமர்ந்து நம்மை ஆட்கொண்டுவிடும். அந்த மாயப்பொன் அப்படித்தான் வருகிறது. தவம் செய்கிறான். காத்திருக்கிறான். ஏமாற்றம் அடைந்து எல்லாவற்றையும் உடைக்க நினைக்கிறான். நம்பிக்கை இழந்துவிடுகிறான். மனம் அதிலிருந்து விலகிச்செல்லும்போது பொன் துளித்துளியாகச் சொட்டுகிறது

இந்தக்கதைகளில் எப்படி பொன் வந்துகொண்டே இருக்கிறது என்று பார்த்தேன். ஆடகம் பொன்னின் கதைதான். அதன்பின் தங்கத்தின் மணம். இது மூன்றாவது கதை

கே.செந்தில்

***

அன்புள்ள ஜெ,

அறம் சீரிஸுக்குப்பிறகு சடேரென்று சிறுகதைகளாகப் பொழிந்துகொண்டிருக்கிறீர்கள். எழுத்து பீறிட்டு வருவதாக நீங்கள் சொன்னதைக் குறிப்பிட்டு ஜெ.கே பேசியது நினைவுக்கு வருகிறது. பீறிட்டா ? ஒரு கதையை வாசித்து, அதைப்பற்றி யோசித்து, அதுகுறித்தான எண்ணங்களை கோர்வையாக்கி எழுத எத்தனித்துக்கொண்டிருக்கையிலேயே அடுத்து, அடுத்து என வெள்ளமென்றல்லவா வருகிறன.

மாயப்பொன் கதை மேலும் சில கதைகளை நினைவூட்டிக்கொண்டே இருந்தது : ’வணங்கான்’ ஆனைக்கறுத்தான் நாடாரை ; ‘பித்தம்’ பண்டாரத்தை ; ‘பிரதமன்’ ஆசானை ; காய்ச்சுவது சாராயமாகவே இருந்தாலும் அதையும் பேட்டரியோ, கஞ்சாவோ, ஊமத்தைக்காய்களோ போட இசையாமல் ‘ஒரு இதுவாக்கும் செய்யலாமுண்ணு’ பார்க்கும் நேசையன். தான் யாரென்ற ஓர்மை அவனுக்கு இருக்கிறது. ‘வல்ல கூலிவேலையும் செய்து பிளைப்பதற்கு’ தான் ’மியாவ் என்று சத்தம் போடும் பூனையல்ல, உறுமும் புலி’ என்ற நிமிர்வு இருக்கிறது.

அவன் ஒவ்வொருமுறையும் காய்ச்சுவது மனிதன் குடிப்பதற்காக அல்ல. கடவுள் எழுந்து வந்தால் அவரை உபசரிக்கக் கொடுப்பதற்காக. ஆனாலும் அந்த பதம் எப்போதாவதுதான் கிட்டுவது. மாயப்பொன் மாதிரி. (ஒவ்வொருமுறையும் கிட்டிவிட்டால் அதற்கு மதிப்பில்லையல்லவா ? கடவுளேயானாலும் தினந்தோறும் தரிசனம் தந்துகொண்டிருந்தால் நாமேகூட ‘சரி, இப்படி ஓரமா ஒக்காருவே’ என்று சலிப்பைக் காட்டக்கூடும்தானே) அந்த பதம்தான் அவன் தேடுவது. ஆனால் அது கர்த்தர் உயிர்த்தெழுந்து வருவதுபோல. ஒருமுறை மட்டுமே நிகழும் அற்புதம். அப்படி அற்புதமாக காய்ச்சப்பட்ட சரக்கை கலப்படம் செய்து வணிகத்திற்காக பெருக்கிக்கொள்வதைக்குறித்து பேசக்கூட எரிச்சல்படுபவன் அவன்.

உண்மையில் ஞானம் தேடுபவன் இப்படிப்பட்டவன்தானே ? கொஞ்சமும் சளைக்காமல், வெற்றிலை-பாக்கு-சுண்ணாம்பில் ஒருமுறை கூடும் லயத்திற்காக ஆயிரம்முறை சவைப்பதுபோல, நேசையனும் அந்த லயத்துகாகவே மீண்டும் மீண்டுமென கொஞ்சமும் அயராது காய்ச்சிக்கொண்டே இருக்கிறான். (பாவம், பண்டாரத்திற்குத்தான் அந்த பொறுமை இல்லாமல் போகிறது, அத்தனை ஆண்டுகள் முயன்றும் ஏதோ ஒரு பலவீனத்தில் எல்லாவற்றையும் எட்டி உதைத்துவிட்டு தூக்கிலேறிவிடுகிறார்)  அதனால் குடும்பத்தை இழப்பதுகூட பெரிதாக அவனை பாதிக்கவில்லை. தனிமையில் சில பெருமூச்சுகளோடு சரி.

ஆனால் அதற்காக தரத்தில் முள்முனையும் குறைவைப்பதில்லை. தட்டிப்பார்த்தும் சுவைத்துப்பார்த்தும் சோதிக்கும் வெல்லத்தின் பதமாகட்டும்,  ஒவ்வொரு கூனை ஊறலின் உள்ளடக்கமும் விகிதமும் ஒன்றேயெனினும் அவற்றின் மணமும் சுவையும் தனித்தனி என்பதால் (அதற்குச்சொல்லும் உவமானம் குபீரென சிரிப்பை வரவைத்தது) அவற்றைத் தனித்தனியாகத்தான் காய்ச்சவேண்டும் என்ற பிடிவாதமாகட்டும்,  அழுகின மலைவாழைப்பழக்கூழில் தோல் தேடுவதாகட்டும் …. நாவிதனின் சவரக்கத்திக்கூர்மையல்லவா ? பாதையில் சறுக்கமுடியாதே ?

எதிர்பார்த்ததுபோல ஒவ்வொரு கூனையிலிருந்தும் வடித்தெடுக்கும் சாராயம் ஒரு மல்லிகைக்கும் இன்னொரு மல்லிகைக்குமானதுபோல நுண்ணிய வேறுபாட்டோடுதான் இருக்கிறது அவனுக்கு. அதனால்தான் வானவர்க்கு வேள்வியில் வகுத்த அவியை – அமிர்தமென தான் நினைப்பதை – கானிடைவாழும் நரிபுகுந்து முகந்து சாக்கடையாக்க  நினைக்கும்போது  ‘வாழ்கிலேன் கண்டாய்’ என்று மதனை எச்சரிக்காமல் ’ஆம்பிளையா இருந்தா தொட்டுப்பார்’ என்று அந்த நரியிடமே ரௌத்திரமாகிறான்.

மனசு ஒருமையடையாமல், ஒருமுறை கூடினால் பத்துமுறை கெட்டுப் போகும் துயரத்தில் ‘வாழ்ந்து போதீரே’ என்று எல்லாவற்றையும் போட்டு உடைக்கும் ஆத்திரமும் அழுகையும்  கொந்தளிக்கிறது. ஆனால் பாருங்கள், அதுவரை வணிகன்தான் என்று நினைத்திருக்கும் லாத்தி இங்கே விஸ்வரூபம் எடுக்கிறான். குருவி கதையில் வரும் மாடன்பிள்ளை ‘தான் கலைஞன்’ என்ற கர்வத்தோடு சலம்புவதுபோல ‘தான் சத்தியந்தேடி’ என்று குமுறும் நேசையனுக்கு ‘நாம் கந்தரவரோ, தேவரோ அல்ல, மனிதன் மட்டுமே’ என்று சுட்டிக்காட்டி , நேசையன் மாதிரியானவர்கள், ‘தான் பெரிய இவன், மலைக்கடுத்தா சாமிக்க  சொந்தக்காரன்’ என்ற திமிரினால், தமது எல்லையையும், தாம் போக்ககூடும் தூரம் குறித்தான பிரக்ஞையையும் அடக்கத்தையும் இழந்துவிடக்கூடாது என்று போதிக்கிறான்.

’ஏன் ஒவ்வொருமுறையும் அவனிடம் அந்த லயம் கூடுவதில்லை என்றால் அது கடவுள் விளையாட்டு, அவன் காய்ச்சிய சரக்கின் இனிப்பு, அந்த மலையே கனிந்த இனிப்பு, அதன் ஒரு துளி, தேவர்களும் மலைக்காட்டு தெய்வங்களும்கூட அருந்தியிருக்கமாட்டார்கள், நேசையன் அவனுக்குச் சாத்தியமான எல்லையைத்தொட்டுவிட்டான், எனவே அதை இனி தாண்ட முயலக்கூடாது’ என்று நேசையனை எச்சரிக்கையில் லாத்தி இங்கே கர்மஞானி போலவே தோற்றமளிக்கிறான்.

ஆனால் அந்த கர்மஞானி உணராதது ஒன்று உண்டு. அறிந்தோ அறியாமலோ நேசையன் அந்த எல்லையை தாண்டிவிடுகிறான். அவனுக்கு சாத்தியமான தூரத்தைவிட இன்னொரு அடி எடுத்து வைத்துவிடுகிறான். அதே சமயம் தான் தாண்டியதை உணர்ந்தும்விடுகிறான். அதனால்தானோ என்னவோ அதுவரை இருந்த மேகமூட்டம் விலகிப்பிளந்து வானம் வெண்மை கொள்கிறது, காடே வெளிச்சமாகிறது, ஈர இலைகள் பளபளக்கின்றன, ஆற்றுநீரலைகளில் வெளிச்சம் அலையடிக்கிறது. மனம் எண்ணங்களில்லாமல் வெறுமையாக – அதுவும் அழுத்தாமல் இதமான காற்றாகவோ மென்மையான மணமாகவோ இருக்கிறது அவனுக்கு.

அப்படி லயம் கூடின சரக்கு சொட்டிச்சொட்டி அவனை அழைக்கிறது. ஒரு கணம் காலத்தை உறையவைத்து விடுகிறது. அவன் ஒவ்வொருமுறையும் தேடும் மாயப்பொன், தான் என்று காட்டியும் விடுகிறது. ஆம், மென்முடிகள் நிலவில் பொன் என ஒளிவிட, தீ மின்னும் கண்களுடன், அமர்ந்தநிலையிலேயே ஆளுயரத்தில், அவனருகே கடுத்தா எழுந்தருளிவிடுகிறார்.

பி.கு : இன்னொரு கடிதத்தில் வாசக அன்பர் ஒருவர் சொன்னதுபோல விண்வெளிக்கதை என்றாலும் அங்கும் யானையைக்கொண்டுவந்துவிடும் உமக்கு இதில் சொல்லவா வேண்டும். இங்கே யானை, வெறும் யானை மட்டுமல்ல. தாய்க்கிழவியும்கூடத்தான். நேசையனைத்தொட்டு மோப்பம் பிடித்து அவன்மீது நல்லெண்ணம் கொண்டவள். சொல்லப்போனால் அவன் தகப்பன்மாதிரி மாட்டிக்கொள்ளாமல் அவனுக்குக் காவலாய் விளங்கும் எசக்கிகூடத்தான், இல்லையா ?

அன்புடன்

பொன்.முத்துக்குமார்

***

பிடி [சிறுகதை]

அன்புள்ள ஜெ

பிடி அற்புதமான கதை. புதுவை அரிகிருஷ்ணன் சொல்வார். வைணவ பக்தி மரபில் இரு விதமான பிடிகள் உண்டு. ஒன்று குரங்கின் பிடி. பக்தன் குட்டி குரங்கு அம்மாவை பிடித்து கொள்வது போல பகவானை பிடித்துக்கொள்ள வேண்டும். அங்கே பகவானின் வேலை எதுவும் இல்லை. மற்றொரு பிடி புலிப் பிடி. பகவான் பக்தனை தேடி வந்து, புலி அதன் குட்டியை கௌவிப் பிடிப்பது போல பிடித்துக் கொள்ளும் நிலை. அங்கே பக்தன் செய்ய ஏதும் இல்லை .

இங்கே ராமய்யா வசம் வெளிப்படுவது புலிப்பிடி. பானுமதி முதல் குளம் வரை ஊர் மொத்தத்தையும் தனது புலிப்பிடியுள் இருத்திவைக்கிறார். ராமன் போன்ற இயல்பால்.  மற்றொரு இனிய கதை

கடலூர் சீனு

ஜெ,

வனவாசம் கதையிலிருந்துதான் “காருக்குறிச்சியை” கேட்க ஆரம்பித்தேன். மருதமலை பாடலை பாடியவர் மதுரை சோமு என்றும் அவர் அதை விட அற்புதமான பாடல்களை பாடியுள்ளார் என்றும் அதிலிருந்தே தெரிந்தது . அன்று முதல் சும்மா கேட்டு பாக்கலாம் என்று இந்த இருவரையும் கேட்க ஆரம்பித்தேன் மதுரை  சோமுதான்  அதிகம் கேட்கிறேன்.

இவர்களின் இசை எல்லா பிரபல மியூசிக் ஆப்பிலும் இருக்கிறது. நான்  முன் சிலமுறை  கர்னாடிக் இசையை கேட்க முயற்சிசெய்து  ஐந்து நிமிடங்கள் மேல் சென்றதில்லை  என்னடா பாடறீங்க? வண்ணத்திரை படிப்பவருக்கு இலக்கியம் எப்படி இருக்குமோ அப்படி.

சென்ற இரண்டு நாட்களாக “கலைநிறை  கணபதி” பலமுறை கேட்டுக்கொண்டிருக்கிறேன் ஏனோ பிடித்துவிட்டது அவரின் குறளும்  அற்புதமான வயலின் இசையும்.

சரி கர்னாடிக் இசையின் அடிப்படைகளை தெரிந்துகொண்டால் நல்லா ரசிக்கலாம் என்று தோன்றியது. நீங்கள் உங்கள் “நவீன இலக்கியம் ஓர் அறிமுகம்” என்ற புத்தகத்தில் எப்படி உங்கள் நண்பர்களுடன் சேர்ந்து ஒரு கர்னாடிக் இசை கலைஞனை  கேலி  செய்து பின்  இசையின் அடிப்படைகளை தெரிந்துகொண்டு இசையை ரசிக்க ஆரம்பித்தீர்கள் என்று இலக்கியம் வாசிப்பதற்கு ஒரு உதாரணமாக  கூறியிருப்பீர்கள். நானும் கிண்டலில் தேடி பிடுத்து “கர்னாடிக் சங்கீதம் ஒரு எளிய அறிமுகம்”  படிக்கச் முயற்சி செய்தேன் முடியவில்லை. அகராதிக்கு அகராதி வேணும் என்பது போல இருந்தது. ஆசிரியரை குறைகூற முடியாது நான் இதில் ஸிரோ.

பிடி படித்த பின் மதுரை சோமுவின் மற்ற பாடல்களை கேட்க ஆரம்பிதேன் “தாயே யசோதை”, “எந்த கவிபாடினாலும்”, “மதுரை அரசாளும்”, “நகுமோமு” . இரவு ஒரு மணி கடந்தும் கேட்டு கொண்டிருந்தேன்.  கதையில் வரும் கிழவர் சொல்வது போல அவரின் குரல் கர கர வென்றுதான் இருக்கிறது. சில சமயங்களில் மூச்சு இழுத்து இழுத்து விடுவது ஆஸ்துமா போல இருக்கிறது. ஆனால் அவரின் குரலில் ஒரு மயக்கம் ஏற்படுகிறது அப்பறம் அந்த வயலின் அவர் ஒரு பக்கம் கொல்லறார். “சபாஷ்” “சபாஷ்” என்று அவர் சொல்வது கூட அழகாக இருக்கிறது. கிரிக்கெட் பிரியர் கூட என்று நினைக்கிறன்.

இப்போது எனக்கு ஒரு வேண்டுகோள் கர்னாடிக்  இசையை ரசிப்பதற்கு   சில அடிப்படைகளை சொன்னீர்கள் என்றால் உதவியாக இருக்கும்.

விஷ்ணுகுமார்.

***

முந்தைய கட்டுரைஆழி,முதல் ஆறு- கடிதங்கள்
அடுத்த கட்டுரைநற்றுணை -கடிதங்கள்