‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–46

பகுதி நான்கு : அலைமீள்கை – 29

நான் துவாரகையின் தெருக்களினூடாக எனது புரவியை வெறிகொண்ட விரைவில் செலுத்தி அரண்மனையை சென்றடைந்தேன். நகரம் கலைந்த பூச்சித்திரள்போல் ஆகியிருந்தது. குறுக்கும் நெடுக்கும் பொருளற்ற விசையுடன் மக்கள் ஓடினர். என் புரவிக்கு முன்னால் பலர் பாய்ந்து விழுந்தார்கள். எங்கும் பதற்றமும் அழுகையொலியும் வசைகளும் கூச்சல்களும் நிறைந்திருந்தன. ஒவ்வொருவரும் முந்தையநாள் வரை அவர்கள் கொண்டிருந்த நம்பிக்கைகளையும் மகிழ்ச்சியையும் முற்றாக இழந்து, தீ பற்றி எரியும் கிளையில் இருக்கும் எறும்புகளைப்போல் ஆகிவிட்டிருந்தனர்.

அவர்கள் அனைவருக்கும் அவ்வண்ணம் ஒன்று நிகழும் என்று தெரிந்திருந்ததுபோல. எவ்வண்ணமோ அது நிகழும் என்று எதிர்பார்த்ததுபோல. தெய்வங்கள் அவர்களுக்கு முன்னுணர்த்தியிருக்கும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தெய்வங்கள். உழவர்களுக்கு மேழியிலும் ஆயர்களுக்கு வளைகோலிலும் சிற்பிகளுக்கு உளியிலும் எழும் தெய்வங்கள். பாணர்களுக்கு நாவில் பூசகர்களுக்கு நீரில் அவை எழுந்திருக்கும். அவை உரைத்திருக்கும். அதை அறியாத ஒருவர்கூட இந்நகரில் இன்று இருக்க வாய்ப்பில்லை.

நான் முதலில் மூத்தவர் ஃபானுவை சென்று பார்க்கத்தான் விரும்பினேன். பின்னர் தோன்றியது, அதற்கு முன் பிரத்யும்னனைச் சென்று பார்க்கலாம் என்று. அங்கே என்ன நிகழ்ந்தது என்று உணரக்கூடவில்லை. நான் அங்கே இருந்தாகவேண்டும் என்று மட்டும் தோன்றியது. நான் தொடங்கிவைத்த ஒன்று என்ற குற்றவுணர்வு உருவாகவில்லை. அந்தச் சுழலில் இருந்து தப்புவது எப்படி என்று மட்டுமே உள்ளம் தவித்தது. எங்கே சுழிமையம் உள்ளதோ அங்குதான் நான் இருக்கவேண்டும். உண்மையில் என்ன நிகழ்கிறது என்பது அங்கு சென்றால் மட்டுமே தெரியவரும்.

நடுவே கணிகரை பார்க்கவேண்டும் என்ற எண்ணம் என்னுள் ஓடியது. ஆனால் என்ன நடந்தது என்று பார்த்துவிட்டு கணிகரை பார்க்கச் செல்வதே முறையானது என்றும் தோன்றியது. அத்தருணத்தில் பிரத்யும்னனின் அரண்மனைக்குச் செல்வது உகந்ததா என்ற ஐயமும் அலைக்கழித்தது. ஒருவேளை அந்நிகழ்வுகள் அனைத்தும் மூத்தவர் ஃபானுவுக்கு எதிரான கிளர்ச்சியாக இருக்குமெனில் அங்கு நான் செல்வதே என்னை பணயப் பொருளாக அளிப்பது. அல்லது அவர்களை இளிவரல் செய்ய நேரில் செல்வதுபோல. ஆனால் அவ்வண்ணம் செல்லவேண்டும் என்ற எண்ணத்தை என்னால் தவிர்க்க முடியவில்லை.

என் ஆழத்தில் இருக்கும் ஒன்று அதில் எனக்கிருக்கும் பங்கையே சுட்டிக்காட்டிக்கொண்டிருந்தது. நான் பிழையுணர்ச்சி அடையவில்லை, நான் அடைந்தது தன்மைய உணர்ச்சி. என் கையிலிருந்து இறங்கி நெருப்பு எழுந்து தொலைவில் பேருருவென நின்றிருப்பதை பார்த்துக்கொண்டிருந்தேன். அது என்னையும் முற்றாக அழிக்கும் என்று ஒரு உள்ளுணர்வு அப்போது முற்றாக சொல்லத்தொடங்கிவிட்டிருந்தது. ஆயினும் அதை அப்போது பார்க்க விழைந்தேன். தன்னுள் இருந்து எழுந்த ஒன்றை மானுடர்கள் எப்போதும் திரும்பிப் பார்க்கிறார்கள். மலமோ சீழோவாக இருப்பினும்கூட.

நான் பிரத்யும்னனின் அரண்மனை முன் இறங்கி மேலே சென்றேன். எதிரே வந்த பிரத்யும்னனின் இளைய மைந்தன் சுஜனனிடன் “நான் அரசரை பார்க்க வேண்டும்” என்றேன். “அரசரைப் பார்க்க இப்போது பொழுதில்லை. ஒவ்வொருவரும் பிரிந்து வெவ்வேறு அறைகளில் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கிறார்கள்“ என்றான். “என்ன நிகழ்ந்தது?” என்று கேட்டேன். “என்ன நிகழ்ந்தது என்று சொல்லும் அளவுக்கு எனக்கு ஒன்றும் தெரியாது. ஒவ்வொருவரும் ஒன்று சொல்கிறார்கள். ஆனால் குருதி விழுந்துவிட்டது. துவாரகையில் இளைய யாதவரின் மைந்தர் ஒருவர் கொல்லப்படுவார், அக்குருதியிலிருந்து இந்நகர் அழியும் தருணம் தொடங்கும் என்று சூதர்சொல் இருந்தது, அது நிகழ்ந்துவிட்டது” என்றான்.

நான் “இந்தத் தருணத்தில் நிமித்திகர் கூற்றுகளையும் சோர்வுறுத்தும் எண்ணங்களையும் மிகைப்படுத்திக்கொள்ள வேண்டியதில்லை. நாம் செய்வதற்கு பலது உண்டு. இப்போது என்ன நிகழ்ந்தது என்று நான் அறியவேண்டும். என் மூத்தவரின் பொருட்டு. மிகச் சரியாக என்ன நிகழ்ந்தது என்று மூத்தவரிடம் நான் சொல்லவேண்டியிருக்கிறது” என்றேன். “தந்தை ஓடி தன் தனியறைக்குள் சென்றுவிட்டார். அவருடன் இளையவர்கள் நால்வர் சென்றிருக்கின்றனர். எஞ்சிய மூவரும் வேறு ஒரு அறைக்குள் சென்றுவிட்டனர். அவர்களை மூத்தவரின் படைகள் சூழ்ந்துள்ளன. அவர்கள் சிறைப்படுத்தப்பட்டிருக்கிறார்கள் என்று தோன்றுகிறது” என்றான்.

“நான் அரசரை பார்த்தாகவேண்டும்” என்றேன். “அரசரின் தனியறைக்குள் இப்போது எவருக்கும் நுழைவுஒப்புதல் இல்லை. அவர்கள் பேசி முடிப்பது வரை நீங்கள் காத்திருந்துதான் ஆகவேண்டும்” என்றான். நான் ஒருகணத்திற்குப் பின் “இந்நிகழ்வின்போது உடனிருந்த மைந்தர்கள் எவரேனும் இருக்கிறார்களா?” என்றேன். “எனது மூத்தவர் சுகர்ணன் அக்கணத்தில் அறைக்குள் இருந்தார்” என்று அவன் சொன்னான். “எனில் அவனை நான் சந்திக்கவேண்டும். அங்கு நிகழ்ந்ததென்ன என்று எனக்கு அவன் சொல்லவேண்டும்” என்றேன். ஒருகண தயக்கத்திற்குப் பின் “வருக!” என்று அவன் என்னை அழைத்துச்சென்றான்.

சுகர்ணன் ஓர் அறையில் இருக்க அவனைச் சூழ்ந்து உடன்பிறந்தாரும் சிற்றமைச்சர்களும் ஏவலர்களும் முட்டி மோதி ஒருவரோடொருவர் பேசி கூச்சலிட்டுக்கொண்டிருந்தனர். சுஜனன் என்னை வெளியே நிறுத்திவிட்டுச் சென்று அவனிடம் பேசிவிட்டு வந்து “அவர் பதறிக்கொண்டிருக்கிறார். அவரால் சொல்லெடுக்க இயலுமென்று தோன்றவில்லை. தாங்கள் மெல்ல பேசவைத்து அவரிடம் எதை வேண்டுமானாலும் தெரிந்துகொள்ளலாம்” என்றான். “அதை நான் பார்த்துக்கொள்கிறேன்” என்றேன். “ஆனால் பிறர் உடன் இருக்கலாகாது. தாங்கள் மட்டும் இருங்கள்” என்றான் சுஜனன்.

அவன் உள்ளே சென்று மூத்தவர் ஃபானுவின் தூதன் என என்னை அறிவித்து பிறரை விலக்கிவிட்டு என்னை உள்ளே அழைத்துச் சென்றான். அவனே கதவை சாத்திவிட்டு வந்து சற்று அப்பால் அமர்ந்துகொண்டான். நான் சுகர்ணனின் கைகளை பற்றிக்கொண்டு “அஞ்சவேண்டியதில்லை. நிகழ்ந்தது ஒரு கொடுநிகழ்வென்று அறிவேன். நாம் அதை எந்த வகையில் எதிர்கொள்ளமுடியும் என்றும் எனக்குத் தெரியவில்லை. எனில் நன்றென ஒன்றுள்ளது. மூத்தவர் கையால் இளையவர் கொல்லப்பட்டிருக்கிறார். ஒருவகையில் அது உகந்தது. எவ்வண்ணமாயினும் மூத்தவருக்கு அவ்வுரிமை உண்டு. அதை துவாரகையின் பிற அரசமைந்தர்கள் ஏற்றுக்கொள்வார்கள். பாரதவர்ஷத்தின் ஷத்ரியர்களும் அதை ஏற்றுக்கொள்வார்கள்” என்றேன்.

“பிறிதொன்று நடந்து பிற அரசியரின் மைந்தர் எவராலோ சுதேஷ்ணன் கொல்லப்பட்டிருந்தால் இப்போது நிகழ்ந்துகொண்டிருப்பது என்ன என்று எண்ணிப்பார். இது ஒரு வகையில் மிக எளிதாக முடியும். முதற்கண பரபரப்புக்குப் பின் ஒவ்வொருவரும் இதை உணர்வார்கள். இதை நம்மால் கடந்து செல்ல இயலும்” என்றேன். என் சொற்கள் அவனுக்கு நம்பிக்கையளித்தன. என் கைகளை பற்றிக்கொண்டு “கடந்து செல்ல முடியுமல்லவா?” என்றான். நான் எண்ணியது சரிதான், இறந்தவருக்காக அல்ல இப்போது நிகழ்ந்துகொண்டிருக்கும் அந்த இடருக்காகவே இவர்கள் கவலைப்படுகிறார்கள். “உறுதியாக கடந்து செல்ல முடியும். அதற்கான அரசியல் சூழ்ச்சிகள் உள்ளன. என்ன நிகழ்ந்ததென்று மட்டும் கூறு” என்றேன்.

தந்தையே, அங்கே அரசர் ஃபானுவின் அவையிலிருந்து வரும் வழியிலேயே இளைய தந்தை சுதேஷ்ணனிடம் தந்தை பிரத்யும்னன் பூசலிட்டுக்கொண்டு வந்தார். அவர்கள் எதன் பொருட்டு பூசலிடுகிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை. அவர்கள் தனியறைக்குச் சென்று அமர்ந்துகொண்டனர். ஒருவருக்கொருவர் உரத்த குரலில் பேசிக்கொண்டிருந்தனர். நான் அறைக்கு வெளியே நின்றிருந்தேன். சற்று நேரத்தில் தந்தை என்னை உள்ளே அழைத்தார். “நீ சென்று நமது கருவூலத்திலிருந்து வெளியே சென்ற பொருட்களின் தொகை குறிப்பை எடுத்துக்கொண்டு வா” என்றார்.

நான் விரைந்து கீழே சென்று கருவூலப் பொறுப்பாளரிடம் சுதேஷ்ணன் வழியாக வெளியே சென்ற பொருட்களுக்கான தொகைக்குறிப்பை கேட்டேன். “வெளியேவா?” என்று குழம்பியபின் அவர் புரிந்துகொண்டு ”இதோ” என்று எடுத்துத் தந்தார். நான் அந்தத் தோற்சுருளை எடுத்துச் சென்று அறைக்குள் நுழைந்தபோது அவர்கள் இருவரும் மேலும் உரக்க பூசலிட்டுக்கொண்டிருந்தனர். தந்தை அதை வாங்கி பார்த்தார். “இத்தனை பொருட்கள் எப்படி சென்றன?” என்றார். சுதேஷ்ணன் “அவை தேவைப்பட்டன” என்றார். அவர் சீற்றத்தை அடக்கிக்கொண்டிருந்தார். சொல்லிலும் செயலிலும் பொருட்டின்மையை வெளியிட்டார். “அரசுசூழ்தலில் சில தருணங்களில் அவ்வாறு தேவைப்படும்” என்றார்.

பிரத்யும்னன் “நான் அறியாது என் இளையோன் அங்கு ஏன் சென்றான் என்பதற்கான விடை இதில் உள்ளது. ருக்மியிடம் அளிக்கும்படி நான் ஆணையிட்டது ஒரு படையைத் திரட்டும் செல்வம் மட்டும்தான். நீ இந்நகரின் கருவூலத்தில் பெரும்பகுதியை விதர்ப்பத்திற்கு அனுப்பியிருக்கிறாய்” என்றார். சுதேஷ்ணன் “தங்கள் ஒப்புடன்தான் அனுப்பப்பட்டுள்ளது. அனைத்து ஓலைகளிலும் உங்கள் கைச்சாத்து உள்ளது” என்றார். “அது என் உளம் ஏற்ற கைச்சாத்தல்ல. உன்னை நம்பி இட்டது” என்று பிரத்யும்னன் சொன்னார். “நீங்கள் நம்பி இட்டிருக்கலாம். ஆனால் அது தேவைப்பட்டது” என்றார் சுதேஷ்ணன்.

“எதன் பொருட்டு தேவைப்பட்டது? நான் அறியாது என் செல்வம் எப்படி ருக்மியிடம் சென்றது?” என்று பிரத்யும்னன் கூவினார். ”அவர் உங்கள் தாய்மாமன். உங்கள் பொருட்டு படைகொண்டு வந்தவர்” என்றார் சுதேஷ்ணன். “ஆம், என் பொருட்டு படைகொண்டு வந்தார். ஆனால் எனது முழுக் கருவூலம் அவர் கையில் இருக்கும்போது நான் அவருக்கு அடிமையல்லவா?” என்று பிரத்யும்னன் கூறினார். “அவர் கோரினார்” என்று சுதேஷ்ணன் உதட்டைச் சுழித்தபடி சொன்னார். “இத்தனை செல்வம் அவருக்குத் தேவை என்று சொன்னாரா?” என்றார் பிரத்யும்னன். “ஆம், கோரினார்” என்றார் சுதேஷ்ணன்.

“எனில் அவரிடம் கேட்கிறேன். இத்தருணத்தில் உடனே ஒரு ஓலைச்செய்தி அவருக்கு செல்லட்டும். அவர் கூறட்டும் இத்தனை செல்வம் எப்போது வந்தது, எங்கிருக்கிறது என்று” என்றபடி திரும்பிய பிரத்யும்னன் “அதுவரை நீ சிறை இரு. என் ஆணை வந்த பிறகு நீ விடுதலை அடைந்தால் போதும்” என்றார். சீற்றத்துடன் சுதேஷ்ணன் “என்னை சிறையிடுகிறீர்களா?” என்றார். “ஆம், நான் அறிவேன் நீ அச்செல்வத்தை வேறெங்கோ வைத்திருக்கிறாய். இங்கு இந்நகருக்குள் எங்கோ. முழுச் செல்வமும் ஒருபோதும் உன் கையிலிருந்து விதர்ப்பம் போன்ற பிறிதொரு நாட்டுக்கு செல்லாது. தேவையான சிறுபொருளை அவருக்கு அளிக்கும்பொருட்டு நான் உன்னை ஒப்புவித்ததை பயன்படுத்திக்கொண்டு என் தந்தை என் பொருட்டு சேர்த்து வைத்த முழுச் செல்வத்தையும் நீயே கையில் வைத்திருக்கிறாய்” என்றார் பிரத்யும்னன்.

ஒருகணம் கூர்ந்து நோக்கி அமர்ந்திருந்தபின் சுதேஷ்ணன் எழுந்து “ஆம்” என்றார். பிரத்யும்னன் “இழிமகனே” என்றபடி கையை ஓங்கிக்கொண்டு அடிக்கச் சென்றார். சுதேஷ்ணன் அசையாமல் நின்றார். “ஆம், மிகத் தெளிவாக ஒன்று சொல்லிக்கொள்கிறேன். தங்கள் செல்வத்தின் பெரும்பகுதி என் கையில்தான் இருக்கிறது. பெரும்பகுதி என்ன, தாங்கள் இன்று செல்வமே இல்லாத ஒருவர். ஆகவே நீங்கள் சென்று கீழ்மகனாகிய யாதவருடன் இணைந்துகொள்ளலாம், துவாரகையின் கருவூலத்தை கையில் வைத்திருக்கும் ஷத்ரியனாகிய நான் அதை செய்யவேண்டியதில்லை” என்றார்.

“என்ன சொல்கிறாய்?” என்று பிரத்யும்னன் கடுஞ்சினத்துடன் கைகளைச் சுருட்டியபடி உடல்பதற கேட்டார். “நீங்கள் ஷத்ரியக்குருதிக்குத் தலைமை தாங்கி இந்நகரை முன்னெடுத்துக்கொள்வதற்கான தகுதியை இழந்துவிட்டீர்கள். ஒரு யாதவக் கிழவர் வந்து தோள் தழுவி அழைத்தால் சென்று விழிநீர் பெருக்கும் கோழைக்கு ஷத்ரியர்களை தலைமை தாங்கி துவாரகையை வென்றெடுக்கும் தகுதியும் வாய்பும் இல்லை. இங்குள்ள ஷத்ரியர் அனைவருக்கும் இன்று இது தெரியும். இத்தனை பெரிய பேரரசு இத்தனை பெரிய நகரம் நம் கைக்கு கனிந்த பழமென வந்து விழுவதற்கான ஒரு தருணத்தை நீங்கள் உங்கள் கோழைத்தனத்தால் இழந்துகொண்டிருக்கிறீர்கள்.”

“உங்கள் தகுதியை நான் நன்கறிவேன். எனென்றால் உங்களுக்கு அணுக்கமானவனாக இருந்தேன். ஆகவேதான் இப்பொறுப்பை நான் முன்னர் எடுத்தேன்” என்றபோது சுதேஷ்ணன் உரக்க உறுமினார். “இவ்வண்ணம்தான் உங்கள் உள்ளம் செயல்படமுடியும் என்று எனக்கு முன்னரே தெரிந்திருந்தது. ஏனெனில் இங்குள்ள ஷத்ரியர் உங்களை முழுமையாக ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என அறிந்திருந்தீர்கள். யாதவர்களிடம் இணைந்துசென்று முடியுரிமைக்கு மாற்றாக ஏதேனும் சிறுநலன்களைப் பெற்று அமையவே நீங்கள் உளம்கொள்வீர்கள். நீங்கள் ஷத்ரியர்களின் அரசர் அல்ல. உங்கள் மைந்தர் அசுரக்குருதி கொண்டவர். அவர் மைந்தரோ தூய அசுரக்குருதியினர். அசுரர்களுக்கு நகரை தேடிக்கொடுப்பதற்காக ஷத்ரியர்கள் இங்கு குருதிசிந்த வேண்டியதில்லை.”

“எனவே இந்தத் தேரின் கடிவாளத்தை நானே எடுத்துக்கொள்வதென்று முன்னரே முடிவு செய்திருந்தேன். ஆகவேதான் செல்வத்தை என் கையில் வைத்திருக்கிறேன்” என்றார் சுதேஷ்ணன். “காவலர்களே!” என்று கூவியபடி பிரத்யும்னன் கதவை தட்டினார். கதவைத் திறந்து காவலன் வந்து நின்றான். பிரத்யும்னன் “படைத்தலைவர்களை அழையுங்கள். இக்கீழ்மகனை இப்போதே சிறையிடுங்கள்” என்றார். அந்த ஏவலன் வெற்றுவிழிகளுடன் அசையாமல் நின்றான். சுதேஷ்ணன் ஏளனம் தெரியும் நடையுடன் திரும்பிச் சென்று பீடத்தில் அமர்ந்தபடி ”தங்களைச் சூழ்ந்திருக்கும் எந்த ஏவலனும் தங்கள் ஆணையை என் ஒப்புதலின்றி கைக்கொள்ளப் போவதில்லை. ஏனெனில் தங்களைச் சுற்றி இவர்களை அமைத்தது நான்” என்றார்.

ஏளனம் சிரிப்பாக விரிய “முழுமையாக தாங்கள் என்னுடைய ஆணையில் இருக்கிறீர்கள். இன்னும் ஓரிரு நாட்களில் துவாரகை முழுக்க என் ஆணையில் இருக்கும். எனது சொல் இங்கிருந்து சென்று ஷத்ரியப் படைநிரைகளை அடைவது வரை மட்டுமே நீங்கள் ஒரு அரசமைந்தர் என்று அறியப்படுகிறீர்கள். அதற்குப் பிறகு ஒரு ஷத்ரியக் குடிமகனாக மட்டுமே. குருதிக்கலப்பு கொண்ட ஷத்ரியனாக, ஒரு படி கீழோனாக” என்றார். “மூத்தோருக்கெதிராக வாளெடுக்கிறாய் அல்லவா?” என்று பிரத்யும்னன் கேட்டார். “மூத்தவர் தன் கடமையை செய்யவில்லை. தான் இருக்கும் இடமென்ன என்று உணரவில்லை. காலம் தன் மேல் அளிக்கும் பொறுப்பை ஏற்கவுமில்லை. ஷத்ரியர்களின் பொருட்டு நான் இதை செய்தாகவேண்டும்” என்றார் சுதேஷ்ணன்.

பிரத்யும்னன் தன்னை கோத்துக்கொண்டு, உடலசைவுகள் ஒழுங்கமைய நடந்து சென்று தன் இருக்கையில் அமர்ந்து மீசையை வருடியபடி “சரி, இப்போது எல்லாம் தெளிவடைந்துவிட்டது. இனி ஒளித்தல்கள் தேவையில்லை. நான் கேட்கும் இன்னொரு வினாவுக்கு விடை சொல். உன் இளையோன் எதற்காக ருக்மியை பார்க்கச் சென்றான்?” என்றார். “துவாரகையின் முழு ஷத்ரியர்களும் உங்கள் தலைமையில் கிளர்ந்து எழவிருக்கிறார்கள், நீங்கள் என்னை பொறுப்பேற்கச் செய்திருக்கிறீர்கள், ஆகவே ருக்மியும் அவந்தியும் என்னுடன் நின்றிருக்கவேண்டும் என்று சொல்லத்தான் அவனை அனுப்பினேன். இன்னும் இரு நாட்களில் ஷத்ரியர்கள் கிளர்ந்தெழுந்து துவாரகை நகரை முழுக்க கைப்பற்றுவார்கள். அப்போது ருக்மி கிளம்பி வரவேண்டும் என ஆணையிட்டேன்.”

“அச்செய்தியை அவர் ஏற்றுக்கொண்டாரா?” என்றார். “இல்லை, ஏற்றுக்கொள்ளவில்லை. அவர் மேலும் ஒரு உறுதியை நாடுகிறார். அதன் பொருட்டு நீங்களே உங்கள் ஓலையுடன் இன்னொருவரை அனுப்பவேண்டும் என்று கோரினார். அவருக்கு விதர்ப்பத்தையும் அவந்தி உட்பட பிற நாடுகளுக்கான பொன்னையும் நான் அளித்தால் அவர் என்னுடன் நிற்பார். அவர் இப்போது உங்கள் இடமென்ன என்பதை அறிய விரும்புகிறார். உங்களுக்கு எதிராக நான் எழக்கூடும் என்பதை அவர் உள்ளம் இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை. அதற்குத் தகுதியானவரை நான் அனுப்பவிருக்கிறேன்” என்றார் சுதேஷ்ணன்.

நான் சுகர்ணனின் கையை பற்றிக்கொண்டு “எவர் பெயரை சொன்னார் சுதேஷ்ணன்?” என்று கேட்டேன். “அவர் கணிகர் பெயரை சொன்னார்” என்று சுகர்ணன் சொன்னான். “கணிகர் சுதேஷ்ணனுக்கு அவ்வண்ணம் சொல்லளித்திருக்கிறாரா?” என்றேன். “தந்தையே, கணிகரும் சுதேஷ்ணனும் மிக அணுக்கமானவர்கள். ஒவ்வொரு நாளும் முன்னிரவில் கணிகரை சென்று பார்த்து சொல்லுசாவி வருவது சுதேஷ்ணனின் வழக்கம்.” என் கைகள் படபடக்கத் தொடங்கின. என்னால் அங்கு அமர்ந்திருக்க முடியவில்லை. நான் எழுந்து மீண்டும் அமர்ந்துகொண்டேன். “சொல்க!” என்றேன். “என்ன நடந்ததென்று சொல்க!”

சுதேஷ்ணன் “இத்தூது இன்னும் ஓரிரு நாட்களில் முடியும். ருக்மி என்னை ஆதரிப்பார். அப்போது என் படைகள் எழும். அதுவரை சிறையிருக்கப்போவது நீங்கள், நானல்ல” என்றார். ”நன்று, எனில் அதை செய்” என்றார் பிரத்யும்னன். பின்னர் “இளையவர்களில் எவரெவர் உன்னுடன் இருக்கிறார்கள்?” என்றார். “அதை நான் இப்போது கூற இயலாது. ஆனால் ஒன்று உணர்க, இளையவர்களில் மூவர் என்னுடன் இருக்கிறார்கள். உங்களுடன் இருக்கும் இருவருக்கும் நான் கிளர்ந்தெழுந்திருப்பது தெரியாது. அவர்கள் உங்களுடனும் இல்லை, என்னுடனும் இல்லை. நான் கோன்மை கொண்டால் மூத்தவரென என்னை அவர்கள் ஏற்றுக்கொள்வார்கள்.”

சுதேஷ்ணன் வஞ்சமாகச் சிரித்து “நான் உங்களை கொல்வதையோ சிறையிடுவதையோ அவர்கள் ஏற்றுக்கொள்வார்களா என்பது வேறு. ஆனால் நீங்கள் இயற்கையாக இறப்பீர்கள் என்றால் இயற்கையாகவே நானும் கோன்மை கொள்வேன். மூத்தவரென என் சொல்லை அவர்கள் ஏற்றுக்கொள்வார்கள்” என்றார். “எனில் என்னை இயற்கையாக உயிர்துறக்கச் செய்யப்போகிறாய் அல்லவா?” என்றார். “ஆம்” என்றபின் “உடைவாள் கையில் இல்லாத தருணத்தில் உங்களிடம் இதை கூற நேர்ந்ததுகூட இறையருள் என்றே கருதுகிறேன். துவாரகைக்கு மேல் ஷத்ரியர்களின் கொடி பறப்பதற்கான அனைத்து வாய்ப்புகளையும், தெய்வங்கள் அனுப்புகின்றன” என்று சுதேஷ்ணன் சொன்னார்.

சுதேஷ்ணன் காவலனை நோக்கி “நமது படைவீரர்களை உள்ளே வரச்சொல்” என்றார். படைவீரர்கள் வந்து வெளியே நின்றிருப்பதை அப்போதுதான் நான் உணர்ந்தேன். எதன்பொருட்டு எப்போதும் தந்தையின் பக்கவாட்டு அறைகளிலும் கீழறையிலும் இத்தனை படைவீரர்களை நிறுத்தி வைத்திருக்கிறார்கள் என்பதை நான் முன்னரே ஐயத்துடன் எண்ணியிருக்கிறேன். அதைப்பற்றி ஒரு முறை சுதேஷ்ணனிடம் கேட்டபோது ஃபானுவோ சாம்பனோ சற்றே மிகையாக துணியக்கூடும் என்ற ஐயம் தனக்கிருப்பதாக அவர் கூறினார். ஆனால் ஒரு அரண்மனைக்குள் அத்தனை பேரையும் ஒருகணத்தில் கட்டுப்பாட்டில் கொண்டுவரும் பெரும்படைப்பிரிவு ஒன்று இருப்பது விந்தையானதென்றே தோன்றியது.

கீழிருந்து இரண்டு மரப்படிகளினூடாக படைவீரர்கள் ஏறி வரும் ஓசை எழுந்தது. சிரித்தபடி “நன்று, இதை நான் எதிர்பார்க்கவில்லை. ஆனால் இவ்வண்ணம் நிகழ்ந்தது ஒருவகையில் நன்று. அனைத்தும் முடிவுக்கு வந்துவிட்டதல்லவா?” என்று பிரத்யும்னன் கூறினார். பின் நிகழ்ந்ததை என்னால் சரியாக சொல்ல முடியாது. ஒருகணம், அதிலும் குறைவான ஒரு கணம். சிட்டுக்குருவி அல்லது அரசநாகம் போன்றவற்றுக்கு மட்டுமே அந்த விரைவிருக்கிறது. பிரத்யும்னன் தன் பீடத்தின் பின்னாலிருந்து உடைவாளொன்றை எடுத்து உருவி அதே விசையில் செலுத்தி சுதேஷ்ணனின் தலையை வெட்டினார். என்ன நிகழ்ந்ததென்று தெரிவதற்குள் சுதேஷ்ணனின் தலை துண்டாகி கீழே விழுந்தது.

“மைந்தா, இவ்வறையின் கதவுகளை மூடுக!” என்று அவர் கூவினார். “மூடுக, அனைத்து கதவுகளையும்!” என்றார். நான் ஓடிச்சென்று கதவுகளை மூடினேன். மூன்றாவது கதவை மூடுவதற்குள் இரண்டு படைவீரர்கள் உந்தி என்னைத் தள்ளி உள்ளே வந்தனர். அவர்களை பிரத்யும்னன் வெட்டி வீழ்த்தினார். நாகமென நெளிந்து அவர்களின் கழுத்து நரம்புகளை வெட்டிச் சரித்தது அவருடைய வாள். காலால் அவர்களை உதைத்து வெளியே தள்ளி கதவுகளை மூடிய பின் “சாளரத்தினூடாக கீழிறங்கு. சென்று என் தம்பியரிடம் இந்த அரண்மனையை முழுப் பொறுப்பில் எடுத்துக்கொள்ளச் சொல்” என்றார். நான் சாளரத்தினூடாக தொற்றி இறங்கினேன். அனைத்துக் கதவுகளையும் படைவீரர்கள் முட்டிக்கொண்டிருக்கும் ஓசையை கேட்டேன்.

கீழிறங்கி வந்து என்னை எதிர்கொண்டு ஓடிவந்த சாருதேஹனிடம் என்ன நிகழ்கிறது என்று கூறினேன். “உந்தி என்னைத் தள்ளி தந்தையை சிறைப்பிடிக்க முயல்கிறார்கள். தந்தை சுதேஷ்ணனை கொன்றுவிட்டார்” என்றேன். சாருதேஹன் வெளியே ஓடி கையசைவாலேயே ஆணையிட்டார். வெளியே காவல்முரசுகள் முழங்கின. கொம்போசைகள் எழுந்தன. அரண்மனைக்கு வெளியே அனிருத்தனின் தலைமையில் பரவியிருந்த படை உடனே ஒருங்கிணைந்து அணிவகுத்து அனைத்து வாயில்களினூடாகவும் அரண்மனைக்குள் நுழைந்தது. தந்தையை பிடிப்பதற்காக முயன்று கொண்டிருந்த படைப்பிரிவை அவர்கள் சூழ்ந்துகொண்டார்கள். அனிருத்தன் முன்னரே தந்தையின் அறையைச் சூழ்ந்து சுதேஷ்ணனின் படை இருப்பதை கண்டிருந்தார். ஆகவே அரண்மனை முற்றத்திலேயே எட்டு பிரிவுகளாக தன் படையை நிறுத்தியிருந்தார்.

சுதேஷ்ணனின் படையினர் தந்தையின் அறையின் ஒரு கதவை உடைத்துத் திறந்து உள்ளே சென்றுகொண்டிருந்தனர். அவர்களை வாளால் தடுத்த தந்தையால் எழுவர் கொல்லப்பட்டனர். எஞ்சிய அனைவரையும் அங்கேயே பிடித்து இழுத்துக்கொண்டு சென்றார்கள். அவர்களை அரண்மனை முற்றத்தில் கழுவேற்றும்படி சாருதேஹன் கூறினார். ஆனால் அவர்களை அரண்மனைக்கு வெளியே எவரும் அறியாமல் கழுவேற்றும்படி அனிருத்தன் ஆணையிட்டார். அனைத்துப் படைவீரர்களும் சேர்ந்து அவர்களை கொண்டுசென்றனர். இப்பொழுதில் அவர்கள் பாலைவனத்தில் தலைகொய்யப்பட்டிருப்பார்கள்.

“சுதேஷ்ணனின் உடலை எந்த இறுதி நெறிகளும் பேணாது எரித்து அழிக்கும்படி தந்தை ஆணையிட்டார். அவ்வுடலை எட்டு துண்டுகளாக வெட்டினார்கள். ஒவ்வொன்றையும் துவாரகையின் வெவ்வேறு தெருக்களில் போடும்படி எடுத்துக்கொண்டு சென்றிருக்கிறார்கள். இவையனைத்தும் இங்கிருந்து பரவிவிட்டன. இவை நிகழ்ந்துகொண்டிருக்கும்போதே நகர் அறிந்துகொண்டிருக்கும்” என்று சுகர்ணன் சொன்னான். “ஆம், நகரம் அத்தனை விரைவாக அறிந்துகொள்ளும்” என்று நான் சொன்னேன்.

என் உடல் சோர்ந்து களைத்திருந்தது. “தந்தையே, என்ன நிகழும் இனி?” என்று அவன் என் கையை பற்றினான். “எதுவும் நிகழும். அவர்கள் முடிவெடுக்கட்டும்” என்றபின் “ஷத்ரிய மைந்தர்கள் அனைவரும் மூத்தவர் பிரத்யும்னனின் தலைமையில் ஒருங்கிணைவார்கள் எனில் இன்று அல்லது நாளையே நாம் இவ்விடரை வென்று கடக்க முடியும். சுதேஷ்ணனை புறந்தள்ளி பிற அனைவரையும் ஒருங்கிணைத்து பிரத்யும்னன் தன் கோன்மையை உறுதியாக நிலைநாட்டிக்கொள்ள முடியும். உள்ளிருந்த ஒரு சிறு மீறலும் இல்லாமலானது அவரை மேலும் வலிமைப்படுத்தக்கூடும்” என்றேன்.

“ஆனால் ஷத்ரியர்களில் சிலராவது சுதேஷ்ணனின் பொருட்டு கிளர்ந்தெழுவார்களெனில் அவருக்கு வேறு வழியில்லை. ஷத்ரிய மைந்தர் ஒருவருக்கொருவர் போரிட்டுக்கொள்ளத்தான் வேண்டும். எவராவது வென்றாகவேண்டும். வெல்லாதவர்கள் கொல்லப்பட்டாகவேண்டும்” என்றேன். “ஐயோ” என்று அவன் தன் தலையை பற்றிக்கொண்டான். “ஒன்றும் செய்வதற்கில்லை. இவ்வாறு நிகழ வேண்டுமென்றிருந்தால் இது நிகழும்” என்றபின் நான் வெளியே சென்றேன். “தாங்கள் தந்தையை சந்திக்கவில்லையா?” என்றான் சுகர்ணன். “இல்லை, அதற்கு முன் நான் என் மூத்தவரை சந்திக்கவேண்டும். அதற்குமுன்…” என்றபின் நான் கணிகரை நினைவுகூர்ந்தேன். உடனே கணிகரை சென்று பார்க்க வேண்டும் என்று தோன்றியது. சென்றதுமே வாளை உருவி மறுசொல்லின்றி அவர் தலையை துண்டித்துவிடவேண்டும் என்று எண்ணிக்கொண்டேன்.

முந்தைய கட்டுரைசின்னஞ்சிறு வெளி
அடுத்த கட்டுரைஆழி, கைமுக்கு- கடிதங்கள்