பிடி, கைமுக்கு -கடிதங்கள்

கைமுக்கு [சிறுகதை]

அன்புள்ள ஜெ,

கைமுக்கு படிக்கும் வரை ஔசேப்பச்சன் ஒரு கற்பனை கதாபாத்திரம் என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால் கைமுக்கு படிக்கும்போது அப்படி அல்ல என்று தோன்றியது. ஒரு போலீஸ்காரர் சொல்லக்கூடிய நுட்பங்கள் கதையில் நிறைந்திருக்கின்றன. நான் காவல்துறையிலே வேலைபார்த்தவன். கதையில் வருபவை சில எனக்கே தெரிந்தவை. சில விஷங்கள் ஆமாம், அப்டித்தானே என்று எனக்கே ஆச்சரியம் அளித்தவை

பொதுவாக கேஸ்விசாரணையிலே ஒரு விஷயம் உண்டு. ஒரு கேஸ் மேல் ஏன் அப்படி ஒரு ஆர்வம் வருகிறது என்று சொல்லவே முடியாது. நூறுகேஸ் பேப்பரில் சும்மாவே கிடக்கும். ஒரு கேஸ்மேல் சட்டென்று ஆர்வம் வந்து துருவித்துருவி செல்வோம். அதேபோல ஒரு கேஸில் ஆர்வம் வந்தால் அது பலகேஸ்களுக்கு கொண்டுபோகும். பொதுவாக போலீஸ் மேல் ஒரு குற்றச்சாட்டு உண்டு. போலீஸ் ஒருவர் மேல் பல வழக்குகளை போடுகிறது என்று. பிடிபட்டால் எல்லா கேஸ்களையும் மேலே போட்டுவிடுவார்கள் என்று. உண்மையில் அப்படி இல்லை. நான் என் அனுபவத்தில் ஒரே குற்றம் மட்டுமே செய்த ஒருவனை கண்டதே இல்லை

நான் இந்தக்கதையில் கண்ட பலவிஷயங்கள் சுவராசியமானவை. போலீஸ் திருடனாகவும் திருடன் போலீஸாகவும் வேஷம்போட்டுக்கொள்வது. எனக்குத்தெரிந்த ஒரு திருடன் போலீஸ் ஆபீஸர் என்று பொய் சொல்லி நடித்து 4 ஆண்டுகள் குடும்பமே நடத்தியிருக்கிறான். அதேபோல மகேஷ் அவன் செய்ததை விரிவாகச் சொல்வது. பொதுவாக கிரிமினல்கலில் புதியவர்கள் ஏன் அந்த தப்பைச் செய்தோம் என்று விரிவாக விளக்குவார்கள். மிகமிகப் புத்திசாலித்தனமகாவும் உணர்ச்சியுடனும் இருக்கும். சீனியர் குற்றவாளிகள் செய்வதில்லை. புதிய குற்றவாளிகளுக்கு அப்ப்டிச் சொல்லிச்சொல்லித்தான் கடந்துபோகவேண்டும். போலீஸிடம் மட்டுமில்லை மற்ற குற்றவாளிகளிடமும் சொல்வார்கள்.

ஒரு சின்ன விஷயம் மட்டும் சொல்கிறேன். போலீஸ்காரனுக்கு தெரியும். மகேசின் திருட்டுக்கு சிவராஜபிள்ளை எங்கேயோ காரணம். விதை அங்கேதான் இருக்கும். குடும்பச்சூழலில் இருக்கும். நான் அறிந்தவரை 30 வருச சர்வீஸில் ஒருமுறைகூட ஒரு குடும்பம்கூட கிரிமினலை விட்டுக்கொடுத்ததே இல்லை. அப்படி ஒரு விஷயம் தமிழ்நாட்டில் நடந்ததே இல்லை. சிலர் போலீஸுக்கு பயந்து ஒதுங்கி இருப்பார்கள். ஆனால் பணம் வாங்கிக்கொண்டும் இருப்பார்கள்

பொன்.குமார்

***

பெருமதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு,

நான் தங்களின் நீண்ட நாள் வாசகன். சமீபத்திய சிறுகதைகள் எங்களின் மனதை கொள்ளை கொண்டு வருகின்றன. பத்து லட்சம் காலடிகள், சூழ்திரு, சுற்றுகள் என்று ஓவொன்றும் மிக அருமை. இவ்வரிசையில் ஆக சிறந்ததாக எனக்கு படுவது கைமுக்கு. இதை ஒரு உளவியல் ரீதியான திரில்லர் என்றும் சொல்லலாம். உங்களின் உலோகம் போல. மறுவகையில் மனித மன விசித்திரங்களின் ஆழம் பற்றியது என்றும் சொல்லலாம்.

மிக அதிர்ந்தது சிவராஜ் பிள்ளையின் மாற்றம் மற்றும் மகேஷின் முதல் மனைவி. இருவருமே தெரிந்தே தங்களுக்கான நியாயங்களை உருவாக்கி கொள்கிறார்கள். மகேஷ் திருடனாவதற்கான சூழல் மிக மிக அற்புதம். நாம் நம் தலைமுறையை ஒரு மெஷின் life ஆக ஆக்கி கொண்டோமோ என்று தோன்றுகிறது. மிக சிறந்த வாசிப்பனுபவத்தை கொடுத்தமைக்காக  நன்றி.

Regards

ஸ்ரீதரன்

***

பிடி [சிறுகதை]

அன்புள்ள ஜெ

நலமாக இருக்கிறீர்கள் அல்லவா?

பிடி அழகான கதை. பிடி கதை முழுக்க வந்துகொண்டே இருக்கிறது. பாடும்போது ராமுவின் முன் ஒரு பயில்வான் இருக்கிறான். கண்ணுக்குத்தெரியாதவன் .அவனிடம்தான் அவர் போராடுகிறார் என்று சொல்கிறீர்கள். அதன்பின் மஸ்தானிடம் அவர் நிஜம்மாகவே போராடுகிறார். பிடி என்று சங்கீதத்தில் உள்ள பிடிகளைச் சொல்வார்கள். இந்தக்கதையில் குஸ்திக்கும் அதுதான் வார்த்தை

அவருடைய கதாபாத்திரம் அழகாக வந்திருக்கிறது. அவருடைய இன்னொசென்ஸ். அவருடைய தன்னம்பிக்கை. சின்னப்பிள்ளைகளுடன் அவர் குஸ்திபிடிக்கப்போகும் காட்சி அழகாக உள்ளது. நாகர்கோயில் பக்கம் பிராமண பாஷை நாகர்கோயில் நெடியுடன் இருக்கும். நெல்லைப்பக்கம் நெல்லை நெடியுடன் வருதேன் என்று பேசுவதுபோல. பாலக்காட்டுப்பக்கம் மலையாளம் ஒலிப்பதைப்போல. அந்த நாகர்கோயில் அய்யர் பாஷை ஓரளவு இருக்கிறது. ஆனால் இன்னும் பல சொற்கள் உண்டு. மலையாள நெடியோடு இருக்கும். ஆழ்ச்சை, உச்சை, என்று சொல்வார்கள்

ராஜகோபால்

***

அன்புள்ள ஜெ,

வணக்கம்.

இன்று தளத்தில் வெளியிட்ட பிடி எனும் சிறுகதை படிக்க துவங்கும் போதே பார்வதிபுரம் தான் நினைவுக்கு முதலில் வந்தது. சிறந்த சித்தரிப் போடு கதை நகர்கிறது. பாடகர் ராமையாவின் கர்நாடக இசை மட்டுமல்ல குஸ்த்தியும் சிறப்பான பதிவு. இரவு பத்து மணிக்கு பிறகு திருக்கோவில் முற்றத்தில் கதகளி ஆட்டம் துவங்கி முடியும்போது அடுத்த நாள் விடிந்து இருக்கும். இந்த நேரத்தில் எதுவும் முத்திரைகளைப் பற்றி சரியாக  தெரியாத சின்னஞ்சிறிய பருவத்தில் சற்று நேரம் பார்த்துவிட்டு தன்னை தெரியாமலே தூங்கி விடுவது உண்டு .அப்படி 9ஆம் திருவிழாவுக்கு பார்த்த கதைகளி  முடிவை தெரியாமல் முகத்தில் சூரிய ஒளி பட்டு கண்ணு திறந்த அனுபவ நினைவுகள் இந்தக் கதையிலும் பதிவாகியிருக்கிறது.

உன்னத பாடகர் ஒரு வீட்டுத் திண்ணையில் அமர்ந்து கச்சேரி கண்டு கேட்க வர முடியாத இளம்பெண்ணுக்கு பாடிக் கொடுத்த கதையின் திருப்பம் சிறப்பு. தினமும் காலையில் புலரி விடிவதே தளத்தில் ஒவ்வொரு நாளும் வெளிவரும் உங்கள் கதை வழியாகவே இருக்கிறது. மலையாளத்தில் இலக்கிய விமர்சகர்களாக வலம் வந்த ,வருகின்ற பெருமைக்குரிய வர்களை போன்று தமிழில் கேபி அப்பன், வி ராஜகிருஷ்ணன், வீ.சி ஸ்ரீஜன் போன்றவர்கள் இயங்கி இருந்தால் ஜெயமோகன் கதைகள் 8 கோடி தமிழர்களுக்கும் சென்று சேர்ந்திருக்கும். கொரோனா காலத்தில் ஏராளமான வலிகள் உடலையும் உள்ளத்தையும் கவ்வி கொண்டிருந்தாலும் உங்கள் சிறுகதைகள் தருவது கொண்டாட்ட மனநிலைதான். .தினமும்கொண்டாட்டமனநிலை.

அன்புடன்

பொன்மனை வல்சகுமார்.

***

முந்தைய கட்டுரைகதைகள் கடிதங்கள்
அடுத்த கட்டுரைகரவு [சிறுகதை]