பாப்பாவின் சொந்த யானை, உலகெலாம் -கடிதங்கள்

உலகெலாம் [சிறுகதை]

அன்புள்ள ஜெ,

உலகெல்லாம் எனக்கு மிகவும் தனிப்பட்ட கதை. நான் 2013ல் மருத்துவமனையில் படுத்திருந்தேன். எனக்கு அருகே ஈஸிஜி ஓடிக்கொண்டிருக்கும். அதில் என் இதயத்தை நான் பார்த்துக்கொண்டிருப்பேன். அந்த காட்சி என்னை மயக்கி வைத்திருந்தது. எனக்கு பலவகையான கற்பனைகள் வந்தன. என்னை ஒரு ஓடையாக நினைத்துக்கொண்டிருந்தேன். அதில் அலையலையாக போய்க்கொண்டே இருப்பேன். என் உயிரை ஓடையாக நினைத்தேன். என் உடல் அதில் ஒரு படித்துறைபோல.

நான் கொஞ்சம் பயப்பட்டால் அதில் அலைகள் எழுவதை கண்டேன். மூச்சை கொஞ்சநேரம் நிறுத்திப்பார்ப்பேன். அப்போதும் அலைகள் வரும். அலைகளை உருவாக்கி ரசிப்பேன். பதிமூன்றுநள் இருந்தேன். அதன்பிறகு இன்றுவரை என்னை நான் ஒரு ஓடையாகத்தான் நினைத்துக்கொள்கிறேன். “அமைதியான நதியினிலே ஓடம்’ ‘வசந்தகால நதிகளிலே வைரமணி நீரலைகள்’ என்ற இரண்டு பாட்டுமே என் மனசுக்குள் ஓடிக்கொண்டே இருக்கும்

நம் உடலுடன் ஒரு கருவி இணைந்துகொண்டால் நம்மால் நம்மையே வெளியே பார்க்கமுடியும். என்னால் அந்த அதிகாரி மைக்ரோவேவ் வழியாக பிரபஞ்சத்துடனேயே இணைந்துகொண்டதை அப்படித்தான் பார்க்கமுடிகிறது. ஓடை என்று ஒரு கதையை எழுதினேன். சரியாக வரவில்லை. ஆனால் உங்களுக்காக

எம்.முத்துக்குமாரசாமி

***

அன்புள்ள ஜெ அவர்களுக்கு ,

ஒவ்வொருவரையும் கொல்வதற்கு இங்கே அவருக்கான ஒரு பொருள் உண்டு” உண்மை தான் . எது கொல்ல  வல்லதோ அதுவே மீட்பாகவும் ஆகும் தருணம் இங்கே  உலகெலாம் கதையில் வெளிப்பட்டுள்ளது .  கதை முழுதும் மெல்லிய அதிர்வை உணர முடிந்தது.

அவள் கைதொழுதபடி நின்றாள். அவள் கதோர மயிரை காற்று மிகமெல்ல அசைத்தது. கழுத்தில் தங்கச்சங்கிலி மென்மையான ஒளியுடன் பதிந்ததுபோல் கிடந்தது. அவளுடைய வெண்சருமத்திலேயே ஒரு பொற்கோடு விழுந்ததுபோல. அப்பாடி இந்த வரிகளை வாசித்த பொழுது அருகிருந்து பார்த்த பரவசம் வந்தது. 

எப்படி உங்களால் இவ்வளவு தீவிரமான கதைகளை இவ்வளவு குறுகிய இடைவெளிகளில் எழுத முடிகிறது. உங்களை செலுத்தும் விசை எது? புனைவு களியாட்டு சிறுகதைகள் ஒவ்வொரு விடியலையும் அழகாக்குகின்றன. என் வாழ்வில் மறக்க முடியாத நாட்களாக நிச்சயம் இவை இருக்கும்.  நன்றி. என்றும் உங்கள் ஆசீர்வாதங்களை வேண்டும்.

தமிழ்செல்வி நல்லகுமார்

***

பாப்பாவின் சொந்த யானை [சிறுகதை]

அன்புள்ள ஜெ,

பாப்பாவின் சொந்த யானை கதையை ஓரிருமுறை வாசித்துவிட்டேன். அதில் வரும் பாப்பாவின் நடத்தைகளை ரசித்து ரசித்து தீரவில்லை. அவள் அமுக்கட்டான். ஒருபொருளை ஒளித்துவைத்தால் கண்டுபிடிக்கமுடியாது.  அவள் சொல்லமாட்டாள். அவளுக்கு கற்பனை அதிகம். தன் அண்ணனை மலையனாகவும் அப்பாவை யானையாகவும் உண்மையாகவே பார்க்கிறாள். அந்த இருகுணங்களும் இணைந்துதான் அப்பாவை பூச்சியாக்கி டப்பாவில் போட்டு ஒளித்துவைத்துக்கொள்ளச் செய்கின்றன. கதையின் எல்லா அம்சங்களும் சரியாக இனைந்து இயல்பாக அந்த கிளைமாக்ஸ் வருகிறது

மாதவ்

***

வணக்கம் ஜெ.

பாப்பாவின் சொந்த யானை கதையை வாசித்தேன். இனிய கதை. குழந்தைகளின் அகவுலகு நன்கு வெளிபடும் கதை. சிரிக்காத அப்பாவைச் சிரித்துக் காணும் குழந்தைகள் அந்த அபூர்வத் தருணத்தைப் பேணவும் விரும்புகின்றனர். இந்தக் கொரானா காலக்கட்டம் ஒருவகையில் குழந்தைகளுக்குத் தங்கள் பெற்றோர்களின் இனிய முகமொன்றைக் காட்டிச் செல்கிறது.

அரவின் குமார்

***

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–49
அடுத்த கட்டுரைகதைகள் கடிதங்கள்