மதுரம்,பிடி -கடிதங்கள்

பிடி [சிறுகதை]

அன்புள்ள ஜெ

பிடி கதையை வாசித்துக்கொண்டிருந்தேன். அந்தக்கதை ஒரு கள்ளமில்லாத கலைஞனின் சித்திரம் என்ற எண்ணம்தான் ஏற்பட்டது. அதையே தொடர்ந்து சென்று அந்த கடைசிவரியில் “எனக்கா?”என்று ஊனமுற்ற கிழவர் கேட்கும்போது கதை வேறு ஒரு முழுமையை அடைவதை உணர்ந்தேன். மீண்டும் கதையை வாசித்தேன்.

கதையின் மைய வரியே ‘நன்னு பாலிம்ப’ தான் .அது பலமுறை வருகிறது. தியாகையரைப் பார்க்க ராமனே நடந்துவந்தான். தெய்வம் பக்தரை அறியும், தேடிவரும். அடுத்த வரி ‘நீர் அனுமார்’ என்பது. அன்று ராமன் தியாகையருக்காக வந்தான். இன்றைக்கு அனுமன் அந்தக் கிழவருக்காக வருகிறான்.

கிழவரின் வரிகளில் உள்ளது ராமு மீதான வெறுப்பு அல்ல- அது தன்மீதான வெறுப்புதான். தன் இயலாமையால் அவர் வருந்துகிறார். அவரால் பாட்டுக்கேட்க போகமுடியாது. அவரை ஒரு பொருட்டகா யாரும் நினைக்கப்போவதில்லை. ஆகவே சீச்சி இந்தப்பழம் புளிக்கும் என்ற மனநிலை. “என்ன பாடுறான்?”என்று அவர் சொல்வதும் “நல்லவேளை இங்கெல்லாம் கேட்காது என்று சொல்வதுமெல்லாம் அந்த மனநிலையில்தான்

அது தெய்வத்திற்கு தெரியும். ஆகவே ஆஞ்சநேயர் வருகிறார். ராஜா போல இல்லை. அவருக்கெ உரிய பணிவான கைகூப்பிய தோற்றத்துடன். வந்து சொல்கிறார். ’என்ன பாட்டு வேணும்?” என்று.

கிழவரின் கண்ணீர் தியாகையர் விட்ட கண்ணீர்தான்

மகாதேவன்

***

ஜெ

இந்த கடிதத்தை எழுத தோன்றியது.

“மீண்டும் நான் விழித்துக் கொண்டபோது எங்கோ கிடந்தேன். மிக அருகே ஒர் ஆறு ஓடிக்கொண்டிருந்தது. ஆற்றின் ஓசையை நான் கேட்டேன். அது எதையோ சொன்னது.”

நீங்கள் மேலே சொல்லி இருக்கும் விவரனை போன்ற அனுபவம் பலமுறை எனக்கும் உண்டு. இந்த விவரனை craftன் ஒரு பகுதியோ என்னவோ.. ஆனால் என்னை பொறுத்த வரை மிக மிக சரி… எழுதுவது நீங்கள் என்றாலும், எனக்கு ஆச்சர்யம் அளிக்கிறது.

அதில் என்ன வகை இசை, பாடுபவர்கள், முறை – அதெல்லாம் இல்லை.. அங்கு நாமும் ஒரு இசையும் உள்ளது.. ஒரு வார்த்தையும் கூட இல்லை. அது இசையா ? – எனும் போது இந்த உலகத்தில் இருக்கிறோம்.

ஒரு கதவு இருப்பது கூட சொல்லாமல்.. உள்ளே வந்து.. உங்கள் கதைகள் போலவே, இசையும் உள்ளே எதையோ உருக்கவும், மாற்றி அமைக்கவும் வல்லது. ஒரு master அதை செய்து செல்கிறார்.

நன்றி

ராகவ் வெங்கட்ராமன்

***

மதுரம் [சிறுகதை]

அன்புள்ள ஜெ

மதுரம் கதையை வாசித்தபோது அதிலிருந்த கொண்டாட்டத்தை கவனித்தேன். கொண்டாட்டம் சமூகப்படிநிலையில் கீழே போகப்போக கூடிக்கொண்டே செல்கிறது. ஆசான் ஒரு திருடர். குடிகாரர். பெண்பொறுக்கி. ஆனால் அந்த கிராமத்துச் சமூகத்தில் அவர் கொண்டாடப்படுபவர். அவருக்கு அங்கே பெரிய மரியாதை இருக்கிறது. அவரும் அங்கே கொண்டாடிக்கொண்டிருக்கிறார்

அந்தக்கதையில் இருக்கும் கிரைம் சார்ந்த கொண்டாட்டத்தை ரசித்துக்கொண்டே இருந்தேன். அவன் கூட இருக்கும்போது உன்னைத்தான் நினைத்துக்கொண்டே இருப்பேன் என்று சொல்கிறாள் ஒரு மனைவி. ஆனால் ‘அந்த நீக்கம்புலே போவான் பார்த்திருவானே’ என்றுதான் நினைத்துக்கொள்கிறாள். ஆசான் அப்புவின் மனைவி அவர் மார்பைப்பற்றிச் சொல்லும் இடத்தை புரிந்துகொள்வதும் சிரிப்பதும் எல்லாமே அந்தச் சூழலின் மிகப்பெரிய கொண்டாட்டங்கள்

இந்தக்கதையுடன் இணைந்துகொண்ட ஒரு கதைக்கட்டுரை முன்பு எழுதியிருக்கிறீர்கள். அம்மையில்லா? எனக்கு எருமையில் இருக்கும் ‘மாத்ருபாவம்’ எந்த மிருகத்திலும் இல்லை என்று தோன்றுவதுண்டு

ஸ்ரீனிவாஸ்

***

வணக்கம் ஜெ

மதுரம் சிறுகதையை வாசித்தேன். பெருங்கசப்பை ஒருதுளி மதுரம் நிகர் செய்கிறது. எருமை குட்டி ஈனும் தருணத்தில் கரடிநாயர் அடையும் படபடப்பு தந்தைக்கு ஈடானது. வெறுப்பு, சலிப்பு என்பது ஒயாமல் உள்ளே கனன்று கொண்டே இருக்கிறது. அந்தக் கசப்பை ஈடுசெய்ய வாழ்வென்னும் நா ஒருதுளி மதுரத்துக்காக அளாவி கொண்டே இருக்கிறது.

அரவின் குமார்

***

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–47
அடுத்த கட்டுரைகைமுக்கு, முதல் ஆறு- கடிதங்கள்