கைமுக்கு, முதல் ஆறு- கடிதங்கள்

 

கைமுக்கு [சிறுகதை]

அன்புள்ள ஜெ

கைமுக்கு என்பதற்குச் சமானமான ஒரு வார்த்தை நமக்கு உண்டா என்று யோசித்துப் பார்த்தேன். அப்போதுதான் அக்னிப்பிரவேசம் என்ற வார்த்தை தோன்றியது.அதேபோன்ற ஒன்று நமக்கு நடந்தது உண்டா? ஒரு நண்பரிடம் அதைப்பற்றிப் பேசிக்கொண்டிருந்தேன். அவர்தான் திருத்தக்கதேவரின் கதையைச் சொன்னார். திருத்தக்கதேவர் சீவகசிந்தாமணியை எழுதியபோது அது சிற்றின்பக் காப்பியம் என்பதனால் இவர் சைன துறவிகளுக்குரிய நெறி தவறியவர் என்று அவதூறு கிளம்பியது. அக்கால வழக்கப்படி திருத்தக்கதேவர் பழுக்கக் காய்ச்சிய செம்புப் பதுமையை ஆரத்தழுவி தன் ஒழுக்கநெறியை நிரூபித்தார்.

இந்தக்கதை பலநூறு ஆண்டுகளாக இங்கே இருக்கிறது. சுசீந்திரம் கைமுக்கே கூட இந்து மரபிலி இருந்து வந்தது அல்ல. அது சைன மரபில் இருந்து வந்தது. சைன மரபிலே இந்தமாதிரியான தண்டனைகள், நீரூபிக்கும் முறைகள் பல இருந்திருப்பதை நூல்களில் காண்கிறோம். ஆனால் இந்து மரபில் அப்படி ஒரு குறிப்பு காணக்கிடைக்கவில்லை.

அக்னிபிரவேசம் அல்லது கைமுக்கு போன்ற ஓர் அனுபவம் பலருடைய வாழ்க்கையில் வரும். முதலில் அந்த அனுபவம் சிவராஜபிள்ளைக்குத்தான். அவர் தன் மகனை எப்படி வளர்த்தார் என்ற கேள்வி வருகிறது. அவர் கைமுக்கி தன்னை நிரூபிக்கவேண்டியிருக்கிறது. கோர்ட் வாசலில் அவ்வளவு கிரிமினல் வழக்குகள் நடுவே வாழ்ந்தவர் மனசுக்குள் ஒரு கிரிமினல் வாழ்க்கையைப்பற்றிய கற்பனை இருந்திருக்கிறதா? அடுத்த கைமுக்கு அந்த பையனுடையது. மகேஷ் திருடியது அப்பாமேல் கொண்ட அன்பினாலா வெறுப்பினாலா

எந்தக் கைமுக்கிலும் மனிதர்கள் ஆழத்தில் உள்ள கொதிக்கும் நெய்யை தொடுவதில்லை. துழாவித்துழாவி காட்டுவதெல்லாம் ஊருலகுக்காகத்தான். அவர்கள் எடுப்பது உண்மையை அல்ல. அவர்கள் காட்ட விரும்பும் ஒன்றைத்தான். உண்மை ஆழத்திலேயே கிடக்கும்.

ஆர்.ராஜசேகர்

***

அன்புள்ள ஜெ .

கைமுக்கு சம்பிரதாயம் இயல்பான பேச்சு வழக்கில் ஒரு குறிப்பிட்ட ஜாதி சார்ந்த மனிதர்களின் குறியீடாக கதை ஆரம்பத்தில் முன் வைக்கப்படுகிறது.எல்லாக் கதாபாத்திரங்களுமே உறுத்தல் எதுவும் இல்லாமல் மிக இயல்பாக சித்தரிக்கப்பட்டுள்ளன. அது கதைக்குள் நம்மை நன்கு ஒன்ற வைக்கிறது.

சிவராஜ பிள்ளையைப் பொறுத்தவரை அப்பழுக்கில்லாத ஒரு சாதாரண கதாபாத்திரமாக பெரும்பகுதி கதையிலும் உலா வருகிறார்.மகேஷ் கதா பாத்திரத்தின் ஏழ்மை வலிகளும், ஏதுவான சந்தர்ப்பமும் அவனை மடை மாற்றி விடுகின்றன.
ஒரு வேளை முதல்  முறை விடுதித் திருட்டில் பிடி பட்டு இருந்தால் சிறு தண்டனையுடன் அவனது வாழ்க்கை வேறு திசையில் பயணித்திருக்கலாம்.பிடி படாமல் இருந்ததனாலேயே வலுவான நியாயப் படுத்துதல் மற்றும்  திருட்டு ருசியுடனே அவன் வாழ்க்கை என்றாகி விட்டது . “தனக்குள் போலீசை நடிக்கும் திருடனும் , தனக்குள்  திருடனை நடிக்கும் போலீசும் ”  என்றும் சமூகத்தில் தவிர்க்க முடியாத இணைகள்.

கதை இறுதியில் மீண்டும் கைமுக்கு பற்றிய தெளிவு வருகிறது.மகனின் செய்கையைப் பிற்பாடு நியாய படுத்திக்கொள்ளும் சிவராஜ பிள்ளை, மகேஷ் , அவன் முதல் மனைவி, போலீஸ் ரங்க மன்னார் என அனைவருமே கைமுக்கிலிருந்து கள்ளத்தனமான வெற்றியுடன் வெளி வரும் நம்பூதிரியின் பிரதி பிம்பங்களாகவே தெரிகின்றனர்.

அன்புடன்

ரமேஷ் கிருஷ்ணன்

***

முதல் ஆறு [சிறுகதை]

அன்புள்ள ஜெ

முதலாறு அல்லது முதலார் என்ற பெயரே என்னை பரவசப்படுத்தியது. ஏனென்றால் 1980 வாக்கில் நான் அங்கே வேலைசெய்திருக்கிறேன். அந்த இடமே வேறுமாதிரியாக இருந்தது. [நீங்கள் எழுதிய லூப் கதையும் அந்த காட்டுப்பகுதியைப்பற்றித்தான்] அங்கே மின்னூட்டநிலையம் வந்ததுமே அந்த டோப்போகிராஃபி மாற ஆரம்பித்து அழிந்துவிட்டது

1980ல் நான் திருவட்டாறிலிருந்து கொஞ்சம் வளைந்து முதலாறு சாலையில் நுழைந்ததுமே இந்தக்கதாநாயகன் நினைப்பதுபோல இது என்ன இந்த சாலைக்கு அருகே இப்படி ஒரு ஏதேன் தோட்டமா என்றுதான் நினைத்தேன். அப்படி ஒரு மண் அது. இன்றைக்கு அது இல்லை.

அந்தக் காதல் வழக்கமான ரூட்டில் இருந்து வழிமாறிச் செல்லும்போது ஏதேன் தோட்டத்திற்குள் புகுந்துவிடுகிறது. முதல் ஆறு என்றால் அவர்கள் அடைந்த முதல் காதல். அல்லது முதல்வழி என்று சொல்லலாம். அந்த வழிமாறுதலை அழகாக சொல்லியிருந்த கதை

பீட்டர் ஸ்தனிஸ்லாஸ்

***

அன்புள்ள ஜெயமோகன்,

இன்றைய சிறுகதை “முதல் ஆறு” அற்புதம். கதையில் வரும் இளைஞனின் அந்தக் காதல் அனுபவத்தை அடைந்திராத ஆண்களே இருந்திருக்க முடியாது. பள்ளிவிட்டு வெளிவந்து உலகைப் பார்க்கத் துவங்கும் அந்த புத்திளமையில், குறிப்பாக கல்லூரி காலங்களில், புதுப்பால் பொங்குவதைப் போல காதலின் அல்லது காதல் என்று அந்த வயதில் நம்பப்படும் அந்த உணர்ச்சியின் ஊற்று கிளர்ந்தெழும் அந்தப் பருவம் மிக இனிமையானது. உலகின் மீதான காதல் ஒரு பெண்ணில் இருந்துதான் துவங்குகிறது போலும். அல்லது பெரிய விஷயங்களுக்கான காதலின் வாயிலில் ஒரு பெண் நின்றுகொண்டிருக்கிறாள் என்றும் சொல்லலாம்.

தான் விரும்பிய பெண்ணை அவளறியாமல் பின்தொடர்வது, அவள் செல்லும் இடங்களுக்கெல்லாம் செல்வது, அவள் வீட்டைச் சுற்றியே வட்டமிடுவது என அந்த பருவத்தின் உணர்ச்சிகளிலிருந்து தப்பியவர்கள் துரதிர்ஷ்டசாலிகளே. அதுவரை கொண்டிராத புதிய உணர்ச்சி என்பதால் பெரும்பாலும் அந்த உணர்ச்சியையே நீட்டித்துக்கொள்வது, தனது காதல் மிகத் தூய்மையானது, களங்கமற்றது என தன்னளவில் எண்ணிக்கொள்வது, அது சார்ந்த கவலைகள், பதற்றங்கள், கழிவிரக்கங்கள் என ஒரு சராசரி இளைஞனின் அகத்தை துல்லியமாகக் காட்டுகிறது கதை.

ஆனாலும் கதையின் பின்பாதியில்தான் உண்மையில் அவனுக்கான தரிசனம் காத்திருக்கிறது. இயற்கையின் பிரம்மாண்டத்தின் முன், அதன் கலைநேர்த்தியின் முன், அதன் ஒப்பில்லாத பேரழகின்முன் அவன் முதன்முதலில் ஒரு Catharsis- ஐ நிகர்த்த உணர்வை அடைகிறான். கதையின் இந்தப் பகுதியிலுள்ள துல்லியமான காட்சி விவரணைகள், வாசிப்பவர்களை அந்தப் பிராந்தியத்தில் வாழ வைத்துவிடுகிறது. நித்தியத்தின் சாஸ்வதமான பேரழகு அவனை அநித்தியத்தின் தற்காலிக கவர்ச்சியின் பிடியில் இருந்து  ஒருகணம் அள்ளியெடுத்துவிடுகிறது. அந்த தரிசனத்தைக் கண்டுவிட்டவனால் ஒருபோதும் சிறியதைக் கையிலெடுத்துக் கொஞ்ச இயலாது. அந்த பிரம்மாண்டமான பேரழகு மானுடனுக்கு அருளப்பட்ட வரம். முதலில் திகைப்பையும், அதன்பின் சரணாகதியையும் கோரும் பிரபஞ்ச தரிசனத்தின் ஒரு துண்டல்லவா அது.

பஷீர் பார்த்த பாலைவனச் சூரியன் போல, இளவரசர் ஆன்ட்ரூ பார்த்த வானத்தைப் போல (அதன்முன் அவர் மிக விரும்பிய நெப்போலியனும் குள்ளமாகத் தெரிகிறார்), வில்லிதாசன் பார்த்த அரங்கனின் கண்களைப் போல.

இந்த தரிசனம் கிட்டியபின் அவனுக்கு அந்தப் பெண்ணின் சம்மதமும் நிராகரிப்பும் ஒரு பொருட்டேயில்லைதானே. ஒருவகையில் அந்த தரிசனத்தை அவன் தன் வாழ்வின் அடுத்தடுத்த கட்டங்களுக்கு நீட்டித்துக் கொண்டே செல்வான் அல்லது அதைபோன்ற தரிசனங்களைத் தேடிச்செல்லத் துவங்கி விடுவான்.

மிக்க அன்புடன்,

கணேஷ்பாபு

சிங்கப்பூர்

***

முந்தைய கட்டுரைமதுரம்,பிடி -கடிதங்கள்
அடுத்த கட்டுரைஓநாயின் மூக்கு, ஆழி- கடிதங்கள்