செங்கோலின் கீழ்

என் விசைப்பலகை உச்சவேகத்தில் தட்டப்பட்டுக்கொண்டிருக்கிறது. கதை சூடான கட்டத்தில் செல்கிறது. அருகே ஒரு டிப் டிப் டிப் சத்தம். என்ன அது? மீண்டும் அதே சத்தம். நிறுத்திவிட்டு பார்த்தால் என்னுடைய பிரியத்திற்குரிய பல்லி. அதற்கு நான் இன்னும் பெயர் இடவில்லை. பெயர்களும் அடையாளங்களும் கொண்ட இந்த உலகுக்கு அதை கொண்டுவரவில்லை

என்ன சத்தம் கொடுக்கிறது? வேறேதேனும் பல்லி அருகே நிற்கிறதா என்ன? இல்லை, இது ஒரு சண்டியர். இந்த வட்டாரத்தில் வேறுபல்லிக்கு இடமில்லை. மேலே ஒரு டியூப்லைட். அதைச்சுற்றியும் அதற்கு நேர்கீழே உள்ள என் மேஜையிலும் ஒரு சிறு அரசு உருவாக்கப்பட்டிருக்கிறது. அரண்மனை ஜன்னல்திரைக்கு அப்பால். அது ஒரு காடாகவும் இருக்கலாம். அரசன் அங்கே ஓய்வெடுக்கிறார். இரவில் வேட்டைக்கு கிளம்பவேண்டும் என்பது கொள்கை. ஆனால் அரசனுக்கு பசி மிகுதி, ஆகவே பகலிலும் உலா உண்டு.

அரசி என எவரும் இல்லை. அந்தச் சள்ளைக்கெல்லாம் பொழுதில்லை. நேர் எதிரில் சன்னலுக்குமேல் வேறு ஒரு நாடு. அங்கே அல்லி அரசு. அங்கே நுழைந்து காதல் களியாட்டை முடித்துவிட்டு திரும்பிவந்தால் போயிற்று. அல்லி பெறும் மைந்தர்கள் அவ்வப்போது இங்கே அத்துமீற முயன்று வாலறுந்து தப்பி ஓடுவதுண்டு

டிப்டிப்டிப் என்னிடம்தான். ஆமாம். என்னிடம் எதையோ சொல்கிறது. நான் தட்டச்சை நிறுத்தினேன். நன்றி என்று சொல்வதுபோல ஒரு டிப்டிப். பாய்ந்து விசைப்பலகையைச் சுற்றி விழுந்துகிடந்த இரண்டு கொசுக்களை புசித்துவிட்டு மடிக்கணினி மேலேறி அங்கே கிடந்த கொசுக்களையும் சாப்பிட்டுவிட்டு மறுபக்கம் சென்றது. கொசுவிரட்டி வைத்திருந்தமையால் மயங்கிவிழும் கொசுக்களை உண்ணும் ஓய்வான வேட்டை. ஆனால் என்னை தன் பேரரசில் ஒரு பிரஜை என ஏற்றுக்கொண்டிருக்கிறது

பழம்பெருமை மிக்க டைனோசர்கள் இப்படி கதைக்கு அருகே சிற்றுரு ஆக மாறி வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.அவர்கள் நேராக கதைக்குள் புகுந்து தொன்மம் ஆகியிருக்கவேண்டும். ஏதாவது தெய்வமாக இந்நேரம் கோயில்கொண்டிருக்கலாம். பத்து அவதாரங்களில் ஒன்றாக ஆவதற்கான எல்லா தகுதிகளும் உண்டு. எங்கே நடந்தது பிழை? எவர் செய்த குளறுபடி?

இந்த அறை கட்டப்பட்டு பதின்நான்காண்டுகள் ஆகின்றன. 2006 முதல் கூடவே பல்லி இருக்கின்றது. அவற்றின் வாழ்க்கை நீளத்தை பார்த்தால் இது நான்காம் தலைமுறையாக இருக்கலாம். அவற்றை பெரிதாக பிரித்து அடையாளம் காணமுடியவில்லை. தந்தையைப்போலத்தான் பையன். சாம்ராஜ்யம் அப்படியே கையளிக்கப்படும்போது என்னையும் பரிசாகக் கொடுத்துவிடுகிறார் போல. சிறிய பல்லி மிகத்துணிச்சலாக வந்து அறிமுகம் செய்துகொள்வது இது தலைமுறை உறவு என்பதனால்தான்.

அரசர் நிதானமானவர். புத்தகங்கள்மேல், செல்பேசி மேல் அமர்ந்திருக்கிறார். மேஜைக்குப் பின்பக்கமிருந்து தோன்றுகிறார். வேட்டை இல்லாதபோது திரைச்சீலைக்கு அப்பாலிருந்து வெறுமே என்னை பார்த்துக்கொண்டிருக்கிறார். “யாருபெத்த பிள்ளையோ, இப்டி உக்காந்து தட்டிட்டிருக்கே’ என்ற கவலை கண்களில் தெரிகிறது. ஆனால் புகைப்படம் எடுப்பதை விரும்புவதில்லை. பலநாட்கள் முயன்றுதான் அரசரின் ஒரு சில ‘ஷாட்கள்’ கிடைத்தன. கணினித்திரை வெளிச்சமும் உகந்தத்து அல்ல.

அன்பானவர். அதைவிட இங்கிதம் கொண்டவர். ஊடே புகுந்து தொந்தரவு செய்வதில்லை. தேவையில்லத உச்சுக்கொடல்கள் இல்லை. சில சுவர்முக்குகளில் பூச்சிகளை மடக்குகையில் அவற்றின் இன்றியமையாத விதியைப்பற்றிச் சொல்கிறார்போல தோன்றும். அவை சிறகு மடக்கி “ஆணை அரசே” என அடிபணிந்து உயிர்கொடுக்கின்றன

பின்னிரவில் தனித்திருக்கையில் நிதானமும் பொறுப்புணர்வும் கொண்ட அரசர் ஒருவர் அருகே இருப்பது ஆறுதல் அளிக்கிறது. முக்கியமாக விழிப்புணர்வுடன் இருப்பவர். இந்நிலம் தன்னால் ஆளப்படுகிறது, ஆனால் தன்னுடையது மட்டுமல்ல என்று அறிந்தவர். இப்புவியின் மிகமிக தொன்மையான குருதிவழி கொண்டவர்.

சிறந்த அரசரால் பேணப்படும் நிலத்திலேயே காவியங்கள் எழமுடியும். அரசே, தங்கள் செங்கோலின்கீழ் வெண்முரசு என்ற காவியம் ஒன்றை எழுதியிருக்கிறேன். தங்கள் வாழ்த்துகளுக்குரிய சூதன் நான். என் சொற்களினூடாக தங்கள் புகழ் நீடுவாழட்டும்.

முந்தைய கட்டுரைஇறைவன் [சிறுகதை]
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–48