சென்றகாலத்தின் ஆற்றல்

சில பாடல்களை நான் நெடுநாட்களாகக் கேட்பதே இல்லை. அவை சிறுவயதுடன் தொடர்புடையவை.. சமீபத்தில் ஒரு கதையில் மூழ்கியபோது அந்தக்காலகட்டத்தின் மனநிலைக்காக சில பாடல்களை கேட்க ஆரம்பித்தேன். நேரடியாக இளமைநினைவுகளுக்கே சென்றுவிட்டேன்.

பாடல்கள் ஒரு காலகட்டத்தை முழுமையாக நினைவுக்குக் கொண்டுவருகின்றன. முகங்கள், இடங்கள், தருணங்கள். என் தோழர்களிலேயே சிலர் இப்போது உயிருடன் இல்லை. இளமையில் இருந்த இடங்கள் முழுக்கவே மாறிவிட்டன. தென்குமரிமாவட்டத்தின் நிலக்காட்சியில் ஒரு பெரிய மாற்றம் எழுபதுகளில் வந்தது. முன்பு மலைகளில் மட்டும் இருந்த ரப்பர் பயிர் ஊர் முழுக்க பரவியது. மற்ற அத்தனை மரங்களும் மறைந்தன. விளவங்கோடு, கல்குளம் இரு வட்டங்களும் முழுக்கவே ரப்பர்த்தோட்டங்கள்தான். நான் அறிந்த படித்துறைகள், வயல்வெளிகள் எவையும் இன்றில்லை. ஆனால் ஒரு பாட்டு வழியாக  அனைத்தும் மூளைக்குள் வந்து அலைமோதுகின்றன

https://youtu.be/5sIWQlKB2-w

இந்த தனிமையில் எம்.எஸ்.வி பாடல்களைக் கேட்கப் பிடித்திருப்பதற்கு முக்கியமான காரணம் அவற்றிலிருக்கும் கள்ளமற்ற ஒரு துள்ளல் என்று தோன்றுகிறது. இது எனக்குத் தோன்றுவதாகவும் இருக்கலாம். ஆனால் மிக மிக எளிமையானவையாகவும் கேட்கக்கேட்க வளர்பவையாகவும் உள்ளன. பெரும்பாலான பாடல்களில் காற்றுவாத்தியங்கள் ஒலிக்கின்றன. பெரும்பாலான பாடல்கள் உச்சஸ்தாயியில் நாதஸ்வரம்போல அல்லது டிரம்பெட் போல ஒலிக்கின்றன. மெட்டுக்களே அவ்வாறு நீளமான நோட்டுகளுடன் அமைந்துள்ளன.அதனால்தான் இந்த ஆற்றல் வெளிப்படுகிறதா என்று தெரியவில்லை.

அந்தக்கால பாடல்வரிகள் இன்னும்கொஞ்சம் நல்ல தமிழில், இன்னும் கொஞ்சம் கவித்துவத்துடன் இருந்திருக்கின்றனவா?

கள்ளும் வெண்மை பாலும் வெண்மை

பழகிப்பார்த்தால் தெரியும் உண்மை

பாவை எழில்களும் அதுபோல

நாம் பழகிப்பார்க்கையில் மதுபோல

இந்த பொழுதில் நுரைத்தெழுந்து அறையை நிறைத்துவிட்டன.

***

முந்தைய கட்டுரைமலைகளின் உரையாடல் [சிறுகதை]
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–47