ஆழி, கைமுக்கு- கடிதங்கள்

கைமுக்கு [சிறுகதை]

அன்புள்ள ஜெ

கைமுக்கு சிறுகதையை வாசித்தேன். சிறுகதை என்ற இலக்கணத்தை எளிதாகக் கடந்து செல்கிறது. ஆனால் பக்க அளவில் இதைவிட நீளமான சிக்கலான அமெரிக்கக் கதைகளையும் நான் படித்திருக்கிறேன். கைமுக்கு கதை அதன் அமைப்பில் பத்துலக்ஷம் காலடிகளுக்கு சமானமானது. ஆனால் அதைவிட ஓநாயின் மூக்கு முக்கியமான கதை என்பது என் எண்ணம். ஓநாயின் மூக்குக்குப் பிறகு இந்தக்கதை.

ஒரு கதை எங்கே முடிகிறது என்பது எனக்கு முக்கியம். ஒரு earthly முடிவை அடையும் கதை எனக்கு எல்லைக்குட்பட்டதாகவே தோன்றும். அது என்னவாக இருந்தாலும் சரி. அந்தக்கதைக்குள் அதற்கான பதில் இருந்தால் அது ஒருபடி கீழேதான். பத்துலக்ஷம் காலடிகளில் லௌகீகமான முடிவுதான் உள்ளது. அது உணர்ச்சிகரமானது என்பதில் சந்தேகமில்லை. அந்தக் கதை வரலாறும் சமகாலமும் எப்படி intertwined ஆக உள்ளது என்பதைக் காட்டுகிறது. ஆனாலும் அதிலிருந்து மேலே செல்லும் கேள்வி இல்லை.

ஆனால் ஓநாயின் மூக்கு மிகமிக தொந்தரவுசெய்யும் ஒரு கேள்வியை கேட்கிறது. விதியின்படியோ அல்லது cause and effect உறவின் படியோ இங்கே வாழ்க்கை நடக்கிறது என்றால் நம்முடைய இடம்தான் என்ன? நாம் வாழ்க்கையில் ஒன்றுமே செய்வதற்கில்லையா? வெறும் அடிமைகள்தானா? அந்த கேள்வியிலிருந்து விடுபடவே முடியவில்லை. அந்தக்குடும்பம் என்ன தப்பு செய்தது? தப்பு செய்தது முன்னோர். இவர்கள் ஏன் அழியவேண்டும்? ஆனால் அழிகிறார்கள் என்பது ஓர் உண்மை

இந்த கைமுக்கு அதேபோல பேசிமுடிக்கமுடியாத கேள்வியை கேட்கிறது. சிவராஜபிள்ளை நேர்மையானவர், கடுமையாக உழைக்கிறார். ஆனால் எதையுமே அடையவில்லை. சாஸ்தா கைகொடுக்கவில்லை. அடுத்த தலைமுறை மகேஷ் திருடுகிறான். எல்லாமே கைகூடுகிறது. எது சரி? சிவராஜபிள்ளையே மகனை நியாயப்படுத்துகிறார். உண்மையில் இன்றைக்கு இங்கே இருக்கும் இரண்டு தலைமுறையின் மனநிலை, வாழ்க்கை ஆகியவை அருகருகே வைக்கப்படுகின்றன. இன்றைக்கு உள்ள இளைஞர்களில் 99 சதவீதம்பேர் மகேஷைத்தான் நியாயப்படுத்துவார்கள். அவனே கதையில் அதை நியாயப்படுத்துகிறான். நியாயப்படுத்துபவனாக அவனை படைத்திருக்கிறீர்கள். ஆகவேதான் இலக்கியமெல்லாம் வாசிப்பவனாக இருக்கிறான்

உண்மையைச் சொல்கிறேனே. இந்த உண்மைதான் எனக்கு தொந்தரவாக உள்ளது. சிவராஜ பிள்ளையின் காம்ப்ரமைஸ் எனக்கு நிம்மதியை அளித்தது. பிடித்திருந்தது. அப்படி பிடித்திருந்ததே கொஞ்சம் கூச்சமாக இருந்தது. ஆனால் அது பிடித்திருந்தது என்பது ஓர் உண்மை. இப்படி எத்தனை திருட்டுகள் ஊழல்கள் தப்புக்களை நாமெல்லாம் விழுங்கியிருக்கிறோம் – with a pinch of salt. அதுதானே வாழ்க்கை.

ஆனாலும் மனம் பொருமிக்கொண்டே இருக்கிறது. அதற்குத்தான் ஔசேப்பச்சன் நையாண்டியாக ஒரு முடிவையும் போடுகிறான். கள்ளசிலைகளை எடுங்கள்., ஆனால் உண்மையான சிலை உள்ளேதானே இருக்கும் என்கிறான்.

எஸ்.ஸ்ரீனிவாஸன்

***

அன்புள்ள ஜெ

சுசீந்திரம் கைமுக்கில் நீங்கள் ரிஷபச் சிலையை ஹனுமார் சிலையாக ஆக்கிக்கொண்டது ஏன்? தெரிந்தே செய்ததா?

சரவணன்

***

அன்புள்ள சரவணன்

சில நூல்களில் அனுமார் சிலை என்றும் உள்ளது. எனக்கு அதுவே வசதியானதாக பட்டது. ஏனென்றால் அனுமார் சத்தியம்- நோன்பு- உறுதி ஆகியவற்றின் அடையாளம். இந்தக்கதைக்கு அவரே பொருத்தமானவர்

ஜெ

***

பெருமதிப்புக்குரிய ஆசிரியர் அவர்களுக்கு

வணக்கம்.

இந்த கொரோனா காலத்தில் உங்கள் தளத்தில் சிறுகதை மழையில் எல்லோரையும் போல நானும் நனைந்து கொண்டே இந்த கடிதத்தை எழுதுகிறேன். இன்று வெளி வந்துள்ள ‘கைமுக்கு’ கதையை வாசித்து விட்டு உங்களுக்கு கடிதம் எழுதியே ஆக வேண்டும் என எழுதுகிறேன்.  ஏராளமான கதைகளை எழுதி கொண்டே இருக்கிறீர்கள். ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம். எப்படி சாத்தியம் ஆகிறது என்ற ஆச்சரியம் ஒரு புறம். அதிக திறமை உள்ளவர்கள்  பற்றி சொல்லும் பொது சரஸ்வதி அவர்களிடம் குடி இருப்பதாக சொல்வார்கள். உங்களிடம் அவள் குடியிருப்பது மட்டும் அல்லாது அவள் அதி உச்ச நிலையிலும் இருப்பதாக எனக்கு தோன்றுகிறது. I think she not only resides in you but she is in an orgasmic state also. இந்த குறுகிய காலத்தில் இத்தனை சிறப்பான படைப்புகள் சாத்தியமாவது அதனால் தானோ என்னவோ. ( இப்படி சொல்வது கூட இந்த காலத்தில் ஏதும் பிரச்சனையை உருவாக்குமோ ?)

உங்களின் அசாத்திய திறமையை பார்த்து பொறாமை படுபவர்கள் சிலர் சமூக வலை தளங்களில்  பத்து லட்சம் காலடிகள் கதையில் வந்த ஒரு வரியை வைத்து கொண்டு உங்களுக்கு எதிராக வசைகளை வாரிப்  பொழிந்து கொண்டு இருந்ததை பார்த்த பொழுது எனக்கு தஸ்தாவெஸ்கி ஒரு கட்டுரையில் இப்படி பட்டவர்களை பற்றி சொல்லும் பொழுது “இலக்கை நோக்கி செல்பவன் வழியெங்கும் குரைக்கும் நாய்களுக்கு எல்லாம் வாயை திறந்து பதில் கூறாமல் அவன் இலக்கிலேயே கவனமாக இருப்பான் ‘ என சொன்னதாக சமீபத்தில் எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணன் அவர்கள் ஒரு  உரையில் சொன்னது நினைவில்  வந்தது. அவர் மேலும் “பஸ்கள் செல்லும் போது கூடவே துரத்தி கொண்டும் குரைத்துக் கொண்டும் நாய்கள் ஓடி வரும். ஆனால் என்றைக்கும் அந்த நாய்களுக்காக பஸ்கள் நின்றது கிடையாது. அதன் பாதையில் அது சென்று கொண்டு தான் இருக்கும். அதை போல தன குறிக்கோள் ஒன்றே கவனமாக இருப்பவர்கள் வழியில் வருகின்ற இது போன்ற சிறு சிறு விஷயங்களால் சஞ்சலம் அடைய மாட்டார்கள்  என்றும் சொல்லுகிறார்.

By the way, அந்த கதையில் ஔசேப்பச்சன் சொல்வதில் தவறெதுவும் இல்லை என்பதே என் கருத்து. It is his opinion. Beauty lies in the mind of the beholder. Its plain ridiculous to say that even the characters of stories should speak politically correct. இன்னும் சொல்லப் போனால் மேற்கு கரையோரம் நண்பர்களுடன் பயணம் செல்லும் போதெல்லாம் நானும் கிட்டத்தட்ட இதே கருத்துக்களை கூறி இருக்கிறேன். இப்படி ஒரு பக்கம் சமூக வலை தளத்தில் இந்த விஷயம் ஓடி கொண்டிருப்பது தெரிந்தும் மீண்டும் அதே போன்ற சச்சரவு உருவாக்கும் potential கொண்ட உரையாடல் நிரம்பிய  “கைமுக்கு” வெளியிட்டு உள்ளீர்கள். அதில் உள்ள பல்வேறு சமூகங்கள் குறித்த கேலி கிண்டல்களை வேறு எவரும் இவ்வளவு தைரியத்துடன் சொல்ல முடியுமா என்பது சந்தேகமே. கதையில் தானே என்றாலும்.அந்த துணிச்சலிற்கு எனது பாராட்டுக்கள்.

பல இடங்களில் சிரிப்பை என்னால் அடக்க முடிய வில்லை. வாய் விட்டே சிரித்து கொண்டு இருந்தேன். நல்லவேளையாக அருகில் யாரும் இல்லை. குற்றங்களை செய்து கொண்டிருக்கும் ஒருவன் அதை நியாயப்படுத்த சொல்லுவதை பார்க்கும் போது சரிதானே என்று தோன்றும் வகையில் மகேஷ் தரப்பு சொல்ல பட்டு இருந்தது. குற்றவாளியின் பார்வையில் சொல்லும் பொழுது தஸ்தாவஸ்கி அங்கே வந்தே தீர வேண்டும்.என படிக்கும் போதே நினைத்தேன். வருகிறார். மேலும் சமூகம் சுயநலத்துடன் அறமற்று சென்று கொண்டு இருப்பதையும், கிரிமினல்கள் மட்டும் அல்ல நமது சமூகத்தின் பல கிளைகளும் எல்லா வித தகிடுதத்தங்களையும் செல்வம் சேர்ப்பதற்கு   நியாயப்படுத்துதலை கதை சொல்லி செல்கிறது.

படித்து முடித்த பிறகு நமது சமூகத்தை/நாட்டை  பற்றிய ஒரு அவ நம்பிக்கை ஏற்பட்டது உண்மை. கடைசியாக இனி இன்னும் இருபது ஆண்டுகளுக்கு புனித  ஃப்யூரர் ஆட்சி தான் என்று வரும் போது அவநம்பிக்கையின் உச்சத்தையே அடைந்தேன் என்று சொல்ல வேண்டும். ஏன் அப்படி? கொஞ்சம் நல்ல விதமாக முடிக்க கூடாதா… புனித  ஃப்யூரர் – சொல்லாட்சி அருமை. திரு பி எ கிருஷ்ணன் அவர்கள் தான் ஒரு குறிப்பிட்ட VIP நபரை பற்றி முக நூலில் இவ்வாறு சொல்வார். நீங்கள் அத்தோடு புனிதர் பட்டத்தையும் சேர்த்து  விட்டீர்கள்.

சமீபத்தில் தான் குற்றமும் தண்டனையும் படித்தேன். “கைமுக்கு” அதன் இக்காலத்திய ஆனால் வேறு ஒரு தளத்தில் சொல்லப் பட்ட சிறிய நாவல் போல இருந்தது. குற்றமும் தண்டனையும் முழு நீள ட்ராஜெடி என்றால் கைமுக்கு கொஞ்சம் சிரிப்பு தோரணம் கட்டப்பட்ட ட்ராஜெடி கதை. சற்றே தாமதமான பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

நன்றிகளுடன்

சுப்ரமணியம்.

***

ஆழி [சிறுகதை]

அன்புள்ள ஜெ

ஆழி கதையை என் வாழ்க்கையின் ஒரு சம்பவத்துடன் இணைத்து வாசித்தேன் [ஆகவே என் பெயர் வேண்டாம்] நான் என் மனைவியுடன் பேசி டிவோர்ஸ் வரை முடிவுசெய்தோம். எங்களுக்கு குழந்தைகளும் இல்லை. ஆகவே எந்தப் பிரச்சினையும் இல்லை. பேப்பர் கொடுத்துவிட்டோம். அப்போது நாங்களிருவரும் ஒரு கோயிலுக்கு போனோம். பத்துப் பன்னிரண்டு நண்பர்கள் இருந்தார்கள். நான் அவளிடம் பேசவே இல்லை. அனேகமாக அதுதான் கடைசி சந்திப்பு என்று நினைப்பு இருந்தது.

கோயில்முன் நின்றபோது கலைந்து நின்றோம். அவள் எங்கோ நின்றாள். அய்யர் என்னிடம் பிரசாதம் தரும்போது “புருசன் பொஞ்சாதி சேந்து வாங்கிக்குங்கோ… அம்மன் ரொம்ப விசேசம்” என்று சொன்னார். என்னையும் அவளையும் பார்த்து சரியாகச் சொன்னார். ஆச்சரியமாக இருந்தது. “எப்படி நாங்கள் கணவன் மனைவின்னு நினைச்சீங்க?” என்று கேட்டேன். “அய்யய்யோ அப்டி தோணிட்டுது” என்று சொன்னார். நண்பன் ஒருவன் ‘உண்மையாகவே அப்படித்தான்” என்றான்.

அதன்பின் காரில் திரும்பும்போது அந்த அய்யருக்கு ஏன் அப்படி தோணியது என்று நான் கேட்டேன். நம்மைப் பாத்தா அப்டி தோணுது போல என்று அவள் சொன்னாள். அப்படியெல்லாம் பிரிய முடியாது என்று புரிந்தது. இணைந்துவிட்டோம். மறுபடி சண்டை எல்லாம் வந்தது. ஆனால் நாலைந்து ஆண்டுகளில் சரியாக போயிற்று. இப்ப இரண்டுபேருக்குமே அறுபதுக்குமேல் வயசு. இரண்டுபேருக்குமே நோய். அன்பாகத்தான் இருக்கிறோம் நம்மை ஒண்ணக்கவேண்டும் என்று ரொம்ப பெரிய ஒன்று நினைத்தால் ஒன்றுமே செய்ய முடியாது

எஸ்.

***

அன்புள்ள ஜெ

தங்களுடைய ஆழி கதையை வாசித்தேன். எனக்கு 2 வகையில் மிகவும் உவப்பானது.

முதலாவது இதன் கதை களம். மணப்பாடு சிலுவை கோவில் என்னுடைய நேர்ச்சை கோவில். முன்பெல்லாம் செப்டம்பர் 14 திரு சிலுவை திருவிழா மிக சிறப்பாக கொண்டாடப்படும். எல்லா கடற்கரை கிராமத்திலிருந்தும் கால் நடையாக வருவார்கள். எங்களுடையது கேரளா பகுதியை ஒட்டிய கடற்கரை கிராமம். இந்த கோவிலை அடைய 2 நாட்கள் ஆகும். சின்ன வயதில் பொதி சோறை கட்டி கொண்டு அப்பாவின் தோள்களில் ஏறி திருவிழாவில் கலந்து கொண்ட ஞாபகம் இருக்கிறது. அப்போது இந்த கோவிலை சுற்றி கண்ணுக்கெட்டிய தூரம் வரை மணல் மேடுகளாக இருக்கும். ஆள்கள் முட்டி போட்டு வரிசையாக சிலுவை ஆராதனை செய்வதை பார்க்கலாம்.

இரண்டாவது கடல் விளையாட்டு, உங்களது விவரணைகள் என்னை சிறு வயதிற்கு எடுத்து சென்றது. சிறு வயதில் பக்கத்து வீட்டு அண்ணன்கள் தூக்கி கொண்டு போய்  கடலில் இடுவார்கள். அப்படியே கடல் நீச்சல் பழகுவோம். நீச்சல் பழகிய பின், கடலில் கொண்டு சென்று தோதான அலை பார்த்து கரை நோக்கி தள்ளி விடுவார்கள். சரியான புரிதல் இல்லாமல் கரையில் வந்து மோதுவோம். தலையிலும் வாயிலும் மணல் வந்து ஏறும். கொஞ்சம் கொஞ்சமாக அலை விளையாட்டின் நுணுக்கங்கள் பிடிபடும். எந்த அலைக்கு எப்படி உடலை வளைக்க வேண்டும் என்பது புரிபட்டால், அலை விளையாட்டில் திளைக்கலாம். கடல் நம்மை எச்சரிக்கும் சில தருணங்கள் உண்டு. அம்மா நம் காதை திருகி எச்சரிப்பது போல், சிறு சுழி கொண்டு இழுத்து செல்லும். அல்லது அப்பா நம்மை அடிப்பது  போல் திடீரென்று ராட்சத அலை வந்து தாக்கும். நாங்கள் பொதுவாக விளையாட்டை விட்டு கரை ஒதுங்குவோம்.

இந்த கதையை பொருத்த வகையில் உச்ச தருணம் என்பது அவள் அவனுக்காக கடலில் குதிப்பதுதான். இந்த செயலையும், சிலுவையையும் நினைத்தால் பைபிள் வசனம் ஞாபகம் வருகிறது “தன் நண்பனுக்காக உயிரை கொடுப்பதை விட மேலான சிநேகம் இல்லை”. இதை புரிந்து கொண்ட பின் அவர்களுக்கு பிரிவென்பதே இல்லை.

இந்த இக்கட்டான நேரத்தில் எங்களை இலக்கியத்தின் பாதையில் அழைத்து செல்வதற்கு நன்றி.

உங்கள் அன்புள்ள

சிலுவய்யன் 

***

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–46
அடுத்த கட்டுரைவான்நெசவு, மாயப்பொன் – கடிதங்கள்