வான்நெசவு, மாயப்பொன் – கடிதங்கள்

வான்நெசவு [சிறுகதை]

அன்புள்ள ஜெ,

பி.எஸ்.என்.எல் கதைகளை ஒரு தொடக்கம் என்று சொல்லலாம். ஏற்கனவே தமிழில் இந்தவகையான கதைகள் வந்திருக்கின்றனவா? ஆ.மாதவன் கடைத்தெருக் கதைகள் என்றபேரில் சாலைத்தெரு பஸார் பற்றி எழுதிய கதைகளுக்கு ஒரு இடத்தில் அமைந்த கதைகள் என்ற பொது அம்சம் உண்டு. ஆனால் ஒரே தொழிலுக்குள் அமைந்த கதைகள் இல்லை.

வணிக எழுத்தில் ஆர்தர் ஹெய்லி மாதிரி தமிழில் பி.வி.ஆர் அந்தக்காலத்தில் நீதிமன்றம் ஆஸ்பத்திரி எல்லாம் பின்னணியாக வைத்து கதைகளை எழுதியிருக்கிறார். பாலகுமாரன் இரும்புக்குதிரைகள் எழுதியிருக்கிறார். ஆனால் அந்தக்கதைகள் எல்லாமே அந்த தொழில்சூழலின் பிரச்சினைகளை எழுதியவை. அந்த கதைக்கு அந்த தொழிற்சூழல் எதற்காக என்ற கேள்விக்கு அந்தக்கதைகளில் பதில் இல்லை

இந்த பிஎஸ்என்எல் கதைகள் அல்லது டெலிகாம் கதைகள் அந்தச்சூழலை உருவகமாக பயன்படுத்திக்கொள்பவை. இந்தக்கதைகளில் உள்ள யூனிட்டி இந்தக்கதைகளை வேறொரு சூழலில் எழுதமுடியாது என்று நினைக்கவைக்கிறது. இந்தக்கதைகளைப்போல பல்வேறு தொழிற்சூழலில் இருந்து கதைகள் வந்தால் வேறு ஒரு இலக்கியச்சூழல் இங்கே உருவாகும் என்று நினைக்கிறென். இங்கே இன்னும்கூட எழுதப்படாத ஏராளமான தொழிற்சூழல்கள் உள்ளன. அவை ஒவ்வொன்றிலும் அங்கே மட்டுமே தோன்றும் கதைகள் உள்ளன

இந்தவரிசைக் கதைகளில் எனக்கு முக்கியமானதாகப் பட்ட கதை உலகெலாம். அது ஒரு தத்துவ தரிசனத்தையே அளிக்கிறது. இந்தக்கதைகளில் முக்கியமான விஷயம் தொழில்நுட்பம் போன்றவை எதிர்மறையாகச் சித்தரிக்கப்படவே இல்லை என்பதும் அவை மனிதனை ஒன்றாக்குகிற விஷயமாக, உலகை வானுடன் இணைக்கும் ஆன்மிகமான கருவிகளகாவே காட்டப்பட்டுள்ளன என்பதுதான். உலகெலாம் ஒரு அத்வைத தரிசனம்

ராஜ்குமார்

***

இரும்புமாடன் கதைகள்

புனைவுக்களியாட்டு கதைகளில் என்னைப்பொறுத்தவரை மூன்றுவகை கதைகள் உள்ளன. அவைகளில் ஒன்று டெலிகாம் கதைகள். அடிப்படையில் இந்தக்கதைகள் அனைத்தும் தொலைத்தொடர்பு நிறுவனத்தில் வேலைச் செய்யும் மனிதர்களின் கதைகள். ஆனால் இந்தக் கதைகளின் முதன்மையான நாயகன் 1000 அடி உயரம் எழுந்து நிற்கும் இரும்புமாடன்தான். அவன்தான் இந்தக் கதைகளுக்கான மிகச்சிறந்த குறியீடு. இரும்புமாடனும் அதாவது தொழில்நுட்பமும் மனிதர்களும் தொட்டுக்கொள்ளும் புள்ளிகள்தான் இந்த டெலிகாம் கதைகள். இரும்புமாடனின் கதைகள்.

’வான்கீழ்’ ஒரு இயல்பான மீறலின் கதை. ஏனெனில் அந்த இரும்பு மாடன் ஒரு தொழிநுட்ப சாதனைதான். இரும்புபொருட்களை எண் நோக்கி சரியாகப் பொருத்திக்கொண்டு செல்வதுதான் அதன் நடைமுறை கணக்கு. ஆனால் கடைசியில் அதன் உச்சியில் கணக்கிலே வராத ’ஒன்று’  ஏறி நிற்கிறது.  இரும்பு மாடனின் மேல் நிற்கும் அந்த காதல்தான் அது.  ஒர் இரும்பு கம்பத்தில் இயல்பாக பற்றி ஏறி வளரும் கொடி போல அந்த காதலர்கள் இருவரும் உச்சியில் நிற்கிறார்கள். கிழக்கில் சூரியன் எழும் கணம். கற்கோவில்களில் பறக்கும் கந்தவர்வ இணைகளைப் போல இரும்புக்கோபுரத்தில் ஜொலிக்கும் காதலர்கள்.

’வான்கீழ்’ கதையின் சீக்வல்தான் ’வான்நெசவு’. ஒரு வயதான கணவன் மனைவிக்கு அவர்கள் இளமையின் காதல்சின்னம் அளிக்கும் பொருள் என்ன என்று விவரிக்கும் கதை. ’ஏட்டி. நான் கெட்டினதாக்கும்’ என்று குமரேசன் சொல்லும்போதே இரும்புமாடன் தாஜ்மஹால் ஆகிவிட்டது. இரும்பாலான தாஜ்மஹால். காதல்சின்னம்! தொழில்நுட்பத்தின், தருக்கத்தின் விளைவாக உருவான ஒரு பிரம்மாண்டமான பொருள் ஒரு காதல் சின்னமாவது ஒரு விசித்திரமான மனஎழுச்சியை முதலில் அளிக்கிறது. ஆனால் யோசிக்கும் போது அது ஒன்றும் அவ்வளவு விசித்திரமானதும் அல்ல.

கலை உண்மையிலேயே என்ன செய்கிறது?

‘இரும்பு போல தர்க்கம் கட்டி வைத்திருக்கும் அனைத்தையும் கலை நெகிழச்செய்கிறது. உடைக்கிறது. விரியவைக்கிறது’

இரும்புமாடன் கதைகளின் தரிசனமாகக் கூட இந்த வரியைப் பார்க்கலாம். இந்த வரியில் இருந்தே ’உலகெலாம்’ கதைக்குச் செல்லலாம்.  அங்கு நமக்குத் தெரிவது தொழி நுட்பம் வழியாக உலகெலாம் விரிந்து விரிந்து பரவும் ஒரு மனிதன். ‘நான்’ ‘எனது’ எனும் அடையாளம் கரைந்து அலைகளின் வழியாக ஒரு உலகளாவிய  தன்மையை அடைந்துவிடுகிறான். இங்கு தொழில் நுட்பம் வழியே மிக மிக விசித்திரமான ஒன்று நிகழ்கிறது. முதலில் பேஸ்மேக்கர் கருவியுடன் உரையாடும் மைக்ரோவேவ் அலைகள் தொழில்நுட்பம் விட்ட ஒரு சாபம் போல அவனை துரத்துகின்றன. இரும்புக்கோபுர வடிவில் பிரம்மாண்டமாக தலைக்கு மேல் எழுந்து நிற்கும் எமன். சர்வவியாபி. ஆனால் கடைசியில் அதுவே சாப விமோசனமாகவும் ஆகிவிடுகிறது. இங்கு தொழில்நுட்பம் அளிக்கும் மன விடுதலை என்பது உண்மையிலேயே  தொழில்நுட்பத்தின் ஒரு விசித்திரமான முகம்தான்.

’குருவி’ மாடன்பிள்ளை. அடிப்படையில் கலைஞன்.  ஆனால் தொழில்நுட்பத்தில் வேலை. நீலம் சிவப்பு மஞ்சள் பச்சை வயர்களில் குருவி பின்னும் வண்ணக்கூட்டையும் மாடன்பிள்ளையும் அருகருகில் வைக்கும்போது ஒர் அழகான harmony இருவருக்கும் உருவாகிறது.

‘வானில் அலைகின்றன குரல்கள்’ என்னச் சொல்கிறது? சாந்தியின் குரலைத் தேடி வரும் கிருஷ்ணன் பட்  தோட்டான் என்ன மனநிலையில் இருக்கிறார் என்பதை காட்டிவிடுகிறான். தோட்டான்  மனைவியை இழந்தவர். அவர் பழகிய தொழில்நுட்பமும் இப்போது இல்லை. புதிதாக ஒன்று வந்துவிட்டது. ஜெயமோகன் குறைந்த சொற்களில் தோட்டானின் உடல் மொழி வழியாக அவரின் மனநிலையைச் சொல்லிவிடுகிறார். எதையும் பற்றமுடியாமல் ஒவ்வொரு நொடியும் துடிக்கும் மனிதன் இருக்கிறானே! அவனைப் போல இந்த உலகில் துயரமானது வேறெதுவும் இல்லை.

அந்த போர்ட் முன் அமர்ந்து அவர் கேட்பது என்ன? மற்ற அனைவருக்கும் அவர் கேட்பது தொழில்நுட்பம் உருவாக்கும் தேவையில்லாத ஒர் இரைச்சல். ஆனால் தோட்டானுக்கு? அது ரீங்காரம். இசை. ககனவெளியில் அலையும் லிசியின் குரல்.  மனித மனம் ஒரு பிளேடு போல தொழில்நுட்பத்துடன்  உரசிக்கொள்ளும் புள்ளி இது.  சில்லிட வைக்கிறது.

‘பாம்புக்க லூப்பும் இருக்கட்டும்’ என்று சொல்லும் ஞானம் சாரின் காலம் முடிந்து காடே இல்லாமலாகிவிடும்போது ஒர் ஆழ்ந்த துயரம்தான் மிஞ்சுகிறது. தொழில் நுட்பம் ஒன்றை உருவாக்கும்போதே இன்னொன்றை அழித்துக்கொண்டே செல்லும் விசையாகவும் இருக்கிறது. அந்த முகம் ‘லூப்’ கதையில் வெளிப்படுகிறது.

ஒரு தொழில்நுட்பசிக்கலுக்கும் அதனால் விளையும் உச்சக்கட்ட மனஅழுத்தத்திற்கும் ஒரு குழந்தையின் தீர்வுதான் ‘நகைமுகன்’. இன்னோஸன்ஸின் தீர்வு. எந்த அளவுக்கு சிக்கல் பெரியதாகவும் அழுத்தம் அதிகமாகவும் இருந்ததோ அந்த அளவுக்கு ஒர் அசாத்தியமான விடுபடல் கதையில் நிகழ்கிறது. சிறுபிள்ளைகள் இருக்கும் வீடுகளில் அடிக்கடி நிகழும் விடுபடல்தான் அது.

‘சுற்றுகள்’ கதையில் வருவது போல விசித்திரமான ஒரு மின்சுற்றில் ஜெயமோகனும் வாசர்களாகிய நாமும் இணைந்திருக்கிறோம். மேலும் முன்பெல்லாம் டயல் செய்த எண்ணை இணைப்பதற்கு மேனுவல் எக்ஸ்சேஞ் இருக்கும். டெலிபோன் ஆப்ரேட்டர் ஒரு இயந்திரத்தின் முன் அமர்ந்துக்கொண்டு இருவரையும் இணைப்பார். வாழ்க்கையின் ஏதோ ஒரு முனையில் இருந்து ஜெயமோகனை ஒரு குரல் அழைக்கிறது. அதை ஜெயமோகன் நம்முடன் இணைத்துவிடுகிறார். அல்லது வாழ்க்கையின் எதோ ஒரு முனையத் தொட்டு அதிர்வடைகிறார். அவர் அடையும் அதிர்வுகளே அவரது ஒவ்வொரு கதையும். மீண்டும் மீண்டும் அந்தக் கதைகளைத் தொட்டு நாமும் அதிர்வடைகிறோம்.

1000 அடி எழுந்து நிற்கும் இரும்புமாடனைப் போலத்தான் ஜெயமோகனும். உயரமாக எழுந்து நிற்கும் கதைமாடன்.  அதிர்ந்து அதிர்ந்து சன்னதம் ஆடும் மாடன்.

கதைமாடனை வணங்குவோமாக!

அன்புடன்
ராஜா.

***

மாயப்பொன் [சிறுகதை]

அன்புள்ள ஜெ

இந்த கொரோனா காலகட்டத்துக் கதைகளில் மாயப்பொன் கதையை மிக அபூர்வமான கதையாக நினைக்கிறேன். அந்தக்கதையைப்பற்றி என் குரூப் நண்பர்களிடம் பேசிக்கொண்டிருந்தேன். உண்மையில் அந்தக்கதை சொல்வது என்ன? பலபேர் பெர்ஃபெக்‌ஷன் ஆஃப் கிராஃப்ட் அல்லது பெர்ஃபெக்‌ஷன் ஆஃப் ஆர்ட் என்று சொன்னார்கள். அப்போது சீனியர் ஒருவர் பெர்ஃபெக்‌ஷன் ஆஃப் ஆர்ட் அல்லது கிராஃப்ட் என்பது ஒரு லிமிட் உள்ளது என்றும் லிமிட்லெஸ் ஆன ஒன்று அதற்கு மேலே உண்டு என்றும் சொன்னார்.

ஒரு செயலை யோகமாகச் செய்வது அது. அப்போது அது தவமாக ஆகிவிடுகிறது. தவம் வழியாக அடைவது எப்படி இருந்தாலும் முழுமை அல்லது விடுதலை தானே ஒசிய ஒரு நல்ல ரிசல்டை அல்ல. என்னால் இதை எப்போது நினைத்தாலும் செய்யமுடியும் என்றால் இதை நான் ஏன் செய்யவேண்டும் என்று நேசையன் கேட்கிறான். அது மிகமுக்கியமான ஒரு விஷயம். அவன் தேடுவது சிறந்த கலையை அல்ல. கலைவழியாக விடுதலையைத்தான்

செந்தில்குமார்

***

இந்த எதிர்பாரா விடுமுறையில்  நீங்கள் தினம் எழுதும் சிறுகதைகளை படிக்கிறேன். அம்மா அதிகாலையிலேயே படித்துவிட்டு பகலில் கொஞ்சம் கொஞ்சமாக ட்ரைய்லர் போல சொல்லிக்கொண்டிருப்பார்கள். பின்னர் இரவுணவுக்கு பின் தென்னைமரங்களுக்கடியில் கயிற்றுக்கட்டிலில் உட்கார்ந்து எனக்கும் தம்பிக்குமாக அம்மா கதையை முழுதாக சொல்ல கேட்போம்.  சிலவற்றை மட்டும் நானே வாசித்தேன். எல்லாமே நல்ல கதைகள். எனக்கு ’’சுற்றுக்கள்’’ மிகவும் பிடித்திருந்தது. சர்க்யூட்ஸ் குறித்து இப்போது கல்லூரியில் கற்றுக்கொண்டிருக்கிறேன். எனவே அம்மாவுக்கும் கதையை  விளக்கி சொன்னேன். நானும் 9 வோல்ட்ஸ்பேட்டரியை நாக்கில் வைத்து  சுர்ரென்று ஷாக் அடிப்பதை அப்பப்போ செய்துபார்த்திருக்கேன். சர்க்யூட் ஷாக்கிலேயே காதலையும் நாகவேணி சொன்னது நன்றாக இருந்தது.

நேற்றைய மாயப்பொன்னை பின்னிரவில் நல்ல இருட்டில்  நட்சத்திரங்களை பார்த்துக்கொண்டு அம்மா சொல்ல கேட்டுக்கொண்டிருந்தேன். நல்ல கதை. நேசையன் அவன் நினைத்தபடிக்கே அதை காய்ச்சியதுமே எனக்கு அவனை கடுத்தா கொல்லும் என்று தோன்றிவிட்டது. அவனுக்கும் அது நிறைவையே அளித்திருக்கும். நிலவு கீழிறங்கி காடே பளபளக்கும் அந்த இரவை நான் இருந்த இருட்டிலும் என்னால் கற்பனை செய்துகொள்ள முடிந்தது.

பள்ளியில் படிக்கையில் வாசித்திருந்த  ஓ ஹென்றியின் ‘ இறுதி இலை’ சிறுகதையை மாயப்பொன்னுக்கப்புறம் நினத்துக்கொண்டேன். Magnum opus சித்திரமொன்றை வரையும் கனவில் இருந்த ஒரு ஓவியர் அது கைகூடாமல்  என்னென்னவோ செய்து பிழைத்துக்கொண்டிருப்பார். அவருக்கு மாடலாக இருந்த ஒரு பெண் நோய்வாய்ப்பட்டிருக்கையில்  ஜன்னல் வழியே தெரியும் ஒரு கொடியின் இலைகளை அவள் இனி வாழப்போகும் நாட்களாக எண்ணிக்கொண்டு அவை ஒன்றொன்றாக உதிர்கையில் அவளும் கொஞ்சம் கொஞ்சமாக செத்துக்கொண்டிருப்பாள். இறுதியில் ஒற்றை இலை மட்டும் இருக்கும் ஓரிரவில் அவள் முற்றிலும் நம்பிக்கை இழந்திருப்பாள் ஆனால் அடுத்த நாளிலிருந்து  அந்த இறுதி இலை உதிராமல் அப்படியே பலநாட்கள் இருக்கும் அவளும் நம்பிக்கை பெற்று உயிர்பிழைத்துவிடுவாள். பிறகு தெரியும் அந்த கொடியின் இலை உதிர்ந்துவிட்ட அந்த இரவில் நிமோனியாவுடன் இருந்த  ஓவியர் மழையில் அந்த ஜன்னலில் ஒற்றை இலையுடன் இருந்த அக்கொடியை வரைந்துவிட்டு இறந்துவிட்டார் என்று. அப்படி ஒரு தத்ரூபமான கொடியின் ஓவியத்திற்கு பிற்கு அவருக்கும் நேசையனுக்கு தோன்றியதைபோலவே இனி போதும் என்று தோன்றியிருக்கும். அது பாடபுத்தகத்தில் எளியநடையில் இருந்த ஒரு கதை மாயப்பொன்னைப் போலல்ல இருந்தாலும் அக்கதையை நான் நேற்று நினைத்துக்கொண்டேன்

அருமையான கதைகள் சில கதைகளில் தொடர்ச்சியும் இருப்பதால் அதிகம் கதைகளைப்பற்றி பேசிக்கொண்டே வீட்டில் மகிழ்ச்சியாக இருக்கிறோம்

அஜி அண்ணா நலம்தானே

அ.சரண்

***

முந்தைய கட்டுரைஆழி, கைமுக்கு- கடிதங்கள்
அடுத்த கட்டுரைகதைகள் கடிதங்கள்