எழுகதிர் [சிறுகதை]
அன்புள்ள ஜெ
எழுகதிர் நான் வாசித்து நாலைந்து நாட்கள் ஆகிறது. வாசித்தபோது இருந்ததைவிட இப்போது அந்தக்கதை பெரிதாகிக்கொண்டே போகிறது. அந்தக் கதையில் இரண்டு அப்செஷன்கள் உள்ளன. ஒன்று கதைசொல்பவனுக்கு ஸ்ரீகண்டன் மீது இருக்கும் அப்செஷன். இன்னொன்று ஸ்ரீகண்டனுக்கு கிழக்கு மேல் இருக்கும் அப்செஷன்.
முதல் வெறி என்பது உலகம் சார்ந்த ஒன்று. அதை இங்கிருந்தே நாம் அடைகிறோம். அதை இங்கேயே தீர்த்துக்கொள்ள முடியும். ஆனால் அந்த இரண்டாவது வெறி எங்கிருந்து வருகிறது என்றே தெரியாது. எங்கே கொண்டுபோகிறது என்றும் தெரியாது. அந்த மாயவெறி வந்த பலபேர் நம்மிடையே இருப்பார்கள். அதை ஸ்பிரிச்சுவலாக மட்டும் பார்க்கவேண்டியதில்லை. உலகவாழ்க்கையிலேயே கூட அப்படி ஒரு பித்து வந்து நம்மை அப்படியே ஆட்கொண்டு இழுத்துக்கொண்டு சென்றுவிடுகிறது
இணையத்தில் சிலபேரை வாசிக்கிறோம். எல்லா வசதிகளும் திறமைகளும் இருந்தும் சினிமா போன்ற ஒன்றில் விழுந்துவிடுகிறார்கள். அவர்களால் அந்த அப்செஷனை கடக்கவே முடிவதில்லை. அவர்கள் எங்கும் சென்று சேர்வதில்லை. ஆனால் வெறிகொண்டு போய்க்கொண்டே இருக்கிறார்கள். அவர்கள் தோல்வி அடைந்தவர்களா இல்லை அப்படி சென்றுகொண்டே இருப்பதுதான் வாழ்க்கையின் அர்த்தமா? மிகப்பெரிய கேள்வி அது
சந்திரகுமார்
***
அன்புள்ள ஜெ.
எழுகதிர் கதையில் , சூரியனை நோக்கிய பயணம் என்ற படிமம் மிகவும் யோசிக்க வைத்தது
கதைசொல்லியும் ஶ்ரீகண்டனும் கிட்டத்தட்ட ஒரே பின்புலத்தை சார்ந்தவர்கள். ஆனால் ஶ்ரீ மட்டுமே சூரியனை நோக்கி பயணப்பட முடிகிறது. கதை சொல்லி நூலிழையில் அதை தவறவிடுகிறான். அவனுக்கு ஒரு போதும் அந்த ஒளி சாத்தியமில்லை
கதை சொல்லியின் கெத்து என்பதே , தன் அப்பாவுக்காக எப்படியெல்லாம் வருந்துகிறேன் தெரியுமா என்ற குற்றஉணர்ச்சிதான். அப்படி வருந்துவதையே தனது மேன்மை என நினைத்துக் கொள்கிறான்
இதே போன்ற தவறை செய்திருக்க வாய்ப்புள்ள ஶ்ரீ ( அவனும் அதை செய்திருக்கலாம் என்ற யூகத்துக்கு கதையில் இடமிருக்கிறது) அவனது ஒவ்வொரு செயலுக்கும் வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்துக்கும் பொறுப்பேற்று சூரியனை நோக்கி பயணிக்கிறான்
ஶ்ரீ மீது கதைசொல்லிக்கு இருக்கும் மரியாதையும் , கதை சொல்லி,மீது ஶ்ரீக்கு இருக்கும் அன்பும் வெகு சூட்சுமமானது
http://www.pichaikaaran.com/2020/04/blog-post_87.html?m=1
என்றென்றும் அன்புடன்
பிச்சைக்காரன்
***
உலகெலாம் [சிறுகதை]
அன்புள்ள ஜெ
நலம்தானே?
நீண்ட இடைவேளை. நான் இப்போது ஓய்வுவாழ்க்கையில். பி.எஸ்.என்.எல் இன்றைக்கு இருக்கும் நிலைமை பற்றி நீண்ட கடிதம் ஒன்று எழுத நினைத்தேன். எழுதுவது ரொம்ப கஷ்டம். செல்போனில் டைப் செய்யவேண்டும்
நீங்கள் டெலிகாம் விட்டு விலகி பத்தாண்டு ஆகிவிட்டது இல்லையா? இதுவரை ஒரு கதைகூட எழுதியதில்லை. இப்போது எழுதிக்கொண்டே இருக்கிறீர்க்ள். காரணம் சமீபத்தில் காசர்கோட்டுக்குப் போனதுதான் என நினைக்கிறேன். அங்கே பிஎஸ்என்எல் இன்றைக்கு இருக்கும் நிலைமைகளைப் பற்றிச் சொல்லியிருந்தீர்கள்.
இந்த பேஸ்மேக்கர் கருவி பற்றி ஒரு அனுபவம் எனக்கு உண்டு. ஒருமுறை ஒரு கஸ்டமர் இப்படி உள்ளே வந்துவிட்டார். அவருக்கு வழிதெரியவில்லை. அவருக்கு சின்ன ஸ்ட்ரோக் வந்துவிட்டது. அதன்பிறகு ஆஸ்பத்திரிக்குப் போய் பார்த்தபோது உடம்பெல்லாம் கிட்டார் வாசித்ததுபோல இருந்தது என்று சொன்னார். எனக்கு அவர் சொன்னது ஆச்சரியமாக இருந்தது
நான் அது கிச்சிகிச்சி மூட்டுவதுபோல என்று நினைத்துக்கொண்டேன். ஆனால் இன்றைக்கு இந்தக் கதையை வாசிக்கும்போது அது ஒரு அற்புதமான இனிமையான அனுபவம் ஆக இருந்திருக்கும் என்று நினைக்கிறேன். அவர் இன்றைக்கு இல்லை. இருந்திருந்தால் கேட்டிருக்கலாம். யோசித்துப்பார்த்தால் வானத்தையே நிறைத்திருக்கும் ஒன்று நம் உடம்புடன் தொடர்பு கொள்வதுபோலத்தானே அது? கடைசியில் அவர் நரம்புவாத்தியம்தான் கேட்கிறார்
அந்தக்கதையை வாசிக்கும்போது எனக்கே கைவிரல் எல்லாம் கூச்சமெடுப்பதுபோல தோன்றியது
சங்கரநாராயணன்
***
அன்பு நண்பர் ஜெயமோகனுக்கு
வணக்கம் நலம்தானே
உலகெலாம் படித்தேன். மீண்டும் தொலைப்பேசித்துறையின் தொழில் நுட்பம் தொடர்பான ஒரு கதை. அது தொடர்பான அறிவு எனக்கில்லை . இருந்தாலும் கதையை எளிதாக வாசித்து உள்வாங்க முடிந்தது. சுகுமாரனுக்கு ஃபேஸ் மேக்கர் வைத்தவுடனேயே வாழ்வு குறித்த அச்சம் ஏற்பட்டு விடுகிறது. மைக்ரோவேவ் வந்த நாளில்தான் முதன் முதல் மாரடைப்பு வந்ததால் அதைத் தன்னைக் கொல்ல வந்த எதிரியாக நினைக்கிறார். மைக்ரோவேவ் எங்கிருந்தாலும் அதன் அதிர்வு அவரின் ஏழாம் அறிவால் அல்லது ஃபேஸ்மேக்கரின் தொழில் நுட்பத்தால் உணரப்படுகிறது. அது அவரை மிகவும் சிரமத்துக்கு உள்ளாக்குகிறது. மயக்கத்துக்கும் மாரடைப்பு வரும் நிலைக்கும் அவரைத் தள்ளுகிறது.
இறுதியில் அவர் எதிரியுடன் நேருக்கு நேர் போராடுவது என முடிவெடுக்கிறார். அதனால் தான் கட்டுக்காவல்களையெல்லாம் மீறி மைக்ரோவேவ் அறைக்குச் செல்கிறார். நமக்குத் தெரியாமல் அங்கே போர் நடக்க சுகுமாரன் வெற்றி அடைகிறார். அது கண்ணுக்குத் தெரியாத நுண்கிருமியுடன் நடக்கும் போர் போன்றதுதான் தன்னம்பிக்கை, துணிச்சல் தனித்திருந்து போராடும் குணம் இவற்றால் சுகுமாரன் வெற்றியடைவதைக் காட்டும் இக்கதை இக்கொரானா காலத்தில் அவசியம் வாசிக்க வேண்டிய கதை
வளவ. துரையன்
***