கைமுக்கு [சிறுகதை]
அன்புள்ள ஜெ,
கைமுக்கு கதையை வாசிக்கும்போது இந்த கதைவரிசையில் உள்ள கலவையான தன்மையை நினைத்துக்கொண்டேன். ஒருவகை கதைகள் மிகமிக ஒருமையான வடிவில், மையம் மிக நுட்பமான உணர்த்தும்வகையில் உள்ளன. உதாரணமான கதை ‘கலைவதும் பொலிவதும்’. இன்னொரு வகையான கதைகள் திட்டமிட்டே கதையின் ஒருமையை சிதைக்கின்றன. இந்த ஔசேப்பச்சன் கதைகள் அவ்வகையானவைதான்.
வடிவ ஒருமையை எப்படிச் சிதைக்கின்றன என்றால் ஒன்று ஔசேப்பச்சனும் மற்றவர்களும் அடிக்கும் கமெண்டுகள் வழியாக கதைக்குள் ஊடுருவிக் கலைக்கின்றன. இன்னொன்று ஒன்றுக்குமேற்பட்ட கதைகளை ஒன்றுடன் ஒன்று கலந்து கலைக்கின்றன. ஒருகதை கூர்மையாக முன்னால் ஓடுவதில்லை. மூன்றாவதாக கதைக்குள் பல கதைசொல்லிகள் வருகிறார்கள். ஔசேப்பச்சன் ஒரு கதைசொல்லி. அதற்குள் சிவராஜபிள்ளையின் கதையை ஒருவர் சொல்கிறார். சிவராஜபிள்ளை அவரிடம் தன் கதையைச் சொல்கிறார். மகேஷ் ஒரு கதைசொல்லி. இந்த கதைசொல்லிகள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையானவர்கள். அவர்களின் பார்வைகளால் கதையின் ஒருமை சிதைக்கப்படுகிறது
இந்த உத்தியால் இந்தக்கதை ஒரு கொலாஜ் வடிவை அடைகிறது. பலதலைமுறைக்கதைகள். சிவராஜபிள்ளையின் கதை. அவருடைய மாமனாரின் கதை. அவருடைய மகனின் கதை. கடுமையான உழைப்பு வழியாக ஒரு எளிமையான வாழ்க்கையை அடைந்தவர் சிவராஜ பிள்ளை. ஒழுக்கம் பக்தி என்றெல்லாம் நம்புகிறார். ஆனால் வாழ்க்கையில் ஒரு நன்மையும் நடக்கவில்லை. சாஸ்தா துணைசெய்யவில்லை. அவர் மகன் மகேஷ் திருடுவதற்கு அவனே பல சூழல்சார்ந்த காரணங்களைச் சொல்கிறான். அதெல்லாம் முக்கியமில்லை. அப்பா ஒழுங்காக இருந்து என்ன கண்டார் என்பதுதான் முக்கியமான காரணமாக இருக்கமுடியும். அதேபோல கடைசியில் மகேஷை அப்பா ஏற்றுக்கொள்வதும் அதே காரணத்தால்தான்
இது சென்ற இரண்டு தலைமுறைக்கால ஒழுக்கமரபில் வந்த மாற்றம். சிவராஜபிள்ளையின் மாற்றம் நம்மைச்சுற்றி நடந்துகொண்டே இருக்கிறது. வறுமையிலும் செம்மை என்ற வேல்யூ எல்லாம் இப்போது மதிப்பே இல்லாதது. சிவராஜபிள்ளை கடைசியில் எல்லாவற்றையும் நியாயப்படுத்துகிறார். அந்தக் குரலை நாம் கேட்டுக்கொண்டே இருக்கிறோம். அந்த குரல் எப்படி உருவாகி வந்தது என்றுதான் மகேஷ் சொல்கிறான்.
கதைக்குள் கதைக்குள் கதை, கதைசொல்லிகளின் வேறுவேறுகதைகள் என்றெல்லாம் நம்மில் எழுதிப்பார்த்திருக்கிறார்கள். ஆனால் ஆசிரியர் முயற்சிசெய்கிறார் என்றுதான் தோன்றும். அந்த உத்தி இயல்பாக அமைந்து கதைக்குள் ஒரு தேவையை பூர்த்தி செய்திருக்காது. இந்தக்கதையில் அதைக் காண்கிறேன். எல்லாருமே போலி சிலைகளைத்தான் எடுக்கிறார்கள். ஆகவே எல்லார் சொல்லும் கதையும் கொஞ்சம் பொய்தான். அப்படியானால் உண்மையான கதை என்ன என்ற எண்ணமே இந்தக்கதைவிளையாட்டின் கடைசியில் மிஞ்சிநிற்கிறது
ராமச்சந்திரன்
***
வணக்கம் ஜெ
கைமுக்கு சிறுகதையை வாசித்தேன். அசாத்தியமான கதை. இரு தலைமுறையைச் சேர்ந்த இருவரின் மனமாற்றத்தைக் கதை சொல்கிறது. நூற்றுக்கணக்கான திருட்டை டைப் செய்து கொடுத்த அனுபவமுள்ளவர். பணமில்லாது போனதால் திருடினேன் போன்ற கதைகளை டைப் செய்து அதில் ஒரு உலகைப் புனைந்திருப்பார். வாழ்வின் அழுத்தம் மிகும்போது மகன் எப்படியேனும் எதையாவது செய்து வாழ்வைத் தொடரட்டும் என்ற முடிவுக்கு வந்திருப்பார். அந்தத் தலைமுறை ஆட்கள் அதை வெளியில் தெரிந்துவிடக்கூடாது என்பதில்தான் கவனமாக இருந்திருப்பர்கள். அப்படி தெரியவரும் தருணம் கைமுக்கில் கைவிடுகிற தருணம்தான். அது போக மனத்தில் பறக்கை வீட்டுப் பண்ணையாரின் மீது ஒரு வஞ்சமும் இருந்திருக்கும்.
அதற்கடுத்த தலைமுறையைச் சேர்ந்த மகேஸ் பொறுத்தளவில் எல்லா வாய்ப்புகளும் இருக்கும் வாழ்விலிருந்து வெளியேறுவதற்கான வாய்ப்புகள்தான். அவனுக்கு வாழ்வு சாகசமாக இருந்திருக்கும். அதில் குற்றவுணர்வுக்கு எல்லாம் இடமில்லை. ஆக, அதை எளிதாகக் கடந்து செல்கிறான். இந்த இரு தலைமுறையினரின் மனநிலைத்தான் கதையில் முக்கியமானது என நினைக்கிறேன்.
அரவின் குமார்
***
ஆழி [சிறுகதை]
அன்புள்ள ஜெ,
சமீபத்தில் வெளியான தங்களின் சிறுகதை ‘ஆழி’ வாசித்தேன். கதையின் தலைப்பான ‘ஆழி’, வாழ்க்கையின் ஒரு உருவகமாகவே தோன்றுகிறது .
இரு காதலர்கள் தங்களின் பிரிவு-சேர்தல் எண்ண போராட்டங்கள், அலைகளில் அவர்கள் சேரவும்-பிரியவும் செய்யும் விளையாட்டாகவே நான் பார்க்கிறேன். அவர்களின் முடிவுகள் அவர்கள் கையில் இல்லை. அவர்கள் சேர நினைத்தாலும் கடல் அலை என்னும் விதி (அல்லது கண்ணுக்கு தெரியாத ஒன்று, ஒத்துக்கொள்ள நினைப்பவர்கள் தங்களின் ஆணவம் அல்லது ‘தான்’ என்ற மையம்) அவர்களை சேர விடுவதில்லை.
இல்லாமையின் இருப்பில் தான்இருப்பின் முக்கியத்துவம் தெரிவது போல, அவன் இல்லை என்ற போது தான், தன்னிச்சையாக கடல் அலைகளில் போராடி அவனை தேடும் போது, அவன் இருப்பு தெரிகிறது. அந்த ஆழி அவர்களுக்கு ‘மனித மனம்’ ஒரு சிறு பொருள் என்று உணர்த்தியது. உங்களின் லாஜிகல் திங்கிங் எனக்கு ஒரு பொருட்டே இல்லை என்றும் அதற்கும் ஒரு எல்லை உண்டு என்றும் உணர்த்துவன போல இருந்தது. நீங்கள் ஆயிரம் காரணத்திற்காக பிரிய நினைத்தாலும் சேர்வதும், ஆயிரம் காரணத்திற்காக சேர நினைத்தாலும் பிரிவதும், ஆழியின் ஆழம் போன்று கண்ணுக்கு தெரியாத ஒன்று தான் முடிவு செய்கின்றது.
பிரவின்.
***
அன்புள்ள ஜெ,
சாரங்கனின் கடிதத்தை வாசித்தவுடன்தான் நான் ஆழி கதையை வாசித்த லட்சணம் புரிகிறது. மன்னித்து விடுங்கள்.
முன்னர் வாசித்தபோது உலுக்கும் அனுபவம் என்பதுடன் மட்டும் நின்றுவிட்டேன். ’செத்தேன்னு நினைச்சேன்’ ‘பயந்துட்டேன்’ என்று சொல்லி அதைக் கடந்தபிறகுதான் கடைசியில் மீண்டும் கடலை நோக்குகிறார்கள். இயல்பாக அவள் அவனின் கையைப் பற்றிக்கொள்கிறாள். (ஒரு கதையில் எப்படி மன நிலை மாறிக்கொண்டே வருகிறது என்று நன்கு அறிந்துக்கொண்டேன். குறிப்பாக அவர்கள் அலையில் நீந்தும்போது…சிரிப்பு, ஒருகண நெகிழ்வு, பின்னர் பீதி. வெறுமை. ’நல்ல வேளை!’ என்று ஒரு ஆசுவாசம். கடைசியில் முற்றிலும் ஒரு புதிய மனநிலை என்று மாறிவந்துக்கொண்டே இருந்தது)
பிரியலாம் என்று வந்தவர்கள் கைகோர்த்துச் செல்கிறார்கள். அதற்கு அவர்களே கூட பெரிதான காரணம் இல்லை.
இங்கு விதிதான் காரணம் என்று வாசிக்கலாம். ‘அந்தப் பெரிய கையை கண்ணாலே பாக்கமுடியலை’ என்ற சொன்ன ’ஒன்றை’ இருவரும் பார்த்துவிட்டார்கள்.
விதியும் காரணம் அல்ல என்று வாசித்தால்… ஆழியாக நின்று அவர்களை இணைத்தது எது? என்ற கேள்விதான் கதை.
அன்புடன்,
ராஜா
***