‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–44

பகுதி நான்கு : அலைமீள்கை – 27

மூத்தவர் ஃபானுவை சந்திக்கச் செல்வதற்கு முன்னர் அங்கு என்ன சொல்லவேண்டும் என்பதை ஒருமுறை கணிகரிடம் சொல்லி நா பழகிக்கொண்டேன். ஒரு செயலை செய்வதற்கு முன்னர் அதை உள்ளத்தில் ஒருமுறை செய்து பார்ப்பது நன்று என்று பலமுறை கணிகர் என்னிடம் கூறியிருக்கிறார். ஒன்றை சொல்வதற்கு முன் ஒருமுறை அதை நாவால் சொல்லிப்பார்க்க வேண்டும் என்று அவர் கூறியபோது “நான் அதை உள்ளத்தில் சொல்லிப்பார்ப்பதுண்டு” என்றேன்.

“அல்ல. உள்ளம் வேறு, நா வேறு. உள்ளத்தில் நூறு சொற்கள் ஓடுமென்றால் அதில் இரண்டு சொற்களே நாவிலெழும். நா பருப்பொருளால் ஆனது, உள்ளம் அவ்வாறல்ல” என்று கணிகர் சொன்னார். “ஒன்றை நாவால் உரைக்கப் போகிறீர்கள் என்றால் அதை முன்னரே ஒரு முறை நாவால் கூறிவிடுங்கள். நாவிற்கு உள்ளத்திலிருந்து சொற்கள் எழும்போது பல சொற்கள் நாவுக்கு எத்தனை அரியவை என்று தெரியும். பல சொற்களை நா சொல்லத் தயங்குவது தெரியும். குறிப்பாக நாவால் பொய்யுரைக்கப் போகிறோம் எனில் அப்பொய்யை உரக்க ஓரிரு முறை ஏற்கெனவே நாவால் உரைத்திருக்கவேண்டும்.”

“முதன்முறையாக நாவில் பொய் எழும்போது உள்ளத்தின் விசையை சென்று தொட இயலாமல் நா வளைந்து தயங்குவதை அறிந்த கண்கள் உடனே தொட்டெடுத்துவிட முடியும்.” கணிகர் புன்னகைத்து “அத்துடன் ஒன்று, நாவால் உரைக்கப்படுமெனில் அது வெளியே பருப்பொருளில் நிகழ்ந்துவிடுகிறது, பருப்பொருளைப் பார்த்து அதை பின்தொடர்வது உள்ளத்தின் இயல்பு. நாவால் உரைத்த ஒன்றை உள்ளம் தானும் நம்பும். ஒரு பொய்யை நாவால் பலமுறை உரையுங்கள், அதன் பின் உங்கள் உள்ளம் அதை மெய்யென்று நம்ப ஆரம்பிப்பதை பார்ப்பீர்கள்” என்றார்.

நான் “எவரிடம் உரைப்பது?” என்றேன். “மிகச் சிறந்த எதிர்முனை என்பது ஆடிப்பாவையே. ஆடியில்லையெனில் நிழல். நமக்கு நாமே சொல்லும் பொய்கள் அளவுக்கு தூய்மையானவை இவ்வுலகில் வேறேதும் இல்லை. நமக்கு நாமே சொல்லும் பொய்கள் உண்மையில் பொய்களே அல்ல. இங்கு நம்மை சூழ்ந்திருக்கும் இப்புவி என்பது உண்மையில் நமக்கு நாமே சொல்லிக்கொண்டிருக்கும் ஒரு மாபெரும் பொய் அல்லவா? அப்பொய்யில் பிறிதொரு பொய்யை கலக்கிறோம். அப்பொய்யை சற்று நீட்டிக்கொள்கிறோம். எனவே அது மெய்யென்று எப்பொருளில் பொதுவுலகில் புழங்குகிறோமோ அதுவே ஆகும், கூறுக!” என்றார்.

“இங்கு ஆடிப்பாவை நோக்கி கூறுவதா?” என்று நான் புன்னகையுடன் கேட்டேன். “என்னிடம் கூறுக! இப்போது உங்கள் ஆடிப்பாவையென நான் அமைகிறேன்” என்றார். எனது தரப்பை மிக விரிவாக அவரிடம் கூறினேன். அவர் கூறியது போலவே நாவால் அதை உரைக்கும்போதுதான் அதுவரை பலமுறை உள்ளத்தில் எண்ணி வந்த அந்த நடப்போவியம் எத்தனை பிழைகள் கொண்டது என்று தெரிந்தது. அதை ஒவ்வொன்றையும் முழுமைப்படுத்திக்கொண்டேன். எவ்வண்ணம் அது நிகழ்ந்தது, அப்போது எப்படி நான் உணர்ந்தேன், அந்தத் தருணக்காட்சியின் ஒவ்வொரு சிறு நுட்பங்கள், ஒவ்வொரு முகங்களின் எதிர்வினைகள். அது மெய்யாகவே நடந்தது என்பதைப்போல் அதன் மீது எனது உளப்பதிவு.

நான் பேசி முடித்ததும் கணிகர் தன் மின்னும் கண்களால் என்னைப் பார்த்தபடி அமர்ந்திருந்தார். பின்னர் “என்னை பிறிதொருவராக எண்ணுங்கள். மீண்டும் ஒருமுறை கூறுங்கள்” என்றார். “பிறிதொரு முறையா?” என்று நான் சொல்ல “கூறிப் பாருங்கள், ஏன் என்று தெரியும்” என்றார். அவரை முதலில் என் ஆடிப்பாவை என்று நினைத்து சொல்லிக்கொண்டிருந்தேன். இம்முறை மூத்தவர் ஃபானு என்று நினைத்து சொன்னேன். சொல்லச் சொல்ல முன்னர் நான் சொல்வது மேலும் குறுகுவதை, கூர்கொள்வதை, சரியான சொல் சேர்வதை கண்டேன். “ஆம், பாதியளவாகிவிட்டது” என்றேன்.

“பொய் சொல்பவர் இயற்றும் பிழைகளில் முதன்மையானது ஒன்றுண்டு. ஒன்றை சொல்லி வருகையிலேயே அது சொல்லொழுங்கின்படி அமைகிறதா என்று அவர் உள்ளம் பார்த்துக்கொண்டிருக்கும். ஒரு பிழையை கண்டுபிடிப்பார். அவ் இடைவெளியில் ஒரு புதிய செய்தியை கொண்டு வந்து அமைப்பார். ஒரு கதைக்குள் துணைக்கதைகளை ஒருவர் அமைக்கிறார் என்றாலே அது பெரும்பாலும் பொய்தான்” என்று கணிகர் சொன்னார். பிறகு “மீண்டும் ஒருமுறை சொல்க! முற்றிலும் புதிய ஒருவரிடம்” என்றார். நான் புன்னகைத்து “இம்முறை மூத்தவர் பிரத்யும்னனிடம்” என்றேன். “வேண்டாம். உங்கள் கதையை கேட்கப்போகிறவர் சுஃபானு, அவரிடம் கூறுக!“ என்றார்.

நான் மீண்டும் கூறியபோது அந்தக் கதை கூர்மையை இழந்து இயல்பான அலைவுகொண்டு எளிய அன்றாடச் சொற்களுடன் மெய்யென்றே ஆகிவிட்டிருந்தது. சொல்லி முடித்தவுடன் நானே மெய்யான உணர்வுகளுக்கு ஆளாகி முகம் குழைந்து, விழிகள் நனைந்து, உடலெங்கும் பரவிய மென்துடிப்புடன் அமர்ந்திருந்தேன். என் உணர்வுகளை வென்று இயல்புநிலைக்கு நான் மீள சற்று நேரமாகியது. கணிகர் “ஒன்றை திரும்பத் திரும்பச் சொல்லுகையில் அதிலிருந்து நீங்கள் விலகியாகவேண்டுமல்லவா? ஒன்றை ஒப்பிக்கத் தொடங்கவேண்டுமல்லவா?” என்றார். “ஆம், அவ்வாறுதான் நான் எண்ணியிருந்தேன். ஆனால் என் உணர்வுகள் மிகுந்தபடியே செல்கின்றன” என்றேன்.

“யாதவரே, காட்சிகளும் பொருட்களும் சொற்களாகின்றன. எனில் சொற்களும் திரும்ப அவ்வாறே ஆகக்கூடும் அல்லவா?” என்றார். “நீங்கள் இந்நிகழ்வுகளை உள்ளத்தில் மெய்யென நிகழ்த்திக்கொண்டு அதை சொல்கிறீர்கள். மீள மீள நிகழ்வது மெய்யென்றே ஆகும். இம்முறை அதை அரசவையில் கூறினால் உங்கள் உணர்வுகள் மெய்யாக இருக்கும். உங்கள் நா தயங்காது. ஏனெனில் உங்கள் ஆழம் இதை மெய்யென்று நம்பிக்கொண்டிருக்கும். மிகச் சிறந்த பொய்யென்பது சொல்பவனால் நம்பி கூறப்படுவது” என்று உரைத்து “நலம் சூழ்க!” என்றார்.

நான் எழுந்துகொண்டு தலைவணங்கி “பயிற்சிக்கு நன்றி, ஆசிரியரே. ஆனால் என்றேனும் இந்தத் திறனை நான் உங்களிடம் பயன்படுத்தினால் எளிதில் கண்டடைவதற்கு ஒரு வழிமுறையை நீங்கள் வைத்திருப்பீர்களல்லவா?” என்றேன். அவர் நகைத்து “ஆம், அவ்வண்ணம் ஒரு முறை இருந்தால் அதை உங்களிடம் கூறமாட்டேன் என்றும் தெரிந்திருக்குமே” என்றார். நான் நகைத்து “மெய்” என்றேன்.

 

மூத்தவர் ஃபானுவின் அவையில் அப்போது சுஃபானுவும் ஸ்வரஃபானுவும் பிரஃபானுவும் ஃபானுமானும் சந்திரஃபானுவும் இருந்தனர். நான் உள்ளே நுழைந்து தலைவணங்கினேன். அவர் என்னை அமரும்படி சொன்னார். நான் செல்லும் வழியிலேயே அச்சொற்களை சொல்லத் தொடங்கிவிட்டிருந்தமையால் மெய்யான உணர்வுகளுக்கு ஆளாகி என் உடல் பதறிக்கொண்டிருந்தது. அமர்ந்து பின்னர் மீண்டும் எழுந்து கைகள் அலைபாய உடைந்த குரலில் கண்ணீருடன் “தீதொன்று நடந்துவிட்டது மூத்தவரே, அதை தங்களிடம் அவ்வாறே சொல்ல வேண்டுமா அன்றி வேறெவ்வகையிலும் அதை உரைப்பதா என்று எனக்கு தெரியவில்லை. அதன் அரசியல் விளைவுகளைக் குறித்து கணிகரிடம் பேசிவிட்டுதான் இங்கு வருகிறேன். ஏனெனில் நிகழ்ந்தது எளிய ஒன்றல்ல” என்றேன்.

“கூறுக!” என்றார் ஃபானு. ஆனால் தன் பதற்றத்தை அவரால் மறைக்கமுடியவில்லை. நான் என்னை சொல்லடக்கி, உணர்வுகளை வெல்ல சற்று நேரம் இறுகி உடல் குறுகி அமர்ந்திருந்தேன். பின்னர் “மூத்தவரே, பிரத்யும்னனின் இளையோன் விசாரு கொல்லப்பட்டான், ருக்மியின் படைநிலையில்” என்றேன். ஃபானு “என்ன!” என்றார். அவர் அதை எதிர்பார்க்கவில்லை. அவருக்கு அங்கிருந்து பறவைத்தூது வரவில்லை என்று கண்டுகொண்டேன். “கூறுக!” என்றபடி சுஃபானு எழுந்தார். “நான் அவனை ருக்மியின் அவையில் பார்த்தேன்” என்றேன். “எனக்கு முன்னரே அவன் அங்கே சென்று சேர்ந்திருக்கிறான். இங்கிருந்து ஒரு தூது என அவனை அனுப்பியிருக்கிறார்கள்.” ஃபானு “யார்?” என்றார். “அறியேன், பிரத்யும்னன் என எண்ணினேன், பின்னர் சுதேஷ்ணன் என கண்டடைந்தேன்” என்றேன்.

“கூறுக!” என்றார் சுஃபானு. “நான் செல்லும்போது ருக்மியின் அவையில் அவன் இருந்தான். ருக்மியிடம் யாதவ மைந்தர் அனைவரும் சேர்ந்து தங்களுக்கு முடிசூட்டுவது என எடுத்த முடிவை நான் சொல்லிக்கொண்டிருக்கும்போது அவன் பேச்சுக்குள் நுழைந்தான். அம்முடிவை பிரத்யும்னன் ஏற்க இயலாது என்றான். பிரத்யும்னன் அவனிடம் தனியாக வேறொரு செய்தியை அனுப்பியிருப்பதாக அப்போதுதான் அறிந்தேன். ‘மாதுலரே, நான் ஏற்கெனவே சொன்னேன். இது எண்பதின்மரும் ஏற்றுக்கொண்ட முடிவு அல்ல’ என்றான். ‘அவ்வண்ணம் வரும் தூதுகளை ஏற்கவேண்டாம்’ என்றான். ருக்மி எளியவர் என அறிந்திருப்பீர்கள். அவர் குழம்பி என்னை பார்த்தார்.”

“நான் அந்த சூழ்ச்சி எனக்குத் தெரியாது என்றேன். எண்பதின்மரும் இருந்த அவையில் எடுத்த முடிவு நான் உரைப்பது. அரசுமுறையாக எனக்கு அறிவிக்கப்பட்டதை இங்கு அறிவிக்கிறேன். முடிவெடுப்பது தங்கள் உரிமை. நான் அதில் தலையிடப்போவதில்லை என்றேன். சுதேஷ்ணனின் செய்தியுடன் தான் வந்திருப்பதாக அவன் மீண்டும் கூறினான். ருக்மி அவனிடம் ‘சற்று பொறு, நான் இப்பேச்சை முடித்துவிட்டு வருகிறேன்’ என்றார். அவன் சிற்றறைக்கு அனுப்பப்பட்டான். அதன்பின் என்னிடம் ‘அங்கு நடந்தது என்ன என்பதை கூறுக!’ என்றார். நான் மிக விரிவாக விளக்கினேன். ருக்மி கூர்ந்து அவற்றை கேட்டார்.”

“சாத்யகியும் கிருதவர்மனும் ஒருங்கிணைந்து நம் தரப்பில் நின்றிருந்ததை நான் சொன்னதுமே அவர் விழிகள் மாறிவிட்டன. பிரத்யும்னனும் அநிருத்தனும் இணைந்து நமக்கு ஆதரவு தெரிவிப்பதையும் சொன்னேன். அனைத்து யாதவ மைந்தரும் ஒருங்கிணைந்திருப்பதை கூறினேன். அவர் தளர்ந்து ‘ஆம், இனி ஒன்றும் செய்வதற்கில்லை. ஒருவேளை உளவிலக்கம் கொண்டு பிரத்யும்னன் மட்டும் தனித்திருந்தால்கூட பிற ஏழு பேருக்கு எதிராக எதுவும் செய்துவிட இயலாது’ என்றார். ‘ஆம், அதுவே அரசியல்நிலைமை. வேறு சொற்களுக்கு செவியளிக்கவேண்டாம்’ என்று நான் சொன்னேன்.”

“ருக்மியால் சொல்கோத்துக்கொள்ள இயலவில்லை. அவர் என்னிடம் ‘நேரடியாக ஒன்று கேட்கிறேன். நான் இதில் எதை பெறுவேன்?’ என்றார். ‘பிரத்யும்னன் தென்திசையை ஆள்வதற்கு அனுப்பப்படுவார். அவர் தங்கள் மருகர்’ என்றேன். ‘ஆம், ஆனால் பிரத்யும்னனை நான் ஆதரிக்காமல் இருந்தால் ஃபானுவுக்கு ஆதரவளித்தால் விதர்ப்பத்திற்கு எவை அளிக்கப்படும்?’ என்றார். அத்தருணத்தில் நான் தங்கள் குரலாக மாறினேன். ‘விதர்ப்பத்திற்கு தனியுரிமை அளிக்கப்படும். ஒரு தருணத்திலும் விதர்ப்பம் நேரடியாக துவாரகைக்கு கப்பம் கட்ட வேண்டியிருக்காது. வருங்காலத்திலும் விதர்ப்பத்தின் இளவரசியர் துவாரகையின் அரசியராவார்கள்’ என்றேன்.”

“ருக்மி எதிர்பார்த்திருந்தது அதுவே. அவர் மகிழ்ந்து ‘அது போதும். நான் இம்முடிவை ஆதரிக்கிறேன். மணிசூட்டு விழாவுக்கு நான் வந்து கலந்துகொள்கிறேன்’ என்று சொன்னார். ‘என் மூத்தவரின் பொருட்டு உங்களை வணங்குகிறேன். விதர்ப்பம் துவாரகையுடன் அணுக்கமாக என்றும் இருக்கவேண்டும்’ என்று சொல்லி நான் வெளிவந்தேன். என் அறைக்கு சென்றேன். அங்கு துயின்றுகொண்டிருக்கையில் என்னைச் சூழ்ந்து படைகள் நிலைகொள்வதன் ஓசையை கேட்டேன். எழுந்து பாடிவீட்டின் சிறு விலக்கினூடாக வெளியே பார்த்தபோது என் குடிலைச் சுற்றி காவலர்கள் நின்றிருந்தனர்.”

“என்ன நிகழ்கிறது என்று எனக்கு புரிந்தது. என்னை காவலில் வைத்திருக்கிறார்கள். நான் அங்கிருந்து எப்படியாவது தப்பிவிடவேண்டும் என்று எண்ணிக்கொண்டிருந்தேன். அப்போது காவல்வீரர்களில் ஒருவன் என் குடிலுக்குள்ளே வந்தான். ‘தாங்கள் காவல் வைக்கப்பட்டிருக்கிறீர்கள். இந்தக் குடிலைவிட்டு அரசாணை வரும்வரை வெளியே செல்ல தங்களுக்கு உரிமையில்லை. அவ்வாறு வெளியே சென்றால் தங்களைத் தாக்கும் ஆணை எங்களுக்கு அனுப்பப்பட்டிருக்கிறது’ என்றான். ‘ஆம், புரிகிறது’ என்று நான் சொன்னேன். அவன் குரல் மாறுபட்டு ‘தாங்கள் உண்மையில் சிறைவைக்கப்படவில்லை. அரசர் சில முடிவுகளை எடுக்கிறார். அம்முடிவுகளை எடுக்கும் வரை அவரவர் அவரவர் இடத்திலேயே இருக்கும்படி ஆணையிடப்பட்டிருக்கிறார்கள்’ என்றான்.”

“அவன் பார்வையில் வேறொன்றை நான் கண்டேன். ஆகவே நான் அவனிடம் ‘அரசர் எனக்கு சாதகமான முடிவை எடுத்தார். ஆகவே நான் இதை எதிர்பார்க்கவில்லை’ என்றேன். ‘தங்களுக்கு சாதகமான முடிவுதான் எடுக்கப்பட்டுள்ளது’ என்று கூறிய அவன் விழிமாறி சற்று அருகே வந்து ‘சற்று முன் பிரத்யும்னனின் இளையவர் கொல்லப்பட்டார்’ என்றான். நான் திகைத்து ‘கொல்லப்பட்டாரா? எவ்வண்ணம்?’ என்றேன். ‘அவரைக் கொன்றவன் நான்’ என்று அவன் சொன்னான். ‘அவரை சிறை வைக்கும்போது அவர் தப்ப முயன்றார் என்று சொல்லி கொன்றுவிடும்படி சொல்லப்பட்டது. ஆகவே சிறை வைப்பதற்கு முன்பே அவர் தலையை வெட்டிவிட்டோம். அச்செய்தியை நான் அரசரிடம் சொல்லபோகிறேன். இளவரசே, நான் தங்களுக்கு அணுக்கமானவனாகும் பொருட்டு இதை சொன்னேன். துவாரகையில் தாங்கள் செல்வாக்கு பெறும்போது எனக்குரிய இடத்தை தாங்கள் அளிப்பீர்கள் என்று நம்புகிறேன்’ என்றான்.

‘ஆம், இச்சொல் மதிப்புக்குரியது. நான் உன்னை எண்ணியிருப்பேன், ஆவன செய்வேன்’ என்றேன். பின்னர் ‘என்னை எவ்வகையிலேனும் வெளியே கொண்டுவிட முடியுமா?’ என்றேன். ‘நான் கொல்லப்படுவேன்’ என்றான். ‘நீ கொல்லப்படமாட்டாய். அதற்கான வழியை நான் சொல்கிறேன்’ என்றேன். ‘என்னுடன் வருக! என்னை பாலைவனத்தில் கொண்டுவந்து விடு. அங்கிருந்து நீயும் தப்பி அவந்திக்கு செல். உரிய பொழுதில் நீ துவாரகைக்கு வா’ என்றேன். அவன் என்னை அவர்களுடைய படைவீரன் உடையில் வெளியே அழைத்துவந்தான். அவனும் என்னுடன் வந்தான். என்னை கடத்திவிட்ட பின் அவன் அவந்திக்கு திரும்பிச்சென்றான். நான் தன்னந்தனியாக பாலையினூடாக பயணம் செய்து இங்கு வந்தேன்.”

மூத்தவர் ஃபானு பெருமூச்சுவிட்டார். நான் கூறிய முறைமையை நானே திருப்பி பார்த்தேன். ஏற்கெனவே சொன்னதுபோல ஒழுங்கான சொல்லடுக்காக அதை நான் சொல்லவில்லை. அங்கிங்காக தொட்டுத் தொட்டு சொன்னேன். ஆனால் உண்மையில் நிகழ்ந்தவற்றை திரும்பச் சொல்பவர்கள் அவ்வாறுதான் கூறுவார்கள். ஒன்றை கற்பனை செய்து சொல்பவர்கள்தான் ஒழுங்கான போக்கில் சொல்வார்கள். பலமுறை கூறிவிட்டிருந்ததனால் அது மெய்யென்றாகிவிட்டது. மெய்யென்ற ஒன்றை சொல்லும்போது அவற்றின் உணர்வு சார்ந்தும், செய்திமையம் சார்ந்தும் அரிதென தோன்றுமிடங்களைத்தான் முதலில் தொட்டுச் சொல்வது நம் வழக்கம். ஆகவே நான் கூறியது உண்மையாக இருந்தது.

மூத்தவர் ஃபானு பதற்றம் அடைந்தார். கைகள் அலைபாய்ந்தன. “எனில் விசாரு எவருடைய தூதன்? சுதேஷ்ணனுடைய தூதனா?” என்றார். “ஆம்” என்றேன். “எதுவானாலும் எண்பதின்மரில் ஒருவனை அயலான் கொன்றிருக்கிறான், இதற்கு நாம் என்ன செய்யப்போகிறோம்?” என்று ஃபானு கேட்டார். “அதுதான் எனக்கு தெரியவில்லை. அந்த முடிவை தாங்கள் எடுக்கவேண்டும். ஆகவேதான் அதை முன்னரே சென்று கணிகரிடம் சொன்னேன். அவர் எண்ணிப்பார்த்து தங்களிடம் சொல்லச் சொன்னார். எம்முடிவையும் ஓராண்டில் அதன் விளைவென்ன என்று எண்ணி எடுக்கவேண்டும் என்றார்” என்றேன். “அவரிடம் எண்ணிச்சூழ்வதே உகந்தது என்பது என் கருத்து.”

ஃபானு எழுந்து நிலைகொள்ளாமல் நடந்தார். “அனைத்தும் முறையாக நடந்துவிட்டன என்று எண்ணிக்கொண்டிருந்தேன். இவ்வாறு ஒன்று ஊடே வருகிறது. தொடக்கம் முதலே சுதேஷ்ணனுக்கு என் மேல் நம்பிக்கையின்மை இருந்தது. அதை நான் அறிவேன்” என்றார். சுஃபானு “அவ்வண்ணம் உள்ளோட்டங்கள் எட்டு அன்னையரின் மைந்தர்குழுக்களிலும் உள்ளன. அவற்றை எல்லாம் நாம் கருத்தில் கொள்ளமுடியாது. நாம் முடிசூட்டிக்கொண்ட பின் பேசி முடிக்கவேண்டியவை அவை” என்றார். “நான் புரிந்துகொள்ள முடியாமலிருப்பது ஏன் ருக்மி விசாருவை கொல்ல ஆணையிட்டார் என்பதுதான்.”

சற்று நேரத்திலேயே கணிகர் அவைக்கு கொண்டுவரப்பட்டார். மூத்தவர் ஃபானு அவரிடம் “அமைச்சரே, இங்கு நிகழ்ந்ததனைத்தையும் இளையவன் உங்களிடம் சொல்லியிருப்பான்” என்றார். “ஆம்” என்று அவர் சொன்னார். “சொல்லுங்கள், நாம் என்ன செய்வது? இத்தருணத்தில் எதைச் செய்தாலும் பிழையென்றாகும் என்று தோன்றுகிறது. இச்செய்தியை நாம் அவர்களிடம் தெரிவிக்க வேண்டுமா?” என்றார். கணிகர் “இல்லை, பிரத்யும்னனிடம் தெரிவிப்பதற்கு முன்பு நாம் தெளிவடைய வேண்டிய சில உண்டு” என்றார். “இந்த அவையில் நாம் அதை முடிவு செய்யவேண்டும்.”

“கூறுக!” என்றார் ஃபானு. “தங்களுக்கு எதிராக சுதேஷ்ணனோ அல்லது பிறரோ சூழ்ச்சி செய்தால் அதை பொறுத்துக்கொள்ளப்போவதில்லை என முடிவெடுங்கள். அதை நீங்களே உறுதிகொள்ளுங்கள். அதன்பின் பிரத்யும்னனை இங்கு வரவழையுங்கள். அவரிடம் தனிப்பட்ட முறையில் இதை சொல்லுங்கள். ஏனெனில் அவருக்கு அணுக்கமான இளையோனாகிய சுதேஷ்ணனால் இந்தச் செயல் இயற்றப்பட்டிருக்கிறது. இளையவர் ருக்மியின் அவைக்குச் சென்றது பிரத்யும்னனின் அறிதலின்படியா இல்லையா என்று நமக்கு தெரியவேண்டும்” என்றார். ஃபானு “பிரத்யும்னனுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை” என்றார்.

கணிகர் “இல்லை, பிரத்யும்னனுக்கு தெரிந்திருக்கும். பிரத்யும்னனுக்குத் தெரியாமல் அவ்வாறு ஓர் இளையவரை அனுப்ப இயலாது. ஆனால் பிரத்யும்னன் எதன்பொருட்டு அனுப்பினாரோ அதன்பொருட்டு அவர் அங்கு செல்லவில்லை. பிரத்யும்னனிடம் ஒன்று சொல்லியிருக்கலாம், பிறிதொரு செய்தியை உண்மையில் அவர் கொண்டுசென்றிருப்பார்” என்றார். “ஆம், அதற்கே வாய்ப்புள்ளது. அவ்வாறே நிகழ்ந்திருக்கும்” என்றார் சுஃபானு. “ஆகவே பிரத்யும்னனை இங்கே வரவழைத்து பேசுவதே நன்று” என்றார் கணிகர். “அப்போது நான் உடனிருப்பது உகந்ததல்ல. நான் தனியறையில் இருக்கிறேன். நீங்கள் கேட்டதை அதே உணர்வுடனும் எண்ண அலைவுடனும் அவருக்கு கூறுங்கள். அவர் முடிவெடுக்கட்டும்.”

“அவர் முடிவெடுப்பதென்றால்?” என்றார் ஃபானு. “சுதேஷ்ணனை என்ன செய்வதென்ற முடிவை பிரத்யும்னன்தான் எடுக்கவேண்டும்” என்று கணிகர் சொன்னார். “நன்று” என்றார் ஃபானு. ஏவலனை பிரத்யும்னனை வரவழைக்க அனுப்பிவிட்டு நிலைகொள்ளாமல் அறைக்குள் நடந்தார். ஏவலர் கணிகரை அணுக்கத்து அறைக்கு தூக்கிக்கொண்டு சென்றார்கள். நான் மூத்தவருக்குத் தலைவணங்கி விடைபெற்று கணிகருடன் சென்றேன். கணிகர் என்னிடம் புன்னகைத்து “அங்கிருந்து பறவைத்தூது ஏதேனும் பிரத்யும்னனுக்கு வந்திருக்குமென்றால் பிரத்யும்னன் இங்கு வருவதற்குள்ளாகவே செய்தியை அறிந்து முடிவெடுத்திருப்பார்” என்றார்.

நான் பதறி “பறவைத்தூதா?” என்றேன். “பறவைத்தூது வந்திருக்கவே வாய்ப்பு மிகுதி. அது வராமல் தடுப்பதற்கான வாய்ப்பனைத்தையும் நான் செய்திருந்தேன். பிரத்யும்னனின் அறையில் நமது ஒற்றர்கள் மூவர் இருக்கிறார்கள். பிரத்யும்னனுக்கு எந்தப் பறவைத்தூதும் இப்போது செல்லக்கூடாதென்று அவர்களுக்கு சொல்லி அனுப்பியிருந்தேன். அந்த வலை மிக உறுதியானது, பறவைத்தூது வந்தால் அவர்களிடம் சிக்கிக்கொள்ளும்” என்றார். “ஆனால் ஒருவேளை அவ்வாறு சிக்கிக்கொள்ளவில்லை எனில் நாம் திட்டமிட்டது எதுவும் நிகழாது. நாம் பிறிதொன்றை எண்ணவேண்டியிருக்கும்” என்றார்.

“என்ன சொல்கிறீர்கள், கணிகரே?” என்று நான் பதறினேன். “அச்சம் வேண்டாம். ஏதாவது ஒரு வாய்ப்பு அமையும்” என்று அவர் சொன்னார். என்னால் அமர்ந்திருக்க இயலவில்லை. கைகள் நடுங்கிக்கொண்டிருந்தன. கண்ணீர் வரப்போவதுபோல் இருந்தது. தொண்டை அடைத்து எங்கிருக்கிறேன் என்று தெரியாத நிலையில் இருந்தேன். கைகளைக் கோத்து பீடத்தில் அமர்ந்து என் உடலுக்குள் குருதி ஓடிக்கொண்டிருந்த ஓசையை கேட்டுக்கொண்டிருந்தேன். மெல்லிய குறட்டையோசை கேட்டது. கணிகர் துயின்றுகொண்டிருப்பதை கண்டேன்.

அணுக்கத்து அறையில் பிரத்யும்னன் வரும் ஓசைகள் கேட்டன. மூத்தவர் ஃபானு அவரை வரவேற்பதும் பீடமளிப்பதும் ஓசைகளினூடாகவே காட்சியாகியது. கதவு திறந்து உள்ளே வந்த ஃபானுமான் “வருக, உங்களை அழைக்கிறார்!” என்று என்னை நோக்கி சொன்னான். நான் எழுந்து அவ்வறைக்குச் சென்று பிரத்யும்னனை பார்த்தேன். அவர் முகத்திலிருந்து எனக்கு எதையும் உய்த்துணர முடியவில்லை. ஆனால் ஒருகணத்தில் என்ன நிகழ்ந்தது என்று தெரியவில்லை. நான் நெஞ்சுடைய அழுதபடி நிலத்தில் அமர்ந்தேன். தலையில் ஓங்கி அறைந்துகொண்டு அழத்தொடங்கினேன்.

பிரத்யும்னன் பாய்ந்து வந்து என் கைகளைப்பற்றி “என்ன? என்ன?” என்றார். “இளையவன்! இளையவன்!” என்று நான் சொன்னேன். “நம் இளையவன் ருக்மியின் படைவீரர்களால் கொல்லப்பட்டான். அவனைக் கொன்றவனே என்னிடம் சொன்னான். என்னையும் சிறைவைத்திருந்தார்கள். நான் தப்பிவந்தேன்.” என்னால் எதையும் கோவையாக சொல்ல இயலவில்லை. “யார் கொன்றது?” என்றார் பிரத்யும்னன். “ருக்மியின் ஆணைப்படி அவருடைய படைவீரன்!” என்றேன். “எதன் பொருட்டு?” என்றார். “அவன் அவருடைய மருகன், அவர் மகளை மணந்தவன்.”

“மூத்தவரே, அவன் தங்களிடமிருந்து ஒரு செய்தியுடன் சென்றிருக்கிறான். அதற்கு மாறான செய்தியுடன் நான் சென்றேன். ஆகவே இது நடந்தது” என்றேன். “தவறுதலாகவா?” என்று அவர் கேட்டார். “அறியேன். முழுச் செய்தியும் எனக்கு தெரியவில்லை. ஏன் இதை செய்தார்கள் என்று என்னால் உணரக்கூடவில்லை. நான் உயிருடன் தப்பியதே மிக அரிதான ஒன்றென்று எனக்கு தோன்றுகிறது” என்றபின் நான் தளர்ந்து தரையிலேயே படுத்துவிட்டேன். “இளையவனை கொண்டு செல்க” என்று ஃபானு சொன்னார். என்னை இருவர் தூக்கி அறைக்கு கொண்டு சென்றனர்.

கணிகர் முன் நான் அமர்ந்து மீண்டும் அழுதுகொண்டிருந்தேன். மெல்லிய குரலில் “நல்ல அழுகை!” என்று அவர் சொன்னார். நான் பெருமூச்சுடன் “ஏன் அழுதேன் என்றே தெரியவில்லை. இங்கிருக்கையில் அஞ்சி நடுங்கிவிட்டேன். பிரத்யும்னன் அனைத்தையும் அறிந்து வந்திருந்தாரெனில் என் வாழ்வு இந்த அவையிலேயே முடியும். அதை எண்ணியபோது என் அகம் உடைந்துவிட்டது” என்றேன். “ஆகவே அதற்காகத்தான் அழுகை?” என்றார் கணிகர். “இல்லை, அந்த அழுகை அப்போது உண்மையானது. உடன் வந்த சொற்கள் உண்மையானவை” என்றேன். “ஆம், அதை பிரித்தறிய மனிதர்களால் இயலாது” என்று கணிகர் சொன்னார்.

நான் திடுக்கிடலுடன் கணிகரை பார்த்தேன். இத்தகைய கூர்மைகொண்ட ஒரு மனிதரை தெய்வங்கள் அன்றி எவரும் எதிர்கொள்ள முடியுமா என்ற திகைப்பு எனக்கு ஏற்பட்டது. அக்கணமே வாளை உருவி அவர் கழுத்தை வெட்டி வீசிவிடவேண்டும் என்றும் தோன்றியது. மனிதர்களை முற்றழிக்கக் கூடிய ஒருவர் அவர். தெய்வங்களுக்கு நிகரான அழிவை நிகழ்த்த வல்லவர். கணிகர் “என்னிடம் ஏதேனும் ஒரு தருணத்தில் என் கழுத்தை வெட்டவேண்டும் என்று எண்ணாதவர்கள் மிகக் குறைவு” என்றார். நான் திகைக்க “நீங்கள் அவ்வாறு எண்ணினீர்கள், நன்று. அவ்வாறு எண்ணுபவர்களை நான் வெறுப்பதில்லை. அவர்களுக்கும் உதவுவேன்” என்றார்.

புன்னகையுடன் “ஏனென்றால் அவர்கள் என்னை அணுகி அறிவதனால்தான் அவ்வாறு எண்ணுகிறார்கள். எனது வழிகளை முற்றுணர்ந்த பின்னர் அவ்வாறு எண்ணுவதில்லை. நான் யார் என்று அறிந்தவர்களுக்கு வழிபடு தெய்வமாகவே நான் ஆவேன்” என்றார். நான் பெருமூச்சுடன் “மெய்யாகவே உங்களை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. நீங்கள் யார்?” என்றேன். கணிகர் புன்னகைத்தார். கதவு திறந்து ஃபானுமான் வந்து “மூத்தவர் தங்களை அழைக்கிறார்” என்றான். நான் எழுந்து பக்கத்து அறைக்கு சென்றேன்.

அங்கு ஃபானு அழுதுகொண்டு நின்றிருந்தார். தலையை கையில் தாங்கி பிரத்யும்னன் அமர்ந்திருந்தார். பிரத்யும்னன் என்னிடம் “நீ கேட்டவற்றை மீண்டும் கூறுக! சுதேஷ்ணனின் தூதுடன் அவன் வந்ததாகவா அவன் சொன்னான்?” என்றார். “ஆம், அவன் நிலைகுலைந்திருந்தான். உடைந்த குரலில் கூவினான். ‘அப்படியென்றால் சுதேஷ்ணனின் சொல்லுக்கு என்ன பொருள்? அவருக்கு நீங்கள் அளித்த சொல்லுறுதிக்கு என்ன பொருள்?’ என்றான்” என்றேன். ”சுதேஷ்ணனின் சொல் என்றா?” என்றார் பிரத்யும்னன். “ஆம், தான் சுதேஷ்ணனின் தூதனென்றே அவன் சொன்னான்” என்றேன். பிரத்யும்னன் பெருமூச்சுடன் எழுந்து கொண்டார். “நன்று, இதை நான் எண்ணி முடிவெடுக்கிறேன்” என்றார்.

முந்தைய கட்டுரைசத்யானந்த யோக மையம்
அடுத்த கட்டுரைகைமுக்கு- கடிதங்கள்