மதுரம்,சூழ்திரு -கடிதங்கள்

மதுரம் [சிறுகதை]

அன்புள்ள ஜெ

மதுரம் கதையை சொல்லும்போதே அருமையான ஒரு கதையாக ஆகிறது. நான் என் வீட்டில் குழந்தைகளுக்கு அந்தக்கதையைச் சொன்னேன். அதிலுள்ள ஆசானின் குறுக்குச்சால்களை விட்டுவிட்டேன். அந்த எருமையை வாங்கப்போவது, அதன் பிரச்சினைகள் [ பெருவட்டர் மனுசச் சாணியில் விழுவது] எல்லாம் சொல்லி ஆசான் வந்து தீர்வு அளிப்பதைப்பற்றிச் சொன்னேன். குழந்தைகள் அப்படியே திரில் ஆகி கேட்டுக்கொண்டிருந்தார்கள். ஒரு நல்ல கிளாஸிக் சிறுகதை என்பது கதையின் எந்த வடிவத்திலும் நிலைகொள்வது என்று இங்கே எவரோ எழுதியதாக ஞபாகம். அதை நினைத்துக்கொண்டேன். எனக்கு தெரிந்த மிகச்சிறந்த பலகதைகளை இப்படி வேறுவேறு வடிவங்களில் சொல்லிவிடமுடியும். டால்ஸ்டாய் செக்காவ் கதைகளையும் மாப்பசான் கதைகளையும் மட்டுமல்ல இன்றைக்கு வந்துகொண்டிருக்கும் நவீனச் சிறுகதைகளைக்கூட. அதன் கவித்துவத்தின் கொஞ்சம் பகுதி இல்லாமலானாலும் கதை மகிழ்ச்சியளிக்கக்கூடியதாகவே இருக்கும்

சரவணக்குமார்

**

அன்புள்ள ஆசான் அவர்களுக்கு, மனமார்ந்த வணக்கம்.

கொடியறுக்கப்படாத பிறந்து விழுந்த கன்றுக்குட்டியை மாட்டின் மடியின் அருகில் கொண்டு நுகரச் செய்யும் சித்திரத்தை சிறுவயதில் இருந்து தொடர்ந்து எங்கள் ஊரில் பார்த்து வருகிறேன். தண்ணீர் மீது  நடக்க முற்படுவதைப்போல ஒவ்வொரு அடியையும் கவனமாக எடுத்து வைத்து நடக்க முனைந்து  தடுக்கி விழுந்து, தடுக்கி விழுந்து எழும் கன்றுக்குட்டி பிறந்த அரை நாளில் நின்ற இடத்திலேயே துள்ளி குதிக்கும். அடுத்தடுத்த நாட்களில் தெருவையே அதிர வைத்துக் கொண்டு ஓட்டமும் பாய்ச்சலுமாக ஓடும். அவ்வளவு எளிதாக பின்னே ஓடி பிடித்து விட முடியாத இளம் வேகம் அதன் ஓட்டத்தில் இருக்கும். ஒரு பாய்ச்சலைவிட இன்னொரு பாய்ச்சல் அதைவிட பெரிய ஒன்றாக இருக்கும். அதை எட்டுகால் பாய்ச்சல் என்பார் என் தாத்தா. அதைப் பார்ப்பதே ஒரு மன எழுச்சியைத் தரும். செயல் பரபரப்பை நரம்புக்குள் தூண்டும். காலையில் எழுந்தவுடன் அதைப் பார்த்தால் அந்த நாள் முழுக்க உற்சாகமாக இருக்கும்.  இந்த தனித்திருக்கும் காலங்களில் உங்கள் கதைகள் வாசகனுக்குள் நிகழ்த்திக் கொண்டிருப்பது அத்தகைய பாய்ச்சலைத்தான்.

வேரில் திகழ்வது,குருவி,ஏதேன், பத்து லட்சம் காலடிகள், வான் கீழ்,ஓநாயின் மூக்கு, மதுரம் என ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு பாய்ச்சல்.. ஒட்டுமொத்தமாக இந்த கதைகளைப் பற்றி ஒரு வரியில் சொல்ல வேண்டுமென்றால் அவற்றை ‘நுட்பங்களின் விரிவு’ என்று சொல்லலாம். ஒன்றிலிருந்து மற்றொன்று மற்றொன்றிலிருந்து வேறொன்று!  பல அடுக்கு கதை சொல்லலில் சரித்திர சம்பவங்களை, இனக்குழு வரலாற்றை இணைத்து புனைவாக்கி வாசிக்கிறவனுக்கு கற்பனைத் தளம் அமைத்து அவனை பலவிதமான சாகசங்களுக்கு அழைத்து செல்கிறது. உதாரணமாக ‘வான் கீழ்’ கதையில் அவர்களது கதாபாத்திரங்களை வலுவாக கட்டமைத்துவிட்டு அவர்கள் அத்தனை உயரத்திற்கு செல்கிறார்கள் எனும்போது அவர்களுக்கு ஏதும் ஆகிவிடுமோ என்ற ஒரு பதபதைப்பு உருவாகி விட்டது. அவர்களில் யாரேனும் ஒருவருக்கு உள்ளங்கை வேர்த்திருந்தது என நீங்கள் எழுதியிருந்தால் வாசிக்கிறவன் அந்த இடத்திலேயே இடறி விழுந்திருக்கக் கூடும்.

இந்த கதைகளில் தன்னியல்பாக உருவாகி வரும் தருணங்களை வாசிக்கும்போது பேராசான் பத்மராஜனின் திரைப்படங்களில், எம் டியின் திரைக்கதைகளில் இருக்கும்  தன்னியல்பு கதை சொல்லலை நினைத்துக் கொண்டேன். கதைகளை படித்த இடைவெளியில் சில பழைய கிளாஸிக் மலையாள படங்களை பார்த்தது சிறந்த அனுபவமாக இருந்தது.

‘குருவி’ கதையை வாசிக்கும்போது பெரும் மன ஊக்கம் பிறந்தது. கலைஞர்களைப் பற்றி எழுதுவதென்றாலே உங்களுக்கு தனி உற்சாகம் வந்துவிடுகிறது. அந்த உற்சாகத்தை உங்கள் கட்டுரைகளில் கலைஞன் என்பவன் தனித்துவமானவன் அவன் சராசரிகளைவிட உயர்ந்தவன் எனும் கருத்தை நீங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருவதையும், அம்மையப்பம் என்ற உங்களின் பழைய கதையிலும், கோணங்கியின் மாயாண்டி கொத்தனின் ரசமட்டம், அசோகமித்திரனின் புலிக்கலைஞன் போன்ற கதைகளை பற்றிய உங்கள் கட்டுரைகளை வாசிக்கும்போதும் உணர்ந்திருக்கிறேன். அப்போது ஒரு சினிமா உதவி இயக்குனராக  மனம் ஒரு கணம் பொங்கும். அதீத உற்சாகம் பிறக்கும்

இந்தக் கதைகளின் மூலம் கற்றுக்கொள்ள, கதை சொல்லலில் பல்வேறு சாத்தியங்களை நிகழ்த்திக் காட்டுவதுடன்..  தனித்திருக்கும் இந்நாட்களை மனச்சோர்வு ஏற்படாமல் உத்வேகத்துடன் சிந்திக்கும் நாட்களாக மாற்றி தந்தமைக்கும்  உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.

அன்புடன்
செந்தில் ஜெகன்நாதன்  மயிலாடுதுறை

***

சூழ்திரு [சிறுகதை]

ஜெ

சூழ்ந்திரு கதையை வாசித்தேன். சுவைகளால் ஆனது உலகு எனக்காட்டும் கதை. அந்த ருசிகளின் பேதத்தை உணர்ந்து உச்சத்தைத் தொட்டுணர்ந்து கண்டடையும் தருணம் உயர்ந்தது.படைப்பும் படைப்பவனும் அவ்வாறே நிறைவடைகிறார்கள்.  அந்த ஒருதுளி கடுக்காயைக் கண்டடையும் தருணம் செயல் நிறைவுறுகிறது.

அரவின் குமார்

***

அன்புள்ள ஜெ

சூழ்திரு கதையை சென்றகாலங்களின் நினைவாக வாசிக்கலாம். ஆனால் எதைக்கொண்டு வாழ்க்கையை நிறைவுறச்செய்வது என்பதைப்பற்றிய கதையாக நான் வாசித்தேன். வாழ்க்கையில் வெற்றி புகழ் ஆகியவற்றைக்கொண்டுதான் நிறைவுறச்செய்யமுடியும் என்று தோன்றுகிறது. ஆனால் சுவைகள் மட்டுமே வாழ்க்கையை உண்மையாக நிறைவுறச் செய்கின்றன. மற்ற எல்லாமே ஈதரிக்கல் ஆனவை. சுவை என்னும் போது நான் சொல்வது ஐம்புலன்கள் அளிக்கும் சுவைகளைத்தான். அவைதான் பிரைமரி. கலை அளிக்கும் சுவை அதற்குமேலே எழுப்பப்படுபதுதான்

எஸ்.லட்சுமணன்

***

ப்ரியத்திற்குரிய ஜெயமோகன்

”எண்ண எண்ணக் குறைவது “ சிறுகதையில் துவங்கி “ ஓநாயின் மூக்கு “ வரை அத்தனை கதைகளையும் படித்து விட்டேன். இது தவிர உங்கள் கட்டுரைகள், காலை நடையில் ஒலி வடிவில் உங்கள் உரை என இந்த நாட்கள் முழுவதும் மிகுந்த சந்தோசத்துடனும், உற்சாகத்துடனும் ஆரம்பிக்கிறது. உங்கள் எழுத்துகளை வாசிக்கத் துவங்கி 17 வருடங்கள் ஆகிறது.  என் ஆளுமையை இழுத்து, வளைத்து, விரித்து வளர்த்திருக்கிறது உங்கள் எழுத்துக்கள். பல  சூழ்நிலைகளில் உங்கள் கதைகளின் கரம் பிடித்து நடந்து வந்திருக்கிறேன், தாண்டக் கடிமான சூழல்களில் நீங்கள் என்னை பறக்க வைத்திருக்கிறீர்கள். என்னுடையத் திருமணத்திற்கு நீங்கள் வந்திருந்து நெருக்கமாய் கைகளைப் பற்றிக் கொண்ட, தோள் நெருங்க நின்றத் தருணங்கள் என் வாழ்வின்  மழைத்துளிகள் என் உள்ளூறாக நிறைந்திருக்கும் ஐம்பூதங்களுமாய் இருக்கிறது உங்கள் எழுத்துக்கள்.

யோசித்துப் பார்க்கும் போது உங்களை  நினைத்துக் கொள்ளாத நாள் என்று எதுவுமே இல்லை. ஓவ்வொரு நாளும் மேலும் மேலும் உங்களை மிக அணுக்கமாய் உணர்கிறேன். இனிய மனம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் சார்….

அன்புடன்

கின்ஸ்லின்

***

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–43
அடுத்த கட்டுரைஆழி,மாயப்பொன் கடிதங்கள்