மாயப்பொன் ,வனவாசம்- கடிதங்கள்

மாயப்பொன் [சிறுகதை]

அன்புள்ள ஜெ

மாயப்பொன் தொந்தரவு செய்த கதை. நான் இதுவரை உங்களுக்கு எழுதியதில்லை. நான் என் வாழ்க்கை முழுக்க ஒரு மாயப்பொன்னைத்தான் தேடிக் கொண்டிருந்திருக்கிறேன். அடைந்ததில்லை. என்னிடம் எல்லாருமே சொன்ன ஒன்று உண்டு, இதெல்லாம் வேலைக்காவாது. பிழைப்பைப்பாரு. மாயப்பொன் தேடுபவர்கள் எவரானாலும் அதைத்தான் சொல்வார்கள். அதைத்தான் சாதிச்சிட்டியே, உன்னால இவ்ளவு முடியுமே, அப்றம் என்ன? நீ பெரிய இவன்னு நினைச்சுக்கறே. நீ ஒண்ணும் பெரிய சரித்திரபுருஷன் கெடையாது. கையிலே இருக்கிறத விட்டுட்டு அலையாதே. இப்படியே.

அட்வைஸ்தான் மாயப்பொன் தேடுபவர்களுக்கு மிகப்பெரிய சிக்கல். பேய்மாதிரி அது. நேசையன் கலங்களை உடைக்கப்போகிறானே, அதைப்போல. நானும் அதைப்போல எல்லாவற்றையும் உடைத்து வீசிவிட முயற்சி செய்திருக்கிறேன். ஆனால் இன்றைக்கு அந்தக்கதையை வாசிக்கும்போது தோன்றியது அந்த மாயப்பொன் தெய்வமாக வந்து பக்கத்தில் உட்கார்கிறதே, அது நடக்காமலேயே போகட்டும். ஆனால் எப்படிப்பட்ட கனவு அது. நிலவு கீழே வருகிறது. பொன் உருகி பரவுகிறது. பக்கத்திலே புலி. பொன்னாலான புலி. உங்களுக்கு இசைஞானம் கொஞ்சம் கம்மிதான். நீங்கள் அதில் இசையைச் சொல்லவில்லை. நான் இசையையும் கற்பனைசெய்துகொண்டேன். அந்த கனவு போதும். ஜெயிப்பது அல்ல, அந்தக் கனவை கூடவே வைத்துக்கொள்வதுதான் முக்கியமானது.

நன்றி ஜெ

எஸ்.முத்துக்குமார்

***

பொன்னிறம் எங்கும் பொன்னிறம் ஆம் நான் கண்டுகொண்டேன் என் வானில் அது ஜொலிக்கிறது. அதன் நடுவில் நூல் கட்டியது போல சுழல்கிறது. பொன் விண்மீன்கள் அதே போல சுழல்கின்றன. கைக்கு எட்டமுடியாத தூரத்தில் அவை சுழல்கின்றன. ஆனால் நான் அந்த பொன்னை உருக்கி வழிந்தோடவிடுகிறென். கைக்கு அகப்பட்டு மீண்டும் மீண்டும் அது நழுவி வலகி செல்கிறது. பொன் என்னை சூழ்ந்து கொண்டு உள்ளில் வெறுமையை நிரப்பியது. அடங்கா வெறுமையுடன் அதை ஊளையிடும் தனித்த ஓநாயென நான்.வெறுமை தனிமை முட்ட முட்ட குடித்தேன்.

பின்னொரு நாள் பொன்னுருகியோடும் வயல் வெளியின் நடுவிலிருந்த ஒற்றை பாதைவழி நடந்தேன். பாதையின் இறுதியில் பொன்னிறமாக என் தேவன் சிவுலையில் நின்றிருந்தான். பொன் புன்னைகையுடன். என் அவையங்கள் அனைத்தையும் அறுத்தேன். மஞ்சள் குருதி வழிந்து என் கால்கள் பிசுபிசுத்தன.

மாயப்பொன் கதை படித்ததும் தோன்றியது என் அன்புக்குரிய வான்கோ. ஊறிவரும் சாராயத்தில் அதன் தேவ பதம் வராமல் துடிக்கும் நேசையன் தேடி ஓடி மறுமுறை அந்த கடைந்தெடுத்த அமிர்தம் கிடைக்கையில் அவன் காதுகளில் மூச்சதிர நிற்கிறான் கொடும்புலி. வெறுமையுடன் அவன் இருந்து விடுவானோ என்று நான் ஏங்கும் சமயத்தில் கொடும்புலி அவை ரசித்து உதிரம் குடுத்தது. ஆ சந்தோஷம் சந்தோஷம்.

அதி அற்புத கலைஞர்கள் துறவு செல்கின்றனர். அனைத்தையும் துறந்து தன் மூதாதையர் அடைந்த நான் அடையக்கூடிய இயற்கைக்கு நிகரான கடவுளுக்கு நிகரான நிலையை அடைய முயற்சிக்கின்றனர். ஒன்று முடிந்ததும் இதுவல்ல அடுத்தது முடிந்ததும் இதுவும் அல்ல. சுயவதையுடன் அலையும் குண்டுபட்ட போர்வீரனைப்போல நான் எங்கு எதற்கு பின்பு நான் இங்கு அதற்கே அன்று அடங்கா மனத்துடன் அவர்கள் அலைகின்றனர்.

ஒருவேளை கொடும்புலி அவன் அருகில் அமர்ந்து தன்னைப்போலவே நீயும் என்று அங்கீகரித்ததா ? இல்லை கேள்விக்கிடமில்லை அங்கீகரித்திருக்க வேண்டும் அதுவே என்னிலையில் நிம்மதி. துறவு செல்பவர்கள் நீங்கள் அடைவதை அல்ல உங்களால் அடைவவே முடியாததை அடைகின்றனர்.

நன்றி

இவான் கார்த்திக்

***

வனவாசம் [சிறுகதை]

அன்புள்ள ஜெ

வனவாசம் போன்ற கதைகளை வாசிக்கும்போது ஒன்று தோன்றுகிறது, நம் இலக்கியத்தில் இன்றைய பல எழுத்தாளர்களின் கதைகளில் இல்லாமல்போவது என்ன? உண்மையான வாழ்க்கையனுபவங்களை மொழி வழியாக நம்மை அனுபவிக்கவைக்கும் திறமை. கதைகளில் ஒரு முழுமையான வாழ்க்கைச்சூழலையே உருவாக்கிவிடுதல். ரெண்டுமே காணக்கிடைக்கவில்லை. வனவாசம் கதையில் அந்த கிராமத்தின் மொத்த டாப்போகிராஃபியும் உள்ளது. சாதி அமைப்புக்கள். சாதிவேறுபாடுகளை மறந்த ஒற்றுமை. திருவிழாவை ஊரே கூடி கொண்டாடுவது. ஊரே கூடி சாப்பிடுவது.

எல்லாம் இருக்கிறது, ஆனால் அவர்கள் தங்கள் கலையின் சாராம்சமான பலவற்றை மறந்துவிட்டார்கள். கதை நடப்பது 1983ல், பாயும்புலி வெளிவந்த ஆண்டில். இன்றைக்கு அங்கே அந்த கலாச்சாரத்தின் ஒரு சின்ன அம்சம்கூட இருக்க வாய்ப்பில்லை. அப்போதே தெருக்கூத்துக்கு அங்கே ஆளில்லை. சுப்பையா மட்டும்தான் இருக்கிறான். இன்றைக்கு அங்கே போனால் சுப்பையா என்ற 60 வயதான ஒரு ஆள் இருப்பார். கூத்தைப்பற்றி பேசிக்கொண்டிருப்பார்

அந்த திருவிழாவே ஒரு கனவு போல கூடுகிறது. கொஞ்சம் கொஞ்சமாக வலுவடைந்து நிறைகிறது. அந்தக்கனவுக்குள் ஒரு கனவு போல அல்லி-அர்ஜுனா கூத்து. அந்த வரிகளை எல்லாம் நீங்களே எழுதியிருக்கிறீர்கள் என்று படித்தேன். பலவரிகள் அபாரமானவை.

தெய்வங்கள் தோற்குமடி,தேவலோகம் மறுக்குமடி.
தண்டையிட்ட சிறுகால் தலைமேல் இருக்குமென்றால்
மேன்மையெல்லாம் சேருமடி, மெய்யெல்லாம் கூடுமடி
பெண்ணில் சிறந்தவளே, என் பேருக்கு உரியவளே,

மண்ணில் உன்னைப்போல் மங்கலம்தான் உண்டோடி?
எண்ணி எடுத்தாலும் எத்தனைதான் பாத்தாலும்
பண்ணி வச்சபலன் பாதையிலே தொடருமடி.

விதையாகி முளைச்சதெல்லாம் மரமாகி முத்துமடி.
சதையாகி வந்ததெல்லாம் சாவாகி போகுமடி.
கதையாகி போனாலே கண்ணீரும் இனிக்குமடி.
புதைஞ்சாத்தான் முளைக்குமுன்னு பூலோகம் சொல்லுதடி

எதுகைமோனை அமைந்த அழகான பாடல்கள். கதையாக போனால் கண்ணீஈரும் இனிக்கும் ன்பது என்ன ஒரு அழகான வரி

செந்தில்குமார்

***

அன்புள்ள ஜெ,

தலைவன் கோட்டை சாமியப்பாவும், குமரேசனும் பாரதியையே ஞாபகமூட்டினர். பாரதியையும் உதாசீனப்படுத்தினாலும், சுப்பையா போல ஒன்றிரண்டு பேர் இருந்தார்கள்.  வேடம் தரித்ததும் எழும் சாமியப்பா அர்ஜூனனாகவே மாறுகிறார்.  வேடம் கலைந்ததும் சாமியப்பாவாக மாறினாலும் நடை எப்போதும் புலிநடை தான்.  அவரின் உணவின் ரசனையும் கிழவி ஒவ்வொன்றாகக் கொடுக்கும் தொடுகறிகளும் நம்நாவில் சுவையூற வைக்கின்றன.

விழாவிற்கான ஏற்பாடுகள், படையலுக்காகத் தயாராகும் சோறு, பாயசம், வரும் பெண்களின் அலங்காரம், சீர்காழி பாட்டு (சுருதி நிற்காது என்ற குறிப்பு வேறு) ஒரு சிறு கதைக்குள் எவ்வளவு விவரணைகள். அசாத்தியம் ஜெ.  கண்டு ரசிக்கவோ பாராட்டவோ யாருமில்லை என்றபோதும் அர்ஜூனனாகவும் அல்லியாகவும் மாறிப் பரவசத்தில் ஆழ்த்தும் தெய்வீகக் கலைஞர்கள்.  தெருக்கூத்துப் பாடலைக் கூட சேர்த்திருக்கும் உங்கள் உழைப்பு அசர வைக்கிறது. இத்தகைய மகோன்னதமான கலைஞர்களை ஆடு மேய்த்துப் பிழைக்க வைத்திருக்கும் நமக்கு மன்னிப்பு உண்டா. இதை விட மேலான கலைஞராகிய உங்களை போற்றிப் புகழ்ந்திருந்து பொய் கெட்டு மெய்யாவோம். நன்றி ஜெ.

நாரா.சிதம்பரம்.

***

முந்தைய கட்டுரைகைமுக்கு- கடிதங்கள்
அடுத்த கட்டுரைஆட்டக்கதை, மதுரம் – கடிதங்கள்