பத்துலட்சம் காலடிகள் [சிறுகதை]
அன்புள்ள ஜெ
ஔசேப்பச்சன் என்ற பெயரை எப்படிச் சொல்லவேண்டும்? அது கிறிஸ்தவப்பெயரா என்ன? நண்பர்கள் நடுவே ஒரு சர்ச்சை. ஆகவேதான் எழுதுகிறேன்
சங்கர்
***
அன்புள்ள சங்கர்
அராமிக் மொழியில் ய என்பது கிரேக்க மொழியில் ஜ ஆகும். யேசு அப்படித்தான் ஜேசு ஆகி ஜீசஸ் ஆனார். யோசேப் மருவி ஜோசப் ஆனார். ஆனால் கேரளக் கடற்கரையில் கிறிஸ்தவம் அராமிக் மொழியிலிருந்தே வந்தது. ஆகவேதான் பல பெயர்கள் விந்தையாக உள்ளன. யோசேப் அச்சன் என்பதுதான் ஔசேப்பச்சன். அச்சன் என்றால் அப்பா. ஔசேப்பச்சன் என்றபேரில் ஒரு மலையாள இசையமைப்பாளர் இருக்கிறார்.
ஜெ
***
அன்புள்ள ஜெ
பத்து லட்சம் காலடிகள் பற்றிய சர்ச்சை ஒருவகையில் நல்லதுதான். அந்த சர்ச்சை இல்லாவிட்டால் நான் அந்தக்கதையை வாசித்திருக்க மாட்டேன்.நான் பல பிராஜக்டுகளில் மாட்டிக்கொண்டிருந்தமையால் வாசித்து நீண்டநாள் ஆகிறது. சர்ச்சையால் உங்கள் தளத்துக்கு வந்தேன். அந்த அற்புதமான கதையை வாசித்தேன். நீங்கள் சொல்வதுபோல சம்பந்தமில்லாதவர்கள், தீப்பொறி ஆறுமுகங்கள், அதையெல்லாம் வாசிக்க வரக்கூடாது. என்ன செய்ய?
பல அடுக்குகளாக அமைந்த கதை. ஒரு கதையை ஒன்றுக்குமேல் தளங்களில் திறந்துசெல்கிறீர்கள். இங்கே நாம் காணும் எல்லாமே வரலாற்றின்மேல் அமர்ந்திருக்கிறது. அதுதான் நாம் அடிக்கடி ஒரு திடுக்கிடலுடன் உணரும் விஷயம். சட்டென்று அய்யோ எவ்வளவு பெரிய வரலாற்றுப்பின்புலம் என்ற பிரமிப்பை அடைவோம். அது தெரியாமல் அதன்மேல் அமர்ந்திருப்பவர்களுக்குப் பிரச்சினை இல்லை மற்றவர்களுக்கு அது திகைப்பூட்டுவதுதான்.
மாப்ளாக் கலாச்சாரத்தின் அத்தனை பரிணாமமும் அந்த கட்டுமானம் வழியாகவே சொல்லப்பட்டிருக்கிறது. காலத்தின் டன் கணக்கான அடிகளை அவர்கள் சந்தித்தது அந்த எடையை பகிர்ந்துகொள்வதன் மூலமாகத்தான். பல்லாயிரம் பல்லாயிரம் அடிகளாக காலத்தில் வைத்து கொண்டே இருக்கிறார்கள். சோழர்காலம் முதல் இன்றுவரை. ஆனால் சட்டென்று எங்கோ ஏதோ முறிந்துவிட்டது என்பதும் சரித்திரம்தானே?
ஆனந்த்குமார்
மாயப்பொன் [சிறுகதை]
அன்புள்ள ஜெ
மாயப்பொன் ஒரு அழகான கவிதை. அந்த நிலம் பற்றிய வர்ணனை இல்லாவிட்டல கதைக்கு இத்தனை கனவுத்தன்மை வந்திருக்காது. அந்த ஒரு நாளில் இரண்டு விடியல் வருகிறது. மழை பெய்கிறது. அங்குள்ள சாப்பாடு. அந்தக்குடில். பாறையிடுக்கில் இரவில்தான் காய்ச்சுவார்கள் என்ற ரகசியம். தீயை மறைக்கலாம், புகையை மறைக்கமுடியாது. இத்தனை தகவல்களுடன் அந்த உலகமே விரிந்து வரும்போதுதான் அந்த கனவும் அதன்மேல் உட்கார்கிறது
இந்த வரிசைக் கதைகளில் கொஞ்சம் மேஜிக் கொண்ட ஒரு வகையான இந்திய மேஜிக்கல்ரியலிசத்தை உருவாக்கிக்கொண்டிருக்கிறீர்கள். ஒவ்வொரு கதையும் இன்னொன்றை கடந்துசெல்கிறது. ஆயிரம் ஊற்றுக்கள், எழுகதிர் வரிசையில் வருகிறது இந்தக் கதை. உருகி வழியும் தெய்வத்தின் உடல். அந்தப்பொன்னை நேசையன் கண்டடைகிறான்
ஒரு நிலவில் புதிய சாராயத்துடன் காட்டில் அமர்ந்திருக்கவேண்டும். அருகே புலி ஒன்று. கிறுக்குபிடிக்கவைக்கிறது அந்தக் கற்பனை
செல்வக்குமார்
***
அன்பு நண்பர் ஜெயமோகனுக்கு
வணக்கம் மாயப்பொன் படித்தேன். சற்று வித்தியாசமான கதை. கதையுடன் படத்தில் பொன் நிறம் கலந்த புலியைப் பார்த்ததிலிருந்து புலி எப்பொழுது வரும் என்ற எதிர்பார்ப்பு உண்டாகி விடுகிறது, பாறை மேல் சாராயம் காய்ச்சும் இடங்கள் எல்லாம் தங்கள் எழுத்து வண்ணத்தால் கண் முன்னே தெரிகின்றன.
நேசையன் அற்புதமான மனிதன். தொழில் நேர்த்தி இருப்பதால்தான் அவனுக்குக் கர்வம் இருக்கிறது. குடும்பத்தையே விட்டுவிடும் அவனால் அத்தொழிலை விட்டு விட முடியவில்லை. அது அவனைப் பிடித்துக் கொண்டு விட்டது. அதனால்தான் அவன் அதுவாகவே மாறி விடுகிறான், “புலிகிட்ட உறுமாதே” என்று அவன் மனைவியிடம் சொல்வது அந்த அடிப்படையில்தான்.
“குடிப்பவர்களுக்கு அவர்கள் உலகம் கரைந்து விடவேண்டும்” என்பது உண்மையான வார்த்தை. பெரும்பாலும் குடிப்பவர்கள் சொல்லும் காரணம். எல்லாவற்றையும் மறக்க வேண்டும் என்பதுதானே? புலி என்பது ஒரு குறியீடுதான் நேசையன் இத்தனை நாள் காய்ச்சி வந்தாலும், “கடவுள் எந்திரிச்சு நம்ம முன்னால வந்தா நாம நீட்டிக் குடுக்கற மாதிரி மணமுள்ள ஒரு சாராயம் காய்ச்ச வேண்டும் என்பதே அவன் நினைப்பு அதுவே மாயப்பொன். காட்டிலே யாராலும் பார்க்கமுடியாத முத்திரை, சாமி, கருத்த சாமி என்றெல்லாம் சொல்லப்படும் புலி போல அவனுக்கு அந்த மணம் அவ்வளவு சீக்கிரம் வரவில்லை.. அது ஒரு நாள் வந்தபோது அப்புலியும் வந்துவிடுகிறது
அது மாயப்பொன்தான். கானல்நீர் போல. ஆனாலும் அந்த மணம் அவனை இழுக்கிறது. அதனுள்ளேயே அவன் ஆழ்ந்து முடிந்து போவதாக வாசகன் நினைக்கிறான். இரு இடங்களில் வேய்மூங்கில் என வருகிறது. வேய் என்றாலே மூங்கில் என்றுதானே பொருள்.
சாராயம் குடிக்காதவர்களுக்கே நாவில் எச்சில் ஊறும் வண்ணம், “சக்கைப் பணம் பழுத்த மாதிரி’ “பிறந்த குழந்தையின் முதல் சிரிப்பு” +விடியற்காலை பூ விரிப்பு”பொண்ணு சமைஞ்ச மாதிரி” என்பன போன்ற உவமைகள் இருக்கின்றன. சாராயம் காய்ச்சும் கலையும் எழுத்தில் நம்பகத்தன்மை இருக்கும் அளவிற்கு வெளிப்பட்டுள்ளது, ”மாயப்பொன்னை நேசையன் பிடித்தானா? மாயப்பொன் நேசையனைப் பிடித்ததா”” என்பதை வாசகனின் ஊகத்திற்கு விட்டுவிட்டு கதை வெற்றி ஆகிறது
வளவ. துரையன்
***
அன்புள்ள வளவ துரையன்,
சங்கப்பாடல்களுக்கு உரையெழுதிய புலவர்களுக்கு இயற்கை பற்றி தெரியாது என்பதனால் எல்லா பெயர்களையும் ஒன்றாக்கிவிட்டனர். வேய் என்பது மூங்கிலில் தனிவகை. அதிகம்போனால் கட்டைவிரல் கனம்தான் வரும். மென்மையானது, எடைகுறைவானது. அதில்தான் புல்லாங்குழல் செய்கிறார்கள். வேய் என்பது ஒருவகை புல். ஆகவேதான் புல்லாங்குழல் என்று பெயர்
ஜெ
***