ஆழி,மாயப்பொன் கடிதங்கள்

மாயப்பொன் [சிறுகதை]

அன்புள்ள ஜெ

மாயப்பொன் கதையில் இரண்டு ஐயங்கள். கடுத்தா சாமி என்று சபரிமலை ஐயப்பனின் சரணம்விளியில் வருகிறது. இந்தக்கதையில் வரும் கடுத்தா புலிதெய்வம். இரண்டு ஒன்றா?

இரண்டு நீங்கள் சாராயம் காய்ச்சுவதை பார்த்திருக்கிறீர்களா?

சரவணக்குமார். எம்

***

அன்புள்ள சரவணக்குமார்,

கடுத்தா என்பது பழங்குடிகளின் தெய்வம். புலிதான் அது. பழையகால நாயர்களுக்கு கடுத்தா என்ற பெயர் இருந்தது. கடுவா [ கடு+வாய்] என்றாலும் புலிதான். ஐயப்பனின் புலிவாகனமாக கடுத்தா மாறியது என்பது தொன்மங்களில் ஒன்று

நான் எழுதும் இந்தக்கதைகளில் உள்ள மாயங்களில் ஒன்று இது மறைந்துபோன வாழ்க்கை என்பது. நாற்பதாண்டுகளுக்கு முன்பு குமரிமாவட்டத்தின் எல்லா கிராமங்களிலும் புகழ்பெற்ற சாராயம் காய்ச்சுபவர்கள் இருந்தனர். நான் அவர்களுடன் நெருங்கி பழகியிருக்கிறேன். அடுப்பை கவனித்துக்கொண்டிருக்கிறேன். நன்றாகவே காய்ச்சவும் தெரியும். அன்றெல்லாம் சொந்த உபயோகத்துக்கு காய்ச்சினால் குற்றமாக கருதப்படவில்லை என்றால் நம்பவேண்டும்

எங்களூரில் கள், சாராயக் கடை இல்லை. ஊரில் எவரும் குடிக்காமலா இருந்திருப்பார்கள்? சாராயத்தில் அரசியல்வாதிகள் நேரடியாகச் சம்பாதிக்க ஆரம்பித்த பின்னரே இன்றைய கெடுபிடிகள். என் கருத்தில் தனிப்பயன்பாட்டுக்காக காய்ச்சுவதில் தவறே இல்லை. அது ஒரு அழகிய கலை

ஜெ

***

அன்புள்ள ஜெ

இந்தவரிசை கதைகளில் கலைஞன், கிரியேட்டிவிட்டி ஆகியவற்றைப் பற்றிய இரண்டு கதைகள் இருக்கின்றன.குருவி ஒரு கதை. இன்னொரு கதை மாயப்பொன். அது கானல்நீர் அல்ல. அது இருக்கிறது. அதைத்தேடிச் செல்வதுதான் கலைஞனின் வாழ்க்கைத்தவம். நேசையன் செய்வது ஒரு தவம்தான். சாராயம் காய்ச்சும் அந்தச் செயல்பாட்டை உருவகமாக ஆக்கிக்கொண்டால் எவ்வளவு அர்த்தங்கள்.

‘இனிப்பில் ஊறும் கிறுக்கு’ என்று அதைப்பற்றி அவன் சொல்கிறான். கடவுள் எழுந்து வந்தால் அவருக்கு அளிக்கவேண்டிய பரிசு என்கிறான். துளித்துளியாக அதை உருவாக்குகிறான். இனிப்பை நெஞ்சிலே ஊறப்போட்டு நொதிக்கவைத்து எடுக்கவேண்டும். அதை உயிர் என்ற அக்கினியில் நொதிக்கவைக்கிறான். அதன்பின் வாற்றி துளித்துளியாக எடுக்கிறான். அதில் கலைஞன் அடையும் நம்பிக்கை, சோர்வு, பிடிவாதம்.

அதை வணிகமாக ஆக்குபவர்களை அவனுக்குத் தெரியும். ஆனால் ஒன்றும் சொல்லமுடியாது. அவனுக்கு அதில் அக்கறை இல்லை. உலகத்தவர் அதுதான் சாதித்துவிட்டாயே என்று சொல்வார்கள். அவனால் அதில் நிறைவடைய முடியாது. அதனுடன் இணைந்துள்ளது கடுத்தா புலியின் தொன்மம். அதன் உடலில் உள்ள பொன் காட்டில் சிந்திக்கிடந்து அழைக்கும். அந்த மாயத்தில் சிக்கியவன் அழிவான். மாயப்பொன் தேடி போகாதே என்பது காட்டின் விதி. ஆனால் கலைஞன் மாயப்பொன் தேடிப்போகவே பிறந்தவன். மாயப்பொன் இல்லாவிட்டால் வாழ்க்கையில் என்னதான் மிச்சம் என்று கேட்பவன்.

அவனுக்கு எதிர்பாராதபடி கனிகிறது. மது ஊறி வருகிறது. நிலவு இறங்குகிறது. கடுத்தா தோன்றுகிறது. அது அவன் மட்டுமே அறிந்த ரகசியம். அவன் அதை எவருக்கும் சொல்லவேண்டியதில்லை. அவனுக்குள் நிறைந்த ரகசியம் அது

ராஜசேகர்

***

ஆழி [சிறுகதை]

அன்புள்ள ஜெ

ஆழி கதையை அதன் எளிமைக்காகவும் சரளத்திற்காகவும் படித்தேன். இயல்பாக ஓடிச் செல்கிறது. அவர்களிடையே உள்ள பிணக்கும் முரண்பாடுகளும் வெளிப்பட்டபடியே இருக்கின்றன. ஒரே கேள்விதான். அத்தனை முரண்பாடுகளுடன் எப்படி சேர்ந்திருப்பது? அது நம் கையில் இல்லை என்பதே பதி. அது ஆழியின் கையில் உள்ளது. கடல் அறியுமா? கடல் அவ்வளவு பெரியது, ஆகவே அதற்கு எல்லாமே தெரியும் என்பதே கதையில் வரும் பதில்.

திடீரென்று அலைக்கொந்தளிப்பு. ஒவ்வொரு அலையும் அவர்களை பிடுங்கிப்பிடுங்கி விலக்கி அலைக்கழிக்கிறது. ஆனால் கடல் அவர்களை இணைக்கிறது. கடலில் நீந்தியவர்கள் அறிந்த பல நுட்பங்கள் உள்ளன. பெரிய அலைக்கு முன்னால் கடல்நீர் பின்னால் ஒழுகுவது அதில் ஒன்று.

ஜெயக்குமார்

***

அன்புள்ள ஜெ,

’ஆழி’ கண்டம்பரரி காதல் கதை. ஆழி ஒரு உலுக்கிப்போடும் அனுபவத்தை இருவருக்கும் அளித்துவிட்டது. அவர்களுடைய மெஷரே இனி அந்த அனுபவம்தான். இனி ’ஸ்மூத்னஸ்’, சண்டைகள் அனைத்தையும் அளவிடப்போவது அந்த அனுபவம்தான். அது அவர்களை பிரிய விடாது. அதை அவர்களே சென்று அறிந்துகொள்வதுதான் இந்த மாடர்ன் தலைமுறையின் எஸன்ஸ் என்று நினைக்கிறேன்.

மணிரத்னத்தின் கடல் பட ரெபரன்ஸ் வருகிறது. எனக்கு இன்னொரு படமும் நினைவுக்கு வருகிறது அவரின் ஓகே கண்மணி. கிட்டத்தட்ட இந்த ஜோடியின் இண்டலக்ட் எமோஷன்ஸ்தான் துல்கர்- நித்யாவில் வெளிப்படும்.. ஆனால் ரியாலிட்டி அந்த யங் கப்புளை கொஞ்சம் கலைத்துப்போட்டவுடன் அந்த முதிய கப்புள்தான் அவர்கள் என்று தோன்றும்.

’வான்கீழ்’ கதையை டைட்டானிக்குடன் ஒப்பிடாமல் இருக்கமுடியவில்லை.  டைட்டானிக் ஒரு எஞ்சியனிரிங் மார்வல். அந்த கப்பலின் முனையில் டால்பின்கள் முன்னால் துள்ள  அதிவேகமாக ஒரு இணை கடலில் பறந்துகொண்டிருக்கும். அதேபோல இரும்பு மாடனும் ஒரு மார்வல். அதன் மேலேயும் அதேபோல ஒரு ஜோடி. என்ன எருமைக்குட்டி போல கொஞ்சம் கருப்பு. அவ்வளவுதான் வித்தியாசம்.  ஆனால் இது நம்முடைய கதை.

’வான் நெசவு’ போல இன்னும் 50 ஆண்டுகள் கழித்து ஷூ செப்பல்களை கடற்கரையில் களைந்துவிட்டு குடாவின் அலைகளில் கைகளைக் கோர்த்து கால்களை நனைக்கும் இன்னொரு வயதான ஜோடியை கற்பனை செய்துகொண்டேன். ’ஆழியின் மடியில்’ என்று உங்கள் பாணியில் பெயர் வைக்கலாம். அல்லது அவர்களில் ஒருவர் மட்டும் சென்று கால்களை நனைப்பதாக வைத்துக்கொள்ளலாம். ஆனால் துக்கம் தாளாது.

அன்புடன்
ராஜா

***

முந்தைய கட்டுரைமதுரம்,சூழ்திரு -கடிதங்கள்
அடுத்த கட்டுரைவனவாசம் ,வான்நெசவு -கடிதங்கள்