ஆழி, பத்துலட்சம் காலடிகள் -கடிதங்கள்

ஆழி [சிறுகதை]

அன்புள்ள ஜெ

நான் ஆழி கதையை மிக எளிமையாக புரிந்துகொண்டேன். காதலர்கள் பிரிய நினைக்கிறார்கள். பிரச்சினை வருகிறது, பெண் ஆற்றலுடன் ஆணை காப்பாற்றுகிறாள். அவள் அவனைவிட வலுவானவள். அதுதான் கதையின் மையம் என்று

ஆனால் கதையின் தலைப்பு ஆழி என்றதும்தான் என் வாசிப்பின் போதாமையை உணந்தேன். அந்த வாசிப்பு ஏன் என்று உடனே எனக்குப் புரிந்தது. அது இங்கே நம்முடைய சாதாரண வணிகக்கதைகளில் உள்ள வழக்கமான டெம்ப்ளேட். உடனடியாக நம் மனம் அதைத்தான் சென்றடைகிறது. அதைக் கடந்துசெல்லாமல் நம்மால் புதிதாகக் கதை படிக்கமுடியாது. இது உண்மையிலேயே பெரிய சிக்கல். இன்றைக்கு கதை, சினிமா எல்லாம் ஜாஸ்தியாகிவிட்டது. ஆகவே கதைகள் உருவாக்கும் ஒரு மெயின்ரோடு வழியாக நாம் செல்ல ஆரம்பித்துவிடுகிறோம்

இந்தக்கதை கடலைப் பற்றியது. உரையாடல் வழியாக கதை சில குறிப்புகளை அளிக்கிறது. பிரிந்துசெல்ல ஆயிரம் காரணம் உள்ளது. இணைய ஒரே பெரிய காரணம்தான். என்ன அது? தெரியாது. அதை விதி என்று சொல்லலாம். அதே சூழலைத்தான் கடலில் காண்கிறோம். ஒவ்வொரு அலையும் அவர்களை பிரிக்கின்றன. கடல் அப்படியே அள்ளிக்கொண்டு சேர்த்துவிடுகிறது.  ‘ பிரிப்பவை அலைகள் , இணைப்பது கடல்’ என்று ஒற்றைவரியாக கதையை புரிந்துகொண்டேன்

அதன்பின் இந்தக்கதையிலுள்ள கடல்பற்றிய பல வரிகளை வாசித்தேன். கடல் என்று இங்கே சொல்லப்படுவது ஆழி. ஆழமேயானது. அது என்ன? விதியா? அல்லது மனிதனால் அறியமுடியாத ஆழமா?

சாரங்கன்

***

அன்புள்ள ஜெயமோகன்,

ஆழி கதை முழுக்கவே குறியீடுகளும் படிமங்களும் நிறைந்திருக்கிறது. ஆழி என்ற கதையின் தலைப்பும் ஒரு குறியீடுதான். மணற்குன்று, கடற்கரை, புனித சேவியர் குகை என கதை குறியீடுகள் நிறைந்திருக்கிறது.

கதையின் துவக்கத்தில் அந்தக் காதலர்களின் உரையாடலில் மிளிரும் பிணக்கு ஆதவனின் “நிழல்கள்” கதையை நினைவூட்டியது. அக்கதையில் தோன்றும் காதலர்களும் பெயரற்றவர்களே. அந்தக் கதையின் இறுதியிலும் காதலன் நினைத்துக்கொள்வான், இவ்வளவு பிணக்கோடும் தங்கள் இருவரையும் சேர்த்து வைத்திருப்பது எது என்று.

ஆழி கதையில் இந்தக் காதலர்கள் பிரிந்து செல்ல முடிவெடுக்கும் அளவுக்கு அவர்களுக்கிடையே பூசல்கள் மிகுந்திருந்தாலும், உதட்டளவில்தான் அவர்கள் பிரிவது குறித்துப் பேசிக்கொண்டேயிருக்கிறார்கள். உண்மையில், அவர்கள் பிரிந்துபோய்விடுபவர்களல்ல என்பதை ஹாஸ்டல் வாசலில் பைக்கைத் திருப்பியதும் இருவரும் ஒருகணம் தயங்கிநிற்கும் அந்தக் காட்சியே முன்னுணர்த்தி விடுகிறது.

கடலை மறைத்து பெரிய திரையாக நின்றிருக்கும் மணற்குன்று போல  அவர்கள் இருவரின் காதலை மறைத்து பெரிய குன்றாக அவர்களின் ஈகோ நின்றிருக்கிறது.

அலைவிளிம்பைப் பார்த்து அவள் வெள்ளிக்கொலுசு போலிருக்கிறது என்கின்றாள். அவன் பெரிய வாளைப் போல இருக்கிறது என்கிறான். அவர்கள் இருவரின் மன உணர்வுகளை இந்த உவமைகள் துல்லியமாகக் காண்பித்து விடுகின்றன.

கடலோர சேற்றுப்பாறையில் இருக்கும் புனித சேவியர் குகைபோல அவர்களுக்குள் இருக்கும் காதலும் மனதின் சேற்றுப்பாறைகளின் அடியில் எங்கோ இருக்கிறது.

ஆழி என்பது விதியின் குறியீடாகவும் வாசிக்கலாம். வாழ்க்கையின் குறியீடாகக் கூட வாசிக்கலாம். எந்த மனப்பொருத்தமும் இல்லாத அவனது பெற்றோர் அத்தனை சண்டைகளுக்கும் பின் சேர்ந்திருப்பது அந்த ஆழியால்தானே.

காதலன் தன்னுடைய பெற்றோரின் வாழ்வைக் குறித்து எண்ணுகையில் “ஒருநாளுக்கு ஆயிரம் கை அவங்களை பிடிச்சு விலக்குது. ஒரே ஒரு பெரிய கை பிடிச்சு ஒண்ணச் சேக்குது… அந்தப் பெரிய கையை கண்ணாலே பாக்கமுடியலை” என்கிறான். கதையின் முடிவில் அந்தப் பெரிய கையை அவர்கள் இருவரும் பார்த்து விடுகிறார்கள். ஒருவகையில் அந்தக் கையின் ஸ்பரிசம் அவர்களின் வாழ்நாள் முழுக்கத் தேவைப்படப்போகிறது. ஆனாலும் அது உப்புச்சுவையுடன்தான் இருக்கப்போகிறது.

மிக்க அன்புடன்,

கணேஷ் பாபு

சிங்கப்பூர்

***

பத்துலட்சம் காலடிகள் [சிறுகதை]

அன்புள்ள ஜெ,

கதைகள் வந்துகொண்டே இருக்கின்றன,அதைப்போல வாசிப்புகளும். பத்துலட்சம் காலடிகளுக்கு வரும் வாசிப்புகள் நிறைவை அளிக்கின்றன

எனக்கு ஒரு மனச்சித்திரம் வந்தது. பல அடுக்குகளாக கட்டப்படும் உருக்கள். நடுவே ஒரு பூ மலர்கிறது. ஆனால் அந்தப்பூவை கிள்ளி எறிந்தே அகவேண்டும்

ஆனால் அந்த உருவே ஒரு மாபெரும் பூதான்

சாரதா

***

அன்புள்ள ஜெ அவர்களுக்கு,

தங்கள் வலைத்தளத்தில் வெளியாகிக்கொண்டிருக்கும் சமீபத்திய சிறுகதைகள் இந்நாட்களை எதிர்பாராத கொண்டாட்டாமாக அமையச்செய்கின்றன. அவ்வரிசையில் ‘பத்துலட்சம் காலடிகள்’ கதையையும் வாசித்தேன்.

இந்த வகைக்கதையின் வசீகரம் கதைக்குள் வரும் கதைசொல்லியின்  ஆளுமையில் உள்ளது. ஔசேப்பச்சனில் மனிதர்களை ஓரக்கண்ணால் அளக்கும் பார்வையும், நையாண்டித் தொனியும், எதையும் புனிதமாக பாவிக்காத இர்ரெவெரென்சும் உள்ளது. ஒழுக்கங்களை அவன் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. குற்றப்பின்னணி உள்ளவன் நிரபராதியாகவே இருப்பினும் நான்கு அடிகள் வாங்குவதில் அவன் மனசாட்சி பதறுவதில்லை.

இந்த மெல்லிய பொறுக்கித்தனம் அவனுக்கு ஒரு சுவாரஸ்யத்தை அளிக்கிறது. கதை சொன்னால் வாய் பிளந்து  கேட்க வைக்கிறது.அதே சமயம் அவனிடத்தில் ஒரு அடிப்படை அறவுணர்வு இருக்கிறது. அறத்தின் வெளிப்பாட்டைக் கண்டால் நெகிழ்கிறான். அவன் அநீதிகளை பொறுப்பவன் அல்ல. குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவேண்டும் என்ற சென்ஸ் ஆஃப் ஜஸ்டிஸ் கொண்டவன்.

ஆனால் அவன் தனியாளாக டிகெட்டிவாக செயல்படக்கூடியவனும் அல்ல. காவல்துறை என்ற அமைப்பு மீது நம்பிக்கை உள்ளவன். அமைப்பு சார்ந்தே தன்னுடைய புலனாய்வை ஒருங்கிணைக்கிறான். போலீஸ் அதிகாரியேதான். விசித்திரக் கலவை.

இவன் மூன்று கதைகளை சொல்கிறான். மூன்றுமே கொலைகள் நிகழும் கதை. மூன்று கதைகளிலுமே கொலையாளி சட்டப்பூர்வமான தண்டனைக்கு ஆளாக்கப்படுவதில்லை. ஒன்று, தங்களை சீரழித்தவர்களை அமைதியாக பழிவாங்கி வாழும் சகோதரிகளின் கதை. இரண்டு, தன் துன்பங்களுக்குக் காரணமான கொடியவனை நொடிப்பொழுதுக் கோபத்தில் கொன்ற போலீஸ் அதிகாரியின் கதை. மூன்றாவது இந்தக்கதை.

அழிந்துகொண்டிருக்கும் ஒரு புராதான மரபை, பற்பல நூற்றாண்டுகளாக பிசகில்லாமல் செயல்படும் சிக்கலான அமைப்பை இந்த யுகத்தில் காத்துவரும் பிரதிநிதியான அப்துல்லா ஒரு வரலாற்று நாயகனைப்போல ஔசேப்பச்சனுக்குத் தென்படுகிறார். அவன் கதை சொல்கையில் அவரை கிட்டத்தட்ட வழிபடுகிறான் என்று நமக்குத் தோன்றுகிறது. அப்துல்லாவும் அதற்கேற்ற இயல்பான தோரணையை கொண்டிருக்கிறார். அவர் உடல் தோற்றம், பேச்சு, நிதானம், ரசனை எல்லாம். அது

ஒரு தனி மனிதனின் ஆளுமை அல்ல. அவருடைய தோரணை அவர் அந்த மரபின் பிரதிநிதி என்ற அழ்ந்த உணர்விலிருந்து வருகிறது. பத்தாயிரம் காலடிகளின் கணக்கை அறிந்த மரபின் மிடுக்கு.

அப்துல்லா தன் மகனை கொலை செய்தது ஔசேப்பச்சனுக்குத் தெரிய வருகிறது. ஆனால் அவன் கண்களில் அவர் ஒளி குறைவதாகத் தெரியவில்லை. பெரியவற்றை பாதுகாக்க பெரிய தியாகங்களை செய்யும் பெரிய மனிதராகவே அவர் அவனுக்குத் தோன்றுகிறார்.

ஏனென்றால் அவன் அதன் மறுபக்கத்தையும் உணர்ந்துகொள்கிறான். அந்த பத்துலட்சக் காலடிகளின் நகர்வு. கடலுக்கடியிலிருந்து அமுதத்தை மீட்கும் ஜாலம். பத்தேமாரி கடலை வெல்லும் நுட்பம். அந்த பேரமைப்பின் நிலைநிறுத்தலுக்கு இப்படி பல பலிகள் விழுந்திருக்கவேண்டும். அதை துளியும் விசனப்படாமல் நிறைவேற்றும் ஆற்றல்லுள்ள அதிமானுடரும் வரலாற்று நெடுக தோன்றியிருக்கவேண்டும். அவர்கள் வாழ்ந்த காலமும் புகுந்த உடலும் வெவ்வேறாக இருந்தாலும் அவர்கள் அனைவரில் திகழ்ந்த ஜோதி ஒன்றுதான். எந்த மரபும் அப்படித்தான் நீடிக்கிறது. அப்துல்லாவில் இதனை  ஔசேப்பச்சன் காண்கிறார். ஒரு காலாதீத நியதிபோல். சரி தவறுகளுக்கப்பால் அவரால் அந்த கணக்கின் திட்டவட்டத்திலிருந்து வெளிவரமுடியவில்லை. அந்த ரயிலை வெளியெடுத்த காட்சியையே அவர் கண்ணுக்குள் பார்த்துக்கொண்டிருக்கிறார். ஒரு காலடித் தவறினாலும் பிழறிவிடும் என்கிறார்.

நாமும் அப்துல்லாவை அவர் கண்கள் வழியாகவே பார்க்கிறோம், ஆகவே அவர் வசீகரத்தின் மயக்கில் ஆற்றுப்படுகிறோம். ஆனால் கதையிலிரிந்து வெளிவந்தபின் ஒரு நெருடல் உருவாகிறது.

அப்துல்லா தன் மகன் ஹாஷீமை கொலை செய்கிறார். ஹாஷீமின் செயல் ‘சுல்தானின் வாள்’ வகுத்த மரபின் மீறல் தான். அவன் நடத்தையை ஒழுங்கென்று சொல்ல முடியாது.

ஆனால் அவன் செயலில் ஒரு கள்ளமிலாத்தன்மை இருக்கிறது. மரபுகளை பற்றி யோசித்து தன் செயலை வடிவமைத்துக்கொள்ளும் பத்திரமான காலடி நகர்வுகள் அவனிடம் இல்லை. தான் ஆசைப்பட்டதை அடைய சின்னக்குழந்தை மிரட்டுவதுபோல், அடம்பிடிப்பதுபோல் அவன் நடந்துகொள்கிறான். அவன் பிந்தொடர்ந்த பெண்ணே அதைச் சொல்கிறாள். அதன் பிறகு அவன் அவளை தொந்தரவு செய்யவில்லை. அவளும் தன்னளவில் ஒரு புரிதலுக்கு வருகிறாள். இவற்றுக்கெல்லாம் இடம் கொடுக்கும் நெகிழ்வு இயற்கையில், வாழ்க்கையில் உள்ளது – அந்தப்பெண்ணின் வாக்குமூலமே அதற்குச் சான்று.

இருந்தாலும் அப்துல்லாவின் கணக்கு படி அவன் கொல்லப்பட வேண்டியவன். ஏனென்றால் அவர் அமைப்பில் அத்தகைய மீறல்களுக்கு இடமில்லை. அத்தகைய மீறல்களுக்கு இடமளித்தால் அந்த அமைப்பும் இல்லை.

எத்தனை சிறப்பான, புராதனமான அமைப்பாக இருந்தாலும், அதன் இறுக்கமான, பழுதில்லாத நிலைப்பாட்டிற்காக ஒரு கள்ளமற்றவன் பலியாக்கப்படலாமா? பத்துலட்சம் காலடிகள். அவற்றை ஈடுசெய்ய ஒவ்வொரு காலடிக்கும் ஒரு பலியென்று ஒரு ஜின் கோறுமென்றால், அந்த பேரத்தை ஏற்றுக்கொள்வது அறமாகுமா?

கதை எழுப்பிய இந்தக்கேள்வியை எளிதாக தாண்டிச்செல்ல முடியவில்லை. அர்சுலா ல குவினின் ‘ஒமேலா’ கதை நினைவுக்கு வருகிறது. பொன்னகரம் நிற்கவேண்டுமென்றால் அதற்க்கடியில் நிரந்தரமாக ஒரு பசித்தக் குழந்தை சிறைபட்டிருக்கவேண்டுமென்றால் அந்த நகரில் வாழ முடியுமா?

ஔசேப்பச்சன் காவல்துறை என்ற அமைப்பின் பிரதிநிதி. அவனுக்கு அமைப்புகளின் அருமை தெரியும். அது கோரும் தியாகங்களையும். அவனுக்கு அப்துல்லாவின் செயல் மகத்தானதாகவே தெரிகிறது.

ஆனால் அவன் சொல்லும் மற்ற இரண்டு கதைகளை போன்றது அல்ல இதன் நியாயம். முதல் கதையில் அந்தச் சகோதரிகள் கிட்டத்தட்ட காட்டு விலங்குகள் போல் துறத்தப்படுகிறார்கள். பயன்படுத்தப்படுகிறார்கள். வேட்டையாவதா, வேட்டையாடுவதா என்ற இன்ஸ்ட்டிங்ட் மட்டுமே அவர்களை செயல்படுத்துகிறது. இரண்டாவது கதையில் ஒரு மனிதன் தன் எல்லை வரை சோதிக்கப்படுகிறான். அசுரவதம் போல் நிகழ்கிறது அந்த கொலை. கொலையாளியின் மகள் கருணையோடு இருக்கிறாள், அவனை மன்னிக்கிறாள். இரண்டுமே ஒரு புராதான அறத்தின் நிகழ்வடிவாக எழுகின்றன.

ஆனால் அப்துல்லாவின் கொலை முழுக்க முழுக்க நாகரீக வட்டத்திற்குள் வருவது. மனித அமைப்புகளை நிலைநாட்ட மனிதன் அமைத்த நீதி. அந்த நீதியின் படியே ஹாஷீம் கொல்லப்படுகிறான். அந்த நீதி தொன்மையானதுதான். மனிதனின் பண்பட்ட வாழ்வின் சான்றுதான். அதன் வாளைக் கையாள மிகப்பெரிய ஆன்மபலம் வேண்டும் தான். ஆனால் ரொசாரியோவின் மகள் இதை மன்னிப்பாளா என்ற கேள்வி எஞ்சுகிறது.

அற்புதமான வாழ்வனுபவத்தை அளித்த கதை. இக்கேள்வி இன்னும் பலநாள் பின் தொடர்ந்துவரும். நன்றி ஜெ.

அன்புடன்

சுசித்ரா

***

முந்தைய கட்டுரைவனவாசம், ஓநாயின் மூக்கு -கடிதங்கள்
அடுத்த கட்டுரைகடிதங்கள்