அறத்தொடு நிற்றல் – கடிதம்

கப்பல்காரனின் கடை

ஆசிரியருக்கு வணக்கம்,

பிறந்தநாள் வாழ்த்துக்கள்,உங்களிடம் தொடர்ந்து கற்றுகொண்டே இருக்கிறோம்.

கடந்த டிசம்பர் ஆறாம் தேதி தூயரான மலையாள திரைப்பட இயக்குனர்  மதுபால்  அவர்களை அழைத்து வந்து இந்த கப்பல் காரனின் கடையை திறந்துவைத்தீர்கள்.நமது நண்பர்களும் திரளாக அன்று வந்து சிறப்பித்தார்கள் தொடர்ந்து இதுவரை புத்தி கொள்முதலுக்கு மாதம் எண்பது ஆயிரம் வரை செலவு செய்துகொண்டே இருக்கிறோம் .எனக்கு எண்ணெய் வணிகம் குறித்து எதுவுமே தெரியாது எனது பங்குதாரரின் தந்தை யோகா குருவான ராதாகிருஷ்ணன் அவர்கள் 2018 ஆண்டு என்னிடம் எண்ணை வணிகத்திற்கு வருகிறாயா? என கேட்டபோது எதையும் யோசிக்காமல் ஒத்துக்கொண்டேன் .

அரசின் ஊரடங்கை தொடர்ந்து கடந்த மாதம் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு வந்துவிட்டேன்.வீட்டிலிருக்கும்போது தொடர்ந்து தொலைபேசி அழைப்புகள் வந்துகொண்டே இருந்தன . “உங்கள் எண்ணையை உபயோகித்தபின்,எங்களால் வேறு எண்ணையில் சமைக்க இயலவில்லை,எப்போது கடை திறக்கும்” என அழைத்ததில் பெரும்பான்மையானவர் பெண்கள்.எனவே கடையை திறந்தேன்.

பணியாளர்கள் யாரும் இல்லை .மர செக்கில் நானே ஆட்ட தொடங்கினேன்.இந்த எண்ணையை உபயோகிப்பவர்,நல்ல உடல் ஆரோக்கியம்,பெறவேண்டும் என தியானித்து விட்டு செக்கில் கொப்பரையை போட்டு அது எண்ணையாக மாறிய  அந்த ஷணம் நான் பெருமகிழ்ச்சியடைந்தேன். நான் தயாரித்தது எனும் பெருமிதம் .அடுத்தடுத்த நாட்களில் எள்ளும்,கடலையையும் போட்டு எண்ணையாக மாற்றினேன்.எண்ணெய் இருந்த பாத்திரங்களில் கண்களால்  எண்ணையை பார்த்து இதை உபயோகிப்பவர்கள் நல்ல உடல் ஆரோக்கியம் பெற்று,மகிழ்வுடன் வாழ வேண்டும் என்ற பிரார்த்தனைக்கு பின் எண்ணையை குப்பிகளில் அடைத்து வைத்தேன்.பழைய எண்ணெய் அனைத்தும் தீர்ந்தபின்  இப்போது நான் தயாரித்த எண்ணெய் விற்பனை ஆகி கொண்டிருக்கிறது .எந்த கலப்படமும் இல்லாமல் சுத்தமான எண்ணையை இந்த சமுதாயதிற்கு நான் கொடுக்கிறேன் என்பதில் மிகுந்த மனநிறைவும்,திருப்தியும் அடைகிறேன் .இந்த தனிமை நாட்களில் தொழிலை முழுமையாக கற்றுகொண்டேன். இப்போது என்னால் முழுமையாக இந்த நிறுவனத்தை கவனித்து கொள்ள முடியும் .புத்தி கொள்முதலுக்கு தொடர்ந்து பணம் செலவழித்து கொண்டிருந்ததால் கொஞ்சம் சோர்ந்து இருந்த நான் .இப்போது முழு உற்சாகத்துடன் ,இந்த தொழில் நிச்சயம் வெற்றியடையும் எனும் நம்பிக்கையும் உறுதியாகியுள்ளது.

இங்கு (திருவனந்தபுரம்)தனியாக இருப்பவர்களுக்கு அரசு வழங்கும் இலவச உணவு கிடைக்கும் நான் எற்பாடு செய்கிறேன் என வியாபாரி சங்க செயலர் என்னிடம்சொன்னார் .நன்கொடை பெற்று இல்லாதர்வர்களுக்காக கொடுக்கப்படும் உணவு அது  .என்னால் உணவு சமைக்க முடியும்,சமையலுக்கான பொருட்களை வாங்கும் சக்தியும் என்னிடம் இருக்கிறது எனவே  உறுதியாக அதை மறுத்து விட்டேன்.நானே சமைத்து சாப்பிடுகிறேன்.

இந்த சந்தர்பத்தை பயன்படுத்தி ஒருசாரர்  அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்கிறார்கள் .நான் எந்த பொருளுக்கும் விலையேற்றம் செய்யவில்லை.ஐந்து கிலோமீட்டருக்குள் எண்ணை மற்றும் பொருட்கள் வாங்குபவர்களுக்கு கட்டணமின்றி அவர்களின் இருப்பிடம் சென்று கொடுக்கிறேன் .

இங்கே தான் நான் உங்களின் அறம் வாசித்த வாசகன் என என்னை பெருமையாக எண்ணிக்கொள்கிறேன்.

இயல்பாக அறம் கொஞ்சம் இருந்திருந்தாலும் ,சோற்றுக்கணக்கும்,யானை டாக்டரும் மேலும் அதை உறுதிபடுத்தி அறம் நின்று வாழ சொல்லிதந்துள்ளது .ஆம் உங்கள் எழுத்தின் வலிமை உங்கள் வாசகன் ஷாகுல் அறம் நின்று வாழ்கிறான்.

நன்றி .

ஷாகுல் ஹமீது

+91 8122502841

முந்தைய கட்டுரைமதுரம், ஓநாயின் மூக்கு -கடிதங்கள்
அடுத்த கட்டுரைமாயப்பொன் [சிறுகதை]