ஓநாயின் மூக்கு [சிறுகதை]
அன்புள்ள ஜெ,
மீண்டும் ஒரு விரிவான சிறுகதை. விரிவால் நாவல், அமைப்பால் சிறுகதை. வெவ்வேறு கோணங்களில் திறந்துகொண்டே செல்கிறது கதை. ஆனால் சூழ்ந்து வந்து முடிவது ஒரே புள்ளியில்.கதையின் நையாண்டிகள், ஔசேப்பச்சன் நாயர் சாதிபற்றிச் சொல்லும் பிலோ த பெல்ட் வசைகள் என கதை போக்குக் காட்டிக்கொண்டே இருக்கிறது. மெல்லமெல்ல அது தீவிரம் அடைகிறது. மிகமுக்கியமான ஒரு பிரச்சினையை தொட்டு மேலும் மேலும் ஆழத்திற்குச் செல்கிறது
கொஞ்சநாட்களுக்கு முன் நாகர்கோயிலில் ஒரு நியூஸ் வந்தது. அப்போது நான் அங்கேதான் இருந்தேன். ஒரு வீட்டில் ஓய்வுபெற்ற அரசு அதிகாரியின் மனைவியும் மூன்று மகள்களும் இருந்திருக்கிறார்கள். அவருக்கே நிறைய மனப்பிரச்சினைகள் இருந்திருக்கின்றன. இவர்கள் நால்வருக்குமே மனப்பிரச்சினை. அந்த அம்மாள் செத்துவிட்டாள். இவர்கள் அந்தச்சடலத்தை பத்துநாட்கள் வரை ரூமிலேயே வைத்திருக்கிறார்கள்
இவர்களுக்கு ஊருடன் எந்த தொடர்பும் இல்லை. வீட்டுக்குள்ளெயே வாழ்ந்திருக்கிறார்கள். ஆகவே எவருக்கும் எதுவுமே தெரியாது. அந்த சடலம் நாற்றமடித்தபோது போலீஸுக்கு புகார் செய்தார்கள். போலீஸ் வந்து கதவை உடைத்து உள்ளே சென்றால் புழு நெளிந்துகொண்டிருந்தது பிணத்தில் மூன்று பெண்களும் அதைச்சுற்றி அமர்ந்திருந்தார்கள்
அவர்களை போலீஸ் கொண்டுபோகும் படம் வெளிவந்தது. என் வீடு அங்கேதான், ஆனால் நான் பேப்பரில்தான் செய்தி பார்த்தேன். பதற்றமாக இருந்தது. இதெல்லாம் எப்படி நடக்கிறது? கலெக்டிவ் மெண்டல் டிஸார்டரா? பேயா? சாபமா? அல்லது குமாரன் மாஸ்டர் சொல்வதுபோல இது எல்லாமாகவும் விளக்கப்படும் ஒன்றா?
இந்த விஷயம் தமிழ்நாட்டிலும் நிறைய குடும்பங்களில் உண்டு. இதை விளக்கிவிடமுடியாது. வரலாற்றின் ஆழத்துக்குத்தான் தோண்டிச்செல்லவேண்டும். தமிழ்நாட்டில் பலகுடும்பங்களிலே பெண்சாபம் இருக்கும். ஏதாவது பெண் அநீதியாகக் கொல்லப்பட்டிருப்பாள்.
உண்மையான ஒரு சம்பவம். அதைப்போலவே இன்னொரு சம்பவத்தை உருவாக்கி நீங்கள் போவது அந்த உண்மையான சம்பவத்தின் ஆழங்களுக்குள்தான், பெண்சாபம். ஒரு அநீதியை மூடிவைக்கவே முடியாது. அது வந்துசேரும். அதற்கு பதில் சொல்லியே ஆகவேண்டும்
எஸ்.ராமச்சந்திரன்
***
அன்புள்ள ஜெ,
ஓநாயின் மூக்கு என்ற உருவகமே கொடூரமானது. ஓநாய் ரத்தம் தேடி வரும். விடவே விடாது. அதைப்போல வந்துகொண்டே இருக்கிறது வரலாறு. இந்தக்கதைக்கும் ‘ஆயிரம் ஊற்றுக்கள்’ கதைக்கும் ஒரு வரலாற்றுத் தொடர்ச்சி இருக்கிறது. ஆனால் ஆச்சரியமானது. ஆயிரம் ஊற்றுக்களில் கொடூரமாக ஆறு இளவரசர்களைக் கொன்றவர்கள் இந்த எட்டுவீட்டுப் பிள்ளைமார்கள். அவர்களின் குடும்பங்கள்தான் இந்த கதையில் கொடூரமாக அழிகின்றன.
அப்படி எட்டுவீட்டுப்பிள்ளைமாரை அழித்தவர்கள்தான் இந்தக்கதையின் நிகழ்காலத்தில் அந்த ரத்தத்திற்கு பதில் சொல்கிறார்கள். சீசா விளையாட்டு போல நடந்துகொண்டிருக்கிறது இது. ரத்தம் எடுத்து ரத்தம் கொடுக்கிறார்கள். வரலாறு என்ற ஓநாய் இங்கிருந்து அங்கும் அங்கிருந்து இங்குமாக ஓடிக்கொண்டே இருக்கிறது
ராஜசேகர்
வனவாசம் [சிறுகதை]
அன்புள்ள ஜெ
வனவாசம் போகாதீங்க என் மனவாசம் போதுமுங்க என்ற அல்லியின் பாட்டு சுப்பையாவின் மனசிலே ஒலிப்பதுதான் இக்கதை. ஒரு மாபெரும் காதல் மேடையில் நிகழ்கிறது. அதற்கு ஒரே சாட்சி அவன். அவன் மண்டைக்குள்தான் அது இருக்கிறது. அர்ஜுனன் இனிமேல் இருக்கப்போவது அவனுடைய மனவாசமாகத்தான்
தெருக்கூத்தின் வரிகளைக்கூட சொந்தமாக எழுதியிருக்கிறீர்கள். நான் பிஎச்டி ஆய்வுக்காக புலந்திரன் களவு, அல்லி அரசாணிமாலை ஆகியவற்றை ஆராய்ந்திருக்கிறேன். இந்த வரிகள் உங்கள் கைபட்டு அழகாக இருக்கின்றன. இந்த மொழிதான் ஃபோக். உள்ளடக்கம் கிளாசிக்கலாக இருக்கிறது.
அல்லியின் நீர்ப்பிம்பமே அர்ஜுனன் ஆக வருவது, அவர்கள் நடுவே நடக்கும் போர், அவன் கிளம்பிப்போகும்போது நிழலை வெட்டுவது எல்லாம் தெருக்கூத்தில் வராது. அது கிளாசிக் மேடைக்கு உரியது. அற்புதமாக எழுதியிருக்கிறீர்கள். அத்தனை பாட்டுமே அருமை. அதிலும் ‘தொப்புள் கொடியாக தொடர்பறுத்து போறேனே’ என்றவரி சரியான தமிழ் நாட்டுப்புறப்பாட்டு. அதை எழுதவும் உங்கள் நடை இணங்கி வருகிறது.
எஸ்.மகேந்திரன்,
***
அப்பாவின் தாத்தா கூத்து கலைஞர் என்று அப்பா ஒருமுறை சொல்ல கேட்டிருக்கிறேன். என் பாட்டன் காஞ்சிபுரத்துல இருந்து இடம் பெயர்ந்து திருக்கோவிலூர் பக்கம் வந்துடாங்க அப்பமே. ஆனால் என் தாத்தாவுக்கும் அப்பாக்கும் கூத்துப்பற்றிய பிரக்ஞை இல்லை என்றாலும் நானும் அதை வலிய கேட்டதில்லை. இக்கதையைப் வாசிக்கும் பொழுது என் பாட்டனை மனக்கண் வழியாக நினைத்து கொள்கிறேன்.
பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஐயா
சரண்
***
அன்பு நண்பர் ஜெயமோகனுக்கு வணக்கம்.
நலம்தானே? வனவாசம் படித்தேன். தெருக்கூத்துகள் காணாமல்போகும் காலம் இது.ரெக்கார்டு டான்ஸ்களின் அரசாங்கம் நடந்து அதுவும் போய் அரசே தடைசெய்யும் அளவுக்கு ஆபாச சைகைகள் கொண்ட நடனங்கள் கோயிலிலேயே வந்துவிட்ட காலம் இது. இப்பொழுது இக்கதை மிகவும் தேவையான ஒன்று.
கூத்துக்காரர்களின் நடைமுறைகளைக் கதையில் நன்கு வெளிப்படுத்தி உள்ளீர்கள். வேஷம் போட்டபிறகு தண்ணீர் கூடக் குடிக்கமாட்டோம் என்பது அவற்றில் ஒன்று. அவர்கள் சாப்பிடும் முறையிலேயே அவர்களின் இன்றைய பொருளாதார சூழ்நிலையையும் வெளிப்படுத்தி இருக்கிறீர்கள். எல்லா உணவுப் பொருள்களும் அவர்களுக்குப் பழக்கமாகி இருப்பதிலிருந்தே வாழ்ந்து கெட்ட குடும்பம் என்பார்களே அதுபோல் அவர்கள் தற்போது இருப்பது தெரிகிறது
நான் கடந்த ஆண்டு நான்கு பேருக்கு முன்னால் பதினோரு நாள்கள் பாரதம் பேசியதைத் தங்களுக்கெழுதி இருந்தேன். அதுதான் இன்றைக்கு நிலைமை.ஆனாலும் கேஸ் விளக்கில் முன் மைக் செட் வைத்துக் கூத்து ஆடிக்கொண்டுதான் இருக்கிறார்கள். காரணம் அவர்களுக்கு வயிற்றுப் பிழைப்புக்கு வேறு தொழில் தெரியாது. ஆனாலும் ஊருக்கு சில சுப்பையாக்கள் இருந்து கொண்டுதான் வளர்க்கிறார்கள்.
இக்கதையில் எள்ளலுக்கும் நகைச்சுவைக்கும் இடம் குறைவு. இருந்தாலும் சில நுட்பங்களைச்செதுக்கி இருக்கிறீர்கள். குமரேசன் நான் தீண்டாதச் சாதியாக்கும் என்றவுடன் அடுத்த நொடி ஆயா, “நீரு அல்லியில்ல” என்பது அவற்றுள் ஒன்று. கிராமங்களில் ஆடுபவர்களை அப்பாத்திரங்களாகவே நினைக்கிறார்கள். ஆடுபவர்களுமப்படி மாறிப்போய் விடுகிறார்கள்.அப்படித்தான் சாமியப்பா அருச்சுனன் ஆனதும் குமரேசன் அல்லியானதும்.
அவியலுக்குத் தேங்காய் என்பது சிவனுக்குப் பார்வதிமாதிரி என்னும் உவமை அவர்களின் மொழிநடைக்குப் பொருத்தமாக இருக்கிறது. கடைசியில் சாமியப்பா போகும்போது திருப்தியாகப் பணம் கிடைத்தது . ஒரு மாசத்துக்குக் கும்பி வேகும் என்னும் போது கண்ணீர்தான் வருகிறது. கலைக்கு மரியாதை இன்னும் இருக்கிறது என்பதை உணர்த்தும் அற்புதமான கதை
வளவ.துரையன்
***