வனவாசம் ,வான்நெசவு -கடிதங்கள்

வனவாசம் [சிறுகதை]

அன்புள்ள ஜெ,

ஒரு கதை வரும்போது இதுதான் உச்சம் என்று நினைத்தேன், இன்னொரு கதை அதைக் கடந்து செல்கிறது. என் பார்வையில் இந்த வரிசைக் கதைகளிலேயே முக்கியமானது பொலிவதும் கலைவதும்தான். மிக மென்மையான கதை. கலையழகு கொண்டது. என்ன சொல்லவருகிறதோ அதை வெளியே சொல்லாமல் காட்டாமல் நமக்கு தந்துவிடுகிறது.

அந்தக் கதையைவிட ஒரு படிமேலான கதை வனவாசம். அர்ஜுனன் அல்லி கதை. ஆனால் அது அந்த இரு மகா கலைஞர்கள், ஒரே ஒரு பார்வையாளன் என்று உலகமே அறியாமல் நடந்து முடிகிறது. அவர்களுக்கு அங்கே பார்வையாளர்களே இல்லை. அப்படியென்றால் எவருக்காக அதை நடத்துகிறார்கள்? அவர்கள் ஒரு வாழ்க்கையை அங்கே நடத்தி முடிக்கிறர்கள்

அவர்கள் அங்கே நடத்துவது ஒரு மெய்க்காதலை. அர்ஜுனன் அல்லியின் மகத்தான உறவை. ஆனால் அதை நடிப்பவர் இருவருக்குமே வாழ்க்கையில் பெண்கள் இல்லை. பார்ப்பவனுக்கும் பெண் இல்லை. அப்படியென்றால் அந்த மெய்க்காதல் எங்கே நடக்கிறது? ஒரு மாயவெளியில். ஒரு கனவுமாதிரி அது நடந்து முடிகிறது

குமரேசன் காதலைப்பற்றிச் சொல்லும் இடம்தான் இந்தக்கதையின் மையமான வரி என்று நினைக்கிறேன். அதன்பின் கூத்தில் அவர் அழியாக்காதலை நடித்தும் காட்டிவிடுகிறான்

மகாதேவன்

***

அன்புள்ள ஜெ!

‘வனவாசம்’ சிறுகதை படித்தேன்.

கதையில் வரும்  ஆடு தோண்டி சுப்பையா, அவனது அம்மா, குஞ்சன் நாடார், நாராயணன், பண்டார நாடார். சண்முக நாடார், மாதேவன் பிள்ளை, இசக்கி ,கணேசய்யர், சீதாராமையர், சிவராமய்யர், கிருஷ்ணய்யர், ராமசாமி ஐயர். குமாரசாமி, முருகன், முருகேசன், ஆவுடை, அருணாச்சலம், நாகலட்சுமி ,குஞ்சு பாட்டா போன்ற அனைத்து பாத்திரங்களையும் தாண்டி ‘அர்ஜுனன்’ சாமியப்பாவும் ‘அல்லி’  குமரேசனும்  மனதில் நிறைந்து கிடக்கிறார்கள்.

– அருள்செல்வன், சென்னை. 92.

 

 

வான்நெசவு [சிறுகதை]

அன்புநிறை ஜெ,

வான்கீழ் நின்று தன் வாழ்வைத் தொடங்கிய சிறு மனிதன் வான் நெசவில் தன் வாழ்வை செலவழித்து மீண்டும் அவ்வான் தரிசனத்தில் தனக்கு சிறகு தந்தவளோடு சென்று நிற்கும் அழகிய இரு கதைகள்.

இவ்விரு கதைகளில் அந்த டவர் கட்டுமானம் குறித்த தகவல்கள், அது எண்களைக் கொண்டு அஸெம்பிள் ஆகும் விதம், அதன் கட்டமைப்பில் உள்ள சிரமங்கள், நுட்பங்கள் அப்பணியாளர்களின் வாழ்க்கை, இன்றைய தலைமுறையில் பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லாத, தொலைத்தொடர்பு துறையின் முன்னோடி மனிதரான சாம் பிட்ரோடா குறித்த தகவல்கள், 1980களின் வரலாற்றுத் தகவல்கள் ஒரு ஊரின் காலமாற்றம், ஒரு எளிய மனிதரின் வாழ்க்கைத் தர மாற்றங்கள் என விரியும் கதைப்புலன்.

அந்த உலோகக் கோபுரம் அவர்கள் தலை மேல் ஓங்கி நிற்கும் தெய்வம், ஒரு துளி குருதியாவது பலி கொண்டெழும் மாடன். கட்டி எழுப்பியவர்களுக்கு எட்டாத் தொலைவில் வானில் நிற்பது. மேலே செல்லும் கம்பிகளில் எண் எழுதும் பணியில் அங்குள்ளவர்களின் அடுக்குகளில் மிகக் கீழே சிறியவனாக குமரேசன் இருக்கிறான். அடியிலேயே நின்று முடி கண்டிராத தெய்வம் அந்த இரும்பு மாடன்.
மனம் விரும்பியவள் கேட்டதும் அதுவரை அவன் செய்திராத ஒரு பெரும்செயலில் இறங்குகிறான். அவளும் மண்ணில் உழன்றாலும் உலகைத் தன் காலுக்குக் கீழ் சில கணங்களேனும் காணக் கிடைத்த பனை ஏறியவரின் மகள்.

எதிர்காலம் குறித்த திட்டமோ இருவரது கடந்தகாலம் குறித்த சிந்தனையோ இன்றி அந்த நிமிடத்தில் இருவரும் நிற்கிறார்கள்; அந்தந்தப் படிகளில் மட்டும் கால்வைத்து ஏறுகிறார்கள். அவனது வலுவை அவன் உணர்ந்து கொள்ளும் தருணம். அவளது அருகாமை தரும் வலிமை.

ஒவ்வொன்றுக்கும் அதற்குரிய இடம் காத்திருக்கிறது என அவன் எண்ணுவது போல, அதன் உச்சிக்கு அவனை அவளும், அவளை அவனும் அழைத்துச் சென்று விடுகிறார்கள். அவர்களது இடம் அங்கே அந்த நட்சத்திரங்களுக்கு அருகே காத்திருக்கிறது.

அவர்களது அன்றாடங்கள் சிறு புள்ளிகளாகத் தெரியும் உயரத்தை அடைகிறார்கள். எவ்வளவு பெரியது இவ்வுலகம் என்ற மகத்தான தரிசனம் கிட்டும் உயரம். மேகங்களுக்கு மேலே, கந்தர்வர்கள் போல நிற்கும்போது அவள் செத்துப்போனால் இதற்கும் மேலே சொர்க்கத்திற்குப் போய்விடுவோமா என்கிறாள். மகத்தான அனுபவங்கள் மரணத்தையும் சொர்க்கத்தையும் நினைவு படுத்துபவையே.
அவர்களது கிளர்ந்தெழுந்த மனநிலையை கவிதையாக்கும் இறுதி வரிகள். உழுதுபோட்ட புதுமண்ணின் மணம் – உச்சம்!!

இந்தக் கதையை நண்பரிடம் சொன்னேன். வான்கீழ் கதையில் அவர்கள் ஏறுவதைச் சொல்லி அவர்கள் கந்தர்வர்கள் போல நிற்கும் தருணத்தை சொல்லும் போது குரல் நெகிழ்ந்து விட்டது. உணர்வுச்சம் ஏற்படுத்தும் தருணம்.

அவர்கள் வான்கீழ் கண்ட காலையின் ஒளியிலேயே வான்நெசவு தொடங்குகிறது. ஒளி கண் கூசச் செய்கிறது. இருவரும் இணைந்து வாழ்விலும் உச்சம் தொட்டுவிட்டார்கள் எனக் கதை விரிகிறது. நாம் வானை நெசவு செய்கிறோம் என்ற ஒரு சொல்லுக்காக பெருமித்தோடு பணி முடித்து வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்கிறார். ஒவ்வொரு அடியாக எடுத்துக் கடந்து வந்த வாழ்வை மீண்டும் நினைவுகளில் சில நொடிகளில் முன் சென்று முழுவதும் காண்பது போல மின்தூக்கியில் மீண்டும் கோபுர உச்சம் செல்கிறார்கள்.

அன்று இளமையில் கையில் ஒன்றுமில்லாத போதும் வாழ்க்கையே மிச்சமிருந்தது, இப்போ எல்லாம் இருந்தும் வெறும் ஞாபகங்கள்தான் என்கிறார்.இவை மண் சார்ந்த வெற்றிகள். கீழே சிறியது பெரிதாகும். ஊர்கள் நெரிசலாகும், நாகர்கோயில் பம்பாய்க்கும் வெளிதேசத்திற்கும் இடம்பெயரும். மண்ணில் எல்லாம் சிதறிக் கிடக்கிறது. வான் மாற்றமில்லாது இருக்கிறது.

வேலை நிமித்தம் கொள்ளும் உத்வேகம், பெருமிதம், அதில் கொள்ளும் உச்சங்கள் அனைத்தும் பிரயோசனத்துக்காகக் கட்டப்பட்ட டவர் போல சில வருடங்களில் காலாவதியாகி மறைந்துவிடும். அவர்கள் வான்கீழ் கண்ட கனவு, அந்த தரிசனம் தஞ்சாவூர் கோபுரம் போல பிரயோசனங்களுக்கு அப்பாற்பட்டது, அது நிற்கும் மாற்றமில்லாது.

இவை ஆரோகணங்களின் கதை. இரண்டு கதைகளிலும் உச்சமே பேசப்படுகிறது. இறங்கி வருவதோ அதன் சிரமங்களோ அல்ல, அந்த உச்சமே இதன் கவித்துவம். ஒரு சொல் மிகையில்லாத இரு கதைகள்.

மிக்க அன்புடன்,

சுபா

***

அன்புள்ள ஜெ

வான்கீழ், வான் நெசவு இரு கதைகளும் இரண்டு புள்ளிகள். நடுவே இந்தியாவின் தகவல் தொழில்நுட்பப் புரட்சியின் ஒரு காலகட்டமே உள்ளது. அன்று அத்தனை நம்பிக்கையுடன் அது தொடங்கப்பட்டது. இந்தியாவின் முகமே மாறியது. சாம் பிட்ரோடாவை இந்த மாதிரி ஒரு கதையில் நினைவுகூர்வது என்பது மிகுந்த மனநிறைவை அளிக்கிறது.

ஒரு வகையில் இந்தியா உலகமயமாதலை தொடங்கிய காலகட்டத்தில் அந்த இனிமையான காதல்கதை தொடங்குகிறது. முடிந்தபோது அந்தக் கதையும் முடிவுபெறுகிறது. இன்றைக்கு உலகம் ஒன்றாகிவிட்டது. அந்த இணைப்பைச் செய்தவை அந்த டவர்கள்தான். வான்நெசவு என்பதை நான் உலகமயமாக்கம் என்றுதான் எடுத்துக்கொண்டேன்

ஸ்ரீனிவாஸ்

***

முந்தைய கட்டுரைஆழி,மாயப்பொன் கடிதங்கள்
அடுத்த கட்டுரைகைமுக்கு [சிறுகதை]